Episode 42

அன்று இரவு கல்கிக்கு வரப்ரசாத் போன் செய்து,
“அம்மடூ, எப்படி போச்சு இன்னிக்கு, பிடிச்சதா?” என்று கேட்க

“எல்லாம் பிடிச்சது, மருதாணியெல்லாம் நல்லா சிவந்துச்சு தெரியுமா? ஆனா பிடிச்சவர் என்னைப் பார்க்க வரல அதான் பிடிக்கல” என்றாள் கல்கி.

“ஏமிரா நீ? இப்போவெல்லாம் ரிசப்ஷன் எல்லாம் வச்சு, ஏன் அதுக்கு முன்னாடியே பொண்ணும் பையனும் முன்னாடியே பார்த்துக்கிறாங்கதான். ஆனா எனக்கு அப்படி வேண்டாம் டா அம்மடூ, எனக்குப் எங்க கல்ச்சர்படி கல்யாணம் செய்யத்தான் விருப்பம். அட்டுதெர்ரா எடுக்கும்போது உன்னைப் பார்க்கப்போற அந்த நிமிஷத்துகாகத்தான் மூணு மாசமா நான் காத்துட்டு இருக்கேன். எனக்கும் உன்னைப் பார்க்க ஆசை நிறையா இருக்கு, தெரியும்தானே அம்மடூ?” என்று அவன் கேட்க , அவன் ஆசை என்று சொன்னபின் அவளுக்கும் மறுக்கத் தோன்றவில்லை.

நிச்சயத்திற்குக் கூட அவன் வரவில்லை. அதனால் கல்கி ஏக்கம் கொண்டு கேட்டுவிட்டாள்.

“ஓகே ஓகே பாவாகாரு, நானும் அந்த திரை திறக்கும்போதே உங்களைப் பார்த்துக்கிறேன்” என்று கல்கி சொல்ல

“வாட்? பாவா?” என்று சிரஞ்சீவி சிரிப்பது கேட்க கல்கிக்குக் கேட்க

“சுபா அத்தை சொல்லிக்கொடுத்தாங்க” என்றாள்.

“என்னை பாவான்னு சொல்ல நிறையப் பேர் இருக்காங்க. நீ மாமான்னு சொல்லு கல்கி” என்றதும்

“மாமாவா?” என்று அவள் சிரிக்க

“ஏன் சொல்ல மாட்டியா? அப்படி சொல்லத்தான் ஆளில்லை” என்றான்.

“ப்ரசாத் மாமா” என்று கல்கி அழைக்க அகமெங்கிலும் சாரல் அவனுக்கு.

“ஹாப்பிதானே டா?” என்று மீண்டும் சிரஞ்சீவி கேட்க

“ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் நான். உண்மையை சொல்லணும்னா நான் லைஃப்ல என்னை லக்கியா ஃபில் பண்ணினதே இல்லை”

“அம்மடூ? ஏன் ம்மா?” என்று அவன் குரலில் காதல் கொட்டிக் கிடக்க, அவன் வார்த்தையின் வாஞ்சை வஞ்சிக்குப் புரிய, இன்னும் பெருகியது பெருங்காதல் அவன் மீது.

“கஷ்டமா எல்லாம் சொல்லல, பொதுவா சொல்றேன். இரண்டாவது பொண்ணுன்னு ஒரு செகண்டரி ஃபீல்தான் எப்பவும் உணர்ந்திருக்கேன், ஆனா இப்போ அப்படி இல்லை. எத்தனை பேருக்கு லவ் பண்ணினவங்களைக் கல்யாணம் செய்ய முடியுது? அதுவும் எல்லாரும் ஒத்துக்கிட்டு. அப்போ நான் ரொம்ப லக்கிதானே? கனவுல கூட நான் நினைக்காத விஷயம். அத்தையெல்லாம் பாவம்தானே?”

“என்ன அதிசயம்? எங்கம்மா மேல எல்லாம் பாவம் பார்க்கிற?” என்றதும்

“உங்க அம்மாவுக்குப் பாவம் பார்க்கல நான். என்னோட அத்தைக்குப் பார்க்கிறேன், அண்ட் ஃபர்ஸ்ட் எங்கப்பாவோட தங்கச்சி அப்புறம் தான் உங்க அம்மா. அவங்க ஒவ்வொரு விஷயம் சொல்லும்போதும் அவங்க கல்யாணம் இப்படி நடக்கலன்னு ஃபீல் பண்றாங்கன்னு தெரிஞ்சது, அதனாலயே நம்ம கல்யாணத்தை அவ்வளவு ஆசையா நடத்துறாங்க. அப்படி பார்க்கும்போது அத்தையை விட நான் லக்கிதானே?”

“கல்யாணம் விஷயம் வேணும்னா அப்படி இருக்கலாம். பட் என் நானா கிடைக்க என் அம்மா ரொம்ப லக்கி”

“நாளைக்கு நம்ம பசங்களும் இப்படி சொல்வாங்கதானே ப்ரசாத் மாமா?” என்று கல்கி ஆவலாய்க் கேட்க

“ஹாஹா, கண்டிப்பா சொல்லுவாங்க” என்றவன் அவளுடன் பேசியே இரவுக்கு இனிமைக் கூட்டினான்.

எல்லாம் முடிந்து திருமண நாளும் வந்தது. திருமண மண்டபத்திற்குக் கல்கியை அவளின் தாய் மாமன் ஜெயராமனும் அவர் மனைவி மகாலஷ்மியும் அழைத்து செல்ல, கன்யாதானம் முடிந்து ஐயர் மந்திரங்கள் ஓத, அட்டுத்தெரா எனுப்படும் தீரைச்சீலை ஒன்று மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் இடையே தொங்கவிடப்பட்டது.

பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிந்து மணப்பெண்ணாய் மனம் நிறைந்தவனைக் காணும் ஆவலில் இருந்தாள் கல்கி. கல்கியின் அருகே உதயமூர்த்தியும் அங்கையற்கண்ணியும் இருக்க, இந்தப்பக்கம் யமுனாவும் சூர்யாவும் இருந்தனர்.

‘ஜீலக்கர்ரா பெல்லம்’ எனும் சடங்கு அடுத்து நிகழ்ந்தது. வெற்றிலையில் ஜீரகமும் வெல்லமும் கலந்து அதன் மேல் மஞ்சள் குங்குமம் வைத்து இருவரிடமும் கொடுக்கப்பட மெல்ல மெல்ல இருபக்கமும் உறவுகள் பிடித்திருந்த திரை விலகியது. அது விலகும் முன்னே கல்கியின் தலையில் வரப்ரசாத் அந்த வெற்றிலையை வைக்க, கல்கியும் அதனைப் போலவே செய்தாள். கசப்பும் இனிமையும் கலந்த இல்லற வாழ்வில் என்றும் துணையாய் இருப்போம் என்று சொல்லும் சாஸ்திரமது.

எண்ணற்ற நொடிகள் கடந்து வரும் வாழ்வில் சில நொடிகள் எண்ணும்போதெல்லாம் இனிமை மட்டுமே தரும். அப்படியான நொடியாக அது கல்கிக்கும் வரப்ரசாத்திற்கும் அமைந்தது. அந்த அட்டுத்தெரா வழியே ஓரளவு உருவம் தெரிந்தாலும் முழுதாய் முழுமையாய் ஒன்றும் தெரியவில்லை.

திரை முழுமையாக விலக்கப்பட விழிகளில் ஆவல் காதல் எல்லாம் கலந்து இருவரின் பார்வையும் சங்கமிக்க, கல்கிக்கு கண்கள் கலங்கி விட்டது. அதைப் பார்த்த வரப்ரசாத் அவள் தலையில் அழுத்தம் தர தயலின் பார்வை அவன் மேல் பாய, கண்களால் சிரித்து புருவம் உயர்த்தி அவன் என்னவென கேட்க, இவளின் விழிகளும் அவன் விழிகளுடன் இணைந்து சிரித்தது.

அடுத்து மதுபர்க்கம், மணமக்களின் உடைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கல்கி ஆந்திர முறைப்படி வெண்பட்டில் சிவப்பு கரையிட்ட புடவையில் வந்தாள். வரப்ரசாத் அவர்கள் வழக்கப்படி வேஷ்டி அணிந்து வெண்பட்டு சட்டை அணிந்து துண்டை தோளில் தொங்க விட்டிருந்தான்.

இருவரும் மணமகள், மணமகனாய் முழுதாக தயாராகி இருக்க, கல்யாணத்திலகம் இருவர் நெற்றியிலும் நிறைந்து இருந்தது. வரப்ரசாத்தை எப்போதும் டீஷர்ட்டிலும் காக்கியிலும் பார்த்து பழகியிருந்த கல்கிக்கு அவனின் இந்த தோற்றம் அத்தனை பிடித்தது.

ஐயர் மந்திரங்கள் ஓத மற்ற சடங்குகள் நடைப்பெற்று கல்யாணத் திலகத்தில் கீழே சிரஞ்சீவி அவளுக்கு குங்குமம் இட, நின்ற கோலத்தில் மங்கல நாணிட்டு அவர்களின் திருமணம் இனிதே இறைவன் அருளால் நடந்தது. மாங்கல்யம் அணிவித்தவன் கல்கியின் நெற்றியில் செல்லமாய் முட்ட, முதன்முதலாய் அவன் அவ்வாறு செய்த ஞாபகம் இருவரிடமும். சின்னவர்கள் எல்லாம் உற்சாக கூச்சலிட, பெரியவர்களின் மனம் நிறைந்து போனது.

உதயமூர்த்திக்கு அப்படியொரு சந்தோசம். யமுனாவுமே மிகவும் நெகிழ்ந்திருக்க, சூர்யா அவர் தோளில் கையிட்டு அவரின் செல்ல பங்காரத்தின் திருமணம் முடிந்த மகிழ்வினை வெளிப்படுத்தினார். பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி முடிக்க, அடுத்து எதிரெதிரே மணமகளும் மணமகனும் உட்கார வைக்கப்பட்டு இருக்க, இருவரும் ஒருவர் மீது மலர்களும் மஞ்சளும் கலந்து அரிசியினை அட்சதையாய்த் தூவ வேண்டும்.

சிரஞ்சீவி கல்கியை விடவும் உயரமாய் இருக்க, இவளுக்கு எட்டாமல் இருக்க, அவளின் இடைப்பற்றி தன் பக்கம் இழுக்க, கல்கி அவன் செயலை எதிர்ப்பார்க்காமல் போனாலும் அட்சதை தூவ, ஒரே அமர்க்களம்தான்.

எல்லா நிகழ்வும் முடிய, ‘கிரஹ ப்ரவேசம்’ நடைப்பெற்றது. கல்கி சிரஞ்சீவியின் மனைவியாக அவனின் வீட்டில் அடியெடுத்து வைக்க, யமுனா ஆர்த்தி எடுத்து மருமகளை உள்ளே அழைத்தார்.

அவர்கள் முறைப்படி நிலவின் வருகையின் போது இரவின் துவக்கத்தில் திருமணம் நிகழ்ந்திருக்க, நெருங்கிய உறவுகள் மட்டுமே இருந்தனர். கல்கியை ஓய்வெடுக்க யமுனா அனுப்பிவிட, பின்னாலேயே வரப்ரசாத் வர, யமுனா அவனை நிறுத்தினார்.

“ப்ரசாத், பெரியம்மா சொல்லும்போது நீ ருமுக்குப் போகலாம். எங்க ரூமுக்குப் போய் இரு போ” என்று சொல்ல

“ம்மா, ஒரு டூ மினிட்ஸ் பேசிட்டு போறேன்” என்றான் அவன்.

“ஏமி காவாலி ப்ரசாத்?(என்ன வேணும்)” என்று சுபாஷினி வர

“பெத்தம்மா, கல்கி காவாலி” என்று பெர்மிஷன் கேட்க

அவன் கேட்ட விதம் கண்டு சிரித்த சுபாஷினி “பாவம் யமுனா, நீ போ பங்காரம்” என்று அவர் சொல்ல புன்னகையுடன் கல்கி இருந்த அறைக்குப் போக, இன்னும் கல்யாணத் திலகம் நெற்றியில் நிறைந்திருக்க, கல்யாணப்பெண்ணாகவே கல்கி இருந்தாள். இவன் வரவும் அவள் புன்னகையுடன் எழுந்து கொண்டாள்.

“உட்காரு கல்கி” என்று சொல்லி அவள் அருகே உட்கார்ந்தவன் அவளைப் பார்த்து விழியில் நிறைத்து

“என் அம்மடூ அப்படியே ஆந்திரா அம்மாயி ஆகிட்டா” என்று அவளின் திலகத்தை வருடிவிட்டான்.

“ஆக்கிட்டேன் சொல்லுங்க ஆந்திரா மாமா” என்று கல்கி சிரிக்க

“எல்லாம் பிடிச்சிருக்குத் தானே உனக்கு?

“என் ப்ரசாத்துக்கு பிடிச்ச எல்லாமே எனக்கும் பிடிக்கும்” என்றவளை அவனுக்கும் பிடித்தது.

“நம்பவே முடியல, நான் ஒரு தமிழ்ப்பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருக்கேன்னு, அம்மா தமிழா இருந்தாலும் நான் பக்கா தெலுங்குப்பையன் தான். எல்லாம் இந்த கும்பகோணத்துப் பொண்ணு என்னை மாத்திட்டா” என்று அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டான் வரப்ரசாத்.

“அம்மா அப்பா முகத்துல அவ்வளவு சந்தோஷம் கல்கி. மாமாவுக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும். அவர் ஒத்துக்கலன்னா ரொம்ப கஷ்டமா ஆகியிருக்கும்” என்று அவன் உணர்ந்து சொல்ல

“ம்ம்” என்று ஆமோதித்தவள்

“அது என்ன எல்லார் முன்னாடியும் தூக்குறீங்க?” என்று இப்போது கேட்க

“ஏன் அதான் பெர்மிஷன் கொடுத்தாச்சே, இப்ப கூடத் தூக்குவேனே” என்றவன் சொன்னதை நொடியில் செய்ய, கல்கி முயன்று தன்னை நிலைப்படுத்த அவனின் பாதங்களில் அவளை நிற்க வைத்தான்.

“இப்ப சொல்லு அம்மடூ, சந்தோஷமா? டென்ஷன் எல்லாம் போச்சா?” என்று கேட்க

“போச்சு போச்சு, நான் ஒன்னு சொல்லணும்” என்றதும் அவன் ஆவலாய் ஐ லவ் யூ சொல்வாளோ என்று பார்க்க

“நேனு சால சால சந்தோஷங்கா உன்னானு” என்று திணறாமல் திக்காமல் தெலுங்கு மொழியில் சொல்ல, அது தேன்மொழியாய் அவன் காதில் விழ, தன்னவளை தன்னுடன் சேர்த்தணைத்து

“நேனு நின்னு ப்ரேமிஸ்துன்னானு நா ஜீவிதம்” (I love you my life) என்று அவன் காதல் சொல்ல, மொழி முழுமையாக புரியா விடினும் அவன் விழி சொன்ன காதல் அவளுக்கு நன்றாய் விளங்கியது.

“தமிழ்ல சொல்லனுமா?” என்று அவன் கேட்க அவள் வேண்டாம் என்பது போல் தலையசைத்து

“இதெல்லாம் சொல்லாமலே புரியும்” என்றவளின் கல்யாணத் திலகத்தின் மேல் காதலாய் தன் முதல் முத்தம் பதித்தான் த்ரிபுரனேனி சிரஞ்சீவி வரப்ரசாத்.

✅ End of Episode 42
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Kavi Natarajan Reader 7 days ago

💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Srichitra Reader 7 days ago

Very nice.

Mrs Beena loganathan Reader 6 days ago

சொல்லாமலே  புரியும் 

காதல் மொழி....
மொழி முக்கியம் இல்லை
மனம் தான் முக்கியம்.....
மனம் நிறைந்த திருமணம்....
Mrs Beena loganathan Reader 6 days ago

காதல் ......

காதலால் புரிந்த உறவுகள்
காதலே காதலால்
காலம் அனைவரையும் 
கல்யாணத்தில் சேர்த்து
கண்கொள்ளா காட்சி.....
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top