ரசிகாவின் சலிப்பைப் பார்த்த யுவிக்கு வருத்தமாய் இருக்க,
“இப்படி சலிச்சிட்டு பிடிக்காம ஒரு கல்யாணம் பண்ணிக்கப் போறியா நீ? உனக்குப் பிடிச்ச மாதிரி யாராவது சொல்லுடி” என்றாள் யுவராணி ரசிகாவின் மீதான அக்கறையில்.
“எனக்குப் பிடிச்சவங்க அப்பாவுக்குப் பிடிச்சவங்களுக்குள்ள இருக்கணும், வென் டயக்ராமில இண்டர்செக்ஷன் வருமே அப்படி, போ யுவி. எனக்கு இதுல விருப்பமே இல்லை”
“அப்போ உன் அப்பா கிட்ட சொல்லு”
“என்ன சொல்ல சொல்ற? எனக்குக் கல்யாணம் பண்ண ஆசை இல்லை இப்போ. இவங்க யார் மேலையும் எனக்கு ஃபீலிங்க்ஸே இல்லை, எனக்கு இவங்களைப் பார்த்தா பயமா இருக்குடி” என்றவளின் குரலில் அவ்வளவு கலக்கம்.
“ப்ச், எனக்கே அப்படி இருக்குதுதான். எல்லாருமே நல்ல ஹைட் வெயிட்னு அவங்க பிசிக்கே கொஞ்சம் முரட்டுத்தனமா இருக்குல, அதான். கொஞ்ச நாள் டைம் கேளேன் டி”
“கேட்டாலும் என்னவாகும் சொல்லு? அப்பா ஒத்துக்க மாட்டார், டைம் கேட்டா எதாவது ஆகுமா என்ன? நத்திங்” என்றவள் மேஜையில் மேல் கவுந்து கொண்டாள்.
“ரசிகா! இப்படி பேசினா எப்படி டி? அவர் உன்னோட அப்பா. நீதான் உன்னோட விருப்பத்தை அவர்கிட்ட சொல்லணும், கொஞ்ச நாள் டைம் கேளு. இல்லையா எனக்கு இப்படி போலிஸ், ஆர்மி மாப்பிள்ளை வேண்டாம் சொல்லு” என்றாள் யுவி.
“அப்பாவுக்குப் பிடிக்காதே” என்றவளின் கையைப் பிடித்து உட்காரவைத்த யுவி,
“நீ செய்ற தப்பு இதுதான் டி, அப்பாவுக்குப் பிடிச்ச பொண்ணா இருக்கணும்னு நினைக்கிற, அப்பா கிட்ட நல்லப்பெயர் எடுக்க நினைக்கிறடி” என்றதும் குழப்பமாக யுவியைப் பார்த்தாள் ரசி.
“ஏன் நீ உன் அப்பா கிட்ட நல்லப்பெயர் எடுக்க நினைக்க மாட்டியா?” என்றாள் புரியாமல்.
“நம்ம நம்மாளவே இருந்தா போதும், அது மத்தவங்களுக்குப் பிடிச்சாலும் அவங்க மதிச்சாலும் அவங்க இஷ்டம், அவங்க ஒபினியன். அதேதான் உன்னோட அப்பாவுக்கும், அப்பா மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு அவர் சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டாத பக்கி” என்றாள் கோபமாக.
“அப்பாவுக்கு நல்லப் பொண்ணா இருக்கறது தப்பில்லை, அதுக்காக உனக்குன்னு இருக்க ஆசை விருப்பமெல்லாம் சொல்லாம எப்பவும் வாழப்போறியா?” என்றதும்,
“ஒரு தடவ லூசுத்தனம் செஞ்சது போதாதா?” எரிச்சலில் வந்தது ரசிகாவின் குரல்,
“ஏன் டி அது நடந்து எத்தனை வருஷம் ஆகுது? அது சரி இன்னும் நீ அதையே நினைக்கிறியா?” என்று தயங்கி வந்த கேள்வியில் தன்னை நிதானம் செய்தவள்,
“இல்லடி, எனக்கு என்ன பிடிக்குதேன்னு எனக்குத் தெரியல. நீ சொல்ற மாதிரி கொஞ்ச நாள் டைம் கேட்கிறேன்” என்றாள் முடிவாக.
அன்று மாலை கல்லூரி விழாவுக்கான ஆயத்தங்கள் நடக்க, தினமும் அதற்கு என்ன செய்வதென யோசித்து யோசித்து எப்படியோ தன்னுடைய குழப்பங்களை தற்காலிமாகத் தள்ளி வைத்தாள் ரசிகா. ஒருவாரம் போயிருக்கும், சிவசங்கரன் மகளிடம்,
“நான் சொன்னது என்னாச்சுடா?” என்றவர் ஆர்வமாய் மகளின் முகம் பார்த்தார்.
“பா, எனக்கு மிலிட்டரி, போலிஸ் மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம்பா” என்றாள் தனது மனதை திறந்து.
“என்னம்மா நீ இப்படி சொல்லலாமா?” சிவசங்கரின் குரலில் ஒரு பிடித்தமின்மை மகளின் பேச்சில்.
“ப்ளீஸ்ப்பா, எனக்கு தனியா இருக்க வேண்டாம்”
“டேய்! தனியா ஏன் இருக்கப் போற, அம்மாவுக்கு இங்க பாட்டி தாத்தா இருந்தாங்க, உனக்கும் ஸ்கூல் மாத்தினா கஷ்டம். கூடவே அங்க சிட்டிவேஷன் நார்மலா இருக்காது. அதனால் உன்னையும் அம்மாவையும் அப்பா இங்க விட்டேன், அங்கவே குவார்ட்டர்ஸ் இருக்குடா. இப்படி மிலிட்டரிகாரனே மிலிட்டரிக்கும் போலிஸூக்கும் பொண்ணு கொடுக்கா யோசிக்கலாமா?” என்றார் மீசையைத் தடவிக் கொண்டு.
அவரின் கண்கள் மகளில் நிலைத்து நின்று எப்படியும் அவளை தன் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற உறுதி அவரிடம்.
ரசிகாவிற்கு தன் முடிவு சுய நலமாய்த் தோன்றினாலும் எப்போது விடுமுறை வரும் அப்பாவைப் பார்க்கலாம் என்று எண்ணி எண்ணி என் காலம் போனது போதும், நான் சராசரியான வாழ்வே வாழ்ந்து கொள்கிறேன் என்று கத்தத் தோன்றியது.
அதனையும் விட இறப்பு என்பது என்றாவது வருமென தெரிந்தாலும் எங்கே குண்டு வெடித்தாலும், தீவிரவாதிகள் ஊடுருவினாலும் அப்பாவிற்கு எதாவது ஆகிவிடுமோ என்று பயந்து கழிந்த காலங்கள் தன் பிள்ளைக்கு வேண்டாம், இனியும் தன்னால் அதனை அனுபவிக்க முடியாது என்றது திண்ணமாய் எண்ணம்!
அதற்கான துணிவு தன்னிடமில்லை என்பது ரசிகாவிற்குத் தெரிய அதனை சொல்ல முடியவில்லை.
சொன்னாலும்,
“ஒரு கேப்டன் பொண்ணு இப்படி பேசுவியா?” என்று ஆரம்பிப்பார்.
“ப்ளீஸ்பா” என்ற ரசிகாவிற்கு அப்பாவை எப்படி பேசி சம்மதிக்க வைக்க முடியும் என்று தெரியாமல் போனது. அவளுக்கு விவரம் தெரிந்தது முதல் அப்பாவுடன் இருந்த தருணங்கள் மிகவும் குறைவு.
அதில் புரிதல் இல்லாமல் போக, அம்மாவின் மறைக்குவுக்குப்பின்னும் இடைவேளை குறையவில்லை. அவர் சொல்வதைக் கேட்டு நடந்தே பழகிவிட்டாள் மகள். மகளைத் தன் பேச்சைக் கேட்க வைத்தே பழகிய தந்தை.
ஆனால் ரசிகா இத்தனை வருடங்களில் இப்படி மறுத்தோ, கெஞ்சியோ பார்க்கவில்லை சிவசங்கரன். இது அவளின் திருமண விஷயம் வேறு மகளின் முடிவுக்கே விட்டுவிட்டார், அதாவது மிலிட்டரி, காவல்துறை என்று மாப்பிள்ளை வேண்டாம் என்று முடிவு செய்தார்.
இன்னும் மூன்று நாட்களில் கல்லூரி ஆண்டு விழா, கல்லூரியே கலைக்கட்டியது.
“ரசிகா, அஜெண்டா ரெடியா? டைமிங்க்ஸ் பக்காவா இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டிருந்தான் சர்வா.
“ஓகே ஸர்” என்று அவனின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த ஒரு மாதமாக சர்வா ரசிகாவிடம் மிகவும் சகஜமாகப் பேசினான். ஆனால் ரசிகா மட்டும் ஒரு எல்லைக்கோட்டில் நின்றே பேசினாள்.
பேசினாள் என்றில்லை! பதிலளித்தாள் அவ்வளவுதான்!
“ஸ்டூடண்ட்ஸ் டிசிப்ளின் மெயிண்டெயின் செய்யனும் ரசிகா, அது முக்கியம். டிஸிப்ளின் கமிட்டி வாலண்டியர்ஸ் இருக்காங்க தானே? ஆடிட்டோரியம்ல ஃப்ங்க்ஷன் நடக்கும்போது பசங்க ரோமிங்ல இருக்க கூடாது” என்றவனின் பேச்சில் கண்டிப்பு மட்டுமே.
சர்வா வீட்டில் பார்ப்பவன் போல கல்லூரியில் இருப்பதில்லை என்பது மட்டும் ரசிகாவிற்கு இந்த ஒரு மாதத்தில் நன்றாய்ப் புரிந்தது. அவளின் அப்பாவைப் போல் கடுமையான கண்டிப்பு இல்லை, அதே சமயம் சக்தி போல மாணவர்களிடம் கொஞ்சம் நட்புணர்வும் இல்லை, ஒரு நடு நிலையுடன் இருந்தான்.
அந்த பதவிக்கான மரியாதையுடனும் மிடுக்குடனும் நடந்தான். சர்வாவிடம் பேசிவிட்டு மாணவிகள் பாட்டு ப்ராக்டீஸ் செய்யும் அறைக்குள் நுழைந்தாள் ரசிகா.
இவள் நுழையவும் மாணவிகள் ரசிகாவை சூழ்ந்து நிற்க அவர்கள் என்னமோ கேட்டு ரசிகா மறுத்துக் கொண்டிருந்தாள்.
“வாட்ஸ் தி மேட்டர்?” என்றபடி சர்வா அங்கே வர எல்லாரும் அமைதியாகி விட ஒரு பெண் மட்டும்,
“ஸர், மேம் ரொம்ப நல்லா பாடுவாங்க. சும்மா ஒரு சாங் பாட சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்க” என்று சொல்லிவிட,
“என்னோட மொபைல்ல ரசிகா பாடினா சாங் ப்ளே பண்ணினேன் ஸர், அதான்” என்று சொன்ன யுவியை முறைத்தாள் ரசிகா.
சர்வாவும் ரசிகாவைப் பார்த்தவன் புன்னகையுடன்,
“ரசிகா, மேம் பாடுங்க” என்று சொல்ல, அவன் பேச்சு வெகு இயல்பாய் வர ரசிகா திணறிப்போனாள்.
“மேம்! ப்ளீஸ்” என்று மாணவிகள் கூச்சலிட,
“சும்மா பாடு ரசிகா, அவங்க ஆசையா கேட்கிறாங்கல” என்று யுவியும் சப்போர்ட் செய்ய,
ரசிகாவின் முன்னே, சேரில் கால் மேல் கால் போட்டபடி அவள் பாடுவதைக் கேட்க தயாராய் இருந்தான் சர்வா.
அவன் முன்னே நிற்க பாட பெரும்தயக்கம் பேரலையென எழும்பியது. இருந்தும் இவ்வளவு தூரம் எல்லாரும் சொல்லும்போது நாலு வரி பாடிவிட்டுப் போவோம் என்றவள் இதழசைக்க நினைக்க சர்வாவின் முகம் கண்டு பாட முடியவில்லை.
விழிகளை முடியவள்,
‘அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்’
என்ற வரிகளுடன் நிறுத்திக் கொண்டாள், அதற்கும் மேல் பாட முடியவில்லை.
“சூப்பர் மேம்” என்று மாணவிகள் உற்சாகமாய் சொல்ல,
“செம” என்றாள் யுவி.
“ம்ம், குட்” என்றபடி சர்வா எழுந்தவன்,
“கேர்ள்ஸ், ப்ராக்டீஸ் முடிச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்புங்க”
“மேம், நாளைக்கு ஒரு கம்ப்ளீட் ரிஹர்சல் நீங்களே பார்த்துடுங்க, நான் குமரன் சார் கிட்ட சொல்றேன்” என்றபடி சர்வா அறையைவிட்டு வெளியேறினான். அவன் வெளியேறவும் ரசிகா யுவியிடம்,
“நீ இன்னிக்குப் பார்த்துக்கோ, எனக்கு டயர்டா இருக்கு. முடியல” என்றவள் விறுவிறுவென்று கிளம்பிவிட்டாள்.
எப்படியோ வீடு வந்து சேர்ந்தாள் ரசிகா. வாசலில் உட்கார்ந்த சிவசங்கரன் சீக்கிரமே வந்த மகளைப் பார்த்துவிட்டு,
“என்ன ம்மா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட?” என்றார்.
“எனக்கு டயர்டா இருந்துச்சுப்பா” என்றவள் அறைக்குள் புகுந்துகொண்டாள். அறைக்குள் நுழைந்து தன் பையை மெத்தையின் மீது தூக்கிப் போட்டவள், பாத்ரூம் சென்று முகத்தை தண்ணீரினால் அடித்துக் கழுவ, இமை மூடினால் இதயம் மூடிடுமா என்ன?
மறந்தேன்! துறந்தேன்! என்ற நினைப்பெல்லாம் சில் சில்லாய் உடைந்தது மங்கையினுள்.
சர்வமாய் அவளினுள் சர்வா மட்டுமே! என்பது தெளிவாய்ப் புரிந்தது.
விழி மூடவே பயம், அவன் வந்து கண்களுக்குள் நின்றான்.
பாடல் வரிகளுக்கான இணைப்பு:
பாடல் வரிகள்
Friends, இது ஏற்கெனவே எழுதிய கதையே தான்! சைட்ல சில features test செய்வதால் சிறிது காலம் இது தொடர்கதைகள் பிரிவில் இருக்கும்.
Read and Share your thoughts.
Very nice
Pavan Rasika
சர்வமாய் அவனுள்