Episode 21

சிரஞ்சீவி வரப்ரசாத் வழக்கு விஷயமாக கமிஷனரைப் பார்க்க சென்றிருந்தான். அவருடன் பேசி முடித்து வெளியே வருகையில் பரத்வாஜிடமிருந்து அவனுக்குப் போன் வந்தது.

“எஸ் பரத்”

“ஸார், கல்கி போன் பண்ணியிருந்தாங்க” என்று பரத் சொல்ல, வரப்ரசாத்திற்கு அதிர்ச்சி. கல்கி ஏன் இவனுக்குப் போன் செய்திருக்கிறாள் என்று யோசனைப் போனாலும் பரத்வாஜே பேசட்டும் என்று இருக்க,

“ஏதோ எமெர்ஜன்சி, என்னை உங்க ஏரியா ஸ்டெஷன் வரமுடியுமா கேட்டாங்க. அங்க இருக்காங்களாம் அவங்க” என்றுவிட

எமெர்ஜன்சி என்ற வார்த்தையில் உடனே தன் காரைக் கிளப்பினான்.

“ஸார், நான் போகவா?” என்று அவனிடம் அனுமதி கேட்க

“இல்லை பரத்! ஐ அம் ஆன் தி வே. நான் பார்த்துக்கிறேன். என்ன விஷயம் சொன்னாளா?” என்றவனின் குரலில் நிச்சயம் கோபமே பிரதானம்!

“இல்லை ஸார்”

“ஒகே, ஐ வில் டேக் கேர். தேங்க்ஸ்” என்று சொன்னவன் காரை ஸ்டேஷனில் கொண்டு போய் நிறுத்தினான்.

அன்று சனிக்கிழமை. காலை பதினொரு மணி இருக்கும். கல்கி அந்த பகுதியில் இருந்த காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தாள்.

கண்களில் அவ்வளவு கோபம், தன்னுணர்வுகளை அடக்கிக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தாள். அப்போது பார்த்து சிரஞ்சீவி சீருடையில் மிடுக்குடன் உள் நுழைய, அவன் வருகையை அங்கிருந்த ஆய்வாளர் எதிர்ப்பார்க்கவில்லை.

“எஸ் ஸார்!” என்று சல்யூட் வைத்தார். அவனின் சீருடையில் இருந்த அஷோக சக்கரம் சொன்னது அவன் எஸ்பி என. அவனோ அவரின் பார்வையைத் தாங்கியவன் கல்கியைப் பார்த்து கனலாய் முறைத்தான். அவளின் அருகே போய்

“அப்படி என்ன ஈகோ உனக்கு? எனக்குப் போன் செய்ய முடியாத அளவு?” என்று அவளிடம் குரல் உயர்த்தாமல் சிறீனான். அவளோ அவனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள். கண்களில் கலக்கம், ஆனால் அதை மறைக்க முயற்சி செய்ய, இவனால் அதை உணர முடிந்தது. அவளின் கலக்கத்தை களைய நினைத்தவன்

“எதுனாலும் நான் பார்த்துக்கிறேன் கல்கி! ஐ ட்ர்ஸ்ட் யூ. பயப்படாத” என்றான்.

கல்கியைப் பார்த்து அவன் என்ன ஏதென்று விசாரிக்காமலே நான் உன்னை நம்புகிறேன் என்று சொன்னது அவளின் உள்ளத்தில் ஒரு ஒப்பற்ற நிம்மதியை தந்திருக்க, கண்களும் அதனை பிரதிபலித்தது.

ஆனால் அவள் விழிகளில் கலக்கத்தையும் மீறிய ஒரு உணர்வு! ரௌத்திரம்!!

சிரஞ்சீவி பயப்படாதே என்று சொல்ல
“நான் ஏன் பயப்படனும்?” என்றாள் நிமிர்வுடன். அது அந்த காவல்துறை ஆய்வாளருக்குத் திமிராய்த் தெரிய

“உங்களுக்குத் தெரிஞ்சவங்களா ஸார்?” என்றார்.

“என்னோட கசின்” என்றவன்

“எதுக்கு ஒரு காலேஜ் ஸ்டூடண்டை ஸ்டேஷன் வரைக்கும் கூப்பிட்டு இருக்கீங்க?”

“இல்ல ஸார், இவங்க மேல ஒரு கம்ப்ளெய்ண்ட். ஜஸ்ட் ஒரு எங்கொயரி அதான். சின்னப்பொண்ணுன்றதால வீட்ல கூப்பிட்டுத்தான் வர சொன்னோம், கான்ஸ்டபிள் சரளா கூட இருக்காங்க” என்றார் உடனே சிரஞ்சீவியின் பார்வை உணர்ந்து.

“என்ன எங்கொயரி? வாட்ஸ் தி கம்ப்ளெய்ண்ட்?” என்று வரப்ரசாத் அக்மார்க் அதிகாரக் குரலில் கேட்க

“உட்காருங்க ஸார்” என்று இன்ஸ்பெக்டர் கோபி சொல்ல தலையசைத்து மறுத்தவன்

“ஐ நீட் தி ஆன்ஸர், சொல்லுங்க” என்றான் கொஞ்சம் குரல் உயர்த்தி.

உடனே இன்ஸ்பெக்டரும்
“ஸார், இந்த பொண்ணு டிரைவிங் ஸ்கூல் மேனேஜரை கத்தியால கிழிச்சிருக்கு. ஒழுங்கா டிரைவ் பண்ணாம ரேஷ் ட்ரைவ் பண்ணி காரை மரத்துல மோதியிருக்கு, அவர் அதைக் கண்டிச்சதுக்காக இப்படி பண்ணியிருக்கு” என்றார்.

அவன் கல்கியின் முகத்தை “என்னாச்சு?” என்பது போல் பார்க்க

“அவன் எங்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணினான், அதான் நான் கட்டர் பிளேட் வச்சு அவனைக் கிழிச்சேன். கத்தி இருந்தா குத்தியே இருப்பேன்” என்றாள் இன்னும் மிச்சமிருந்த கோபத்துடன்.

“உனக்கு லேடிதானே சொல்லித்தராங்க சொன்ன?” என்று வரப்ரசாத் பார்க்க

“இல்லை, இன்னிக்கு எனக்கு சொல்லித்தர மேம் லீவ். அதனால் அந்த ஆள் கூட வந்தான்” என்றாள் கல்கி.

“அவங்க லீவ்னா, நீ வீட்டுக்கு வர வேண்டியதுதானே?” என்ற சிரஞ்சீவியின் குரலில் அடக்கப்பட்ட கோபம்.

“அந்த ஆள் ஏன்மா ஒரு நாள் வேஸ்ட் பண்ற? முடிச்சிட்டு சீக்கிரம் லைசன்ஸ் வாங்கிடலாம் சொன்னான். அதான் போனேன்” என்றதும் கல்கியை விட்டு பார்வையை இன்ஸ்பெக்டர் கோபி பக்கம் திருப்பினான் சிரஞ்சீவி வரப்ரசாத்.

“கேட்டீங்க தானே? இப்போ யார் மேல தப்பு தெரிஞ்சதா? டிரைவிங் கத்துக்க போனா ஆக்ஸீடெண்ட் ஆகறது நார்மல். அதுக்குப் போய் யாராச்சும் இப்படி ரியாக்ட் செய்வாங்களான்னு யோசிக்க மாட்டீங்களா ஸார்?” என்றவன்

“எந்த ஹாஸ்பிட்டல்ல அவன் அட்மிட் ஆகியிருக்கான்?” என்று விசாரிக்க கோபி விவரம் சொல்லவும்

“நான் ஹாஸ்பிட்டல் போறேன். நீங்களும் வாங்க” என்றவன் கல்கியுடன் புறப்பட்டான். இருவருமாக காரில் செல்ல பேச்சே இல்லை.

கல்கியாக எதாவது சொன்னால்தானே இவனுக்குத் தெரியும். அவளோ அவள் அகசிந்தனைக்குள் அகப்பட்டு அமைதியாய் வர, சிரஞ்சீவி பொறுக்கமாட்டாமல்

“உனக்கு ஒரு ப்ராப்ளம்னா என்னைக் கூப்பிட மாட்டியா?” என்றான் அதட்டலாக. தான் என்றோ சொன்ன வார்த்தைக்காக தன்னை தள்ளி வைப்பாளா இவள் என்ற எண்ணம். அப்படித்தான் நினைத்துக்கொண்டான். அவளோ அவனை முறைத்துப் பார்த்தாள். கருவிழிகளில் குற்றச்சாட்டு!

“இப்படி பார்த்தா நீ செஞ்சது தப்பில்லை ஆகிடாது. இது நடந்தப்பவே என்னைக் கூப்பிட்டிருக்கனும் கல்கி நீ!” என்றான்.

அது என்னவோ அவள் தன்னை தேடாமல் இருந்ததை ஏற்கவே இல்லை அவன் மனம். அதனால் வார்த்தைகள் கடுமையான கோபத்தில் வர, கல்கி கொஞ்சமும் அசைந்து கொடுக்கவே இல்லை. பார்வையில் மாற்றமுமில்லை. அந்த பார்வை அவனை ஊடுருவ, காரை மருத்துவமனை நோக்கி ஓட்டிக்கொண்டிருந்தவன் சட்டென ஏதோ தோன்ற,

“கல்கி! எனக்கு கால் பண்ணியிருந்தியா?” என்று கேட்க கல்கி தலையசைக்க, இருந்த அந்த இறுக்கமான சூழலையும் மீறிய இதம் அவனிடம்.

“நான் கமிஷனர் ஆபிஸ்ல இருந்தேன். அதான் உன் கால் பார்க்கல, பரத் கூப்பிடவும் உடனே கிளம்பிட்டேன். போன் செக் செய்யலேது கல்கி, ஐ அம் ஸாரி” என்று சொல்ல கல்கி ஒன்றும் பேசவில்லை. அவளாகவே பேசட்டும் என இவன் அமைதியாய் இருந்தான்.

முதலில் தன்னைத் தான் தேடியிருக்கிறாள் அவள் என்பதே போதுமானதாய் இருக்க, மருத்துவமனைக்குச் சென்றதும் இவளை உள்ளே அழைக்க, அவள் வர மாட்டேன் என்றாள்.

“நீ வா நான் இருக்கேன்ல” என்று அவன் தைரியம் சொல்ல

“நீங்க இல்லைன்னாலும் எனக்கு பயமில்லை, வந்தா அவனை நான் சும்மா விட மாட்டேன். அவனைப் பார்த்தாலே எனக்கு வெறுப்பா வருது, அங்க வந்தா கண்டிப்பா அடிப்பேன்” என்றாள் விழிகள் சிவக்க.

“அடிக்கனும்னா வந்து அடி. நான் எப்போ உன்னை அடிக்கக் கூடாது சொன்னேன்” என்றான் கூலாக.

“நீ எனக்கு அந்த இடத்துலேயே கால் பண்ணியிருக்கலாம் கல்கி! பட் ஓகே நீ போல்டாதான் ஹாண்டில் பண்ணியிருக்க” என்றான். நிச்சயமாய்க் கல்கி தனக்கு எந்த பாதிப்பு வராமல் அவனை திருப்பி அடித்திருக்க அந்த துணிச்சலை மெச்சத்தான் தோன்றியது இவனுக்கு.

“எனக்கு அப்போ என்ன செய்ய தெரியல, காரை ட்ராஃபிக் இல்லாத இடமா ஓட்ட சொன்னார். நானும் மெதுவா போனேன், ஆள் இல்லாத இடத்துல தப்பா பேசினான், பார்வையும் சரியில்லை” சொல்லும்போதே குரல் பிசிறியது. இதுவரை இப்படியான அனுபவங்கள் அவளுக்கு வாய்க்கப்பெறவில்லை. எங்கு போனாலும் அப்பா தாத்தா மாமா என்று யாராவது உடன் வருவார்கள். இல்லையா பங்காளி விட்டு அண்ணன்மார்கள் துணை வருவார்கள். அதனால் கல்கியிடமோ அவள் அக்காவிடமோ யாருமே தவறாய் ஒரு பார்வை கூட பார்த்தது இல்லை.

என்ன இருந்தாலும் இருபதைக் கூட தொடாத சின்னப்பெண் அல்லவா? அவளின் உணர்வுகள் புரிந்தவன்

“புரியுது கல்கி! எக்ஸ்ப்ளைன் பண்ணாத விடும்மா” என்றான் வாஞ்சையாக.

அவன் அப்படி சொல்லிவிட கல்கி நிறுத்திவிட்டாள். கல்கி தைரியமாய் இருந்தாலும் உள்ளே அந்த பயிற்றுனர் நடந்த விதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாள். அவமானம் என்றில்லை! அருவெறுப்பு, அடக்க முடியா கோபம்.! அதனால் கல்கி அப்படியே நிற்க, அவளின் கையைப் பிடித்த சிரஞ்சீவி விசாரித்தபடி அந்த பயிற்றுனர் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

மெத்தையில் படுத்திருந்த அவனைக் காணவுமே கல்கிக்கு அடக்கப்பட்ட கோபம் அணை உடைக்க, கரம் பற்றியிருந்தவனின் கரத்தை இன்னும் அழுத்திப் பற்றினாள்.

போலீஸுடன் கல்கி வர, பின்னாலேயே இன்ஸ்பெக்டர் கோபியும் நிற்க, அந்த பயிற்றுனரோ

“இந்த பொண்ணுதான் ஸார், என்னை கத்தியை வச்சுக் கிழிச்சிட்டா” என்றான் குற்றச்சாட்டாக. அவன் பேச பேச சிரஞ்சீவியின் கோபம் எகிறிக்குதித்த்து. கல்கியின் கரத்தை விட்டவன் அவளே எதிர்ப்பார்க்காத நொடியில் பளாரென்று அந்த ஆளை அடித்துவிட்டான். அதுவும் ஒரு அடி இல்லை!

அவனின் அக்மார்க் ஸ்டைலாக தொடர்ச்சியாக இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தவன்

“நிசம் செப்பு ரா. அவுட் வித் ட்ரூத்” என்றான் கர்ஜனையாக.

“இந்த பொண்ணு ஒழுங்கா டிரைவ் பண்ணலன்னா நீ பேசின? யூ ஸ்கௌன்ட்ரல், செப்பு” என்றவன் அவனைப் பேசக் கூட இடம் கொடுக்காமல் சப்பு சப்பு என்று அடித்துக் கொண்டே இருக்க, அவனின் மனைவி வந்து இடையில் தடுக்கப் பார்க்க

“இவன் என்ன செஞ்சா தெரியுமா உங்களுக்கு? இந்த பொண்ணு கிட்ட மிஸ் பிஹேவ் பண்ணியிருக்கான், பொறுக்கி” என்று கத்தினான். அதில் அந்த பெண் தள்ளி நிற்க, சிரஞ்சீவி விடவில்லை.

கல்கி கத்தியை வைத்து அவனுக்கு ரத்தம் வர வைத்திருக்க, சிரஞ்சீவியோ கரம் கொண்டே கன்னத்தில் அறைந்து ரத்தம் வர வைத்திருந்தான். இவன் இவ்வளவு கோபக்காரனா என்றுதான் கல்கி பார்த்திருந்தாள். உண்மையில் அவன் போலீஸாக நடப்பதை அன்றுதான் கண்கூடாய்க் கண்டாள் கல்கி. அவன் பேசுவான், திட்டுவான் என்று நினைத்திருக்க, அவனின் செயலில் அவள் அகம் குளிர்ந்தது என்னவோ உண்மை!

இப்போதும் அந்த ஆள் பேசியது நினைக்க வெறுப்பாய் வந்தது.

“என்னம்மா நீ? ஊர்ல இருந்து வந்திருக்க, சீக்கிரம் கோ ஆப்ரேட் பண்ணினா உனக்கு ஆர்டிஓ ஆபிஸ்ல சொல்லி லைசென்ஸ் வாங்கித் தரேன்” என்றவனை முறைத்துப் பார்த்த கல்கி

“இப்படி பேசினா செருப்புப் பிஞ்சிடும்” என்றாள் பல்லைக் கடித்து. ஆனாலும் அவன் அடங்காமல் சட்டென காரின் சாவியை எடுத்தவன்

“ரொம்ப பேசுற நீ. அவ்வளவு தைரியமா உனக்கு? இந்த இடத்துல இப்போ யாரும் வர மாட்டாங்க. நானும் நீயும்தான், எங்க நான் என்ன செஞ்சேன்னு வெளியே போய் சொல்லு பார்க்கலாம். என்னைப் பத்தி மூச்சு விட்டா உனக்குத்தான் அசிங்கம். ஒழுங்கா சொல்றதைக் கேளு” என்று அவள் தோள்ப்பற்றி அவன் முகத்தை அருகே கொண்டு வர கல்கிக்கு வந்ததே ஒரு ஆவேசம். எப்போதும் தனது பாதுகாப்புக்கென ஒரு ப்ளேட் கட்டரை அவளது பாண்ட் பாக்கெட்டில் வைத்திருப்பாள். அவன் அருகே வந்த நேரம், பட்டென அதனை எடுத்தவள் சரமாரியாக அவன் கைகளில் கோடு கிழித்தாள்.

அவன் பேச்சை சகிக்க முடியாதவள் அந்த கோபத்தை எல்லாம் அவன் சதையில் காட்டினாள். ரத்தம் வரவும் அவன் எரிச்சலில் கத்தி இவள் கையைப் பிடிக்க முயல, தொட்ட கையை மீண்டும் கீறினாள். அதில் அவன் கையில் இருந்த சாவி கீழே விழ, கதவைத் திறந்து கொண்டு இறங்கியவள் ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்தாள்.

சிரஞ்சீவி அவன் இன்னும் உண்மை பேசாமல் இருப்பது கண்டு கொதித்தவன் அங்கிருந்த ஸ்டூலைத் தூக்கி அவன் மேல் அடிக்க

“சொல்லிடுறேன் ஸார், என் மேலதான் தப்பு. தெரியாம பண்ணிட்டேன்” என்று சொல்ல அந்த ஸ்டூலை அப்படியே அவன் மேல் போட்டான்.

“தெரியாம செய்ய நீ என்ன குழந்தையாடா? உன்னை” என்று பல்லைக் கடிக்க

“மன்னிச்சிடுங்க ஸார்” என்றான் வலிதாங்காமல்.

“மன்னிப்பா?” என்று கேட்டவன் இன்னும் நாலு அறை விட்டான்.

“ஸார், பார்த்து எதாவது ஆகிட்டா ப்ராப்ளம் ஆகிடும்” இன்ஸ்பெக்டர் இவனின் ஆவேசம் கண்டு சொல்ல

“ப்ராப்ளம் ஆனா பார்த்துக்கிறேன் நான். இவனெல்லாம் இருந்து என்ன ஆகப்போகுது” என்றவன் கல்கியைப் பார்த்து

“உனக்குக் கோபம் போறவரை அடி கல்கி! என்ன ஆனாலும் நான் பார்த்துக்கிறேன்” என்றான் கைகளைக் கட்டிக்கொண்டு.

கல்கியோ “என்ன சொன்ன? தைரியம் இருந்தா வெளியே போய் சொல்லுன்னு சொன்ன இல்ல, சொன்னா உனக்குத்தான் டா அசிங்கம், எனக்கில்லை. ச்சீ” என்று முகம் சுழித்தவள்

“இவனைக் கையால அடிக்கிறது கூட எனக்கு அசிங்கம்” என்றவள் சிரஞ்சீவி கீழே போட்டிருந்த ஸ்டூலை எடுத்து அவனின் அடிப்பட்டிருந்த கைகளின் மீதே வேகத்துடன் போட அலறினான் அவன். அந்த மருத்துவமனையின் மெத்தை முழுக்க அங்காங்கே ரத்தக்கறை. அப்படியொரு அலங்கோலத்தில் இருந்தான் அந்த ஆள்.

அவன் அலறவும் வேகமாய் அறையை விட்டு வெளியே வந்த கல்கி அவர்கள் காரின் அருகே போய் நின்றுகொண்டாள். உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தாள் அவள். கல்கி போகவும் சிரஞ்சீவி இன்ஸ்பெக்டரைப் பார்த்து

“இவனை கஸ்டடில வைங்க. நான் அப்புறம் கால் பண்ணி என்ன செய்யணும் சொல்றேன்” என்றவன் கல்கியின் பின்னே போனான்.

அவள் கார் அருகே நிற்க, கார் கதவைத் திறந்தவன்
“வா கல்கி” என்றதும் அவள் ஏறி உட்கார்ந்தாள். அவளின் முகம் பார்த்தே அவளின் மன நிலைப் புரிந்தது. ஆனால் அவனுக்குமே இது போன்ற சூழ் நிலை இதுவரை வந்ததில்லை.

இப்படியான அத்துமீறலின் போது பெண்ணின் மனம் என்ன பாடுபடும் என்று அவனால் உணரமுடியாதே, எப்படி சமாதானம் செய்வது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. இருந்தும் கல்கியின் தைரியம் மீது நம்பிக்கை இருக்க, அவள் இஷ்டம்போல் விட்டவன் ஒன்றும் பேசாது வீட்டிற்கு வண்டியை விட்டான்.

வீடு வரவும் கல்கி அவள் அறைக்குள் நுழைய

“கல்கி! ஆர் யூ ஒகே?” என்றான். வேறென்ன கேட்பது என்று தெரியவில்லை.

“ம்ம், ஓகே” என்று சொல்லி அவள் அறைக்குள் போனாள். சிரஞ்சீவிக்கு இதனை எப்படி கையாள்வது என்று புரியவில்லை. பரத்வாஜிடம் போன் செய்து எல்லாம் சொன்னவன்,

“கல்கியை இதுல இன்வால்வ் செய்ய வேண்டாம் பரத், நீங்க என்ன செய்றீங்க எதாவது கேஸ்ல இவனையும் சேர்த்து உள்ள போடுங்க மினிமம் டென் இயர்ஸ் பனிஷ் பண்ற மாதிரி இருக்கனும்” என்றதும்

பரத்வாஜ் உடனே
“கரெக்ட்தான் ஸார், நான் பார்த்துக்கிறேன். கல்கி சிஸ்டர் ஓகேதானே?” என்று கேட்க

“ஓகேதான் பரத், நான் அப்புறம் கூப்பிடுறேன்” என்றான் தன்முன் வந்து நின்ற கல்கியைப் பார்த்தவாறே.

“ஏன் அவனை வேற கேஸ்ல போடுறேன் சொல்றீங்க? ஹாரஸ்மெண்ட் கேஸ்லயே போடுங்க” என்றாள் கோபமாக.

“லிஸன் கல்கி” என்று சிரஞ்சீவி பேச வர, அவனைப் பேசவிடாமல்

“ஒன்னும் சொல்லாதீங்க, எவ்வளவு திமிரா நான் செய்றதை உன்னால வெளியே சொல்லமுடியாது சொல்றான். அவன் செஞ்ச தப்பை சொன்னாதான் இனிமே இப்படி செய்ய மாட்டான்” என்றாள் ஆத்திரம் தீராமல். கல்கியின் பேச்சைத் தலையசைத்து மறுத்தவன்

“முதல்ல உட்கார் கல்கி” என்றான். அவள் அசையாமல் நிற்க, அவளின் கையை இழுத்து தன்னருகே சோஃபாவில் உட்கார வைத்தவன்

“இங்க பார் கல்கி, நீ நிஜமா ரொம்பவே தைரியமா இந்த சிட்டிவேஷனை ஹாண்டில் பண்ணியிருக்க. ஐ அக்ரீ டோட்டலி வித் யூ, உன்னோட பாதுகாப்புக்கு நைஃப் வச்சிருந்தது எல்லாமே குட்! பட் இப்போ கேஸ்னு நம்ம போனா பை சான்ஸ் மீடியாவுக்கு நீயுஸ் லிக் ஆச்சுன்னா உங்க வீட்ல விஷயம் தெரியும். பரவாயில்லையா உனக்கு? நீ இங்க படிக்க வந்திருக்க, இது எதிர்பாராம நடந்து போச்சு. இனிமே நடக்கறது நான் பார்த்துக்கிறேன். நீ உன்னோட படிப்புல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணு” என்றான்.

“சில முடிவுகள் வேகத்துல எடுக்கலாம். ஆனா கோபத்துல எடுக்கக் கூடாது. புரியும் நினைக்கிறேன்” என்றதும் கல்கி தலையசைத்து விட்டு அமைதியாய் போனாள்.

அன்று வசந்தி அக்கா விடுமுறை என்பதால், மதிய உணவை ஆர்டர் செய்தான். உணவு வரவும் கல்கியை அழைத்தான். கல்கியால் உணவை உண்ண முடியவில்லை. காலையிலிருந்து அவள் ஒன்றும் சாப்பிடவில்லையே. என்ன என்னவோ எதிர்ப்பாராமல் நடந்திருக்க, உள்ளத்தோடு சேர்த்து உடலுடம் சோர்ந்து போனது.

அவள் உண்ண முடியாமல் கஷ்டப்படுவதைப் பார்த்த சிரஞ்சீவி
“என்ன கல்கி பிடிக்கலையா உனக்கு?” என்று கேட்க

“இல்லை, சாப்பிட முடியல” என்றாள்.

“நீ காலையில கூட சாப்பிடலதானே? கொஞ்சமா சாப்பிடும்மா” என்றான். அவன் அத்தனை பரிவாய்ப் பேச கல்கிக்குக் கண்கள் கலங்கின.

அவள் விழிகளில் இருந்து நீர் சொட்ட பதறிப்போனான் வரப்ரசாத்.

“கல்கி! ஏன்ட்டிம்மா நுவ்வு? ஸ்ட்ராங் கேர்ள் டா நீ” என்று சொன்னவன்

“மெதுவா சாப்பிடு கல்கி, காலையில ஒன்னும் சாப்பிடாம இருந்ததால ஒரு மாதிரி இருக்கும்” என்று பொறுமையாக சொல்ல, கல்கி அழுகையைக் கட்டுப்படுத்தி மெதுவாக உண்ண, அதுவரை கூடவே இருந்தான் வரப்ரசாத். ஒருவழியாக இருவரும் உண்டு முடிக்க, கல்கி மீண்டும் அறைக்குள் நுழையப்போக,

“கல்கி இங்க வா, டீவி பார்க்கலாம்” என்று அழைத்து அவளை ஹாலில் உட்கார சொன்னான். கல்கியோ

“இல்லை, நான் தூங்கப் போறேன்” என்று சொல்ல சரியென்பதாக சிரஞ்சீவியும் அவள் இஷ்டப்படி விட்டுவிட்டான்.

✅ End of Episode 21
How did you feel about this episode?
❤️ 5 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Kavi Natarajan Reader 4 weeks ago

💞💞💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Srichitra Reader 4 weeks ago

Nice 

❤️ 1 more...
Sathya Velusamy Reader 3 weeks ago

கல்கி செம bold ....

இந்த கல்கி எப்பவுமே என்னை admire பண்ணறா....
எவ்வளவு முறை படித்தாலும் அடுத்து அடுத்துனு ஆர்வத்தோடயே படிக்க வைக்கிற எழுத்து பவி பொண்ணே
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top