Episode 2

அந்த நட்ட நடு இரவினில் வந்திறங்கிய யமுனாவிற்கு அத்தனை ஆண்டுகளாய் அடக்கி வைத்திருந்த அழுகை அண்ணனைப் பார்க்கவும் மடைத் திறந்தது. அண்ணனின் முகம் பார்த்தவருக்கு அழுகையை அடக்க முடியாது போக, கண்ணீருடன் நின்ற அம்மாவின் அருகே வந்து நின்ற சிரஞ்சீவி வரப்ரசாத்

 

“எந்துக்கும்மா?” என்று அவரைப் பிடிக்க, சூர்ய நாராயணன் மனைவியின் மறுபுறம் நின்று

 

“எந்துக்கு ப்ரியத்தம்மா?” என்று அவர் மனைவியின் கையைப் பிடித்தார்.

 

எல்லாம் பார்த்து நின்றார் உதயமூர்த்தி. தங்கை நன்றாக இருக்கிறார் என்பதே ஒரு நிறைவினை தந்தது. அவரும்

 

“அழாத யமுனா” என்று ஆறுதலாக சொல்லி சூர்ய நாராயணனைப் பார்த்தவர்

 

“வாங்க மாப்பிள்ளை” என்றார் கொஞ்சம் தடுமாற்றத்துடன். உறவு இருந்தாலும் உரிமை எல்லாம் சட்டென வரவில்லை.

 

“தமிழ் தெரியுமா?” என்று  நிறுத்த

 

“ஓரளவு தெரியும்” என்றார் சூர்யா.

 

உதயமூர்த்தி புன்னகை செய்ய யமுனாவுக்குக் கணவர் தமிழ் பேசினாலே வித்தியாசமாய்த் தெரியும், கூடவே புன்னகையும் அரும்பும். கணவர் தமிழ் பேச அவரின் கண்கள் கணவர் பக்கம் பார்க்க

 

‘இவனுங்க ஆந்திரால இருந்து கிளம்பி படம் காட்ட வந்தாங்களா?’ என்றுதான் கல்கியின் எண்ணம் ஓடியது. இதில் ‘இந்த அத்தை ஆந்திராவுக்குப் போய் பெயரை மாத்திடுச்சா?’ என்று வேறு யோசனை. ப்ரியத்தம்மா என்றல்லவா சூர்யா அழைத்தார். இப்படி யோசனைகளுடன் அவள் நின்றிருக்க

 

“உள்ள வாங்க மாப்பிள்ளை, வாம்மா. வாங்க தம்பி” என்று எல்லாரையும் உதயமூர்த்தி வரவேற்க கூடவே அங்கையற்கண்ணியும் வரவேற்றார். கல்கி எல்லாரையும் பார்த்து நின்றாளே தவிர பேசவில்லை.

 

ஒருவகையில் அவளின் அத்தையைப் பார்த்து பொறாமை உணர்வுதான் எழுந்தது. அவருக்குப் பிடித்த வாழ்க்கையைப் பிடித்தவருடன் பிடித்தமாதிரி அமைத்துக் கொண்டார், ஆனால் அவரின் செய்கையால் தாங்கள் பட்ட அவமானங்கள், பேச்சுகள் எல்லாம் நினைக்க நினைக்க ஒன்றுமே எளிதாய் மறக்க முடியவில்லை. அதனால் அவள் அப்படியே நிற்க யுகன் தூக்கத்தில் சிணுங்கவும்தான் அவள் அங்கேயே நிற்பது புரிந்தது. எல்லாரும் உள்ளே சென்றுவிட்டிருந்தனர்.

 

உள்ளே நடுவீட்டில் அந்த அர்த்த ஜாமத்தில் லைட் போட, எல்லாரும் விழித்துவிட்டனர். மனோகர் நன்றாய் உறங்கியிருக்க அஞ்சனா விழித்தவள் வெளியே வந்துவிட்டாள்.

 

இங்கே மகளை இத்தனை வருடம் கழித்து காணவும் தையல் நாயகிக்கு அப்படியொரு மகிழ்வு. கண்ணீர் கணங்கள் அவ்விடத்தில். அப்பாவைப் படுக்கையில் பார்க்கவும் யமுனாவிற்கு அதுவரை இருந்த தைரியம் கூட அற்றுப்போனது.

 

சற்குணப்பாண்டியன் மிகவும் கம்பீரமான மனிதர். அவர் சொல் மட்டுமே அந்த வீட்டில் கேட்கும், மறுத்து பேச யாருமே முன் வரமாட்டார்கள், மரியாதை என்பதை விட பயம் அதிகம்.

 

அந்த பயம்தான் யமுனாவை காதலிப்பதை கூட வீட்டில் சொல்லவிடாமல் தடுத்தது. யமுனா அந்த காலத்திலே பள்ளி இறுதித் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றிருக்க, உதயமூர்த்திக்குத் தங்கை என்றால் அவ்வளவு ப்ரியம், அம்மா அப்பாவிடம் கூட யமுனாவால் தடையின்றி எதுவும் பேசிவிட முடியாது. ஆனால் உதயமூர்த்தியிடம் அப்படியில்லை. யமுனா அண்ணனிடம் படிப்பதற்கு மெட்ராஸ் செல்ல வேண்டும் என்று கேட்க, சற்குணப்பாண்டியன் ஒத்துக்கொள்ளவே இல்லை.

 

தையல் நாயகியோ பெண்பிள்ளையை அவ்வளவு தூரம் தனியே அனுப்பவதா என்று அவரும் மறுத்துவிட, தங்கைக்காக அவ்வளவு பேசி படிக்கத்தானே செல்கிறாள் என்று வாதாடி போராடி அவரை சென்னையில் மிகவும் பெருமைவாய்ந்த ஒரு கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

 

எல்லாம் மூன்று ஆண்டுகள் நன்றாகத்தான் போனது, கல்லூரி விடுதியிலே தங்கிக்கொண்டார் யமுனா. அதுவும் அது பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி வேறு, அதனால் பயமின்றி இருந்தனர். அது போலவே விடுமுறை என்று வந்துவிட்டால் சாக்குப்போக்கு சொல்லாது உடனே ஊருக்கு வந்துவிடுவார் யமுனா.

 

சற்குணப்பாண்டியனின் கட்டுப்பாடுகள் எங்கும் மீறப்படவில்லை என்ற பிம்பம்தான், ஆனால் காதலுக்கு கட்டுப்பாடுகள் ஏது? காற்றைப் போல பொதுவானது. அப்படியொரு ஆந்திரா காற்று தமிழ் மங்கையின் மீது வீச அந்த காதல் யமுனாவை மொத்தமாய் ஆட்கொண்டது.

 

அப்பாவின் கட்டுப்பாடுகளில் வளர்ந்து வாழ்ந்த யமுனாவிற்கு பெண்களின் சுய சிந்தனையை மதித்து, தன்னுணர்வுகளைப் பெரிதாய் நினைக்கும் சூர்ய நாராயணன் மீது அளப்பரிய காதல் பெருகியது.

 

இருவரும் வெவ்வேறு கல்லூரி என்றாலும் கூட என்.எஸ்.எஸ்சில் இருவருக்கும் பழக்கமாக, மொழி கூட அங்கு தடையில்லை. யமுனா முதல் வருடம் சேர்ந்த போது சூர்யா கடைசி வருடத்தில் இருக்க யமுனாவிற்காக சென்னையிலே மேல்படிப்பும் படித்தார் சூர்யா.

 

சூர்யா அப்போதே யுபிஎஸ்சிக்குப் படிக்க, செர்வீஸ் கிடைத்தவுடன் திருமணம் செய்யலாம் என்று நினைத்திருக்க, யமுனா மறுத்துவிட்டார். சற்குணப்பாண்டியன் படித்து முடித்தவுடன் திருமணம் என்று சொல்லித்தான் படிக்கவே அனுப்பினார். மூன்றாம் ஆண்டு முடியும் முன்னே மாப்பிள்ளை பார்க்கும் வேலையைத் தொடங்கிவிட, யமுனாவிற்கு நிச்சயம் தெரியும் தந்தை காதல் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவே மாட்டார் என்று.

 

அண்ணனிடம் சொல்ல எண்ணம் வந்தாலும் அண்ணனும் அப்பாவின் பேச்சைத்தான் கேட்பார் என்றே தோன்றியது. அதனையும் விட வேற்று மொழி பேசுபவரோடு காதல் என்றால் நிச்சயம் வெட்டியே போடுவார் என்று நினைத்தவர் படித்து முடித்தவுடனே சூர்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.

 

வீட்டில் வந்து பேசுகிறேன் என்ற சூர்யாவையும் தடுத்துவிட்டார், அத்தனை அச்சம், ஆனால் அதையும் மீறிய ஒரு முரட்டுத்தைரியம் கல்லூரிக்கு செர்டிஃபிகேட் வாங்க போகிறேன் என்று பொய் சொல்ல வைக்க அப்படியே சென்றவர், மீண்டும் வந்தபோது கைக்குழந்தையான சீரஞ்சீவியுடன்தான் வந்தார். இப்போதாவது தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் வந்தார், அதனையும்விட சூர்யா ஐபிஎஸ் பாஸ் செய்திருக்க, கணவனை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நம்பிக்கை வேறு.

 

ஆனால் சற்குணப்பாண்டியன் சேர்க்கவில்லை. அப்போது போனவர் இத்தனை வருடம் கழித்து  வர, கம்பீரமான அப்பாவையே பார்த்து பழகியவருக்கு இப்படி படுக்கையில் பார்க்கவும் அழுகைதான்.  மகளை அருகே அழைத்தவர் அவரின் கையைப்பிடித்து

 

“நல்லாயிருக்கியா?” என்று திக்கித் திணறிக் கேட்க

 

“நல்லா இருக்கேன்பா, என்னை மன்னிச்சிருங்க” என்று யமுனா கேட்க அதைக் கண்டுகொள்ளாது சற்குணப்பாண்டியன்

 

“பேரன் எங்க?” என்று கேட்க

 

“இதோ” என்று தன் அருகே நின்ற மகனைக் காட்ட வசீகரனாய் நின்றிருந்தான் சீரஞ்சீவி.

 

“தாத்தா கிட்ட பேசு ப்ரசாத்” என்று யமுனா சொல்ல

 

“எப்படி இருக்கீங்க தாத்தா?” என்று அவரின் அருகே நெருங்கி நின்று கேட்க தனது நடுங்கும் விரலால் அவனின் முகத்தை வருடினார் சற்குணம்.

 

“மாப்பிள்ளை?” என்று மகளைப் பார்க்க

 

“எப்படி இருக்கீங்க மாமா?” என்று சூர்யாவும் அவர் அருகே நின்று பேச அப்படியே விடியவிடிய எல்லாரும் பேசிக்கொண்டிருந்தனர். சூர்யா அவருக்கென போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்க, யமுனா அம்மாவின் அருகே தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

 

சீரஞ்சீவி இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தவனுக்கு உறக்கம் கண்ணை சுற்றியது. சென்னையில் இருந்து வண்டி ஓட்டிக்கொண்டு வந்திருந்தான், அவனின் சோர்வைப் பார்த்த சூர்யா

 

“விஸ்ராந்தி திஸூகோ சிரூ” என்று சொல்ல

 

“லேது நானா” என்று அவன் மறுத்தான்.

 

“யமுனா, இவன் தூங்கல ரெஸ்ட் எடுக்க சொல்லு” என்று  பெற்றவர்களிடம் லயித்திருந்த மனைவியிடம் மகனைக் காட்டினார்.

 

“ப்ரசாத்” என்று மகனைப் பார்க்க

 

“மாப்பிள்ளை என்ன சொல்றார் டி?” என்று தையல் நாயகி மகளிடம் மெதுவாய்க் கேட்டார்.

 

“ப்ரசாத் நைட்டெல்லாம் கண்முழிச்சு கார் ஓட்டினான் ம்மா” என்றதும்

தையல் நாயகி அங்கையற்கண்ணியைப் பார்த்து

 

“என்ன நிக்கிற அங்கை? எம்மூட்டு பேரனுக்கு தூங்க ஏற்பாடு பண்ணு. முதல்ல எதாவது குடிக்க கொடு” என்று அதட்டல் போட்டார்.

 

அப்போதுதான் கண் அசந்திருந்தாள் கல்கி. இவர்கள் பேச ஆரம்பிக்கவுமே உள்ளே அவளின் அறைக்கு யுகனுடன் சென்றவள் அரைத்தூக்கத்தில் இருக்க,

 

 

“இந்த நேரம் அவ போய் தூங்குறா பாரு” என்று சின்ன மகளைத் திட்டியபடி அங்கையற்கண்ணி  மகளின் அறைக்கு வந்தவர்

 

“கல்கி எழுந்திரு டி” என்று வந்து முதுகில் தட்டினார்.

 

“ம்மா, இப்போதானே தூங்க ஆரம்பிச்சேன்” அவள் கோபமாய் சொல்ல

 

“பேசாத டி, அந்த பையன் படுக்கனும். நீ வந்து எங்க ரூம்ல படுத்துக்கோ” என்றார்.

 

“என் ரூம்ல யாரை படுக்க சொல்லப்போற?” என்று அவள் எழுந்து உட்கார்ந்து பேச, அந்த சத்தம் கேட்டு யுகன் விழித்தவன் அழ அஞ்சனா மகனைத் தூக்கியவள்

 

“நான் இவனை தூங்க வைக்கிறேன்” என்று வந்து நின்றாள்.

 

“நீ போ” என்று பெரிய மகளை அனுப்பியவர்

 

“எங்க ரூம் இப்படி சுத்தப்பத்தமா இருக்காது கல்கி, அதைவிட அங்க மெத்தைக் கூட இல்லை. உங்க அப்பத்தா பேரனை தரையில் படுக்க வைச்சா சும்மா விடுவாங்களா?” என்று கேட்டார்.

 

“அதுக்கு?” என்று முறைத்த கல்கி ,

“இத்தனை வருஷம் எங்க போச்சு இந்த பாசம்?” என்று அம்மாவைக் கேட்க

 

தையல் நாயகி வெளியே இருந்து சத்தம் போட்டார்.

 

“இதோ வந்துட்டேன் அத்த” என்றவர் மகளை எழுப்பிக் கொண்டு கையோடு வெளியே வர சிரஞ்சீவி பார்வை அந்த பெண்ணின் மேல் ஆராய்ச்சியாய் விழுந்தது.

 

ஆராய்ச்சிதான், ஆவல் சிறிதுமில்லை சிரஞ்சீவியிடம். இத்தனை வருடங்களாய் அவன் பார்த்திராத சொந்தங்களை அன்பின் விழிகளால் அவன் பார்க்கவில்லை. அவனின் எண்ணம் வேறு!

 

தன் அப்பா அம்மாவை எப்படி பார்த்துக்கொள்வார் என்று தெரியும், அவன் அப்பாதான் அவனின் ஹீரோ! என் தந்தையை விட இவர்கள் சிறந்த மாப்பிள்ளையைப் பார்த்திருப்பார்களா என்ற எண்ணமே!

 

யமுனாவிற்குப் பெற்றவர்கள் மீது இவ்வளவு பாசமிருக்கும் என்று  அவனுக்கு ஒரு அனுமானமும் இல்லை, உண்மையில் யமுனா அதனைக் காட்டிக்கொள்ளவில்லை. அம்மா அழவும்தான் இவர்களை ரொம்பவும் தேடியிருக்கிறார் என்றே புரிந்தது.

 

வீட்டுக்குள் நுழைந்தது முதலே அவன் விழிகள் எல்லாரையும் நோட்டமிட்டு இவர்கள் எப்படி என்று ஆராய்ந்தது. அஞ்சனா உறக்கத்தில் இருந்து எழுந்து வந்ததையும் கவனித்தான். வந்தவள் இவர்களை வரவேற்றதையும் குறித்துக்கொண்டான். அதே நேரம் கல்கி இவர்களைப் பார்த்தவள் பேசாமல் போய் உறங்கியதும் இப்போது அவள் எழுந்துவருவது என்று ஒன்றுமே அவனின் போலீஸ் கண்களுக்குத் தப்பவில்லை.

 

கல்கிக்குத் தங்கள் மேல் பிடித்தமில்லையா இல்லை உறக்க கலக்கமா என்று அவன் யோசித்தான். எப்படியோ பேசாமல் கல்கியைப் பற்றிய ஒரு கணிப்பு அவனுள் ஓடியது.

 

“உள்ளே போ ரெஸ்ட் எடுங்க தம்பி” என்ற உதயமூர்த்தி

 

“நீங்களும் போங்க மாப்பிள்ளை, சொல்லு யமுனா” என்று தங்கையைப் பார்த்தார்.

 

“போங்க” என்று யமுனா சொல்ல மகனுடன் சூர்ய நாராயணனும் உள்ளே போக, அப்பாவும் மகனும் உறங்க

 

இங்கு

“பேரன் பேரு ப்ரசாதா?” என்று தையல் நாயகி கேட்டார்.

 

“ம்ம், ஆமாம்மா. த்ரிபுரனேனி சிரஞ்சீவி வரப்ரசாத்” என்று மகனின் பெயரை பெருமையாய் சொன்னவர்

 

“சென்னையில எஸ்.பியா இருக்கான்மா. அவரை மாதிரி இவனும் ஐபிஎஸ்” என்றவரின் பேச்சில் பெருமிதம் கூடிக்கொண்டே போக இங்கு இதைக் கேட்டிருந்த கல்கிக்கோ கோபம் பெருகியது.

 

‘ஆளுக்கு பெயரை வைங்கன்னா ஊருக்கே பெயரை வச்சிருக்காங்க?’ என்று நினைக்க, தையல் நாயகிக்கும் அதே சந்தேகம்.

 

“இவ்வளவு நீட்டமான பெயரா டி?” என்று மகளிடம் கேட்க

 

“அது எங்க வீட்டுப்பெயர்மா, பெயருக்கு முன்னாடி போட்டுக்கறது அங்க பழக்கம்” என்றார் யமுனா.

 

அங்கையற்கண்ணி அப்போதே சமையல் தொடங்கிவிட கூட சென்று உதவினாள் கல்கி.

 

எட்டு மணி போல் அப்பாவும் மகனும் எழுந்துவர அவர்களுக்குக் கொடுத்த டீயைப் பருகிக் கொண்டிருந்த நேரம்.

 

யமுனா அப்பாவின் பக்கத்திலே இருக்க, உதயமூர்த்தியை அருகே அழைத்தார் சற்குணப்பாண்டியன். அவரின் பார்வை மொத்தமும் கம்பீரமாய் இருந்த தன் பேரன் மீதுதான், எப்போதுமே ஆண் வாரிசு இல்லையே என்ற வருத்தம் அவருக்கு உண்டு. இப்போது பேரனைப் பார்க்கவும் மனதில் ஒரு எண்ணம் விழ,

 

“அம்மாடி! என் பேத்தி சின்னவளை உன் மகனுக்குக் கட்டி வைக்கிறியா?” என்று கேட்டுவிட்டார்.

 

யமுனா நிச்சயமாய் இதை எதிர்ப்பார்க்கவில்லை.

“அப்பா..” என்று அவர் பார்க்க

 

கல்கியின் பக்கம் பார்த்தவண்ணம் சற்குணப்பாண்டியன் “நல்ல பொண்ணும்மா, எனக்கு அப்புறம் இந்த வீட்டோட உனக்கு உறவு விட்டுப்போய்டக் கூடாது” என்று அவர் பேச கல்கி கொதித்துப் போய் பார்த்தாள்.

 

சிரஞ்சீவி “ஏன் டி ம்மா இதி?” என்று அதிர்ச்சியில் எழுந்து விட

 

“யமுனா?” என்று சூர்ய நாராயணனும் எழுந்துவிட்டார்.

 

கொஞ்சமும் யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்றை சற்குணப்பாண்டியன் சொல்லிவிட எல்லாருக்குமே அதிர்ச்சிதான். ஆனால் அவரின் கட்டளைகள் எல்லாம் பிள்ளைகள் வரை மட்டுமே பேரப்பிள்ளைகளிடம் செல்லாது என்பதை சிரஞ்சீவி  தன் பேச்சில் புரியவைத்தான்.

 

✅ End of Episode 2
How did you feel about this episode?
❤️ 8 more...

You must Log in or Register to react here

💬 10 Replies
Kavi Natarajan Reader 1 month ago

Very nice up ma😍😍😍😍😍

❤️ 1 more...
Pavithra Narayanan 1 month ago

Thank you 🌟

Sathya Velusamy Reader 1 month ago

போறவங்க ஜாலியா போயிடறாங்க..... அதுக்கெல்லாம் சேர்த்து இருக்கவங்களை வைச்சு செய்வாங்க.....

அடேய் உன்னை கட்டிக்க யாரும் தவம் கிடக்கலை.....shock ஐ குறை
😂 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago

ஆளுக்கு பேர் வைக்க சொன்னா

ஊருக்கு பேர் வெச்சிருக்காங்க.... 😂😂😂😂😂😂
😂 1 more...
Srichitra Reader 1 month ago

Nice.இக்கதையில்  எனக்கு மிகவும் பிடித்தவர்கள்  கல்கி, சூர்யா அடுதது பங்காரம்.   Letter  konjam பெரிது பண்ண முடியுமா பவி மா.

Pavithra Narayanan 1 month ago

Next episode பண்ணியிருக்கேன் மா, இது ஏற்கெனவே போட்டாதால் எடிட் செய்யல. பண்றேன். நெக்ஸ்ட் ஓன் ஓகே வா சொல்லுங்க @Srichitra 

❤️ 1 more...
Jeeona Reader 1 month ago

kalki nadathukurathula enna thappu iruku thedir engirtho vantha athai mela odane epadi pasam varum kovam thaan varum

❤️ 1 more...
Marlimalkhan Reader 1 month ago

Super Ma 

Surya Palanivel Reader 1 month ago

இந்த epi ல சூர்யாகாரு கதை தான் mindகுள்ள.. Madras.. 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago

ஒரு நாள் ஓடிப் போனதால் ஒவ்வொரு நாளும் 

ஒடுங்கி உடைந்து போகும் பிள்ளைகள்.....
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top