Episode 28

கல்கி இரண்டாம் ஆண்டில் இருந்தாள். கல்லூரி தொடங்கி ஒரு மாதம் ஆகியிருந்தது. சென்ற செமெஸ்டரிலும் அவள்தான் முதல் மாணவி. இந்த ஓராண்டில் மாதம் மாதம் உதயமூர்த்தி வந்து மகளைப் பார்த்துவிடுவார். தையல் நாயகி கூட இரு முறை வந்துவிட்டார்.

சிரஞ்சீவியின் காதல் எல்லைக் கடக்காமல் மட்டுமல்லாது சொல்லைக் கடக்காத காதலாகவும் இருந்தது! வார்த்தைகளில் கூட கவனமாய்த்தான் பேசினான்.

அகமெல்லாம் கல்கிக்கான அன்பு அருவியென பொழிந்தாலும் அச்சமும் இருந்தது. ஒருவேளை அவளுக்கும் தன்னைப் போல் ப்ரியம் இல்லையென்றால் என்ற பயம், அப்படி இல்லாமல் போனால் என்று நினைக்க கூட முடியவில்லை. ஒன்றின் மீது உண்மையான ப்ரியம் வைத்தால் ப்ரபஞ்சமே அதற்காக உதவி செய்யும் என்ற வரிகளுக்கு ஏற்ப தன் மனதை திடப்படுத்தினான்.

காதல் என்ற சொல்தான் இல்லை. மற்றபடி செயலில்களில் அவளின் மீதான அன்பு வெளிப்பட்டுவிடும், அவளின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றித்தருபவன் தேவையென்றால் கண்டிப்புடனும் நடப்பான்.

காதலுக்கு மரியாதை செய்தான் என்பதை விட மரியாதையாய்க் காதல் செய்தான்!

கல்கிக்கு அவன் மீதான பாசம் நித்தமும் பெருகிக் கொண்டே போனது. அவளின் கனவுகளின் நாயகனாய்! கற்பனையின் நிஜமாய் இருந்தான் வரப்ரசாத்.

அவன் சொல் மீது மரியாதை உண்டு! செய்கை மீது ரசனை உண்டு! மொத்தத்தில் அவன் மீது ஈர்ப்பு உண்டு!

ஆனால் அந்த ப்ரியத்தின் வகைதான் வஞ்சிக்குத் தெரியவில்லை. பிரிய நேரிடும்போதுதான் ப்ரியம் உணர்வாளோ என்னவோ?

வரப்ரசாத் எதாவது சொன்னால் எதிர்த்துப் பேசாமல் கல்கி கேட்டுக்கொள்ளமாட்டாள். அவனுக்கும் காதல் இருந்தாலும் கண்டிப்புடனே அவளிடம் நடப்பான்.

அந்த வாரம் கல்கிக்கு இண்டர்னெல்ஸ் இருக்க, ஹாலில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தாள். சிரஞ்சீவியிடமிருந்து அப்போது போன் வர

“சொல்லுங்க மிஸ்டர். காரம்” என்றாள்.

“கல்கி! என்னோட மாமா ஒருத்தவங்க ஃபேமிலியோட நம்ம வீட்டுக்கு வராங்க. கொஞ்சம் டீ மட்டும் போட்டு வைக்கிறியா? நான் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு டென் மினிட்ஸ்ல வீட்டுக்கு வந்துடுறேன்’ என்று சொல்லவும்

“டீ தானே பண்ணிடுறேன்” என்று சொன்னவள் அவன் சொன்னது போல் தேனீர் கலந்து முடிக்க, சிரஞ்சீவி வந்தவன் சிரூடையை மாற்றிவிட்டு வர, அந்த மாமா அவர் மனைவி மகளுடன் வீட்டிற்கு வந்துவிட அவர்களை வரவேற்றவன் கல்கியை அறிமுகம் செய்தான். அவர்களுக்குத் தமிழ் சுத்தமாய்த் தெரியாது என்பதால் இவனே எல்லாம் பேசியவன் கல்கியிடம்

“உனக்கு எக்ஸாம் இருக்குல போய் படி” என்று சொன்னவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.

அதுதான் கல்கியை உறுத்தியது! அவ்வளவு இயல்பாய் சரளமாய் அவர்களுடன் தெலுங்கில் அவன் உரையாட கல்கிக்குக் கோபம் வந்தது. அவளுடன் அவன் இப்படி பேச மாட்டானே. அவள் சொல்வதைக் கேட்டபடி அமைதியாக இருப்பான்.

அவனின் சொந்தம் என்றதும் எப்படி சிரிக்க சிரிக்க வாய் ஓயாமல் பேசுகிறான் என்று எரிச்சல் வந்தது. யாரிடமோ அவன் பேசிவிட்டு போகட்டும் என்று நினைக்க முடியவில்லை. அஞ்சனாவிடம் வேறு யாரும் நெருக்கம் காட்டி அக்கா என்று பேசினால் கூட கல்கிக்குப் பொறுக்காது. ஜெகதீஷைக் கூட

“அத்தைப் பசங்க முக்கியமா இல்லை உன் மாமா பசங்க முக்கியமா?” என்று கேட்டு வம்பிழுப்பாள்.

அதனால் யமுனாவிற்கு அழைத்தவள் “உங்க ப்ரசாத் ரொம்ப மோசம்” என்று ஆரம்பித்து

“அவர் சொந்தங்காரங்கன்னதும் உங்க பையன் நல்லா பேசுறார். ஒருவருஷத்துல இவ்வளவு நேரம் எங்கிட்ட கூட பேசினதில்ல” என்று படபடவென பொரிந்து தள்ளியவள்

“எப்படித்த நீங்க இத்தனை வருஷம் சமாளிச்சீங்க? எனக்கு அவங்க பேசினது ஒன்னுமே புரியல தெரியுமா?” என்றாள் கல்கி.

“நான் ஏன் அவங்க பேசுறதைக் கேட்க போறேன். உங்க மாமா முகத்தைப் பார்த்தாலே அவர் பேசுறது எனக்குப் புரியும்” என்றார் யமுனா.

“அடடே! ஓவர் லவ்ஸூ போங்க” என்றவள்

“ஏன் அத்த? மாமா சொந்தக்காரங்களை எல்லாம் பார்க்கும்போது எங்களை எல்லாம் நினைப்பீங்களா நீங்க?” என்று கேட்டாள் கல்கி. யமுனாவுடன் கல்கியின் பேச்சு இயல்பாய் வந்தது. அவர் எதுவும் தவறாக நினைக்க மாட்டார் என்று தெரியும் அதனால் மனதில் உள்ளதை மங்கை கேட்டுவிட

“அது எப்படி நினைக்காம இருக்க முடியும்?”

“அப்போ ஏன் எங்களைத் தேடி வரவே இல்லை?”

“எப்படி கல்கி வர சொல்ற? எங்கப்பா வீட்ல வேலை செய்ற ஆளுங்க கூட அவரோட ஜாதிக்காரங்களா இருக்கனும்னு நினைக்கிறவர். அவர்கிட்ட வேற மொழி பேசுற ஒருத்தரைக் காதலிக்கிறேன்னு சொல்ற தைரியம் எனக்கில்லை. அதனால நாங்களே கல்யாணம் செஞ்சுக்கிட்டோம், ப்ரசாத் பொறந்தப்போ பேரனைப் பார்த்தாச்சும் மனசு மாறுவார்னு வந்தேன். அவர் எங்களை ஏத்துக்கல, அவங்களும் என்னை ஒதுக்கிட்டாங்க. நானும் விலகிட்டேன்”

“ஆனா இவரோட சொந்தம் பார்க்கிறப்போ மனசுல ஏக்கம் வரும். அதையும் மீறி ஒரு பிடிவாதம் அவங்க உன்னை நினைக்கலதானே? தப்பு செஞ்சா கூட மன்னிக்கலதானே? அப்படின்னு தோணும்” என்ற யமுனா

“இப்போ நீ ஏன் அவங்க பேசுறதைக் கவனிக்கிற? அவனுக்கு தெலுங்கு ரொம்ப நல்லா வரும். ஏதோ அங்க காலேஜ் படிச்சு தமிழ் பேசுறான், இங்க என்னோட மட்டும்தானே பேசுவான். அதனால கூட ரொம்ப பேசி இருப்பான் கல்கி. உனக்கு எக்ஸாம்னு சொன்னதானே படி முதல்ல” என்று கொஞ்சம் அதட்டலாய் சொல்ல

“ஓகே ப்ரோஃபஸர்” என்று சொல்லிவைத்தாலும் அவன் ஏன் என்னிடம் இவ்வளவு பேசவில்லை என்ற கேள்வி அவள் மனதை குடைந்தது. பேசவேண்டும் என்ற ஆவல் பெருகியது. பேசாமல் இருப்பவன் மீது கோபம் கூடியது. அந்த வாரம் முழுக்க இதனை மனதில் வைத்து சரியாக அவனிடம் பேசவில்லை கல்கி. இவளுக்குத் தேர்வு என்பதால் இரவு உணவின் போது கூட அவளுடன் பேசாமல் தாமதாகவே வந்து உண்பான் சிரஞ்சீவி. தேர்வு முடிந்தும் பாவை பாராமுகம் காட்ட சிரஞ்சீவி என்னவென்று விசாரிக்க

“நீங்க உங்க சொந்தக்காரங்க கிட்டதானே சிரிக்க சிரிக்க பேசுவீங்க, நான் பேசினா அமைதியா இருப்பீங்கதானே?” என்றாள் கோபத்துடன்.

கல்கியின் பேச்சில் அவனுக்கு ஆனந்தம் பாதி என்றால் அதிர்ச்சி மீதி. தான் பேசவில்லை என்று அவள் நினைக்கிறாள் என்ற எண்ணம் ஆனந்தம். அவள் பேச்சை அவன் ரசிப்பதை எப்படி சொல்வான்? அதுதானே அவன் அமைதியின் காரணம்.

கல்கி எப்போதும் என் பேச்சை வீட்டில் காது கொடுத்தே கேட்க மாட்டார்கள் என்று சொல்லியிருக்க, இவன் அவள் மொழிகளை விழியகற்றாமல் உள்வாங்கிக் கொண்டிருப்பான், உள்ளத்தினால் ரசித்திருப்பான்.

“உங்கிட்டவும் நல்லாதானே கல்கி பேசுறேன்” என்று சிரஞ்சீவி சமாதானம் செய்ய

“என்ன அவுனு? ஹம்ம் அதானே? அந்த ஆந்திரா மாமா பொண்ணுட்ட மட்டும் செல்லி செல்லின்னு எத்தனை செல்லமா பேசுனீங்க?” என்றதும் அவனுக்கு சிரிப்பு வர, அவளின் பொறாமை உணர்வில் இவனுக்கு காதல் பெருகியது.

“கூகுள் எல்லாம் யூஸ் பண்ண மாட்டியா?” என்று சிரஞ்சீவி தீடீரென கேட்க

“ஏன்?” என்று கல்கி பார்க்க

“செல்லின்னா தங்கச்சி” என்றவன் சிரிப்புடன் அறைக்குள் போக, கல்கியோ தங்கச்சியா? என்று ஆசுவாசம் அடைந்தாலும் தங்கச்சினா கூட என்னை விட முக்கியமா என்று எண்ணியது அவள் மனம்.

அறைவாசலில் நின்று பாவை பாவனைப் பார்த்தவன்

“உன்னையும் வேணும்னா செல்லமா செல்லின்னு சொல்லவா?” என்று கேட்க கல்கிக்கு அதிர்ச்சி. என்னை தங்கை என்பானா இவன் என்ற எரிச்சலில்

“இந்த செல்லி பல்லின்னு எல்லாம் என்னை சொல்ல வேண்டாம். நான் ஒன்னும் உங்க தங்கச்சி இல்லை, மாமா பொண்ணு பெயர் சொல்லியே கூப்பிடுங்க” என்றாள் முறைப்புடன். ஒருவாரம் சென்றபின் கல்கி டீவியில் தெலுங்குப் படம் பார்த்தாள். கையில் ஒரு பேனாவும் பேப்பரும் இருந்தது. அவளைப் பார்த்த சிரஞ்சீவி

“என்ன இந்த சேனல் பார்க்குற? உனக்குப் புரியறதுல வச்சுப் பார்க்க வேண்டியதுதானே கல்கி” என்றவன் ரீமோட்டை எடுக்கப் போக அவனிடமிருந்து அதனைப் பறித்தவள்

“புரியனும்னுதான் பார்க்கிறேன்” என்று டீவியில் கவனமானாள். சிரஞ்சீவியும் கல்கியை சில மாதங்களாய்ப் பார்க்கிறான், அவனுடன் சண்டையிட்டாலும் கூட அவளாகவே பேசுகிறாள். அவனுக்குப் பிடித்த உணவுப் பண்டங்களை அம்மாவிடம் கேட்டு செய்கிறாள்.

கல்கிக்கும் தன் மீது காதலோ என்று தோன்றினாலும் அவளிடம் வாய்விட்டு கேட்க முடியவில்லை. அவளின் படிப்பு முடியட்டும் என்று காத்திருந்தான். இப்போது அவளைப் பார்க்க டீவியில் பேசபேச சப்டைட்டிலைப் படித்து அவள் குறிப்பு எடுக்க,

“அம்மடூ! ஏமிரா இதி? நோட்ஸ் எடுக்கிறியா நீ?” என்று சிரித்துவிட்டு

“தெலுங்கு தெரிஞ்சு என்ன செய்யப்போற நீ? உனக்கு அவசியப்படாது” என்றான்.

“எனக்கு அவசியம் தெரிஞ்சுக்கிறேன் உங்களுக்கு என்ன?” என்றாள். யமுனா சொன்ன ‘அவனுக்குத் தெலுங்கு நல்லா தெரியும் அதனால சரளமா பேசுறான்’ என்ற வார்த்தைகள் இப்படி கல்கியைத் தூண்டிவிட்டிருந்தன. அவனுக்கு சரளமாய்த் தமிழ் தெரியாவிட்டால் என்ன? நான் அவன் மொழி கற்கிறேன் என்ற எண்ணம். அப்போதாவது அவன் என்னிடம் நிறையப் பேசுவானா என்ற எதிர்ப்பார்ப்பு.

ஆனால் இந்த எண்ணமெல்லாம் ஏன் எனக்கு என்ற கேள்வியில்லை அவளிடம். அவனைப் பிடித்திருந்தது.! அவனுக்குப் பிடித்ததெல்லாம் பிடித்திருந்தது! அது மட்டுமே அவளுக்கு. கல்கியின் இந்த பரிமாணத்திலும் அவளின் பார்வையிலும் சோஃபாவின் பின் நின்றபடியே குனிந்து முன்னே இருந்தவளின் முகம் பார்த்து

“பேசாமயே ஒருத்தர் மனசைப் புரிஞ்சிக்கறவங்களுக்கு மொழி தேவையில்லை. உனக்கு இது எப்பவுமே அவசியப்படாது கல்கி!” என்று முதல்முறை தன்னவளிடம் காதல் மொழி பேச, பேச்சற்று அவன் விழிகளைப் பார்த்தாள் கல்கி.!

 

‘சொல்லாத காதலை சொல்லிட,
சொல்லி ரசிப்பேன், சொல்லி ரசிப்பேன்,
சொல்லி சொல்லி நெஞ்சுகுள்ளே என்றும் வசிப்பேன்’

✅ End of Episode 28
How did you feel about this episode?
❤️ 6 🔥 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Kavi Natarajan Reader 3 weeks ago

Nice ud ma💞💞💞💞💞

❤️ 1 more...
Srichitra Reader 3 weeks ago

Very nice.

😂 1 more...
maheswari Reader 3 weeks ago

💛💛🧡🧡❤️❤️

❤️ 1 more...
Sathya Velusamy Reader 3 weeks ago

மரியாதையுடன் காதல் செய்தான் கனவுகளின் நாயகன் கற்பனைகளின் நிஜமாய்💕💕💕💕

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top