Episode 30

சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேர விமான பயணத்தில் விஜயவாடா சென்றனர் கல்கியும் சிரஞ்சீவியும். முதல் முறை வானில் பறந்தாள் வஞ்சி!! அவளுக்குப் பிடித்த பறவை போல.!

விஜயவாடாவில் சூர்ய நாராயணன் க்ரைம் ப்ராஞ்சில் கமிஷனராக இருந்தார். கல்கி வருகிறாள் என்பதால் மனைவியுடன் சொந்த ஊரான குண்டூருக்கு வந்திருந்தார். விமான நிலையத்தில் இருந்து குண்டூருக்கு டாக்ஸி பிடித்தான் சிரஞ்சீவி.

“மாமா வீடு எங்க இருக்கு?” கல்கி சுற்றிலும் பார்த்தபடி சிரஞ்சீவியிடம் கேட்டாள்.

“குண்டூர்ல இருந்து ஒரு ஃபாஃப்டி வைஃப் மினிட்ஸ் ஆகும். இங்க இருந்து போக டூ அவர்ஸ் மேல ஆகலாம். நீ தூக்கம் வந்தா தூங்கு கல்கி” என்று சிரஞ்சீவி சொல்ல

அவன் முகத்தைப் பார்த்து “சொந்த ஊருக்கு வந்ததும்தான் உங்களுக்கு சிரிப்பே வருது” என்றாள் கல்கி.

“அவுனு? ஏன் அப்படி சொல்ற?”

“அப்படித்தான் தெரியுது, உங்க ஊர் பெயர் என்ன?”

“சிரிபுரம்” என்றதும் கல்கி சிரித்துவிட்டாள்.

“ஏமிரா? ஊர் பெயர் சொன்னா சிரிப்பியா நீ?” என்று கல்கியின் சிரிப்பின் அர்த்தம் விளங்காமல் கேட்க

“இல்லை உங்க பெயர் சிரஞ்சீவி, ஊர் பெயர் சிரிபுரம்ல. சிரி சிருன்னு நினைச்சேன், சிரிச்சேன்” என்றவள் “உங்க ஊர் ஞாபகமா சிரஞ்சீவின்னு பெயர் வச்சாங்களா?” என்று கேட்டாள்.

“இல்லை, எங்கப்பா பயங்கரமான சிரஞ்சீவி ஃபேன். அதனால இந்த நேம், இதுல சிரஞ்சீவியோட ஒரிஜினல் நேமே சிவசங்கர வரப்ரசாத். ஸோ எல்லாத்தையும் சேர்த்துட்டாங்க”

“திரும்புனமேனியை விட்டுடீங்க” கல்கியின் கண்கள் கள்ளத்தனத்துடன் சிரிக்க

“அம்மடூ! அங்க வந்து இப்படி சொல்லிடாத, அது எங்க ஃபேமிலி நேம். பெத்த நானா கோச்சுப்பாங்க” என்றான் கொஞ்சம் அழுத்தத்துடன்.

“உங்களைத்தான் அத்தைப் பையன்னு கிண்டல் பண்றேன். மத்தவங்க கிட்ட எப்படி பேசணும் தெரியும்” கல்கி ரோஷத்துடன் சொன்னாள்.

“எனக்கு உன்னைத் தெரியும் கல்கி” என்று அவன் புன்னகைத்து சொல்ல, தலையசைத்த கல்கி

“கோவிலுக்கு எப்போ போறோம்?” என்று பேச்சை மாற்றினாள்.

“நாளைக்குத்தான் போறோம். விஜயவாடா கனகதுர்கா டெம்பிள். அம்மாவும் அப்பாவும் அங்க வந்துட்டு அப்படியே அவங்க குவார்ட்டர்ஸ் போய்டுவாங்க” என்று விளக்கம் சொல்ல வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்த கல்கி

“நான் கூட ஆந்திரான்னா வித்தியாசமா இருக்கும் நினைச்சேன், ஆனா குண்டூரும் கும்பகோணம் மாதிரித்தான் இருக்கு. என்ன நேம் போர்ட்ல தெலுங்கு இருக்கு” என்றாள்.

“அப்படியா? இது சிட்டி, இன்னும் ஊருக்குள்ள போனா உனக்கு வித்தியாசம் தெரியும்”

“அங்க சிரிபுரம்ல உங்க பெரியப்பா, பெரியம்மா எல்லாம் இருக்காங்கதானே?”

“அவுனு, பெத்த நானாவும் பெத்தம்மாவும் அங்க இருக்காங்க. நம்ம வீட்டுக்குப் பக்கத்து வீடு, தாத்தா இருந்தப்பவே எல்லாருக்கும் வீடு வயல் எல்லாம் பிரிச்சுக் கொடுத்துட்டாங்க. நமக்கு ஃபைவ் ஏக்கர்ஸ்ல மிரப்ப தோட்டா(மிளகாய்த் தோட்டம்) இருக்கு. பாபாய்க்கு(சித்தப்பா) பண்டிப் பூவு தோட்டா(சாமந்தி, கட்டிக்கேந்தி பூ). பெத்த நானா அக்ரிதான் ஃபுல்லா பண்றார். அவருக்கு டென் ஏக்கர்ஸ்ல மிரப்ப தோட்டா இருக்கு. எக்ஸ்போர்ட் பண்ணுவார்” என்றவனை பார்வை விலகாமல் கல்கி பார்க்க

“என்ன?” என்றான்.

“ஒழுங்கா தமிழ்ல பேசுங்க, பாதிக்கு மேல புரியல. இதுல தெலுங்கு கத்துக்க வேண்டாம்னு அட்வைஸ் வேற” என்றாள் கடைசி வரியை முணுமுணுப்பாக.

அவன் எல்லாவற்றையும் தமிழில் சொல்ல “மிளகாய் தோட்டமா? அதான் எஸ்பி இவ்வளவு காரமா இருக்காரா?” என்று கேட்க அவளை ரசித்துப் பார்த்தவன்

“எஸ்பி மட்டுமா காரம்? கல்கி காரமில்லையா?” என்றான் அவளிடம்.

“உங்களவுக்கு எல்லாம் இல்லைப்பா. அதுவும் யுனிஃபார்ம் போட்டா அவ்வளவுதான்” என்றவள்

“உங்க ஒருத்தர் பாஷையே புரியல, இதுல அங்க போய்ட்டா எங்கத்தையை தவிர யார் பேசுறதும் எனக்குப் புரியாது” கல்கி புலம்பவும்

“நீ என்னை மட்டும் பாரு அம்மடூ. புரியலன்னா என்னைக் கேளு”

“எனக்கு எங்க அத்தை இருக்காங்க. அவங்களுக்கும் தெலுங்கு தெரியும்” என்று கெத்தாய் சொல்ல இவன் சிரித்துக்கொண்டான்.

போகும் வழியில் கேந்தி பூக்கள் பூத்துக் குலுங்கியிருந்தன, பொன்மஞ்சளும் செம்மஞ்சளுமாக வயலெல்லாம் பூக்கள், பூக்கள் மட்டும்! அதனைப் பார்த்த கல்கி

“அச்சோ! எவ்வளவு அழகா இருக்கு உங்க ஊரு? எங்க ஊர்ல நெல்தான் நிறையா. இப்படி பூந்தோட்டமெல்லாம் அங்க இல்லை. சூப்பரா இருக்கு, ஒரு போட்டோ எடுப்போமா?” என்று ஆசையாய்க் கேட்க

“இது மாதிரி நமக்கும் தோட்டம் இருக்கு. சித்தப்பாவோட தோட்டத்துல நிறைய பிக் எடுக்கலாம்” என்று சொன்னான்.

ஒருவழியாக இருவரும் வீடு வந்து சேர, அவ்வளவு அழகாய் இருந்தது கல்கியின் அத்தை வீடு. கொஞ்சம் பழைய வீடுதான், வாசலில் இருந்து பத்தடியில் திண்ணை இருக்க ஓடுகள் போடப்பட்டிருந்தன. வாசலில் ரோஜா செடி வரவேற்று நின்றது.

“அத்தை!” என்று கல்கி வாசலில் நின்ற யமுனாவைக் கட்டிக்கொள்ள, யமுனாவும் லேசாய் நீர்த்திரையிட்ட விழிகளுடன் அவளை அணைத்துக்கொண்டார். எத்தனை நாள் ஏக்கம்? தன்னையும் காண தன் பிறந்த வீட்டினர் வரமாட்டார்களா என்று ஏங்கியிருக்க இன்று கல்கி வரவும் அவருக்கு அவ்வளவு சந்தோஷம்.

யமுனாவின் முகத்தைப் பார்த்த சூர்யாவுக்கும் முறுவல் பிறக்க, கல்கியின் பின் நின்ற மகனிடம் சென்றது அவரின் பார்வை. அவன் பார்வையோ பாவையைத் தழுவி நின்றது.

யமுனாவுடன் கல்கி நெருக்கமாய் இருக்கும்போது வரப்ரசாத்தின் பார்வையில் பொறாமை இருக்கும். இன்று அதில்லை! அதையும் தாண்டியை ஒன்று, வாஞ்சையாய் வஞ்சியை வருடியப் பார்வை அது! ரசித்து நின்றான் மகன்! மகனிடம் நேரில் பேசலாம் என்று நினைத்திருந்தவருக்கு மகனின் பார்வையே பாதி பதிலை சொல்லிவிட, கேள்வியாய் மகனை பார்த்தார் சூர்ய நாராயணன். அப்பாவின் பார்வையில் சிரஞ்சீவி அவர் பக்கம் திரும்பி “நானா!” என்றான் மகிழ்ச்சியுடன்.

“வா சிரூ” என்று வரவேற்றவரின் விழியில் இருந்த கேள்வி சிரஞ்சீவியை யோசிக்க வைத்தது.

‘சொல்லாத வார்த்தைகள் சுவையானவை
அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை
சொல்லுக்குள் உன்னை சுருக்கிட மனமில்லை
அளவில்லா உணர்வுகளை அரை பக்கத்தில் அடைத்து வைக்கும் ஆசையும் இருந்ததில்லை’ (வசந்த முல்லை அவளோ அவளோ பாடல்)

****************

சூர்ய நாராயணனுக்கு மகனிடம் பேச வேண்டி இருந்தது. அதற்கான சூழ்நிலை அமையாமல் இருக்க, இன்று நேரே பார்க்கவும் அவர் மனம் மறைத்தாலும் முகம் கேள்வியைத் தாங்கி இருக்க, சிரஞ்சீவி கண்டுகொண்டான். ஆனால் அது கல்கி சம்மந்தமாய் இருக்கும் என்ற அனுமானிக்கவில்லை.

“என்ன நானா? எதாவது கேட்கனுமா?” என்று அவர் பக்கம் சென்று வரப்ரசாத் கேட்க

“அவுனு சிரூ. இப்போதானே வந்தீங்க, அப்புறம் பேசலாம். இன்ட்டிக்கு ரா” என்றார்.

யமுனாவின் கண்ணீர் பார்த்த கல்கி
“என்னத்த அழறீங்க?” என்று கேட்க

“அது அவ அம்மா வீட்ல இருந்து யாரும் வந்ததில்லையா. அதான் யமுனா எமோஷனல் ஆகிட்டா” என்று சூர்யா சொல்லவும் பாசமாய் அத்தையைப் பார்த்தாள் கல்கி.

“அதான் நான் வந்துட்டேன்ல அத்தை. உங்க வீட்டை சுத்தி காட்டாம இங்கயே நிக்க வைக்கிறீங்க?” என்று கேட்க

“அத்தரின்ட்டிக்கு ராம்மா கல்கி. ப்ரியத்தம்மா ஏன் அழற? கல்கியை அழைச்சிட்டுப் போ. அப்புறம் அத்தை வீட்ல ஒழுங்கா கவனிக்கலன்னு கல்கி கம்ப்ளையண்ட் செய்யப்போறா” என்று சூர்யா சிரிப்புடன் சொல்ல

“உன்னைப் பார்க்கவும் ரொம்ப சந்தோஷமாகிடுச்சுடா கல்கி” என்று கல்கியின் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்ற யமுனா அவளுக்கும் மகனுக்கும் ஜூஸ் கொடுத்தார். கல்கியின் மனமோ யமுனாவுக்காக யோசித்தது.

யமுனாவின் ஏக்கம் புரிய, தவறே செய்திருந்தாலும் இத்தனை ஆண்டுகள் அத்தையை ஒதுக்கி வைத்திருக்க கூடாது என்று நினைத்தவள், இவர்களாவது மீண்டும் வந்து பேசியிருக்கலாம் என்று எண்ணினாள். ஆனால் ‘உங்க சாம்பார்ல என்னையும் அஞ்சுவையும் பருப்பா மசிச்சிட்டீங்களே’ என்று அவர்களைத் திட்டவும் மறக்கவில்லை மங்கை மனம். யமுனா கல்கிக்கு வீட்டை சுற்றிக் காட்டியபடி அவளுடன் பேசிக்கொண்டிருக்க சூர்ய நாராயணன் மகனை முன் திண்ணைக்கு அழைத்துச் சென்றார்.

“சொல்லுங்க நானா” என்று அவர் அருகே வரப்ரசாத் உட்கார மகனின் முகத்தைத் தீவிரமாய்ப் பார்த்தவர்

“கல்கிக்கும் உனக்கும் நடுவுல என்ன இருக்கு சிரூ?” என்றார் பட்டென. அப்பா கல்கியைப் பற்றி பேசுவார் என்று சிறிதும் அனுமானமின்றி இருந்தவன் பதில் சொல்ல நேரமெடுக்க சூர்யாவே பேசினார்.

“உன்னோட கார் நீ யாருக்கும் கொடுக்க மாட்ட சிரு ஆனா கல்கிக்குக் கொடுத்த, கல்கி லாஸ்ட் செமெஸ்டர் டூர் போகறதுக்கு உன் மாமா கிட்ட பேசி பெர்மிஷன் வாங்கின. அண்ட் அம்மா கிட்ட யார் க்ளோஸா பேசினாலும் உனக்குப் பிடிக்காது, அதுவும் கல்கிக்கு உங்கம்மா எண்ணெய் வச்சுவிட்டப்ப நான் உன்னைப் பார்த்தேன். இப்போ அப்படி இல்லை, நீ அவளை அட்மையர் பண்ற” என்று சூர்யா மகனைப் பற்றி சொல்ல சொல்ல அப்பா தன்னைக் கண்டுகொண்டதில் அவனுக்கு ஆச்சரியமே இல்லை, ஏனெனில் அவனும் அப்பாவும் அவ்வளவு நெருக்கம்.

மகனின் சின்ன மாற்றம் கூட அவர் கண்டுகொள்வார் என்பது தெரிந்ததுதானே? சென்னையில் இருந்திருந்தால் முன்பே அறிந்திருப்பார்.

“கமிஷனர் ஸார் எல்லா எவிடன்ஸும் வச்சிட்டுதான் எங்கொயரி ஆரம்பிச்சிருக்கீங்க?” வரப்ரசாத் சூர்யாவிடம் கிண்டலாய்க் கேட்க

“எவிடன்ஸ் மட்டுமில்ல, ஐவிட்னஸ் கூட இருக்கு எஸ்பி ஸார்” என்றதும் அவன் கேள்வியாய்ப் பார்க்க

“உன் கண்ணு கல்கியைப் பார்க்கிற பார்வையில தெரியுது பாபு” என்றவர் கொஞ்சம் கண்டிப்புடன்

“கல்கி இன்னும் படிச்சு முடிக்கல சிரூ” என்றார்.

“நீங்க அம்மாவை லவ் பண்ணினபோது கூட அம்மா படிச்சு முடிக்கல நானா” என்றான் வரப்ரசாத் பட்டென்று.

“சீரூ?” என்று சூர்யா மகனைப் பார்க்க

“எனக்கு என்னோட லிமிட்ஸ் தெரியும் நானா, இதுவரைக்கும் அவளைப் பிடிக்கும்னு நான் அவகிட்ட சொன்னதே இல்லை. அவளுக்கும் என்னைப் பிடிக்கும் பட் அவளும் சொன்னதில்ல” என்ற மகனைக் கண்டு அவருக்குப் பெருமிதமே! சூர்யாவுக்கு மகனின் பேச்சில் புன்னகை.

“எஸ், நாங்க படிக்கும்போதுதான் லவ் பண்ணினோம் பாபு, பட் இப்போ உன்னோட நானாவா இருக்கும்போது இதெல்லாம் எனக்கு சொல்லத் தோணுது. உன்னோட சேர்ந்து நாங்களும் வளர்ந்துட்டோம் இல்லையா? கல்கியை உன் மாமா நம்ம வீட்டுக்கு நம்பி படிக்க அனுப்பியிருக்கார். உனக்குப் புரியுதுதானே?” என்று மகனின் முகம் பார்க்க

“உங்களுக்குக் கல்கியை அக்செப்ட் செய்ய முடியலையா நானா?” என்று அப்பாவின் மனமறிய கேட்டான் மகன்.

“ப்ச் சீரு? ஏமிரா நுவ்வு? கல்கியை எனக்குப் பிடிக்கும். உண்மையை சொல்லணும்னா கல்கி நம்ம வீட்டுக்கு வந்தா எனக்கு சால சந்தோஷம்ரா. என்னோட ப்ரியத்தம்மா கூட கல்கி ஈசியா செட் ஆகிட்டா. வேற பொண்ணு வந்தாலும் அம்மாவுக்கு அவளுக்கும் செட் ஆகுமா தெரியாது” என்று சூர்யா தன் மனைவியைப் பற்றி பேசவும்

“நானா?” என்று பல்லைக் கடித்தவன்

“என்னையும் என் அம்மடூவையும் சேர்த்து வைப்பீங்க பார்த்தா உங்களுக்கு உங்க ப்ரியத்தம்மாவுக்கு ஏத்தமாதிரி மருமக வேணுமா?” என்று வரப்ரசாத் முறைத்தபடி கேட்க மகனின் தோளில் கைப்போட்டுக் கொண்டு

“ஹாஹா! எனக்கு எப்பவும் என் ப்ரியத்தம்மாதான் ஃபர்ஸ்ட் ப்ராயர்ட்டி பங்காரம், அவளை வச்சுதான் நான் எல்லா விஷயமும் யோசிப்பேன். எல்லாரையும் விட்டு எனக்காக வந்தவ அண்ட் உன் அம்மடூக்கும் என் ப்ரியத்தம்மாவை விட பெஸ்ட் மாமியார் கிடைப்பாளா சொல்லு?” என்று அவர் மகனிடம் எதிர்க்கேள்விக் கேட்க, அப்பாவின் பேச்சில் அவனுக்கு ஆனந்தமாய் இருந்தது. அப்பாவின் தோள் சாய்ந்தவன்

“கோபமில்லையே நானா? கல்கிட்ட சொல்லாம எனக்கு இதை ஷேர் பண்ண தோணல” என்று சிரஞ்சீவி விளக்கம் சொல்லவும் மகனை வாஞ்சையாய்ப் பார்த்தவர்

“எனக்கு ஏன் கோவம்?” என்றவர் பெருமூச்சுடன்

“பட் இந்த மேரேஜ் ஒன்னும் அவ்வளவு ஈசியா நடக்காது சீரு. கல்கிக்குப் பிடிச்சாலும் உன் மாமா ஒத்துப்பாரா தெரியல. அண்ட் கல்கி சின்னப்பொண்ணு எனக்கும் உன் அம்மாவுக்கும் நிறைய புரிதல் இருந்துச்சு. ஷி வாஸ் வித் மீ இன் ஆல் அப்ஸ் அண்ட் டவுன்ஸ், ஐபிஎஸ் பாஸ் பண்றதுக்கு முன்னாடியே என்னை நம்பி கல்யாணம் செஞ்சுகிட்டா. மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கம் ஏன் சாப்பாடுன்னு நிறைய வித்தியாசம் இருக்கு. எல்லாத்தையும் இரண்டு பேரும் ஒன்னா கடந்துவரனும் பாபு. லவ் இஸ் நாட் தட் ஈஸி” என்று அவர் அனுபவத்தை மகனிடம் பகிர்ந்தார்.

“எல்லா சிட்டிவேஷன்லையும் நான் யமுனா கூட இருந்தேன். அவளோட நம்பிக்கையை நான் எப்பவும் காப்பாத்துட்டு இருக்கேன். நீயும் அப்படி இருக்கனு, கல்கியும் உன்னைப் புரிஞ்சு நடக்கனும் ” என்றதும்

“ட்ரஸ்ட் மீ நானா” என்ற சிரஞ்சீவியைக் கனிவுடன் பார்த்த சூர்யா

“என் பங்காரத்தை நான் எப்பவும் நம்புவேன். இங்க உன்னை ட்ரஸ்ட் பண்ண வேண்டியது நான் இல்லை, கல்கி சிரூ. உனக்கும் அவளுக்கும் எப்படி செட் ஆச்சுன்னே எனக்குத் தெரியல, உங்கம்மா கேட்டா ஷாக் ஆகிடுவா. நீங்க இரண்டு பேரும் சண்டை போடாம ஒரு வருஷத்துக்கு மேல இருக்கறதே எங்களுக்கு அதிசயமா தெரியுது”

“சண்டையெல்லாம் வரும் நானா. அடுத்த சண்டை வரும்போது முதல் சண்டையை மறந்திட்டு பேசிடுவோம்” என்ற வரப்ரசாத்தின் பேச்சில் வாய்விட்டே சிரித்தார் சூர்ய நாராயணன்.

சிரித்து முடித்தவர் “அதுதான் சொல்றேன், கல்கிக்குக் கோபம் நிறைய வரும். நீ கூட அவ கிட்ட நிறைய கோபப்பட்டிருக்க. எல்லாத்தையும் யோசிச்சுட்டு முடிவெடு. கல்யாணம்றது லைஃப் லாங் கமிட்மெண்ட்” என்ற சூர்யா

“கல்கி படிச்சு முடிச்ச அப்புறம் அம்மா கிட்ட இதைப் பத்தி சொல்றேன். இப்பவே சொன்னா அவங்க அண்ணாவை நினைச்சு டென்ஷன் ஆகிடுவா. நீயும் கல்கி யுஜி முடிக்கிற வரை வெயிட் பண்ணு” என்று அறிவுறித்தினார். யமுனாவும் கல்கியும் ஒன்றாய் வரவும் அப்பா மகன் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு அவர்களைப் பார்க்க

கல்கியோ சூர்யாவிடம் “மாமா, நான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன், என்னைக் கவனிக்காம நீங்க உங்க பங்காரத்தோட மட்டும் பேசிட்டு இருக்கீங்க” என்று முகம் சுருக்கி சொல்ல

“ஏன்ட்டிம்மா? நீ உங்க அத்தம்மா கிட்ட ஃப்ரியா பேசுவன்னு நானும் என் பங்காரமும் தனியா வந்து உட்கார்ந்திருக்கோம்” என்று சூர்யா சிரித்தார்.

கணவரையும் மகனையும் பார்த்த யமுனா “சுபாக்கா நம்ம மதியம் லஞ்சுக்கு அங்க வர சொல்லியிருக்காங்க சூர்யா. போகலாமா? நீங்க ரெடியா?” என்று கேட்க

“பெத்தம்மா கூப்பிட்டாங்களா?” என்றபடி எழுந்த ப்ரசாத் “டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்மா” என்று அவன் ஆடையை மாற்றிவிட்டு வந்தான்.

கல்கியைப் பார்த்த யமுனா “அவங்க பெரியப்பா வீட்லதான் இன்னிக்கு நமக்கு லஞ்ச், அத்தை உனக்கு நைட் சமைச்சுத் தரேன்டா கல்கி. சுபாக்கா உன்னையும் அழைச்சிட்டு வர சொன்னாங்க” என்றார்.

“போகலாமா யமுனா?” என்று சூர்யா கேட்க

“ம்ம், போகலாம்” என்ற யமுனா “ஒரு நிமிஷம் இருங்க” என்று சொல்லி வாசலில் நின்றிருந்த ரோஜா செடியில் இருந்து ரோஜாப் பூவைப் பறித்தவர்

“நீ வரும்போது உனக்குக் கொடுக்கனும் நினைச்சிட்டே இருந்தேன்” என்று சொல்லி கல்கியின் தலையில் வைத்துவிட்டார். இன்னொன்றை பறித்துத் தன் தலையில் சொருகினார்.

“நிறைய பூ பூக்கும், வச்சுக்கத்தான் ஆள் இல்லை. ஒரு பொண்ணு இருந்திருந்தா வச்சு அழகுப் பார்த்திருப்பேன். நாங்க இல்லைன்னா சுபாக்கா பறிச்சு அக்கம்பக்கம் கொடுப்பாங்க” என்றார் யமுனா.

✅ End of Episode 30
How did you feel about this episode?
❤️ 6 🔥 2 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Sathya Velusamy Reader 3 weeks ago

சூர்யா ❤️❤️❤️

❤️ 1 more...
Srichitra Reader 2 weeks ago

Very nice.

❤️ 1 more...
Kavi Natarajan Reader 2 weeks ago

very nice 👌👌👌👌👌

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top