Episode 29

மௌனம் இத்தனை இசைக்குமென வரப்ரசாத் அன்றுதான் அனுபவத்தில் உணர்ந்தான். அவள் விழியும் அவன் விழியும் சங்கமித்த, அந்த காதல் சஞ்சரித்த நொடிகள் அத்தனைப் பிடித்தது.

அவனுக்காகவே தான் அவன் மொழி கற்கிறேன் என்று கல்கி சொல்லவில்லை. அவனைப் பிடிக்கும், அதனால் அவன் மொழி பிடித்தது!

கல்கி அப்படித்தான்! யாரிடமும் உன்னைப் பிடிக்கும் என்று சொல்லி பழக்கமில்லை. அப்பா, அம்மாவிடம் எல்லாம் பிடிக்கும் என்றா நித்தமும் சொல்கிறோம்? அது போலவே அவள் எண்ணம். ‘உனக்காக’ என்ற வார்த்தையை வரப்ரசாத்தின் உள்ளம் வஞ்சியிடம் எதிர்ப்பார்க்க, அவளோ அதை சொல்லத் தயாராக இல்லை.

கல்கி அமைதியாய் அவனின் விழிகளைப் பார்த்திருக்க, அவள் பார்வை அவனை தடுமாறச் செய்திருந்தது. சில கணங்களில் சிரஞ்சீவிக்கு மையலும் அது தந்த மௌனமும் கலைந்தது. முயன்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டு முன்னால் வந்தான். வரப்ரசாத் முன்னால் வந்து நிற்கவும் கல்கியும் தெளிந்துவிட்டாள்.

“எனக்கு எது அவசியம்னு நான் டிசைட் பண்ணிக்கிறேன்” கல்கி பட்டென அவன் பேச்சுக்குப் பதில் சொன்னாள்.

“எங்க கிட்ட தானே தெலுங்குல பேசப்போற? நாங்க எல்லாரும் உங்கிட்ட தமிழ்ல தானே பேசுறோம். அப்புறம் ஏன் டைம் வேஸ்ட் செய்ற கல்கி?” என்று கேட்டான்.

அவளை நன்றாய் தெரிந்தது போல் பேசும் அவனின் பேச்சை, அந்த கர்வத்தை கல்கிக்கு உடைக்க வேண்டும்போல் தோன்றியது. உன் கணிப்பிற்குள் கல்கி இல்லை என்று சொல்லும் வேகம்! அதனால் வேண்டுமென்றே,

“ஏன் உங்களுக்காகத்தான் தெலுங்கு கத்துக்கனுமா? என்னோட ப்ரண்ட் ஒரு பொண்ணு தெலுங்கு, அவளுக்காக கத்துக்கிறேன். நீங்களே சொல்லியிருக்கீங்களே நாலு மொழி தெரிஞ்சா அவன் நாலு மனுஷனுக்கு சமம்னு” என்று கல்கி வரப்ரசாத்திடம் புருவம் உயர்த்தி சொல்லவும் அவனின் பார்வையில் ரசனை கூடியது.

“அவுனு?” என்று ஆச்சர்யம் கூட்டி கேட்டவன் அவளுக்கு முன் சோஃபாவில் உட்கார்ந்தபடி

“முன்னாடியே சொல்லிட்டேன் கல்கி, பேசாம ஒருத்தரைப் புரியும்போது பேச்சு தேவையில்லை. இப்பவும் அதுதான்” என்றவன் எழுந்து சென்றான். அவன் அப்படி எழுந்து செல்லவும் கல்கிக்குத் தாங்கவில்லை. வீம்புக்கென்றே

“நான் ஒன்னும் உங்களுக்காக தெலுங்கு கத்துக்கல” என்று சத்தமாய் சொல்ல அவளின் அந்த பேச்சைக் கேட்டவன்

“அம்ம..டூ!” என்று சிரித்துவிட்டான்.

“என்ன சிரிக்கிறீங்க?” என்று கல்கி கோபமாய்க் கேட்க

“எனக்காக நீ கார தோசை செய்ய மாட்ட, எனக்காக தக்காளி ரசம் வைக்க மாட்ட, அப்புறம் மிளகாய் ஊறுகாய் போட மாட்ட அண்ட் இப்போ தெலுங்கும் எனக்காக கத்துக்க மாட்டேன்னு நல்லாவே தெரியும் கல்கி” என்று நின்று நிதானமாய் சொன்னவன் அறைக்குள் போய்விட, கல்கிக்கு அடுத்து என்ன பேசுவெதென்றே தெரியவில்லை.

எல்லாமே அவனுக்காக! அவனுக்குப் பிடிக்கும் என்று அவள் செய்தவை. கண்டுகொண்டிருக்கிறான் என்று கல்கியின் உள்ளத்திற்கு புரிந்தாலும் ஒப்புக்கொள்ளத்தான் மனமில்லை.

நாட்கள் ஓடிவிட, சிரஞ்சீவி அன்று காலையில் கிளம்பிச் சென்றவன் வீட்டிற்கு வரவே இல்லை. வைகறைப் பொழுதும் வந்துவிட அவன் வராது வஞ்சிக்குப் பதற்றம் மட்டுமே. போன் செய்தாலும் கத்துவான் என்பதால் அழைக்கவே இல்லை. சிரஞ்சீவியை வாக்கிங் சென்றபோது பார்த்தது, அதற்கு பின் கல்கி கல்லூரி முடிந்து வந்ததிலிருந்து அவன் வீடு வரவில்லை.

ஹாலில் உட்கார்ந்திருந்தவளுக்கு உறக்கம் வர அப்படியே உறங்கிப்போனாள். தொடர்ந்து உறங்கவும் முடியவில்லை அடி நெஞ்சில் அவனுக்கான காத்திருப்பு கல்கியை கண்விழிக்க செய்தது. உறங்கியும் உறங்கா இரவாக அவ்விரவு கடக்க, ஒரு கட்டத்தில் அவளையும் மீறி சோஃபாவில் தலை வைத்து தரையில் உட்கார்ந்தபடியே கல்கி உறங்கிப் போனாள்.

வைகறை மெல்லொளிப் பொழுதாகியது(twilight) வரப்ரசாத் வீடு வந்தபொழுது. அவன் தன்னிடம் இருந்த சாவி கொண்டு கதவைத் திறந்து உள்ளே வர, ஹாலில் தரையில் படுத்திருந்த கல்கியைத்தான் கண்டான். இரவு ஒரு விசாரணைக்காக அவன் செல்ல வேண்டி இருந்தது, அதில் கல்கியை மறந்தே போனான்.

கல்கியை அப்படி பார்க்கவும் காதல் கொண்ட உள்ளம் தவித்தது. கல்கியைக் கண்ட நாள் முதலே கணிப்பவனுக்குத் தெரியாதா அவளுக்குத் தன் மீதான பிடித்தம்? அன்பின் அர்த்தம் விளங்க அகராதி எல்லாம் தேவையில்லை.

கல்கியின் கயல்விழி போதும் அவளின் உள்ளம் உணர்வதற்கு. நிச்சயம் அவள் இரவில் சரியாய் உறங்கியிருக்க மாட்டாள் என்று தெரிந்தது, காதல் எந்தளவு பெருகியதோ அதே அளவு கோபமும் பெருகியது. அதே நேரம் தூங்குபவளை எழுப்பவும் மனமில்லை.

அமைதியாய் அவனின் அறைக்குள் சென்று சீருடையை மாற்றியவனுக்குப் பசித்தது. முதல் நாளை மாலை ஒரு டீ குடித்தான், அதன்பின் வழக்கு விசாரணையில் ஆழ்ந்துவிட்டான். கிச்சனுக்குள் சென்று ஃப்ரிட்ஜில் இருந்து பாலை எடுக்க, அப்போது உறக்கம் தடைபட எழுந்தாள் கல்கி. விளக்கொளியைப் பார்க்கவும்தான் அவள் விழிகள் மின்னின. வரப்ரசாத் வந்துவிட்டான் என்பதே நிம்மதியாய் இருந்தது. கிச்சனுக்குள் சென்று அவனைப் பார்க்க, அவன் பாலை எடுத்துக் காய்ச்சப் போக

“கொடுங்க நான் காய்ச்சிறேன்” என்றவளை முறைத்தவன்

“உன்னைக் காய்ச்சிடுவேன் கல்கி, இரிட்டெட் செய்யாம போ” என்றான் கோபமாக.

“எதுக்குக் கத்துறீங்க?” என்று கல்கி கத்திக் கேட்க

“ஷட் அப்! ஏன் இவ்வளவு சத்தம் போடுற?” என்று அதட்டியவன்

“உன்னை எத்தனை தடவ எனக்கு வெயிட் செய்யாம தூங்குன்னு சொல்லியிருக்கேன், அறிவே லேது நீக்கு”

“நான் ஒன்னும் உங்களுக்கு வெயிட் பண்ணல, நான் நல்லா தூங்கிட்டேன்” என்று கல்கி அப்போதும் வீம்புக்குப் பேச, கல்கியை அழுத்தமாய்ப் பார்த்தான் வரப்ரசாத்.

“எனக்கு உன்னைத் தெரியும் கல்கி” என்றவனின் பேச்சில் கல்கிக்கு ஆவேசம் எழுந்தது.

“தெரியாது! அப்படி தெரிஞ்சிருந்தா நான் உங்களைத் தேடுவேன்னு எனக்கு ஒரு கால் ஆச்சும் செஞ்சிருப்பீங்க” என்றவளின் பேச்சில் திகைப்பும் தித்திப்பும் கூடியது. அவளையும் மீறி அவள் தேடலை சொல்லிவிட்டாள் கல்கி. கல்கியின் முகத்தில் அவ்வளவு ஆவேசம். தன்னைத் தெரியுமென்றால் தன்னால் இவன் வராமல் நிம்மதியாக இருக்க முடியாது என்று தெரியாதா என்ற வேகம்.

இவளின் இந்த தேடல் காதலன்றி வேறென்ன என்று நினைக்க நினைக்க இனித்தது. அதே சமயம் இப்படி உறக்கம் தொலைத்தெல்லாம் இவள் உருகிட வேண்டாம் என்ற புரிதல். காலமெல்லாம் அவனுக்குக் கடமை இருக்கும், அதனை உணர்ந்து இவள் தைரியமாய் இருக்க வேண்டாமா என்று நினைத்து அவளைப் பார்க்க அவளோ அவனுக்குப் பால் காய்ச்சப் போக, அடுப்பை ஆஃப் செய்தவன்

“கல்கி! என்னோட வேலை இப்படித்தான். எப்பவுமே இப்படித்தான் இருக்கும், நீ என்னை எதிர்ப்பார்க்காம இருக்கறதுதான் நல்லது. இப்படி தூங்காம உன் ஹெல்த் ஸ்பாயில் பண்ணாத” என்றவனின் அக்கறை கூட கல்கிக்குப் பிடிக்கவில்லை. அவன் அடுப்பை ஆஃப் செய்வதைப் பார்த்தவள் கோபத்துடன் முறைத்துவிட்டு, ஃப்ரிட்ஜில் இருந்து தோசை மாவை எடுத்து தோசை ஊற்றப் போக

“கல்கி, எனக்குப் பசிக்கல. நீ சரியா தூங்கலன்னு உன்னைப் பார்த்தாலே தெரியுது. போய்த் தூங்கு” என்று கண்டிப்புடன் சிரஞ்சீவி சொல்ல அவன் பேச்சைக் காதில் வாங்கவே இல்லை கல்கி. பசிக்காமலா பால் கலக்க சென்றாய் என ஒரு தீப்பார்வைப் பார்த்தவள் அவள் பிடிவாதத்தில் நின்றாள்.

‘உனக்காக நான் செய்வதை உன்னால் கூட தடுக்க முடியாது’ என்ற அழுத்தம் கல்கியிடம்.

பிடித்தது! அவனை மொத்தமாய்ப் பிடித்தது கல்கிக்கு. எந்தவகை பிடித்தம் என்று பிரித்தறிய முடியவில்லை. அவனிடம் அவளால் ஏற்கமுடியாத குணங்களும் உண்டு. இந்த கோபம், அதட்டல், அதிகாரம் இதெல்லாம் பிடிக்காது. இருந்தும் வரப்ரசாத் மீதிருக்கும் பேரன்பு அதனை எல்லாம் கணக்கில் கொள்ளவில்லை.

பேரன்பின் நிலை அதுதான்! நிறையை நிறைவாக்கும்! குறையை நிறையாக்கும்! எங்கே எப்படி இத்தனை பிடித்தம் தொடங்கியதென தெரிவதற்குள் கல்கியின் அகத்தினில் ஆழ இறங்கியிருந்தான் சிரஞ்சீவி. கல்கியின் இந்த அன்பு ஆழியின் அலையாய் அவனை தனக்குள்ளே இழுத்தது.

மூன்று தோசையை சுட்டு தட்டில் வைத்த கல்கி இவனிடம் ஒருவார்த்தையும் பேசாது அறைக்குள் போய்விட்டாள். அவனும் ரெஃப்ரஷ் செய்துவிட்டு இருந்த பசியில் உண்டுவிட்டான். அவளிடம் எதிர்வாதம் செய்ய முடியவில்லை. அவளின் இந்த அன்பு பிடித்தாலும் அவளை வருத்தி செய்யும் செயல்களை இவனின் காதல் மனம் விரும்பவில்லை. அது குறித்து அவளிடம் பேசிவிட வேண்டும் என்று நினைத்த சிரஞ்சீவி உண்டுவிட்டு அப்படியே உட்கார்ந்திருந்தான். வசந்தி அக்கா வழக்கம்போல் ஆறரைக்கு வந்து சமையலை ஆரம்பித்திருந்தார்.

அவர் கல்கிக்குக் காஃபி கலக்கி விட்டு எழுப்ப போக, ஹாலில் இருந்த சிரஞ்சீவி தடுத்துவிட்டான்.

“அக்கா, அவ லேட்டா தூங்கினா. அவளே வரட்டும்” என்று சொல்லிவிட வசந்தி சமையலைப் பார்க்க சென்றுவிட்டார். கல்கி உறங்கியிருப்பாள் என நினைக்க அவளோ கல்லூரிக்குக் கிளம்பி வெளியே வரவும், வசந்தி அக்கா இருப்பதால் ஹாலில் வைத்துப் பேச வேண்டாம் என்று நினைத்தவன்

“கல்கி ரூமுக்கு வா” என்று சொல்லிவிட்டு வரப்ரசாத் அறைக்குள் போக, கல்கியும் அவன் பின்னே போனாள்.

“இங்க பாரு கல்கி, நான் வர எப்பவும் முன்ன பின்ன ஆகும். அதுவரைக்கும் நீ தூங்காம இருக்காத. பாரு எவ்வளவு டயர்டா தெரியற” என்று கலைத்து நின்ற கல்கியைக் கண்டு வரப்ரசாத் பொறுமையாகப் பேச

கல்கியின் மனமோ இவ்வளவு அக்கறை இருந்திருந்தால் என்னிடம் முன்பே சொல்லியிருக்க வேண்டாமா? என்னை இரவெல்லாம் தவிக்க வைத்துவிட்டு இப்போது என்ன பேச்சு என்ற எரிச்சல் மிகுந்தது. அவன் மீது அவளையும் மீறி பெருகி வரும் அன்பை தடுக்கவே முடியவில்லை.

அன்போடு சேர்ந்து வீம்பும் நிறைய இருக்க “நான் ஒன்னும் உங்களுக்காகக் காத்துட்டு இல்லை. நீங்க எப்போ வேணும்னாலும் வாங்க, எனக்கு ஒன்னுமில்லை” என்ற குரலில் கோபம் மட்டுமே. கோபத்துடன் சொன்னவள் அவனின் பேச்சை எதிர்ப்பார்க்காமல் கல்லூரிக்குக் கிளம்பி சென்றுவிட்டாள்.

வரப்ரசாத்திற்கும் கல்கியின் பேச்சில் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. அவளின் மீதான அக்கறையில் சொல்கிறோம் என்று கூட புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆயாசம்.

இறுதியில் வரப்ரசாத் இறங்கி வர வேண்டியதாய்ப் போயிற்று. கல்கி நிச்சயம் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டாள் என்பதை அறிந்தவன் இரவில் தாமதமானால் கல்கிக்கு ‘லேட் ஆகும், நீ தூங்கிடு’ என்று மெசெஜ் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்.

அதுவொரு ஞாயிற்றுக்கிழமை. காலையில் அலுவலகம் சென்ற சிரஞ்சீவி பதினொரு மணி போல் வீடு வந்துவிட்டான். அவன் வரவை கல்கி எதிர்ப்பார்க்கவில்லை. அவன் வீட்டில் இருக்கமாட்டான் என்று நினைத்துதான் ஜெகதீஷ் அவளை படம் பார்க்க அழைத்திருக்க ஒத்துக்கொண்டாள்.

அவனுடன் வெளியே சென்றும் பல மாதங்கள் ஆகியிருந்தன. போன செமெஸ்டரின் போது சென்றது. ஜெகதீஷ் கல்கியைக் காண வேண்டும் என்ற ஆசையில் அழைத்திருந்தான். வரப்ரசாத் வரும்வரை கல்கியுமே அதே ஆவலில்தான் இருந்தாள். ஆனால் இப்போது ஆவலைக் காதல் மிஞ்சியிருக்க, வரப்ரசாத்துடன் இருக்கவே விரும்பினாள் கல்கி. அதனால் உடைமாற்றிவிட்டு ஹாலில் எழுதுவதற்கு புத்தகங்களை எடுத்து வந்து உட்கார

“கல்கி, ஜெகதீஷ் கூட படத்துக்குப் போறேன் சொன்ன?” என்று கேள்வியாய்ப் பார்க்க

“இல்லை போகல, எனக்கு வேலை இருக்குன்னு மெசெஜ் பண்ணிட்டேன்” என்றவள் புத்தகத்தில் கவனம் வைத்தாள்.

“ஏய் வரேன்னு சொல்லிட்டு போகாம இருந்தா ஜெகதீஷ் கோச்சுக்க போறான்” வரப்ரசாத் சொல்ல

“எனக்கு காலேஜ் வொர்க் இருக்கு, இப்போதான் ஞாபகம் வந்துச்சு” என்று பொய் சொன்னாள் கல்கி.

அது என்னவோ இப்போதெல்லாம் அவனின் அருகாமையை மனம் வெகுவாய் விரும்பியது. பேசாமல் இருந்தால் கூட அவனும் அவளும் இருக்கும் நேரம் நிறைவாய் இருந்தது. கல்கி தனக்காக வெளியே போகவில்லை என்று சிரஞ்சீவிக்குத் தெரியவில்லை.

அதனால் “ஒருத்தங்க கிட்ட வரேன்னு சொல்றதுக்கு முன்னாடி இதெல்லாம் யோசிக்க மாட்டியா? ரொம்ப கேர்லெஸ்னெஸ் உனக்கு. காலேஜ் வொர்க் இருக்கா இல்லையான்னு தெரியாம எப்படி அவன் கிட்ட வரேன்னு சொன்ன நீ?” என்று அதட்டலாய்க் கேட்க

“ஹலோ மிஸ்டர். காரம் எங்க ஜெகதீஷ் மாமா ரொம்ப ஸ்வீட். அதெல்லாம் சொன்னா புரிஞ்சுக்குவார். சும்மா கத்தாதீங்க” என்றாள் கடுப்பாக. இவனுக்காக நான் இருந்தால் என்னைப் பேசுவானா என்ற எரிச்சல்.

“ஓஹ்! உங்க ஜெகதீஷ் மாமாவா?” என்றான் ஒருமாதிரி குரலில்.

அவன் தன்னையும் ஜெகதீஷையும் வேறு மாதிரி நினைக்கிறானோ என்று நொடியில் தோன்றிவிட கல்கிக்கு முகம் மாறிவிட்டது. ஜெகதீஷை அவளுக்குப் பிடிக்கும்தான், ஆனால் அது ஒரு நட்பு, சகோதர பாசம் ஆயிற்றே! அவனிடம் விளக்கவும் முடியாது அவள் இருக்க, அவள் விழியே அவனுக்கு மொழிதானே?

“யார் எவ்வளவு ஸ்வீட்டா இருந்தா எனக்கென்ன? எனக்குக் காரம்தான் பிடிக்கும், என்னைப் பிடிச்சவங்களுக்கும் காரம்தான் பிடிக்கும்” என்றான் வரப்ரசாத் இயல்பான புன்னகையுடன்.

கல்கியின் உள்ளத்தவிப்பு புரிந்தவன் போல் அவன் பேச, அவன் பேச்சில் மங்கைக்குள் மார்கழி காற்று!! காதல் உள்ளத்தில் ஊற்றெடுத்தது. சொல்லாமலே தன்னை புரிந்து கொள்ளும் அவன் மீது சொல்லில் அடங்கா நேசம் பெருகியது.

கல்கி பதில் பேசும் முன் ஜெகதீஷ் அவளின் மெசெஜைப் பார்த்துவிட்டு அழைத்தான்.

“டிக்கெட் உன்னைக் கேட்டுத்தானே டி புக் பண்ணினேன். இப்போ வந்து வர மாட்டேன் சொன்னா எப்படி?” என்றான் கோபத்துடன். இப்போதெல்லாம் கல்கி அவனுடன் வெளியே செல்வதே இல்லை. கல்கி ஓய்வு நேரத்தில் எல்லாம் புதிதாய் எதாவது கற்றுக்கொண்டிருப்பாள். சும்மாவெல்லாம் ஊர் சுற்றப்பிடிக்கவில்லை அவளுக்கு. பல நாள் கழித்து பாவையுடன் பொழுதினைக் கழிக்கலாம் என்று பேரவா கொண்டவனைக் கல்கியின் குறுஞ்செய்தி கோபத்தில் கொந்தளிக்க வைத்தது.

“ஸாரி, எனக்கு ஞாபகமில்லை மாமா. நீ உன் ப்ரண்ட் யார்கூடவாச்சும் போயேன்”

“ப்ரண்ட் கூடவா போகவா உன்னை கூப்பிட்டேன்?”

“ஸாரி சொல்றேன் தானே ப்ளீஸ் மாமா?” என்று கல்கி மன்னிப்புக் கேட்டாள். அவளுக்கே அவளின் செயல் பிடிக்கவில்லை, பொய் சொல்வது பிடிக்கவில்லை. சிரஞ்சீவியைப் பார்த்த நொடி சிந்தை அவள் பேச்சைக் கேட்பதில்லை. ஒவ்வொரு மணித்துளியும் அவனுடன் இருக்கவே உள்ளம் ஏங்கியது.

ஜெகதீஷுக்கு ஏமாற்றமாய் இருந்தது.
“போடி! ஆசையாய்க் கூப்பிட்டா இப்போதான் படிக்கனும்ன்ற. படம் பார்த்துட்டு வந்து எழுதினா என்ன?” என்று கேட்க

“லேட்டாகிடும் மாமா, நிறைய இருக்கு” என்று சொல்ல

“போ, போய் உன் வேலையைப் பாரு. உனக்குக் கொஞ்சம் கூட என்னோட டைம் ஸ்பெண்ட் செய்ய ஆசையில்ல” எரிச்சல் மிகுதியில் பேசினான்.

“ப்ச், அதான் நான் லீவ்ல ஊருக்குப் போனப்போ நீயும் இரண்டு நாள் வந்தியே, அப்போ பார்த்தோம்தானே?” அவன் மனம் புரியாமல் கல்கி பேச

“ஏய்! வெறுப்பேத்தாம வைடி. பார்த்தா இப்போ பார்க்கக் கூடாதா?” என்று கத்தியவன் போனை வைத்துவிட்டான். கல்கியின் முக பாவனையும் அவளின் பேச்சையும் பார்த்த சிரஞ்சீவி கிண்டலுடன்

“என்ன உங்க ஜெகதீஷ் மாமா ரொம்ப ஸ்வீட்டா பேசினார் போல” என்றான் சிரித்தபடி.

கல்கி முறைக்க, “அம்மடூ! வரேன்னு சொல்லிட்டு வரலன்னா யார்னாலும் திட்டத்தான் செய்வாங்க. இனிமே உன்னோட வேலையெல்லாம் முடிஞ்சதான்னு இரண்டு தடவை செக் பண்ணிட்டு வெளியே போக டிசைட் பண்ணு. ஓகே?” என்று சிரஞ்சீவி அறிவுரை சொல்ல

“அதெல்லாம் எனக்குத் தெரியும். நீங்க ஏன் ஆபிஸ் போகல?” என்று கல்கி கேட்டதும்தான் அவனுக்கு எல்லாம் விளங்கியது. இவ்வளவு நேரம் கிளம்பி இருந்தவள் தன்னைக் கண்டதும் உடைமாற்றி வேலை இருக்கு என்று பொய் சொன்னதன் காரணம் விளங்க, விரிந்தது அவன் புன்னகை.

“என்ன கேட்டேன்னு இப்படி சிரிக்கிறீங்க?” கல்கி ஜெகதீஷிடம் திட்டுவாங்கிய கடுப்பில் கேட்க

“என்னைக் கேட்டாலும் ஓகேதான்” என்றான்.

“என்ன?” கல்கியின் அதிர்ந்த பாவனையில் தன் பேச்சு புரிய, தன் சொல் எல்லைக் கடப்பது உணர்ந்தவன்

“ஒன்னுமில்ல, என்ன கேட்ட?” என்றான் பெருமூச்சுடன். மீண்டும் கல்கி தன் கேள்வியைக் கேட்க ‘வேலையில்லை’ என்றான்.

“ஜெகதீஷ் உன்னோட ரொம்ப க்ளோஸோ? எப்பவும் உன்னோட சுத்துறான்?” என்று கேட்க

“என் பெஸ்ட் ப்ரண்ட் ஜெகதீஷ் மாமா. நான், அக்கா, ஜெகதீஷ் மூணு பேரும் சின்ன வயசுல இருந்தே செம க்ளோஸ்” என்றவள் கதைப் பேச, வரப்ரசாத் வழக்கம்போல் கேட்டிருந்தான்.

பேச்சுவாக்கில் “நெக்ஸ்ட் வீக் அம்மாவுக்கு நானாவுக்கும் வெட்டிங் அனிவர்சரி கல்கி, அவங்களைப் பார்த்து டூ மந்த்ஸ் மேல ஆகுது. நான் விஜயவாடா போகலாம் இருக்கேன், நீயும் வரியா? ரொம்ப நாளா அம்மாவும் நானாவும் கூட உன்னைக் கூப்பிடுறாங்கதானே?” என்றான்.

“வாவ்! சூப்பர். அப்பா கிட்ட கேட்டுட்டு சொல்லவா?” என்று கேட்க

“ம்ம், சொல்லு. நானும் அம்மாவையும் நானாவையும் மாமாகிட்ட பேச சொல்றேன்” என்று சிரஞ்சீவி சொல்ல

“காலேஜுக்கு லீவ் போட முடியாதே” என்று கல்கி யோசனையாய் அவன் முகம் பார்த்தாள்.

“அதெல்லாம் வேண்டாம். சட்டர்டே மார்னிங் விஜயவாடாவுக்குப் ஃப்ளைட்ல போய்டலாம், சண்டே அவங்க அனிவர்ஸரி. அன்னிக்கு ஈவினிங் ஆர் நைட் திரும்பிடலாம். ஜஸ்ட் டூ அவர்ஸ் பை ஃப்ளைட்” என்றான்.

✅ End of Episode 29
How did you feel about this episode?
❤️ 7 🔥 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Pavithra Narayanan Admin 3 weeks ago
Srichitra Reader 3 weeks ago

Nice 

❤️ 1 more...
Kavi Natarajan Reader 3 weeks ago

Very nice ud ma

❤️ 1 more...
Sathya Velusamy Reader 3 weeks ago

ஜெகதீஷா விதி வலியதுடா.....

காரம் இப்போ எல்லாம் தித்திக்குதே
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top