Episode 6

மகன் இன்னும் தன் கையை விடாது பற்றியிருக்க யமுனா சிரஞ்சீவியிடம் இருந்து கையை உருவிக்கொண்டு,

 

“என்ன ப்ரசாத் பாம்பு பார்த்து பயந்துட்டியா?” என்றதும் சிரஞ்சீவி அவரை முறைத்துப் பார்த்தான்.

 

“என்னைப் பார்த்தா பாம்புக்குப் பயப்படுற மாதிரி தெரியுதாம்மா?” என்றான் கையைக் கட்டிக்கொண்டு.

 

“அப்புறம்?” சிறு புன்னகையுடன் மகனைக் கேட்டார்.

 

யமுனா கொஞ்சம் சந்தோஷமாய் இருந்தார். வந்த நாளிலிருந்து கல்கி ஒருவார்த்தை அத்தை என்று சொன்னதில்லை, அது மட்டுமில்லாமல் அவளிடமிருந்து திட்டு மட்டுமே வாங்கியிருக்க, அவளின் பேச்சில் அவருக்குள் ஆனந்தம்.

 

“அது, திடீர்னு நான் பாம்பை எக்ஸ்பெக்ட் பண்ணல, அதுவும் அது உங்க பின்னாடி போகவும் டென்ஷன் ஆகிட்டேன். இல்லைன்னா நானே அடிச்சிருப்பேன்” என்றான் இப்போது பதட்டமெல்லாம் நீங்கியவனாக. சொல்லிவிட்டு அம்மாவின் முகம் பார்க்க, அதில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்தவன்

 

“என்ன ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல?” சிரஞ்சீவியும் சிரித்தபடி கேட்டான்.

 

“அது கல்கி என்ன அத்தைனு சொல்லிப் பேசினா இல்லை, அதான்” என்றதற்கு

 

“அந்த குட்டிப்பொண்ணு அத்தைன்னு சொன்னதுக்கு இவ்வளவு ஹாப்பி ஆவீங்களாம்மா?” ஆச்சர்யமாய்க் கேட்டான் மகன்.

 

“பின்ன, இத்தனை வருஷம் இவங்க இல்லாம இருந்துட்டேன். என்னோட தப்புதான், ஆனா பார்த்த பின்னாடியும் என்னைத் தள்ளி வைக்கும்போது கஷ்டமா இருந்துச்சு ப்ரசாத். இப்போ கல்கி பேசவும் எனக்கு சந்தோஷமா இருக்கு” என்ற அம்மாவைப் பார்த்தவன்

 

“இவ்வளவு தேடுறவங்க இத்தனை நாள் எங்கிட்ட சொல்லியிருக்கலாமே ம்மா, நம்ம தாத்தா நல்லா இருக்கும்போதே வந்து பார்த்திருக்கலாமே?” என்றான்.

 

“இல்லை ப்ரசாத், உனக்கு என்னோட அப்பாவைத் தெரியல, தண்ணீ வாங்கிக் குடிக்கனும்னா கூட ஜாதி பார்ப்பார். அப்படியொரு ஆள் அவர், அவர்னு இல்லை ஊர்ல நிறைய பேர் அப்படிதான் இருப்பாங்க. இப்பவும் இருக்காங்க, உன்னை நாங்க வளர்த்த சூழல் வேற. நீ நிறைய ஸ்டேட்ஸ்ல படிச்சிருக்க,  நிறைய மக்கள், அவங்க கலாச்சாரம்னு பார்த்திருக்க. இங்க அப்படியில்லை”

 

“என்னோட அப்பா இப்போ சாகும்போது மனசு மாறியிருக்கலாம், நல்லா இருந்தபோது ஒரு நாள் என்னைக் கூப்பிடனும்னு அவங்களுக்குத் தோணலைதானே? நான் தப்பு செஞ்சதாவே இருக்கட்டுமே, இவங்களும் என்னை விட்டுட்டாங்க தானே?” என்றபோது யமுனாவின் கண்களில் மீண்டும் கண்ணீர்.

 

கல்கியின் பேச்சு அம்மாவிற்கு உவகைத் தந்திருந்தாலும் அவள் பேச்சின் நோக்கம் அவனுக்குத் தெளிவாய்ப் புரிந்தது. ஏதோ பதட்டத்தில் இருக்கிறோம் என்று பேசிய பேச்சைத் தவிர, பாவை பேச்சில் பாசமில்லை என்பதை அவன் உணர்ந்தாலும் அம்மாவிடம் சொல்லவில்லை.

 

“ம்மா, விடுங்க. காலையில எதுக்கு இந்த பேச்சு?” என்றான். யமுனாவும் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

 

பதினாறாம்  நாள் காரியம் செய்வதாக இருக்க அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அங்கையற்கண்ணியிடம் கேட்டறிந்த யமுனா அண்ணனிடம் வந்தார்.

 

“அண்ணா, காரியத்துக்கு டிரஸ் எடுக்கனும்னு அண்ணி சொன்னாங்க. எந்த கடை எப்படி போகனும்னு தெரியல, எல்லாம் மாறிடுச்சு. வழி தெரிஞ்ச பசங்க யாராவது கூட அனுப்பி வைக்கிறீயாண்ணா. நானும் ப்ரசாதும் போய்ட்டு வந்துடுறோம்” என்று யமுனா சொல்லவும்

 

உதயமூர்த்தி தங்கையிடம்

“அதெல்லாம் நீ செய்ய வேண்டாம் யமுனா” என்று மறுத்துவிட்டார்.

 

தையல் நாயகி இதனைப் பார்த்திருந்தவர்

“அப்போ என் பொண்ணை அப்படியே விட்டுட போறியா? உன்  மாமியார் வீட்ல உனக்கு செய்வாங்கதானே? இவளும் செய்யணும் அதானே முறை?” என்று மகனிடம் சண்டைக்கு நின்றார்.

 

“என்ன முறையா நடந்துச்சு இங்க?” உதயமூர்த்தியும் ஆதங்கமாய்க் கேட்டவர்

 

“நான் எப்போ இவளை விடப்போறேன்னு சொன்னேன்மா, சும்மா நீயா எதாச்சும் உளறாத. இவ இப்போதான் வந்திருக்கா, எதுக்கு வீணா இவளுக்கு சிரமம்னுதான் வேண்டாம்னு சொன்னேன்” என்று உதயமூர்த்தி விளக்கம் சொல்ல எல்லாவற்றையும் பார்வையாளனாகப் பார்த்திருந்தான் சிரஞ்சீவி. யமுனா அவனை எதிலும் தலையீடக் கூடாது என்று கண்டிப்பாய் சொல்லியிருந்தார்.

 

“அவளுக்கு என்ன நோவுது இதுல? என் பேரன் கார் வச்சிருக்கான் கடையில போய் வாங்கியாற போறா, நீ இவன் சொல்றதையெல்லாம் கேட்காத யமுனா. என்ன முறையோ நான் சொல்றேன் நீ செஞ்சிடு” என்றார் மகனை முறைத்துக்கொண்டு.

 

“யமுனா, நான் சொல்ல வந்த அர்த்தம் வேற,  நீ இவங்க பேச்சைக் கேட்காத. இப்போ என்ன உனக்குக் கூட போக ஆள் வேணும் அதானே? நான் ஏற்பாடு பண்றேன். முதல்ல காலை சாப்பாடு முடியட்டும்” என்று சொல்லி விட்டார்.

 

காலை உணவு முடிய சிரஞ்சீவியும் யமுனாவும் தயாராகி நிற்க, சமையல் அறைக்குள்  நின்றிருந்த கல்கியை அழைத்தார் உதயமூர்த்தி.

 

“என்னப்பா?” என்று வந்து நின்ற மகளிடம்

 

“அத்தை கும்பகோணம் கடைத்தெரு வரைக்கும் போகனும், நீ நல்ல கடையா அழைச்சிட்டுப் போய்ட்டு வா. தேவையில்லாம பேசக் கூடாது” என்றாள்.

 

சமையல்கட்டிற்கு வெளியே இந்த பேச்சுகள் நடக்க

 

அங்கையற்கண்ணி கணவனிடம் “இவளையா பேசாம இருக்க சொல்றீங்க? அதுவும் உங்க தங்கச்சியைப் பேசாம இவ இருப்பாளா? வம்பிழுத்துட்டு வருவா” என்று சொல்ல, அம்மாவை முறைத்தாள் கல்கி.

 

“இல்லை அங்கை, வேற யாரை அனுப்பினாலும் சும்மா பழசை எல்லாம் பேசுவாங்க. அஞ்சனாவை அனுப்பலாம்னா யுகன் இருக்கான், எனக்கும் வேலை இருக்கு, அதான் கல்கி சொன்னா கேட்டுப்பா” என்று சொன்னவர்

 

மகளிடம்

“நம்ம எதிரியாவே இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்களை மரியாதையா நடத்தனும் கல்கி, நீ அப்பா பேச்சைக் கேட்பேன்னு தெரியும். அத்தை கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு. புரிஞ்சதா?” என்று புத்தி சொல்லி அனுப்பினார்.

 

போகும் போது வழி சொல்ல மட்டுமே வாய்த் திறந்தாள் கல்கி. யமுனாவுடன் பின்னால் அவள் உட்கார்ந்திருக்க, சிரஞ்சீவி காரை ஓட்டினான். கும்பகோணம் நகரத்துக்கு வரவும் ஒரு ஜவுளிக்கடையை கல்கி காண்பித்து

 

“இங்க  நல்லா இருக்கும்” என்றாள். மூவரும் அந்த கடையில் நுழைய, முதலில் அங்கைக்குப் புடவை எடுக்கலாம் என்று முடிவு செய்த யமுனா

 

“அம்மாவுக்கு எந்த மாதிரி பிடிக்கும்னு பாரு கல்கி” என்று அவளிடம் சொல்ல

 

“நீங்க என்ன எடுக்கிறீங்களோ எடுங்க, அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க”

 

“இல்லைடா, கட்டுறவங்களுக்குப் பிடிக்கனுமில்ல” யமுனா முதன்முறையாக எடுத்துக்கொடுக்கிறார், நல்ல விஷயமாக இல்லையென்றாலும் அவர் எடுப்பது முறை. அதை சிறப்பாய் செய்ய நினைத்து கேட்க கல்கி பட்டும் படாமல் பேசினாள்.

 

“எங்கம்மாவோட டேஸ்ட்லாம் எனக்குத் தெரியாதுத்த, நீங்க எடுக்குறதை எடுங்க” என்றாள் பிடிகொடுக்காமல்.

 

இங்கு புடவையை தான் எடுக்கலாம் என்று நினைத்து யமுனா கல்கியிடம்

 

“அப்பாவோட ஷர்ட் சைஸ் 40னு சொன்னாங்கடா. நீ ப்ரசாதை அழைச்சிட்டுப் போய் சட்டை எடுத்துட்டு வந்துடுடா” என்றார்.

 

தன்னைப் பார்த்த மகனிடம்

 

“ப்ரசாத், நீ போய் மாமாவுக்கு நல்ல ஷர்ட்டா இரண்டு பார்த்து எடு, அதுக்குள்ள நான் இங்க புடவையை செலெக்ட் பண்ணி வைக்கிறேன். அப்போதான் சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்ப முடியும்” என்றதும் கல்கியும் அவனும் மேல்தளத்திற்குச் செல்ல

 

“எப்படி ஷர்ட் பிடிக்கும் மாமாவுக்கு?” என்று கல்கியிடம் கேட்டான் சிரஞ்சீவி.

 

“அப்பா சைஸ் நாற்பது, அதுல எதாவது ஒன்னை எடுங்க” என்றவள் வேடிக்கைப் பார்க்க

 

“ப்ச், உங்கப்பாவுக்கு என்ன பிடிக்கும்னு கூட உனக்குத் தெரியாதா?” என்று எரிச்சலாய்க் கேட்டான். அவன் அம்மா கேட்கும்போது அவள் சொன்ன பதில்கள்  அவனுக்கு உவப்பானதாக இல்லை, சின்னப்பெண்ணிற்கு ஏன் இவ்வளவு வீம்பு, பிடிவாதமென தோன்றியது.

 

“எங்கப்பாவுக்கு என்ன பிடிக்கும் எனக்குத் தெரியும், ஆனா அதை உங்க கிட்ட சொல்லணும்னு எனக்கு அவசியமில்லை. அப்பா உங்களுக்கு கடையைக் காட்ட சொல்லிட்டார், காமிச்சாச்சு. தேவையில்லாம பேச மாட்டேன் நான்”என்றவள்

 

“உங்க மாமாவுக்கு எது நல்லாயிருக்கும்னு  நினைக்கிறீங்களோ அதை எடுங்க” என்று சொல்லி அவள் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

 

கல்கியின் பேச்சில் ஒன்று புரிந்தது, தேவையில்லாமல் பேசாதே என்று வீட்டில் சொல்லியிருக்கிறார்கள் போல, அந்த கோபம் என்று நினைத்தான்.

 

‘எங்க மாமாகாருவுக்கு டிரஸ்தானே நானே எடுத்துக்கிறேன் போடி’ என்று மனதில் நினைத்தவன் உதயமூர்த்திக்கு எது நன்றாய் இருக்குமென பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவழியாக ஐந்து சட்டைகள் எடுத்தான், அம்மா இரண்டு எடுக்க சொல்லியிருக்க, முதல்முறை வாங்குகிறோம் என்று நினைத்தவன் கூடுதலாகவே எடுத்தான்.

 

எடுத்துவிட்டு பில் போட செல்ல, அங்கே கீழேதான் போட வேண்டும் என்றனர். கீழே செல்ல நினைத்தவனுக்கு கல்கியின் நினைவு வர, அவளைத் தேடினான். பார்த்தால் அந்த தளத்தின் ஒரு மூலையில் ஒரு ஆடவனுடன் சிரித்துப் பேசி நின்றுகொண்டிருந்தாள் கல்கி.

 

அந்த ஆடவனும் அவளுடன் இணைந்து நகைத்தபடி என்னவோ பேசிக்கொண்டிருக்க, சிரஞ்சீவியின் மனதில் தோன்றியதெல்லாம் இதுதான். சின்னப்பெண் யாரிடம் பேசுகிறாள்? அவன் நல்லவனா கெட்டவனா? என்று அவனின் போலீஸ் புத்தி சந்தேகிக்க, அவனின் கால்கள் கல்கியை நோக்கி நகர்ந்தன.

 

கல்கி சிரஞ்சீவியை உடைகள் தேர்வு செய்ய சொல்லிவிட்டு பார்வையை சுற்றியும் ஓட்ட, அவள் கண்களில் விழுந்தான் ஜெகதீஷ். உடனே ஒரு உற்சாகம் உள்ளத்தில் தோன்ற, அவனிடம் சென்றவள் அவன் முதுகில் தட்டி

 

“டேய் மாமா, இங்க வரேன்னு சொல்லவே இல்லை” என்றாள் சந்தோஷத்துடன்.

 

“நீ எங்கடி இங்க? நாங்க அத்தைக்கும் மாமாவுக்கும் டிரஸ் எடுக்க வந்தோம், காரியத்துக்குக் கொடுக்கனுமில்லை” என்றான் ஜெகதீஷ்.

 

“அத்தை எங்க நான் பார்க்கலையே?” கல்கி யோசிக்க

 

“கீழதான் இருந்தாங்க, நீ எப்படி இங்க? சொல்லியிருந்தா எங்க கூட வந்திருக்கலாமில்ல” என்றான்.

 

“அது அந்த மாரத்தான் ரேஸூம் டிரஸ் எடுக்கனும்னு சொன்னாங்க, அதான் அப்பா என்னை வழி சொல்றதுக்கு அனுப்பினார்” என்றாள் கல்கி.

 

“ஓஹ், எங்க அவங்க” என்று கேட்க

 

“மாரத்தான் கீழ, அவங்க மகன் அந்த ஐபிஎஸ் இந்த ப்ளோர்ல” என்று சொல்ல

 

“சரி விடு, என்னை மாமாவுக்கு சட்டை எடுக்க சொல்லி அம்மா சொல்லுச்சு, எது நல்லாயிருக்கும்  நீயே பாரு” என்று கல்கியிடம் சொல்ல, அவளும் அவனுடன் இணைந்து அப்பாவிற்கு உடைகள் பார்க்கத் தொடங்கினாள்.

 

இப்படி பேசி சிரித்தபடி நின்றவர்களின் அருகே போன சிரஞ்சீவி,

“கல்கி, இங்க என்ன பண்ற?” என்றான் அதட்டலாக.

 

பழகாதவர்களிடம் அவன் பேச்சு அப்படி ஒரு விசாரணைத் தொனியில்தான் வரும். அது புரியாத கல்கிக்கு அவன் என்னவோ அவளைக் குற்றம் சொல்வதாய்ப் பட்டது.

 

“இது யாரு?” என்று அடுத்த கேள்வியும் அதே விசாரிக்கும் பாவத்தில் வந்து விழ, கல்கி கடுப்பாகிவிட்டாள். ஜெகதீஷுக்குக் கண்காட்டியவள்

 

“யாரா இருந்தா உங்களுக்கு என்ன?” என்றாள் நக்கலாக. ஜெகதீஷின் பார்வையோ சிரஞ்சீவியின் மீது இருந்தது, அவனின் கம்பீரம், வசீகரம், கூடவே அவனும் உரிமைப்பட்டவன் என்ற எண்ணம் எல்லாம் அவனுக்குள் ஒரு பயத்தை உருவாக்கியது.

 

“யார்னு கேட்டா பதில் சொல்லணும், அதை விட்டு என்னைக் கேள்வி கேட்கிற?” சிரஞ்சீவி சீறினான்.

 

“நீங்க கேட்டா சொல்லணும்னு எனக்கு அவசியமில்லை” கல்கி வெடுக்கென சொல்ல

 

“கல்கி, என்னடி?” ஜெகதீஷ் பார்க்க

 

கல்கி தன்னை வேண்டுமென்றே கோபப்படுத்துகிறாள் என்று கணித்துவிட்டான் சிரஞ்சீவி. அதனால் ஜெகதீஷைப் பார்த்தவன்

 

“யார் நீங்க?” என்று கேட்க

 

“அவன் சொல்ல மாட்டான்” என்று கல்கி விளையாட்டுக் காட்ட

 

“சொல்ல வைப்பேன் நான்” சிரஞ்சீவியும் விடவில்லை. முழுக்க முழுக்க ஒரு சிறு பெண்ணின் மீதான அக்கறை மட்டுமே அவன் செயலில், அதுவும் தங்களை நம்பி அனுப்பியிருக்க இப்படி தன்னிடம் கூட சொல்லாமல் தனியே சிரித்துப் பேசுகிறாளே என்ற எண்ணம்தான். ஆனால் சொல்லோ விசாரிக்கும் தோரணையில் விழ, அதுவே கல்கியை அவனை வெறுப்பேற்ற சொன்னது.

 

“என்ன மிரட்டுறீங்களா?” என்று விரல்  நீட்டிப் பேச, அவளின் கையைப் பிடித்தவன் எதுவும் பேசும் முன் ஜெகதீஷ் பேசினான். சிரஞ்சீவி அவளின் விரலைப் பிடித்தது கூட ஜெகதீஷுக்குப் பிடிக்கவில்லை.

 

“நான் இவளோட மாமா பையன் ஜெகதீஷ்” என்றான். அதில் சிரஞ்சீவியின் கைகள் அவள் விரலை விட்டுவிட, கல்கியை முறைத்தபடி கீழே சென்றான். இவளும் ஜெகதீஷுடன் யமுனாவிடம் போனாள். யமுனா இவர்களைக் கண்டுவிட்டு

 

“தெரிஞ்ச பையனா கல்கி?” என்று புன்னகையுடன் கேட்க

 

“மாமா பையன் அத்த, இவங்களும் டிரஸ் எடுக்க வந்தாங்களாம்” என்றாள் இயல்பாக. அத்தனையும் சிரஞ்சீவி பார்த்துக்கொண்டிருக்க, கல்கியின் பார்வை சிரஞ்சீவியைக் கொஞ்சம் கோபத்துடனும் முறைப்புடனும் பார்க்க, அம்மாவின் கேள்வியும் அவளின் பதிலையும் பார்த்தவனுக்கு அர்த்தம் விளங்கியது.

 

அம்மா கேள்வி கேட்ட விதம் வேறு, இவன் கேட்ட விதம் வேறு என்று அவளின் பார்வையும் பதிலும் சொல்லிவிட, விளக்கமின்றி அவளின் விழிமொழி இவனுக்கு விளங்கிற்று. பேச்சே இல்லாது அவள் எண்ணத்தை அவனுக்கு உணர்த்திவிட்டாள்.

 

அதற்குள் அவளின் மாமன் மனைவி கஸ்தூரியும் மகனைத் தேடி வர, கல்கி யமுனாவை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தாள், அவர்கள் துணிகளை வாங்கிவிட்டு போய்விட, சிரஞ்சீவி கல்கியைத் தான் பார்த்துக் கொண்டே நின்றான்.

 

அவனையறியாமல் கல்கியை அவன் மனம் கணித்துக் கொண்டிருந்தது. யமுனா இன்னும் புடவை ஆராய்ச்சியை முடிக்கவில்லை.

 

“ம்மா, முடியலையா?” என்று சிரஞ்சீவி கேட்க

 

“இரு ப்ரசாத், அம்மாச்சிக்கும் எடுக்கனுமில்ல” என்று சொல்லி பார்த்துக் கொண்டிருந்தார். யமுனாவின் கவனம் புடவையில் இருக்க இவன் கல்கியிடம் பேச நினைத்தான்.

 

“கல்கி!” என்று குரல் கொடுக்க அவள் திரும்பவும்

 

“சாதாரணமா கேள்வி கேட்டா கூட எவ்வளவு நக்கலா பேசுற நீ?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

 

“எனக்கு  உங்ககிட்ட அப்படிதான் பேச வருது” அவள் அலட்சியமாய் சொல்லி வேறு பக்கம் பார்க்க

 

“லுக் அட் மீ!” என்று அடிக்குரலில் சீறியவன்

 

“ஒரு பையன் கிட்ட பேசுறியே, அவன் எப்படின்னு தெரியல. சின்னப்பொண்ணாச்சேன்னு அக்கறையில கேட்டா எவ்வளவு அரெகன்சி உனக்கு? என்னோட மாமா பையன்னு சொல்லாம என்னைப் பேச வைக்கிற நீ” என்று சிரஞ்சீவி திட்ட

 

“நான் யார்கிட்ட பேசினா உங்களுக்கென்ன?  நான் ஒன்னும் உங்கம்மா மாதிரி மாரத்தான் கேஸ் இல்லை” என்று கல்கி சொல்லிவிட சிரஞ்சீவியின் கண்கள் சிவந்து போனது. அதே நேரம் கல்கி தன்னைக் கோபப்படுத்திப் பார்ப்பது புரிந்தது. ஒரு சிறு பெண்ணின் கோபம் என்னைப் பாதிப்பதா? அவளின் வார்த்தைகளில் நான் என் பொறுமையைத் தொலைப்பதா என்று அவன் மனம் சொல்ல

 

“ஓடிப்போற அளவுக்கு எங்கப்பா வொர்த், அதனால அது தப்பில்லை” என்று பதிலடி கொடுத்தான்.

 

“எங்கம்மா எடுத்த முடிவுக்காக இன்னிக்கு வரை வருத்தப்படல, அப்படி வச்சிருக்கார் என்னோட நானா” என்றான் பெருமிதமாக. அத்துடன் விடாது

 

“மீரு சின்ன அம்மாயி, அதுக்கு ஏத்த மாதிரி பேசு, நடந்துக்கோ. டோண்ட் ஓவர் ரியாக்ட்” என்று அறிவுரை சொன்னான். கல்கி அவனைக் கண்டுகொள்ளாமல் நின்றாள், ஜெகதீஷ் அவளிடம் அடுத்த வாரம் அப்ளிகேஷன் ரிலிஸ் செய்யப்படும் என்று சொல்லியிருக்க, அவளுக்கு எப்படியாவது சென்னை சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணம்.

 

ஆனால் அதற்காகத் தன்னைப் போராடும் நிலைமையில் வைத்துவிட்ட குடும்பத்தின் மீது கோபமாய் வந்தது, அதற்கு முதல்காரணமான அத்தையின் மீது கோபம், அத்தை மகன் என்பதால் சிரஞ்சீவியின் மீதும் அது வெளிப்பட்டது.

 

அதனால் விளைந்த கோபம், கோபத்தினால் விளைந்த வார்த்தைகள் என்பதே அவர்களுக்கிடையே  பேச்சாகிப்போனது.

 

“நான் ஓவர் ரியாக்ட் பண்றேன், பண்ணாம இருப்பேன். உங்க அட்வைஸ் தேவையில்ல திருப்பிப்போட்ட ப்ரசாத்” என்றாள் கோபமாக.

 

“திருப்பிப்போட்ட ப்ரசாத்?” சிரஞ்சீவி அவள் பேச்சில் ஷாக் ஆகி நிற்க, அதற்குள் யமுனா வந்துவிட அவர்களின் பேச்சு நின்று போனது. ஆனால் பார்வை மட்டும் ஒருவரை ஒருவர் எரித்தது.

 

அதன்பின் இருவரும் பேசவே இல்லை, கல்கிக்கு எப்படி படிப்பது என்பது கவலையாகிப்போக, சிரஞ்சீவிக்கு கல்கியைப் பற்றிய எண்ணங்கள் இல்லை, சின்ன அம்மாயி என்று ஒதுக்கித் தள்ளினான்.

 

அடுத்த நாளே சிரஞ்சீவி வேலை இருக்கிறேதென கிளம்பிவிட்டான். பதினாறாம் நாள் காரியத்துக்கு சூர்யா வந்திருந்தார். எல்லாம் முடியவும் உதயமூர்த்தியிடம் ஜெகதீஷ் கல்கி சென்னையில் படிப்பற்கான பேச்சை எடுத்தான்.

 

கல்கியும் உடன் நிற்க, உதயமூர்த்தியோ

 

“இங்க என்ன படிக்க இருக்கோ படி. சென்னைக்குக் கண்டிப்பா அனுப்ப மாட்டேன்” என்றார் உறுதியாக.

 

அதில் கல்கிக்குக் கண்கள் கலங்கிப்போனது, ஒருவருடம் பிடிவாதம் பிடித்து இருந்தாகிவிட்டது. மீண்டுமா என்று சோர்ந்து போனாள் பெண். 

✅ End of Episode 6
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 5 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

❤️ 1 more...
Jeeona Reader 1 month ago

Padika thane asaipattu kekkura kalki 😏

❤️ 1 more...
Kavi Natarajan Reader 1 month ago

💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago

பிழை செய்தவர் ஒருவர்

பாரம் சுமப்பது ஒருவர்....
படிக்க கூட தடை
பிடிவாதம் பிடிக்கும் கல்கி
பாவம் பெண்.....
❤️ 1 more...
Sathya Velusamy Reader 3 weeks ago

திருப்பிபோட்ட பிரசாத் உங்க அக்கறை சர்க்கரை எல்லாம் எங்களுக்கு வேண்டாம் உங்க வேலையை மட்டும் பாருங்க......

அவ ஊர்ல யாரு கூட பேசனும் பேச கூடாதுன கூடவா அவளுக்கு தெரியாது.....
இதுதான் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்னு சொல்வதோ.....கல்கி பாவம்
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top