Episode 25

அப்பாவின் பேச்சில் கல்கியின் முகம் வாட அங்கை குறுக்கீட்டார்.

“இரண்டு வருஷம் போகட்டும்ங்க. இப்பவே எதுக்கு இதைப் பேசிக்கிட்டு. சின்னப்பொண்ணுங்க அவ” என்றதும் மகளின் முகம் பார்த்தவருக்கும் ஒருமாதிரியாகிவிட அந்த பேச்சை அத்துடன் விட்டார்.

அப்பாவிடம் திட்டுவாங்கியவளுக்கு மனது ஒரு மாதிரி இருக்க உறக்கம் வராமல் புரண்டாள். இதில் வரப்ரசாத் என்பவன் அவளின் நினைவில் இல்லாமல் போக, அவனுக்கு அப்படி இல்லை.

முடிவிலியாய் தன்னைக் கல்கி ஆட்கொண்டுவிட்டாள் என்பது சிரஞ்சீவிக்குத் தெள்ளத்தெளிவாய்ப் புரிந்தது. நேற்றுப் போல் கலக்கமெல்லாம் இல்லை அவனிடம்!

முழுக்க முழுக்க காதல் மயக்கம் மட்டுமே! கல்கிக்கு மட்டும் தன் மீது விருப்பமிருந்துவிட்டால் வேறென்ன வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டான். அம்மா அப்பாவின் காதல் சின்னமாய் இருந்துவிட்டு காதலிக்கத் தயக்கமென்ன தடையென்ன என்ற நிலை!

இத்தனை நாள் எங்கிருந்தாய்? ஏன் என் வாழ்வில் இல்லை என ஏங்க வைத்தாள் கல்கி. அதே நேரம் ஏன் வந்தாய் என் வாழ்வில் என்ற வதைக்கவும் செய்தாள். பிரிவில் அவள் மீதான ப்ரியம் கூடிப்போனது.

ஆவல் காதல் தேடல் என அத்தனை உணர்வுகளுடன் அச்சமும் சேர்ந்தே இருந்தது. காதல் என்பது இருவரின் சங்கமம் அல்லவா? தான் மட்டும் அவள் நினைவாய் இருக்க, கல்கிக்கு அப்படி இல்லையென்றால் என்று நினைக்கவே அச்சமாய் இருந்தது சிரஞ்சீவிக்கு. அதே நேரம் இது குறித்து அவளிடம் வெளிப்படையாய்ப் பேசவும் மனமில்லை. படிக்கும் பெண்ணிடம் எப்படி காதல் சொல்வது என்ற எண்ணம். இன்றும் அவள் அழைப்பாளா என்று ஏங்கித் தவிக்க, அவள் அழைக்கவே இல்லை என்றதும் அவனுக்கு வருத்தமாகிப்போனது.

“கல்யாணம் இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு தானே டி மாமா பண்ண சொல்றார், என்னைக்கா இருந்தாலும் செய்யத்தானே வேணும். அதுக்கு ஏன் ஃபீலிங்?” என்று ஜெகதீஷ் பேசவும் கல்கிக்குக் கோபம் ஏறியது. வீட்டில் அவளை எப்போதும் திட்டினாலும் நண்பனாய் அவள் தேடுவது ஜெகதீஷைத்தான்.

அதனால் நேற்று அப்பா பேசியதை பொறுக்காமல் அவனிடம் பகிர, அவனோ இன்னும் இரண்டு வருடம் தான் காத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு மேல் தாங்காது என்பதால் அவன் நிலையில் இருந்து பேசினான்.

“படிச்சு முடிச்சா கல்யாணம்தான் செய்யனுமா டா? அப்போ நான் எப்போ வேலைக்குப் போறது. கல்யாணம், குழந்தைனு அப்படியே சைக்கிள் ரீபிட் ஆகனுமா?”

“நீ ரொம்ப யோசிக்கிற டி, ஃப்ரீயா விடு. வேலைக்கு எல்லாம் கல்யாணம் ஆனாலும் போகலாம்” என்று ஜெகதீஷ் எளிதாய் அவளின் உணர்வின் ஆழம் தெரியாமல் வாய்விட, இவனிடம் ஏன் சொன்னோம் என்று நினைத்தாள் கல்கி.

“நான் மேல படிக்கனும்னு இருக்கேன். அதுவும் டெல்லில” என்று கல்கி அவள் ஆசையை சொல்ல, ஜெகதீஷோ அவள் வீட்டினரை அறிந்தவனாக,

“உன்னை மாமா ஒருதடவ சென்னைக்கு படிக்க அனுப்பிட்டார்னு பயங்கரமா கனவு காணாதடி. சென்னைக்குப் போகறதுக்கே அத்தனை அக்கப்போர். இதுல டெல்லி” என்றான் சலிப்பாக. இத்தனை வருடமாய்ப் பார்க்கிறான் தானே? அதனால் அவன் எதார்த்தம் பேசினான்.

அவன் பேச்சைக் கேட்கவும் கல்கிக்கு இன்னும் எரிச்சல் கூடியது. இவனும் அவள் அப்பாவைப் போலவே பேசுகிறானே என்று நினைத்தாள்.

“ஏன் கனவு கண்டா என்னடா தப்பு?” என்று கேட்கும்போதே இன்னொரு அழைப்பு வர, அழைத்தது சிரஞ்சீவி. நேற்று முழுவதும் கல்கியிடம் பேசாமல் இருந்துவிட, இன்று பகலில் அவளிடம் பேசிவிடுவோம் என்று மனது கேட்காமல் அழைத்துவிட்டான். கூடவே கோபமும் இருந்தது, ஊருக்குச் சென்றதும் தன்னை மறந்துவிட்டாளே என்று.

அப்போதுதான் அவன் நினைவே வந்தது. நேற்று வேறு அவனிடம் பேசவில்லையே என்று நினைத்தவள் ஜெகதீஷிடம்

“நான் அப்புறம் பேசுறேன்” என்று கட் செய்தவள் சிரஞ்சீவியின் அழைப்பை ஏற்றாள்.

“என்ன கல்கி? பிஸியா இருந்த போல. அப்புறம் கூப்பிடவா?” என்று சிரஞ்சீவி கேட்க

“இல்லை, நீங்க சொல்லுங்க. எப்படி இருக்கீங்க?” என்றவளின் குரலில் வழக்கமான உற்சாகமே இல்லை. அது வஞ்சியை உள்ளமெல்லாம் நினைத்திருப்பவனுக்கு சொல்லாமலே புரிய

“யாராச்சும் எதாவது சொன்னாங்களா?” என்று கேட்க கல்கிக்கு ஆச்சர்யம்.

“ஏன் அப்படி கேட்குறீங்க?”

“எப்பவும் கல்கிட்ட இருக்க ஜோஷ் இல்லையே, வேலை முடிஞ்சு வரப்போ உங்கிட்ட பேசினா எனக்கு எனர்ஜெட்டிக்கா இருக்கும், ஆனா இப்போ அது மிஸ்ஸிங்” என்றான் வரப்ரசாத்.

“எல்லாம் என் அப்பாதான்” என்று சொல்ல, அவன் என்னவென்று கேட்க எல்லாம் சொல்லவும் சில நொடி அமைதி சிரஞ்சீவியிடம். அவளுக்காக அவளிடத்தில் நின்று யோசித்துப் பேசினான்.

காதல் எல்லாவற்றையும் காதலிக்கும்! கனவுகளை, கோபத்தை, குறையை என்று அத்தனையும் ஏற்கும் பேரன்பே காதல்!! இது பிடிக்கும் இது பிடிக்காது என்பதில்லை காதல்! அப்படித்தான் கல்கியின் அத்தனையையும் அணுஅணுவாய் காதலித்தான். எப்படி எங்கு தொடங்கியது இத்தனை பிடித்தம் என அவனின் அறிவுக்குத் தெரியவில்லை.

“கல்கி! அவர் அப்படி சொன்னா சொல்லட்டும். நீ ஏன் கண்டுக்கற?” என்று சிரஞ்சீவி நிதானமாய்க் கேட்க

“எப்படி அப்படியே விட சொல்றீங்க? எனக்கு இரிட்டேட் ஆகுது. எனக்கு ஹையர் ஸ்டடிஸ் செய்யணும் ஆசை. ஒரு சின்ன மாற்றமாவது என்னால இந்த உலகத்துல வரனும்னு ஆசை. படிச்சு முடிச்சதுமே கல்யாணம்னு சொன்னா எப்படி? எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றாள் வருத்தமாக. அவளின் வருத்தமான குரல் அவனையும் வருத்தியது.

“அம்மடூ! லிஸன். உனக்கு என்ன வேணும்னு நீதான் டிசைட் செய்யணும் கல்கி. உங்க அப்பா முதல்ல சென்னைக்கே அனுப்பாம ஒரு வருஷம் விட்டவர்தானே? உன்னைப் புரிஞ்சிட்டு சென்னைக்கு இப்போ அனுப்பினார்தானே? திங் பாஸிட்டிவிலி மை கேர்ள்! நீ இந்த கல்யாணம் அது இதுன்னு எதையும் யோசிக்காம உன்னோட படிப்புல கவனம் வை”

“உன்னோட டிடர்மினேஷன் எனக்குத் தெரியுது உனக்குத் தெரியலையா? இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு நடக்கும்னு உங்கப்பா சொன்ன விஷயத்துக்காக இன்னிக்கு அப்ஸெட் ஆவியா? சில் ஆவுதாம் அம்மடூ! லைஃப் இஸ் எ மிரக்கிள். எந்த நிமிஷம் வேணும்னாலும் எதுவும் மாறும். இப்பவே அப்பா நமக்குக் கல்யாணம் செஞ்சிடுவார்னு யோசிச்சு ஏன் உன்னோட அமைதியை நீயே கெடுத்துக்கிற? உன்னோட ஆர்வம் பார்த்து உன் அப்பாவே என் பொண்ணு இன்னும் படிக்கட்டும் சொல்லணும். ஆக்ஷன் ஸ்பீக்ஸ்” என்றான் அழுத்தமாய்.

அவன் பேச பேச கல்கிக்கும் இப்பவே ஏன் அதை நினைக்க வேண்டும். வருந்த வேண்டும். இவன் சொல்வது போல் அப்பாவின் மனம் மாறினால்? என்று யோசிக்க தானாய் இதழில் முறுவல் மலர்ந்தது. மனம் அவனிடம் பேசிய பின் மிகவும் லேசானது.

தன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேசும் அவன்மீது ஒரு தனிப்ரியம் உருவானது கல்கிக்கு. அதனால் புன்னகையுடன் அவனிடம்

“தெலுங்குல நல்ல பிள்ளைன்னு எப்படி சொல்றது?” என்று கேட்க

“ஏன்ட்டீமா, நேனு..ப்ச் நான் என்ன பேசுறேன்?” என்று அவன் பல்லைக் கடித்தான்.

“சொல்லுங்க ப்ளீஸ்” என்று அவள் சொல்லவும்

“மன்ச்சி பிள்ளா” என்றான் புன்னகையுடன்.

“எஸ்! நீங்க ரொம்ப ரொம்ப மன்ச்சீ பிள்ளா” என்றதும் அந்த பக்கம் வாய்விட்டே சிரித்தான் சிரஞ்சீவி.

“பிள்ளடா சொல்லணும் எனக்கு”

“சரி டா சேர்த்துக்கோங்க. தேங்க்ஸ்! ஒரு மாதிரி கொஞ்சம் டென்ஷனா இருந்தேன். இப்போ நல்லா இருக்கு” என்றாள் மனதார.

“சாப்பிட்டீங்களா?” என்று பேச

“பார்டா! இரண்டு நாள் கழிச்சு என்னை விசாரிக்க எல்லாம் கல்கிக்கு மனசு வருது” வரப்ரசாத் கிண்டல் செய்தான்.

“நான் கேட்கலன்னா சாப்பிடாம இருக்கீங்களா என்ன? குழந்தையா நீங்க?” என்று அன்று அவன் பேசியதை மனதில் வைத்துப் பேச

“உனக்கு இன்னும் கோவம் போகலையா கல்கி? அன்னிக்கு அந்த கேஸ் டென்ஷன் கத்திட்டேன்” என்றான் வரப்ரசாத்.

“எனக்கு அக்கறை இருக்கக் கூடாதுன்ற மாதிரி பேசினா எனக்குக் கோவம் வராதா?”கல்கியும் கொஞ்சம் கோபமாய்க் கேட்க

“நான் சொன்னது உண்மைன்ற மாதிரித்தானே நீ நடந்துக்கிற? ஊருக்குப் போனதும் பாரு இரண்டு நாள்ல என்னை மறந்துட்ட”

அவனையும் மீறி அவன் தேடல் வார்த்தைகளில் வெளிப்பட

“நான் ஒன்னும் உங்களை மறக்கல”

“இஸீட்? நேத்து ஒருதடவ கூட எங்கிட்ட நீ பேசல”

“பேசலன்னா மறந்துட்டாங்கன்னு அர்த்தமா?”

“அப்படி இல்லையா என்ன?”

“இல்லை! இங்க நான் சில டைம் உங்களை நினைச்சுப்பேன். அப்பா திட்டும்போதெல்லாம் நீங்க என்னை எங்கரெஜ் பண்றதுதான் எனக்கு ஞாபகம் வரும். நைட் அக்கா கூட பேசிட்டு சாப்பிடும்போதும் உங்களோட பேசுறது ஞாபகம் வரும். சொல்லாம இருக்கேன்றதுக்காக உங்களை நினைக்கல சொல்வீங்களா?” என்று எதார்த்தமாக சொல்லிவிட அவனுக்குத்தான் தலைகால் புரியவில்லை.

‘பரவாயில்லை, என்னைக் கொஞ்சமாவது நினைக்கிறாளே’ என்று மகிழ்ந்து போனான். பேசிக்கொண்டே இருக்கும்போது சிரஞ்சீவிக்கு வேறு கால் வர

“ஸாரி கல்கி! இன்னொரு கால். அப்புறம் கூப்பிடுறேன்” என்று சொல்லி அவன் வைத்துவிட்டான்.

அன்று இரவு எப்போதும் போல் சீரஞ்சீவியின் நினைவு வந்துவிட அவனுக்கு அழைக்கலாமா என்று நினைக்க அவனிடமிருந்து வீடு வந்துவிட்டேன் என்று மெசெஜ் வர, இவளுக்குப் புன்னகை. அடுத்து வந்த நாட்களும் கல்கியைக் காக்க வைக்காமல் வரப்ரசாத் வீடு வரவும் அவளுக்கு மெசெஜ் செய்துவிடுவான். நேரம் கிடைக்கும்போது இவள் அழைத்தால் பேசுவான். பேசுவான் என்பதை விட அவளைப் பேசவிட்டு ரசிப்பான்.

எவ்வளவு பேசினாலும் அவன் மனதின் காதலை மட்டும் கல்கியிடம் சொல்லவே இல்லை அவன். அவள் கள்ளமற்ற உள்ளத்துடன் அவனிடம் பழக, அதைக் கெடுக்க நினைக்கவில்லை. அவளுக்கான காதல் காத்திருப்பைக் கூட சுகமாக்கியது. அப்படியே நாட்கள் ஓட, கல்கி மீண்டும் சென்னை வந்து சேர்ந்தாள்.

கல்கியை நேரில் பார்க்கவும்தான் தன் மனம் அவளை எத்தனை தேடியிருக்கிறது என்பதை சிரஞ்சீவியே அறிந்தான். தூர நிலா அருகே வந்து உணர்வு!!

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்’

✅ End of Episode 25
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Kavi Natarajan Reader 3 weeks ago

💞💞💞💞💞💞💞💞

❤️ 2 more...
Srichitra Reader 3 weeks ago

Very nice.

❤️ 1 more...
Sathya Velusamy Reader 3 weeks ago

மன்ச்சி பிள்ளா

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top