Episode 33
கல்கியின் கண்ணீரைக் கண்டு இன்னும் கோபம் பெருகியது சிரஞ்சீவிக்கு.
“நீ இன்னொரு யமுனாவா எல்லாம் இருக்க வேண்டாம், இப்படியே இருந்து என் உயிரை வாங்கு” என்று கத்த கல்கி விசும்பினாள்.
அந்த அழுகையும் கூட அவனை பாதிக்க “உங்கிட்ட இதை எதிர்ப்பார்க்கல கல்கி நான்” என்று அழுத்தமாய் சொன்னவனின் குரலில் அதிருப்தி. ஒன்றும் பேசாமல் அவன் அறைக்குள் சென்றுவிட்டான். கல்கி சொல்ல நினைத்தது வேறு, சொல்லிய விதம் வேறு. எதுவானாலும் அது அவனைக் காயப்படுத்தியது உண்மை.
அறைக்குள் சென்ற சிரஞ்சீவிக்குக் கல்கியின் பேச்சுக் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. எப்படி அவள் அம்மாவைப் பேசலாம் என்ற கோபம் கனன்றது. குளித்து உடைமாற்றி மெத்தையில் சாய்ந்தவனுக்கு கோபம் மட்டும் தீரவில்லை.
தன்னைப் பிடிக்கவில்லை என்றால் அது வேறு, பிடித்தும் அந்த பிடித்தம் சொல்லாமல், என்னையும் வருத்தி தன்னையும் வருத்திக்கொள்கிறாளே என்ற கோபம். கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. கோபம் உச்ச நிலை என்றால் அது கொஞ்சமாய்க் குறைந்து இப்போது ஆதங்கமாய் மாறியது.
மனம் எல்லாவற்றையும் அலசியது, ஆராய்ந்தது. காதல் என்பது காதல் மட்டுமில்லை. அது உணர்வுகளின் சங்கமம்! கோபம், அழுகை, பாசம், காமம், தாய்மை, எரிச்சல், அன்பு, வாஞ்சை என்ற எண்ணற்ற உணர்வுகளின் பெருங்கடல்.
எண்ணற்ற உணர்வுகளை எல்லாமுமாய் ஒருவனிடமோ ஒருத்தியிடமோ பகிர்வதுதான் காதல்.! கல்கிப் பேசியது அவனளவில் தவறாய் இருக்கலாம். ஆனால் அவளின் தவறையும் அவன் நேசிப்பதுதான் உண்மையான அன்பு, பேரன்பு!
கல்கி என்பவள் அவனுக்குப் பிடித்தவள் மட்டும் கிடையாது, பிடிக்காத பக்கங்களும் அவளிடம் உண்டுதான். அவளின் கோபங்கள், தாபங்கள், தயக்கங்கள், மயக்கங்கள், கலக்கங்கள் என்று அவளின் எல்லா உணர்வையும் அவன் ஏற்கத்தான் வேண்டும். நாளைத் திருமணம் முடிந்த பின்னும் எப்போதும் கொஞ்சலும் குலாவலுமாகவே இருக்க முடியாது என்ற அறிவு அவனுக்கு இருந்தது.
கல்கியின் ஆசையை ஒரு மனம் ஏற்கிறது என்றால் இன்னொரு மனம் அவளின் அச்சங்களையும் மிச்சமின்றி ஏற்க வேண்டும். தாபத்தை தாங்கும் மனம் தயக்கத்தையும் தாங்க வேண்டும். அவளும் அப்படித்தான் அவனை அனைத்துமாக ஏற்க வேண்டும். ஒருவரின் குறை மற்றவரின் காதலால் களையப்பட வேண்டும், இல்லையா ஏற்கப்பட வேண்டும்.
அப்படித்தான் கல்கியின் அவசரம் அவளின் குறை என்றால், இவனின் ஆவேசம் ஒரு குறை. சிரஞ்சீவி இயல்பிலேயே நிதானம் ஆனவன். அவன் கொண்டுள்ள கடமைக்கும் அந்த குணம் நன்றாகவே துணை செய்தது. இத்தனையும் கடமையில் மட்டும்! அவனின் பெற்றவர்கள் என்று வந்துவிட்டால் மற்றவர்கள் பற்றி அவனுக்குக் கவலை கிடையாது.
இப்போதும் அப்படியே! அம்மாவைக் கல்கிப் பேசிய பின் ஆவேசம் தானே ஒழிய அதன் காரணம் என்ன, நன்றாய் இருந்தவள் ஏன் இப்படி ஆனால் என்று யோசிக்க நிதானமில்லை.
கொஞ்சம் பொறுமையாய் யோசிக்க, என்னவோ அவள் குழம்பி இருக்கிறாள் என்று மெல்ல புரிந்தது. அதுவும் விஜயவாடாவிற்கு விஜயம் செய்த பின் தான் இந்த வினயங்கள் என்றும் புரிந்தது. அவன் செயலும் கூட காரணமாய் இருக்குமோ என்று யோசிக்க, அதில் கோபமில்லை என்றாளே என்ற எண்ணம் வேறு. எதுவானாலும் பேசாமல் தீராது என்று நினைத்தவன் அறையை விட்டு வெளியே வந்தான்.
கல்கி அவள் அறை வாசலில் கதவில் சாய்ந்தவண்ணம் தரையில் உட்கார்ந்திருந்தாள். இவன் வந்து
“கல்கி!” என்று அழைக்கவும் அவள் கயல்விழிகள் மெல்ல இவனைப் பார்க்க கண்ணீர்த் தளமாய் அவள் கண்கள். வரப்ரசாத் வந்து அழைக்கவும் வேகமாய் எழுந்தவள்
“நான் அத்தையைத் தப்பா சொல்லணும்னு பேசல, நான்” என்றவளைக் கை நீட்டி தடுத்தவன்
“ரிலாக்ஸ்! நானும் உங்கிட்ட பேசத்தான் வந்திருக்கேன். முதல்ல போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா கல்கி” என்றவனின் குரலில் கோபம் இன்னும் தீரவில்லை என்று புரிந்த கல்கிக்குத் தன் பேச்சு அவனை எப்படி தாக்கியிருக்கும் என்பது புரிய இன்னும் அழுகைத்தான் கூடியது.
“கல்கி! ஸ்டாப் க்ரையிங், ஏன் அழற? உன்னோட அழுகை எனக்கு எப்பவும் பிடிக்காது. அழாம போ” என்று அவன் கட்டளையிட அழுதால் இன்னும் பேசுவான் என புரிந்து அவள் முகம் கழுவி வர, வரப்ரசாத் சோஃபாவில் உட்கார்ந்திருந்தான். கல்கி தனியே இருந்த இன்னொரு சோஃபாவில் உட்காரவும்
“என்ன ஆச்சு கல்கி? ஏன் இப்படி இருக்க?” என்றான் பொறுமையாகவே.
“ஸாரி, நான் அத்தையைப் பத்தி பேசியிருக்க கூடாது. நான் வேற மீன் பண்ணினேன்” என்று கல்கி தயக்கமாய்ப் பேச
“கல்கி! இதுதான் லாஸ்ட் நீ அம்மாவைப் பேசினது. எனக்கு முன்னாடியெல்லாம் நீ அம்மாவைப் பேசினா இரிட்டேட் ஆகும். பட் நவ் எனக்கு கஷ்டமாயிருக்கு, வலிக்குது கல்கி. ஜஸ்ட் லைக் தட் முன்னாடி மாதிரி இக்னோர் செய்ய முடியல” என்றான்.
“ஸாரி. நான் அப்பாவோட நம்பிக்கையை உடைக்க முடியாதுன்ற அர்த்தத்துல சொன்னேன். அத்தையை அப்பா நம்பினார்தானே? இப்ப அத்தை மாதிரி நானும் செஞ்சா தப்புதானே? அதுவும் அத்தையை அப்படி பேசிட்டு” என்றவளின் குரலில் குற்றவுணர்ச்சியும் குழப்பமும் மட்டுமே. கல்கி பேசவும் சிரஞ்சீவிக்குத்தான் குழப்பம் அதிகமாகியது.
“வெயிட், அப்படி என்ன தப்பு செஞ்ச நீ? ஏன் இந்த கில்ட்?” என்று அவன் அறியாதவனாய்க் கேட்க கல்கி அவனைப் பார்த்து
“என்ன கில்ட்டா? அப்பா என்னை இங்க படிக்க அனுப்பியிருக்கும்போது…எனக்கு உங்களைப் பிடிச்சது தப்புதானே?” என்று அவனைக் கேள்வி கேட்க அந்த சூழ் நிலையும் மீறி புன்னகை உதயமானது அவனிடம்.
“இப்போதான் என்னைப் பிடிக்கும்னு வார்த்தையா உங்கிட்ட இருந்து வருது” என்றான் கேள்வியாய்த் தன்னைப் பார்த்தவளிடம்.
அதில் கல்கியின் தலை குனிய
“ஓய் அம்மடூ! என்னைப் பாரு” என்றான் அதட்டலாக.
கல்கி இருந்த உளைச்சலில் நிமிராமல் இருக்க
“என்னைப் பிடிக்கும்ன்றதை எவ்வளவு அழகா சொல்லணும் தெரியுமா நீ? இப்படி அழுதுட்டு குனிஞ்சிட்டு எல்லாம் சொல்லக் கூடாது. என்னைப் பிடிக்கறது ஒன்னும் பெரிய க்ரைம் கிடையாது கல்கி” என்று மென்மையாய் ஆரம்பித்து கடைசியில் கொஞ்சம் கண்டிப்புடன் முடித்தான். எப்போதும் பேசும் கல்கி இன்று அமைதியாய் இருந்தாள். எதுவுமே தன் கட்டுப்பாட்டில் இல்லை என்ற தோற்றம்.
“பேசு கல்கி” என்று சிரஞ்சீவி மீண்டும் மீண்டும் சொல்ல
“இங்க வரும்போது அப்பா கிட்ட படிக்கத்தான் போறேன். உங்க நம்பிக்கையைக் கெடுக்க மாட்டேன் சொன்னேன். பட் இப்போ?” என்று இடையில் கல்கி நிறுத்த
“இப்போ?” என்று இவன் தொடங்கினான்.
“சொல்லு இப்போ என்னாச்சு? இங்க படிக்கத்தானே வந்திருக்க. அதை நீ சரியாத்தானே செய்ற?” என்று கேட்க கல்கியின் தலை தன்னால் அசைந்தது.
“தென் வாட்? படிக்க அனுப்பியிருக்கார் உங்கப்பா. ஒழுங்காவும் படிக்கிற. நானும் உன்னை எதுவும் டிஸ்டர்ப் பண்றதில்லையே. பண்றேனா என்ன?” என்று புருவம் உயர்த்த
“இல்லை, நீங்க இல்லை. நான்” என்று அவள் சொல்ல
“நீ என்னை டிஸ்டர்ப் பண்றியா என்ன?” என்றான் சிரிப்புடன்.
“ப்ச், உங்களுக்குப் புரியவே மாட்டேங்குது” என்றாள் சலிப்பாக.
“புரியவை நீ”
“அப்பாவுக்கு இந்த லவ் எல்லாம் பிடிக்காது, அது தெரிஞ்சும் நான் இப்படி செஞ்சா அது தப்புதானே? உங்களையும் கஷ்டப்படுத்துறேனே அதான் கஷ்டமா இருக்கு. எனக்கு எப்படி சொல்லத் தெரியல. அப்பாவை ஏமாத்துற மாதிரி தோணுது, அதே நேரம் உங்களை அவாய்ட் பண்ணும்போது உங்களை ஏமாத்துறேன் தோணுது. கஷ்டமா இருக்கு” என்று சொல்கையில் அதுவரை காய்ந்திருந்த கன்னம் நனைந்து போனது.
மொத்தமாய் அவளின் உணர்வுகளை உணரமுடியாவிட்டாலும் ஒரளவு அதனைப் புரிந்துகொள்ள முடிந்தது சிரஞ்சீவியால்.
“நீ ஏமாத்துறது என்னையோ உன் அப்பாவையோ இல்லை கல்கி, உன்னைத்தான்” என்று வரப்ரசாத் சொல்ல, கல்கி புரியாமல் அவனைப் பார்க்க, அவன் இன்னும் அழுத்தமாய் சொன்னான்.
“எஸ், நீ உன்னை ஏமாத்திக்கிற கல்கி. உங்கப்பாவுக்குப் பிடிச்ச பொண்ணா இருக்கனும்னு நீ நினைச்சிருந்தா உன்னால கும்பகோணம் தாண்டியிருக்க முடியாது, வாழ்க்கைக்குத் துணையா இருக்க படிப்பை எப்படி உன்னிஷ்டம்போல நீ சூஸ் பண்ணியோ அப்படித்தான் வாழ்க்கைத் துணையும் உன்னோட சாய்ஸா இருக்கறதுல எந்த தப்புமில்லை. இதுல துரோகம்ன்ற வார்த்தையே கிடையாது”
“நம்ம இரண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் விருப்பத்தைக் கூட இன்னும் சரியா வாய் விட்டு சொல்லல, அப்படியிருக்கும்போது ஏன் இப்படி உன்னை நீயே டென்ஷன் பண்ணிக்கிற கல்கி?”
“உனக்குப் பிடிச்ச வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தா நீ நல்லப்பொண்ணு இல்லையா? படிக்கிற பொண்ணுதானே கல்கி நீ? லவ் ஒன்னும் தப்பில்லை, அது பசி தூக்கம் மாதிரி ஒரு இயற்கையான உணர்வு. உங்கப்பா கும்பிடுற முருகன்ல இருந்து எங்க ஊர் பெருமாள் வரைக்கும் எல்லாரும் லவ் பண்ணினவங்கதான்”
“ஒரு நல்ல பேரண்ட் பசங்களை கட்டுப்படுத்தலாம், இப்படி செய், செய்யாதனு வழி நடத்தலாம். ஆனா கட்டாயப்படுத்தக் கூடாது. இதைத்தான் நீ செய்யணும்னு சொல்றதெல்லாம் சுத்த நான் சென்ஸ். வாழ்றது ஒருதடவ அதை நமக்குப் பிடிச்ச மாதிரி வாழ்றதுல என்ன தப்பு?”என்று பெருமூச்சுவிட்டான்.
“எங்கப்பா கண்டிப்பானவர்தான். ஆனா எங்களுக்கு ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்வார். அப்படி நமக்காக எத்தனையோ தியாகம் பண்ற அப்பா அம்மாவோட மனசுக் கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறது தப்பா?” கல்கி கேட்க
“தப்பே இல்லை! ஏன் நானுமே என் அப்பா அம்மா மனசு கஷ்டப்படுற மாதிரி நடக்க மாட்டேன் கல்கி. அதே சமயம் என்னோட ஆசைகள் நியாயமா இருந்தா அவங்க எனக்குக் கண்டிப்பா சப்போர்ட் பண்ணுவாங்க”
“எங்கப்பா கூடத்தான் என்னைப் படிக்க அனுப்பியிருக்கார்”
“எது உண்ணாவிரதம் சத்யாகிரகம் எல்லாம் இருந்த பின்னாடியா?”
“எப்படியோ ஒத்துக்கிட்டார்தானே? ஒரு வருஷம் போனாலும் கடைசியில எங்கப்பா என்னோட விருப்பத்துக்குத்தானே வந்தார். நான் இதுல அத்தையோ மாமாவையோ பத்தி பேசல. ஆனா ஒரு அண்ணாவா தங்கச்சிக்காக எல்லாம் செஞ்சார் எங்கப்பா, திடீர்னு ஒருத்தரைக் கல்யாணம் செஞ்சுட்டு வந்து நின்னா அவங்க மனசு கஷ்டப்படாதா? திரும்பவும் நானும் அதே செஞ்சா? அது தப்புதானே?” கல்கி முன்பு போல் கோபம் கொள்ளாமல் பொறுமையாகத் தன் கருத்தை முன் வைத்தாள்.
அதனால் சிரஞ்சீவியும் பொறுமையாக, “உன் பாயிண்ட்டுக்கே வரேன். ஆசையா வளர்த்த பொண்ணு அவங்களை மீறி போனா கோவம் வரது நியாயம்தான், அம்மாவுக்கு வீட்ல சொல்ற தைரியமில்லை, அம்மா மேல தப்பாவே இருந்தாலும் அவங்க அம்மாவை அப்படியே விட்டுட்டாங்கதானே? அப்போ அவங்க பாசம் எங்க போச்சு? சரியா இருந்தா, நோ நோ அவங்க சொல்றபடி இருந்தாதான் அன்பும் அக்கறையும் காட்டுவாங்க, அவங்களுக்குப் பிடிக்காததை செஞ்சா அப்படியே எக்கேடு போன்னு விட்டுடுவாங்க. இல்லையா?” என்றான்.
அம்மாவைப் பற்றிய பேச்சென்றால் அவன் அப்படித்தான் என தெரிந்தவள் அமைதியாகிவிட்டாள்.
“இங்க பாரு கல்கி, ஃபர்ஸ்ட் நீ படிச்சு முடி. எப்போ உனக்குக் கல்யாணம்னு பேசுறாங்களோ அப்போ நான் வந்து பேசுறேன். இந்த விஷயத்துல உன் அப்பாவுக்கு உன்னால ஒரு டிஸ்ஸப்பாயின்ட்மெண்ட் வேண்டாம்”
பேச்சுவாக்கில் , “உன்னோட ஏஜுக்கு இந்த ஃபீலிங்க்ஸ் கூட பின்னாடி ஒருவேளை மாறலாம்” என்று அவன் நிதர்சனமும் எதார்த்தமும் சொல்ல, டீபாய் மேல் இருந்த டம்ளர் சத்தத்துடன் கீழே விழுந்தது. கல்கி தூக்கி எறிந்திருந்தாள். அவனை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தாள்.
“ஓஹ், உனக்குக் கோவம் கூட வருதா?” என்று அவளைப் பார்த்து சிரஞ்சீவி கேட்க
“அத்தை மாமாவை லவ் பண்ணும்போது என்னோட வயசுதான்” என்றாள் முறைப்பாக.
“நீதானே சொன்ன இன்னொரு யமுனாவா இருக்க மாட்டேன்னு?” என்று அவள் வார்த்தையை அவளிடம் திருப்பியவன்
“அம்மா அப்பாவுக்காக எல்லாம் விட்டு வந்தாங்க, நீ அப்படி செய்வியா? உன் அப்பாவா நானான்னு வந்தா நீ யாரை சூஸ் பண்ணுவ கல்கி?” என்ற கேள்விக்கு அவனை அழுத்தமாய்ப் பார்த்தாள் பெண்.
“இதே கேள்வியை நானும் உங்ககிட்ட கேட்கலாம். அத்தை மாமா லவ் மேரேஜை ஏத்துப்பாங்கன்றதால நீங்க என்னை இப்படி கேட்கிறீங்க? சப்போஸ் அத்தையும் மாமாவும் விட்டு வந்தாதான் நான் மேரேஜ் பண்ணிப்பேன் சொன்னா என்னவா இருக்கும் உங்க பதில்?” என்று கல்கி கேட்க அவன் கோபம் கொள்வான் என்று பார்த்தால் அவனோ ரசித்துப் பார்த்தான்.
“இப்படி நீ கேட்கவே மாட்டேன்ற நம்பிக்கை எனக்கு உன் மேல நிறைய இருக்கு கல்கி” என்றவனின் பேச்சில் உன்னைத் தெரியும் என்ற கர்வம்.
“அதே நம்பிக்கை எனக்கும் வேணும். முதல்ல ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சிக்கோங்க. எங்க வீட்ல இருந்து நான் கேட்டது சுதந்திரம்தான், விடுதலை இல்லை!” என்ற கல்கியின் பேச்சில் அவளை மெச்சுதலாய்ப் பார்த்தவன்
“குட்! இவ்வளவு நேரம் இந்த கல்கியைத்தான் காணும். எங்க போச்சு இந்த தைரியம் இத்தனை நாளா? எஸ்பி வீட்ல திருடன் போலீஸ் விளையாடிட்டு இருந்த?” என்று கேட்டான்.
“அது உங்க கூட பேசின பின்னாடி தைரியம் வந்துடுச்சு. ஆனா அப்பாவா நீங்களான்னா எனக்கு அப்பாதான் முக்கியம். அப்போ உங்களை ஏமாத்துறேன்ற ஃபீலிங்க்தான் என்னைக் கஷ்டப்படுத்துது. அப்பா எனக்கு ரொம்ப முக்கியம், அதே சமயம் நான் மிசஸ் சிரஞ்சீவியா மட்டும்தான் என் வாழ்க்கையில இருப்பேன்” என்ற போது அவளின் குரலில் அவ்வளவு தெளிவும் உறுதியும்.
“அம்மடூ! இதான் நீ என்னை புரிஞ்சிக்கிட்டதா? என்னைக் கேட்டாலும் எனக்கும் என் அப்பா, அம்மாதான் முதல்ல முக்கியம். அப்புறம் தான் நான் என்னையே யோசிப்பேன். ஆனா அப்பா அம்மாவுக்கு அடுத்து இப்போ எனக்கு நீதான் கல்கி! உன்னோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம். அப்பா பேச்சை மீறி டூர் போகாத பொண்ணு எனக்காக வருவன்னு நினைச்சா இட்ஸ் இடியாட்டிக்”
“பத்ராச்சலம் சீதா ராமர் கல்யாணம் மாதிரி நம்ம கல்யாணமும் எல்லா சொந்தக்காரங்களும் வந்து வாழ்த்துற ஒரு திருவிழா மாதிரிதான் நடக்கும்” என்றவன் தன் கரத்தை நீட்டி கல்கியின் கரம் பற்றி
“கல்கிக்காக ஐ ப்ராமிஸ். கண்டிப்பா உங்கப்பாவை கன்வின்ஸ் செஞ்சுதான் நம்ம கல்யாணம் நடக்கும். உனக்குக் குற்றவுணர்ச்சி வரமாதிரி நான் நடக்க மாட்டேன். எனக்குமே நம்ம பசங்களுக்கு இரண்டு சைட் தாத்தா பாட்டி எல்லாம் வேணும்னு ஆசை. அம்மா கூட உங்களை எல்லாம் இத்தனை வருஷம் மிஸ் பண்ணுவாங்கன்னு நானும் அப்பாவும் யோசிச்சதில்லை, இப்போதான் அதை அவங்க காட்டிக்கலன்னு புரிஞ்சது” என்றதும் அவனின் கையிலிருந்து தன் கையை விலக்கிக்கொண்டவள்
“உங்க பசங்க, உங்கம்மா அவங்கதான் முக்கியமோ?” என்றாள் செல்லக்கோபத்துடன்.
“அம்மடூ! உனக்காகத் தான் டி இவ்வளவும் சொல்றேன். அம்மா மனசுல இப்படி ஒரு ஏக்கம் இருக்குன்னு அப்பா தெரிஞ்சுக்காம இருந்துட்டார், பட் நான் அப்படி இருக்க மாட்டேன்” என்றவனின் பேச்சில் வழிந்தது பெருங்காதல்.
“அய்யே! ரொம்ப பண்ணாதீங்க. உங்களால மாமா மாதிரி எல்லாம் வர முடியாது. அவர் அத்தையைக் கத்தி ஒரு நாளும் பார்த்ததில்லை நான். என்னை அடிக்க கை ஓங்கினவர்தானே நீங்க?” என்றதும்
“அம்மாடி! நிஜமா உன்னை அடிச்சிருக்க மாட்டேன் நான். அடிக்க நினைச்சதுக்கே எங்கப்பாவும் அம்மாவும் என்னை அப்படி திட்டினாங்க. அடிச்சிருந்தா எங்கம்மா என்னை அப்பவே அடிச்சிருப்பாங்க. நீ அப்படி எதிர்த்துப் பேசவும் ஜஸ்ட் ஒரு கோவம், மத்தபடி நான் அக்யூஸ்ட்யே எவிடன்ஸ் இல்லன்னா அடிக்கவே மாட்டேன்” சிறிது நேர அமைதிக்குப் பின்,
“அப்படி ஒருவேளை உங்கப்பா ஒத்துக்கலன்னா என் அம்மடூவை நான் தூக்கிட்டு வந்துடுவேன்” விளையாட்டாய் சொன்னாலும் அதில் ஒரு அழுத்தம் இருந்தது. அவன் பேச்சில் கல்கி முறைக்கவும் பதிலுக்கு முறைத்தவன்
“நான் கூப்பிட்டதும் அப்படியே வந்துடவ பாரு, இன்னொன்னு கூட மறந்துட்ட கல்கி, தாத்தா இருந்தப்பவே அவர் நமக்குக் கல்யாணம் பேசினார். அதனால நம்ம கல்யாணம் பத்தி நீ பயப்படறதெல்லாம் வேஸ்ட், நல்லபடியா நடக்கும்” என்றான் நம்பிக்கையுடன்.
“அப்போ முதல் ஆளா எனக்கு இந்த பொண்ணு வேண்டாம்னு சொன்னது மறந்து போச்சா?” என்றாள் கல்கி.
அப்போது இருந்த உணர்வு வேறு, இப்போதோ என்னை அப்படி சொன்னானே என்ற ஆற்றாமை பொங்கியது.
“நீ மட்டும் என்னவாம்? எனக்கு உங்க பேரன் வேண்டாம்னு சொன்னதானே? ஏன் இப்போ அப்பவே எஸ் சொல்லியிருக்கலாம் தோணுதா?” என்றான் கள்ளச்சிரிப்புடன்.
“கண்டிப்பா சொல்லியிருக்க மாட்டேன், ஏன் உங்களுக்குத் தோணுதா?” என்று அவனிடம் கேட்க
“நெவர்! அப்போ யார் சொல்லியிருந்தாலும் நான் ஒத்துட்டு இருந்திருக்க மாட்டேன். பட் இப்போ யாராச்சும் சொன்னா உடனே தலையாட்டிடுவேன்”
“மிஸ் கல்கி! போதும் இதைப் பத்தி யோசிச்சது. முதல்ல டிகிரி முடிங்க, டிகிரி கூட முடிக்காத பொண்ணை மிஸஸ். சிரஞ்சீவியா எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. அண்ட் உன்னை மட்டும் இல்லை என்னையும் நம்பி மாமா உன்னை இங்க விட்டிருக்காங்க. எப்பவும் அந்த ட்ரஸ்ட் நான் ப்ரேக் செய்ய மாட்டேன். அதே நேரம் உன்னையும் விட மாட்டேன். இப்போ உன் வேலை படிக்கிறது. அதை செய்…” என்றான் கடைசியில் அழுத்தமாய்.
அவன் கோபம் குறைந்து பேச இவள் தன்னிலை மறந்து அவனை ரசித்துப் பார்த்தாள்.
“இப்படியே எவ்வளவு நேரம் மேடம் பார்ப்பீங்க? எனக்குப் பேசி பேசி பசியே வந்துடுச்சு சாப்பிடலாம். இங்க எடுத்துட்டு வா ப்ளீஸ்” என்றான்.
“இங்கேயேவா?” என்றதும் அவன் “ம்ம், டீவி பார்க்கப் போறேன்” என்றான் வரப்ரசாத். கல்கியும் கிச்சன் பக்கம் போக
“அம்மடூ! ஓகேதானே? டென்ஷன்லாம் போச்சா?” என்று சிரஞ்சீவி கேட்க
“டிகிரி முடிச்சிட்டு உங்களைப் பேசிக்கிறேன் மிஸ்டர் காரம்” என்ற அவளின் பதிலில் அவள் தெளிந்துவிட்டாள் என்று தெரிந்தவன் டீவியை ஆன் செய்தான்.
✅ End of Episode 33
அந்த பக்கம் கல்யாணம் கச்சேரி
Very nice
சிங்காரம் டிகிரி முடிக்காத பொண்ணுண்னு பேசும் போது தெரியலையா மேன்.....