Episode 27

“அதெல்லாம் வேற, எனக்கு அவசியம். ஆனா வேற ஊருக்குப் பொய் சொல்லிட்டு போறதெல்லாம் எனக்கு வேண்டாம். அவருக்கு நான் செய்றது தெரியாதுன்றதால அவரை ஏமாத்துறது தப்பு. அது மட்டுமில்லாம இது முன்னாடியே அப்பா வேண்டாம்னு சொன்னது. அவர் சொன்ன பின்னாடி அதை மீற மாட்டேன்” என்றவள் அத்துடன் விடாது,

“ஒரு தடவ அவரோட நம்பிக்கை உடைஞ்சதால தான் இவ்வளவும்” என்று யமுனாவைப் பற்றி சொல்லிவிட்டாள். கல்கிக்கு நிச்சயம் அப்பா விட மாட்டார் என்று தெரியும். அதனை கேட்டு அவரிடம் பேச்சு வாங்கி மனதை வருத்திக்கொள்ள அவள் தயாராக இல்லை. கல்கியின் பேச்சில் அவளைக் கோபத்துடன் முறைத்தான் சிரஞ்சீவி.

“அவங்க அவங்களோட தேவைதான் அவங்களுக்கு நியாயம் கல்கி. அதைப் புரிஞ்சிக்கோ. என்னை கோவப்படுத்தாத” என்றான்  கோபத்துடன்.

“உங்களுக்குப் பிடிக்கலைன்றதால உண்மை இல்லைன்னு ஆகிடாது. நான் இதெல்லாம் பேசவேண்டாம்னு அமைதியா இருந்தா நீங்கதான் ஆரம்பிச்சு விட்டீங்க” கல்கி சற்று எரிச்சலுடன் பேசினாள்.

“என்ன உண்மை? அப்பா அம்மாவை எப்படி பார்த்துக்கிறார்னு உனக்குத் தெரியாதா?” கோபத்தை அடக்க முயன்றும் முடியவில்லை. வார்த்தைகள் அவ்வளவு வேகமாய் வந்தது. எதிலோ ஆரம்பித்து எங்கேயோ சென்றது அவர்களின் பேச்சு.

“உங்களுக்கு ஏன் நான் என்ன சொல்றேன்னு புரிய மாட்டேங்குது?  நான் பேசுறது எங்கப்பாவுக்கும் அத்தைக்கும் உள்ள ரிலேஷன்ஷிப் பத்தி. ஆசையா வளர்த்த தங்கச்சி அவர்கிட்ட கூட சொல்லாம கல்யாணம் செஞ்சுட்டு வந்தா கஷ்டமா இருக்காதா? அவரோட நம்பிக்கை உடையாதா? அதைத்தான் நான் சொல்லவரேன். அதுக்காக மாமா அத்தையை நல்லா பார்த்துக்கலன்னு கிடையாது” என்றாள் கொஞ்சம் பொறுமையாகவே.

அவனின் அம்மா பற்றி பேசினால் அவன் வருந்துவான், கோபப்படுவான் என்று தெரியுமே. அவளையும் மீறி அந்த பேச்சு வந்துவிட முயன்று பொறுமையாகப் பேசினாள் கல்கி.

சில விஷயங்களை மாற்ற முடியாது! அப்படித்தான் சின்ன வயதில் இருந்தே அவர்களுக்கு மறுக்கப்பட்ட ஒவ்வொரு தேவைக்கும் யமுனாவும் அவரின் செய்கையும்தான் காரணம் என்றே வீட்டினரால் சொல்லி வளர்க்கப்பட்ட பெண் அவள்.

அதனால் அவரைக் காணாமலே கல்கிக்கு அவர் மீது ஒரு வெறுப்புணர்வு இருந்தது உண்மைதான். இப்போது அவர் பக்க நியாயமும் புரிய அவள் அவரைப் பேசுவதே இல்லை. இருந்தாலும் சில விஷயங்கள் மறுக்கப்படும்போதும் நியாயமான ஆசைகள் நிறைவேறா பொழுதிலும் அவரும் காரணம் என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

சிரஞ்சீவிக்கும் ஏன் இந்த பேச்சு என்று தெரியவில்லை. அவன் அழுத்தமாய் நிற்க

“அப்பாவோட  நம்பிக்கையை உடைச்சது அத்தைன்னு உங்களுக்கே தெரியுதே. ஆனா அதை ஒத்துக்கத்தான் மனசில்ல. அது தப்புமில்லை, விடுங்க. டூர் எல்லாம் ஒரு விஷயமே இல்லை, எனக்கு டிகிரி ஒழுங்கா முடிச்சா போதும்” என்றவள் அறைக்குள் சென்றுவிட்டாள்.

அடுத்த இரண்டு நாளும் கல்கியும் வரப்ரசாதும் பேசிக்கொள்ளவில்லை. அம்மாவைப் பேசிய கோபத்தில் அவனும், அவன் பேசாத கோபத்தில் அவளும் இருக்க மகளுக்கு உதயமூர்த்தி அழைத்தார். பொதுவாய் நலம் விசாரித்து முடித்தவர்

“என்ன கல்கி காலேஜ்ல டூர் போறாங்களாமே?” என்று கேட்க

“ஆமாம்பா, அடுத்த வாரம் பெங்களூர் போறாங்க” என்று கல்கி பதில் சொல்ல

“உனக்குப் போக ஆசையில்லையா?” என்று கேட்க, கல்கியிடம் பேச்சில்லை. மகளின் மௌனம் புரிந்த அவரும்

“நீ போய்ட்டு வா கல்கி. இப்போ ஃபீஸ் கட்டிட்டு சொல்லலாம் தானே?” என்று கேட்க கல்கிக்கு அதிர்ச்சி.

“அப்பா?” என்று கேள்வியாய் இழுக்க

“ஊருக்கு வந்தப்போ போக கூடாதுன்னு சொல்லிட்டு இப்போ இப்படி சொல்றானேன்னு பார்க்கிறியா?” என்று கேள்வி கேட்டவர்

“உன்னோட அத்தான் பேசினார். நீ நினைச்சிருந்தா எங்கிட்ட சொல்லாம கூட போயிருக்கலாம். ஆனா நீ என்னோட நம்பிக்கையைக் காப்பாத்தனும்னு அதை செய்யல, சரி உன்னோட ப்ரண்ட்ஸ் கூட ஸ்கூல் படிக்கும்போதுதான் எங்கேயும் போனதில்லை. இப்போ போய்ட்டு வா” என்றார் உதயமூர்த்தி.

‘ஜெகதீஷா?’ டேய் மாம்ஸ்! எனக்காக அப்பா கிட்ட எல்லாம் பேசியிருக்க, ஸோ ஸ்வீட்’ என்று அவள் மனதில் நினைக்க, உதயமூர்த்தியோ அதுவரை பொறுமையாய்ப் பேசியவர் கொஞ்சம் கண்டிப்பான குரலில்

“ஆனா ஒன்னு கல்கி, உன் வயசுக்கு மீறி பேசாத. உங்கத்தையை இனிமே நீ பேசக்கூடாது” என்று தங்கைப் பாசத்தில் கட்டளையாகச் சொல்ல

“அத்தையா?” என்று யோசித்தவள் “அப்பா, எந்த அத்தானை நீங்க சொல்றீங்க?” என்று கேட்டாள்.

“அத்தை மவன் தானே அத்தான்? யமுனா பையனைத்தான் சொல்றேன். அந்த தம்பி தான் இரண்டு நாள் முன்ன போன் செஞ்சு இப்படி டூர் போறாங்க, ஆனா நீ போகல சொன்னார். என் அம்மாவுக்காக நீங்க ஏன் உங்க பசங்களைத் தண்டிக்கிறீங்க? கல்கி நினைச்சா சொல்லாம கூட போயிருக்கலாம், இருந்தும் அவ உங்க பேச்சை மதிக்கிறா. உங்க இடத்துல இருந்து உங்களுக்காக யோசிக்கிற பொண்ணு அப்படி இப்படின்னு ஒரு  மணி நேரத்துக்கு மேல பேசினார்” என்று பெருமிதமாய் சொல்லவும் கல்கிக்குக் கண்ணீர் வந்தது.

இரண்டு  நாளாய் அவளிடம் முகம் காட்டாமல் இருந்ததென்ன? இன்று அவள் அகத்தின் அவாவை அப்பாவிடம் சொல்லி  நிறைவேற்றி இருக்கிறானே என்று நினைக்கும்போதே நெஞ்சம் தழும்பியது. இது நாள் வரை அவளுக்காக யாரும் இப்படி பேசி அவளின் ஆசையை நிறைவேற்றியதில்லை. அவளின் அம்மாவும் அக்காவும் பேச நினைத்தாலும் அது தாத்தாவிடம் எடுபடாது, அவள் அப்பாவும் கேட்கமாட்டார்.

நெஞ்சடைக்க ஒரு நன்றியுணர்வு அவன்மேல் பெருகியது. எனக்காக செய்திருக்கிறான் என்ற எண்ணம் வண்ணம் தந்தது வஞ்சிக்கு!!

சிரஞ்சீவியின் செயல் சிரபுஞ்சி மழையாய்க் கல்கியின் காய்ந்த மனதை  நனைத்தது. படிப்பென்பது அவளின் வாழ்க்கை, அதற்காகப் போராடியதே போதும் என்று நினைத்தவள் அப்பாவிடம் இதற்காகப் பேசாது விட்டுவிட்டாள். கேளாமலே நிறைவேறிய ஆசையென்றால் இதுவாகத்தான் இருக்கும் அவளுக்கு.

‘தங்கச்சி பையன் சொல்லவும் ஒத்துகிட்டாரா?’ என்று தோன்றினாலும் அதிகம் பேசினால் அப்பா கோபப்படுவார் என்பதால்

“அத்தையைப் பேசலப்பா நான்” என்றாள் அமைதியாக.

“சரிம்மா, பணம் இருக்கா. அப்பா போட்டுவிடட்டுமா?” என்று கேட்டவர்

“வெளியூர் போற நான் போட்டே விடுறேன். அப்புறம் பத்திரமா இருக்கனும், உங்க டீச்சர் சொல்றது கேட்டு இருந்துக்கோ” என்று பல அறிவுரைகள் சொல்லி போனை வைத்தார்.

என்கிட்ட சண்டைப்போட்டாலும் அப்பா கிட்ட பேசியிருக்காங்க என்று நினைத்தவளுக்கு அவனுக்கு நன்றி சொல்லவேண்டும் போல் இருந்தது. சொல்லால் சொல்லாது செயலால் செய்ய நினைத்தவள் தான் கேட்காமலே தனக்காக அவன் அப்பாவிடம் பேசியிருக்க அவனுக்குப் பிடித்தது எதையாவது செய்ய நினைத்தவள்

‘பங்காரத்துக்கு என்ன பிடிக்கும்?’ என்று யோசித்தவள் ‘காரம்’தான் பிடிக்கும் என்று கண்டுபிடித்து யூ ட்யூபில் பார்த்து அவனுக்காக எர்ர கார சட்னி செய்துவைத்தாள். அவன் வரவும் தோசை சூடாக செய்யலாம் என்று நினைத்தவள் அப்பா டூர் போக அனுமதி கொடுத்த சந்தோஷத்தை அஞ்சனா, அம்மா, யமுனா என்று எல்லாரிடமும் சொல்லி மகிழ்ந்தாள்.

சிரஞ்சீவி வீடு வந்தவன் ஹாலில் இருந்த கல்கியைக் கண்டுகொள்ளாது அவனது அறைக்குள் போய்விட்டான். உடைமாற்றி சாப்பிட டைனிங் ஹால் வர கல்கி சூடாக தோசையைக் கொண்டு வந்து அவன் தட்டில் பரிமாற அவன் விழி அவளிடம் வினாவியது. அவளுக்காக அப்பாவிடம் கூட பேசியவன் இன்னமும் அவளிடம் பேசாமல் இருக்க அது வருத்தமாகவும் கோபமாகவும் கல்கிக்கு உருமாற, வேண்டுமென்றே

“வசந்திக்கா சட்னி வச்சிட்டுப் போய்ட்டாங்க. தோசை சூடா நானே செஞ்சுக்கிறேன் சொல்லிட்டேன்” என்றவள் கிச்சனுக்குள் போக, வரப்ரசாத் தோசையைப் பிரித்துப் பார்க்க உள்ளே எர்ர காரம். அடுத்த தோசைக் கொண்டு வந்தவளைப் பார்த்தவன்

“இந்த சட்னி வசந்திக்கா வச்சதா?” என்றான் வாய்த் திறந்து.

“நான்தான் செஞ்சேன், ஏன் நான் செஞ்சா சாப்பிட மாட்டீங்களா?” என்றாள் கல்கி. பதில் பேசாமல் அவன் சாப்பிட இப்போதும் இவன் என்னிடம் சாதாரணமாய்ப் பேசமாட்டானாமா என்ற கோபம் சரமாரியாய் அவளுள் எழ

“எனக்காக அப்பா கிட்ட எல்லாம் பேசுவீங்க, எங்கிட்ட பேச மாட்டீங்களா?”

சிரஞ்சீவிக்குக் கல்கி பேசிய வருத்தம் இன்னும் இருந்தது. கூடவே அவனது ஈகோவும் தலைத்தூக்கியது.

“வாட் உனக்காகவா? உனக்காக ஒன்னும் நான் செய்யல, எங்கம்மாவ யாரும் குறை சொல்லக் கூடாதுன்னுதான் மாமா கிட்ட பேசினேன்” என்றதும் கல்கிக்கு கடுப்பாகியது. ஒன்றும் பேசாமல் அவள் கோபத்துடன் கிச்சனுக்குள் போய் அடுத்தடுத்து தோசைகள் அவனுக்கும் அவளுக்குமாக செய்தவள் உண்ண வந்து உட்கார்ந்தாள்.
“இந்த தோசை எனக்காக செஞ்சது போல?” நக்கலாய் அவன் கேட்டாலும் உள்ளே நாயகியின் செயலை நயந்தான்(விரும்பினான்).

அவனுக்குக் குறையாத ஈகோ கொண்ட கல்கியும் “ஏன் தோசை உங்களுக்குத்தான் பிடிக்குமா? எனக்கும் காரம் பிடிக்கும். எனக்காக செஞ்சேன் நான்” கல்கி முறைத்தபடி சொன்னவள் தோசையைப் பிய்த்து சாப்பிட

“அவுனு? உனக்கும் காரம் பிடிச்சதால்தான் எர்ர காரம் செஞ்ச நீ?” என்ற சிரஞ்சீவி வேண்டுமென்றே தோசையில் கை வைக்காமல் அவளை சீண்டினான். அவன் சாப்பிடாமல் இருக்க அந்த செய்கையில் கல்கிக்கு கோபம் எழ

“என்ன இப்போ? உங்களுக்காகத்தான் செஞ்சேன். எனக்காக அப்பா கிட்ட பேசுனீங்கன்னு நினைச்சு செஞ்சேன். அதான் இல்லைன்னு சொல்லிட்டீங்களே?” என்று கல்கி முகம் திருப்ப

“கல்கி, இங்க பாரு?” என்று சிரஞ்சீவி சொல்ல, இவன் சொன்னால் நான் கேட்கனுமா என்று அவள் அப்படியே இருந்தாள்.

“அம்மடூ! இக்கட சூடு ரா பிள்ளா” என்று அவன் சொல்ல

“சுடத்தான் போறேன் உங்களை, அப்பா கிட்ட பேசிட்டு எங்கிட்ட சொல்லவே இல்லை. ஏன் நம்ம இதுக்கு முன்னாடி சண்டை போட்டதில்லை? நீங்க சொல்றதுதான் எப்பவும் சரியா? இரண்டு நாளா எங்கிட்ட பேசாம இருந்துட்டு இப்போ என்ன அம்மடூ?” என்றாள் முறைத்த விழிகளுடன்.

“ஏன் நீ எங்கிட்ட பேச வேண்டியதுதானே?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.

உண்மையில் சிரஞ்சீவிக்கு அவளிடம் பேசாமல் இயல்பாகவே இருக்க முடியவில்லை. ஆனால் காதலுடன் அவனில் சில கட்டுப்பாடுகளும் தனக்கென விதித்துக் கொண்டான். அதனாலேயே கொஞ்சம் தள்ளி இருந்துகொண்டான்.

“அது? நீங்கதான் என்னைக் கோபமா பேசுனீங்க. நான் ஒன்னும் பேசல” என்று கல்கி சொல்ல இருவரின் தோசையும் ஆறிக்கொண்டிருக்க

“ஓகே! முதல்ல சாப்பிடலாம். அப்புறம் பேசிக்கலாம்” என்றவன் சாப்பிட கல்கியின் கயல்விழிகள் அவனிடம் வினா வைத்து ஆர்வமாய் அவன் விழிகள் பார்க்க, அவள் விழியின் மொழி படித்தவன்

“தோசை எங்க பின்னி செய்ற அளவுக்கு நல்லா இருக்கு” என்றான் பாராட்டாக. தனக்கென அவள் செய்த செயலில் அவன் நெஞ்சுக்குள் சாரல்!!

கல்கியோ தன்னை அவன் கவனித்தான் என்று கண்டுகொண்டவள்
“நான் ஒன்னும் உங்க கிட்ட கேட்கலையே” என்றாள் வீம்புடன்.

“நான் சாப்பிட்டதும் நல்ல இருக்கவும் சொன்னேன்” என்றவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு. எவ்வளவு ஈகோ இவளுக்கு என்று எண்ணிக்கொண்டான்.

இருவரும் உண்டு முடிக்கவும் “எப்படி அப்பாவை பேசி ஒத்துக்க வச்சீங்க” என்று கல்கி ஆர்வமாய்க் கேட்க

“ஒத்துக்கிற மாதிரி பேசிதான்” என்றான் தோளைக் குலுக்கிக் கொண்டு.

“ப்ச், அப்பாவை எல்லாம் கன்வீன்ஸ் பண்றது ரொம்ப கஷ்டம்.”

“கஷ்டமா இருந்தாலும் செஞ்சுட்டேன் தானே?” என்று வரப்ரசாத் கேட்க

“எங்கப்பா ஏதோ தங்கச்சி பையன் சொல்றாருன்னு ஒத்துட்டு இருப்பார்” என்று கல்கி சொல்ல

“எப்படியோ உனக்கு உன் ஆசை நிறைவேறிடுச்சுல, ஜாலியா போய்ட்டு வா” என்றான்.

கல்கி வேண்டாம் என்று வாய் சொன்னாலும் அவள் விழிகளில் இருந்த விருப்பம் கண்டுகொண்டான் சிரஞ்சீவி. அதனால் அவளுடன் சண்டையிட்ட அன்றே உதயமூர்த்தியிடம் அழைத்துப் பேசினான். அவர் ஒன்றும் உடனே எல்லாம் ஒத்துக்கொள்ளவில்லை.

“உங்களுக்குத் தெரியாம செய்ய வாய்ப்பு இருந்தும் கல்கி அதை செய்யல, அப்போ அவளோட நியாயமான ஆசையை நிறைவேத்தனும்தானே மாமா? உங்களோட பயம் தேவையில்லாதது. நாளைக்குத் திரும்பிப் பார்த்தா காலேஜ்ல வாங்குற மார்க்ஸ் விட இதுதான் சந்தோஷம் தரும். நீங்க உங்க ப்ரண்ட்ஸ் கூட எங்கேயும் போக மாட்டீங்களா என்ன? அம்மா உங்களை ஏமாத்தினதால் கல்கியைத் தண்டிக்காதீங்க மாமா”

“கூடவே ஸ்டாஃப்ஸ் போவாங்க. நூறு பொண்ணுங்க வர இடம், கல்கிக்கு ஆசையிருந்தும் உங்களுக்குப் பிடிக்காதுன்னு போக மாட்டேன் சொல்றா” என்று கிட்ட தட்ட ஒரு மணி நேரம் பேசியவன்

“இப்பவும் முழுமனசோட அனுப்பறதுன்னா அனுப்புங்க. நான் பேசினேன் கூட சொல்லவேண்டாம். உங்களுக்கு அனுப்ப இஷ்டம்னா மட்டும் இதைப் பத்தி பேசுங்க. இல்லைன்னா வேண்டாம்” என்று சொல்லியிருக்க அவன் சொல்வதில் இருந்த நியாயம் அவருக்குப் புரிந்தது, கூடவே சொன்னவன் மேலும் ஒரு அபிமானம் இருந்தது. அதற்காகவே ஒத்துக்கொண்டார்.

✅ End of Episode 27
How did you feel about this episode?
❤️ 7 more...

You must Log in or Register to react here

💬 5 Replies
Sathya Velusamy Reader 3 weeks ago
சிரஞ்சீவி சிரபுஞ்சி மழை......அருமை

எர்ர கார் தோசை ....நாக்குல எச்சில் ஊறுது....

எனக்கு emojis link எதுவுமே work ஆகலை
❤️ 2 more...
Pavithra Narayanan 3 weeks ago

Informed the developer ka, enakum work agala 

❤️ 1 more...

அதே அதே ...

சிரபுஞ்ஜி மழை 
❤️ 2 more...
Kavi Natarajan Reader 3 weeks ago

💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Srichitra Reader 3 weeks ago

Very Nice 

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top