Episode 36

கல்கி இப்போது மூன்றாம் வருடத்தில் இருந்தாள். கல்லூரியில் வகுப்புகள் முடிந்து காரிடாரில் நடக்கும்போதே ஒரு சோர்வு அவளிடம். வீட்டிற்குச் சென்றால் யமுனா இருக்கமாட்டார். சென்னையில் சூர்யாவின் நெருங்கிய நண்பரின் மகனின் திருமணத்திற்காக அவர் விஜயவாடாவில் இருந்து சென்னை வந்திருக்க, தையல் நாயகி மகளைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்க, யமுனா கணவருடன் கும்பகோணம் சென்றிருந்தார்.

இவளுக்கு இண்டர்னெல்ஸ் இருக்க, இவள் போகவில்லை. இரண்டே நாள் என்பதால் தனியே இருந்துகொள்கிறேன் என்றுவிட்டாள்.

காலேஜ் விட்டு வாசலில் ஷேர் ஆட்டோவிற்காக நிற்கையில் பார்த்தால், இவளையே பார்த்தபடி நின்றிருந்தான் சிரஞ்சீவி வரப்ரசாத். கல்கிக்குத் தலை முதல் கால் வரை தாள முடியாத ஒரு சந்தோஷம். எத்தனை மாதங்கள் ஆகிறது அவனைப் பார்த்து. மூச்சே அப்போதுதான் விடுவது போல் ஒரு அலாதி ஆனந்தம். அந்த உற்சாகத்துள்ளலுடன் அவனை நெருங்கியவள்

“நிஜமா நீங்கதானா? சர்ப்ரைஸ் செய்றேன்னு சொன்னீங்களே அதானா இது? நான் வரும்போது கூட வீட்டுக்குப் போனா தனியா இருக்கனுமே நினைச்சேன். அத்தை இல்லன்னு கடைசியில நீங்க வந்துட்டீங்க”

“இத்தனை நாள் நீங்க என்னைப் பார்க்க வரலனதும் இவர் வரப்ரசாத் இல்லை வராத ப்ரசாத்னு திட்டிட்டே இருப்பேன். பரவாயில்லை வரப்ரசாத்” என்று சொல்லி அவன் முகம் பார்க்க பதில் பேசாமல் காரில் சென்று உட்கார்ந்து கொண்டான்.

முறைத்தபடி அவனைப் பார்த்து அவளும் காரில் ஏற,
“நான் பாட்டுக்குப் பேசிட்டு இருக்கேன், நீங்க ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறீங்க. இப்போதான் எனக்கு இந்த லவ்வே ஃபீல் ஆகுது தெரியுமா? காரமான நம்ம லவ்ல ஒரு ஸ்வீட் மொமண்ட்!” என்று சிலாகித்து கல்கி பேச அவளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.

“பேசிட்டே இருக்க, மூச்சு வாங்குது. குடி” என்று அப்போதுதான் பேசினான். ஆனால் அது இத்தனை மாதம் கடந்து மங்கையைக் காணும் காதல் பேச்சோ ஆவல் பேச்சோ இல்லை. அக்கறைதான்! ஆனாலும் ஒன்று குறைந்தது.

“தேங்க்ஸ்” என்று சொல்லி தண்ணியைக் குடிக்கவும்

“எக்ஸாம் எப்படி பண்ணின?” என்று கேட்டான்.

“நல்லா எழுதினேன். லாஸ்ட் எக்ஸாம்தான் இன்னிக்கு, ஸோ இன்னிக்கு நம்ம இரண்டு பேரும் நிறைய பேசுறோம்.ஓகே” என்று கல்கி வண்ணக்கனவுகளுக்கு சிறகு விரிக்க, சிரஞ்சீவியின் முகத்தில் தயக்கம், தடை!

வீட்டிற்குப் போகும் வரை சிரஞ்சீவியிடம் பேச்சில்லை. அவன் வண்டி ஓட்டும்போது பேசமாட்டான் தானே? அதனால் கல்கியும் அமைதியாய் இருக்க, வீட்டிற்கு சென்று சாப்பிட்டு முடித்தனர். வசந்திக்கா கல்கிக்கு மட்டும் சாதம் வைத்திருக்க, கல்கி இவனுக்கும் சேர்த்து தோசை ஊற்ற, சாதத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

உண்டு முடிக்கவும் கல்கி “அப்புறம் சொல்லுங்க” என்று ஆரம்பிக்க

“கல்கி, வீட்ல எதாவது பால், வேற ஐடம்ஸ் ஃப்ரிட்ஜில இருந்தா பக்கத்துல கொடுத்துடு. நம்ம ஊருக்குப் போகனும்” என்றவனின் குரலே சரியில்லை.

“என்னாச்சு? அப்பத்தாவுக்கு முடியலையா?” என்று கல்கி பதற

“அவங்க நல்லா இருக்காங்க” என்றதும்

“அப்போ, அப்போ அக்கா அக்கா நல்லா இருக்காதானே?” என்றாள் பதட்டமாக. அஞ்சனா இப்போது கருவுற்று இருக்க அக்காவிற்கு எதுவோ என்ற கவலை.

“அப்போ யாருக்கு என்ன? சொல்லுங்க” என்று கத்த

“மாமாவுக்கு ஹார்ட் அட்டாக் கல்கி” என்றதும் கல்கிக்கு அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை.

“அப்பா…அப்பா நல்லா இருக்கார் தானே?” என்று கேட்க

“கல்கி, பயப்படாத. மாமா டிரிட்மென்ட்ல இருக்கார். அப்பா, அம்மா எல்லாம் அங்க தான் இருக்காங்க. நம்மளும் இப்ப போயிடலாம்மா” என்றதும் கல்கிக்குப் பயத்தில் அழுகை வந்துவிட்டது. அவளின் அப்பா மிகவும் ஆரோக்கியமானவர். இப்படி எல்லாம் அவர் உடல் நலமின்றி இருந்ததே இல்லை. எத்தனை தைரியமானவளாக இருந்தாலும் உற்றவருக்கு ஒன்றென வரும்போது உள்ளம் உடைந்தே போனது.

“நிஜமா நல்லாயிருக்காங்கதானே ப்ரசாத். நீங்க வேற வந்துருக்கீங்க? எனக்கு பயமாயிருக்கு” என்று கல்கி கலக்கத்துடன் சொல்ல

“ஷ்! கல்கி, அதெல்லாம் இல்லடா. அம்மா அப்பா எங்கிட்ட சொன்னாங்க. உன்னால இந்த சிட்டிவேஷன்ல தனியா இருக்க முடியாதுனு நான் ஃப்ளைட்ல வந்துட்டேன். நம்ம இங்க இருந்து திருச்சிக்கு பை ஏர் போயிடலாம். மனோ அண்ணா அங்கதான் இருக்கார், நான் பேசினேன். நீதானே எல்லாருக்கும் தைரியம் சொல்லணும் அம்மடு. மாமாவுக்கு ஒன்னுமாகாது. நல்லதே நினைச்சிக்கோடா” என்று தைரியம் சொல்லி அழைத்துப் போனான்.

உதயமூர்த்திக்குக் காலை ஒன்பது மணிபோலவே லேசாய் நெஞ்சு வலிப்பது போல் இருக்க, சூர்யா நொடியும் தாமதிக்காது உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். மொத்த குடும்பமும் அங்கே கூடியிருக்க, யமுனா மகனுக்கு அழைத்து சொல்லிவிட, இவர்கள் சொன்னாலும் கல்கி எப்படியும் போவாள். இந்த நேரத்தில் தன் துணை தன்னவளுக்குத் தேவை என புரிந்தவன் உடனே சென்னை கிளம்பிவிட்டான்.

மருத்துவமனை வாசலில் வந்து கார் நிற்க, சிரஞ்சீவி இறங்கிவிட்டு கல்கியை இறங்க சொல்ல, கல்கிக்கு அவ்வளவு பயமாய் இருந்தது. ஒருவேளை அப்பாவிற்கு எதாவது ஆகிவிட்டால் என்று நினைக்க மருத்துவமனைக்குள் நுழைய மங்கை மனதில் தைரியம் கொஞ்சமும் இல்லை. காருக்குப் பணம் கொடுத்து அனுப்பியவன் கல்கியைப் பார்க்க அவள் கண்களில் கலக்கத்துடன் நிற்க, அவளைத் தோளோடு சேர்த்தணைத்தவன்

“அம்மடூ, மாமா நல்லா இருப்பாங்க டா. நீ பயப்படாத” என்று சொல்ல அவன் தோளில் முகம் புதைத்தவள்

“எனக்குப் பயமா இருக்கு ப்ரசாத். நிஜமா அப்பா நல்லா இருக்காங்கதானே?” என்று கேட்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் அவனை நனைத்தது. அவள் தலையைப் பிடித்து ஆதுரமாக அழுத்தியவன்

“ஐ ப்ராமிஸ் கல்கி, மாமா நல்லா இருக்காங்க. உள்ள போகலாம் வா” என்று அழைத்துப் போனான். அவர்கள் அணைத்து நின்றதை இருவிழிகள் அதிர்ச்சியுடன் பார்த்ததை இருவருமே அறியவில்லை.

அன்று மாலை போல் உதயமூர்த்தி கண்முழித்தார். கல்கியைத் தன் கண்பார்வைக்குள்ளே வைத்திருந்தான் சிரஞ்சீவி. நெருங்கி நிற்கவில்லை ஆனால் அவன் கொடுத்த தைரியம்தான் அவளை அம்மாவையும் அஞ்சனாவையும் பார்க்க வைத்தது.

எல்லாருமே உடைந்துதான் போயிருந்தனர். அதிலும் அங்கை கணவருக்கு இப்படி என்றதும் தளர்ந்து போய்விட்டார், அஞ்சனாவோ வயிற்றில் குழந்தையுடன் அழுதுகொண்டே இருந்தாள், அஞ்சனாவைத் தேற்றுவதே கல்கிக்கு பெரிய வேலையாகப் போனது. இதில் யுகன் வேறு! மனோகர், சூர்யா ,கல்கியின் மாமா ஜெயராமன், அவரின் மனைவி மகாலஷ்மி, தையல் நாயகி, யமுனா என்று எல்லாரும் அங்கேதான் இருந்தனர்.

உதயமூர்த்திக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் சொன்ன பின் தான் எல்லாருக்கும் மூச்சே வந்தது. இருந்தாலும் அவருக்கு சில கோளாறுகள் இருக்க, டெஸ்ட் எடுத்துப் பார்க்க வேண்டும் என்றனர்.

இரண்டு நாட்களாய் மருத்துவமனை வாசம்தான். தையல் நாயகியும் யமுனாவும் அஞ்சனாவைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்தனர், மற்றபடி எல்லாரும் பகல்பொழுதில் இங்குதான் இருந்தனர். ஜெகதீஷும் உதயமூர்த்திக்கு ஹார்ட் அட்டாக் என்று கேள்விப்பட்ட அன்றே கிளம்பி மாலையில் வந்துவிட்டான். உதயமூர்த்தி தன்னருகே இருந்த கல்கியைப் பார்த்தவர்

“கல்கிம்மா! டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கேட்க

“ஒன்னும் பிரச்சனை இல்லப்பா, டெஸ்ட் ரிசல்ட்ஸ் வரனும் சொன்னாங்கப்பா” என்றாள். மகளின் குரலில் அவளின் கலக்கத்தை உணர்ந்த உதயமூர்த்தி

“பயந்துட்டியா நீ?” என்று கேட்க

“ஆமா” என்று சொல்லும்போதே அவள் என்ன முயன்றும் கண்ணீர் வந்துவிட சட்டென அதனைத் துடைத்தாள்.

உதயமூர்த்திக்கு கல்கியை நினைத்து கவலையாக இருந்தது. உண்மையில் அவருமே தனக்கு இப்படி தீடீரென நெஞ்சு வலி வரும் என எதிர்ப்பார்க்கவே இல்லை. அதுவே அவருக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்க, இப்போது கல்கியைக் கலங்கிய கண்களுடன் பார்க்கவும் இன்னும் மனம் தவித்தது. இப்படி தீடீரென தனக்கு எதாவது ஆகிவிட்டால் தன் பெண்ணை யார் பார்ப்பார்கள் என்ற பயம். நன்றாக இருக்கும்போதே அஞ்சனாவைப் போல் இவளையும் கரை சேர்க்க நினைத்தார். அவருக்குப் பின் எடுத்த செய்ய யாருமில்லை என்ற எண்ணமே அவரை வாட்டியது.

அது என்னவோ காலம் காலமாய் அவருள் ஊறிய உணர்வாக, ஒரு ஆண்பிள்ளை இருந்திருந்தால் தன் பெண்களைப் பார்த்துக் கொள்வானே என்ற எண்ணம். மனைவியைப் பார்த்தவர்

“மச்சான் வந்திருக்காரா?” என்று கேட்டார்.

“அண்ணன் வெளியே நிக்குது” என்றார் அங்கை.

இது இந்த வயதிலும் தங்கைக்கென்று ஒன்றென்றால் ஓடிவர அங்கைக்கு அண்ணன் என்று ஒருவன் இருக்கிறான். கல்கிக்கும் ஒரு துணை வேண்டும், அது கணவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்

“உங்கண்ணனைக் கூப்பிடு, ஜெகதீஷ் இருந்தா அவனையும் கூப்பிடு” என்றார். அங்கை வந்து சொல்ல, இவர்கள் பதட்டமாய் உள்ளே நுழைய, இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, மனோ, வரப்ரசாத் எல்லாரும் என்னவோ என்று பதறி உள்ளே போனார்கள்.

“என்னாச்சு மாமா?” என்று மனோ பதற

“டாக்டரைக் கூப்பிடவா மாமா?” என்றான் வரப்ரசாத்.

“இல்லை, ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு தான் மச்சானைக் கூப்பிட்டேன்” என்று சொல்ல சூர்யா உடனே

“சரி நாங்க வெளியே இருக்கோம்” என்றவர் மகனைப் பார்க்க, உதயமூர்த்தி உடனே

“நீங்களும் இருங்க மாப்பிள்ளை. ரகசியமெல்லாம் இல்லை, நல்ல விஷயம் தான்” என்றார். அவர் என்ன சொல்வாரோ என்று எல்லாரும் பார்க்க, அவரோ

“எனக்கு இப்படி ஆகும்னு நான் நினைச்சே பார்க்கல, நல்லாயிருக்கும்போதே கல்கிக்கு ஒரு நல்லதைப் பண்ணிடனும்னு மனசுக்குத் தோணுது” என்றதும் அங்கைக்குக் கணவரின் எண்ணம் புரிந்தாலும் அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் மேல் அவருக்கு நம்பிக்கை இல்லை. மகளின் எதிர்காலம் அல்லவா?

“உங்களுக்கு ஒன்னுமாகாது, நீங்க நல்லாயிடுவீங்க. அவ படிச்சு முடிக்கட்டும். அவசரத்துல எதையும் யோசிக்காதீங்க” என்று தன்மையாகவே சொன்னார் அங்கையற்கண்ணி.

சில நாட்களாய் இந்த யோசனை உதயமூர்த்தியின் உள்ளே ஓடிக்கொண்டே தான் இருந்தது. அதிலும் ஜெகதீஷ் அவரிடம் வந்து ஒரு நாள்

“மாமா, எப்படியும் கல்கியை யாருக்காச்சும் கட்டிக் கொடுப்பீங்க. அது ஏன் நானா இருக்கக் கூடாது?” என்று கேட்டிருந்தான். கல்கி மறுத்திருக்க, எப்படியும் அவள் வீட்டில் சொல்பவனைத் தான் திருமணம் செய்வாள் என்று யோசித்து உதயமூர்த்தியிடமே பேசியிருக்க, அப்போது அவரும்

“அவ படிச்சி முடிக்கட்டும் ஜெகா. பார்ப்போம்” என்று சொல்லியிருந்தார். இப்போது உடல் நிலை குன்றிய நிலையில் பயம் மட்டுமே ப்ரதானமாய் இருக்க, ஜெகதீஷ் தான் கல்கிக்கு நல்ல ஜோடியாக அவருக்குத் தெரிந்தான்.

சின்ன வயதில் இருந்து கூடவே பழகியவன், கல்கி கோபப்பட்டாலும் அவன் புரிந்து நடப்பான். அவர் பார்த்து வளர்ந்தவன் வேறு.

எல்லாரையும் பார்த்தவர் “கல்கிக்கு ஜெகதீஷைக் கல்யாணம் செஞ்சுக் கொடுக்க உங்களுக்கு சம்மதமா மச்சான்?” என்று ஜெயராமனிடம் கேட்க, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் அதிர்ச்சி. அங்கே மகிழ்ச்சி அடைந்தவன் ஜெகதீஷ் மட்டுமே.

அப்பா பேசும் முன் அவனே “எனக்கு சம்மதம் மாமா” என்று சொல்ல, வரப்ரசாத் கல்கியைப் பார்க்க, அவளோ அதிர்ச்சியில் பேச்சு வராமல் இருந்தாள்.

சூர்யாவோ மகனின் முகத்தைப் பார்க்க, அவன் கோபத்தை அடக்கிக் கொண்டு இருந்தான். மனோவுக்கும் அஞ்சனா இவர்கள் காதல் விவகாரம் சொல்லி இருக்க, அவனுமே வருத்தமாய்ப் பார்த்தான். இருந்தும் இப்போது தான் பேச போய் உதயமூர்த்திக்கு எதாவது ஆகிவிட்டால் என்ற பயம் அவனிடம்.

கல்கி தன்னை மீட்டெடுத்தவள் “ப்பா, இப்போ ஏன் இதெல்லாம் பேசுறீங்க, நீங்க நல்லாகி வாங்க. நான் படிச்சதும் பார்த்துக்கலாம்” என்று சொல்ல

அவரோ பிடிவாதமாக “உனக்குத் தெரியாது கல்கி, உன்னை நல்ல இடத்துல கல்யாணம் செஞ்சுக் கொடுக்காம எனக்கு நிம்மதியாவே இருக்க முடியாது. அந்த டென்ஷனே என்னை நல்லா இருக்க விடாது. என்னைக்கா இருந்தாலும் செய்யப் போறதுதானே? நீ பார்த்து வளர்ந்த பையன் தானே?” என்று பேசினார். அதற்குள் விசிட்டீங் அவர்ஸ் முடிந்து விட்டது என்று நர்ஸ் வந்து எல்லாரையும் வெளியேற சொன்னார்.

“அப்பா, இப்போ வேண்டாம்” என்று கல்கி மீண்டும் மறுக்க

“அப்பா சொன்னா கேட்பதானே? அப்பாவுக்காக ஒத்துக்கோ கல்கி” என்று மகளிடம் கேட்க, கல்கி அமைதியாக வெளியேறினாள். அந்த அமைதியின் அர்த்தம் ஜெகதீஷுக்கு மகிழ்ச்சியாகவும் வரப்ரசாத்திற்குக் கோபமாகவும் மாறியது.

இவ்வளவு தூரம் வந்த பின்னும் இவள் அப்பாவிடம் தன்னைக் காதலிப்பதை சொல்லவில்லை என்ற கோபம். அதனையும் விட முன்பே ஜெகதீஷிடம் இதனை சொல்லியிருந்தால் அவனாவது மறுத்திருப்பானே என்ற எரிச்சல். சிரஞ்சீவி கோபத்துடன் மருத்துவமனை வாசலுக்கு வந்து நிற்க, கல்கி அவன் கோபம் உணர்ந்தாலும் சமாதானம் செய்ய வரவில்லை. அதுவும் சேர்ந்து இன்னும் எரிமலையாக்கியது சிரஞ்சீவியை.

அவன் நிலா தூரம் சென்ற உணர்வு!!

✅ End of Episode 36
How did you feel about this episode?
❤️ 6 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Kavi Natarajan Reader 2 weeks ago

😍😍😍😍😍😍😍

❤️ 2 more...
Srichitra Reader 2 weeks ago

Nice 

❤️ 1 more...
Sathya Velusamy Reader 2 weeks ago

❤️

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top