Episode 32
தன் மனதை சொல்வதற்கு முந்தையை கணம் வரை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லை சிரஞ்சீவியிடம். தன்னையும் மீறிய செயல் அது, அது கல்கியால்..! அவளின் மீது தான் கொண்ட காதலால் என்று தெரியும் அவனுக்கு. சொல்லிய பின்னும் பெரிதாய் வருத்தமேதுமில்லை. கல்கிக்குத் தன் மீது இருக்கும் விருப்பம் அவனுக்குத் தெரியும். கல்கியும் தேவையின்றி உரிமை எடுப்பவளோ உறவை வளர்ப்பவளோ கிடையாது.
தன் மீதான அன்பை வெளிக்காட்ட அவள் தயங்கியதே இல்லை. அவனும் அப்படித்தானே? ஆனால் வார்த்தையால் வெளிப்படுத்த இருவரும் இதுவரை நினைக்கவில்லை. தனது செயலை தானே எதிர்ப்பார்த்திடாத போது கல்கி இதை எவ்வாறு எதிர்க்கொண்டாள் என்ற எதிர்ப்பார்ப்பு அவனிடம் இருக்க கல்கியின் முகத்தைப் பார்க்க அதில் அவ்வளவு அதிர்ச்சி, குழப்பம் என்று கலவையான உணர்வுகள்.
“கல்கி..?” என்று இவன் கேள்வியாய்ப் பார்க்க அவளிடம் பதில் இல்லை. அவள் நெற்றியில் மின்னிய குங்குமம் இவனுக்குப் பார்க்க பார்க்க ஒரு புது உணர்வைத் தந்தது. ஆனால் கல்கியின் கலக்கம் அந்த உணர்வை அனுபவிக்க விடவில்லை. வரப்ரசாத் இந்த ஒரு வருடத்தில் கல்கியின் மறுபாதியாய் அவளில் கலந்து இருந்தான்.
உள்ளுக்குள் ஒரு உணர்ச்சிப்பெருக்கு அவளிடம். அவனின் நொடி நேர நெருக்கத்தில் முதலில் மயக்கம் என்றால் அது தெளிந்து அடுத்து கல்கியிடம் கலக்கம் மட்டுமே!
எனக்குத் தோன்றுவதை எந்த மறைவுமின்றி இவனிடம் பகிரலாம். சரியாய் இருந்தால் துணை இருப்பான், தவறாய் இருந்தால் சரி செய்ய வழி சொல்லுவான் என்ற ஆழமான நம்பிக்கையைக் கல்கிக்குத் தந்திருந்தான் வரப்ரசாத்.
இதுவரையில் அவனின் அன்பை அனுபவித்தவளுக்கு ஆராய்ச்சி செய்யத் தோன்றியதே இல்லை. அதன் எதிர்காலம் என்னவென்ற எண்ணம் சிறிதும் கிடையாது. அன்பென்றால் சொல்லிக் கொண்டோ கொஞ்சிக் கொண்டு இருந்ததில்லை. தள்ளி நின்றாலும் கல்கிக்குத் தேவையான நேரத்தில் துணை இருப்பான்.
இப்படியான ஒரு உறவுக்குத்தான் அவள் ஏங்கினாள். அந்த நேரத்து மழையை அதன் குளுமையை அனுபவிக்கும் மனப்பாங்கு மட்டுமே மங்கையிடம். அதற்காக அவன் மீது பிடித்தமில்லை என்றில்லை. மிகவும் பிடிக்கும் அவனை! அதில் துளியும் அவளுக்கு சந்தேகமில்லை. கல்கி இப்படி தனக்குள்ளே யோசனையில் இருக்க, யமுனாவும் சூர்யாவும் கார் அருகே வந்து நின்றனர்.
யமுனா கல்கியின் முகம் பார்த்தவர் “பொட்டு எங்க? கொஞ்சுண்டு குங்குமம் மட்டும் இருக்கு” என்று கேட்டார்.
“வியர்வையைத் துடைக்கிறேன்னு தெரியாம அழிச்சிட்டேன் அத்த” என்றாள்.
“நானும் காலேஜ்ல சில டைம் இப்படி பண்ணிடுவேன். அதான் எப்பவும் ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட் வச்சிருப்பேன்” என்றவர் அவரின் கைப்பையில் இருந்து பொட்டை எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிட்டவர். லேசாய் இருந்த குங்குமமத்தின் மீது தன்னிடமிருந்த கோவில் குங்குமத்தை அழுத்தி வைத்துவிட்டார்.
“பெத்தம்மாவோட தங்கை நாத்தனார் ஹஸ்பண்ட் வந்திருந்தார் சிரூ. அதான் அவரோட பேசிட்டு இருந்தோம்” என்று சூர்யா சொல்லிக்கொண்டிருந்தார். அப்பாவிடம் பேசிக்கொண்டே சிரஞ்சீவி காரை எடுத்தான்.
“ம்மா, ஹோட்டல் போவோமா? இல்லை வீட்டுக்கா?” என்ற மகனின் கேள்வியில்
“இன்னிக்கு வீட்லதான். உனக்குப் பிடிச்ச பெசரட்டுதான் டிஃபனுக்கு” என்றார் யமுனா.
“அவுனு? எனக்குப் பிடிச்சதுன்னா செய்றீங்க? நானாவோட ஃபேவரைட், அதனால் செய்றீங்க”
“ஆமா செய்றேன். மதியத்தும் அப்பாவுக்குப் பிடிச்சதுதான், குண்டூர் கோடி குரா” யமுனா சிரிக்க இந்த பேச்சில் கல்கி கலந்து கொள்ளவே இல்லை. வரப்ரசாத் அதனைக் கவனித்தாலும் அப்பா அம்மாவின் முன் பேசமுடியவில்லை. யமுனா கவனித்தவர் “என்னாச்சு கல்கி? பசிக்குதா டா? பத்தே நிமிஷம் போயிடலாம்” என்று சொல்ல
“இல்லத்த பசிக்கல” என்றாள்.
“அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க
“அது..காலையில சீக்கிரம் எழுந்தேன்ல. அது கொஞ்சம் தலைவலியா இருக்கு” என்று சொல்ல
“இப்போ வீட்டுக்குப் போய்ட்டு சாப்பிட்டு தூங்கிடு. மதியம் சமைச்சிட்டு நான் எழுப்புறேன்” என்றார்.
வீடு வந்தபின் அம்மாவுடன் அவள் சுற்ற, தனியே அவளிடம் பேச முடியவில்லை. கல்கி என்ன நினைக்கிறாள் என்று கவலையாய் இருந்தது. மனதுக்கும் அறிவுக்குமான பெரும் போர்!! நடுவே கல்கிக்குப் போன் வரவும் அவள் அறைக்குள் நின்று பேச, கிச்சன் சென்ற வரப்ரசாத்
“ம்மா, கோடி குரா செய்ய நம்ம தோட்டத்து மிர்ச்சி யூஸ் பண்ணாதீங்க. கல்கி நேத்து பெத்த நானா வீட்ல சரியா சாப்பிடல பார்த்தீங்க தானே?” என்றான். மகனின் பேச்சில் யமுனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. தன் பக்க உறவுகளை அவனும் அன்புடன் பார்க்கிறானே என்று நினைத்தார்.
“ஆமாம்டா, நான் பார்த்துக்கிறேன். கோடி குரா மட்டும் அப்பாவுக்குப் பிடிச்ச மாதிரி காரமா செய்றேன். மீதியெல்லாம் நான் வேற மிளகாய்த் தூள் யூஸ் பண்ணிக்கிறேன்” என்றார் யமுனா. அம்மாவிடம் சொல்லிவிட்டு அவன் வெளியே வர கல்கி அவனைப் பார்த்து நின்றாள்.
கண்களில் அவனின் மீதான காதலும் கூடவே கண்ணீரும் சேர்ந்திருந்தது. அவள் அப்படி கலக்கமாய் இருப்பதைப் பார்த்த வரப்ரசாத்திற்கும் தான் அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது. சூர்யா அவர் அலுவலகம் சென்றிருந்தார். யமுனாவும் கிச்சனில் இருக்க, கல்கியை நெருங்கி நின்றவன் அவள் கரம்பற்றி ஹாலுக்கு இழுத்துவந்தான்.
“அம்மடூ! ஏன் இப்படி இருக்க?” என்று அவள் முகம் பார்த்து கேட்டவனுக்கு அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளமுடியாத தவிப்பு இருந்த்து. தன்னால் அவன் தவிப்பது பொறுக்காதவள்
“உங்களுக்கு என்னைத் தெரியும்தானே?” என்று கேட்க அவள் பேச்சில், அதன் அர்த்தத்தில் அவன் அவளை ரசித்து நின்றான். இவ்வளவு நேரம் அலைப்பாய்ந்த அகத்தில் ஒரு அமைதி.
“உன்னைத் தெரியும் கல்கி. பட் உங்கிட்ட சந்தோஷமே தெரியலயே? நான் எதுவும் தப்பு பண்ணிடலையே?” என்று தெளிவுப்படுத்திக் கொள்ளக் கேட்டான். கல்கியால் அவன் மீது தவறு சொல்லவே முடியாது. தவறென்றால் அவள்தான் தவறு!! அவள் மட்டும்தான் தவறு!!
“உங்க மேல எந்த தப்பும் இல்லை, எனக்குக் கோபமும் இல்லை” என தெளிவாகவே கல்கி சொல்லவும் அவள் கையை விட்டு அப்படியே சோஃபாவில் சாய்ந்தவன்
“அம்மடூ! தேங்க்ஸ் ஸோ மச் டா” என்றான்.
“இப்போ போ, உங்கத்த உன்னை தேடுவாங்க” என்றதும்
சில அடிகள் வைத்தவள் பின் ஞாபகம் வந்தவளாக
“கிஃப்ட் எப்ப வரும்? ரெடியாச்சா இல்லையா? நம்ம போறதுக்குக்குள்ள வருமா வராதா?” என்று கேட்டாள்.
சூர்யா யமுனாவின் திருமண நாள் பரிசாக அவர்களின் புகைப்படங்களைக் கொலாஜ் செய்து அந்த கொலாஜிலும் அவர்களின் உருவம் வருவது போல் செய்துவைத்திருந்தாள். இரண்டே நாளில் எல்லாம் செய்த தர ஆளில்லாமல் இருக்க சிரஞ்சீவியிடம் கல்கி உதவி கேட்கவும் இங்கு விஜயவாடாவில் அவனுக்குத் தெரிந்த இடத்தில் சொல்லியிருந்தான்.
“எஸ்! மறந்துட்டேன், நான் போய் வாங்கிட்டு வரேன் கல்கி. அம்மாட்ட சொல்லிடு” என்று வரப்ரசாத் கிளம்பி போனான்.
மதியம் யமுனா ஒரு சிறிய விருந்தே சமைத்திருந்தார். கல்கிக்காக பிரியாணி, கணவருக்காக குண்டூர் கோடி குரா என்று பார்த்து பார்த்து செய்திருந்தார். உணவுக்குப் பின் தன் இடையளவு ஒருந்த பெரிய ஃப்ரேமை எடுத்து வந்து அத்தை மாமாவுக்குப் பரிசளித்தாள் கல்கி.
“அத்தை, உடனே பிரிக்காதீங்க. அஞ்சு ஐடியா கொடுத்தா, நான் பண்ணினேன், உங்க பங்காரம் அவர் ப்ரண்ட்கிட்ட சொல்லி ஃப்ரேம் பண்ணிக் கொடுத்தார். அஞ்சுவும் உங்களுக்கு விஷ் செய்யணும் சொன்னா. விடியோ கால் செய்றேன் அவளும் கிஃப்ட் பார்க்கட்டும்” என்று சொல்லி அஞ்சனாவிற்கு அழைத்தாள். அவளிடம் பேசி முடித்து கல்கி அப்பாவிற்கு அழைக்க, அவரும் விடியோ காலில் வந்தார். தையல் நாயகி மகள் மருமகனை ஆசிர்வாதம் செய்தார். யமுனாவின் மனம் நிறைந்து இருந்தது.
கணவனும் மனைவியும் அந்த கொலாஜில் இருந்த நூற்றுக்கணக்கான புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டு அது எல்லாம் எங்கே எடுத்தோம் என்று மலரும் நினைவுகளை மலர்ந்து முகத்துடன் பேசிக்கொண்டிருந்தனர். மாலை மகனுக்குப் பிடித்த மிர்ச்சி பஜ்ஜி, கணவருக்குப் பிடித்த பூர்ணம் புரெலா என்ற இனிப்பை செய்தார்.
“மிளகாய்ப் பஜ்ஜி” என்று கல்கி அதனை ஆசையாய் வாயில் வைக்கப் போக
“கல்கி! இது குண்டூர் மிளகாய். தண்ணீயைக் குடிச்சிட்டு சாப்பிடு” என்று எச்சரிக்கை செய்தான் வரப்ரசாத். கல்கியும் தலையாட்டிவிட்டு பஜ்ஜியை சட்னியில் தொடப் போக
சூர்யா உடனே “பாப்பா, அது வேண்டாம். பஜ்ஜியும் காரம் அதுவும் எர்ர காரச் சட்னி ரொம்ப எரியும். முதல்ல கொஞ்சமா பஜ்ஜியை சாப்பிடு” என்றார்.
“அந்த காரமெல்லாம் வேண்டாம்னா இந்த ஸ்வீட் சாப்பிடுடா” யமுனா கல்கியின் அருகே ஸ்வீட் இருந்த தட்டை நகர்த்தியபடி
“இது நல்லா இருக்கும் கல்கி. உங்க மாமாவுக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் இது மட்டும்தான், நம்ம சுழியன் மாதிரிதான்”
“பரவாயில்லத்த கும்பகோணத்துல பொறந்தாலும் இன்னிக்கு முழுசா குண்டூர் காரங்க மாதிரி எல்லாம் செய்றீங்க” கல்கி கிண்டல் செய்ய
“எல்லாம் எனக்காகத்தான்” என்ற சூர்யாவின் வார்த்தைகளில் அவ்வளவு காதல்! அதில் ஒரு கர்வம்!
யமுனா கல்கியை ஸ்வீட் சாப்பிட சொல்லவும்
வரப்ரசாத் உடனே “கல்கிக்கு காரம் தான் பிடிக்கும்” என்று அவளைப் பார்க்க
“அதுக்காக காரமே சாப்பிட முடியுமா? அதுவும் நம்ம மிளகாய்க் காரம் தாங்காது. அத்தை செஞ்சதுக்காகவாச்சும் கொஞ்சம் இந்த பூர்ணம் சாப்பிடு கல்கி” என்றதும் கல்கி அதனை எடுத்து உண்டாள். போண்டா போல இருக்க, உடைத்தால் உள்ளே வெல்லப்பூர்ணம், வெண்ணெய் சேர்த்திருப்பார் போல. வித்யாசமாய் இருந்தாலும் சுவையாய் இருந்தது.
“நல்லா இருக்குத்த” என்றாள்.
அவளை அன்பாய்ப் பார்த்த யமுனா
“அடிக்கடி நீ இனிமே அத்தை வீட்டுக்கு வரனும் கல்கி. அஞ்சனாவையும் வர சொல்லியிருக்கேன். நதியா கல்யாணம் முடிஞ்சு வரேன்னு சொன்னா” என்றார். அவரின் உறவுகள் வந்திருக்க உள்ளத்திற்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது. கல்கி கிளம்பும்போது அவளுக்கென வாங்கி வைத்திருந்த சுடிதாரைத் தந்தார் யமுனா. கல்கி இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினாள்.
இரவு எட்டு மணிக்கு விமானம். வீட்டிலே உண்டு முடித்தனர். அவசரமாய் கிளம்பியிருக்க அவகாசம் இல்லை பேசுவதற்கு. வீடு வந்த சேர பன்னிரெண்டு மணி ஆகிவிட அடுத்த நாள் கல்கிக்குக் கல்லூரி என்பதால் சிரஞ்சீவியும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. அதனையும் விட கல்கி தன்னை தவறாய் நினைக்கவில்லை. அவளின் விருப்பத்தை விழியால் இத்தனை நாள் கண்டவனுக்கு இன்று மொழியாலும் சொல்லிவிட நிம்மதியாக இருந்தான்.
கல்கி அவன் மீது தவறில்லை என்றாளே தவிர தன் மீது தவறு இருக்கிறது என்று தன்னையே நொந்துகொள்கிறாள் என்று அறியாது போனான் வரப்ரசாத்.
கல்கியிடம் இரண்டு நாட்கள் பேசவே நேரமில்லை வரப்ரசாத்திற்கு, கேஸ் விஷயமாய் சுற்றிக்கொண்டிருந்தான். பேச மட்டுமில்லை பார்க்கவுமில்லை என்பதே மூன்றாம் நாள்தான் உரைத்தது. கல்கி காலையில் இப்போதெல்லாம் வாக்கிங் வருவதில்லை. சில நாட்கள் உடல் நலமில்லையென்றாலோ ப்ரீயட்ஸ் என்றாலோ வரமாட்டாள் என்பதால் சிரஞ்சீவி அதனைப் பெரிதாய் எடுக்கவில்லை.
அந்த வாரம் கேஸ் ஹியரிங் ஒன்று இருக்க சார்ஜ் ஷீட் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. கல்கியைத் தனக்குத் தெரியும் என்ற எண்ணம் வேறு அவனிடம். கல்கியும் அவன் மீது கோபமில்லை என்று சொல்லியிருக்க ஒரு பிரச்சனையுமில்லை என்ற பிம்பமே.
கல்கி படித்து முடிக்கட்டும். அவளுக்குத் திருமணம் பேசும்போது பார்த்துக்கொள்ளலாம், அதுவரை இதே நட்பு நிலை தொடரட்டும் என்ற உள்ளத்தெளிவு அவனிடம் தெள்ளத்தெளிவாய் இருந்தது. ஆனால் அதெல்லாம் கல்கிக்கும் இருக்கும் என்று தவறாய்க் கணித்துவிட்டான்.
வரப்ரசாத்தை பொருத்தவரையில் காதல் அழகானது! அது தவறில்லை என்ற மனப்பாங்கு அவனிடம். கல்கியைப் பொருத்தவரையில் காதலின் பரிணாமமே வேறு. அது ஒரு பெருங்குற்றம் என்று சொல்லிவளர்க்கப்பட்ட பெண். அதிலும் யமுனாவின் செயலினால் தாங்கள் சின்ன சின்ன விஷயத்துக்கும் எப்படி சுதந்திரமில்லாமல் இருந்தோம் என்று நினைக்க நினைக்க பெரும் உளைச்சல் அவளிடம்.
சிரஞ்சீவியின் ஸ்ருங்காரத்தை ரசித்து அதனில் லயித்திருந்த போது எந்த யோசனையுமில்லை கல்கிக்கு. வானம் போல் அது அவளைக் காத்து நிற்க, அதை இயல்பாய் ஏற்றாள். இப்போது இந்த ப்ரியத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கப்போகிறது என்பது நன்றாய்ப் புரிய புரிதல் தெளிவு தரும் என்றால் இவளுக்கு குழப்பம் மட்டுமே, கூடவே குற்றவுணர்வும்..!
அதற்காக சிரஞ்சீவியை விட்டுவிடும் எண்ணமில்லை. அவனில்லாத ஒரு வாழ்வை நினைக்க கூட முடியவில்லை. மொத்தமாய் அவளைக் களவாடியிருந்தான் அவன். அவன் அன்பில் இவள் காணாமல் போயிருந்தாள். சிரஞ்சீவி மீது கொள்ளை கொள்ளையாய் அன்பிருந்தது, அவன் ஆயுளுக்கும் அவளுடன் வர வேண்டும் என்ற ஆவல் இருந்தது. வார்த்தையால் சொல்லாவிடினும் குறையாத காதல் இருந்தது.
ஆனாலும் அறிவு அவளை சாடியது.! எதற்காக இங்கு நீ வந்தாய் என்று திட்டியது. அத்தையைக் காதலித்தார் என்று அவ்வளவு பேசிவிட்டு இன்று அவர் மகன் மீது இப்படி மயக்கம் கொண்டிருக்கிறாயே என்று ஏசியது. படிப்பதற்காக அத்தனை பிடிவாதம் பிடித்ததென்ன? ஒரு வருடம் காத்திருந்தது என்ன என்று நினைக்க நினைக்க மனம் கூசியது.
அப்பாவிடம் எவ்வளவு நம்பிக்கையாய் உறுதியாய் பேசினாய். இன்று அத்தையைப் போலவே உன் அப்பாவின் நம்பிக்கையை நீ உடைத்துக் கொண்டிருக்கிறாய் என்ற உள்ளத்தின் கூச்சலை அப்படியே ஒதுக்கிவிட முடியவில்லை. அதே நேரம் சிரஞ்சீவியும் வேண்டும் என்று மனம் எண்ண இதயத்தின் இரட்டை வேஷத்தில் தவிப்பதும் மறுகுவதுமாக அவள் பொழுதுகள் இருந்தன.
போதாக்குறைக்குக் குண்டூரில் காரமாய் சாப்பிட்டது அவளுக்கு ஒத்துக்கொள்ளாமல் போக, இரண்டு நாட்களாய் தயிர் சாதம்தான் உண்கிறாள். கல்லூரி விட்டு வந்தவளுக்குக் களைப்பாய் இருந்தது. அப்போது பார்த்து ஜெகதீஷ் அழைத்தான். மனமெல்லாம் கல்கி மீதான அன்பு நிறைய இருந்தாலும் கோபம் தான் முன்னே நின்றது அவனுக்கு.
“சொல்லு மாமா” என்று அவளின் குரல் சோர்வாய் ஒலிக்க
“என்ன சொல்லு மாமா? எங்கிட்ட நீ பேசி இரண்டு வாரம் ஆகுது டி. நானும் நீயா போன் பண்ணுவ பார்த்தா உனக்கு என்னைக் கூப்பிட கூட நேரமில்லை இல்லையா?” என்றான் கோபமாக.
“அப்படி இல்லை, மறந்துட்டேன்”
“அதான் உன்னோட அத்தை வந்ததும் என்னை சுத்தமா மறந்துட்ட. உங்க அத்தை வீட்டுக்குப் போனது கூட அஞ்சு சொல்லி எனக்குத் தெரியுது. நீ சொல்லல” என்றான் குற்றச்சாட்டாக.
“அஞ்சு சொன்னாதானே? நான் சொன்னா என்ன அவ சொன்னா என்ன? அப்பா வெள்ளிக்கிழமைதான் பெர்மிஷனே கொடுத்தார், அப்புறம் அவசரமா கிளம்பிட்டோம்” என்று கல்கி பேசிக்கொண்டே போக
அஞ்சு சொல்வதும் கல்கி சொல்வதும் ஒன்றா என்று நினைத்தான் ஜெகதீஷ். ஜெகதீஷுக்கும் அஞ்சனாவிற்கும் கிட்டதட்ட ஒரே வயதுதான். அவர்களும் நண்பர்களை போலவேதான் பழகுவார்கள். அதனால் கல்கி அப்படி சொல்ல, ஜெகதீஷுக்கு அஞ்சனா நல்ல தோழி, கல்கி அப்படி இல்லையே.
அந்த கோபத்தில்
“ஓஹ், அவ சொன்னா நீ சொல்ல மாட்டியா? நான் உனக்கு ரொம்ப வேண்டாதவனாகிட்ட டி. எங்கிட்ட ஒருவார்த்தை சொல்லிட்டு போனா என்ன? உங்கத்தையை திட்டும்போதெல்லாம் எங்கிட்ட திட்டுவ. இப்ப சேர்ந்ததும் என்னை மறந்துட்ட” என்றான் எரிச்சலாக.
கல்கிக்கு அவன் பேச்சு இன்னும் வருத்தமாய் இருந்தது. அவனிடம் தன் மன உளைச்சலை சொல்லலாம் என்று நினைத்திருக்க, ஜெகதீஷும் இப்படி பேசிவிட அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
“ஏன் நீ எங்கிட்ட சொல்லிட்டுத்தான் எல்லாம் செய்றியா? உன் மாமா வீடு போகும்போது எல்லாம் எங்கிட்ட பெர்மிஷன் கேட்கிறியா?” கல்கியும் கோபத்தில் பேசினாள்.
“நான் சொல்லலன்னா நீயும் சொல்லமாட்டியா?”
“முதல்ல ஏன் சொல்லணும் கேட்கிறேன். இங்க பார் நான் எது செஞ்சாலும் உங்கிட்ட சொல்லிட்டு செய்யணும்னு எனக்கு அவசியமில்லை. எங்கப்பா கூட என்னைக் கேள்வி கேட்கல. நீ கேட்பியா?” என்ற கல்கியின் பேச்சில் காயப்பட்டது ஜெகதீஷின் மனம்.
“கல்கி..?”
“பேசாத.. உனக்குப் பிடிச்சத செஞ்சு நான் என்ன செய்யப்போறேன்னு சொன்னாதான் நீ பேசுவன்னா நீ பேசவே வேண்டாம் ராசா. வை போனை” என்று கட் செய்துவிட்டாள். ஜெகதீஷ் சீக்கிரமே தன் மனதில் இவளுக்கான இடத்தை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
கல்கிக்கு சிரஞ்சீவியைப் பார்க்கவே தயக்கமாய் இருந்தது. என்னவோ அப்பா பேசும்போதெல்லாம் குற்றவுணர்ச்சியாய் இருக்க இப்போது படிக்க வேண்டும் என்பது மட்டுமே ப்ரதான எண்ணமாய் இருக்க, காதல் சொன்னவனைக் கண்கொண்டு பார்க்க துணிவில்லை.
இயல்பாய்க் கூட சிரஞ்சீவியிடம் பேச முடியவில்லை, அப்பாவின் நினைப்பு வந்துவிடுகிறது. பேசாமல் இருந்தால் சிரஞ்சீவி என்ன நினைப்பான் என்ற கவலை. அதனால் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். குண்டூரில் இருந்து வந்து ஒருவாரம் ஆகியிருக்கும். சிரஞ்சீவிக்கும் வேலை முடிந்து இருக்க, கல்கியைப் பார்க்கவே முடியவில்லை.
சீக்கிரமே வீட்டிற்கு வந்தவன் கல்கி என்று அறையில் இருந்தவளை அழைக்க கல்கியோ அறைக்குள் இருந்தே “எனக்குப் படிக்கிறது இருக்கு. நான் முன்னாடியே சாப்பிட்டேன்” என்றாள்.
இதற்கு முன்னும் இப்படி சொல்லியிருக்கிறாள். ஆனால் அது சொல்லும் வகை வேறாக இருக்கும்.
“மிஸ்டர். காரம் படிச்சிட்டு இருக்கேன். முன்னாடியே சாப்பிட்டேன், நீங்க சாப்பிடுங்க. முடிச்சுட்டு வரேன்” என்று ஒரு உற்சாகமாய்ப் பேசுவாள். சிரஞ்சீவியும் இரண்டு நாட்கள் பொறுத்து இருந்தான். கல்கியின் உற்சாகமற்ற மன நிலை வசந்தி அக்காவிற்குக் கூட தெரிந்தது.
“என்ன பாப்பா நீ? ரொம்ப டல்லா இருக்க?” என்று கேட்டார்.
“காலேஜ்ல வேலை நிறையாக்கா. அதான்”
“தோசைக்கு சட்னி வச்சிட்டேன். நீயும் தம்பியும் சூடா ஊத்துக்கிருக்கீங்களா?”
தோசை என்றால் அவன் வரும்வரை காத்திருக்க வேண்டும். அவனைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொள்ளும் இந்த காதல் மனம். அதனால்
“அக்கா, இட்லி செஞ்சிடுங்கக்கா” என்றாள் கல்கி. அவரும் இட்லி செய்துவிட்டு போனார். அடுத்து வந்த நாட்களும் சப்பாத்தி, பொங்கல் என்று செய்ய சொல்லிவிட்டாள்.
தற்செயலாய்ப் பார்க்காமல் இருப்பதற்கும் தன்னை வேண்டும் என்றே தவிர்ப்பதற்கும் வித்தியாசம் கண்டுகொள்ள முடியாதவனா சிரஞ்சீவி?
ஆனால் ஏன்? என்று தெரியவில்லை. பொறுத்துப் பார்த்தவன் ஒரு நாள் ஏழு மணிக்கெல்லாம் வந்துவிட்டான். கல்கி அவன் வருவதைப் பார்த்தவள் அறைக்குள் நுழைந்துகொள்ள அறைக்கதவைக் காலால் தடுத்தவன், கல்கியை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
“எனக்குப் படிக்கனும்” கல்கி அவன் முகம் பார்க்காது சொல்ல
“என்னைக்குமே நான் படிக்க வேண்டாம்னு சொன்னதில்ல, பட் ஏன் நீ கொஞ்ச நாளா என்னை அவாய்ட் பண்ற அம்மடூ” என்றான் பொறுமையாகவே.
“நான் ஒன்னும் அவாய்ட் பண்ணல. எனக்கு நிஜமா படிக்கிற வேலை இருக்கு. தள்ளிப்போங்க”
“கல்கி, என்னாச்சு?” என்றவனின் குரலில் ஒரு விசாரனைத் தொனி.
“என்னாச்சு? ஒன்னுமில்லை” என்றாள் தன்னை இயல்பாய்க் காட்டிக்கொண்டு. குற்றவுணர்வு அவளை தவிக்க செய்திருந்தது. என்னமோ செய்யக் கூடாத தவறை செய்த உணர்வு. காதலை ஏற்கவும் முடியாமல் அதனை உதறவும் முடியாமல் தனக்குள்ளாகவே தவித்தாள்.
“கல்கி! டோண்ட் லை” என்றான் தீவிரமான ஒரு குரலில். கல்கி தன்னிடம் இருந்து விலகியிருப்பது அவனை பலவாறாக யோசிக்க வைத்தது. தன்னைப் பிடித்தும் ஏன் இந்த தயக்கம் என்ற நிலைதான்.
கல்கி பதில் பேசாமல் இருக்க “கல்கி! நானும் உன்னை பார்த்துட்டுதான் இருக்க, நீ ரெஸ்ட்லெஸா இருக்க. நான் வர நேரம் லைட் ஆஃப் பண்ணி ரூம்குள்ள போற, மனசுல இருக்கறதை சொல்லிட்டேன்றதால உங்கிட்ட நான் எந்த அட்வாண்டேஜும் எடுக்க மாட்டேன் கல்கி. முன்ன மாதிரி பேசுறதுக்கென்ன? டிரிட் மீ லைக் எ ப்ரண்ட்” என்றான்.
காதல் சொன்னவனை காதல் தவிர வேற எந்த உணர்வுடனும் பார்க்கமுடியவில்லை. உணர்ந்த போது தெரியாதது உரைத்த போது தெரிந்தது.
“ஆன்ஸர் மீ” என்றவனின் குரல் சற்றே உயர்ந்தது. கல்கியின் மௌனம் அவனை சத்தமாய்ப் பேச வைத்தது.
“கல்கி… ஏன் இப்படி தடுமாற? என்ன பிரச்சனைன்னு சொன்னாதானே தெரியும்” என்றான் சத்தமாக.
“தடுமாற வைக்கிறது உங்க வார்த்தையும் என் வயசும்தான்” என்றாள் கண்ணில் நீர் நிறைய.
“கல்கி…இதுல என்ன இருக்கு. நம்ம எந்த தப்பும் செய்யல” பொறுமையாய்ப் பேச வைத்தது கல்கியின் கண்ணீர்.
“இல்லை, நீங்க செய்யல. நான் தான் தப்பு செய்றேன்” என்றாள் உடைந்த குரலில்.
“அப்படி இல்ல கல்கி, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லைடா”
“உங்களுக்கு இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி இல்லை. என்னோட தப்புதான் எல்லாம்…” அவள் உணர்ச்சிவசத்தில் உளறிக்கொண்டு இருக்க கோபம் வந்தது சிரஞ்சீவிக்கு. காதல் எத்தனை அழகான உணர்வு. அதற்கு ஏன் அழுகிறாள் என்ற எரிச்சல் அவனுக்கு. அவளைத் தெரிந்த அளவு அவளின் நுண்ணிய உணர்வுகள் தெரியவில்லை, அறியவில்லை.
“இப்போ என்ன தான் உன் பிரச்சனை?” பொறுமைப் பறக்க அவன் கேட்க
“என்னால இன்னொரு யமுனாவா இருக்க முடியாது” என்று கல்கி உணர்ச்சிவசத்தில் தன்னை மீறி பேச அந்த வார்த்தைகள் சிரஞ்சீவியின் சினத்தை பல மடங்கு பெருக்கியது.
“ஷட் அப் இடியட்! ஜஸ்ட் ஷட் யுவர் மவுத், ஒரு வார்த்தைப் பேசாத” என்று விரல் நீட்டி கத்தினான். அதில் அவனைக் காயப்படுத்திவிட்டோம் என்று புரிய கல்கியின் கண்களில் கண்ணீர்..!
‘கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்’
✅ End of Episode 32
அடேய் முசுட்டு சிங்காரம் அவளோட நிலையில் இருந்து யோசிடா...
Nice