Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 6

நிலா முற்றம் 6

“அவங்க மூணு பேரும் எங்க அப்பு?” என்று உமா அவள் கையில் ஜூஸைக் கொடுத்தவர் கேட்க,

“அண்ணா அக்காவை அழைச்சிட்டு வாக்கிங் போயிருக்காங்க, சர்வா வாசல்ல நிக்கிறார் அத்தை” என்றவளை வாஞ்சையைப் பார்த்தவர் பின் என்னவோ ஞாபகம் வர,

“ஹே ஒரு நிமிஷம் அப்பு” என்று சொல்லி கிச்சனுக்குள் சென்றவர் மல்லிப்பூ கொண்டு வந்து கொடுத்து

“வச்சுக்கோ அப்பு, இப்போ எல்லாம் நீ பூ வச்சே நான் பார்க்கறதில்லை” என்றதும் உமாவின் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டாள்.

அம்மா இருக்கும்போது பூவென்றால் பாவைக்கு அவ்வளவு பிரியம். அவரே கட்டி வைத்துவிடுவார். அந்த ஞாபகம் ஒரு நொடி அவளுக்குள் தோன்றியது, முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“என்னாச்சு அப்பு?” என்று அவர் அவளின் தோள் தொட அமைதியாய் புன்னகைத்தவள், அவரின் கையை விட்டுவிட்டு பூவைத் தலையில் வைத்துக்கொண்டாள். சிவா வீட்டிற்குக் கிளம்பத் தயாராக,

“அண்ணா, சாப்பிட்டு போகலாம். ரொம்ப நாள் ஆகிடுச்சு, அப்பு வேற வந்திருக்கா” என்றவர்,

“அப்புறம் ரொம்ப நாளா சொல்ல நினைக்கிறேன், கல்யாணம் ஆகப்போற பொண்ணு, காலேஜ் வேற போறா. அதனால வீட்டுல சமையலுக்கு ஒரு ஆள் வைங்கண்ணா, அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்ற உமாவின் பேச்சுக்கு மறுப்பாய்த் தலையசைத்தவர்,

“அதெல்லாம் ரசிகா சுறுசுறுப்பா செஞ்சிடுவா உமா, என்ன டா?” என்று மகளிடம் கேட்டார்.

“ஆமாம்பா” என்று அவள் உடனே சொல்ல,

“என் பொண்ணு எல்லாமே சமாளிப்பா” என்றார் பெருமையாக. அவரையே அவளால் சமாளிக்க முடியவில்லை என்பது தெரியாதவராக.

உமாவும் சக்தியும் உணவுண்ண சொல்லி வற்புறுத்தியும் இவர்கள் மறுத்துவிட்டு கிளம்பி விட, புஷ்பா அவர் வீட்டுப் பக்கம் நின்றவர்

“சர்வா! சர்வா” என்று மகனை சத்தம் போட்டார்.

“என்னம்மா?” என்று இவன் சுவரின் இந்த பக்கம் நின்று கேட்க,

“வீட்லயே தங்க மாட்டியா டா நீ? என்றார் கோபமாக.

“ம்மா, இங்கதானே இருக்கேன். வீட்ல யாரு இருக்கா? நீங்க மட்டும்தானே?”

“அம்மா இருந்தா போதாதா?” என்றார் அவர் இன்னும் முறைப்பாக.

“ம்மா, அப்படி சொல்லவரல நான். நீங்க மட்டும் வீட்ல இருக்கீங்க, நீங்களும் இங்க வந்தா ஜாலியா இருக்கும், அண்ணா இருக்கான், அண்ணி இருக்காங்க, பெரியப்பா கூட வீட்ல இருக்காங்க” என்றவன் அவரின் கையைப் பிடித்துக் கொண்டு,

“வாம்மா” என்றான்.

அவருக்கோ மகன் தன்னை விட்டு தள்ளி நிற்பது பிடிக்காமல்,

“போடா” என்றவர் கோபத்துடன் அவரின் வீட்டிற்குள் போய்விட்டார்.

பத்ரி வாசலுக்கு வந்து இவனை உண்ண அழைக்க,

“இல்ல டா, அம்மா தனியா இருக்காங்க. நான் அங்க போய் சாப்பிடுறேன்” என்றவனின் முதுகில் சுள்ளென்று அடித்தவன்,

“சித்தியும் இங்க சாப்பிட கூப்பிடு, எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம். அதை விட்டு அங்க போய் சாப்பிடுவானாம்” என்று பத்ரி முறைத்தான்.

உள்ளிருந்து சக்தி வேறு,
“இரண்டு பேரும் என்னடா வெளியேவே நின்னு பேசுறீங்க?” என்று சத்தமிட இருவரும் உள்ளே போனார்கள்.

“இவனை சாப்பிட சொன்னா கேட்க மாட்டேங்கிறான்பா, லண்டன் போய்ட்டு வந்து லந்து பண்றான்பா இவன்” பத்ரி சிரத்தையாக தம்பியைப் போட்டுக் கொடுக்க,

“பெரியப்பா அப்படியில்ல, அம்மா தனியா இருக்காங்க. அதான்” சர்வாவினால் அம்மாவையும் விட்டுக்கொடுக்க முடியவில்லை.

“புஷ்பாவையும் வர சொல்லுடா” என்றார் சக்தி.

“நான் மாறனுக்குப் போன் பண்றேன், எங்க போனான் அவன்?” என்று கேட்க,

“அப்பா அவரோட ப்ரண்ட் பார்க்க போயிருக்கார் பெரியப்பா”

“அப்போ புஷ்பாவையும் வர சொல்லு, இரண்டு பேரும் இங்கேயே சாப்பிடுங்க” என்றார் உமா.

“பத்ரி! அங்க புஷ்பா அத்தை என்னவோ ஸ்பெஷலா செஞ்சிட்டாங்க போல, இல்லன்னா இவன் சாப்பிடாம இருக்க மாட்டானே” என்று ரேஷ்மி சொல்ல,

“ரேஷண்..ணீ!” என்று இழுத்தவன்,

“இப்போ என்ன இங்க சாப்பிடணும். அவ்வளவுதானே? கொஞ்சமா ஒரு பாக்ஸ்ல போட்டுக் கொடுங்கயா” என்றதும்,

“சர்வா கிச்சன் வா, நான் உனக்கு எடுத்து வைக்கிறேன்” என்ற உமா அவனை கிச்சனுக்குள் அழைத்தார். பெரியப்பா முன் எதையும் காட்டிக்கொள்ள விரும்பாதவன் உள்ளே போக,

“டேய் உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? சிவாண்ணா ரசிகாவுக்கு மாப்பிள்ளைப் பார்க்கிறேன்னு சொல்றார். நீ அமைதியா இருக்க?” என்றவரின் பேச்சில் கோபம் தெறிக்க, அவரது கோபம் இவனுக்குள் குழப்பத்தை விளைவிக்க,

“அவர் பொண்ணுக்கு அவர் மாப்பிள்ளை பார்த்தா எனக்கென்ன வந்துச்சு?” என்றான் அலட்சியமாய்.

“சர்வா, விளையாடாம பதில் சொல்லு. நீ ரசிகாவை விரும்பினதானே?” என்றார் குற்றம் சாட்டும் பார்வையுடன்.

“முதல்ல இப்படி ஒன்னுமே தெரியாம உளறுறதை நிறுத்துங்க பெரியம்மா” என்றான் கோபமாக. கோபத்தில் இத்தனை நாள் அவரை உறவு சொல்லி அழைக்காமல் இருந்தது கூட மறந்து போனது.

“பொய் சொல்லாதடா” என்றதும் கடுப்பானவன் அங்கிருந்த தோசைக் கல்லைப் பார்த்து,

“வேணும்னா இந்த தோசைக் கல்ல சத்தியம் பண்ணவா? சத்தியமா நான் அவளை விரும்பல” என்றவனின் குரலில் மொத்தமும் உண்மைதான்.

“அப்புறம் ஏன் அன்னிக்கு…?” என்று அவர் முறைத்தவண்ணம் கேட்க,

“என்ன அன்னிக்கு?” என்றான் எரிச்சலாக.

அதற்குள் புஷ்பா சர்வாவுக்குப் போன் செய்துவிட,
“உங்க கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன், நம்பினா நம்புங்க. உங்களை நம்ப வைக்கிறது என் வேலை இல்லை பெரியம்மா” என்று அழுத்தமாய் சொன்னவன், விறுவிறுவென்று உணவை கூட வாங்காமல் அவன் வீட்டுக்குப் போய்விட்டான்.

புஷ்பாவிற்கு மகன் அங்கு உண்ணாமல் வந்தது சந்தோஷமாய் இருந்தது. அவனிடம் பேச அவ்வளவு ஆவல் இருக்க,

“லண்டன்ல என் சாப்பாடை மிஸ் பண்ணியா சர்வா?” என்று ஆரம்பித்து,

“அங்க எலிசபெத்தை பார்த்திருக்கியா நீ?” என்று அவனுடன் பேச வேண்டி கேள்விகளாய்க் கேட்டுக் கொண்டிருக்க, சர்வாவும் பொறுமையாகவே பதில் சொன்னான். அதில் மகிழ்ந்தவர் கணவனும் இல்லாமல் இருக்க,

“சர்வா, அம்மா சொன்ன விஷயம். உன் கல்யாணம் பத்தி யோசிச்சியா?” என்றவரின் ஆர்வமான முகத்தைப் பார்த்தவன்,

“மா, எனக்கும் கல்யாணம் பண்ணி உன்னையும் உன் மருமகளையும் சண்டைப் போட வச்சு, பாப்கார்ன் சாப்பிட்டு ரசிக்கணும்னு ரொம்ப ஆசை இருக்கும்மா” என்றவனை புஷ்பா முறைத்தார்.

“அப்புறம் என்னைக் கவனிக்க நீயும் அவளும் போட்டி போடணும். வீடு அப்படியே சும்மா ப்ர்ஸ்ட் டே ப்ர்ஸ்ட் ஷோ தியேட்டர் மாதிரி கூச்சலும் சத்தமுமா இருக்கணும்” என்றதும் புஷ்பா,

“உனக்குக் கல்யாணம் செஞ்சு புள்ளைக் குட்டியோடு வாழ ஆசையில்லையா டா? இப்படி பேசுற” என்று பல்லைக் கடிக்க,

“அதெல்லாம் இருக்கு, பட் இப்போதானே இந்தியா வந்திருக்கேன். கொஞ்ச நாள் இப்படி ஃப்ரீயா இருக்கேனே. காலேஜ்லயும் வேலையெல்லாம் இப்போதான் நான் கத்துக்கிறேன். ஒரு சிக்ஸ் மந்த்ஸ் போகட்டும்மா, அப்புறம் நீங்க சொல்ற பொண்ணோ இல்லை எனக்குப் பிடிச்ச மாதிரி பொண்ணோ நான் கல்யாணம் செஞ்சுக்கிறேன், ப்ராமிஸ்” என்று சிரித்தான் சர்வஜனன்.

வீட்டிற்குச் சென்றதும் ரசிகா வழக்கம்போல் இரவு உணவிற்குத் தயார் செய்தாள். அப்பாவும் மகளும் உணவு உண்டு முடிக்கும்வரை இருவருக்குள்ளும் அமைதி. உண்டு முடிக்கவும்

“ரசிகாம்மா, உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டேன்” என்றவர்,

“இங்க பாருடா, இந்த மேட்ரிமோனியில எனக்குப் பிடிச்ச மாதிரி நான் ஒரு ஐம்பது பசங்க ஷார்ட்லிஸ்ட் செஞ்சிருக்கேன். உனக்கு இதுல யாரைப் பிடிக்குதுன்னு அப்பா கிட்ட சொல்லு, உனக்கு செட் ஆகுற மாதிரி இருக்கவங்களை எங்கிட்ட சொல்லுடா” என்றார்.

“இதான் யுஸர் நேம், பாஸ்வர்ட்” என்று சொன்னவர்,

“உனக்குப் பிடிச்சவங்களை தயங்காம அப்பா கிட்ட சொல்லு அப்பு” என்று சொல்லிப்போனார் சிவசங்கரன்.

பிடித்தவர்களை சொல் என்று அப்பா போயிருக்க, மகளுக்கோ எனக்குப் பிடித்தவர்கள் கூட இந்த ஐம்பதில் ஒருவராய்த்தான் இருக்க வேண்டுமா என்று ஆயாசமாய் இருந்தது.
ஒரு ஐந்து பேரின் ப்ரோஃபைல் பார்த்தவளுக்கு அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மணி பத்தாகியிருக்க, படுத்து உறங்கிப்போனாள் ரசிகா. அடுத்து கல்லூரி சென்றபோது இந்த விஷயத்தை யுவியிடம் சொல்ல, யுவியும் அந்த ப்ரோஃபைல் எல்லாம் பார்த்தவள்,

“ஏன் டி உங்கப்பா இந்தியன் ஆர்மிக்கா ஆள் எடுக்கிறார்? தீவிரவாதியை சுட்டு தேசத்தைக் காப்பாத்த போறானுங்களா இவனுங்க? சப்பாத்தி சுட்டு நம்மளைக் காப்பாத்த மாப்பிள்ளை பார்க்கணும், இல்லையா நம்ம உப்புமா கிண்டி அவனுங்களைக் காப்பாத்தனும்” என்று திட்டியவள்,

“பாரு இவரை.. எப்படி இருக்காங்க? ஓஹ்…ஸர் போலிஸா? உனக்குப் போலிஸ் மாப்பிள்ளை ஓகேவா?” என்று கேட்கவும்தான் அவள் யோசித்தாள்.

“இல்லையே, எனக்கு போலிஸ் ஆர்மி எல்லாம் வேண்டாம். எங்கப்பா எங்களை விட்டு தனியா இருந்த மாதிரி வேண்டாம், அதுல யாராவது ஐடி, பேங்க்னு அப்படி வேலைப்பார்க்கறவங்களா பாருடி” என்றாள் சலிப்பாக.

✅ End of Episode 6
How did you feel about this episode?
❤️ 4 😂 1 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 1 week ago

Very nice.

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 week ago

அப்போ இல்ல சர்வா....

அப்போ இப்போ காதல் ஆரம்பிக்கலாம்ல சர்வா....

அப்பா பார்க்கும் மாப்பிள்ளை
அப்பா போல வேண்டாம்....
அப்போ.....
😂 1 more...
Geethazhagan Reader 1 week ago

Interesting epi

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top