Episode 3

சற்குணப்பாண்டியனுக்கு மகளைக் காணும்வரையில் அப்படியொரு எண்ணமே இல்லை. மகள் வழிப்பேரனைக் காணவும் அவனின் தோற்றம், அவன் பதவி எல்லாம் அவருக்கு ஒரு நிறைவைத் தர, ஆண் மக்கள் இல்லாத மகனுக்கு அவன் துணையாய் இருப்பான் என நினைத்துதான் பேச ஆரம்பித்தார். அஞ்சனாவை வெளியில் திருமணம் செய்து கொடுத்திருக்க, என்ன இருந்தாலும் சிரஞ்சீவி அவர்கள் இரத்தம் ஆயிற்று எப்போதும் மாமனுக்குத் துணையாய் இருப்பான் என்ற நினைப்பு மட்டுமே.

 

யமுனா எந்தளவு அதிர்ச்சியானரோ அதே அளவு உதயமூர்த்தியும் அப்பாவின் பேச்சில் அதிர்ந்துதான் போனார். தங்கை மகனாகவே இருந்தாலும் கூட சிரஞ்சீவியைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாதே, இப்படி அவசரமாய் இதனைப் பேச வேண்டுமா என்று நினைக்க, யமுனா அப்பாவுக்கு என்ன பதில் சொல்வதென யோசித்தார்.

 

நிச்சயம் அவருக்கும் இதில் விருப்பமில்லை, கல்கியின் பெயரைத் தவிர ஒன்றுமே தெரியாது அவருக்கு. அதனையும் விட மகனின் விருப்பம்தான் அவரின் விருப்பம், தான் வளர்ந்தது போல் இல்லாது மகன் மனதில் பட்டதை சொல்லவும் செய்யவும் முழு சுதந்திரம் கொடுத்தே வளர்த்திருந்தார்.

 

ஆனாலும் அப்பாவின் மனம் நோகாமல் எப்படி மறுப்பதென பார்க்க, அதெல்லாம் சிரஞ்சீவிக்குக் கவலையில்லை.

 

எழுந்து நின்றவன்

“இங்க பாருங்க உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னதால்தான் அம்மாவும் நாங்களும் பார்க்க வந்தோம், உறவை வளர்க்கனும் நினைச்சிருந்தா எப்பவோ அம்மாவை ஏத்துட்டு இருந்திருப்பீங்க. இத்தனை வருஷம் எங்கம்மாவை நாங்கதானே பார்த்தோம், இனிமேலும் நாங்க பார்ப்போம். உங்க பேத்தியை எல்லாம் எனக்கு கல்யாணம் செய்ய விருப்பம் கிடையாது. இப்படி பேச்சு வேண்டாம் தாத்தா” என்றான் அழுத்தமாக.

 

அவனால் அவர்களை உறவாய் நினைக்கக் கூட முடியவில்லை. அப்படியிருக்க அந்த வீட்டு பெண்ணுடன் திருமணமா? என்ற எண்ணமே. இங்கு வந்தது அம்மாவுக்காக மட்டுமே, அதனால் அவன் மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று கவலையின்றி தன் மனதை சொல்லிவிட கல்கிக்கு ஏற்கனவே இவர்கள் மீது தீரா கோபம்.

 

அதிலும் கல்கியைப் பார்த்தவண்ணம்,

‘உங்க பேத்தியை எல்லாம் கல்யாணம் செய்ய எனக்கு விருப்பம் கிடையாது’ என்று சொன்னது அவளின் ஈகோவைத் தூண்டியது.

 

என்னமோ  நான் இவனைத் திருமணம் செய்ய காத்திருப்பது போல் என்ன பேச்சு இது என்ற ஆத்திரம். இரவெல்லாம் வேறு தூங்கவில்லை அவள், அந்த எரிச்சல் வேறு. இத்தனை வருடம் இல்லாமல் இன்று வந்தவர்களுக்காக என் அறையைத் தர வேண்டுமா என்று ஏற்கனவே கடுப்பில் இருந்தாள்.

 

அதனால் கொஞ்சமும் யோசிக்காது கல்கி,

“எனக்கும் உங்க பேரனைக் கல்யாணம் செய்ய இஷ்டமில்லை தாத்தா” என்றாள் சத்தமாய். அதில் சிரஞ்சீவி இவளைப் பார்க்க சிரஞ்சீவியை முறைத்தாள். அவனோ அவள் பார்வையை அலட்சியம் செய்து நின்றான்.

 

சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டேன் என்பது போல் மீண்டும் அவன் நாற்காலியில் சாதாரணமாய் உட்கார்ந்துவிட்டான்.

 

மகள் அப்படி பேசவும் உதயமூர்த்திக்குக் கோபம் வர,

“கல்கி” என்றார் அதட்டலாக. அப்போதுதான் அவளின் பெயரையே தெரிந்து கொண்டான் சிரஞ்சீவி.

 

அப்பாவைப் பார்க்க

“பெரியவங்க பேசும்போது உனக்கென்ன பேச்சு?” என்று திட்ட

 

“ஏன் என்னோட கல்யாணத்தைப் பத்தி பேசும்போது நான் பேசக் கூடாதா?” என்று பேசவும்

 

“கூடாது, உள்ள போ” என்றார் அதட்டலாக.  சற்குணத்திடம்

 

“அப்பா, நான் என்னைக்குமே யமுனாவை விட மாட்டேன். நீங்க தேவையில்லாம கவலைப்படாதீங்க, இந்த பேச்சு வேண்டாம்” என்று உதயமூர்த்தி சொன்னவர் மனைவியிடம்

 

“அப்பாவுக்கு சாப்பிட எடுத்துட்டு வா அங்கை” என்றார்.

 

அத்துடன் அந்த பேச்சு நின்றுவிட்டது. கணவருக்குக் கஞ்சியைக் கொடுத்த தையல் நாயகி மகளிடம்

 

“ஏன் யமுனா, பேரனுக்கு ஆந்திராவுலயே பொண்ணு எடுக்க போறீங்களா?” என்று மெதுவாய்க் கேட்டார்.

 

இப்படி ஒரு கம்பீரமான பேரனை இத்தனை வருடம் பார்க்காமல் இருந்துவிட்டோமே என்ற வருத்தம் அவருக்கு மேலோங்கியது. எத்தனையோ முறை கணவனிடம் கேட்டுவிட்டார், அவரோ

 

‘என் மான மரியாதையை வாங்கிட்டுப் போனவ உனக்கு முக்கியமா?’ என்று திட்டித் தீர்ப்பார். நடுவீட்டில் பாய் போட்டு காலை உணவு எல்லாருக்கும் பரிமாறப்பட, மனோகர் அப்போதுதான் சிரஞ்சீவியின் குடும்பத்தைப் பார்த்தான். பார்த்தவன் மரியாதையாய் நலம் விசாரித்தான்.

 

கல்கியின் முகம் அவ்வளவு எரிச்சலை சுமந்திருக்க, அவளை கிச்சனில் நிற்க வைத்துவிட்டார் அங்கையற்கண்ணி.

 

“பெரியவங்க பேசும்போது உன்னைப் பேசக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன் கல்கி?” என்று மகளிடம் கேட்க

 

“அவங்க என் கல்யாணத்தைப் பத்தி பேசுறாங்க, நான் எப்படி சும்மா இருக்கறது? அந்த பையன் மட்டும் பேசினான்” என்றாள்.

 

இன்னமும் அடங்கவில்லை அவளின் ஆத்திரம்.

 

“மெதுவா பேசுடி, அவன் இவனு பேசாத. அந்த பையன் போலிஸாம், உன்னை விட வயசுல பெரியவன்” என்று கண்டித்தவர்

 

“அப்பா எப்படி தாத்தா சொன்னதுமே ஒத்துக்குவார்னு நீ நினைச்ச கல்கி, இது உங்க கல்யாண விஷயம்”

 

“தாத்தா சொன்ன எல்லாத்துக்குமே அப்பா இதுவரை ஒத்துட்டு இருந்திருக்கிறார்” முணுமுணுத்தாள் கல்கி.

 

“அது வேற கல்கி, இதெல்லாம் அப்பா அப்படி செய்ய மாட்டார். அஞ்சுவுக்கே எவ்வளவு தேடி அலைஞ்சு மாப்பிள்ளைப் பார்த்தார். அவ நல்லாதானே இருக்கா? சொல்லேன் அஞ்சு” என்று பெரிய மகளையும் துணைக்கு அழைத்தார்.

 

ஒருத்தியாய் கல்கியை சமாளிப்பது மிகவும் கடினம். மாமியார் போல் வாய் என்று மனதினுள் திட்டிக்கொண்டார். மகள்களைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் மகள்கள் எல்லாம் மாமியாரின் மறு உருவம் என்று.

 

“அம்மா சொல்றது சரிதானே கல்கி? நான் நல்லாதானே டி இருக்கேன். இந்த விஷயத்துல எல்லாம் அப்பா தாத்தா சொல்றது கேட்க மாட்டார்” என்றாள் அப்பாவைத் தெரிந்தவளாக.

 

“நீ தோசை சுடு கல்கி நீதானே அழகா சுடுவ” என்று பாராட்டாய்ப் பேசி மகளின் மனதை குளிர்வித்தவர்

 

“அஞ்சு நீ போய் அங்க பரிமாறு, நானும் வரேன். இந்தா காரச்சட்னியை எடுத்துட்டுப் போ” என்று சொன்னவர் கல்கியிடம்

 

“கல்கி! உங்கத்த வீட்டுக்கார் விஜயவாடால வேலை செய்றாராம்.  உங்கத்தையும் அங்க காலேஜ்ல புரோபசராம் டி” என்றதும்

 

“இதெல்லாம் பெருமையா உங்கிட்ட சொன்னாங்களாம்மா, நீயும் சொல்ல வேண்டியதுதானே? வார்த்தைக்கு வார்த்தை அத்தை மாதிரி இருக்க கூடாதுன்னு தாத்தா சொன்னதெல்லாம். இந்த அப்பத்தா பாவிமக என்னை ஏமாதிட்டான்னு அடிக்கடி அழுதிட்டு கிடக்குமே அது, அப்புறம் நம்ம பங்காளிங்க எல்லாம் உன் பொண்ணுங்களை அடக்கி வளர்த்துக்கோ இல்லைனா உன் தங்கச்சி மாதிரி குடும்ப மானத்தை வாங்கிடும்னு சொன்னாங்களே…எல்லாம் சொல்லும்மா” என்று நக்கலாய் சொல்ல

 

“ஷ்! கத்திப் பேசாத கல்கி. என்னதான் இருந்தாலும் உங்கப்பாவுக்குத் தங்கச்சி மேல பாசம் அதிகம். இப்படி போய் அவர்கிட்ட பேசி வைக்காத, நீ சொல்றது சரிதான், அந்த மகராசி ஓடிப்போய் நல்லபடியாதான் இருந்திருக்கா, நம்மதானே இங்க அரைப்பட்டோம்” என்று புலம்பினார்.

 

அப்படியே காலை உணவு முடிந்துவிட, உறவுகள் வந்தவண்ணம் இருந்தனர். யமுனா வந்த செய்தி கேட்டு இன்னும் நிறைய பேர் வர  எல்லாரிடமும் சளைக்காமல் பேசிக்கொண்டிருந்தார். அதனையெல்லாம் மனதில் எழுந்த புன்னகையுடன் பார்த்திருந்தான் சிரஞ்சீவி.

 

இடையே இவனைப் பற்றி கேள்வி வர மகனையும் கணவனையும் பற்றி பேசும்போது  பெருமிதம் கண்ணில் மின்ன வார்த்தைகள் வந்தன யமுனாவிற்கு.

 

அப்படி அம்மாவை பெருமையான நிலையில் வைத்திருக்கும் அப்பாவை நினைத்து இன்னும் பெருமைக் கொண்டான் சிரஞ்சீவி. இவர்கள் வெளியே இருந்த நேரம் கல்கியின் உடைகள் சிலவற்றை எடுத்துவந்து அவர்கள் அறையில் வைக்க சொல்லிவிட்டார் அங்கையற்கண்ணி. கல்கியின் அறை யமுனாவின் குடும்பத்தினருக்கென ஒதுக்கப்பட்டது.

 

சற்குணப்பாண்டியனின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, அதே சமயம் பின்னடைவும் இல்லை. மகளின் குடும்பத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் ஓரளவு நன்றாகவே இருந்தார்.

 

அன்று முழுவதுமே கல்கி இவர்களிடத்தில் ஒருவார்த்தை கூட பேசவில்லை, பேச விருப்பம் கொஞ்சமுமில்லை. அதை யார் கவனித்தார்களோ இல்லையோ சிரஞ்சீவி நன்றாய் கவனித்தான்.

 

அதுவும் இவன் அவளைத் திருமணம் செய்ய மறுத்த கணம், மங்கை உரைத்த வார்த்தைகள் நினைவில் வர அவளின் ஈகோ இவனுக்குத் தெள்ளத்தெளிவாய் விளங்கியது. இருந்தாலும் யாரையுமே அவன் மனதால் அணுகவில்லை, இவர்கள் என் உறவு என்ற உணர்வு இயல்பில் மலராது போக, பெரிதாய் அவன் அலட்டிக்கொள்ளவில்லை.

 

அம்மாவைப் போல் அவர்கள் யாருடனும் இவனாலும் சூர்யாவினாலும் ஒட்டமுடியவில்லை. சூர்யாவை உதயமூர்த்தி தங்கள் வயல்களை சுற்றிப் பார்க்க அழைத்து சென்றிருக்க, இவனுக்குப் பொழுது ஓடவில்லை.

 

அம்மாவைத் தனியே அழைத்தவன்

 

“ம்மா, அதான் தாத்தா நல்லா இருக்காரே. நம்ம போகலாமா?” என்ற மகனை முறைத்த யமுனா

 

“என்ன ப்ரசாத் நீ? அம்மா எத்தனை வருஷம் கழிச்சு என்னோட அப்பா அம்மாவைப் பார்க்கிறேன், இப்படி பேசுற?” என்றார் மகனின் பேச்சுப் பிடிக்காதவராக.

 

“அதில்லமா உனக்கு வேணும்னா நீ இருந்துட்டு வா. எனக்கும் அப்பாவுக்கும் போர் அடிக்குது” என்று சொல்லிவிட

 

“ஒரு நாளைக்கு உனக்குப் போர் அடிக்குதா?” என்று முறைத்த யமுனா

 

“எல்லார் கூடவும் பேசு ப்ரசாத், உனக்குப் பிடிக்கும். நீயாச்சும் பரவாயில்லை  கல்யாணம் ஆன புதுசுல எனக்கு தெலுங்கே தெரியாது, அப்பாவைத் தவிர யாருக்கும் அங்க தமிழ் தெரியாது. அம்மா சமாளிச்சேன் தானே?” என்று சொன்ன அம்மாவின் கையைப் பற்றினான் மகன்.

 

“சரி நீங்க இஷ்டம்போல இருங்க, ஆனா எனக்கு லீவ் கிடையாது. இன்னிக்கு நைட் கிளம்பிடுவேன்” என்றான் முடிவாக.

 

“அப்பா உங்க கூட இருப்பாங்க, கிளம்பும்போது சொல்லுங்க நான் இங்க ஃப்ளைட்ல வந்துட்டு உங்களைக் கார்ல அழைச்சிட்டுப் போறேன் இல்லையா டிரைவர் வச்சிப்போம்” என்றவன்

 

“எனக்கு கம்பெனி கொடுக்க இங்க யாருமில்லம்மா, உங்க அண்ணாவுக்கு இரண்டுமே பொண்ணுங்க, எனக்கு செட்டாகாது”

 

“அப்பா காலையில அப்படி பேசினதால இப்படி சொல்றியா ப்ரசாத்?”

 

“இல்லைனாலும் எனக்குப் பொண்ணுங்க கிட்ட எல்லாம் கேஷுவலா பேச வராதும்மா. நான் ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று கல்கியின் அறைக்குள்  நுழைந்து கொண்டான்.

 

அவன் சொல்வதும் உண்மைதான், அவன் பெண்களிடம் அப்படி சகஜமாகப் பேச மாட்டான், உறவுப்பெண்களிடமும் கூட அளவாகவே பேசுவான். அதனால் மகனை யமுனா வற்புறுத்தவில்லை.

 

அந்தி நேரம். கல்கி பின்னால் தான் வளர்த்துவரும் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். பின்பக்கம்தான் குளியல் அறையும் இருக்க, யமுனா குளித்துவிட்டு அங்கேயே உடைமாற்றி வந்தவர்

 

கல்கியைக் கண்டுவிட்டு

“நீதான் டெய்லி தண்ணி விடுவியாம்மா?” என்று கேட்க

 

“ம்ம்” என்றாள்.

 

“உன் பெயர் கல்கியா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. யார் வச்சா?” என்று யமுனா பேச்சை வளர்த்தார். கல்கியிடம் தான் பேசவில்லை என்பது அவளைத் தனியே பார்க்கையில்தான் விளங்கியது யமுனாவிற்கு, அஞ்சனா அவளாகவே வந்து பேசியிருந்தாள், அது போல் கல்கி ஏன் பேசவில்லை என்று யோசனை போகவில்லை.

 

அண்ணனுக்குத் திருமணம் ஆனது தெரியும், பெண்பிள்ளைகள் என்று தெரியும். ஆனால் பார்க்க முடியாத சூழல், இப்போது பார்க்கவும் பெண்மக்கள் இல்லாத அவருக்கு ஆசை, என்னதான் கொழுந்தன்மார்களுக்குப் பெண்பிள்ளைகள் இருந்தாலும் தன் இரத்தம் என்பது தனியே தெரிய, அண்ணன் மகளுடன் இயல்பாகவே பேச முனைந்தார். மகனைப் போல் அவரால் கல்கியைக் கணிக்க முடியவில்லை.

 

கணித்திருந்தால் ஒரு களேபரத்தை தவிர்த்திருக்கலாம்.

 

“எங்கம்மா வச்சாங்க. அவங்களுக்குக் கல்கி கிருஷ்ணமூர்த்தினா பிடிக்கும்”

 

கேட்டதற்கு மட்டும் பதில் சொன்னாள் கல்கி.

 

“என்னம்மா படிக்கிற?” என்றதற்கு

 

“ப்ளஸ் டூ முடிச்சிட்டு ஒரு வருஷமா சும்மாதான் இருக்கேன்” என்றதும் யமுனாவிற்கு அதிர்ச்சி.

 

“என்ன சும்மா இருக்கியா?” என்று ஒரு வேகத்தில் கேட்டுவிட்டார். இந்த காலத்தில் யாராவது படிக்காமல் இருப்பார்களா? அதுவும் தன் அண்ணன் அப்போதே தன்னை சென்னை அனுப்பி படிக்க வைத்தவர். பணத்திற்கும் தன் வீட்டில் பிரச்சனையில்லை என்று தெரியும். அப்படியிருக்க என்ன இந்த பிள்ளை படிக்கவில்லை என்கின்றாள் என்று நினைத்தவர் அதன் காரணம் தானாக இருப்போம் என்று கொஞ்சமும் யோசிக்கவில்லை.

 

ஆனால் சும்மா இருக்கியா? என்ற அத்தையின் கேள்வி, அதனுடன் தொடர்ந்து

 

“படிப்பு எவ்வளவு முக்கியம் தெரியுமா கல்கி? ஒரு வருஷம் ஏன்மா வேஸ்ட் பண்ணின?” என்று அறிவுரை சொல்ல ஆரம்பிக்க, யமுனாவிற்குத் தான் கால் வைத்தது கன்னிவெடி என்று தெரியவில்லை.

 

கன்னிவெடி வெடித்துவிட்டது.

 

“ஓஹ், படிப்பு ரொம்ப முக்கியம்னு எங்களுக்கு நல்லா தெரியும். ஆனா ஆசைப்பட்டதை படிக்க வைக்க வீட்ல ஒத்துக்கனுமே?” என்றாள் நக்கலாக.

 

“அண்ணன் கிட்ட கேட்டா நீ ஆசைப்பட்டதைப் படிக்க வைப்பாரே டா” என்று அக்கறையாக அன்பாகவே பேசினார் யமுனா.

 

கல்கிக்கு இருந்த கோபத்தினால் அவரின் அக்கறை கூட இனிக்கவில்லை அவள் கரையில். மாறாய் இத்தனை ஆண்டு வேகம் கரை உடைத்தது.

 

“உங்களுக்காக தாத்தா கிட்ட பேசி சண்டைப்போட்டு நீங்க ஆசைப்பட்டதை படிக்க வச்சதுக்கு தண்டைனைதான் நான் படிக்க முடியாம இருக்கறது” என்றாள் கோபமாக.

 

“என்ன நானா? நான் என்னம்மா செஞ்சேன்?”

 

“என்ன செஞ்சீங்களா? நம்பினவங்களை மோசம் செஞ்சீங்க, உங்களை மாதிரி ஒரு சுய நலவாதியை நான் பார்த்ததே இல்லை. உங்களுக்காக எங்க அப்பா பேசி தாத்தாகிட்ட சண்டைப்போட்டு படிக்க வச்சா, நீங்க என்ன பதிலுக்கு செஞ்சீங்க? உங்க வாழ்க்கைதான் முக்கியம்னு ஓடிப்போய்ட்டீங்க” என்றதும் யமுனாவிற்கு கண்கள் கலங்கிவிட்டன.

 

“உங்களால நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? இப்பவும் படுறேன் நான். உங்களை மாதிரி இருக்க கூடாதுன்னுதான் எங்களுக்கு முழு நேர அட்வைஸ். என் அக்கா அவ்வளவு நல்ல மார்க் எடுத்து சென்னையில அண்ணா யுனிவர்சிட்டில படிக்க சீட் கிடைச்சும் தாத்தா அனுப்பல, அப்பா பேசினதுக்கு உன் பேச்சைக் கேட்டு உன் தங்கச்சியை நம்பினேன், இப்ப பொண்ணு மாதிரி பேத்தியும் ஓடிப்போகனுமான்னு கேட்டார்”

 

“உங்க ஆசையை நிறைவேத்தினதுக்குத் தண்டனை எங்க ஆசை  நிறைவேறாம போனதுதான். பட் உங்களுக்கு இது பத்தி எந்த கவலையும் கிடையாதில்ல” என்று கல்கி பேச பேச யமுனாவின் விழிகள் உடைப்பெடுத்தன.

 

மனதிற்கு மிகுந்த கஷ்டமாகிவிட்டது. கல்கி அதனைக் கண்டுகொள்ளாமல் பேச

 

“ஸ்டாப் இட் இடியட்” என்று சிரஞ்சீவியின் குரலில் யமுனாவும் கல்கியும் திரும்பிப் பார்த்தனர்.

 

“என்ன தைரியம் இருந்தா என் அம்மாவைப் பேசுவ நீ? அல்லரி பிள்ளா(silly girl)” என்றான் எரிச்சலாக.

 

“ப்ரசாத் நீ பேசாத” யமுனாவிற்கு மகனின் கோபம் தெரிந்து அவனை அடக்கப் பார்க்க, அத்தை மகனை அறியாத கல்கி இப்போது கன்னிவெடியில் கால்வைத்தாள்.

 

“ஏன் உங்கம்மான்னா பேசக் கூடாதா?”என்று கல்கி எதிர்த்துப் பேச

 

“ஹேய்! யூ டேமிட்” என்று சிரஞ்சீவி கை ஓங்கிவிட்டான். யமுனா மகனின் கையைப் பிடித்தார்.

 

“அவ தெரியாம பேசிட்டா, சின்ன பிள்ளை மேல கை ஓங்குவியா?” என்று யமுனா மகனை அடக்க நினைக்க

 

“நான் தெரிஞ்சுதான் பேசினேன்” என்ற கல்கியைக் கண்ணில் கனலுடன் பார்த்தான் சிரஞ்சீவி வரப்ரசாத்.

 

✅ End of Episode 3
How did you feel about this episode?
❤️ 5 more...

You must Log in or Register to react here

💬 10 Replies
Pavithra Narayanan Admin 1 month ago

@Srichitra 

இந்த size ஓகே வா மா? 
என்ன ஒண்ணு இந்த size ல வச்சா spacing increase ஆகுது. அது problem இல்லைதானே? 
Srichitra Reader 1 month ago

Very nice. 

❤️ 1 more...
Srichitra Reader 1 month ago

Story size padikka முடிகிறது. Nanga message  podugira  letters than romba small aga irukku ma.

❤️ 1 more...
Pavithra Narayanan 1 month ago

Yes ma. Team la solikren, they are working on it. 


And also nama message podrapo mela editor la neengale size change panalam
See idhu Nan increase paninen. 

Episode size last one or this one okay. 


👏 1 more...
Kavi Natarajan Reader 1 month ago

Very nice up ma💞💞💞💞💞

❤️ 1 more...
Pavithra Narayanan 1 month ago
Thank you 😊 
Sathya Velusamy Reader 1 month ago

இந்த எபி எத்தனை முறை படித்தாலும் யமுனா மேல பயங்கற கோபம் தான் வருது.....

அடேய் த்னிபுரனேனி கல்கி பேசுனதுல என்னடா தப்பை கண்டுபிடிச்ச......பெரிசா கைய ஓங்கிட்டு வரான்...... Stupid fellow
❤️ 1 more...
Jeeona Reader 1 month ago

ava enna thappa sollita ava kastam avaluku 😒

❤️ 1 more...
Marlimalkhan Reader 1 month ago

Super 

Mrs Beena loganathan Reader 1 month ago

அவரவர் நியாயங்கள் அவரவர்களுக்கு 

அவரவரின் கோபம் 
அவரவர்களுக்கு....
எல்லாம் கிடைத்தவனுக்கும் எதுவும் கிடைக்காதவளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு 
இந்த புரியாத கோபம்
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top