Episode 4
சிரஞ்சீவிக்குக் கல்கிப் பேசியது முழுமையும் தெரியாது. ஆனால் அவன் அம்மாவை வந்து காணும்போது அவர் கண்ணீர் மட்டுமே கண்களில் அகப்பட்டது. அங்கு அம்மாவின் விழிகளில் வழிந்த கண்ணீர் மட்டுமே முக்கியமாகிவிட, அதற்குக் காரணம் எதிரே கண்களில் கனல் வைத்துப் பேசிக் கொண்டிருந்த கல்கி என்பது புரிந்தது.
அவன் அவளின் பேச்சில், அதன் தோரணையில் இன்னும் கோபம் கொள்ள, கல்கியோ ‘தெரிந்துதான் பேசினேன்’ என்றது இன்னும் அவனைத் தூண்டிவிட்டது.
இவ்வளவு திமிரா இந்த சின்ன பெண்ணுக்கு என்று நினைத்தவன்
“ரா ம்மா” என்று அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தவன் வேகமாய் நடுவீட்டுக்குள் நுழைந்து அங்கு உட்கார்ந்து டீவி பார்த்த அப்பாவிடம்
“நானா, கிளம்பலாம் வாங்க” என்றான்.
அவன் வந்து நின்று வேகமும் பேச்சும், அதில் தெரிந்த தெறித்த கோபமும் உதயமூர்த்தியை யோசிக்க வைக்க, தையல் நாயகி பதறிப்போனார். சூர்யாவோ மனைவியின் முகத்தையும் அதில் நிலவிய கலக்கத்தையும் பார்த்தார்.
“என்னாச்சு யமுனா?” என்று அவர் கேட்க
உதயமூர்த்தி சிரஞ்சீவியிடம் “என்ன தம்பி, ஏன் அவசரம்?” என்றார். இன்னும் அவனிடம் உரிமையாய்ப் பேச அவருக்கு வரவில்லை.
“என்ன ஆகனும்?” என்றான் அம்மாவின் கையை விட்டுவிட்டு அவரை நேராய்ப் பார்த்து.
“யமுனா, என்னடி? ஏன் பேரன் கோவப்படுறான்?”என்று தையல் நாயகியும் பதறிக் கேட்க, சற்குணப்பாண்டியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமையால் இது தெரியவில்லை.
இந்த பேச்சு சத்தமெல்லாம் கேட்டு அஞ்சனா, அங்கை, மனோகர் என்று எல்லாரும் கூடிவிட, கல்கியும் அவள் வேலையை முடித்து உள்ளே வந்தாள்.
“நாங்க ஒன்னும் உங்க கூட உறவு வச்சிக்கறதுக்காக வரல, தாத்தாவுக்கு முடியலன்னு சொன்னதாலதான் பார்க்க வந்தோம். அதுவும் நான் அம்மாவுக்காக மட்டும்தான் வந்தேன்”
“ஆனா என்னோட அம்மாவை உங்கப்பொண்ணு மரியாதை இல்லாம பேசி அழ வைக்கிறா” என்றதும் எல்லார் பார்வையும் பின்பக்கமிருந்து வந்து நின்ற கல்கியின் மீதுதான். நிச்சயம் அஞ்சனா யாரையும் அப்படி பேசமாட்டாள் என்று தெரியும், பேசினாலும் அஞ்சனா நாசுக்காய்க் கேட்பாளே தவிர மனம் புண்படும்படி பேசவே மாட்டாள்.
கல்கிதான் யாராய் இருந்தால் எனக்கென்ன என்ற மனப்பான்மை கொண்டவள். அதுவும் அத்தை மீது இருக்கும் கோபம் அவர்கள் அறிந்ததுதானே?
தன்னால் மீண்டும் பிரச்சனையா என்று யமுனா வருந்தியவர் மகனிடம் “ப்ரசாத், பேசாம இரு” என்று அதட்டினார்.
“ம்மா, சும்மா இருங்க” என்று அவருக்கு மேல் சத்தம் போட்டான் சிரஞ்சீவி. அவனைப் பொருத்தவரையில் அப்பா, அம்மாவுக்கு அடுத்துதான் யாராக இருந்தாலும்.
சின்ன வயதில் இருந்து பெரிதாய் உறவுகளுடன் வளராதவன், அப்பா வழி உறவுகள் இருந்தாலும் கூட அவர்களுடன் பெரிதாய்ப் பழகியதில்லை. சூர்யாவுக்கு அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர் என்பதால் எப்போதும் அப்பா, அம்மா மட்டும்தான் அவனின் உலகம். நெருக்கமான நண்பர்கள் கூட அவ்வளவாக இல்லை, விஷேஷங்களில் மட்டுமே பார்க்கும் உறவுகள் என்பதால் அங்கும் அனுசரித்து நடக்க அவன் அறியவில்லை.
இப்படி இவர்கள் மாறி மாறி சத்தம் போட உதயமூர்த்திக்குத் தன் பெண்ணால் தானே இத்தனை பிரச்சனை என்று புரிந்தது. அவள் பேசவில்லை என்றால் இந்த நேரம் அமைதியாக இருக்கமாட்டாள் என்று தெரியும், வீண் பழிகள் ஏற்காதவள்.
“தம்பி, அவ சின்னப்பொண்ணு. தெரியாம பேசிட்டா, விடுப்பா” என்றவர் தங்கையிடம் திரும்பி
“நீயாச்சும் சொல்லு யமுனா” என்றார்.
“யாரு உங்க பொண்ணு சின்னப்பொண்ணா? தெரியாம பேசல, தெரிஞ்சுதான் பேசுறேன்னு சொல்றா அங்கிள் உங்க பொண்ணு” என்றான் அவ்வளவு கோபத்தையும் உள்ளடக்கிய உஷ்ணக் குரலில்.
கல்கியோ ரகிட ரகிட என்று நின்றிருந்தாள்.
‘என்ன வேணா பேசிக்கோடா வெண்ண’ என்றுதான் அவளின் பார்வை இருந்தது.
அவ்வளவு அலட்சியம்! துளியும் பயமில்லா துணிச்சலான பார்வை!
சிரஞ்சீவி அவள் பக்கம் பார்க்கவில்லை, பார்த்திருந்தால் இன்னும் கொதித்திருப்பான்.
“உங்க தங்கச்சியை என்ன பேச வேணும்னாலும் உங்களுக்கு ரைட்ஸ் இருக்கு, பட் என்னோட அம்மாவை பேச யாருக்கும் எந்த ரைட்ஸும் இல்லை” என்று உதயமூர்த்தியைப் பார்த்து அழுத்தமாய்ச் சொன்னான்.
“ம்மா, வாங்கம்மா” என்று அம்மாவிடம் சொல்ல யமுனாவோ
“கொஞ்சம் அமைதியா இரு ப்ரசாத், ரொம்ப பேசுற நீ” என்றார் கண்டிப்புடன். சூர்யாவுக்கும் கல்கி மேல் கோபம் வந்தது, எப்படி என் மனைவியைப் பேசலாம் என்றொரு எண்ணம். அதனால் அவருமே
“அப்பாவைப் பார்த்தாச்சுல யமுனா, போகலாம். ஏன் வீணா பிரச்சனை?” என்றார்.
யமுனா முன்பு இருந்த மன நிலை வேறு. ஆனால் இத்தனை வருடம் எதுவும் தெரியாமல், தெரிந்துகொள்ள விரும்பாமல் இருந்துவிட்டார். அத்தனை நிறைவான வாழ்க்கை அவருக்கு. கல்கிப் பேசிய பேச்சுகள் எந்தளவு அவரை காயம் செய்ததோ அந்தளவு அவரை யோசிக்கவும் வைத்தது.
குற்றவுணர்ச்சியைக் குறைவில்லாமல் கொடுத்துவிட்டது கல்கியின் பேச்சு. அப்போதே தன் அப்பா அவ்வளவு கண்டிப்பானவர், தன்னுடையை செய்கைக்குப் பின் இன்னும் கண்டிப்பாக மாறியிருப்பார் என்பது இப்போது புரிய, இந்த சின்னப்பெண்ணின் மன வருத்தம் என்னால் என்ற உணர்வில் இருந்து மீளமுடியவில்லை.
நிச்சயம் உதயமூர்த்தி இல்லையென்றால் யமுனாவால் படித்திருக்கவே முடியாது. அப்படி தனக்காக எல்லாம் செய்த அண்ணனின் நம்பிக்கையைக் காப்பாற்றாமல் போனது எனது பிழைதானே? அப்பாவின் மீது பயம், அண்ணன்? அவர் என்ன செய்தார்? தன்னை நம்பியதற்கான தண்டனையை அவர் அனுபவிக்கிறார் என்று நினைக்கையில் அகம் சுட்டது. ‘சுய நலவாதி’ என்ற வார்த்தை சுடுசொல்லாய் எரிந்தது.
பாடம் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பான ஆசிரியைப் பணியில் இருந்து கொண்டு என்னால் என் அண்ணன் மக்கள் படிக்கவில்லையா என்ற எண்ணம் அழுகையைக் கொடுத்த போதிலும் அடக்கிக் கொண்டார், அழுதால் மகன் இன்னும் வெடிப்பான் என்று புரிந்தது. தள்ளி இருந்த போது அவர்களின் நிலையோ, வலியோ தெரியவில்லை. தெரிந்த பின் விட்டுச் செல்ல மனமில்லை.
சூர்யா மனைவியைப் பார்த்து நிற்க
“என் அண்ணன் பொண்ணு என்கிட்ட பேசுறா, இவன் எதுக்குக் குறுக்க வரான் சூர்யா?” என்று மகனைத் திட்டினார்.
“ம்மா” என்று சிரஞ்சீவி அதிர்ந்து பார்க்க
சூர்யாவோ “இல்லை யமுனா” என்று இழுத்தார்.
“உங்களுக்கு இருக்க பிடிக்கலன்னா நீங்க போங்க, நான் கொஞ்ச நாள் இருந்துட்டுதான் வருவேன்” என்றார் உறுதியாக.
கல்கியோ அவளை வைத்து அங்கு இத்தனை பெரிய பூகம்பம் நடக்குறது என்ற கவலையற்று இருந்தாள். உதயமூர்த்தியோ மகளை முறைத்துப் பார்க்க தையல் நாயகி பொங்கிவிட்டார்.
அவருக்கு எப்போதுமே கல்கியின் மீது ஒரு கோபமுண்டு, இரண்டாவது குழந்தை பேரனாகப் பிறக்க வேண்டும் என்று சற்குணப்பாண்டியனுக்கும் தையல் நாயகிக்கும் மிகுந்த ஆசை. ஆண் என்றால்தான் வாரிசு என்ற எண்ணம். அதனால் அவருக்கும் கல்கிக்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும், இதில் இத்தனை ஆண்டு கழித்து வந்த என் பெண்ணை அழ வைத்து, வளர்ந்து நிற்கும் என் பேரனைப் பேசுவாளா என்று கோபம் வர
“ஏய் கல்கி! என்ன வாய் கூடிப்போச்சா உனக்கு? அத்தைன்னு மரியாதை வேண்டாமா டி?” என்று திட்டினார். உதயமூர்த்தியும் அங்கையும் தையல் நாயகியைக் கவலையாகப் பார்த்தனர்.
கல்கி எனும் கன்னிவெடி பற்றி அறிந்தவர்களாயிற்றே, தையல் நாயகி இப்படியே பேசினார் என்றால், அவர் மகளை இத்தனை ஆண்டுகள் பேசியதை எல்லாரும் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காது மகள் போட்டு உடைப்பாள் என்று தெரியும்.
ஆனால் அவர் பேசும் முன்னே முன்னால் வந்து நின்ற கல்கி
“அத்தையா? இத்தனை வருஷம் உன்னைப் பார்க்காம இருந்த பொண்ணு மேல எப்படி அப்பத்தா பொசுக்குனு பாசம் வந்துச்சு உனக்கு? பாவி மக குடும்ப மானத்தையே வாங்கிட்டான்னு அந்தவார பேச்சு பேசுனியே, வயசானதுல மறந்துட்டியா? நான் வேணும்னா ஞாபகப்படுத்தவா?” என்று அவள் நின்ற தோரணையே
இவள் இன்னும் பேசுவாள் என்று புரியவைக்க, தையல் நாயகி விட்டால்தானே?
“என் பொண்ணை நான் என்ன வேணும்னாலும் பேசுவேன் டி, நீ யாரு டி என்னைக் கேள்வி கேட்க?” என்று அவளைப் பேசினார்.
சிரஞ்சீவியின் எண்ணங்கள் வேறு திசையில் பயணித்தன.
காதல் என்ன பெருங்குற்றமா? அவரவர் வாழ்க்கையை வாழ அவர்களுக்கு உரிமையில்லையா? அதற்கு இத்தனைப் பேச்சா? என்று பார்த்தான். எல்லாமே புதிதாய் இருந்தது அவனுக்கு, இந்த கிராமம் புதிது! இந்த உறவுகள் புதிது! இந்த பேச்சுகள் புதிது!
சிரஞ்சீவியின் பார்வை எப்போழுதும் எல்லா பக்கமும் நின்று யோசிக்கும், அவன் வேலையில் அத்தனை நியாயஸ்தனாக இருப்பான். ஆனால் இன்றோ அம்மாவின் மகனாக மட்டுமே யோசித்தான். அம்மாவின் வாழ்க்கையை அவர் வாழ்ந்தார், இவர்கள் வாழ்க்கை இவர்களுடையது என்று அவன் எளிதாய் நினைத்து விட்டான்.
ஒரு பெண்ணின் தவறானது அடுத்துவரும் தலைமுறைப் பெண்கள் எத்தனை பாதிக்கும்? அதுவும் ஒரு கிராமத்தில் அந்த குடும்பம் எவ்வளவு பழிசொல்லுக்கு ஆளாகும் என்று அறியவில்லை அவன், அறியும் எண்ணமும் இல்லை.
அம்மாவும் அவரின் கண்ணீரும் மட்டுமே அங்கே முக்கியமாகிவிட, அதற்குக் காரணமான கல்கியின் மீது அவனுக்கு கோபம் மட்டுமே மட்டுப்படாமல் மிகுந்தது.
தையல் நாயகியைப் பேசவிட்டு வேடிக்கைப் பார்ப்பவளா கல்கி?
“ஓஹ், அப்போ என்னோட அத்தையை நான் என்னனாலும் பேசுவேன். எனக்கும் என் அத்தைக்கும் ஆயிரம் இருக்கும், அதுல நீயும் தலையீடாத” என்று சொல்ல, சிரஞ்சீவியும் சூர்யாவும் அசந்து போய் பார்த்தனர்.
எப்படி எல்லாம் இந்த பெண் பேசுகிறது என்று.
அங்கையற்கண்ணியோ ஜூனியருக்கும் சீனியருக்கும் நடக்கும் அந்த கூத்தை வேடிக்கைப் பார்த்தார். உதயமூர்த்தி இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் அம்மாவும் தன் மகளும் பேசியே எல்லாரையும் ஓட விடுவார்கள் என்று தெரியும். அதனால் மகளைப் பார்த்தவர்
“கல்கி, அப்பா சொல்றேன் உள்ளே போ” என்று அதட்டலாக சொன்னார். கல்கியும் அப்பாவின் பேச்சைக் கேட்டு நகர, சிரஞ்சீவி விடவில்லை.
“உங்க பொண்ணை என் அம்மா கிட்ட ஸாரி கேட்க சொல்லுங்க அங்கிள்” என்றான்.
யமுனா மகனின் பேச்சை எதிர்ப்பார்க்கவில்லை “ப்ரசாத், சும்மா இரு” என்று அடக்கினார்.
கல்கியோ அதுவரை அப்பாவிற்காக என்று பொறுமைக் காத்தவள் சிரஞ்சீவியின் முன்னே நேருக்கு நேராய் நின்றபடி “உங்கம்மா கிட்ட நான் பேசினதுல எந்த தப்பும் இல்லை, ஸோ என்னால ஸாரி கேட்க முடியாது” என்றாள் உறுதியாக.
கல்கியின் கண்களில் கொஞ்சமும் பயமில்லை, கூடவே ஒரு சவாலான பார்வை, அதனுடன் கூடிய நக்கல். இப்படி எல்லாம் கலந்த நயனங்களைத்தான் நாயகன் பார்த்திருந்தான்.
இருவரும் எதிரிகளாய் முட்டிக் கொண்டு நிற்பதைக் கண்ட யமுனா மகன் பேசும் முன்
“ப்ரசாத் அம்மா சொன்ன கேட்பதானே? அதெல்லாம் நாங்க எங்களுக்குள்ள பேசிப்போம்” என்று சொல்லியும் அவன் அசையவில்லை.
தங்கைப் பேசுவது பார்த்த உதயமூர்த்தி
“கல்கி நீ போம்மா” என்றதும் கல்கி போய்விட்டாள். போகும் கல்கியைத்தான் முறைத்து நின்றான் சிரஞ்சீவி. யமுனா கணவனைப் பார்க்க,
“சிரூ பங்காரம், அம்மா சொல்றா இல்ல. வா நீ” என்று சூர்யாவும் மகனை இழுத்துக் கொண்டு அறைக்குள் போனார்.
இதையெல்லாம் மனோகர் அமைதியாய்ப் பார்த்திருந்தவன் மனைவியிடம்
“அஞ்சும்மா, இவ்வளவு சண்டையெல்லாம் நான் பார்த்ததே இல்லைடா, எப்பா எல்லாரும் எவ்வளவு பேசுறாங்க” என்றான் ஆச்சரியமாக.
மனோ அப்படிதான், மிகவும் அமைதி விரும்பி. அன்பானவன், அதனாலயே அஞ்சனாவிற்குத் தான் நினைத்ததைப் படிக்கமுடியவில்லையே என்ற வருத்தமெல்லாம் அவனுடனான வாழ்வில் மறைந்தும் கரைந்தும் போயிருந்தது. மனோவுக்கு அம்மா இல்லை, அப்பாவும் தங்கையும் மட்டுமே.
அதனால் அவர்கள் வீட்டில் எல்லாம் அஞ்சனாதான் பார்க்கவேண்டும், அவள் பேச்சை அங்கு யாரும் மீறமாட்டார்கள், அவளின் நாத்தனார் நதியாவும் அண்ணியிடம் மிகுந்த ஒட்டுதலுடன் இருப்பாள். சற்குணப்பாண்டியனின் கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு வாழ்வு என்பதால் அஞ்சனாவிற்கு அலாதி அமைதியும் அன்பும் மட்டும்.
கல்கிக்கு அப்படியில்லையே, இன்னும் அந்த கம்பியில்லா சிறைக்குள் இருப்பதால் அவளால் அத்தையை மன்னிக்க முடியவில்லை. என்னை அடிக்கவா கை ஓங்குகிறான் என்று சிரஞ்சீவியை விட அதிக கோபத்தில் இருந்தாள் அவள். பின்னால் இருக்கும் தண்ணீர் தொட்டி ஓரம் இருந்த வரப்பில் உட்கார்ந்தவள் தன் போனைப் பார்க்க ஜெகதீஷ் அழைத்திருந்தான்.
ஜெகதீஷுடன் பேசினால் மனம் நன்றாய் இருக்குமென நினைத்தவள் அவனுக்கு அழைத்து
“என்ன டா மாமா பையா நடந்தே ஊருக்கு வர போல, இன்னும் வந்து சேரலையா நீ?” என்று எடுத்தவுடன் கேட்டாள்.
“அதை ஏன் டி கேட்கிற, லாஸ்ட் மினிட்ல பராஜ்க்ட்ல சொதப்பல், அதை இப்போதான் முடிச்சோம், இன்னிக்கு நைட் கிளம்பிடுவேன் கல்கி. தாத்தா நல்லாதானே டி இருக்கார்?” என்றவனின் கேள்விக்கு
“அதெல்லாம் பொண்ண பார்த்த ஜோர்ல நல்லாவே இருக்கார், நான் தான் நல்லா இல்லை” என்றதும்
“என்னடி ஏன்?” என்று அவன் கவலையாய்க் கேட்க நடந்த அத்தனையும் அவனிடம் சொன்னாள்.
“அவன் கூட கல்யாணம் பேசுனாங்களா?” அதிர்வாய் வந்தது அவனின் பேச்சு.
“என்ன பேசுனாங்களா? இந்த தாத்தா தான் என் பொண்ணோட உறவு இருக்கனும்னு என்னை ஏலம் விட பார்த்தார், அதுக்குள்ள அந்த ஆந்திரா அரை மெண்டல் என்னமோ நான் அவனைக் கல்யாணம் செய்ய காத்திட்டு இருக்க மாதிரி சீன் போடுறான்” என்றாள் எரிச்சல் மிகுதியில்.
“நீ என்ன சொன்ன?”
“அவன் பெரிய இவனாட்டம் உங்க பேத்தியைக் கல்யாணம் பண்ண முடியாது சொல்லிட்டான், நானும் உங்க பேரனைக் கட்டிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். அவனுக்குத் தான் வாய் இருக்கா? எங்களுக்கு இல்லை” என்றாள் கல்கி.
“அதானே கல்கியா கொக்கா?”
“கொக்கும் இல்ல குருவியும் இல்லை, கல்கி கழுகு மாதிரி. உயர உயரப் பறப்பேன் நான்” என்றாள் நம்பிக்கையாக.
“மாம்ஸ், அப்ளிகேஷன் ஒபன் பண்ணிட்டாங்களா? நானும் பார்த்திட்டே இருக்கேன், இங்க எல்லாரும் இருக்கறதால வேலை நிறையா இருக்கு. நீ உடனே எனக்கு அப்ளை பண்ணிடு என்ன?” என்றதும்
“அதெல்லாம் அப்ளை செய்ய நிறைய டைம் இருக்கும் கல்கி, நீ வீட்ல ஒத்துக்க வை. நானும் அப்பாவும் கூட வந்து பேசுறோம்” என்றான் அவள் மீது அக்கறைக் கொண்டவனாக.
“இந்த தடவ எப்படியும் ஒத்துக்க வச்சிடுவேன் மாம்ஸ், அந்த மாரத்தான் ரேசை மட்டும் மன்னிச்சு ஏத்துப்பாங்களாம், என்னை இஷ்டப்படி படிக்க வைக்க மாட்டாங்களா?” என்றாள் பொறுமலுடன்.
“அதுவும் சரிதான் கல்கி, நான் பார்த்துக்கிறேன், இப்போ கொஞ்சம் மெயில்ஸ் அனுப்பனும், அப்புறம் கூப்பிடுறேன்” என்று ஜெகதீஷ் வைத்துவிட்டான்.
அறைக்குள் இருந்த சிரஞ்சீவிக்குத் தீராத கோபம். உள்ளே வந்தவன் உடனே சென்னைக்குப் புறப்பட தயாரானான். யமுனாவும் மகன் பின்னே வந்தவர்
“உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது ப்ரசாத்? இது ஒன்னும் உன்னோட ஆபிஸ் இல்லை” என்றதும்
“எந்த இடமா இருந்தாலும் நீங்கதானே என் அம்மா, உங்களைப் பேசினா நான் சும்மா இருப்பேனா?” என்றான் சீறலாக.
“என்னாச்சு யமுனா?” சூர்யா கேட்க எல்லாம் சொன்ன யமுனா
“அவளை அடிக்க கை ஓங்குறான் இவன், இப்படிதான் வளர்த்தோமா இவனை? என்னோட உறவுகள்னு கொஞ்சமும் இவனுக்கு எண்ணமில்லைங்க” என்று திட்டினார்.
சின்னப்பெண்ணை அடிக்க கை ஓங்கினான் என்று தெரியவும் “சிரூ, தட்ஸ் பேட்” என்றார் சூர்யாவும் கண்டிப்பாக.
“லெட் இட் பீ நானா, இதையெல்லாம் என்னால டாலரேட் செய்ய முடியாது, நீங்க அம்மாவைப் பார்த்துக்கோங்க, நான் சென்னைக்குக் கிளம்புறேன்” என்றவன் வெளியே வந்து தையல் நாயகியிடம்
“நான் சென்னைக்குக் கிளம்புறேன் அம்மம்மா” என்றான். எல்லாரும் என்ன இது என்று பார்க்க
“உங்க தாத்தாவுக்கு இப்படி இருக்கேப்பா, இப்போதானே அவர் உன்னைப் பார்த்து சந்தோஷப்பட்டார். அவ சின்னப்பொண்ணுயா வாயாடி தெரியாம பேசிட்டா, போகாதப்பா” என்று தையல் நாயகி கெஞ்சினார்.
யமுனா மகனைப் பற்றி தெரிந்து
“அம்மா, அவனுக்கு முக்கியமான கேஸ் இருக்கு. முடிஞ்சதும் வருவான்” என்றதும் சற்குணப்பாண்டியனை எழுப்பி அவரிடமும் சொல்லிவிட்டுப் போக சொல்ல, அப்படியே செய்தான். நாயகியும் பேரனுக்கு விபூதி பூசி வழியனுப்ப,
“நான் கிளம்புறேன் அங்கிள்” என்று உதயமூர்த்தியிடம் சொன்னான்.
“மாமா சொல்லு ப்ரசாத்” யமுனா கண்டிப்புடன் சொல்ல
“கிளம்புறேன் மாமா” என்றான் அம்மாவைப் பார்த்தபடி. எல்லாரும் அவனை வழியனுப்ப வாசலில் வந்து நிற்க, கல்கி மட்டும் வரவே இல்லை. யாரும் அவளை அழைக்கவுமில்லை.
கார் ஏறப்போகும் முன் அம்மாவின் கையைப் பிடித்தவன்
“அந்த பொண்ணு உங்களைப் பேசினா எங்கிட்ட சொல்லுங்கம்மா, நானா அம்மாவைத் தனியா விடக்கூடாது நீங்க” என்று சொல்லித்தான் புறப்பட்டான்.
இனி இந்த பக்கம் வரக்கூடாது என்று நினைத்து போனவன், இரண்டே நாட்களில் திரும்பி வரும்படி ஆகிற்று, சற்குணப்பாண்டியனின் இறப்பினால்.
✅ End of Episode 4
Nice
அடேய் சிங்காரம் நீயெல்லாம் பெத்த போலீஸா.....சண்டைனா இரண்டு பக்கமும் கேட்டுட்டு தீர்வு சொல்லனும்....போடா போ....
Kalki ku demand seikram vanthu seat confirm pannavum 😂
Super Ma is
பிடிவாதத்திற்கு