Episode 37
வாழ்க்கையை அவன் நினைத்தது போலவேதான் இத்தனை வருடமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான் வரப்ரசாத். கல்கி படித்த பின் திருமணம் பேசும்போது அப்பா, அம்மாவை வைத்து பேச சொல்லலாம், மறுத்தால் அம்மம்மாவைப் பேச வைப்போம் பெரிதாக எந்த பிரச்சனையும் வராமல் கல்கியையும் கஷ்டப்படுத்தாமல் அவளைக் கரம் பிடிக்க வேண்டும் என்று ஒரு அழகான திட்டமிடல் அவனிடம்.
இப்போதோ எல்லாம் சிக்கி சிக்கலாகியிருந்தது. உதயமூர்த்தியின் உடல் நலக்குறைவு இன்றைய அவரின் பேச்சு எல்லாம் எப்படி கடக்க போகிறோம் என்று சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை. கல்கியை ஜெகதீஷுடன் இணைத்துப் பேச அப்படியொரு கோபம் அவனிடம். அதிலும் ஜெகதீஷ் முதல் ஆளாய் சம்மதம் என்று சொல்ல, இன்னும் எரிச்சல் கூடியது. இதில் அவனை மிகவும் காயம் செய்தது கல்கியின் அமைதிதான்!
அதை நினைத்து தவித்து அவன் நின்றிருக்க, மகனின் தோளில் கை வைத்தார் சூர்ய நாராயணன்.
“நானா?” என்று அவன் பார்க்க
“சிரு, உன் மாமா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போனதும் பொறுமையாப் பேசுவோம். அவசரப்பட வேண்டாம்” என்றார் அனுபவம் தந்த பொறுமையுடன்.
“கல்கி எனக்காக பேசுவா நினைச்சேன் நானா” என்ற மகனை ஆதரவாக அணைத்துக்கொண்டவருக்கு அவனின் உணர்வுகள் புரிந்தது.
“கல்கி இடத்துல இருந்து யோசி சிரு, அப்பாவுக்காக அமைதியா இருந்திருப்பா. நீயா இருந்தாலும் என்னைத் தானே முதல்ல யோசிப்ப?” என்று மகனிடம் கேட்க, அவனுக்கும் அதுவே சரியெனப்பட்டது.
“ஆனாலும் மாவய்யாவுக்கு நான் நல்ல சாய்ஸா தெரியலதானே நானா? அந்த ஜெகதீஷ் கல்கியை நல்லா பார்த்துப்பான் சொல்றார். ஏன் நான் பார்க்க மாட்டேனா?” என்றான் ஆற்றாமையுடன்.
“என்ன பங்காரம் நீ? அவருக்கு உன்னை இப்போ மூணு வருஷமாதான் தெரியும். அவனை சின்ன வயசுல இருந்தே பார்த்திருப்பார். அண்ட் உனக்கு கல்கியைப் பிடிச்சிருக்கும்னு அவருக்கு ஐடியாவே இருக்காது”
“சியர் அப் மை மேன்! எல்லாம் பார்த்துக்கலாம். நானா இருக்கேன்” என்று மகனின் தோளில் புன்னகையுடன் தட்டினார். இருவருமாக மீண்டும் உள்ளே செல்ல, ஜெயராமன் கல்கி ஜெகதீஷ் மனோ எல்லாரும் வெளியே நின்றிருந்தனர். அங்கையற்கண்ணி மட்டும் கணவருடன் இருந்தார். வீட்டிற்குப் போகும் முன் டாக்டரைப் பார்த்துவிட்டு செல்லலாம் என அவரிடம் போக, அவர்
“சில டெஸ்ட் எடுத்திருக்கோம். ரிப்போர்ட்ஸ் நார்மலா இருந்தா மெடிசின்ஸ் போதும், இல்லைன்னா சர்ஜரி அவசியம். நாளைக்கு ரிப்போர்ட்ஸ் பார்த்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்று சொல்ல ஜெயராமனும் ஜெகதீஷும் அவர்கள் வண்டியில் போக, மனோ அங்கையுடன் மருத்துவமனையில் இருந்து கொண்டான். ஜெயராமன் இரவு வருவதாகச் சொல்லிச் சென்றார். கல்கி இப்போது சிரஞ்சீவியுடன் தான் போயாக வேண்டும். கால் டாக்சி பிடித்து இருக்க, சூர்யா முன்னால் உட்கார்ந்திருக்க, கல்கியும் வரப்ரசாத்தும் பின்னிருக்கையில் இருந்தனர்.
அப்பாவிடம் பேசிய பின் அவனிடம் ஒரு தெளிவு. கல்கி இருக்கும் நிலைமையில் நிச்சயம் குழம்பியிருப்பாள். தான் அல்லவா அவளுக்கு ஆதரவாய் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தவனுக்குக் கல்கியைக் குறித்துக் கவலையாக இருந்தது. அப்பாவின் பேச்சிலே அதிர்ச்சியாகி இருப்பாள். இதில் தான் வேறு கோபமாய் வெளியேறியிருக்க நிச்சயம் வருந்துவாள் என நினைத்திருக்க, கல்கியோ இவன் மேல் கொலைவெறியில் இருந்தாள்.
“கல்கி!” என்று வரப்ரசாத் அவளை அழைக்க, கல்கி பார்த்த பார்வையில் கனல் மட்டுமே! அந்த முறைப்பு புரிந்தாலும்
அவளின் கையைப் பற்றி அவளை சமாதானம் செய்ய நினைக்க ஜன்னல் பக்கமாய் சாய்ந்து அவனிடமிருந்து நன்றாய் விலகி உட்கார்ந்தாள். அதிலே அவள் மனம் தெரிய, ஒன்றும் பேசாது அமைதியாகி விட்டான் வரப்ரசாத். வீட்டிற்குச் சென்றதும் அஞ்சனா அப்பாவின் நலம் கேட்க சூர்யா அவளுக்குப் பதில் சொல்ல, தையல் நாயகியும் மகனை நினைத்து அழுகையில் இருந்தார்.
கல்கி ஒன்றும் பேசாமல் அஞ்சனாவின் அறைக்குள் சென்று அமைதியாய்க் கட்டில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டாள். அஞ்சனா கல்கியைப் பார்க்க உள்ளே வர, கல்கி அமைதியான குரலில் சொன்னாள்.
“அப்பா எனக்கும் ஜெகதீஷுக்கும் கல்யாணம் பண்ணனும் சொல்றார் அஞ்சு” கல்கியின் குரலில் ஒரு சோர்வு, இயலாமை.
“கல்கி என்னடி சொல்ற?” என்று அஞ்சனா டென்ஷனாகக் கேட்க
அக்காவின் டென்ஷன் பார்த்து,
“அப்பா சொன்னாருன்னு சொன்னேன். நீ டென்ஷன் ஆகாத, அந்த ஜெகதீஷ் வரட்டும் அவன் மண்டையை உடைக்கிறேன், மொத ஆளா சம்மதம்னு சொல்றான் டி அவன்” என்றாள் கோபத்துடன்.
“அவன் சான்ஸ் கிடைக்குமா பார்த்துட்டு இருந்திருப்பான். நீ சிரஞ்சீவியை விரும்புறேன்னு சொல்லிட்டா புரிஞ்சிப்பான் டி. எனக்கு அவனைத் தெரியும்” என்றாள் அஞ்சனா.
“என்ன அஞ்சு பேசுற நீ? எனக்கு அவரைப் பிடிக்கலனாலும் கூட நான் ஜெகதீஷைக் கண்டிப்பா கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன். அதான் உண்மை, வேண்டாம்னு சொன்னா அந்த மடையனுக்குப் புரியாதா? சும்மா உன் ப்ரண்ட்னு அவனுக்கு சப்போர்ட் செய்யாத” என்று பல்லைக் கடித்தாள்.
“சிரஞ்சீவி என்ன சொன்னார்?”
“அந்த ஆளைப் பத்திப் பேசாத, குண்டூர்ல இருந்து என் உயிரை வாங்கனே வந்திருக்கான்” என்று சிரஞ்சீவியையும் திட்டினாள். தங்கையின் உணர்வு புரிந்து பொறுமையாகவே “இப்ப என்ன செய்றது கல்கி? அம்மா கிட்ட சொல்லிடலாம்” என்று சொல்ல
“பார்த்துக்கலாம். அப்பா ஹாஸ்பிட்டல்ல இருந்த டென்ஷன்ல அப்படி சொல்றார், டிஸ்சார்ஜ் ஆகி வரட்டும். பொறுமையா பேசிக்கலாம்” என்ற கல்கி இப்போது தெளிந்திருந்தாள். சூர்யாவோ யமுனாவை தனியே அழைத்து
“உங்கண்ணா கல்கிக்கும் ஜெகதீஷுக்கும் கல்யாணம் பேசுறார் யமுனா, ஆனா சிருவும் கல்கியும் லவ் பண்றாங்க” என்று பட்டென சொல்லிவிட யமுனாவிற்கு அதிர்ச்சி.
“என்ன சொல்றீங்க சூர்யா? சிரு கல்கியை லவ் பண்றானா?”
“கல்கியும் லவ் பண்றா”
“எப்படிங்க அண்ணா ஒத்துப்பார்? அதுவும் ஜெகதீஷுக்குப் பேசியிருக்கும்போது… உங்க பையன் இருக்கானே அவன் ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லவே இல்லை, ஜர்னலிஸ்ட்னு சொன்னான் நான் யாரோ வேலைப் பார்க்கறவங்க நினைச்சேன். இந்த கல்கி கூட எங்கிட்ட சொல்லவே இல்லை” என்றார் கோபத்துடன்.
“அவன் தான் தெளிவா சொல்லியிருக்கானே தமிழ் ஜர்னலிஸ்ட்னு நீயா புரிஞ்சிக்கனும்”
“என்ன புரிஞ்சக்கனும்.. அவ படிக்கிற பொண்ணு. அண்ணா நம்மை நம்பித்தானே அவளை படிக்க அனுப்பினார்?” என்றதும் மனைவியை ஒரு பார்வை பார்த்த சூர்யா அவரின் தோளில் கைப்போட்டு
“நீ சிரு அம்மாவா யோசிக்காம என் ப்ரியத்தம்மாவ யோசிம்மா, நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சப்போ கூட நீ படிச்சிட்டுத்தான் இருந்த, ஏன் நானுமே பிஜி படிச்சேனே” என்றதும் யமுனா கணவரை முறைக்க
“நீ சொன்னதை தான் நானும் சிருகிட்ட சொன்னேன். அதுக்கு அவன் சொன்ன பதில்தான் இது, நம்ம பையனுக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு. அவங்களுக்கு நல்லபடியா கல்யாணம் செஞ்சு வைக்கறது நம்ம கடமை தானே?” என்று மனைவியிடம் கேட்டார்.
யமுனாவின் முகத்தில் பயங்கர கலக்கம்.
“இதெல்லாம் சரியாவருமா? எனக்கு டென்ஷனா இருக்கு சூர்யா. முன்னாடியே சொல்லாம இவங்களோட… அண்ணா நிச்சயம் ஒத்துக்காது”
“சரி வருமான்னு எல்லாம் தெரிஞ்சா லவ் வரும் யமுனா? ஏமிரா நீ? நம்ம மட்டும் எல்லார்கிட்டவும் சொல்லிட்டா லவ் பண்ணினோம்? எப்படியும் நீ இப்படி ஷாக் ஆகக் கூடாதுன்னுதான் என் பங்காரம் க்ளூ எல்லாம் கொடுத்திருக்கான். நீ கமிஷனர் வைஃபா இருந்து என்ன ப்ரோயஜனம்? கண்டுபிடிக்கல” என்று சிரிக்க
“சிரிக்க வேற செய்றீங்களா? அண்ணனுக்கு ஏற்கனவே உடம்புக்கு முடியல, இந்த விஷயம் தெரிஞ்சா அவர் என்ன சொல்வாரோனு இருக்கு எனக்கு. உங்களுக்கு சிரிப்பு வருது” என்று கணவரைத் திட்டினார் அவர்.
“இப்ப டென்ஷன் ஆகி என்ன ஆகப்போகுது? அவர் டிஸ்சார்ஜ் ஆனதும் பொறுமையாப் பேசலாம் யமுனா. நம்ம பையன் கல்யாணம் எல்லாரும் வந்து வாழ்த்துற மாதிரி பெருசா பண்ணத்தான் போறோம். நீ பயப்படாத” என்று தோளில் தட்டிக்கொடுத்தார்.
அடுத்த நாள் காலையில் சூர்யா, யமுனா மட்டும் மருத்துவமனை செல்ல, எப்படியும் இன்று மாலைக்குள் உதயமூர்த்தியை டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள் என்பதால் மற்றவர்கள் வீட்டில் இருந்தனர். மனோ காலையில் வீடு வந்தவன் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தான். அஞ்சனாவும் கல்கியும் மதிய உணவுக்குத் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது பார்த்து அத்தை வீட்டிற்கு வந்தான் ஜெகதீஷ்.
சிரஞ்சீவி வெளியே மாமரத்து அடியில் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தான். ஏதோ வேலை விஷயமாகப் போன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் ஜெகதீஷ் பைக்கில் வர, இவன் பார்த்தாலும் ஒன்றும் பேசவில்லை. ஜெகதீஷ் அதையெல்லாம் கவனிக்காமல் வீட்டிற்குள் நுழைய, தையல் நாயகி உறங்கிக் கொண்டிருந்தார்.
“அஞ்சு, கல்கி” என்று அவன் சத்தம்போட
“சமையக்கட்டுல இருக்கோம் ஜெகதீஷ்” அஞ்சனா குரல் கொடுக்க
“இங்க இருக்கீங்களா?” என்று கேட்டபடி வந்தவன் கல்கியைப் பார்க்க, கல்கி அவன் சத்தம் கேட்கவும் சர்வமெல்லாம் பாய்ந்த கடுங்கோபத்துடன் அவனை முறைத்தாள்.
“என்ன கல்கி? ஏன் இப்படி பார்க்கிற?” ஜெகதீஷ் சாதாரணமாகக் கேட்கவும்
“எவ்வளவு திமிர் இருந்தா நீ நேத்து அப்பா கேட்கும்போது சம்மதம்னு சொல்லுவ?” என்று கத்த
“உனக்குத்தான் லவ்னா பிடிக்கல, அதான் மாமா கிட்ட போன தடவ லீவ்ல வந்தப்போ பேசினேன்” என்றான்.
அஞ்சனா உடனே “உனக்கு ஏன் டா புரிய மாட்டேங்குது, கல்கி உன்னை அப்படி பார்க்கலன்னு சொல்றாதானே?” என்று தங்கைக்காகப் பேச
“அவளுக்கே சப்போர்ட் பண்ற, என்னோட ஃபீலிங்க்ஸ் புரியலையா அஞ்சு உனக்கு?” என்று கேட்டவனிடம்
“லூசே! இதுல என்ன சப்போர்ட் வேண்டிக் கிடக்கு. லவ்னா இரண்டு பேருக்கும் பிடிக்கனும். விருப்பமே இல்லன்னு சொல்றவளை ஃபோர்ஸ் செய்யாத. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கோ” என்றாள் அஞ்சனா அழுத்தமாக.
இதையெல்லாம் கேட்ட கல்கிக்கு அவ்வளவு கோபம். புரியாமல் பேசுகிறானே என்ற ஆவேசத்தில் “எந்த தைரியத்துல நீ அப்பா கிட்ட பேசின?” என்று ஜெகதீஷிடம் சண்டையிட
“திண்ணைக்குப் போய் பேசு கல்கி, மனோவும் யுகனும் தூங்குறாங்க. அப்பத்தா என்னன்னு பார்க்கும். நான் சமையல் பார்த்துக்கிறேன், நீ இவனைப் போய் என்னன்னு கேளு” என்றதும் இருவரும் திண்ணைக்கு வந்தனர்.
“இங்க பாரு கல்கி, உனக்கு லவ் தானே பிடிக்காது. அதனாலதானே என்னை வேண்டாம் சொன்ன. அதான் மாமா கிட்ட பேசினேன்” என்றதும்
“அறிவே இல்லையாடா உனக்கு? ஏன் உனக்கு என்னைப் பிடிச்ச மாதிரி எனக்கு யாரையும் பிடிக்க கூடாதா?” என்றாள் கோபமாக.
“என்னை அவாய்ட் செய்ய நினைச்சு உளறாதடி, உனக்கு என்ன இப்போ கல்யாணம் செஞ்சுட்டு என்ன வேணும்னாலும் படி, நான் உனக்கு ஃபுல் சப்போர்ட்டா இருப்பேன்” என்று ஜெகதீஷ் சொல்ல
“கிழிப்ப டா நீ! என்னோட விருப்பமே இல்லைனு சொல்றேன் அதைப் புரிஞ்சிக்காம அப்பவும் இப்படி உளறிட்டு இருக்க. எனக்கு லவ் பிடிக்காதுதான். ஆனா இவரைப் பிடிக்கும்” என்று அங்கே இவர்களின் பேச்சைக் கேட்டபடி அமைதியாக மாமரத்து அடியில் நின்றிருந்த வரப்ரசாத்தை வேகவேகமாய் இழுத்து வந்து ஜெகதீஷ் முன் நிறுத்தினாள் கல்கி.
இவர்கள் கோபமாகப் பேசுவது அவன் நின்ற இடத்தில் இருந்து தெரிந்தாலும் கல்கியே பேசிக்கொள்வாள் என புரிந்து அங்கேயே நிற்க, அவள் தீடீரென தன்னை வந்து இழுக்கவும் ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு நேரம் கல்கி முகம் கூட பார்க்காமல் இருந்துவிட்டு இப்போது அவளே வந்து இழுத்து செல்ல, இசைந்து இசைத்தது அவன் மனம், அதில் கல்கியைக் காதலாய்ப் பார்க்க, அப்போதும் அவளின் பார்வையில் அனல் மட்டுமே!!
ஜெகதீஷோ என்ன இது என்று அதிர்வில் நின்றிருந்தான்.
“கல்கி! நிஜமாத்தான் சொல்றியா? என்னை வேண்டாம்னு சொல்ல இவர்தான் காரணமா?” கேட்கும்போதே அத்தனை வருத்தம் அவன் வார்த்தையில்,வலித்தது. இப்போது கல்கி வரப்ரசாத்தின் காதல் பார்வையை எல்லாம் கண்ணோக்கவில்லை. அவன் கையைப் பிடித்திருந்தாலும் பேச்செல்லாம் ஜெகதீஷிடம் மட்டுமே.
“கல்கி, இவரைப் பிடிக்கும்னு பொய் சொல்லாத” கண்ணால் கண்டாலும் கூட அவன் காதல் நம்பாமல் மறுத்தது.
“ஆமா, எனக்கு இவரைத்தான் பிடிக்கும். இவரைப் பிடிச்சதால காதலும் பிடிக்கும் போதுமா? இவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்”
“என்னை விட நேத்து வந்த இவர் உனக்கு முக்கியமா போய்ட்டாரா? இத்தனை நாளா சொல்லாம ஏமாத்திட்ட தானே நீ?” ஜெகதீஷ் கோபமாகக் கேட்க
“யார் ஏமாத்தினா? நான் உன்னை மாமா மகன்ற உறவைத் தாண்டி பார்த்ததே இல்லை. ஆனா நீ என்னைக் கல்யாணம் செய்யணும்னு நினைச்சிருக்க, சரி படிக்கிறேன்னு சொல்லாம இருந்த ஓகே, நான் முடியாதுன்னு சொன்னா அதை ஏத்துக்க நினைச்சியா நீ? நான் ஏன் முதல்ல இதை சொல்லணும்? இது என்னோட பெர்சனல். உன்னை மறுக்கறதுக்கு இவர் காரணமே இல்லை. அதை உன் மனசுல பதிய வை. நான் உன்னை அப்படி பார்க்கல…பார்க்கல” என்று உணர்ச்சிவசத்தில் கத்த, அவளின் கையை அழுந்தப் பற்றினான் வரப்ரசாத்.
அதைப் பார்க்க பார்க்க ஜெகதீஷுக்கு சொல்ல முடியாத வேதனை. அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. வேகமாக தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
✅ End of Episode 37
Nice
Very nice ud ma 😍😍😍😍😍😍
EACH UD SEMAYA IRUKKU. ADUTHA UD EPPO EPPO NU ENGA VAIKUTHU
Daily morning 10 am 🤞
இயைந்து இசைத்தது மனமா.....இருக்க sp sir சீன் இன்னும் முடியலை