Episode 19

வசந்தியை மாலை வரவேண்டாம் என்று கல்கி சொல்லிவிட்டாள். அவள் அம்மா வைத்திருந்த குழம்பு இருக்க அதையே மதியம் வைத்து உண்டுவிட்டனர். ஜெகதீஷுக்கும் சிரஞ்சீவிக்கும் தனியே எடுத்து வைத்துவிட்டாள். ஆம், சிரஞ்சீவி காலையில் போனவன் இன்னும் வீடு திரும்பவில்லை.

ஜெகதீஷ் அன்று பெர்மிஷன் சொல்லிவிட்டு மூன்று மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டான். அவன் வரவும் உதயமூர்த்தியும் அவனும் பேசிக்கொண்டிருந்தனர்.

“டேய் ஜெகா! இவளை அடிக்கடி வந்து பார்த்துக்கோ” என்று உதயமூர்த்தி சொல்ல

‘அது என் கடமை’ என்று அவன் காதல் மனம் சொன்னது.

“இதெல்லாம் நீங்க சொல்லனுமா மாமா, நான் பார்த்துக்க மாட்டேனா?” என்றான்.

“மாமா, சாப்பிட வா” என்று கல்கி அழைக்க

“இப்போ வேண்டாம் டி, நீ குழம்பைக் கொடு. நான் ரூம்க்குப் போய் சாப்பிட்டுக்கிறேன்” என்றான். அவளும் அவனுக்கான குழம்பை ஒரு டப்பாவில் போட்டு கொடுத்தாள். மூவருமாகப் பேசிக்கொண்டிருக்க, அறைக்குள் சென்ற தையல் நாயகி மெல்ல பேத்தியை அழைத்து

“ஏட்டி கல்கி! உன் மாமன் மவனுக்குக் குழம்பு எடுத்து வச்சியே, எம்மூட்டு பேரன் இன்னும் சாப்பிடலையே, அவனுக்கு வச்சிருக்கியா இல்லையா?” என்று கேட்டவரை முறைத்த கல்கி அவரின் காதை மெல்லமாய்த் திருக

“அடியே வலிக்குது டி விடு” என்று அவர் கத்தவும்தான் விட்டாள்.

“அதெல்லாம் உன் பேரனுக்கு எடுத்து வச்சாச்சு, நீ ரொம்ப கவலைப்படாத” என்றதும் அவர் சிரித்தபடி

“சரி டி சரி டி ராசாத்தி. அவனுக்கு இருக்கோ என்னமோன்னுட்டுதான் கேட்டேன். உங்கப்பன் கிட்ட போய் சொல்லி வைக்காத ” என்று வெளியே போனார்.

ஜெகதீஷ் சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பிவிட்டான். உதயமூர்த்தியும் ஊருக்குக் கிளம்பித் தயாராய் உட்கார்ந்திருந்தார். சிரஞ்சீவியின் வருகைக்காகக் காத்திருந்தார். அவன் வர ஒன்பது மணி ஆகிற்று.

அவன் வந்தவுடன் உதயமூர்த்தி “நான் ஊருக்குக் கிளம்புறேன் தம்பி, பார்த்துக்கோங்க” என்று சொல்ல

“சரிங்க மாமா” என்றவன்

“ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருங்க, டிரஸ் மாத்திட்டு வரேன். நானே உங்களை பஸ் ஸ்டாண்ட்ல விடுறேன் மாமா” என்றான். கல்கி அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள், இவனுக்கு இதெல்லாம் வராதே என்பது போல, உண்மையும் அதுவே!

யமுனா மகனுக்கு அழைத்து அண்ணனை காலையில் அழைக்கப்போகாததற்கே திட்டிவிட்டார். இவனோ

“அவர் வரேன்னு எங்கிட்ட சொல்லவே இல்லைம்மா, கல்கி நைட் சொன்னா. அவகிட்ட கேட்டதுக்கு அவரே வந்துடுவார் சொன்னாம்மா. நேனு ஏமி செய்யாலிம்மா?” என்றான் இவனும் கடுப்பாக.

“அவ சொன்னா நீ அப்படியே விடுவியா எங்கிட்ட சொல்லியிருக்கனுமா இல்லையா? நான் நீயா செய்வன்னு நினைச்சேன்” என்று யமுனாவும் கோபமாய்ப் பேச சிரஞ்சீவியும் கோபமானான்.

“உங்கண்ணா என்ன குழந்தையா? அவருக்கு வர தெரியும்தானே? அதான் வந்துட்டார். ரொம்ப பண்றீங்கம்மா நீங்க. இன்னும் ரொம்ப பாசமா அண்ணா கிடைச்சிருந்தா அவ்வளவுதான்” என்று அவரிடம் காய

“அப்படித்தான் செய்வேன், ஏன் எங்கண்ணா பாசத்துக்கு என்ன குறை? கூடப்பிறந்தவங்க இருந்தா உனக்குத் தெரிஞ்சிருக்கும் ப்ரசாத்” என்றார் யமுனா.

“அது என்னோட மிஸ்டேக் இல்லை” என்று சிரஞ்சீவி சொல்ல கேட்டிருந்த சூர்யாவுக்கு மகனின் பேச்சில் சிரிப்பு எழ, யமுனா முறைக்கவும்

“பாபு! அம்மா சொல்றதை செய்டா, உங்க மாமாவை நைட் நீயே போய் ட்ராப் பண்ணு. அவரை ஸ்டே பண்ண சொன்னோம், வேலை இருக்குன்னுட்டார்” என்று சொல்ல

“அவுனு நைனா” என்றான் உடனே.

“அவர் சொன்னா ஒத்துக்கோ, என்னை மட்டும் டென்ஷன் பண்ணு” என்று திட்டிவிட்டுத்தான் யமுனா வைத்திருந்தார். அதனாலயே வீட்டிற்கு சீக்கிரம் வந்தான் சிரஞ்சீவி.

சிரஞ்சீவி அப்படி சொல்லவும் உதயமூர்த்தி மறுத்துவிட்டார்.

“உங்களுக்கு ஏன் தம்பி சிரமம்? நானே போய்ப்பேன்” என்றார். அவனோ அம்மாவின் பேச்சை நினைத்துப் பார்த்தவன்

“இல்லை மாமா, நான் வரேன்” என்று சொல்லி அறைக்குள் போனான். தையல் நாயகி உடனே பெருமையாக

“பார்த்தியா டா பேரனை, உன் மேல எவ்வளவு பாசமா சொல்றான்” என்றார். உதயமூர்த்தி கிளம்பு முன் மகளிடம் மீண்டும்

“ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பார்க்கணும் கல்கி. எந்த சேட்டையும் செய்யக் கூடாது. அப்பத்தாவை எதிர்த்துப் பேசக் கூடாது. இங்க உன்னை கவனிக்க யாருமில்லன்னு இஷ்டத்துக்கு இருக்க கூடாது” என்று அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருக்க, தயல் தலையாட்டி பொம்மை ஆனாள். டீஷர்ட்டுக்கு மாறி வந்த வரப்ரசாத்தின் பார்வையில் இது விழ ஒன்று முடிவு செய்து கொண்டான்.

கல்கி தன் வீட்டில் இஷ்டம்போல் இருக்கட்டும் என்று!

இப்படி அவள் இயல்பைத் தொலைத்தெல்லாம் தன் வீட்டில் இருக்க வேண்டாம், இங்கு இருக்கும்வரையில் சந்தோஷமாய் இருக்கட்டும் என்றே அவனின் எண்ணம்! ஒன்று மட்டும் நிச்சயமாய்ப் புரிந்தது இப்படிப்பட்ட ஒருவரிடம் நிச்சயம் தன் அம்மா தன் காதலை சொல்லியிருந்தாலும் அது நிறைவேறியிருக்காது என, அதே நேரம் ஒருவேளை அம்மா இவரை மீறி போகாமல் இருந்திருந்தால் இன்று இவர் இவ்வளவு கடுமையாக, கட்டுப்பாட்டுடன் இருந்திருக்க மாட்டாரோ என்று இருப்பக்கமும் யோசித்தான்.

மறந்தும் மங்கையிடம் இதனைப் பகிரவில்லை அவன். அவளை இனி நன்றாய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உதயமூர்த்தியை விட்டுவிட்டு அவன் வர, உண்மையில் கல்கிதான் அவனை நன்றாகப் பார்த்துக் கொண்டாள்.

அவள் செய்கையில் அவனுள் ஒரு ரகசிய ரசனை அவனையுமறியாமல்!!

************

வீட்டிற்கு சிரஞ்சீவி நுழையும்போது மணி பத்து. தையல் நாயகி உறங்கப்போய்விட்டாள். கல்கி ஹாலில் உட்கார்ந்து படித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தாள்.

உள்ளே நுழைந்தவன் கல்கியிடம்
“உங்கப்பாவை பஸ்ல ஏத்தி விட்டாச்சு கல்கி” என்று சொன்னான்.

“ம்ம், தெரியும். அப்பா கால் பண்ணிட்டாங்க. அது என்ன உங்கப்பா? மாமான்னு சொன்னா தேஞ்சிடுவீங்களோ?” என்றாள் கொஞ்சம் கோபமான குரலில்.

“ப்ச், உன் அப்பாவை உன் அப்பான்னு சொல்றதுல என்ன தப்பு?” என்றான் அவனும் எரிச்சலாக.

“என் அப்பா எப்பவும் என்னோட அப்பாதான். ஆனா உங்களுக்கு மாமா இல்லையா? மாமாவை விட்டுட்டு வந்தேன்னு சொன்னா என்ன?” என்றாள்.

“அப்படி சொல்லி பழக்கமில்லை, விடேன்”

“பழக்கமில்லன்னா பழகிக்கனும். நான் இப்படி வார்த்தைக்கு வார்த்தை உங்கம்மா, உங்கப்பானு சொன்னா உங்களுக்கு ஒரு மாதிரி இருக்காது?” என்றாள் கல்கி முறைப்பாக.

“ஓகே, இனிமே மாமான்னு சொல்லி பழகிக்கிறேன், இப்ப போகலாமா மேடம்?” என்று அவளை முறைத்துவிட்டு டைனிங் டேபிள் பக்கம் போனான் சிரஞ்சீவி வரப்ரசாத்.

அவன் உண்ணப் போகவும் கல்கி அவன் பின்னேயே போனவள்

“மீன் குழம்பு இருக்கு” என்று சொன்னாள்.

“ஃபிஷ்?“ என்று அவன் கேள்வியாய்ப் பார்க்க

“அம்மா கொடுத்துவிட்டாங்க, நல்லாயிருக்கும். டேஸ்ட் பண்ணுங்க” என்று சொல்ல

“இல்லை கல்கி! நான்..” என்றவனை கைகாட்டி நிறுத்தியவள்

“நீங்க நான் வெஜ் சாதம் கூடத்தான் சாப்பிடுவீங்க, அதானே?” என்றதும் அவன் ஆச்சரியமும் புன்னகையும் கலந்து கல்கியைப் பார்த்தான்.

அவளோ “நாங்களும் ஜர்னலிஸம் படிக்கிறோம், எஸ்பி ஸார் பத்தி இன்வேஸ்டிகேட் பண்ணி தெரிஞ்சிக்கிட்டோம்” என்றதும் வாய்விட்டு சிரித்தே விட்டான் சிரஞ்சீவி.

“ஜர்னலிஸ்ட் மேடம் எனக்கு சாப்பிட என்ன பிடிக்கும்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?” என்று சிரித்தபடி சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்.

அவனுக்கு முன் தட்டை வைத்தவள் சூடாய் சாதம் பரிமாறினாள். அவனிடம் குழம்பை நகர்த்தி வைத்தவள் சின்ன கிண்ணத்தில் வெங்காயத்தை தயிருடன் கலந்து வைக்க, அவன் விழிகள் வியப்பில் இன்னும் விரிந்தன. அவனுக்கு அசைவம் உண்ணும்போது தயிர் பச்சடி கண்டிப்பாய் வேண்டும். அதனை யமுனா மூலம் அறிந்த கல்கி அவனுக்காக செய்தி வைத்திருந்தாள்.

என்னவோ கல்கி அவனை அசத்திக் கொண்டே இருந்தாள்.

“எனக்காக ஏன் கஷ்டப்பட்டு இதெல்லாம் செஞ்ச? இப்போ சாதம் ரொம்ப அவசியமோ?” என்றபடி அவன் குழம்பை ஊற்றிக்கொள்ள

“ஏன் செஞ்சா என்ன? உங்களுக்கு இப்படித்தான் பிடிக்கும்னு அத்த சொன்னாங்க. அது மாதிரி நான் வெஜ் சாப்பிடும்போது எப்பவும் வெங்காய பச்சடி கேட்பீங்கனு சொன்னாங்க. இதை செய்ய கஷ்டமா?” என்றாள் கல்கி மிகவும் இயல்பாக.

“குழம்பு நல்லாயிருக்கு, உங்கம்மா கிட்ட சொல்லிடு” என்றவாறே அவன் உண்ண கல்கி பேசாமல் அவனை பார்க்க அவள் பார்வையில் தலையை உலுக்கியவன்

“அத்தம்மா கிட்ட சொல்லிடும்மா ஓகேவா?” என்று சிரித்தான்.

“அது!” என்றாள் கல்கியும் புன்னகையுடன்.

“ஆனா நான்தான் உன்னைக் கவனிக்கனும் நீ என்னைக் கவனிக்கிற, ஹம்ம்?” என்றதும் கல்கி எகிறிவிட்டாள்.

“அது என்ன நீங்கதான் கவனிக்கனும்? நான் உங்களை கவனிக்க கூடாதா? எங்கப்பாவை சொன்னீங்க உங்களுக்கும் டாமினேட்டிங் ஆட்டிட்யூட் இருக்கு. நீங்க சூர்யா மாமா மாதிரி இல்லை” என்று திட்ட

“ஏன்ட்டிம்மா நுவ்வு? நான் அப்படி சொல்லல. நீ சின்ன பிள்ளை எனக்காக ஏன் கஷ்டப்படுற சொன்னேன். அதுக்கு உடனே என்னை டாமினேட்டீங்ன்னு எல்லாம் சொல்லாத கல்கி” என்றான் கொஞ்சம் கோபமாக. ஆனால் அவளோ விடவில்லை.

“நான் அப்படித்தான் சொல்வேன், அது என்ன நீங்க என்னைப் பார்த்துக்கலாம், நான் உங்களுக்காக எதாவது செஞ்சா இப்படி பேசுறீங்க?” என்றாள் அவளின் அக்மார்க் கோபத்துடன்.

“கல்கி! நீ சின்னப்பிள்ளை. உன்னோட அம்மா அப்பா ஊர்ல இருக்காங்க. நீ இங்க தனியா இருக்க, அதனால் உன்னைப் பார்த்துக்கனும் சொன்னேன். டாமினேட்டிங் அப்படி எல்லாம் லேதம்மா” என்றான் பொறுமையாகவே .

“அதையே உங்களுக்கும் சொல்லலாம்தானே? அத்தையும் மாமாவும் ஊர்ல இருக்காங்க. நீங்களும் தனியா தானே இருக்கீங்க? சும்மா சின்னப்பிள்ளை சின்னப்பிள்ளைன்னு சொல்லாதீங்க. ஐ அம் நைண்டின், இன்னும் ஒரு இரண்டு மாசம் ஆனா டிவெண்டி எனக்கு. அப்படியே சின்னப்பிள்ளையா இருந்தாலும் பெரியவங்களை கவனிக்க கூடாதுனு இருக்கா என்ன?” என்றவளின் பேச்சில் அவன் அமைதியாகிவிட்டான்.

அவள் சொல்வது சரிதானே என்று அறிவு சொல்ல, அகமோ அவள் எத்தனை அழகாய்ப் பேசுகிறாள் என்று ரசித்தது.

“அங்கதான் சின்னப்பிள்ளைன்னு சொல்ற பேச்சுக் கேட்கனும்னு எப்பவும் அவங்க கட்டுப்பாட்டுக்குக் கீழ வச்சா நீங்களும் அதையே செய்றீங்க. அப்போ நானும் எப்போ வளர்றது? ஒரு வெங்காயப்பச்சடிக்கு இந்த பேச்சு” என்றாள் கடுப்பாக.

வீட்டில் அவளை எப்போதும் நீ சின்னப்பெண் என்று தட்டி தட்டியே வளர்த்திருக்க, இவனும் அதையே சொல்லவும் சீறிவிட்டாள்.

“அம்மாடி! நீங்க பெரிய மனுஷிதான். தெரியாம பேசிட்டேன். இப்போ மீன் குழம்பு சாப்பிடலாமா?” என்று சிரஞ்சீவி ஒரு வழியாய் சமாதானமாய்க் கேட்க

“சாப்பிடுங்க” என்றாள் முணுமுணுப்பாக.

“ஆமா, நேத்து எப்போ வச்ச குழம்பு இது?” என்றான்.

“ஏன் நல்லா இல்லையா?”

“இல்லை, நல்லா இருக்கு. அதான் கேட்டேன்”

“அது ஊர்ல குளத்து மீன். குளத்தை குத்தகை எடுத்தவங்க எங்கப்பாவுக்குப் ப்ரண்டு, அதனால் கேட்டதும் மீன் பிடிச்சுக் கொடுத்துட்டாங்க. எட்டு மணிக்கு மேலதான் அம்மா குழம்பு வச்சிருக்காங்க. அதான் நல்லா இருக்கு”

“தேங்க்ஸ். இந்த டைம்ல ரைஸ் வச்சு, பச்சடில்லாம் போட்டிருக்கியே” என்று சிரஞ்சீவி மென்னகையுடன் சொல்ல

“அது என்ன பெரிய கஷ்டமா? ஆமா, அது என்ன மீன் குழம்பு பச்சடி? நான் கறிக்குழம்புக்குத்தான் அப்படி சாப்பிடுவேன்” என்றாள் கல்கி.

“எங்க தாத்தா அப்படி சாப்பிடுவார். சின்ன வயசுல பார்த்து எனக்கும் அது பிடிச்சுப்போச்சு. ஏன் ஃபிஷ் பிரியாணிக்கெல்லாம் ரைத்தா சாப்பிடுறதில்லையா என்ன?” என்று வரப்ரசாத் கேட்கும்போதே கல்கியின் போன் சத்தம் போட எழுந்து சென்று ஹாலில் பார்த்தாள்.

“ஜெகதீஷ் மாமா” என்றாள் கல்கி.

“போய் பேசிட்டு வா” வரப்ரசாத் சாப்பிட்டுக்கொண்டே சொல்ல

“ஓகே” என்று எழுந்து அறைக்குள் போனவள்

“சொல்லுடா மாமா, பத்திரமா போய்ட்டியா?” என்று ஜெகதீஷிடம் கேட்டாள்.

“வந்துட்டேன் டி, அத்த குழம்பு அற்புதம் டி எத்தன நாள் ஆச்சு தெரியுமா?” என்றான் உணவை ரசித்தவனாக.

“அதுக்காக உன்னை வர சொன்னேன்” என்றாள் கல்கியும் அன்பு நிறைந்த குரலில்.

“ம்ம், அப்புறம்? மாமா கிளம்பிட்டார் போல. இப்போதான் பேசினார்”

இரண்டு நிமிடம் அவனுடன் பேசிய கல்கி

“ஓகே மாம்ஸ்! நான் அப்புறம் பேசவா?” என்றாள்.

“ஏன் டி?”

“அது இந்த பங்காரத்தைக் கொஞ்சம் கவனிக்கனும்” என்று கல்கி சொல்ல

“ஓஹ், அவனைக் கவனிக்க என்னோட காலைக் கட் பண்ணுவியா?” என்றான் ஜெகதீஷ் கோபமாக.

உண்மையில் சிரஞ்சீவி அப்பா இருக்கும்போது அவளைக் கிண்டலாய்ப் பார்த்தான் அல்லவா அதற்கு அவனைத் திட்டவே கல்கி நினைத்து ஜெகதீஷிடம் அப்படி சொன்னாள். ஆனால் அவனோ வேறு மாதிரி நினைத்துவிட்டான். கல்கி அதனை சொல்லும் முன் அவனாகவே

“நீ இடத்துக்கு தகுந்த மாறி மாறிட்ட கல்கி, முன்னாடி உங்கத்தையை எங்கிட்ட அப்படி பேசுவ, இப்போ அவங்க பையனை கவனிக்க எங்கிட்ட பேசமாட்ட சொல்ற” என்றுவிட்டான்.

அந்த வார்த்தைகள் கல்கியைக் காயம் செய்தன. அதனால் அவளும் பொறுமை விட்டு பொங்கிவிட்டாள்.

“மாறினா என்ன தப்பு?”

“தப்பில்லையா? முன்னாடி அத்தைன்னு கூட சொல்ல மாட்ட. இப்போ அத்தைன்ற மாமான்ற என்னவோ பல வருஷமா பழகின மாதிரி?” என்ற ஜெகதீஷினால் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. வார்த்தைகள் இஷ்டத்துக்கு வர அது கல்கியைத் தன்னை விட்டு தூர நிறுத்தும் என்று அவனுக்குத் தெரியவில்லை.

“உனக்குத் தப்பா தெரிஞ்சா அப்படியே இருக்கட்டும், எனக்கொன்னுமில்லை. இத்தனை நாள் கும்பகோணம் கோணத்துல யோசிச்சேன், இப்போதான் குண்டூர் சைடும் நியாயம் இருக்குன்னு புரிஞ்சது. போதுமா அதான் மாறிட்டேன்” என்றாள் அவ்வளவு கோபத்துடன்.

“இத்தனை வருஷம் கழிச்சு இப்போதான் தெரிஞ்சதா?” ஜெகதீஷும் குறையாத நக்கலில் கேட்டான்.

“இப்போதான் தெரிஞ்சது. அதுக்கென்ன? அத்தையை நான் இப்போதானே பார்க்கிறேன், பேசுறேன்”

“அவங்களால உங்களை மத்தவங்க பேசினதெல்லாம் மறந்திட்ட போல. இங்க வந்து உன் இஷ்டம்போல இருக்கறதால எல்லாமே உனக்கு மறந்திடுச்சு இல்லை கல்கி?” என்று ஜெகதீஷ் ஒருவேகத்தில் சொல்லிவிட்டான்.

கன்னிவெடி தருணமது! இந்த பேச்சுகள் சுத்தமாய்க் கல்கிக்குப் புரியவில்லை, அதனை விட பிடித்தமில்லை.

“என்ன என்னோட இஷ்டம்போல நான் இருக்கேன் சொல்லு நீ? அப்படியே இருந்தாலும் என்ன தப்பு? ஏன் நீ உன்னோட இஷ்டம்போல இல்லையா? மத்தவங்க பேசினதுக்குக் காரணம் அத்தை மட்டுமில்லை தாத்தா, அப்பா எல்லாரும்தான்”

“உன்னை ப்ரண்டா நினைச்சு மனசுல உள்ளது சொன்னா என்னை இப்படி பேசுவியா நீ?” கல்கி காட்டமாய்க் கேட்க

“அப்படி இல்லடி! நீ அந்த போலீஸ்காரனைக் கவனிக்கறேன்னு சொல்லவும் டென்ஷன் ஆகிட்டேன் ஸாரி” என்று ஜெகதீஷ் கொஞ்சம் இறங்கி வர, கல்கி விடவில்லை.

“ஏன்? அவரைக் கவனிச்சா என்ன?”

“இல்லடி என்னை விட அவன் உனக்கு முக்கியமா போய்ட்டான்னு ஒரு கோபத்துல”

“அவர் முக்கியமா இருந்தா என்ன இப்போ? நீயும் அவரும் எனக்கு ஒன்னுதான்” என்றாள் கடுமையான கோபத்தில். உள்ளத்தில் அவளுக்கு ஜெகதீஷ் சிறந்த நண்பன், அந்தளவிற்கெல்லாம் சிரஞ்சீவி அவளுக்கு நெருக்கமில்லை. ஆனால் ஜெகதீஷின் பேச்சு அப்படி பேச வைத்தது அவளை.

“எப்படி நானும் அவனும் ஒன்னா இருப்போம்?” ஜெகதீஷ் மீண்டும் கோபத்தில் கத்த

“ஹ்ம்ம், அவர் அத்தை பையன் நீ மாமா பையன். அவ்வளவுதான் வித்தியாசம்” அவனை விடவும் கல்கி கோபத்தில் பேசினாள்.

“கல்கி! என்னை வெறுப்பேத்தாதடி. நான் உனக்குக் க்ளோஸ் இல்லையா? இன்னிக்கு வந்த அவனுக்காக என்னைப் பேசுவியா?” தாளவே முடியாமல் ஜெகதீஷ் பேசினான்.

காதல் சொல்ல முடியா தவிப்பும் கல்கியின் வார்த்தைகள் தந்த தகிப்புமாக அவன் தத்தளித்தான்.

✅ End of Episode 19
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Kavi Natarajan Reader 4 weeks ago

💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Srichitra Reader 4 weeks ago

Nice 

Mrs Beena loganathan Reader 4 weeks ago

காரணமில்லாத கோவம் அல்ல

காதல் கொண்ட மனது
கருகுது _ கல்கியின் அக்கறை கொண்ட செயலில்....
Sathya Velusamy Reader 3 weeks ago

ஜெகா ஜோஓஓஓ சேட்

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top