Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 4

நிலா முற்றம் 4

“பாருங்க எப்படி பேசுறான்” என்று புஷ்பா புலம்ப,

“என்ன புஷ்பா நீ? இப்போதான் வந்தான், உடனே இதெல்லாம் பேசனுமா?” என்று சுகுமாறன் கேட்டார்.

“வேற எப்போ பேச சொல்றீங்க?” என்று கணவனை முறைத்தவர் மகனிடம் பார்வையைத் திருப்பினார்.

“ஏன் சர்வா? யாரையாவது லவ் பண்றியா?” என்றார்.

“இப்போதைக்கு இல்லம்மா” என்றான் சிரித்தபடி.

“இது என்ன பதில்?” என்று புஷ்பா மகனைப் பார்க்க,

“மா, வேற என்ன சொல்ல சொல்றீங்க? நான் சொல்றதுதான் உண்மை, இப்போ வரை யாரையும் நான் லவ் பண்ணல, பட் இனியும் வராதுன்னு எப்படி சொல்ல முடியும்?” என்ற மகனின் பேச்சில் சுகுமாறன்,

“ரைட்! சரியாதானே அவன் சொல்றான் புஷ்பா” என்று மகனுக்காகப் பேசினார்.

“எல்லாமே ரைட்தான் உங்களுக்கு, என்னவோ போ. ஒன்னு நான் சொல்ற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ, இல்லையா நீ யாரை லவ் பண்றியோ சொல்லு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்” என்று புஷ்பா உறுதியாய் சொல்ல,

“ம்மா, உங்களுக்கு என்ன வயசாகுதுன்னு பாட்டி ஆக இவ்வளவு ஆசைப்படுறீங்க? யூ லுக் ஸோ யங் மா, எனக்கு அக்கா மாதிரி இருக்கீங்க, இப்போ நீங்க சொல்ற மாதிரி எனக்குக் கல்யாணமாச்சுன்னு வச்சுங்கோங்கனு ஒரு பாப்பா வந்து உங்களை பாட்டின்னு சொன்னா நல்லாவா இருக்கும்? திங்க் அபவுட் இட்” என்றதும் புஷ்பா புரியாமல் முழிக்க

சுகுமாறனோ, “அவன் லண்டன் ஐஸை இங்க வைக்கிறான் புஷ்பா” என்று சிரித்தார்.

“சர்வா!” புஷ்பா திட்ட துவங்க,

“ப்பா, என்ன பேசுறீங்க? அம்மா இஸ் ரியலி ப்யூட்டிஃபுல். அதை சொல்லக் கூடாதா? நீங்கதான் சொல்றதில்லை, நான் சொன்னா ஐஸ்னு சொல்றீங்க. அம்மா இங்க பாருங்க நான் ஏன் கல்யாணமே செய்யாமயா இருக்கப் போறேன்? பண்ணிக்கிறேன். அண்ணி இப்போ கன்சீவா இருக்காங்க, முதல்ல அண்ணாவுக்குக் குழந்தைப் பொறக்கட்டும், அப்போதான் அண்ணாவும் அண்ணியும் என் கல்யாணத்தை எஞ்சாய் செய்ய முடியும். ஒரு வீட்டில் அட் எ டைம் ஒரு விசேஷம் நடந்தா போதும்” என்றவன்,

“நாளைக்குக் காலேஜ் போகணும், நான் தூங்கப் போறேன்” என்று சொல்லி எழுந்தான்.

“ஒரு வீட்டுல ஒரு விசேஷம் ஓகேதான், ஆனா நம்ம வீட்ல வீடு குடி போனதுதான் விஷேஷமா நடந்துச்சு, பத்ரிக்குக் குழந்தைப் பொறக்குற வரை நீ ஏன் டா வெயிட் பண்ணனும். அவனை யோசிக்கிற என்னை யோசிக்க மாட்டியா? அவங்க வேற வீடு நம்ம வேற வீடு. நான் நம்ம வீட்டு விஷேஷம் பத்தி பேசுறேன்” என்றார் புஷ்பா சிடுசிடுப்பாய்.

“அம்மா! இங்க நம்ம வீடு மட்டும்தான் வேற வேற, ஆனா குடும்பம் ஒன்னுதான். ஓகேவா?”என்றவன் அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

புஷ்பாவுக்கோ மகன் பேசியதில் மனம் குமைந்தது.

“இவன் என்னை யோசிக்கவே மாட்றான்” என்று கணவரிடம் புலம்ப,

“அவன் சரியாதான் பேசுறான் புஷ்பா, நீ சரியா யோசிக்கிற வழியைப் பாரு” என்றார் சுகுமாறன் கண்டிப்புடன்.

சுகுமாறன் பெரிதாய் வெளிக்காட்டாவிடிலும் கூட அண்ணன் என்றால் நிறைய மரியாதை, சுகுமாறனுக்கு வங்கியில் வேலைப் பார்க்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. பி.காம் முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் குறைவான சம்பளத்தில் வேலைக்குப் போகும்போதுதான் அவரின் திருமணம். திருமணம் முடிந்தவுடனே சக்தி சொல்லிவிட்டார்,

“நீ பேங்க் எக்ஸாம் ப்ரீப்பேர் செய்டா” என்று சொல்லி சுகுமாறன் வேலைக்கு செல்லும்வரை குடும்பத்தைப் பார்த்தவர் சக்திவேலன்தான். அதனாலயே அண்ணன் என்றால் அவ்வளவு மரியாதை, பத்ரியும் சர்வாவும் பழகுவது போல் நெருக்கமில்லையென்றாலும் எப்போதும் அண்ணன் பேச்சுத்தான் அவருக்கு வாக்கு.

கணவரின் கண்டிப்பான பேச்சில் புஷ்பாவிற்குக் கண்கலங்க,
“எப்பவும் நீங்களும் அவங்களுக்கே சப்போர்ட் செய்யுங்க, என் பையனை எங்கிட்ட இருந்து உங்கண்ணி மொத்தமா பிரிச்சிட்டாங்க, நாளைக்கு அவங்க சொல்ற பொண்ணைத்தான் அவன் கட்டுவான். எனக்கு எப்பவுமே மரியாதை கிடையாது” என்று அழுகையுடன் சொன்னார்.

“அறிவில்லாம பேசாத, என்ன பிரிச்சிட்டாங்க அவனை? இப்படி உளறாத, எனக்கு சர்வாவை தெரியும். அவனுக்குப் பிடிச்சாதான் அவன் கல்யாணம் செய்வான். இன்னொருதடவ இப்படி பிரிச்சுப் பேசாத புஷ்பா, அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என்று அதட்டலுடன் அவரும் அறைக்குள் புகுந்துகொண்டார்.

ரசிகாவோ கல்லூரி விட்டு சென்றதுமே குளித்து உடைமாற்றியவள் அப்பாவிற்கும் அவளுக்கும் காய்கறி சூப் வைத்தாள். இருவருமாக அதைப் பருகும்போது,

“அப்பும்மா, அந்த சர்வா இன்னிக்கு உங்கிட்ட என்ன பேசினான்?” என்ற கேள்வி. அவள் எதிர்ப்பார்த்த ஒன்றுதானே?

“காலேஜ் டே பத்திதான்பா பேசினார்” பொய்யென்றாலுமே பொருந்த சொன்னாள்.

“அவன் எதாவது வம்பு செஞ்சா சொல்லுடா” என்றதும் தினமும் இது போன்ற கேள்வி வருமோ என்ற சலிப்பும் கடுப்பும் சமமாய்த் தோன்ற,

“வேணும்னா நான் வேற காலேஜ் மாறிடவாப்பா?” என்றாள் ரசிகா.

“என்ன அப்பு நீ? அவனுக்குப் பயந்த நீ ஏன் போகணும்? ஒரு வாரியருக்கு அது அழகா? அவன் இருந்தான் என்ன நீ பாட்டுக்கு உன் வேலையைப் பார், அவன் எதாவது பண்ணினா அப்பாகிட்ட சொல்லு, அவ்வளவுதான். ஒரு சோல்ஜர் பொண்ணு இப்படி பின்வாங்க கூடாது” என்றார் நிமிர்வாய்.

அதன்பின் அவள் வீட்டு வேலைகள் செய்ய, சிவசங்கரன் நியூஸ் பார்த்தார், ஆறு மணியானதும் வீட்டின் முன் கேட்டைத் திறந்தவர் குழந்தைகளுக்காக்க் காத்திருந்தார். மாலை ஆறு மணி முதல் எட்டு வரை அவர்கள் வீட்டுப்பக்கம் உள்ள பிள்ளைகளுக்குப் பாடம் எடுப்பாள் ரசிகா, பணம் கொடுத்து டியுஷன் சேர்ந்து படிக்க முடியாத குழந்தைகளுக்காக இலவசமாக நடத்துவாள். அது சிவசங்கரின் விருப்பம்.

“நாட்டுல எல்லாம் ஒழுங்கா இருந்தா நாட்டோட எல்லையில பாதுகாப்பே தேவையில்லை, அவங்க அவங்க எல்லை எதுன்னு மனுஷங்களுக்குத் தெரிஞ்சா அடுத்த நாட்டோட எல்லையில நுழைய ஆசைப்பட மாட்டாங்க, கல்வியை விட சிறந்த ஆயுதம் எதுவுமில்லை அப்பு, அப்பாவுக்காக நீ செய்டா. நம்மால் முடிஞ்சது நாலு பிள்ளைங்க நல்லா படிச்சா சரிதானே?” என்று கேட்டிருக்க, இதோ சக்தியின் கல்லூரி சேர்ந்தது முதல் இதனை பகுதி நேர சேவையாய் செய்கிறாள்.

இலவசம் என்பதற்காக இஷ்டப்படி எல்லாம் அவர்களால் நடக்க முடியாது, அதிலும் ஒரு ஒழுக்கம்! கண்டிப்பு! சிவசங்கர் அதிலெல்லாம் வளைந்து கொடுக்கவே மாட்டார்.

டியுஷன் வகுப்பு முடிந்த பின் அவள் இரவு சமையல் செய்யத் தொடங்கினாள். வழக்கம்போல் கிச்சனில் பாடல் தவழ, ரசிகாவின் இதழ்களும் அதுனுடன் கூடியது.

அவள் அம்மா இருக்கும்போது அவருடனே சுற்றித்திரிவாள் ரசிகா, அம்மா செல்லம் அவள். அவளின் உலகமே அவர்தான். மிலிட்டரியில் இருக்கும் தந்தை மீது பாசமிருந்தாலும் அவரின் மீது கொஞ்சம் பயம் அதிகம், அதுவும் அவரின் கணீர் குரலும் கண்டிப்பும் ரசிகாவை கொஞ்சம் விலகியே வைத்திருக்கும்.

வீட்டை சுத்தம் செய்யவும் பாத்திரம் தேய்க்கவும் ஆள் உண்டுதான். மற்றபடி எல்லா வேலையும் ரசிகா மட்டுமே செய்ய வேண்டும். அவள் படிக்கும்வரை எல்லா வேலைக்கும் தனியே தனியே ஆட்கள் உண்டுதான், ஆனால் படித்து முடித்து வேலைக்குச் செல்லத் துவங்கவுமே மொத்த வீட்டின் பொறுப்பும் அவளிடம்தான்.

சிவசங்கரின் மன நிலை இதுதான். தாயில்லா பிள்ளை என்பதால் எந்த வேலையும் தெரியவில்லை என்று புகுந்த வீட்டில் சொல்லக் கூடாது, சொல்லும் நிலையில் மகள் இருக்க கூடாது! அங்கும் வேலைக்குப் போய்க் கொண்டு இவளே வீட்டு வேலை செய்யும் நிலையென்றால்? அதற்காகவே மகளைப் பழக்கப்படுத்தி இப்போது வழக்கமாய் வாடிக்கையாகிவிட்டது.

ரசிகாவின் உடலும் மனத்துக்கும் ஓய்விற்குக் கெஞ்சும், ஆனாலும் அப்பாவிடம் காட்டிக்கொள்ள மாட்டாள். அம்மாவை அகம் அதிகம் தேடும் தருணங்களில் கூட தந்தையிடம் சொல்லி அழமாட்டாள். அவள் அப்பாவிற்கு தைரியமாய் இருக்க வேண்டும், அழுவதால் தைரியமில்லையென்றாகிவிடுமா என்ன?

அழுகை மட்டும் எந்தவகையில் இழி நிலை உணர்வாகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் அப்பாவிற்குப் பிடிக்காது! அதனால் ரசிகா செய்ய மாட்டாள்! அம்மா இறந்தும் கூட மறுமணம் செய்யாமல் தனக்காகவே, தனியே வாழும் அப்பாவைக் கஷ்டப்படுத்த அவளால் முடியாது.

அவளும் அம்மாவும் இருந்த நினைவுகளை நினைத்து பார்த்து நெஞ்சம் ஆற்றிக்கொள்வாள் பெண். இன்று சர்வா வருகிறான் என தெரியும்தான், அவள் சந்திப்பாள் என்று நினைக்கவில்லை. இன்னும் அவனுக்குத் தன் மீது கோபமிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாய்ப் புரிந்தது. இருக்கும்தானே?

நாளை எப்படியும் அவனிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். மெல்லத் தவழ்ந்த இசையில் மனம் மெல்லமாய் சமன்பட்டது. ரசிகாவின் அம்மா ராதிகாவிற்கு நல்ல குரல்! அம்மாவை பாடச் சொல்லிக் கூட பாடுவது ரசிகாவிற்குப் பிடித்தமான ஒன்று. அம்மா இருந்தவரையில் வீட்டில் இருவர் இருப்பது போலவே இருக்காது, கொண்டாட்டம்தான்!

அவளின் அம்மா ராதிகா ஒரு நந்தவனம்! அப்படித்தான் தோன்றும் ரசிகாவிற்கு, அப்பா அவ்வளவு தூரம் தள்ளி இருக்கிறாரே என்ற பயம் கூட அம்மாவிடம் இருக்காது, டீவியில் தீவிரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் சண்டை என்றால்,

“ம்மா, அப்பாவை அடிச்சிருப்பாங்களா? சுட்டிருப்பாங்களா?” என்று இவள் பயத்துடன் கேட்க,

“ரசிம்மா, அப்பா சோல்ஜர்டா, சண்டை போடுவாங்க. யாரும் சுடமாட்டாங்க. அப்படியே சண்டை போட்டாலும் அப்பா நாட்டுக்காகப் போராடுறார். நீ பெருமையா நினைக்கணும். ஏன் பயப்படுற?” என்று கேட்கும் பெண்மணி அவர்.

இன்று என்னவோ அம்மாவின் நினைவலைகள் அதிகமாய் அலைக்கழிப்பதாய்த் தோன்றியது, வெகு வருடம் கழித்து சர்வாவைப் பார்த்ததா? இல்லை இன்று அப்பா கல்லூரியில் சர்வாவிடம் பேசியபோது அதட்டியதா? என்னவோ ஒன்று அன்னை மடியை அகம் நாட, சப்பாத்தி கொஞ்சம் தீய்ந்து போனது.

அந்த வாசத்தில் சிவசங்கர் உள்ளே வந்தவர்,
“என்ன அப்பு இது? கவனமில்லாம இருக்க? என்னிக்குமில்லாம என்னாச்சு உனக்கு?” என்றார் வரிசையாக.

அவரது கேள்வியே பதில் சொன்னது பாவைக்கு, என்றைக்கும் இல்லாது இன்று சர்வாவைப் பார்த்ததால் இப்படி தடுமாறுகிறாயா என்று. உண்மை அதில்லையே!

“இல்லப்பா, ஸாரி” என்றாள் சமாதானமாக.

“பார்த்து செய் அப்பு” என்றபடி அவர் ஹாலில் போய் உட்கார்ந்தார்.

சொல்லியிருக்கலாம் அம்மாவை நினைக்கிறேன், அம்மாவைத் தேடுகிறேன் என்று, சொல்ல வாய் வரவில்லை. ரசிகாவின் வாழ்க்கையை அ.மு அ.பி என்று அம்மாவிற்கு முன், பின் என பிரித்து விடலாம், அவ்வளவு வேற்றுமைகள் அவளிடம். அம்மா இருக்கும்போது நினைத்ததைப் பேசிவிடுவாள். அவர் போன பின் சிரிக்க கூட அளவுகோல் உண்டு.

இப்படியே யோசித்தால் அடுத்த சப்பாத்தி தீயும் என்று புரிந்தவள் வேகமாய் சமைத்து முடித்தாள்.

அடுத்த நாள் கல்லூரி சென்றவள் யுவராணியிடம் சப்பாத்தி தீய்ந்த கதை, சர்வா தன்னை காலேஜ் டேவிற்கு நியமித்த கதை எல்லாம் சொன்னாள்.

“ஏய் ரசிகா, செம டி அப்போ நீயும் நானும் சேர்ந்து ஜமாய்க்கலாம்” என்று யுவி சந்தோஷப்பட,

“போ டி, அப்பா அதைப் பத்தி ஒன்னுமே சொல்லாம இருக்கார். சர்வா கேட்டா என்ன சொல்றதுன்னு தெரியல” என்றாள் யோசனையாக.

“வாட்? முசோலினி ஒன்னுமே சொல்லாம இருக்காரா? அன்பிலிவபிள்! அப்போ மிலிட்டரி ஆபரேஷன் பியை ப்ளான் பண்ணியிருப்பார் டி” என்றவளை ரசிகா புரியாது பார்க்க,

“இல்ல பேபி, நேத்து நீ செய்யமாட்டேன்னு சொன்ன உங்கப்பா இப்போ வரை உங்கிட்ட அது பத்தி பேசல, அப்போ என்ன அர்த்தம்? அவருக்கு ஓகேவா இருக்கணும், இல்லையா வேற ப்ளான் வச்சிருப்பார்” என்றாள் யுவராணி.

“என்ன ப்ளான்?” என்று ரசிகா கேட்கவும் அவளை முறைத்த யுவி,

“எரும! எல்லாமே நானே சொல்லுவேனா? நான் ஹிட்லர், உங்கப்பா முசோலினியும் நானும் ப்ரண்ட்ஸ்? என்கிட்ட எல்லாம் சொல்ல, போடி” என்று சொல்லி அவள் போக, மதிய உணவின் போது இருவரையும் அவன் அறைக்கு வர சொல்லியிருந்தான் சர்வஜனன்.

“மேம், காலேஜ் டேக்கு என்ன ப்ளான் பண்ணியிருக்கீங்க?” என்று இருவரிடமும் பொதுவாய் அவன் கேட்ட்டான்.

“ஸர், இப்போது டான்ஸ் ஆடிஷன் நடந்திட்டு இருக்கு. வேற ஒன்னும் இன்னும் ப்ளான் செய்யல” யுவராணி பதில் சொல்ல,

“இங்க பாருங்க மேம், காலேஜ் முடிஞ்சு ஒன் அவர்தான் ப்ராக்டீஸ், ஒரு மாசம் இருக்கு. ஸோ இட்ஸ் எனஃப், க்ளாஸ் அவர்ஸ் கட் அடிக்கவே கூடாது, வேணும்னா லாஸ்ட் ஒன் ஆர் டூ டேய்ஸ் பார்த்துக்கலாம். சில பசங்க காலேஜ் வொர்க்னு பொய் சொல்லிட்டு வெளியே சுத்துவாங்க, அதெல்லாம் நடக்கவே கூடாது. ஸோ காலேஜ் டேல கலந்துக்கிறவங்க பேரண்ட்ஸ் கன்சண்ட் வாங்கியிருக்கணும். புரிஞ்சதா மேம்?” என்றான் கண்டிப்பாக. இருவரும் தலையை ஆட்ட,

“ஏன் மேம், லஞ்ச் டைம்ல மைண்ட் தான் வாடகைக்கு வீடுவிங்கன்னு சொன்னீங்க வாயையும் விட்டாச்சா? என்ன மேடம் நீங்களும் விட்டாச்சா?” என்றான் கிண்டலாக. இருவரும் பேசாமல் தலையாட்டியதை அவன் கிண்டல் செய்ய யுவிக்குப் பேச வாய்த் துறுதுறுத்தாலும் நிற்பது நேற்று போல் கேண்டீன் இல்லையே, அவனது அறை.

அவன் பதவிக்கான மரியாதைக் கொடுக்க வேண்டுமே? ஆனாலும் பேசியவனை சும்மா விடுவதா?

“ஸர், லஞ்ச் டைம் இப்போதானே ஆரம்பிச்சது. நீங்க வேற போற வழியில கூப்பிட்டீங்க, இப்போ விட்டீங்கன்னா நான் மைண்டை வாடகை விட்டுட்டு சாப்பிட போவேன், வாயை வாடகைக்கு விட்டா எப்படி ஸர் சாப்பிட முடியும்? அதில்லாம சிலரை சமாளிக்க வாளை விட வாய்தான் ஸர் ரொம்ப அவசியம்” என்றாள் யுவராணி.

“யுவி” என்று ரசிகா அடக்க,

“என்ன ரசிகா மேம்? உங்க ப்ரண்ட் கிட்ட என்னைப் பத்தி சொல்லக் கூடாத எல்லாம் சொன்னவங்க நான் எப்படின்னு சொல்லலையோ?” என்று பேனாவை எடுத்து மேஜை மீது தட்டியபடி புன்னகையுடன் கேட்க,

அவன் சொன்னது எல்லாம் மறக்க, அடர் நீல நிற சட்டையில் அட்டகாசமாய் சிரித்தவனின் புன்னகை மட்டுமே அகத்தில் சேர, அவள் அகக்கரையில் அழகாய் மலர் பூக்க, எப்பவும் போல் சர்வாவை ரசிக்கும் ரசிகாவாகிப்போனாள்.

யுவிக்கு ரசியை விட பசி முக்கியமாகிவிட,
“ஸர், எனக்கு நெக்ஸ்ட் அவர் க்ளாஸ்” என்று யுவி இறங்கி பேச,

“போங்க” என்று புன்னகையுடன் விடைக்கொடுத்தான். யுவி ரசிகாவை இழுக்க, யுவியைப் போக சொன்னவள் அசையாமல் அங்கே நிற்க,

“என்ன?” என்று கேட்காமல் பார்வையால் வினாவினான் சர்வா.

“உங்க கிட்ட பேசணும், அன்னிக்கு…” என்று ரசிகா ஆரம்பிக்க,

“லுக் ரசிகா! காலேஜ் டைமில பெர்சனல் விஷயம் பேசக் கூடாது, மிலிட்டரி ரூல்ஸ்மா” என்றான் நக்கலாக.

“அண்ட் தனியே எங்கூட நீ இருக்கறது அவருக்குத் தெரிஞ்சா என் மேல் போர் தொடுக்க நினைப்பார் மிலிட்டரி முசோலினி” என்றதும் ரசிகா முறைத்தவள்,

“அப்பாவை பேசாதீங்க” என்றாள் கோபமாக.

“காலேஜ்குள்ள அப்பா பொண்ணுல்லாம் கிடையாது, உங்கப்பன் என்னைப் பேசும்போது மட்டும் நல்லா கேட்டுட்டு இருப்ப?” என்றவன்,

“கடுப்பேத்தாம போ” என்றதும் முகம் கசங்க ரசிகா வெளியே வர, யுவி அதற்குள் உணவுண்ண சென்றிருந்தாள். இவளும் அவளுடன் சேர்ந்து அவசர அவசரமாய் உண்டாள். அடுத்து இருவருக்குமே வகுப்பு இருக்க, வேறு பேச நேரமில்லை.

அன்றையை நாள் கல்லூரியின் இறுதி மணி அடிக்கவும் ஒரு முடிவுடன் ரசிகா சர்வாவின் அறைக்குள் போனாள். துணைக்கு யுவியும் போக,

“அது என்ன அந்த சர்வா ஆக்ஸ்ஃபோர்ட் அப்பாடக்கரா? சும்மா கலாய்க்கிறார்? சக்தி ஸர் தம்பி பையனா இல்லைன்னா?”

“இல்லைன்னா?” என்று ரசிகா இழுக்க,

“அதான் இல்லையே?” என்று யுவி புலம்ப,

“இருந்தாலும் நீ என்னைப் புண்படுத்திட்ட” என்று சோகமாய் சொன்ன யுவியைக் கேள்வி கண்களுடன் பார்த்தாள் ரசிகா.

“பின்ன இந்த யுவியோட பசியை விட அந்த ஆக்ஸ்ஃபோர்ட் அரைமெண்டலை ரசிக்கிற” என்றாள் கடுப்பாக.

“ஹேய்! என்னடி இப்படி பேசுற, என்ன இருந்தாலும் சுகுமார் மாமா பையன் டி” என்று சொல்ல,

“உனக்குத் தான் டி மாமா, எனக்கு என்னவாம்? ஆனா நீ இன்னிக்கு சர்வாவை கொஞ்சம் எக்ஸ்ட்ராவ லுக் விட்டதானே?” என்று யுவி கேட்க,

“நீ என்னை எப்படி வேணும்னாலும் கிண்டல் செய் யுவி, இந்த மாதிரி மட்டும் வேண்டவே வேண்டாம்” என்றாள் அழுத்தமாக, அகத்தின் வலி அப்பட்டமாய்த் தெரிந்தது ரசிகாவின் பேச்சில்.

“ஸாரி டி, ஒரு ப்ளோவுல” என்று யுவி மெய்யாய் வருந்த அதற்குள் ஆபிஸ் ரூம் வந்துவிட்டது. அவளின் அப்பா இருக்கிறாரா என்று பார்க்க, அவர் வேறொரு வேலை விஷயமாய் முன்பே சென்றுவிட்டார் என்று தெரியவும் இன்னும் தைரியமாக சர்வாவின் அறைக்குள் போக, யுவி வெளியே நின்றாள். அறைக்குள் பார்த்தால் அங்கே சர்வாவுடன் சக்தியும் இருந்தார்.

இவளைப் பார்த்துவிட்டு,
“என்னடா அப்பு? சர்வாவைப் பார்க்க வந்தியா?” என்று கேட்க அவள் தலையசைக்க,

“இரண்டு பேரும் பேசி ரொம்ப வருஷம் ஆச்சுல, சரி நீங்க பேசுங்க. நான் கிளம்புறேன், உன்னை அத்தை வீட்டுக்கு வர சொன்னா, ரேஷ்மியும் வருவா இந்த வாரம்” என்றவர் சர்வாவிடமும் சொல்லிவிட்டு வெளியேறிவிட, பெரியப்பாவின் முன் ரசிகாவை ஒன்றும் சொல்ல முடியவில்லை சர்வாவினால்.

சக்தி வெளியே போனதும்,
“மதியம் சொன்னது உன் மக்கு மண்டையில ஏறலையா?” என்றான் கோபமாக.

“காலேஜ் டைமிங்க்ஸ் முடிஞ்சிப்போச்சு சர்வா, ப்ளீஸ் ஒரு ஃபைவ் மினிட்ஸ் என்னைப் பேச விடுங்க” என்றாள் கெஞ்சலாக.

———————–

Read and Share your thoughts friends

✅ End of Episode 4
How did you feel about this episode?
❤️ 5 🔥 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Mrs Beena loganathan Reader 2 weeks ago
என்றோ நடந்தது தவறு
எப்பொழுதும் நேர்மை அப்பா 
என்றும் இல்லாத அன்னை நியாபகம்
எதிலும் மனம் நிம்மதி தேடி அலைய
எங்கே யாரிடம் சொல்ல
என்றும் தாங்கும் நட்பு

யுவி தோழமை அழகு.....

❤️ 2 more...
Srichitra Reader 2 weeks ago

Nice 

❤️ 1 more...
Sathya Velusamy Reader 2 weeks ago
❤️ 1 more...
Geethazhagan Reader 1 week ago

Very nice 

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top