Episode 41

இரண்டு மாதமாய் உதயமூர்த்திக்குக் கல்கியின் கல்யாணம் குறித்த சிந்தனைதான். ஜெகதீஷ் கேட்டபோது ஒத்துக்கொண்ட மனம் சிரஞ்சீவி வந்து சொன்னபோது மறுத்த காரணத்தை யோசித்தார். தன்னை மீறிய தங்கையின் மகன் என்பதாலா? இல்லை தன் பெண்ணிடம் தான் பார்த்த போதெல்லாம் கோபம் மட்டுமே காட்டியவன் என்பதாலா? என்று பலவாறு சிந்தித்தார்.

இதில் தினமும் தையல் நாயகி வேறு ஒரு முறையாவது ‘எம்மூட்டு பேரனுக்கு என்ன குறை?’ என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்.

உண்மையில் சிரஞ்சீவியிடம் அவருக்குப் பெரிதாய் குறைகள் இல்லை. என்ன ஜெகதீஷுடன் ஒப்பிடும்போது அவனுக்கும் கல்கிக்கும் வயது வித்தியாசம் அதிகம். தான் பார்த்தபோதெல்லாம் தன் மகளிடம் கோபம் காட்டியவன் என்றாலும் இரண்டரை வருடம் அவனுடன் தானே கல்கி இருந்தாள். அவன் பாதுகாப்பில் தானே இருந்தாள். ஒரு குறையுமின்றி பார்த்தவனாகிற்றே என்ற எண்ணம் வந்தது உதயமூர்த்திக்கு.

தன்னை மதித்து தன்னிடம் பெண் கேட்ட அவனின் பாங்கு அவரைக் கவர்ந்தது. தன் பெண்ணுக்கும் அவனுக்கும் ஒத்துப்போகுமா என்பதே அவரின் மிகப்பெரிய கவலை. ஆனால் கல்கியின் பிடிவாதம் அவர் அறிந்ததாகிற்றே. தங்கை போல் இல்லாமல் தங்கை மகன் அவரிடம் வந்து பெண் கேட்டிருக்க யோசித்து பார்க்கும் போது அவர்களின் நியாயமான ஆசையை நிறைவேற்ற தோன்றியது.

தன் மகள்கள் சந்தோஷமாய் வாழ வேண்டும் என்பதே தந்தையாய் அவரின் தலையாய எண்ணமாய் இருந்தது. கல்கிக்கு சிரஞ்சீவியுடன் வாழ்வதுதான் சந்தோஷம் எனில் அதை நிறைவேற்றுவதே நல்லது என்று நினைத்தார். அங்கையற்கண்ணியும் முடிந்த வரை கணவரைக் கரைத்திருந்தார்.

இதே வேறு ஒருவனைப் பெண் காதலிக்கிறேன் என்று வந்து நின்றால் ஏற்கும் மனம் இருக்குமா அவருக்குத் தெரியவில்லை. யமுனா காதல் திருமணம் செய்தபோது அது ஒரு குற்றமாகவே உற்றாரும் உறவினரும் கருதினர். இப்போது அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் செய்யும்போது ஏற்கப் பழகியிருந்தனர். அதனால் ஊர், உறவைப் பற்றி எல்லாம் அவருக்கு அவர் அப்பாவைப் போல் கவலை இல்லை.

ஆனால் ஜெகதீஷ், அவருக்கு அவன் என்றால் மிகவும் பிடிக்கும். மகன் இல்லாத குறையைத் தீர்ப்பவன். அவன் ஆசைப்பட்டு அல்லவா என்னிடம் கேட்டான் என்ற எண்ணம் உறுத்தியது. ஜெயராமன் வந்து பேசி சென்றபோதும் ஜெகதீஷிடம் பேசினார். அவனோ

“கல்கிக்கு என்ன விருப்பமோ செய்ங்க மாமா, நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்” என்றான். அவனுக்கு வருத்தங்கள் இருந்தன, இன்னும் மறையவில்லை. சில வருடங்களாய் கொண்ட நேசம் உடனே எல்லாம் கரைந்துவிடவில்லை. காதலின் காயம் இன்னும் காயாமல் இருந்தது. காலம் அதனை மாற்றும் என காத்திருந்தான் ஜெகதீஷ். ஜெயராமன் மட்டும் பெருந்தன்மையாய் நடக்காது போயிருந்தால் உதயமூர்த்திக்கு இன்னும் மன உளைச்சல் ஆகியிருக்கும். ஆனால் அவரின் தங்கை மகள் மீதான பாசம் அவரை நெகிழ்த்தியிருந்தது.

சிரஞ்சீவி அன்று வந்து எவ்வளவு தோரணையாகப் பேசினான்.
‘உங்க பொண்ணா இருப்பா இல்லை என் மனைவியா இருப்பா’. அன்று என்னவோ அவன் பேச்சில் சட்டென ஒரு கோபம் வந்தது. இப்போது நினைத்துப் பார்த்தால் தங்கை மகனின் துணிவை ரசிக்கத் தோன்றியது.

அவருக்கும் அவனுக்கும் ஒட்டுதல் இல்லைதான், உறவு இருக்கிறதே? தாய் மாமனாய் அவர் ஒன்றும் செய்ததில்லை, செய்யும் சூழலும் இருந்ததில்லை. இப்போது அவன் மகளைக் கேட்டிருக்க, மகளுக்கும் அதில் விருப்பமிருக்க ஒத்துக்கொண்டார்.

இதில் சூர்யா அவர் மகனுக்காக வந்து பேசியதும் மனதில் ஓடியது. எல்லாம் சேர்ந்து உதயமூர்த்தியை திருமணத்திற்கு சம்மதம் சொல்லவைத்தது. சூர்யா உதயமூர்த்தியிடம் பேச, அவர் கேட்டுக்கொண்டது ஒன்றுதான்.

“சீக்கிரமே கல்யாணம் வைக்கனும் மாப்பிள்ளை. நான் நல்லாயிருக்கும்போதே அவளுக்கு ஒரு நல்லது செஞ்சுட்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்” என்றார்.

சிரஞ்சீவியிடம் சொல்ல அவன் இன்னும் ஆறுமாசம்தானே அதற்குள் கல்கி படித்து முடித்துவிடுவாள் என்று சொல்ல, சூர்யா மகனிடம் பேசி அவனை மாற்றியிருந்தார். கல்கிக்கும் கல்லூரி முடியவும் திருமணம் செய்யவே எண்ணம், ஆனால் அப்பாவுக்காக ஒத்துக்கொண்டாள்.

அவ்வளவுதான் அதன் பின் வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடந்தன. கல்கியின் செமெஸ்டர் விடுமுறையில் திருமணம் வைக்கலாம் என்று முடிவு செய்திருக்க, சூர்யா அவர்கள் ஊரில் செய்ய வேண்டும் என்றார். உதயமூர்த்தியின் வழக்கத்தில் மாப்பிள்ளை வீட்டில்தான் செய்வது என்றாலும் இங்கு எல்லாமே மாறுமே என அவர் யோசிக்க,

“அண்ணா அங்க கல்யாணம் வச்சிட்டு இங்க விருந்து வச்சிக்கலாம்ணா” என்று யமுனா சொல்ல உதயமூர்த்தி சம்மதம் சொல்ல

“ஒன்னும் அவர் மேல கோவமில்லையேண்ணா? எங்க கல்யாணம் தான் யாருமில்லாம நடந்துச்சு அதான் அவருக்கு ப்ரசாத் கல்யாணம் பெருசா செய்ய ஆசை” என்று யமுனா விளக்கினார்.

“எனக்குக் கோவம் எல்லாம் இல்லை யமுனா. நம்மளதுல மாப்பிள்ளை வீட்லதானே செய்றது. என்ன நீங்க எப்படி செய்வீங்கன்னு எனக்கு முறை ஒன்னும் தெரியாது. அதான் யோசனை”

“அதெல்லாம் பார்த்துக்கலாம்ணா. நான் தான் இருக்கேனே” என்று யமுனா சொல்லவும்

“யமுனா, எப்பவும் எனக்கு மாப்பிள்ளை மேல வருத்தம் இருந்ததில்லை. உண்மையை சொல்லணும்னா அவர் வார்த்தைக்காகத்தான் நான் இந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சேன். நீ என்ன செய்யணும்னு முன்னாடியே உங்கண்ணி கிட்ட சொல்லிடு. நாங்க முறையா செஞ்சிடுறோம், இதுல என் பொண்ணோட கௌரவம் மட்டுமில்லை என் தங்கச்சியோட கௌரவமும் கூட இருக்கு” என்று உதயமூர்த்தி மனதில் உள்ளதை அப்படியே சொல்ல யமுனாவிற்கு மனதிற்கு அவ்வளவு நிறைவாக இருந்தது.

கல்கியின் தேர்வுகளுக்கு முன்னே கும்பகோணத்தில் நிச்சயதார்த்தம் நடந்து விட, இதோ விடுமுறையில் திருமண வேலைகள் களைக்கட்டின.

சிரிபுரத்தில் இருந்த சூர்யாவின் வீடு பெண் வீடாக இருக்க, அவரின் அண்ணன் ஹனுமந்தனின் வீடு மாப்பிள்ளை வீடாக மாறிப்போனது. அவர்கள் தெரு முழுவதும் அவர்களின் உறவுகள்தான் என்பதால் சிரிபுரம் மின்னியது.

திருமணத்திற்கு மூன்று நாள் முன் ‘பெல்லி கூத்துரு’ எனும் சடங்கு நடைப்பெற இருக்க கல்கி டென்ஷனாக இருந்தாள். நேற்று இரவு அவர்கள் குடும்பமாய் குண்டூர் வந்திருக்க இன்னும் அவளின் வரப்ரசாத் விஜயாவாடாவிலிருந்தவன் வீட்டிற்கு வரவில்லை.

யமுனா கல்கியிடம் மஞ்சள் புடவையைக் கொடுத்து அணிய சொல்ல, அறையில் தனியே இருந்தவள் சிரஞ்சீவிக்குப் போன் செய்து

“எங்க இருக்கீங்க நீங்க? எனக்கு டென்ஷனா இருக்கு. உங்களை பார்க்கணும் போல இருக்கு” என்று படபடவென பேச

“ரிலாக்ஸ் கல்கி, நான் இன்னும் ஹால்ஃப் அன் ஹவர்ல அங்க இருப்பேன். ஆன் தி வே, ஆனா அவ்வளவு சீக்கிரம் எல்லாம் சிரஞ்சீவியை நீ பார்த்திட முடியாது. மேரேஜ் அப்போ ஜீலக்கர்ரா பெல்லம் முடிஞ்சு அட்டுதெரா எடுக்கும்போதுதான் உன்னைப் பார்ப்பேன்” என்று வம்பிழுத்தான்.

“அது எப்போ நடக்கும்?” கல்கி கேட்க

“இன்னும் இரண்டு நாள் கழிச்சு, எப்படியும் இன்னும் மூணு நாள்தான் இந்த த்ரில் எல்லாம். ஸோ அம்மடூ இந்த எக்ஸைட்மெண்ட்டோடவே இரு. ஐ வாண்ட் டூ எஞ்சாய் எவிரிதிங், எப்படியும் லைஃப் முழுக்க இரண்டு பேரும் பார்த்துட்டு இருக்க போறோம். என்ன புரிஞ்சதா?” என்றான்.

“அதெல்லாம் தெரியுது, என்னவோ ஒரு டென்ஷன்” என்று மெல்ல சொல்லவும்

“என்ன டென்ஷன்? எல்லாரும் நம்ம ரிலேட்டீவ்ஸ்தானே, அம்மா பெத்தம்மா எல்லாம் இருக்காங்க, சித்திக்கு நம்ம மேரேஜ்ல அவ்வளவு இன்ட்ர்ஸ்ட் காது, பட் நெவர் மைண்ட். அவங்க பேசினாலும் உனக்குப் புரியாது. நீ பேசினாலும் அவங்களுக்குப் புரியாது. சீக்கிரமே இந்த அப்பாயிக்கு ஏத்த அம்மாயியா மாறி இரு. பார்க்கிறேன் எப்படி இருக்கா என் அம்மடூன்னு” என்று அவன் சாதாரணமாய்ப் பேசி அவளை சகஜமாக்கவும் ஒரு இனிய பரபரப்பு பாவைக்குள் பாய்ந்து ஓடினாலும் அவனிடம் பேசிய பின் ஒரு நிம்மதி, அமைதி அகத்தில் கிட்ட அத்தை சொன்னபடி தயாரானாள்.

சூர்யாவின் வீடு தோரணங்களாலும் பூக்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருக்க, கல்கி மஞ்சள் வண்ண புடவையில் அசைந்தாடும் வளைக்கரத்துடன் கடவுளின் முன் வந்து நின்றாள். யமுனாவுக்குமே எல்லாம் பார்த்திருந்தாலும் துணைக்கு சுபாஷினியைக் கேட்டே செய்தார். கூடவே சிரஞ்சீவியின் சித்தி சைலஜாவும் உதவினார்.

அங்கை அஞ்சனாவைக் கவனித்துக் கொண்டார். அவளுக்கு ஏழாம் மாதம் நடந்து கொண்டிருக்க, யுகனை மனோகர் பார்த்துக்கொண்டான். தையல் நாயகிக்குக் கணவரின் ஆசை நிறைவேறப்போகும் சந்தோஷம். ஹனுமந்தனும் சூர்யாவும் உதயமூர்த்தியை நன்றாக கவனித்துக்கொண்டனர். ஜெயராமனும் மகாலஷ்மியும் கூட வந்திருக்க ஜெகதீஷ் மட்டும் வரவில்லை.

பெல்லிக் கூத்தூருவின் போது கல்கிக்கு மருமகள் முறையில் உள்ள குழந்தையும் அவளுடன் இருக்க வேண்டும் என்பதால் சுபாஷினி தன் மகள் வயிற்றுப் பேத்தியான ஐந்து வயது அஷ்ரதாவை அழகாய் மஞ்சள் வண்ணத்தில் பட்டுப்பாவாடை அணிய வைத்து கல்கி போலவே அலங்காரமும் செய்து, அவளுடன் உட்கார வைத்தார். கல்கிக்குப் ‘பெல்லிப் பூ ஜடா’ என்றழைக்கப்பட்டும் செயற்கையான வண்ணப் பூக்களால் ஆன அணிகலன்கள் அணிவிக்கப்பட்டது.

பாசிப்பருப்பு பொடியுடன் மஞ்சள், சந்தனம் பன்னீர் கலந்து அவள் முகம், கை, கால் எல்லாம் பூசினர்.

பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வெவ்வேறு அளவிலான சொம்புகளில் தண்ணீர் நிரம்பி இருந்தது. பெரிய அளவிலான பாத்திரம் ஒன்றில் ரோஜாக்கள் தூவப்பட்டு அதிலும் தண்ணீர் வைத்திருந்தனர். ஒவ்வொருவராக வந்து அவளுக்கும் அஷ்ரதாவுக்கும் சொம்புகளில் நிரப்பி வைத்த நீரை ஊற்றி மங்கல ஸ்நானம் செய்தனர்.

அஷ்ரதாவுக்கு ஒரு முறை ஊற்றிவிட்டு குழந்தையைத் தூக்கிக் கொள்ள, கல்கிக்கு எல்லாரும் வந்து செய்தனர். மஞ்சள் பூசியிருக்க ரோஜா மணத்துடன் நீர் அவள் மேல் விழ, ஒரு புதுவித அனுபவம் அவளுக்குள். ஒவ்வொன்றையும் ரசித்தாள், அவள் அறியாமலே அஷ்ரதாவின் அம்மாவும் சிரஞ்சீவியின் பெரியப்பா மகளான ஹரிஜா இதனை எல்லாம் தன் தம்பிக்கு விடியோ காலில் காட்டிக்கொண்டிருக்க, கல்கியின் பாவனைகளைத்தான் அவன் பெரியப்பா வீட்டிலிருந்து ரசித்து பார்த்தான்.

எல்லாரும் முறைக்கு நீர் ஊற்றி செல்ல, வேகமாய் ஒரு சொம்புத் தண்ணீர் கல்கியின் மேல் விழ யாரென பார்த்தால், ஜெகதீஷ் நின்றிருந்தான் சிரிப்புடன்.

“மாம்ஸ்” என்று அவளின் முகம் மகிழ்வை அப்பட்டமாய்க் காட்டியது.

“மெசெஜ் கூட ரிப்ளை பண்ணலனதும் நீ வரமாட்ட நினைச்சேன்” என்று அவள் மெல்ல சொல்ல

“உனக்காக எல்லாம் வரல டி, இங்க ப்ரியாணி நல்லாயிருக்கும்னு என் ப்ரண்ட் சொன்னான், அப்படியே ஓசியில ஊரைச் சுத்திப் பார்க்க வந்தேன்” என்று அவளை வெறுப்பேற்றினான். அவள் சிரித்தபடி அவன் மேல் நீரைத் தெளித்தாள். அஞ்சனாவும் தங்கை மேல் நீரை ஊற்ற சந்தோஷ நிமிடங்கள் அவை.

அந்த சடங்கு முடியவும் கல்கி குளித்து விட்டு யமுனா தந்த புடவையுடன் தயாரானாள். ஜெகதீஷ் அஞ்சனாவின் அருகே உட்கார்ந்து கொண்டு

“எப்படி டி இருக்க? ட்ராவல் கஷ்டமா இருந்துச்சா?” என்று அவளிடம் விசாரிக்க

“பரவாயில்லடா, டாக்டர்ட்ட கேட்டுதான் வந்தோம். நீ வந்ததுல கல்கிக்கும் எனக்கும் ரொம்ப சந்தோஷம் தெரியுமா? வராம போயிடுவியோன்னு நான் பயந்துட்டே இருந்தேன்” என்று அவள் கவலையைப் பகிர்ந்தாள் அஞ்சனா.

“எனக்கும் முதல்ல ஒரு மாதிரி இருந்துச்சு அஞ்சு, அப்புறம் யோசிச்சேன் நாளைக்கு நான் எப்படியும் வேற லைஃப் பார்த்துட்டு போயிடுவேன். இப்போ நான் வராம போனா என்னைக்குமே இது ஒரு நினைப்பாவே இருக்கும், அவளுக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம். யோசிச்சிட்டே இருந்தேன், அதான் வர லேட்டாச்சு” என்றான் ஜெகதீஷ்.

“என்ர மாமன் மவன் நல்லவன் தெரியும், இம்புட்டு நல்லவன் தெரியாம போச்சே” அஞ்சனா வம்பிழுக்க

“அடியே! எத்தனை நாளைக்கு நானும் உள்ளூர் ஃபிகரா பார்க்கறது. அதான் இங்க யாராவது தேறுவாங்களா பார்க்க வந்தேன். உங்களுக்காகலாம் வரலடி நான்” என்று அவனும் சரிக்கு சரியாய்ப் பேசினான்.

சிரஞ்சீவிக்கும் ‘பெல்லிக் கொடுக்கு’ என்று கல்கிக்கு செய்ததைப் போலவே அவன் பெரியப்பா வீட்டில் சடங்கு நடைப்பெற்றது. சுபாஷினியும் யமுனாவும் அங்கையற்கண்ணியை அழைத்துக் கொண்டு அங்கே சென்றனர். ஹரிஜாவின் மகன் அக்ஷய்க்கும் மாமனுடன் சேர்ந்து நலங்கு வைக்கப்பட்டது.

அது முடிந்து அங்கே அவன் ‘கணேஷ பூஜை’ செய்ய, இங்கு யமுனா மருமகளைக் கொண்டு அவர் வீட்டில் ‘கௌரி பூஜை’ நடத்தினார். அன்று மாலை கல்கிக்கு ‘பாராணி’ என்ற சடங்கு நடந்தது. அவள் பாதங்களில் மருதாணி வைத்திருக்க, கூடவே சிவப்பு வண்ண பாராணியாலும் பரத கலைஞர் போல அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் எல்லாரும் மருதாணி வைத்துக்கொள்ள, பாட்டும் ஆட்டமும் அமர்க்களப்பட்டது.

✅ End of Episode 41
How did you feel about this episode?
❤️ 6 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 1 week ago

Very nice. ரசிப்போம். மீண்டும் ரசிப்போம்.

❤️ 1 more...
Kavi Natarajan Reader 1 week ago

👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 7 days ago

தொலைவில் இருந்த சொந்தம்

தொடர்ந்து வந்த பந்தம்
தெலுங்கு அப்பாயியை
தென்றல் வீசும் அம்முடு 
தெவிட்டா இன்சுவை.....
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top