Episode 10

இதுவரையில் சிரஞ்சீவியின் வீட்டில் இருந்து சத்தமெல்லாம் வெளியே கேட்டதில்லை. இன்றோ உள்ளே பேசுவது அப்படியே வெளியே கேட்டது. பல்லைக் கடித்துக் கொண்டு காலிங் பெல்லை அழுத்தினான்.

 

“உன்னைப் போய் கேட்டேன் பாருடி என்னை சொல்லணும்” என்று தையல் நாயகி கத்த

 

“அப்புறம் எதுக்கு என்னைக் கேட்டு இவ்வளவு நேரம் டார்ச்சர் செஞ்ச?” கல்கியும் பதிலுக்கு சத்தம் போட்டாள். காலிங் பெல் சத்தம் கேட்டு கல்கி ஹோல் வழியே பார்த்து கதவைத் திறக்க, வரும்போதே அவளை முறைத்தபடி உள்ளே வந்தான் சிரஞ்சீவி வரப்ரசாத்.

 

ஷூ சாக்ஸைக் கழட்டி அதற்குரிய இடத்தில் வைத்தவன் பாட்டியையும் பேத்தியையும் பார்த்து

“என்ன சத்தம்? நீங்க இரண்டு பேரும் கத்துறது வெளியே வரைக்கும் கேட்குது” என்றான் எரிச்சலாக.

 

“எல்லாம் இந்த சின்னவ பண்ற வேலைதான் ராசா, டீவிப்பொட்டியை எனக்கு அமுக்கத் தெரியல, இவளை வச்சுக்கொடுக்க சொன்னா வச்சுக்கொடுக்காம எனக்கு ஆட்டங்காட்டுறா” பேத்தியை புகார் சொன்னார் தையல் நாயகி.

 

சிரஞ்சீவி உடனே கல்கியை முறைத்தவன்

“அவங்க கேட்டா வச்சுக் கொடுக்க மாட்டியா நீ?” என்றான் அதிகாரமாய்.

 

“அந்த சேனல் இங்க இல்லை, சொன்னா கேட்க மாட்டேங்குது அப்பத்தா. நான் என்ன செய்ய?” என்று அவளும் முறைத்தபடி பேச

 

என்ன சேனல் அது என்று கேட்டவன் உடனே அதன் ஆப் வெர்ஷனைத் தேடி சப்ஸ்கிரைப் செய்து, ஸ்மார்ட் டீவியில் ஓடவிட்டான்.

 

அவர் கேட்ட நாடகம் ஓடவும்

“பார்த்தியா டி என் பேரன் போலீஸ்னதும் எப்படி கண்டுபிடிச்சிட்டான், நீயும் இருக்கியே வாய்தான்” என்று  நொடித்துக் கொண்டவர்

 

“நீ சாப்பிட்டியா ராசா?” என்று சிரஞ்சீவியிடம் கேட்க

 

“நான் சாப்பிட்டேன் அம்மம்மா, நாளையில இருந்து சமைக்க ஆள் வந்துடுவாங்க, அவங்க கிட்ட என்ன வேணுமோ சொல்லிடுங்க” என்றவன் கல்கியைப் பார்த்து

 

“நீ அங்க வா” என்று சொல்லி டைனிங் டேபிள் நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான். இவன் எதற்கு அழைக்கிறான் என்று யோசித்தவண்ணம், கல்கி இன்னும் ஹாலிலே நின்றாள்.

 

“கல்கி!” என்று அவன் மீண்டும் அதட்டலாய் அழைக்க அவன் முன் போய் நின்றாள்.

 

“சாப்பிட்டியா? சாப்பாடு பிடிச்சதா?” என்று அவன் கேள்வி கேட்க, அவனைத்தான் பார்த்தாள் கல்கி, காக்கி உடையில் மிகவும் கம்பீரமாய் இருந்தான், ஆனால் ரசிக்க முடியவில்லை.

 

உடைக்கு ஏற்றவாறே அவனின் பேச்சும் இருந்தது. சாப்பிட்டியா என்பதை இப்படியா விசாரணைத் தொனியில் கேட்பார்கள் என்று நினைத்துக் கொண்டாள், அவன் உடை, பேச்சு எல்லாம் ஏதோ உறவினன் பேசுவது போல் இல்லை. குற்றவாளியை விசாரிப்பது போல் தோன்றியது கல்கிக்கு.

 

கல்கி யோசித்தபடி அமைதியாய் நிற்க

“ஆன்ஸர் மீ கல்கி” என்றான் கொஞ்சம் சத்தமாய்.

 

“ம்ம், நல்லாயிருந்துச்சு” அவள் முணுமுணுக்க

 

“ஓகே, இங்க பார் கல்கி இங்க நீ படிக்க வந்திருக்க அதை ஞாபகம் வச்சிக்கோ, அம்மாவை நம்பி உன்னை அனுப்பியிருக்காங்க, நானும் அம்மா கிட்ட உன்னைப் பார்த்துக்கிறேன் சொல்லிட்டேன்” என்றவனின் பேச்சைக் கேட்டவள் அதுக்கென்ன என்பது போல் பார்க்க

 

“உன் பார்வை புரியுது, இந்த சத்தமா பேசுறது, கத்துறது எல்லாம் கூடாது புரிஞ்சதா?  நீ கத்துற சத்தம் எனக்கு வாசலுக்கு வெளியே வரை கேட்டுச்சு” என்றான் குற்றம் சாட்டும் குரலில்.

 

“அப்பத்தா எவ்வளவு சொல்லியும் கேட்கல,  நான் வேணும்னு வச்சித் தரலன்ற மாதிரி பேசிச்சு, அதான் கத்தினேன்”

 

“அவங்க வயசானவங்க அப்படித்தான் இருப்பாங்க, நீயும் பதிலுக்குப் பெரியவங்கன்னு மரியாதை இல்லாம கத்துவியா?” என்றான் கண்டிப்பான குரலில்.

 

“எனக்கு டிஸீப்ளின் ரொம்ப முக்கியம் கல்கி, இந்த நக்கலா பார்க்குறது, மரியாதை இல்லாம பேசுறது ஐ காண்ட் டாலரேட். புரிஞ்சதா?” என்று அவன் பேச பேச கல்கிக்கோ சற்குணப்பாண்டியனின் மிலிட்டரி கேம்பில் இருந்து தப்பித்து சிரஞ்சீவியின் போலீஸ் கேம்பில் மாட்டிக்கொண்ட உணர்வு.

 

“கேள்வி கேட்டா பதில் சொல்லணும்” அவன் அழுத்தமாய் சொல்ல

 

கல்கிக்கு “இனிமே கத்த மாட்டேன்” என்று சொல்வதை தவிற வேறு வழியில்லாமல் போனது.

 

அவளுக்கு முக்கியம் படிப்பு, அதுவும் அவள் ஆசைக் கொண்ட படிப்பு, அதனை படிக்க நினைக்கும் வாய்ப்பு இப்படி சின்ன சின்ன சண்டைகளால் வீணாய்ப் போவதை அவள் விரும்பவில்லை. அவனை மனதுக்குள் தாளித்து வெளியே நல்லபிள்ளையாய் பதில் சொன்னாள்.

 

“ஓகே, போய் தூங்கு. வேற எதாவது வேணுமா?” என்று கேட்க

 

“ஒன்னும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டுப் போகும் பெண்ணைத் தான் சிரஞ்சீவி பார்த்திருந்தான். அவனுக்குத் தெரிந்தவரை கல்கிக்கு வாய் அதிகம், திமிர் அதிகம், சின்னப்பெண்ணும் கூட. இவளிடம் பொறுமையாய் இருக்கப்போய்த்தானே சின்னப்பெண் என்னை கேலி செய்கிறாள் என்று புரிந்தவன் கண்டிப்புடன் நடந்து கொண்டான்.

 

இரண்டு நாட்கள் அமைதியாய் கழிந்தது. தையல் நாயகிக்கு நேரத்துக்கு உணவு, டீவியில் நாடகம் போட்டுவிட்டால் போதும் அவர் பொழுது ஓடிவிடும். கல்கி வேலைக்கு வரும் வசந்தி அக்காவுடன் ஒட்டிக்கொண்டாள், வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் அவருக்கு உதவிகள் செய்வாள். சிரஞ்சீவி வீட்டில் இருக்கும் நேரங்கள் குறைவு, காலையில் போனால் இரவாகிவிடும் வருவதற்கு.

 

கதவை உள்பக்கமாய்ப் பூட்டிக்கொள்ள சொல்லிவிட்டான் கல்கியிடம். அவன் வரும்  நேரம் அவனிடம் இருக்கும் சாவி கொண்டு திறந்துகொள்வான், இவன் வரும்பொழுது பெரும்பாலும் பேத்தியும் பாட்டியும் உறங்கி இருப்பார்கள்.

 

கல்கி உண்மையில் உறங்கி இருக்க மாட்டாள், இவன் வந்துவிட்டான் என்று தெரிந்த பின்தான் உறக்கமே வரும், ஆனாலும் வெளியே வந்து இவனிடம் பேசிவிட மாட்டாள். அவன் கேள்வி கேட்டால் அதற்கு பதில் அவ்வளவே!

 

உறவை வளர்க்க இருவருமே முயலவில்லை. அவரவர் எல்லையில் எல்லைத் தாண்டாமல் நின்றுகொண்டனர். யமுனா தினமும் கல்கிக்கு அழைத்துப் பேசிவிடுவார், மகனிடமும் கல்கியைப் பார்த்துக்கொள்ள சொல்லி அறிவுரை சொல்ல மறக்கமாட்டார்.

 

இன்னும்  நான்கு நாட்களில் கல்லூரி திறந்துவிடும். அந்த நாளை வெகு ஆவலுடன் கல்கி எதிர்ப்பார்த்து காத்திருந்தாள். சென்னை வந்த பின் எங்கும் செல்லவில்லை, அன்று கல்லூரி சென்றதுடன் சரி, அவளுக்கு எங்கே எப்படி போக வேண்டும் என்று தெரியாது, சிரஞ்சீவியிடம் கேட்கவும் விருப்பமில்லை, வசந்தி அக்காவிடம் பேசி அருகே இருக்கும் கோவில், ஹாஸ்பிட்டல், சூப்பர் மார்க்கெட் என்று தெரிந்து வைத்திருந்தாள்.

 

தையல் நாயகிக்கு வீட்டுக்குள் அடைந்திருப்பது என்னவோ போல் இருக்கும், அங்கே ஊரில் அவர்கள் வீட்டை சுற்றி இடம் பெரிது, வீட்டின் பரப்பளவே பெரிது. இங்கு கால்களை கொஞ்சம்வேகமாய் வைத்துவிட்டால் டபுள் பெட்ரூம் ப்ளாட்டில் இடித்துக்கொள்ள வேண்டியதாய் இருக்க, மாலை நேரத்தில் அவரை அழைத்துக் கொண்டு அருகே இருக்கும் பூங்காவுக்குச் செல்வாள் கல்கி.

 

தையல் நாயகி தினமும் புலம்புவார், இவளுக்காகவே தியாகம் செய்து சென்னையில் அடைப்பட்டுக் கிடப்பதாக, இதில் அவரை எம்ஜிஆர் சமாதி அழைத்து செல்லவில்லை என்று அவளைத் திட்டிக்கொண்டிருக்க, கல்கி அன்று காலை தையல் நாயகியின் தொல்லை தாளாமல் டியுட்டிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த ப்ரசாத்தின் முன்னே வந்து நின்று

 

“அப்பத்தா பீச் பார்க்கணும் சொல்றாங்க, நீங்க அழைச்சிட்டுப் போறீங்களா?” என்று கேட்டாள்.

 

“இல்லை கல்கி, எனக்கு வேலை இருக்கு. என்னோட வந்தா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது”

 

“கேப் புக் பண்ணி போய்ட்டு வந்துடுங்க, போறதுக்கு முன்னாடி எனக்குக் கால் பண்ணு இல்லை மெசெஜ் போட்டு போ” என்று சொல்லி அவன் போய்விட தையல் நாயகியை முறைத்தாள் கல்கி.

 

“என்னடி என்னை முறைக்கறவ?”

 

“பின்ன, என்னமோ ஜில்லாவுல இல்லாத பேரனாட்டம் என் பேரன் என்னை எம்ஜியார் சமாதி சுத்திக் காட்டுவான், கடலைக் காட்டுவான்னு பெருமைப் பேசின, பார்த்தியா அவருக்கு வேலை இருக்குன்னு உன்னைக் கண்டுக்கல”

 

“அதான் நீயே சொல்லிட்டியே எம்மூட்டு பேரனுக்கு வேலை இருக்குன்னு, உன்னை மாதிரி வேலையத்த சிறுக்கியா அவன்?” என்று கல்கியைத் திருப்பிப் பேச

 

“கொழுப்பு கிழவி உனக்கு, காலேஜ் போறதுக்கு முன்னாடி அப்பத்தா ஆசையை நிறைவேத்த நினைச்சா நான் வேலையத்த சிறுக்கி, ஒரு நாள் கூட லீவ் போட முடியாத அளவுக்கு உன் பேரன் உசத்தி. உனக்கு எம்ஜியாரும் கிடையாது சிவாஜியும் கிடையாது” என்றவள் போனை எடுத்துக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள்.

 

“என்னடி ராசாத்தி? அப்பத்தா ஒரு கூறுக்கெட்டவ, ஏதோ வயசானவ தெரியாம பேசிட்டேன்” என்று சமாதானப்புறா பறக்க விடவும்

 

“ரொம்ப கெஞ்சாத, அந்திக்குப் போவோம்” என்றதும் தையல் நாயகிக்கு ஒரே சந்தோஷம்.

 

ஐந்து மணி போல் கிளம்புகிறோம் என்று சிரஞ்சீவிக்கு மெசெஜ் போட்டவள், கேப் புக் செய்து கடற்கரையில் கண்ணகி சிலை அருகே இறங்கிக் கொண்டாள். இறங்கியவள் பார்வை சுற்றிலும் ஓட அதனைப் பார்த்த தையல் நாயகி

“யாரடி தேடுற?” என்று கல்கியிடம் கேட்டார்.

 

“ஜெகதீஷ் மாமாவைதான்”

 

“அவனை என்னத்துக்குக் கூப்பிட்ட”

 

“உன்னைத் தனியா சமாளிக்க முடியாது, உன் பேரனை துணைக்கு கூப்பிட்டா துரை வேலை இருக்குன்னு சொல்லிட்டார், அதான்” என்று தோளைக் குலுக்கினாள்.

 

இவள் போன் செய்து இடத்தை சொல்லவும் ஜெகதீஷும் அருகே வந்துவிட்டான். வண்ண வண்ண கனவுகள் மின்ன மனம்கொண்டவளை பார்க்க போகிறோம் என்று நினைத்துக் கொண்டு வந்தான் ஜெகதீஷ்.

 

கடலலையில் அவளுடன் கைக்கோர்க்கலாம், மணல் புதைய மனம் கொண்டவளுடன் நடக்கலாம், நெய்தல் காற்றில் நேசம் பேசலாம் என்று நெஞ்சு நிறைய ஆசைகளுடன் வந்தவன் தயலை பார்க்க, அவன் விழிகளில் பெருமகிழ்ச்சி. ஆனால் தயலுடன் இருந்த தையல் நாயகிப் பார்த்தவன் அதிர்ச்சியாகிவிட்டான்.

 

“வா மாமா, கரெக்டா வந்துட்டோம் பார்த்தியா?” என்று கல்கி அவனிடம் சிரித்தாள். இதுவரையில் அவள் வீட்டில் அவளையோ அஞ்சனாவையோ எங்கும் தனியே அனுப்பியதே இல்லை. அதனால் புது ஊரில் தனியே எவர் துணையுமின்றி வெளியே வந்த சந்தோஷம் அவள் முகத்தில்.

 

“வந்துட்ட தான், ஆனால் அப்பத்தா வராங்கன்னு சொல்லவே இல்லை” என்றான் கல்கியின் அருகே நின்று. அவன் பேசுவது காதில் சரியாக விழாமல் தையல் நாயகி குறுகுறுவென பார்த்தார்.

 

“தனியா போக கஷ்டம்னு என்னைக் கூப்பிட்டுட்டு இவங்களை அழைச்சிட்டு வந்திருக்க?” என்ன முயன்றும் குரலில் எரிச்சல் எட்டிப்பார்த்தது.

 

“ஆமா, அப்பத்தா கூட வந்தா போர் அடிக்காதா? அதான் உன்னைக் கூப்பிட்டேன்” என்றவள்

 

“சரி எம்ஜிஆர் சமாதி எங்க இருக்கு. அப்பத்தாவுக்கு ஃபர்ஸ்ட் அதைக் காட்டனும்” என்று அவனிடம் கேட்டாள்.

 

ஜெகதீஷோ மனதில் ‘என் ஆசைக்கு சமாதி கட்டிட்டு எம்ஜியார் சமாதி கேட்குறாளே’ என்று வெந்தவன்

 

“வா, அழைச்சிட்டுப் போறேன்” என்று சொல்லி அதனைக் காட்டிவிட தையல் நாயகி எம்ஜிஆர் சமாதியைத் தொட்டு வணங்கியவர் ஓவென அழ ஆரம்பித்துவிட்டார்.

 

“அய்யோ, அப்பத்தா ஏன் அழற?” கல்கி பதறிக் கேட்க

 

“இப்படி ஆல்பாய்ஸ்ல போய்ட்டாரே  புரட்சித்தலைவரு, இவரை நேர்ல பார்க்க முடியாம போச்சே. என்னை விட்டுட்டுப் போய்ட்டிங்களே ராசா” என்று அழ

 

ஜெகதீஷோ

“உங்க தாத்தா செத்தனைக்குக் கூட கிழவி இப்படி ஒப்பாரி வைக்கல டி” என்று சொல்ல கல்கிக்கும் தையல் நாயகியின் செயலைக் கண்டு சிரிப்புதான். இருவரும் சிரித்தபடி அவர் செய்யும் அட்டகாசங்களைப் பார்த்தனர்.

 

சிறிது நேரம் அழுது ஓய்ந்த தையல் நாயகி புடவையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு,

“என்னை ஒரு போட்டா புடி டி” என்று பேத்தியிடம் சொல்ல

 

எம்ஜிஆர் நினைவிடத்தில் வைத்து போட்டோ எடுத்தாள். பின் மூவருமாய் மணலில் நடக்க, தையல் நாயகி மெதுவாகவே நடந்தார். அவரின் பின்னே ஜெகதீஷும் கல்கியும் பேசியபடி நடக்க

 

“உங்கூட பீச்ல இப்படி நடக்கனும்னு ரொம்ப நாள் ஆசை கல்கி” என்று ஜெகதீஷ் தன்னையும் மீறி சொல்லிவிட்டான்.

 

“ஆமா மாமா, எனக்கும் பீச்சுக்கு வரனும்னு ரொம்ப ஆசை, உனக்கு ஞாபகமிருக்கா, நீ காலேஜ் சேர்ந்த புதுசுல உங்க வீட்டுல தங்கப்போறேன்னு பொய் சொல்லிட்டு நான், நீ , அக்கா மூணு பேரும் அதிராம்பட்டினம் கடலைப் பார்க்கப் போனோமே, எப்படியோ நானும் மெரீனாவைப் பார்த்துட்டேன்” என்று சந்தோஷமாய்க் கத்தினாள் கல்கி.

சந்தோஷத்தில் பூத்திருந்த அவள் முகத்தையே அவன் ஆசையாகப் பார்க்க

“நீ நினைச்சா பீச் வந்திருக்கலாமே, என்ன ரொம்ப நாள் ஆசைன்ற?” என்று அவன் சொன்னதை சரிவர காதில் வாங்காமல்  கல்கி கேட்க

 

சுதாரித்துக் கொண்டான் ஜெகதீஷ், கல்கி புத்திசாலி என்று அறிவான். கடல் காற்றில் தான் பேசியதை சரியாக கவனிக்கவில்லை என்று புரிந்தவன் தன் மனதை இப்போது சொல்லி, படிக்கும் பெண்ணிடம் காதல் சொல்கிறாயா என்று அடிக்கவும் தயங்க மாட்டாள் அவள் என்று தெரியும்.

 

அதனையும் விட ‘காதல்’ அவள் அகராதியில் இல்லை என்று நினைத்தான். அகம் கொண்டவனை அவள் அகம் கண்டுவிட்டால் அகராதியெல்லாம் வீண் என அவனுக்குத் தெரியவில்லை.

 

இருவருமாகப் பேசிக்கொண்டு கடல் அலையில் கால் நனைத்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு எட்டு மணி போல் கடற்கரையை விட்டு கிளம்பினார்கள்.

 

ஜெகதீஷ் கல்கியிடம்

“நம்ம ஹோட்டல்ல சாப்பிட்டு போகலாம்” என்று சொல்ல

 

“லேட் ஆகிடும் மாம்ஸ்” கல்கி மறுக்க

 

“நானும் உங்க கூட வந்து விடுறேன் டி வா” என்று சொல்லி அழைத்து போனான்.

 

மூவருமாக உண்டு முடித்து கேபில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மணி ஒன்பதரை, சிரஞ்சீவியிடம் இருந்து கல்கிக்குப் போன் வர எடுத்துப் பேசினாள்.

 

வீட்டிற்கு வந்த சிரஞ்சீவி இன்னும் கல்கியும் தையல் நாயகியும் வராமல் இருப்பது கண்டு அவளுக்கு அழைத்தான்.

 

“கல்கி, எங்க இருக்க?” என்றான் எடுத்தவுடன்.

 

“வீட்டுக்குத்தான் வந்துட்டு இருக்கோம்” என்று கல்கி பதில் சொல்ல

 

“டைம் என்ன?” என்றான் கோபத்துடன்.

 

“நைன் தர்ட்டி” என்று இவள் சாவகாசமாய் பதில் சொன்னாள். எப்படியும் ஜெகதீஷ் இருக்கிறான், அவனுடன் பத்திரமாய்ப் போகப்போகிறேன் இவன் ஏன் திட்டுகிறான் என்ற எண்ணமே கல்கிக்கு. அவ்வளவு அக்கறையிருந்தால் உடன் வந்திருக்க வேண்டியதுதானே என்று நினைத்தாள், அவனின் வேலையைப் பற்றி ஒன்றுமே அறியாதவளாக.

 

“புர்ர லேதா நீக்கு(அறிவில்ல உனக்கு)? இவ்வளவு லேட் பண்ணுவியா நீ? இந்த டைம்ல கேப்ல வரலாமா நீ?” என்று திட்ட

 

“நான் ஒன்னும் தனியா வரல, ஜெகதீஷ் மாமா கூட வரார்” என்றதும்

 

“அதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன? இடியட்” என்று திட்டிவிட்டான்.

 

“நீங்கதான் இடியட், எனக்கு அறிவிருக்கிறதாலதான் ஜெகதீஷ் மாமா கூட வந்தேன்” என்று கல்கியும் கடுப்பில் பேசிவிட

 

சிரஞ்சீவிக்கு சுர்ரென ஏறியது. “அக்கறையில சொல்றோம்னு கூட புரிஞ்சிக்கறதில்லை, அல்லரி பிள்ளா போனை வை” என்று வைத்துவிட்டான்.

 

‘இஷ்டத்துக்கு திட்டுறான், முப்பது நாளில் தெலுங்கு பேசுவது எப்படி புக் வாங்கணும் முதல்ல’ என்று முடிவு செய்துகொண்டாள் கல்கி.

 

போனை வைத்தவன் இவர்கள் வருவதற்காக ஹாலில் காத்திருந்தான். ஜெகதீஷ் இவர்களை வாசலிலேயே விட்டுச் சென்றிருந்தான். இவர்கள் வந்த பின் காலிங் பெல்லை அழுத்த, சிரஞ்சீவி கதவைத் திறந்தவன் தையல் நாயகி முதலில் வரவும்

 

“சாப்பிட்டீங்களா அம்மம்மா?” என்று கேட்க

 

“நான் சாப்பிட்டேன் ராசா, ஜெகதீஷு பெரிய தோசை வாங்கிக்கொடுத்தான். இந்த சின்னவ எம்ஜியார் சமாதி காமிச்சா” என்று தையல் நாயகிப் பேசிக்கொண்டே போக

 

“சரி சரி, நீங்க உள்ள போங்க” என்றவன் கல்கியைப் பார்த்தான். உள்ளே செல்லப்போனவளைக் கை நீட்டித் தடுத்து நிறுத்தினான். அவள் என்ன என்பது போல் பார்த்தாள். வாய்த் திறந்து கேட்கவில்லை.

 

“அப்படியே போகாத, முதல்ல உன் டிரஸ்ல இருக்க மண்ணை இந்த மேட்ல உதறு” என்று சொல்ல கல்கியும் முறைத்துக்கொண்டே செய்தாள்.

 

“உள்ளே போய் ஹீட்டர் போட்டு வேணும்னா குளி இல்லையா கை கால் கழுவு, இந்த டிரஸை நல்லா உதறிப் போடு, எப்பவும் போடுற டிரஸோட துவைக்கப் போடாத மண் ஒட்டும்” என்று சொல்ல தலையாட்டினாள்.

 

அவன் என்னதான் அக்கறையாய் சொன்னாலும் அவன் பேச்சில் தொனிக்கும் அதிகாரத்தோரணையை அவனால் மாற்றமுடியவில்லை, கல்கியால் ஏற்கமுடியவில்லை. சின்ன வயதில் இருந்து இதை செய் அதை செய் என்ற அடக்குமுறையில் வாழ்ந்து பழகியவளுக்கு சிரஞ்சீவியும் அப்படியே இருக்க மினி சற்குணப்பாண்டியனாகத்தான் தெரிந்தான் அவன்.

 

இருந்தும் படிப்பதற்காக வந்திருக்கிறோம் என்று தன் நிலை புரிந்து அமைதியாக இருந்தாள்.

 

எல்லாம் செய்துவிட்டு அவள் வெளியே வர, ஹாலில் உட்கார்ந்து ஜெமினி மியுசிக்கில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தவன் இவள் வந்த சத்தம் கேட்டு இவளைப் பார்த்து

 

“சாப்பிட்டியா?” என்றான்.

 

“ம்ம், நீங்க சாப்பிட்டீங்களா?” அவன் தினமும் இவர்களிடம் மறக்காமல் கேட்கும் கேள்வி, அதனால் மரியாதைக்கு இவளும் கேட்டு வைக்க

 

“சாப்பிட்டேன்” என்றவன்

 

“காலேஜ் போக எதாவது வாங்கனுமா?” என்று கல்கியின் முகம் பார்த்தான். அவள் ஊரிலிருந்து வரும்போதே எல்லாம் வாங்கி விட்டாள்.

 

அதனால் “இல்லை, எல்லாம் வாங்கிட்டேன்” என்றாள்.

 

“அப்போ போய்த் தூங்கு, லேட் ஆச்சு” என்று சொல்ல கல்கி பதில் பேசாமல் வந்து படுத்துக்கொண்டாள்.

 

இரண்டு நாட்கள் அமைதியாக கழிய, அந்த அமைதி அவர்களுக்கே பிடிக்கவில்லை போல கல்கி அவளையும் அறியாமல் கன்னிவெடியில் கால்வைத்தாள். அன்று வழக்கத்திற்கு மாறாக சிரஞ்சீவி ஏழு மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டான். கல்கி வீட்டில் இல்லை என்றதும் தையல் நாயகியிடம் கேட்கலாம் என்று நினைத்தவன் அவர் டீவியில் கவனமாய் இருக்க வசந்தி அக்காவிடம் கேட்டான்.

 

அவரோ

“தம்பி, பாப்பா என்னமோ காலேஜுக்கு வாங்கணும்னு சொல்லிட்டுப் போச்சு” என்றார்.

 

“எப்போ போனா?” என்றான் கூர்மையாக. சீருடையில் வேறு அவன் இருக்க அவன் கேட்ட விதம் அவருக்குள் பீதியைக் கிளப்பியது. பொய் சொன்னால் திட்டுவானோ என்று பயந்தவர்

 

“அது நாலு மணி இருக்கும் தம்பி” என்று சொல்லிவிட்டு அவன் முகம் பார்க்க, அவன் அவரைத்தான் பார்த்தான். மனமோ மூன்று மணி நேரமாய் எங்கே போனாள் என்ன செய்கிறாள் என்று சிந்தித்தது.

 

“நீங்க வரதுக்கு முன்னாடி வந்துடுறேன்னு சொல்லிச்சு” என்று அவர் உளறிக்கொட்ட

 

“அப்போ நான் இன்னிக்கு சீக்கிரம் வந்ததால அவ வெளியே போன விஷயம் தெரிஞ்சிருக்கு” என்றான் கண்டனமாக. உண்மையும் அதுவே கல்கி அவன் எப்போதும் இரவு தாமதமாகத்தானே வருவான் என நினைத்து சென்றிருக்க அவளின் கெட்ட நேரம் அவன் சீக்கிரமே வந்துவிட்டான்.

 

வசந்தி அக்கா இரவு சமையல் முடித்து இவனுக்குப் பயந்து வீட்டிற்குப் போகாமல் நிற்க,

“நீங்க போங்க” என்று அவரை அனுப்பியவன் கோபத்துடன் கல்கிக்காக காத்திருந்தான் யுனிஃபார்ம் கூட மாற்றாமல். ஒரு பக்கம் கோபம் , இன்னொரு பக்கமோ சின்னப்பெண் எங்கே சென்றாள் என்ற பதட்டம்.

 

அவளுக்கு அழைத்து எங்கிருக்கிறாய் என்று கேட்க அவன் வீட்டில் இருக்கிறான் என தெரியாமல்

“வீட்ல தான் இருக்கேன்” என்று பொய் சொல்லிவிட

 

“அதே வீட்லதான் நானும் இருக்கேன்” என்றவன் பதிலில் பாவைக்கு முதல்முறையாக அவன் பேச்சில் பயம் கண்டது. அவள் பயத்தில் பேசாது இருக்க

 

“எங்க இருந்தாலும் இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வர நீ” என்றான் கர்ஜனையாக.

 

“வந்துடுறேன்” என்று சொல்லி வைத்தவள் இருபது நிமிடம்  ஆகிற்று வருவதற்கு.

 

தையல் நாயகி பேத்தி வரவும்

“என்னடி ஏதோ சாமான் வாங்கப்போறேன் சொன்னியே வாங்கிட்டியா?” என்று சாவகாசமாய்க் கேட்க, அவரிடம் கோபம் காட்ட முடியாதவன் கல்கியை அவன் அறைக்கு அழைத்தான். தையல் நாயகி டீவியிடம் கவனம் வைக்க கல்கி பயந்து பயந்து அவன் அறைக்குப் போக

 

“எவ்வளவு திமிர் உனக்கு? எங்கிட்டயே பொய் சொல்ற? ஹௌவ் டேர்? எங்க போன?” என்று கத்தினான்.

 

அவனிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்டோமே என்ற அதிர்ச்சியில் இருந்தவளுக்குப் பேச்சே வரவில்லை. அதைவிட அவன் இன்னும் யுனிஃபார்மில் இருக்க, ஏற்கனவே அவன் பேசுவது விசாரிப்பது போலவே இருக்கும், இதில் அவன் உடையும் அவன் பேச்சும் கல்கி உண்மையில் பயந்து போனாள்.

 

“இப்படி ஊர் சுத்தறதுக்காகத்தான் படிக்கிறேன்னு சொல்லிட்டு வந்தியா நீ? அதுக்குத்தான் எல்லா ட்ராமாவுமா?” என்று அவளைப் பேசவிடாமல் குற்றம் சாட்ட கல்கிக்கு அவன் சொன்ன குற்றச்சாட்டுகளில் மனம் உடைய கண்கள் கலங்கியது.

 

மனமோ தவறா செய்தாய் நீ என்று கேட்ட போதிலும் இவள் சொல்லாமல் வெளியே போனதை வீட்டில் சொல்லிவிட்டால் இவளின் படிப்பு போய்விடுமோ என்று பயம் வந்துவிட்டது. அவள் கன்னம் கண்ணீரில் நனைவது கண்டவன் இன்னும் கடுப்பாகிவிட்டான்.

 

இவள் எங்காவது சென்று மாட்டியிருந்தால் தங்களைத்தானே கேட்பார்கள், அதைவிட தெரியாத ஊரில் இவள் எதற்கு சொல்லாமல் வெளியே சென்றால் என்ற கோபம் கண்மண் தெரியாமல் வர சிரஞ்சீவி

 

“அவுட் வித் ட்ரூத் இடியட்” என்று அருகே இருந்த டேபிளைத் தட்ட, அவ்வளவுதான் கல்கி உடைந்தே போனாள் அவனின் அதிகாரத்தில்.

✅ End of Episode 10
How did you feel about this episode?
❤️ 5 more...

You must Log in or Register to react here

💬 5 Replies
K. Vedha Reader 1 month ago

Singaram konjam parthu pannuppa

Pavi Ponnu
Because of ur writings we also became
ALLARI PILLA
Many times read this novel. But after each episode we couldn't resist our eagerness
❤️ 3 more...
Kavi Natarajan Reader 1 month ago

💞💞💞💞💞💞💞💞

❤️ 2 more...
Srichitra Reader 1 month ago

Very nice. Military camp to police camp.  

😂 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago

ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றவள் அதிகாரத்துக்குள் மாட்டிக் கொண்டாள்..... 

சுதந்திரத்தை விரும்பியவள் மீண்டும் 
சிறைக்குள்ளே விழுந்துவிட்டாள்.....
❤️ 1 more...
Sathya Velusamy Reader 3 weeks ago

அடேய் சிங்காரம் ரொம்ப ஓவரா போறடா....இடியட் இட்லி குண்டா

😂 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top