“ஆப்ஷன் பி கஷ்டம்தான்” என்றதும் கல்கி ஒரு நொடி புரியாது பார்த்தவள் புரிந்தவுடன் அவனை முறைக்க, அதற்குள் வசந்தி அறை வாயிலில் நின்று
“தம்பி, சமையல் முடிஞ்சது. நான் கிளம்புறேன்” என்றார்.
“ஓகேக்கா, கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க இன்னும் முறைத்து நின்றாள்.
“ஜஸ்ட் கிட்டிங்” என்ற சிரஞ்சீவி
“உனக்கு என்ன வேணும்னாலும் முதல்ல என்னைக் கேளு, சுதந்திரமா செயல்படுறது தப்பில்லை. அதே நேரம் தெரிஞ்சவங்க கிட்ட ஹெல்ப் கேட்கலாம் என்ன புரிஞ்சதா?” என்று கேட்க
“நீங்க இது மாதிரி நார்மலா பேசியிருந்தா நான் கேட்டிருப்பேன். நீங்க எப்பவும் டென்ஷன் பண்ணினா எப்படி கேட்க தோணும்? ” என்றாள் கல்கி.
“ஓகே, லீவ் இட். இனிமே எதுனாலும் என்னைக் கேளு. அம்மாவைத் திட்டாம இருந்தா நான் ஏன் டென்ஷன் ஆகப்போறேன்? ப்ரண்ட்ஸ் ஆகிடலாமா?” என்று அவளைப் பார்த்து சினேகப்புன்னகை செய்ய
“என்னோட ப்ரண்ட்னா வாடா போடான்னு சொல்லுவேன், ஓகேவா?” என்று கல்கி குறும்பாய்க் கேட்க
“வாடா போடா சொல்லாத ப்ரண்டா வச்சிக்கோ” என்றான் அவன்.
அன்றைய இரவுக்குப் பின் சிரஞ்சீவி கல்கியிடம் தேவையில்லாமல் அவன் அம்மாவின் கதையைப் பேசுவதில்லை. கல்கியும் அப்படியே!
இரண்டு நாட்கள் போயிருக்கும். இருவரும் தனித்தனியே வழக்கம்போல் வாக்கிங் சென்று வந்திருக்க, சிரஞ்சீவி ஆங்கிலப்பத்திரிக்கையை எடுத்து வாசித்தபடி டீவியில் ஜெமினி மியுசிக்கில் வைத்தான். கல்கி வசந்தி கொடுத்த காஃபியைப் பருகியபடி சோஃபாவில் வந்து உட்கார்ந்தாள்.
‘ப்ரியத்தம்மா ப்ரியத்தம்மா தரகனி பருவம்மா
தரலிரா தரலிரா..’ என்று எஸ்பிபி உருகிப் பாடிக்கொண்டிருந்தார். சிரஞ்சீவியும் பாடலை முணுமுணுத்தபடி செய்தித்தாளில் கவனம் வைத்தான்.
“அது என்ன தமிழ்தானே உங்க தாய்மொழி? தெலுங்கு பாட்டு கேட்கிறீங்க” கல்கி அவனிடம் கேட்க
“ஏன் தெலுங்கு பாட்டு கேட்க கூடாதா? என்னோட அப்பாவோட மொழி அது. தமிழ் எனக்கு எப்படியோ தெலுங்கும் அப்படிதான். என்ன அம்மாவைத் தவிர எங்கிட்ட தமிழ்ல்ல பேச முன்னாடி ஆள் இல்லை, ஸோ தெலுங்கு ரொம்ப ஈசியா வரும். இங்க காலேஜ் சேர்ந்த பின்னாடிதான் நானே தமிழ் நல்லா பேசுறேன்” என்றவன்
“அது மாதிரி இசைக்கு மொழி கிடையாது. நீயும் இந்த பாட்டைக் கேளு. உனக்கும் புரியும்” என்றவன் மீண்டும் செய்தித்தாளில் கவனம் வைத்தான்.
“எங்க புரியுது? எனக்குப் புரியல” என்று கல்கி சொல்ல
“நீ ஏன் அர்த்தம் தெரியனும் நினைக்கிற? இசை புரியனும் கிடையாது. உணரனும்! எஸ்பிபி வாய்ஸ்லேயே அந்த ஃபீலிங்க்ஸ் கடத்தியிருப்பார்” என்றான் சிலாகித்தபடி.
“ம்ம்” என்று அந்த பாடலை கவனித்தவள்
“ப்ரியத்தம்மான்னுதானே மாமா சொல்வாங்க” என்று யோசனையாய சிரஞ்சீவியிடம் கேட்க
அப்பாவைப் பற்றி அவள் பேச அவன் முகத்தில் இன்னும் மஞ்சிமம் கூடிப்போனது.
“எஸ், அம்மாவை அப்பா அப்படித்தான் கூப்பிடுவாங்க. ப்ரியத்தம்மான்னா மனசுக்குப் பிடிச்சவங்க” என்றான்.
“ஓஹ், அப்போ கரெக்ட்டாதான் மாமா சொல்றாங்க” கல்கி சொல்லவும் அவன் மென்னகை இன்னும் விரிந்தது. கல்கி அவன் படிக்கும் செய்தித்தாளைப் பார்த்துவிட்டு
“நானும் பேப்பர் படிக்கனும், எனக்குத் தமிழ் பேப்பர் வாங்கித் தரீங்களா?” என்று கேட்டாள்.
“ஏன் இதையே படி”
“இல்லை, எனக்கு இது புரியல. நானும் இதை சும்மா புரட்டிப் பார்த்தேன். இஸ் வாஸ் தட் தேர் தவிர எந்த வார்த்தையும் தெரியல, கஷ்டமா இருக்கு. ஒவ்வொருவாட்டியும் டிக்ஷனரி தேட வேண்டியிருக்கு. நியூஸ்தானே எந்த மொழில படிச்சா என்ன?” என்றாள்.
“அப்படி கிடையாது கல்கி! நீ ஜர்னலிஸம் படிக்குற. இந்த பேப்பரோட ஸ்டாண்டர்ட் ரொம்ப நல்லா இருக்கும். ஒரு ஜர்னலிஸ்டோட வேலை ஜஸ்ட் நியூஸை சொல்றதுல இல்லை, இட்ஸ் மோர் தன் தட். நான் பார்த்திருக்கேன் ரிஜினல் நியூஸ் பேப்பர்ஸ்ல நிறைய க்ரைம் நீயுஸ் அப்படித்தான் கவர் பண்ணுவாங்க. இது நேஷனல் நியூஸ்பேப்பர், நிறைய ஜர்னலிஸ்ட் அவங்க ஒபினியன்ஸ் எழுதுவாங்க, எடிட்டோரியல்ஸ் இருக்கும். இதான் உனக்கு யூஸ் ஆகும். நீயும் இனிமே இதையே படி” என்றான் வரப்ரசாத்.
“எனக்கு இங்கிலிஷ் வர்ட்ஸ்க்கு அர்த்தமே தெரிலயே”
“தெரியலன்னா தெரிஞ்சிக்கோ தட்ஸ் இட்! கூகுள் கிட்ட கேட்டா எல்லா வொர்ட்ஸ்கும் மீனிங் தெரிஞ்சிடும். உனக்கு ஒன்னு சொல்லவா இப்ப கூட இந்த பேப்பர்ல சில வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியல, ஆனா படிக்க படிக்க நமக்கு அந்த நியூஸை வச்சே அந்த வார்த்தையோட அர்த்தம் புரியும். இந்த பேப்பர் படிக்கிறவங்கள 99% பேருக்கு எல்லா வார்த்தைக்கும் அர்த்தம் தெரியறது கிடையாது. அதான் உண்மை. உனக்கு ரொம்ப டிடர்மினேஷன் ஜாஸ்தி கல்கி, யூ கேன்” என்றான் புன்னகையுடன்.
அந்த ஊக்குவிக்கும் வார்த்தைகள் உள்ளம் சேர உவகை சேர்ந்தது அவளிடத்தில். உள்ளத்து உவகை அப்படியே வஞ்சியின் வதனத்தில் பிரதிபலிக்க
“என்ன பார்க்கிற?” என்றான் அவள் பார்வையைக் கண்டவன்.
“இல்லை, நீங்க சிடுமூஞ்சி சிங்காரம் நினைச்சேன், ஸ்வீட் சிங்காரமா கூட இருக்கீங்க” என்றதும் கையில் இருந்த பேப்பரை வைத்து அவள் கையிலே அடி போட்டான் சிரஞ்சீவி வரப்ரசாத்.
“கல்லு மண்ணுன்னு நேம் வச்சிட்டு என்னைக் கிண்டல் பண்ற” என்றான் பல்லைக் கடித்தபடி. நிச்சயம் முன்பு போல் பெருங்கோபம் எல்லாம் அவனிடம் இல்லை.
“கல்லு மண்ணா? கல்கின்னா இன்ஃபினிட்டின்னு அர்த்தம். முடிவில்லாதவள்” என்றாள் மிடுக்காக.
“எஸ் எஸ் இன்ஃபைனட் டார்ச்சர், இன்ஃபைனட் வாய்”
“நான் டார்ச்சரா இருங்க அத்தை கிட்ட சொல்றேன் உங்களை” என்று மிரட்டினாள் கல்கி.
“ஓஹ், நீ மட்டும் என் நேமை எல்லா ஆங்கிளையும் டேமேஜ் பண்ணுவ, நான் கிண்டல் செஞ்சா மட்டும் எங்கம்மா கிட்ட சொல்லுவியா?” என்று கேட்டான்.
“பின்ன நாலு பேருக்கு வைக்கிற நேமை உங்க ஒருத்தருக்கு வச்சா கேட்க மாட்டாங்களா?” என்று கல்கியும் வாய்ப்பேசினாள்.
“அதை வச்ச உங்க மாவய்யாட்ட கேளு, இப்போ டியுட்டிக்கு டைம் ஆயி போயிந்தி. நீ காலேஜ் கிளம்பு. ஃப்ரீ டைம்ல பேப்பர் படி” என்று சொல்லி அவன் கிளம்பிப்போனான்.
கல்கி சென்னை வந்து ஒருமாதம் ஓடிப்போனது. மாதம் கடக்க கல்கிக்கும் வரப்ரசாத்திற்கும் ஒரு மெல்லிய நட்பு ஓடியது. ஆனால் என்ன இருவரும் எல்லாவற்றிலும் சரிக்கு சரியாய் நின்றனர்.
அவன் எகிறினால் அவளும் எகிறினாள்.! அவன் இரங்கினால் இவளும் இரங்கினாள்.! அதனை புரிந்த சிரஞ்சீவி கல்கியிடம் மிகுதியான கண்டிப்புக் காட்டாது முடிந்தவரையில் கனிவாகவே நடக்க, கல்கியும் அப்படியே நடந்தாள்.
அந்த மாத இறுதியில் மகளைக் காண வந்தார் உதயமூர்த்தி.
*****************
அன்று காலை உதயமூர்த்தி சென்னை வருவதாக இருந்தது. சிரஞ்சீவி வழக்கம் போலவே காலை நேர நடைபயிற்சிக்குத் தயாராகி வந்தவன் கல்கி இன்னும் வராமல் இருப்பது கண்டு ஹாலில் இருந்தபடியே
“கல்கி!” என்று குரல் கொடுத்தான்.
“கூப்பிட்டீங்களா?” என்றபடி கல்கி வெளியே வர
“வாக்கிங் வரல நீ?” என்றான்.
“இல்லை, அப்பா வராங்க. அப்பாவுக்கு காலையில பொண்ணுங்க வாக்கிங் போறது எல்லாம் பிடிக்காது. அதெல்லாம் வயசானவங்க செய்றதுன்னு சொல்வார். அப்பா ஊருக்குப் போறவரைக்கும் நோ வாக்கிங், நோ டிரைவிங், நோ பேக்கிங்” என்றவளிடம்
“ஓகே, உன்னிஷ்டம். நான் கிளம்புறேன்” என்று சொல்லி அவன் சென்றுவிட்டான்.
கல்கி இப்போது வார இறுதி நாட்களில் காலையில் டிரைவிங் பயிற்சி செல்கிறாள், மாலை நேரத்தில் பேக்கிங் வகுப்புகள். மற்ற நேரம் கல்லூரி படிப்பு என்று நேரம் சென்றது. ஐந்தரை மணி போல் உதயமூர்த்தி வந்து பெல்லை அடிக்க, கல்கி கதவைத் திறக்கவும் மகளை ஒரு மாதம் கழித்துப் பார்க்க அவ்வளவு சந்தோஷம் அவருக்கு.
“எப்படி கல்கி இருக்க?” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தார்.
உதயமூர்த்தி சோஃபாவில் உட்காரவும் அவரருகே தரையில் உட்கார்ந்தவள்
“எப்படிப்பா இருக்கீங்க? அம்மாவை அழைச்சிட்டு வந்திருக்கலாமில்லை” என்றாள் அவளையும் மீறிய ஏக்கத்துடன்.
“ம்ம், அம்மாவை அழைச்சிட்டு வந்துட்டா அங்க ஆடு மாடெல்லாம் யார் பார்க்கிறது? அப்பத்தாவும் இங்க உன்னோட வந்தாச்சு. இதுக்குத்தான் அங்கேயே இருந்து படின்னா கேட்டாதானே? இப்ப அம்மாவைப் பார்க்கணும்னு கேட்கிற. எனக்கும் உன்னை இங்க விட்டுட்டு மனசு கேட்கல” என்றார் உதயமூர்த்தி.
இன்னமும் மகளை அனுப்பியதில் அவருக்கு முழுமனதாய் சம்மதமில்லை. ஒரு பக்கம் மகளின் பாதுகாப்பு பற்றிய பயமென்றால் யமுனா கொடுத்து சென்ற காயத்தின் வடு அவ்வப்போது அதன் தாக்கத்தை அவரிடம் காட்ட, மகளிடம் அதனை அப்படியே காட்டினார். கூடவே மகள் இல்லாமல் வீடே வெறிச்சோடி இருந்தது. அதனை அப்படியே சொல்லியிருந்தாலாவது கல்கியின் மனம் களித்து கனிந்திருக்கும். அவரோ அதனை சொல்லாமல் அவளைப் பேசிவிட கல்கியின் முகம் வாடிப்போனது.
மகள் அமைதியாய் இருக்கவும்
“இந்த பையில சம்படத்துல உங்கம்மா மீன் குழம்பு கொடுத்துவிட்டிருக்கா கல்கி, முதல்ல எடுத்து சூடு பண்ணி வை. அப்புறம் இதுல தயிர் இருக்கு, காய்கறி கூட இருக்கு எல்லாத்தையும் ஃப்ரிட்ஜ்ல வை” என்றவர்
“அம்மா எங்க? அந்த பையன் எங்க?” என்றார்.
“அப்பத்தா தூங்குறாங்கப்பா, அவங்க வாக்கிங் போயிருக்காங்க. வர ஒரு மணி நேரமாகும்”
“ஓஹ், அந்த பையன் ஊர்ல கோபமா பேசினானே நல்லா பார்த்துக்கிறானா?” என்று கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னும் பேசறதில்லைப்பா, நல்லபடியாதான் நடப்பாங்க” என்றவள்
“இந்த ரூம்ல பாத்ரூம் இருக்கு யூஸ் பண்ணிக்கோங்கப்பா, நான் போய் இதையெல்லாம் எடுத்து வைக்கிறேன்” என்று சொல்லி கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள் கல்கி. அரை மணி நேரம் கழித்து உதயமூர்த்தி குளித்துவிட்டே வெளியே வர, வாசலில் காலிங் பெல் சத்தம். கல்கி போய் கதவைத் திறக்க வசந்தி நின்றிருந்தார்.
“அக்கா, எங்கப்பா” என்று கல்கி அறிமுகம் செய்ய வசந்தி வணக்கம் சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்க போனார்.
“இவங்க யாரும்மா? சமையல் செய்வாங்களா?” என்று உதயமூர்த்தி மகளிடம் கேட்க
“ஆமாம்பா, காலையில இந்த டைம் வந்து சமைச்சு வச்சிட்டுப் போவாங்க, சாயங்காலம் மறுபடி நைட்டுக்கு சமைக்க வருவாங்க. மத்த வேலைக்கு இன்னொரு அக்கா வருவாங்க” என்றாள்.
“ம்ம், ஒழுங்கா படிக்கிறியா நீ?” என்று அடுத்து ஆரம்பிக்க
“படிக்கிறேன்பா” என்றாள் பவ்யமாக.
அப்பாவிற்கு டீவியைப் போட்டுவிட்டவள்
“அப்பா, காலேஜுக்கு லேட்டாகிடும், நான் போய் ரெடியாகுறேன்” என்று சொல்லி அறைக்குள் போக, தையல் நாயகி எழுந்துவிட்டார்.
மகனைக் கண்டுவிட்டு
“என்னய்யா மூர்த்தி இப்படி இளைச்சிப்போய்ட்ட? அந்த அங்கை புள்ளை இல்லைனதும் உன்னை சரியா கவனிக்கறதில்லையா?” என்று மருமகளைக் குறை சொல்ல
“அதெல்லாம் நான் நல்லா இருக்கேன். அவளும் என்னை நல்லா கவனிக்கிறாம்மா. உனக்கு இங்க எப்படி இருக்கு? நல்லாயிருக்கியா?” என்று அம்மாவிடம் கேட்டார் உதயமூர்த்தி.
“எனக்கென்னய்யா? என் பேரன் என்னை நல்லா பார்த்துக்கிறான். இதோ அந்த வசந்தி நல்லாத்தான் சமைக்கும். ஆனாலும் ஊரு நினைப்பு எங்க விடுது?” என்று புலம்பினார்.
“அப்புறம் இந்த அங்கை அந்த கிட்டினம்மாவுக்கு பால் கூட ஊத்திக்கொடுத்துட போறா, நான் இல்லைனா உன் பொண்டாட்டி அவ இஷ்டத்துக்கு எல்லாம் செய்வா. இந்த வெள்ளாட்டுக்கு அடுத்த மாசம் பிரசவம் ஆகிடனும்ல, நல்லா புல்லு போட சொல்லு அவளை” என்று பேசிக்கொண்டே போக
“ம்மா, அதெல்லாம் நாங்க நல்லாதான் எல்லாத்தையும் கவனிச்சிக்கிறோம். நீ கொஞ்சம் நேரம் அமைதியா இரேன்” என்றார் கடுப்பாக. சிரஞ்சீவி நடைபயிற்சி முடித்து வந்தவன் இவரைக் கண்டுவிட்டு
“வாங்க மாமா, ரொம்ப நேரமாச்சா?” என்றான்.
“ஐஞ்சரைக்கு வந்தேன் தம்பி. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்க
“நான் நல்லாயிருக்கேன் மாமா, டீ குடிச்சீங்களா?” என்று விசாரித்தான்.
“ம்ம், குடிச்சிட்டேன் தம்பி” என்றதும் இருவருக்கும் என்ன பேச என்று தெரியவில்லை. கல்கி சுடிதார் அணிந்து கல்லூரிக்குத் தயாராகி வெளியே வர
தையல் நாயகி சும்மா இராமல்
“இந்தா வந்துட்டா உன் மவ, சொல்ற பேச்சே கேட்கறதில்லை. எதிர்த்து எதிர்த்து பேசுறா” என்று பேத்தியைப் போட்டு கொடுக்க, உதயமூர்த்தி உக்கிரமூர்த்தியாய் மகளைப் பார்க்க, கல்கி தையல் நாயகியை முறைத்தாள்.
“என்ன கல்கி அப்பத்தாவை எதிர்த்துப் பேசுனியா?” என்று உதயமூர்த்தி கோபத்துடன் கேட்க
“ப்பா, சத்தமா டீவி வச்சுப் பார்த்து என்னைப் படிக்கவிடறதில்லை. அதைக் கேட்டா தப்பா?” என்றாள் கல்கியும் கோபமாக. கல்கி தன்னைக் குறை சொல்லவும்
“வயசான காலத்துல பிடிச்ச மாதிரி இந்த டீவியைப் பொட்டியைக் கூட பார்க்க கூடாதா நான்? காது நல்லா கேட்டா நான் ஏன் சத்தம் வைக்கிறேன்? இவளுக்காகத்தானே நான் ஊரை உறவை விட்டு வந்து இருக்கேன்” என்று தையல் நாயகி கொஞ்சம் கண்ணீருடன் பேச உதயமூர்த்தி அம்மாவின் பேச்சில் உருகிப்போனார்.
“ஏன் கல்கி இப்படி செய்ற? யாருமில்லனா இப்படித்தான் இஷ்டத்துக்குப் பேசுவியா நீ? உனக்காகத்தானே அப்பத்தா இங்க வந்து இருக்கு. இனிமே மரியாதை இல்லாம பேசக் கூடாது நீ” என்றார் கட்டளையாக.
கல்கி அமைதியாய் தலையசைத்துக் கேட்டு கொண்டாள். கல்கியின் மீதே கண்கள் வைத்திருந்த சிரஞ்சீவிக்கு அவள் நிலைக் கண்டு கோபமாய் வந்தது. தையல் நாயகி கல்கியைக் கவனிப்பதே இல்லை என்பது அவனுக்கு நன்றாய்த் தெரியும். திருடன் வந்தால் கூட தெரியாத அளவு டீவியில் மூழ்கி இருக்கும் ஆள் அவர், அவர் சொல்கிறார் என்று தன் பெண்ணை எப்படி பேசுகிறார் என்று தாய்மாமனை மனதில் எழுந்த கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் டியுட்டிக்குக் கிளம்பும்வரை கல்கியைக் கண்காணிக்க, அவனுக்கு ஒன்று புரிந்தது. கல்கி மற்ற நாட்கள் இருப்பது போல் இப்போது இல்லை, இதே மற்ற நாள் என்றால் வாக்கிங் முடித்து வந்தவுடன் காஃபி குடித்து தன்னுடன் பேசிக்கொண்டு தெரியாத விஷயங்களைப் பேப்பரில் படித்து தன்னிடம் சந்தேகம் கேட்பாள். அதன்பின் குளித்து வருபவள் டீவியில் பாட்டு ஓட, கூடவே அவளும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வண்ணத்துப்பூச்சியாய் வதனம் விகசிக்க வளைய வருவாள்.
இன்று சிறைப்பறவையாய் அவள் அப்பாவின் பேச்சுக்கு எல்லாம் தலையாட்டிக்கொண்டிருந்தாள். அவள் உடல்மொழியில் ஒரு இயல்பற்ற இறுக்கம், அது வரப்ரசாத்தின் பார்வையில் சரியாய் விழுந்துவிட, கல்கியின் பணிவில் இவனுக்கு ஒரு பக்கம் சிரிப்பும் கூட வந்தது.
தன்னிடம் எப்படி சரிக்கு சரியாய்ப் பேசுவாள், முதல் நாள் அம்மாவை எப்படி வைத்து விளாசினாள் இன்று அப்பாவிடம் பம்மிக்கொண்டு இருக்கிறாளே என்று கண்களில் கிண்டலுடன் பார்க்க, அது பாவையின் பார்வையில் அப்படியே விழ, கல்கி அவனை முறைத்தாள். அப்பாவின் முன் அவனிடம் சண்டையிடவும் முடியாதே!
மகள் கல்லூரிக்குக் கிளம்பவும் உதயமூர்த்தியும் தங்கள் உறவினரைப் பார்க்க சென்றுவிட்டார். மதியம் கல்கி கல்லூரி விட்டு வந்தவள் ஜெகதீஷுக்குப் போன் செய்தாள்.
“டேய் மாமா! ஈவினிங் ஃப்ரீயா?” என்று கேட்க
“ஃபீரிதான்” என்றான் உடனே.
“அப்போ இங்க அத்த வீட்டுக்கு வா” என்றதும்
“அங்க நான் எதுக்கு? உன்னைப் பார்க்கணும்னா நீ வெளியே எங்காச்சும் வா” என்று ஜெகதீஷ் பிடி கொடுக்காது பேச
“ஓவரா பண்ணாதடா, உங்கத்த கெண்டை மீன் குழம்பு கொடுத்துவிட்டிருக்காங்க. உனக்கும் பிடிக்குமே, நம்ம மாம்ஸும் வீட்டு சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறானே பார்த்தா ஓவரா பண்ற. எங்கப்பாவும் வந்திருக்கார், பார்த்திட்டு போகலாமில்ல. நான் கூட உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சே” என்று கல்கி சொல்ல ஜெகதீஷுக்கு தரை காலில் படவில்லை.
பின்னே கல்கி தனக்கு மீன் குழம்பு பிடிக்கும் என்று தன்னை வர சொல்லியிருக்கிறாளே என்ற எண்ணம், அதனையும் விட தன்னைப் பார்த்து நாளாயிற்று என்று அவள் சொன்ன வார்த்தை எல்லாம் அவனின் எண்ணங்களுக்கு வண்ணம் சேர்ப்பவையாய் இருக்க, அகமெங்கும் அந்திச்சாரல்!
“இவ்வளவு ஆசையா கூப்பிடுற, வராம இருப்பேனா? நான் வரேன்” என்றான்.
“சூப்பர்” என்று சொல்லி கல்கி போனை வைத்தாள். அவள் அவனின் மீதான அன்பில் அழைத்திருக்க அவனுக்கோ அது காதலின் அழைப்பாய் தெரிந்தது அவன் பிழையோ?
Nice
கண்ணால் பார்த்த பின்பு தான்
இந்த கிழவிய முதல்ல மகனோட ஊருக்கு கிளப்புங்க....