Episode 31

நால்வருமாக அருகே இருந்த த்ரிபுரனேனி ஹனுமந்தன் வீட்டுக்குச் சென்றனர். கல்கிக்குக் கொஞ்சம் தயக்கமாய் இருந்த்து. புதிதாய் அத்தையின் உறவினர்களைப் பார்க்க போகிறோமே, மொழியும் புரியாதே என்று யோசிக்க யமுனா அவளின் முகத்தைப் பார்த்தவர்

“சுபாஷினிக்கா ரொம்ப நல்ல டைப் கல்கி. சூர்யாவோட அப்பாவுக்கு ஒரு தமிழ்ப்பொண்ணு மருமகளா வரதுல விருப்பமில்லை, ப்ரசாத் பெரியப்பாவும் பெரியம்மாவும் பேசி சமாதானம் செஞ்சாங்க. இங்க நான் ரொம்ப நாள் இருந்ததில்லை. எப்பவும் அவரோடதான் இருப்பேன், அவர் கூட இல்லாதப்ப எல்லாம் சுபா அக்காதான் எனக்கு சப்போர்ட். அவங்களுக்குக் கொஞ்சம் தமிழ் தெரியும், எனக்குத் தெலுங்கு சொல்லிக் கொடுத்து அவங்க தமிழ் கத்துக்கிட்டாங்க” என்று பேசியபடி வீட்டை அடைந்தனர்.

சூர்யாவின் பெரியப்பா ஹனுமந்தனும் பெரியம்மா சுபாஷினியும் கல்கியை வேற்றாளாக நினைக்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்த தமிழில் அவளிடம் நலம்விசாரிக்க, கல்கியும் புன்னகையுடன் பதில் சொன்னாள். மதிய உணவின் போது கல்கியும் சிரஞ்சீவியும் அருகருகே உட்கார்ந்தனர். அதுவரைக்கும் யமுனாவுடனே சுற்றினாள். கல்கியின் பக்கம் நெய்க்கிண்ணத்தை வரப்ரசாத் நகர்த்தி வைக்க

“எனக்கு நெய்யெல்லாம் வேண்டாம். நானும் காரம் சாப்பிடுவேன்” என்று கல்கி சொல்ல, சொன்னால் இவள் கேட்கமாட்டாள் என்று தெரிந்தவன் அமைதியாக சாப்பிட

“நல்லா சாப்பிடும்மா” என்று சுபாஷினி கல்கியை நன்றாகவே கவனித்தவர் எல்லாம் அதிகமாய்ப் பரிமாறினார். ஒன்றிரண்டு வாய் உணவு உள்ளே இறங்கிய பின் தான் காரம் உறைத்தது. அந்த காரத்தால் கண்கள் கலங்கிட, நாக்கெல்லாம் எரிந்தது. தண்ணீரை எடுத்து பருகினாள். காரம் போகவே இல்லை, மேலும் மேலும் தண்ணீர் குடிக்க

“சாப்பிட்டு குடி பாப்பா” என்று சுபாஷினி சொல்ல

யமுனா கல்கியைப் பார்த்தவர் “காரமா இருக்கா கல்கி?” என்று கேட்டார். அவள் தலையசைக்க ஹனுமந்தன் பெருமையாய்

“குண்டூர் மிர்ச்சி கி காம்படீஷன் வேற ஏம் லேதம்மா” என்றார். கல்கியைப் பார்த்த வரப்ரசாத்

“குண்டூர் மிளகாய்க்குப் போட்டியே இல்லைன்னு சொல்றார் பெத்த நானா. என்ன கல்கி காரம் கம்மியா இருக்கா?” என்றான் கிண்டலாக.

“நெய் போட்டுக்கோ பாப்பா” சூர்யா சொல்ல

“நானா! கல்கிக்குக் காரம்னா ரொம்ப இஷ்டம்” என்றான்.

மகனின் கிண்டல் புரிந்த யமுனா “டீஸ் பண்ணாத ப்ரசாத். கல்கிம்மா, இங்க நிறைய வகையான மிளகாய் போடுவாங்க எக்ஸ்போர்ட் செய்றதுக்கு. இது நம்ம வயல்ல உள்ளது, பயங்கர காரமா இருக்கும். நீ நெய் போட்டுக்கோ” என்றார்.

சுபாஷினியும் “பெருகு திஸுக்கோ பாப்பா” என்று தயிரை கல்கியின் முன் வைத்தார்.

“பப்பும் புலுஸும் நெய்ப் போட்டு சாப்பிட்டா நல்லாயிருக்கும் பாப்பா, டேஸ்ட் பண்ணு” சூர்யா சொல்ல காரம் குறைந்த அதனை உண்ட பின்தான் கல்கிக்கு நன்றாய் இருந்தது.

எல்லாரும் உண்டு முடிக்கவும் அடுத்த நாள் அதிகாலையே கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதால் மாலையே விஜயவாடா போகிறோம் என்று சொல்ல, சுபாஷினி யமுனாவிற்கும் சூர்யாவிற்கும் வாங்கி வைத்திருந்த புதுத் துணிகளுடன் மல்லிகைப் பூவும் குங்குமமும் வைத்துக் கொடுத்தார். சூர்யாவும் யமுனாவும் அவர்கள் இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினர். அவர்களுக்குப் பின் சிரஞ்சீவி விழ, அடுத்து கல்கியும் ஆசிர்வாதம் வாங்க அவளுக்கும் ஒரு புதுப்புடவை வைத்துக் கொடுத்தார்.

பொழுது சாயும் முன் கல்கியை அவர்களின் சித்தப்பாவின் தோட்டம் அழைத்துப் போன சிரஞ்சீவி அவள் இஷ்டம்போல் படம் பிடித்து ஊரை சுற்றிக் காட்டி அழைத்துவந்தான். ஆறு மணி போல் காரில் விஜயவாடாவுக்குப் பயணப்பட்டனர்.

விஜயவாடா விஜயத்தின் நகரம்! விஜயனின் நகரம் என்றும் சொல்லலாம். பாண்டவனான அர்ஜுனன் இந்திரகீல மலையில் இருந்து தவம் செய்து சிவப்பெருமானிடம் பசுபாஸ்திரம் பெற்ற இடமாக விஜயவாடா கருதப்படுகிறது.

அந்த மெல்லொளிப் பொழுதில் அடிவானத்தில் ஆதவன் அரும்பத் தொடங்கிய நேரத்தில் நதியின் ஈரக்காற்று மோத காரில் பயணம் செய்தாள் கல்கி. அதிகாலை தரிசனம் என்பதால் வீட்டில் இருந்து ஐந்து மணிக்கெல்லாம் குடும்பமாய்க் கிளம்பிவிட்டனர். அவர்கள் வீட்டில் இருந்து பத்து நிமிடம் பயணம்தான்.

ஆனால் அதிகாலை ஈரம் நெஞ்சில் சாரல் வீசியது கல்கிக்கு. காரின் ஜன்னல் இறக்கப்பட்டிருக்க அத்தையின் அருகே பின்னிருக்கையில் உட்கார்ந்திருந்தவள் வெளியே வேடிக்கைப் பார்த்தாள். ப்ரகாஷம் பாரேஜைத் தாண்டி காரை செலுத்தினான் வரப்ரசாத்.

அவன் பக்கம் கல்கி பார்க்கவே இல்லை. பார்த்தால் அதன்பின் அவளால் வேறுப்பக்கம் பார்க்க முடியவில்லை. கோவிலுக்குப் போவதால் கல்கி புடவை உடுத்தியிருந்தாள். வரப்ரசாத்தும் எதாவது சட்டை பேண்ட் அணிந்து வருவான் என்று பார்த்தால் அவனோ அவன் அப்பாவைப் போலவே வேஷ்டி சட்டையில் வந்தான்.

அழகனாய்த் தெரிந்தான் அவள் விழிகளில்!! அதிலிருந்து அவளால் மீளமுடியவில்லை. கல்கியைப் புடவையில் பார்த்த யமுனா

“அழகா இருக்க கல்கி. இப்போதான் உன்னை புடவையில பார்க்கிறேன்” என்று திருஷ்டி எடுத்தார். அதனைப் பார்த்த வரப்ரசாத்

“ம்மா, நானும் கூட வேஷ்டி கட்டிருக்கேன். எனக்கும் எடுக்கலாம்” என்றதும் சிரித்தபடி அவர் மகனின் முகத்தை சுற்றி திருஷ்டி எடுக்க, வரப்ரசாத்தும் அது போலவே செய்தவன்

“எங்கம்மாவும் ரொம்ப அழகு. இதுல இன்னிக்கு உங்க சூர்யா பாவாவோட கண்ணே பட்டிருக்கும்” என்று சொல்ல, எல்லாவற்றையும் கல்கி ரசித்துப் பார்த்திருந்தாள். அவள் பார்த்தவரை அம்மாவிடம் இத்தனை இயல்பாய்ப் பாசம் காட்டும் மகனைப் பார்த்ததே இல்லை.

இந்திரகீலா மலையின் மேல் மகிஷாசுரமர்த்தினியாய் வீற்றிருந்தாள் கனகதுர்கா. விஜயவாடாவின் காவல் தெய்வம்!

மலை மேல் தெய்வம். எதிரே நதி என்று பார்க்கவே அத்தனை லாளிதமான காட்சி. அதுவும் அந்த அதிகாலை நேரத்தில் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. மலை மேல் இருக்கும் அம்மனை தரிசிக்க போகிறோம் என்ற ஆவலில் இருந்தாள் கல்கி.

“இது கிருஷ்ணா ஆறு கல்கி” யமுனா சொல்லவும்

“ஓஹ், இங்கிருந்துதான் தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் தர மாட்டேன் சொல்றாங்களா அத்த” என்றதும் எல்லாரும் சிரித்துவிட மகன் பக்கம் உட்கார்ந்திருந்த சூர்யா

“இங்க இருக்க ஃபார்மர்ஸுக்கும் வேணும்தானே டா கல்கி. நாலு ஸ்டேட்க்கு இந்த கிருஷ்ணா ரிவர் ரொம்ப முக்கியம்” என்றார்.

“இப்ப ரொம்ப முக்கியம்” என்று கடிந்த யமுனா “இந்த அம்மன் சுயம்புடா. தானாவே உருவானவங்க, அந்த காலத்துல தண்ணி போக வழியில்லாம இங்க வறட்சியாம். அப்போ சிவன்கிட்ட வேண்டவும் மலையைக் குடைஞ்சு கிருஷ்ணா தண்ணி போக வழி விட்டாராம். மலையைக் குடைஞ்சதால பெஜ்ஜவாடான்னு ஒரு பெயர் உண்டு. மல்லேஸ்வரர் இங்க இருக்க சிவப்பெருமான் பெயர்”

“நானும் உன் மாமாவும் கல்யாணம் முடிஞ்சு இந்த கனக துர்கா கிட்ட தான் வந்தோம். அதில இருந்து வருஷா வருஷம் இங்க வந்துடுவோம். நவராத்திரின்னா ரொம்ப விஷேஷம் , கிருஷ்ணா நதியில அன்னப்படகுல அம்மன் உலா போவா. நான் ஒரு நாலஞ்சு தரம் பார்த்திருக்கேன், ‘நவுக விஹாரம்’னு பெயர்” யமுனா சொல்லவும் அமைதியாய் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டாள் கல்கி.

“தசரா டைம்ல நீ வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” யமுனா சொல்ல கார் ஓட்டிய சிரஞ்சீவி

“அதுக்கென்ன? அடுத்த வருஷம் தஷராவுக்கு கல்கி வந்துட்டா போச்சு” என்றான். சூர்யா மகனை அர்த்தமாய்ப் பார்க்க அவன் கண்கள் சிரித்தன.

“விஜயவாடாவுக்கு விஜயபுரின்னு ஒரு பெயர் கூட உண்டு. மகிஷாசுரனை அழிச்ச பின்னாடி அம்மன் இந்த இடத்தில் தங்க மழை பொழிய வச்சாங்களாம். அதனால தங்க அரளிப்பூ மாலைதான் கனகதுர்காவுக்கு.” என்றார் சூர்யா. மலையைச் சுற்றி வந்து காரை நிறுத்தினான் வரப்ரசாத். கல்கி புடவையில் இருக்க அவளை ரசித்த மனதைக் கட்டுக்குள் வைத்திருந்தான் சிரஞ்சீவி.

“நடந்தே போயிடலாமா இல்லை லிஃப்ட்ல போகலாமா?” என்று சூர்யா கேட்க

“முகமண்டப தர்ஷனம் பார்க்கணும்ல நானா. இப்போ லிஃப்ட்ல சீக்கிரம் போய்டலாம், வரும்போது படியில இறங்கிடலாம்” என்றான் வரப்ரசாத். ‘ஸ்ரீ துர்க மல்லேஸ்வர ஸ்வாமி வர்ல தேவஸ்தானம்’ அவர்களை வரவேற்றது.

மஞ்சள் பூசிய வதனத்துடன் மங்களரமாய் காட்சி தந்தாள் அம்மன். அத்தனை நிறைவான அழகுடன் நிறைந்திருந்தாள் அந்த தாய். துன்பங்களைப் போக்கிடும் தாய்ப்போல் அத்தனை ஆதூரம் அவள் முகத்தில். அசுரனை அழித்தவள் ஆனாலும் ரௌத்திரமில்லை அவள் முகத்தில். விளக்கொளியில் வருபவருக்கு விடியலாய்க் காட்சித் தந்தாள்.

பொழுது மெல்ல மெல்ல புலர, மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்த அந்த காலைப்பொழுதில் அம்மனைக் காண காண அவளிடம் வேண்டுதல் வைக்க வேண்டுமென்றே தோன்றவில்லை. முகமண்டப தரிசனம் என்பதால் அம்மனை அருகே இருந்து அகம் குளிரக் கண்டார்கள்.

கனக மழை பொழிந்தவள் கனகமாய்க் காட்சித் தந்தாள். திவ்யமாய் தரிசனம் முடிந்து வந்தார்கள். யமுனாவின் மனதில் அமைதி மட்டும். முப்பது வருடங்கள் முன்பு இந்த அம்மன் முன் வந்து நின்றார். இன்றுவரை அவருக்கு ஒரு குறையுமில்லை.

யமுனாவும் சூர்யாவும் அந்த நாள் நினைவில் மெதுவே படியிறங்கினர். மஞ்சளும் குங்குமமுமாய் இருந்தன படிகள் முழுவதும். கல்கியும் யமுனாவுடன் போகப் பார்க்க

“அம்மடூ, நில்லு” என்று தடுத்தான் வரப்ரசாத்.

“ஏன்? எங்கத்தை கூட நான் போனா உங்களுக்குப் பொறாமை தாங்காதே” என்றாள் முணுமுணுப்பாய்.

“பொறாமை இல்லை கல்கி. அவங்க டே இன்னிக்கு, தனியா விடேன் ப்ளீஸ்” என்றதும் தயக்கமாய் இவனுடன் நடந்தாள்.

கல்கி அமைதியாக வரவும் “அம்மா அப்பா கூட இருக்கனும்னு ரொம்ப ஆசைப்படுவாங்க. பட் அப்பாவோட வேலை, அது முடியாது. லவ் மேரேஜ்தான், ஆனா அவங்க ஒன்னா வெளியே போனதெல்லாம் கிடையாது. இப்போ பரவாயில்லை, முன்னாடி அப்பா நக்சல்ஸ் இருந்த ஏரியாவுல இருந்தார். அப்புறம் ராயலசீமா அங்கெல்லாம் ரொம்ப கேங் வார்ஸ் இருக்கும். ஸோ டியுட்டில தான் இருப்பார், ஆனா அம்மா கொஞ்சமும் அதைக் காட்டிக்க மாட்டாங்க. வேலைக்கும் போய்ட்டு என்னையும் பார்த்துப்பாங்க”

“அப்படி ஒரு புரிதல் அவங்களுக்குள்ள. மேரேஜ்ன்றது ஒரு பெண்ணுக்கு மட்டும் ஆண் துணையா இருக்கறது இல்லை கல்கி. ஒரு ஆணுக்கும் பெண் துணை தேவை, எஸ் அப்பாவோட மாரல் சப்போர்ட் அம்மாதான். உன்னை மாதிரி, நோ நோ அவங்களோட தைரியம் உனக்கும் இருக்கு. அம்மா தைரியமா இருந்ததால்தான் அப்பாவால டியுட்டில சரியா இருக்க முடிஞ்சது” என்றான்.

கல்கிக்குப் பேசவே தோன்றவில்லை. அவன் பேச்சைக் கேட்க மட்டுமே அந்த கணம் தோன்றியது. அவன் இப்படியெல்லாம் மனம் திறந்தவன் இல்லையே, அதனால் ரசித்து இருந்தாள்.

“அப்பா கல்யாணம் போது யுபிஎஸ்சி எழுதக் கூட இல்லை. ஆனா அம்மா நம்பி கல்யாணம் பண்ணினாங்க. அப்பாவுக்கு எல்லாவகையிலும் துணையாய் இருந்தாங்க. அம்மா அவங்க பொறந்தவீட்டை விட்டுட்டாங்க, அப்பா அவரோட வீட்டை விடல. வேற ஸ்டேட் பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு வந்தார்னு தாத்தா ஏத்துக்கவே இல்லை. வீட்டை விட்டு விலக்கி வைக்கிறது ஒரு வகைன்னா, வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டு விலக்கி வைக்கிறது ஒரு வகை. அப்பா அம்மாவுக்காக எல்லாமே தாங்கினார்” சொல்லிக் கொண்டே வந்தவன் கல்கியின் வழக்கத்திற்கு மாறான அமைதியில்

“போர் அடிக்கிறேனா?” என்று கேட்கவும் தலையசைத்து மறுத்தவள்

“நீங்க சொல்றதைக் கேட்டுட்டு இருக்கேன்” என்று புன்னகை செய்ய, அவனும் பதிலுக்குப் புன்னகைத்தான். அந்த புன்னகை ஈர்த்தது கல்கியை.

“அதோ ப்ரகாஷம் பேரேஜ். இது கிருஷ்ணா ரிவர். இந்திர கீலா ஹில்ஸ் இருந்து பார்த்தா விஜயவாடாவே தெரியும்” வரப்ரசாத் சுற்றிலும் பார்த்தபடி அவளுக்கு சொல்லிக் கொண்டு வந்தான். முதல்முறையாக அவனுடன் வெளியே வந்து அவன் போலிஸாக இல்லாமல் இயல்பாய்ப் பேசினான். சென்னையில் வெளியே சென்றிருந்தாலும் இப்படி உரையாடல் எல்லாம் நிகழ்ந்ததில்லை.

இளங்காலை ஈரம் கல்கியின் உள்ளும் புறமும். பேசிக்கொண்டே வந்தவன் “பார்த்தியா? நம்ம பின்னாடி வரோம்ன்றதையே மறந்துட்டு இரண்டு பேரும் ஜாலியா பேசிட்டு நடக்கிறதை” என்று வரப்ரசாத் சொல்ல

“அப்படி எல்லாம் இல்லை, உங்க கூடத்தானே வரேன். அதனால விட்டிருக்காங்க”

“ஆஹான்” என்று சிரித்தான். பேசிக்கொண்டே மலையில் இருந்து இறங்கி கார் அருகே சென்றுவிட்டனர். சூர்யாவும் யமுனாவும் வழியில் உறவினர் ஒருவரைப் பார்க்கவும் பேசிக்கொண்டு நின்றனர். வரப்ரசாத் கார் கதவில் சாய்ந்து நின்றான்.

“எங்க உன் குங்குமம், பொட்டு எல்லாம்?” என்று கேட்கவும் கல்கி விழித்தாள்.

“அச்சோ!” என்று தலையில் கைவைத்தவள்

“வியர்த்துச்சுன்னு துடைச்சேன். அழிச்சிட்டேன் போல, கோவில் வந்துட்டு வெறும் நெத்தியோட இருக்க கூடாது. அத்தைட்ட குங்குமம் வாங்குறேன்” என்று முன்னே போனவளை நெருங்கிய வரப்ரசாத்

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “அங்க ஏன் போற? நான் தரேன்” என்று சொல்ல அவள் எதிர்ப்பார்க்காவண்ணம் அவன் நெற்றியோடு அவள் நெற்றியை முட்டினான். வரப்ரசாத்தும் அப்படி செய்ய நினைத்து செய்யவில்லை, ஆனால் சூழலும் காதலும் கண நேரத்தில் அவனைத் தூண்டிவிட்டிருந்தன.

அரை நொடிக்கும் குறைவான செயல்தான்.! ஆனால் கல்கியின் அகம் ஆட்டம் கண்டுவிட்டது. அவன் மீதான விருப்பம் எங்கு தொடங்கியதென தெரியாவிட்டாலும் எங்கு முடியப்போகிறது என்று தெள்ளத்தெளிவாய் அகம் அறிய, அறிவு விழித்துக்கொண்டது.

“அம்மா அப்பா கல்யாணம் முடிஞ்சு இங்கதான் வந்தாங்களாம். ஸோ ஸ்பெஷல் அவங்களுக்கு இந்த கனகதுர்க்காம்மா. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே வந்துட்டோம்”

அவனையும் மீறி அகம் சொல்லிவிட்டான். திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது அன்பும் அதனைக் கொண்ட வாழ்வும். இந்திர கீலா மலையில் வைத்து அவன் காதல் சொல்ல வேண்டும் என்று இருக்கும்போது எதனால் தடுக்க முடியும்?

‘மழை வீழும் இள மாலையோ
இசையில்லா இடைவேளையோ
என்னோடு நீ நடந்தால்
இன்பம் என் உலகு’

✅ End of Episode 31
How did you feel about this episode?
❤️ 7 🔥 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Sathya Velusamy Reader 2 weeks ago

காலையை நானும் கனக துர்க்கை ஆசியோடு தொடங்கின feel ..

❤️ 2 more...
Srichitra Reader 2 weeks ago

Yes.  ஒருமுறை விஜயவாடா  போன போதும்  கனக துர்க்கா  பார்க்க முடியாமல்  போனது எனக்கு இன்று வரை வருத்தம் தான். அதை இக்கதையுடன்  அனுபவிக்கிறேன்.

❤️ 1 more...
Kavi Natarajan Reader 2 weeks ago

Very nice ud ma 💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
maheswari Reader 2 weeks ago

Kanaga durga amma va neril partha feel koduthinga❤️

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top