Episode 26

மாலை நேரம் இத்தனை மஞ்சிமத்துடன் இருந்தது போல் வரப்ரசாத்தின் நினைவில் இல்லை. இன்னும் சற்று நேரத்தில் கல்கி வந்துவிடப் போகிறாள் என்பதே சுவாசத்தை சீராக்கியது.

தான் ஒரு பெண்ணை இத்தனை நேசிக்கிறோம் என்பதை அவனுக்கு ஆச்சர்யம்! அதனை விடவும் ஆச்சர்யம் கல்கி!!

சின்ன வயதில் அவளுக்கு இருக்கும் தெளிவும் துணிவும் அவன் மதிக்கும் பக்கங்கள் என்றால், அவளின் திமிரும் கோபமும் அவன் ரசிக்கும் பக்கங்கள்.!

அதனையும் விட கொண்ட செயலில் அவளுக்கு இருக்கும் உறுதியும் அதற்கான உழைப்பும் இன்னும் இன்னும் ஈர்க்கவே செய்தது. தனக்கு ஒரு அத்துமீறல் நடந்து போதும் கூட தன்னைப் போல் எல்லாருக்கும் நீதி கிடைக்குமா என்று வருந்திய அவளின் சுய நலமற்ற மனதின் மேல் ப்ரியங்கள் பெருகத்தான் செய்தது.

சிரஞ்சீவியின் கல்லூரி நண்பர்கள் கூட கிண்டல் செய்வார்கள். ‘என்னடா உன் அம்மா அப்பா லவ் மேரேஜ்னு சொல்ற நீ ஒரு பொண்ணைத் திரும்பி பார்க்க மாட்டேங்கிற?’ என்று கேட்பார்கள். அவனுக்குமே யோசனை போகும், எனக்கு ஏன் யாரையும் பிடிக்கவில்லை என. அதனை தன் தந்தையிடம் கேட்கவும் செய்திருக்கிறான்.

அவரோ, “நாங்க லவ் பண்ணினா உனக்கும் லவ் வரனும் இல்லை சிரூ. மே பீ இன்னும் நீ அப்படியொரு பொண்ணைப் பார்க்காம இருக்கலாம், இல்லை உன்னோட மனைவியா வர பொண்ணை கூட நீ ரொம்ப விரும்பலாம்” என்றார்.

அதற்காக பெண்களிடம் பேசாதவன் இல்லை, அவன் ஆண்கள் பெரும்பான்மையாகப் படிக்கும் கல்லூரியில் பயின்றாலும் சில பிரிவுகளில் பெண்கள் உண்டு. தேவையென்றால் பேசுவான், அவர்கள் உதவி கேட்டால் செய்வான். கல்லூரி படிப்பு முடியவுமே அவன் டெல்லியில் யுபிஎஸ்சி படிக்க பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றுவிட படிப்பும் தேர்வும் மட்டுமே குறிக்கோளாய் இருந்தது. அவன் விரும்பியபடி லட்சியத்தை தொட்டுவிட, வேலைக் கிடைத்தவுடன் அதில் மூழ்கிப்போனான்.

கல்கிக்கு இன்னும் அரைமணி நேரத்திற்குள் வந்துவிடுவாள். அதற்கு முன்னும் கூட வரலாம் என்பதாலேயே முன்னால் வந்து காத்திருக்கிறான்.

இன்னிசை அழகென்றால், அதற்கு முன் வரும் முன்னிசையும்(prelude) அழகுதானே? என்ன பாடல் வரப்போகிறது என்ற பரபரப்பும் பிடித்த பாடலைக் கேட்கப் போகும் ஒரு ஆர்வமும் எழும்புமே? அப்படியான நிமிடங்களாய் இருந்தன சிரஞ்சீவிக்கு. அந்த இன்னிசை அவனிசை ஆகும் தருணத்திற்காகத் தவமிருந்தான்.

கல்கி வரப்போகிறாள் என்று தெரியும், இருந்தும் இந்த கணம் வருவாளா? என்று ஒவ்வொரு கணமும் காத்திருப்பது கூட ஒரு இனிய உணர்வாய் இதுவரை அறியாத உணர்வாய் இருந்தது. கல்கி தனியே வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டாள். அவளுக்கும் அதுதானே பிடிக்கும். இருந்தும் கல்கியிடம்

“நான் அந்த டைம் ஃப்ரீதான் கல்கி, நோ ப்ராப்ளம். நான் பிக் அப் பண்ணிக்கிறேன்” என்று சொல்லிவிட, கல்கியும் மறுக்கவில்லை. கல்கி வந்து காரில் ஏற அவளைக் கண்ணில் நிறைத்த கணம் அவன் உணர்ந்த உணர்வினை சொல்ல செந்தமிழிலும் வார்த்தையில்லை..!

இத்தனை நாள் தனக்கானவள் எப்படி இருப்பாள் என்ற தேடல் மனதில் உண்டுதான் அவனுக்கும். இன்று தேடல் காதலாகி நின்றது.!

இனி காத்திருப்பது மட்டுமே வேண்டும். எப்போதும் அம்மா அப்பாவின் காதல் வாழ்க்கையைப் பார்த்து வளர்ந்தவனுக்குத் தானும் அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. அதனை விடவும் உறவுகளை விட்டு இவர்தான் வேண்டுமென அவன் அம்மா வந்தது அவனுக்கு எப்போதும் ஒரு ஆச்சர்யமே!

எத்தனை காதல்!! காதல் என்பதை விடவும் எத்தனை நம்பிக்கை இருந்திருந்தால் அப்பாவை நம்பி, அதுவும் மொழி கடந்து, பிறந்த இடம் கடந்து, ஊர் உறவு எல்லாம் விட்டு வந்திருப்பார் என்று நினைத்து பார்த்திருக்கிறான் பலமுறை. அந்த நம்பிக்கையை உடையாமல் காப்பாற்றும் அவன் அப்பாவின் மீது அதனால் இன்னும் மரியாதை அவனுக்கு.

அது போல் ஒரு ஆழமான நம்பிக்கையைக் கல்கிக்குத் தான் கொடுக்க வேண்டும் என்பதே அவனது காதலின் ஆவலாய் இருந்தது. அவளை கண்களில் நிறைத்துக் கொண்டிருக்க, அவன் எப்போதும் அளவாகவே பேசுவான் என்பதால் கல்கியே பேசினாள்.

“நான் கார் ட்ரைவ் பண்ணட்டுமா?” என்று சிரஞ்சீவியிடம் கேட்க, ரசித்துப் பார்த்தவனின் பார்வையில் இப்போது கண்டனம்.

“லைசென்ஸ் இல்லாம உன்னைக் கார் ட்ரைவ் பண்ண நான் அலோவ் பண்ணுவேனா?” என்றான் கண்டிப்புடன்.

“ஓரளவு கத்துட்டேன். ஆசையா இருக்கு” என்று சொல்ல அசைந்துகொடுக்கவில்லை.

“எங்கேயும் மோதமாட்டேன், நீங்கதான் கூட இருக்கீங்களே?” என்று கல்கி வண்டி ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் கேட்டாள். அகம் அவள் ஆசையை ஏற்றாலும் அவன் அறிவு தடுத்தது.

“நோ மீன்ஸ் நோ! லைசென்ஸ் வாங்கிட்டு சொல்லு, நான் அலோவ் பண்றேன்” என்றான் கொஞ்சம் கோபம் எட்டிப்பார்த்த குரலில். அவனுக்குப் பிடிக்காத செயலை அவள் கேட்டு, அதனை மறுக்கும் கோபமது!

“நீங்க ரொம்ப ஸ்ட்ரீக்ட்” என்றாள் முகம் சுருங்க சொன்னவளிடம்

“நான் ஸ்ட்ரீக்டா இல்லை சரியா இருக்கேன் கல்கி” என்றான்.

“எங்க ஊர்ல பத்து வயசு பையன் எல்லாம் பல்ஸர் ஓட்டுறான். நீங்க என்னை நம்ப மாட்டேங்கிறீங்க. எனக்கும் கார் ட்ரைவ் பண்ண வரும்” என்றவளைக் கோபத்துடன் பார்த்த சிரஞ்சீவி

“உனக்கு வண்டி ஓட்டத் தெரியும் தெரியாது இல்லை விஷயம். லைசென்ஸ் இல்லாம ஓட்டுறது சட்டப்படி தப்பு. ஊர்ல செஞ்சாலும் அது தப்புதான். மீதி இருக்க க்ளாஸ் போய்ட்டு லைசென்ஸ் அப்ளை பண்ணு கல்கி, காட் இட்?” என்றான் அதட்டலாக.

“மறுபடி க்ளாஸ் போகனுமா?” கல்கி சலிப்பாய்க் கேட்க

“பரத் கிட்ட சொல்லி வேற டிரைவிங் ஸ்கூல்ல கேட்டு வச்சிருக்கேன், நாளைக்கு ஜாயின் பண்றியா?” என்று வண்டி ஓட்டிக்கொண்டே கேட்டான் வரப்ரசாத்.

“இல்லை, நீங்களே எனக்கு சொல்லித்தரீங்களா?” என்று கல்கி தயங்கி அவனிடம் கேட்க இன்னும் அவள் அந்த அத்துமீறலை நினைக்கிறாளோ என்று அவள் முகம் பார்த்தவன்

“கல்கி? ஆர் யூ ஓகே?” என்று கேட்டான். வேறு எப்படி கேட்பதென தெரியவில்லை.

“நான் அதை நினைச்சு சொல்லல, எனக்கு ஒரு நாலஞ்சு க்ளாஸ்தான் மீதி இருந்துச்சு. அதுக்கு ஏன் புதுசா ஒரு இடத்துல ஜாயின் செய்யணும். நீங்களே சொல்லிக்கொடுத்துட்டா ஈசிதானே? அதுக்குத்தான் நான் எப்படி ஓட்டுறேன் பார்க்க உங்ககிட்ட கார் கேட்டேன் நீங்க தரல” என்றாள் சோகமாய்.

“ரைட்! பட் இந்த டைம் வேண்டாம். காலையில ட்ராஃபிக் இல்லாத இடமா பார்ப்போம். ப்ரீ டைம்ல சொல்லித்தரேன்” என்றவன் சாலையில் கவனமானான்.

அதற்கு மேல் பேசாமல் அவன் வண்டியை ஓட்ட கல்கி அமைதியாய் இருந்தவள் பயணக்களைப்பில் அசந்துவிட்டாள். வீடு வரவும் கல்கியை எழுப்ப கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து அவன் பின்னால் போனாள்.

“தூக்கம் வந்தா தூங்கு கல்கி, வசந்திக்கா சமைச்சு வச்சிட்டாங்க. பசிக்கும்போது எடுத்து சாப்பிடு” என்றவன் ஹாலில் உட்கார்ந்தபடி அவனின் லேப்டாப்பில் ஏதோ படித்துக் கொண்டிருந்தான். கல்கியும் காலை முதல் உட்கார்ந்து பயணப்பட்டதால் உறங்கப்போய்விட்டாள்.

கல்கி வந்தபின் ஒவ்வொரு நொடியும் அவளைத் தோள் சாய்த்து கைகோர்த்து கதைப்பேச வேண்டும் என காதல் மனம் நினைத்தாலும் அதெல்லாம் அவனுக்கு வரவில்லை. கல்கிக்குப் படிப்பதற்கு இருந்தால் இவனிடம் பேசக் கூட மாட்டாள், படிப்பு முடித்தால் மட்டுமே அவள் எந்தவேலையாய் இருந்தாலும் செய்வாள்.

அப்படிப்பட்ட பெண்ணிடம் என்னவென்று பேசுவான்? அதனால் எப்போதும் போல் அமைதியாய் அவன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றரை மணி நேரம் கடந்துவிட

“பரத், நேஷனல் க்ரைம் ரெகார்ட்ஸ் ப்யூரோல சில டீடெய்ல்ஸ் கேட்டிருந்தேன், அதை உங்களுக்கு ஷேர் பண்ணிருக்கேன். கீப் இட் சீக்ரெட். அதுல இருக்க ஆளுங்களை வாட்ச் பண்ணி ரீபோர்ட் மீ” என்று வழக்கு விஷயமாகப் போனில் பரத்திடம் பேசியவன் கல்கி வரவும் ‘என்ன?’ என்று பார்வையால் கேட்க அவளோ இன்னொரு சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு

‘நீங்க பேசுங்க’ என்றாள் சைகையில். அவனின் அலுவல் விஷயத்தை அப்படியெல்லாம் சாதாரணமாய்க் கையாள்பவன் இல்லையே சிரஞ்சீவி. அதனால் பரத்வாஜிடம்

“ஃபைவ் மினிட்ஸ்ல கூப்பிடுறேன் பரத்” என்று சொல்லி வைத்துவிட்டான்.

“ரொம்ப பெரிய சீக்ரெட்டோ? நான் வந்ததும் நிறுத்திட்டீங்க” கல்கி அவன் செய்கை கண்டு கேட்க

“அடுத்தவங்களுக்குத் தெரிய கூடாத அத்தனையும் சீக்ரெட்தான். மேடம் வேற ஜர்னலிஸ்ட், நான் தானே ஜாக்கிரதையாய் இருக்கனும்” என்று வரப்ரசாத் சிரிப்புடன் சொல்ல,

கல்கியோ “இப்படி அடிக்கடி சொல்லுங்க எஸ்பி ஸார், கேட்க எவ்வளவு நல்ல இருக்கு” என்றவள் பின் குரலைத் தாழ்த்தி

“அப்போ ஏதோ சீக்ரெட் ஆபரேஷன் போல, பேசாம அமைதியாய்க் கேட்டு என்னோட அறிவை வளர்த்திருக்கனும். மிஸ் பண்ணிட்டேனோ?” என்று யோசனையும் கிண்டலுமாகப் பேசினாள்.

“அம்மா வந்தா கூட நான் எதுவும் பேசமாட்டேன். தட்ஸ் மை வொர்க் எதிக்ஸ். இரண்டு வார்த்தை வச்சு எல்லாம் உன்னால கெஸ் பண்ண முடியாது கல்கி. பட் இப்போ சொல்லிட்ட இல்ல, இனிமே உங்கிட்ட கேர்ஃபுல்லா இருந்துப்பேன்” என்றவன் எழுந்து அறைக்குள் போனான்.

அவன் போவதையே சிரிப்புடன் பார்த்தவள் எழுந்து அறைக்குள் சென்று மறு நாள் கல்லூரி போவதற்குத் தேவையானவை எல்லாவற்றையும் எடுத்துவைத்தாள். அவள் வேலையில் பிஸியாக இருக்க, ஒன்பது மணி ஆகவும் சிரஞ்சீவி ஹாலில் நின்று கொண்டு

“கல்கி! சாப்பிட வா” என்று அழைத்தான். அந்த நேரம் அவன் அகம் விரும்பும் தருணம். இத்தனை நாள் அவளில்லாமல் கழித்திருக்க, இன்று அவளும் உண்ண வர

“ஹாலிடேஸ் எப்படி போச்சு கல்கி?” என்று அவன் ஆரம்பித்தான். அவ்வளவுதான்! அத்தனை நாள் பேசாத கதையெல்லாம் சேர்த்து கல்கி பேசிவிட இவன் எல்லாவற்றையும் கேட்டு ரசித்தானே தவிர பதில் பேசவில்லை. எப்போதும் அவன் அப்படித்தான் என விட்டவள் ஒரு நாள் இதற்கு சண்டைப் பிடிக்கப் போகிறாள் என தெரியாது இருந்தான் சிரஞ்சீவி வரப்ரசாத்.

கல்கி அந்த செமெஸ்டரில் முதல் மாணவியாகத் தேறியிருக்க, அவளுக்கு அவ்வளவு சந்தோஷம். சூர்யா பாராட்டி தள்ளிவிட்டார். உதயமூர்த்தி கூட

“அவ்வளவு அடம்பிடிச்சுப் படிக்க போனதுக்கு ஃபர்ஸ்ட் வந்திருக்க கல்கி. இப்படியே நல்லா படி” என்று சொல்ல கல்கிக்கு அப்பா பாராட்டிவிட அவ்வளவு சந்தோஷம். உதயமூர்த்தி அப்படித்தான், பெண்கள் படிக்க கூடாது என்றெல்லாம் எண்ணமில்லை. அது போல் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுத்தால் பாராட்டி பெருமைப்பட்டுக்கொள்வார்.

ஒரு மாதம் கடந்திருக்க, சிரஞ்சீவி வீட்டிற்கு வரும்போது கல்கி என்னவோ எழுதிக்கொண்டு இருந்தாள். டீவியில் சத்தம் குறைவாய் ஏதோ பாடல் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே வந்து தனது உடையை மாற்றியவன்

“கல்கி!” என்று அழைத்து அவளிடம் அவனது கார் சாவியை நீட்டினான்.

“எழுதிட்டு இருக்க என்னைக் கூப்பிட்டு கார் சாவி வைக்க சொல்லுவீங்களா?” என்று அவள் முறைக்க, அவனோ பேசாமல் அவளையே பார்த்தான். இவன் இப்படியெல்லாம் நம்மை வேலை செய்ய விடமாட்டானே என்று நினைத்து அவனைப் பார்க்க

அவன் பார்வையோ வேறு செய்தி சொல்ல “லைசென்ஸ் வந்திடுச்சா?” என்றாள் ஆசையுடன்.

“எஸ்!” என்று தன் கையில் இருந்த லைசென்ஸை அவளிடம் நீட்டியவன்

“இது வேணுமா? வேண்டாமா?” என்று கார் சாவியை அவள் முன் ஆட்ட

“தேங்க்ஸ் தேங்க்ஸ்!!” என்றவளின் குரலில் அத்தனை துள்ளல். மங்கை முகத்தின் மஞ்சிமம் கூடியிருக்க காணவே லாளிதமாய் இருந்தது. சின்ன சின்ன செய்கையால் அவன் சிந்தையைக் கொள்ளைக் கொண்டிருந்தாள் கல்கி.

“இப்பவே ஒரு ரவுண்ட் போலாமா?” என்று ஆசையாய் அவனிடம் கேட்க சிரஞ்சீவி மறுத்துவிட்டான்.

“எழுதி முடி, சாப்பிட்டு போகலாம்” என்றான். கல்கிக்கு ஆர்வமாய் இருந்தாலும் அவன் சொல்வதை மீற முடியாது எழுதி முடித்தவள் உண்ட பின் அவனுடன் காரில் பயணப்பட்டாள். வேறு யாருக்கும் அவள் டிரைவிங் வகுப்புக்குச் சென்றது தெரியாது என்பதால் இன்று லைசென்ஸ் வாங்கியதையும் கார் ஓட்டியதையும் யமுனாவிடம் அஞ்சனாவிடமும் மகிழ்வுடன் பகிர்ந்தாள்.

யமுனா இதனை சூர்யாவிடம் சொல்ல, அவரோ

“சீருவா அவன் கார் கொடுத்தான்?” என்றார் ஆராய்ச்சியாக.

“அவன் கொடுக்காம வேற யார் கொடுப்பாங்க?” என்று யமுனா கணவரைக் கேள்வியாய்ப் பார்க்க

“இல்லை, சீரு என்னைத் தவிர கார் யாருக்கும் தந்ததில்லையே யமுனா” என்றவரின் முகத்தில் யோசனை.

அந்த கார் சிரஞ்சீவி ஐபிஎஸ் பாஸ் செய்தபோது சூர்யா பரிசாய்க் கொடுத்த ஒன்று. சில வருடங்கள் முன் குண்டூரில் அவரின் அண்ணன் மகன் காரை ஓட்ட கேட்ட பொழுது கூட வரப்ரசாத் மறுத்துவிட்டான்.

“நானா! அது உங்க ப்ரசண்ட், எமெர்ஜென்ஸீன்னா பரவாயில்லை. சும்மா எல்லாம் உங்க கிஃப்டை என்னால ஷேர் பண்ண முடியாது” என்ற மகனா இன்று கல்கிக்குக் காரை ஒட்ட தந்திருக்கிறான் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.  அதனை அப்படியே மனைவியிடமும் வெளிப்படுத்திவிட

“ஏன்? ஸ்வரூப்க்குத் தரலன்னா கல்கிக்குத் தரக் கூடாதா?” என்று யமுனா கோபமாய்க் கேட்டார். சூர்யாவுக்குத் தன் மனதில் இருக்கும் சந்தேகத்தை மனைவியிடம் உறுதிப்படுத்தாமல் சொல்ல மனமில்லை, அதனால் அமைதியாகிவிட்டார்.

ஆனால் மகனின் செய்கையில் எல்லாம் புதிதாய் ஏதோவொன்று அவருக்குப் புலப்படவே செய்தது. அவனாகவே சொல்லட்டும் என்று காத்திருந்தார் சூர்ய நாராயணன்.

கல்கியின் இரண்டாம் செமெஸ்டர் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஓடியிருக்க ஒரு நாள் ஏழு மணி இருக்கும். கல்கி சோஃபாவில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தாள். வரப்ரசாத் அவன் அறையில் இருந்து வெளியே வர, அவனைப் பார்த்த கல்கி

“மிஸ்டர். காரம் கோழி காரமா இருக்கு வேணுமா?” என்று சில்லி சிக்கனை சாப்பிட்டபடி  கேட்க

“நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன், நீ சாப்பிடு” என்றவன் போனை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான்.

கல்கி கோழியை சுவைத்துக் கொண்டே “நான் நெக்ஸ்ட் வீக் ஊருக்குப் போகப் போறேன்” என்று அவனிடம் சொல்ல

“என்ன தீடீர்னு லீவா?” என்று கேட்டான்.

“லீவ் இல்லை, காலேஜ் டூர் போறாங்க எங்க டிபார்ட்மெண்ட்ல. எப்படியும் அப்பா போக வேண்டாம்னு முன்னாடியே சொல்லிட்டார். இங்க தனியா இருக்கனும். அதான் ஊருக்குப் போனா அம்மா அப்பாவைப் பார்க்கலாம்” என்று சொல்ல

“என்ன கல்கி நீ? உன்னோட கோர்ஸ்க்கு டூர் எவ்வளவு முக்கியம் தெரியுமா? உங்கப்பா பெர்மிஷன் கொடுக்கலன்னா என்ன? இங்க இருந்து போனா தெரியவா போகுது?” என்றான் வரப்ரசாத்.

“அம்மா கூட அதான் சொன்னாங்க. ஆனா நான் போகல” என்றுவிட்டாள்.

“உன்னோட அம்மா கூட ஓகே சொல்லிட்டாங்க தானே? அப்புறம் என்ன?” என்றான் எரிச்சலாக. இது எல்லாம் தவறவிடலாமா? என்ற எண்ணம் அவனிடம்.

“அம்மா சொன்னா அப்பாவை என்னால ஏமாத்த முடியாது”

“நியாயமான ஆசைகளுக்கு பெர்மிஷன் கொடுக்கலன்னா அதை மீறினா தப்பு கிடையாது கல்கி”

“வேண்டாம். அப்பா என்னை படிக்கிறதுக்காக அனுப்பியிருக்காங்க, டூர் தானே எதாவது காரணம் சொல்லி போகாம இருந்துப்பேன். அவருக்குத் தெரியாம செய்றதெல்லாம் எனக்கு வேண்டாம்” கல்கி உறுதியாய் மறுத்தாள்.

கல்கிக்கும் ஆசையாய் இருந்தது, ஆனால் நடக்காது என்று தெரிந்து ஆசையை வளர்க்கத் தயாராக இல்லை. அதனையும் விட அவள் அடம்பிடித்தால் உன்னைப் படிக்க அனுப்பினால்  நீ இதையெல்லாம் கேட்பாயா என்று அதற்கும் பேசுபவர் உதயமூர்த்தி.

முடிந்துவரையில் அமைதியாய்ப் படிப்பை முடிப்போம் என்பதே அப்போதையை பெரிய ஆசையாய் தேவையாய் இருந்தது கல்கிக்கு. அதற்குள் சிக்கனை சாப்பிட்டு முடித்தவள் பாத்திரத்தைக் கழுவிவிட்டு வந்து உட்கார

“பேக்கிங், டிரைவிங் க்ளாஸ் போனதெல்லாம் உன் அப்பாவுக்குத் தெரியாமதானே? அப்போ மட்டும் தப்பில்லையா?” என்றான் வரப்ரசாத் கோபத்துடன்.

✅ End of Episode 26
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 6 Replies
Sathya Velusamy Reader 3 weeks ago

சிங்காரம் லவ் மோட் வந்துட்டா ரா......நான் இன்னும் 3 weeks catch up பண்ணனும் 

❤️ 2 more...
Pavithra Narayanan 3 weeks ago

இங்கதான் கா இனி இருக்கும். சோ free ஆகிட்டு படிங்க😊

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 3 weeks ago

பாட்டின் இன்னிசையில் வரும் முன் இசை.... பாடலுக்கு முன் வரும் முன் இசையில் பாடலின் அழகை இன்னும் மெருகேற்றி சொல்வது போல காதலின் அவஸ்தையை காத்திருப்பு மெருகேற்றி கூறும்....அருமையான காதல் உவமை....

❤️ 2 more...
Srichitra Reader 3 weeks ago

Very nice.

❤️ 1 more...
Kavi Natarajan Reader 3 weeks ago

Very nice ud ma 😍😍😍😍😍

❤️ 1 more...
Sathya Velusamy Reader 3 weeks ago

இன்னிசை முன்னிசை மஞ்சிமம் லாளிதம்

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top