Episode 1
“அஞ்சு, எங்க வர? எல்லாரும் வந்துட்டாங்க” தங்கைப் பேசுவதைக் கேட்க கேட்க கண்கள் கலங்கிப் போனது அஞ்சனாவிற்கு.
அவளின் தாத்தா சற்குணப்பாண்டியன் உடல் நலம் சரியில்லாமல் இன்றோ நாளையோ என்றிருக்கிறார். அதற்காக தன் கணவன் மனோகருடன் கும்பகோணம் போய்க்கொண்டிருக்கிறாள். வயதானவர்தான் என்றாலுமே வளர்த்தவர் ஆயிற்றே, கண்கள் கலங்க பேச்சு வராமல் அமைதியாகிவிட அவள் தங்கை கத்தினாள்.
“பேசுடி” என்று.
“சரி நீ அப்பத்தாவைப் பார்த்துக்கோ. நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவோம், ஆன் தி வே” என்று சொல்ல
“ஓகே, ஒகே” சொல்லி வைத்துவிட்டாள் கல்கி.
நடுவீட்டிற்கு வந்து பார்க்க, அவளின் தாத்தா கட்டிலில் படுத்திருக்க சுற்றியும் சொந்தங்கள். எல்லாம் அவரின் பங்காளிகள்.
அத்தனை கூட்டம் பார்த்த கல்கிக்குத் தோன்றியது இதுதான். இவர்கள் எல்லாரும் எப்போதடா சாவார் என்று காத்துக் கொண்டிருப்பது போலவே நின்றார்கள். இதில் எல்லாருக்கும் உபச்சாரம் வேறு. அவள் அம்மா அங்கையற்கண்ணி எல்லாருக்கும் டீ காபி என்று கொடுத்துக் கொண்டிருக்க, தேர்தல் ரிசல்ட் போல தாத்தா எப்போது காலாவதியாவார் என்று காத்துக் கிடந்தது சுற்றமும் உறவும்.
இவள் சமையல்கட்டுக்குப் போக அங்கையற்கண்ணி சின்னமகளிடம்
“என்னடி அஞ்சு எங்க வரா?”
“இன்னும் இரண்டு மணி நேரத்துல வந்துடுவேன் சொன்னா மா” என்றவள்
“ம்மா, அப்பா கிட்ட சொல்லி முதல்ல இவங்களைப் போக சொல்லு. எப்போடா தாத்தா போவாருன்ற மாதிரியே இருக்காங்க எல்லாம், எரிச்சலாகுது எனக்கு. அவரை சும்மா விட்டாலே நல்லா இருப்பார்” என்று கடுப்பாய் சொன்னாள்.
“வாயை மூடு கல்கி, அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. போகுறதுக்கு முன்னாடி தாத்தா எல்லாரையும் பார்க்க பிரியப்படுவார் இல்லை” என்றவர்
“அக்கா யுகனைத் தூக்கிட்டு வருவா, அவனுக்குத் தனியா சாதம் குழைவா வை. நான் போய் டீ கொடுத்துட்டு வரேன்” என்று சொல்லி போக அவள் அக்காவின் இரண்டு வயது மகன் யுகனுக்கு சாதம் வைத்து வெளியே வர ஒரே காரசாரமான விவாதம் போய்க் கொண்டிருந்தது.
“என்னாச்சு மா” மெதுவாய் வந்து அம்மாவிடம் கல்கி கேட்க
“உங்க அத்தைக்கு சொல்லி விட சொல்றார் இந்த தனபால் பெரியப்பா”
“ஏன் சொல்லணும்?” கல்கி அசுவாரசியமாகக் கேட்டாள்.
“எல்லாரும் இருக்காங்க, என் பொண்ணு இல்லைன்னு உங்க அப்பத்தா அழுக, அப்படியே எல்லாரும் கிளம்பிட்டாங்க” என்ற அங்கையற்கண்ணி கணவன் உதயமூர்த்தியைப் பார்க்க அவரோ அப்பாவைப் பார்த்தார்.
“என்ன மூர்த்தி நீ? இன்னும் யோசிக்கிற? காலம் போன கடைசியில பெரியப்பாவுக்குப் பொண்ணைப் பார்க்கணும்னு இருக்காதா?” என்று தனபால் கேட்டார். உதயமூர்த்தியின் உடன்பங்காளி தனபால்.
“இன்னும் என்ன வெட்டி வீராப்பு? பாருங்க அத்தை எப்படி அழறாங்கன்னு?” என்று பேசினார் தையல் நாயகியின் தம்பி மகன் கரிகாலன்.
உதயமூர்த்தியோ மனதில்
‘நீங்கதானே டா அவ ஓடிப்போனப்போ அந்தவார பேச்சு பேசுனீங்க?’ என்று நினைத்தவர்
“ப்பா, பார்க்கனுமா அவளை?” என்று மெதுவே அவர் அருகே நின்று கேட்க சற்குணப்பாண்டியனின் தலையசைந்தது.
எல்லாமே அந்த வீட்டில் சற்குணப்பாண்டியன்தான். அவர் சொல்லே கட்டளை. தங்கை மீது இன்னும் உதயமூர்த்திக்கு வருத்தம் இருந்தது, காதலித்தது தவறு சரியென்ற பேச்சை விட அவர்களின் நம்பிக்கையை உடைத்துச் சென்றுவிட்டார். அதுவே அவரின் வருத்தம்.
அப்பா சம்மதம் சொல்லவும்
“இப்போ எங்கன்னு நான் அவளைப் போய் தேடுவேன், வந்தப்ப விரட்டி அடிச்சீங்க” என்று உதயமூர்த்தி புலம்ப
“என் கூட அவ பேசிட்டுதான் இருப்பா மாமா” என்று வாய் திறந்தார் வனஜா. அவர்களின் உறவுக்காரப் பெண்.
“அப்போ நீயே அவளுக்குப் போன் போட்டு சொல்லு” உதயமூர்த்தி விலகி நின்று பேச
“அதெப்படி மூர்த்தி? நம்ம வீட்டுப் பொண்ணு நம்ம கூப்பிடனும். அதான் மரியாதை” என்று தனபால் வரிந்துகட்டிக்கொண்டு வந்தார். போன வருடம் வரை யாரிடம் பேசினாலும் எந்த ஜாதி என்று கேட்டுப் பேசும் மனிதர் அவர், இப்போது அவரின் மகன் வேற்று ஜாதியில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வந்துவிட கொஞ்சம் அடங்கியிருக்கார்.
“தனபால் சொல்றதுதான் சரி” ஒத்து ஊதினார்கள் மற்ற உறவுகள்.
அப்படியே பேச்சுவார்த்தை நீள, அஞ்சனா வந்துவிட குழந்தையைப் போய் வாங்கிக் கொண்டாள் கல்கி. மனோகர் ஆண்களுடன் போய் அமர்ந்துவிட
“என்னடி இவ்வளவு பேச்சு சத்தம்” குழந்தையின் உடையைக் கழற்றியவண்ணம் தங்கையிடம் கேட்டாள் அஞ்சனா.
“அந்த காதல் இல்லனா சாதல் கேஸை வீட்டுக்குக் கூப்பிடனுமாம்” முகம் சுழித்து சொன்னாள் கல்கி. அவளின் உணர்வுகள் அஞ்சனாவுக்கும் புரிந்தது.
“அத்தையை வா? எப்படி டி? வார்த்தைக்கு வார்த்தைத் திட்டுவாங்க”
“உயிர் என்னைக்கானாலும் போகப் போதுன்னு தெரியும், அப்போ எல்லாம் திருந்த மாட்டாங்க, எமதர்மன் வந்து எமர்ஜென்சி வார்னிங் கொடுத்தவுடனே திருந்திடுவாங்க அஞ்சு” கல்கிக்கு அவ்வளவு கோபம் எல்லாரின் மீதும்.
அவளின் அத்தை ஓடிப்போனவர் எப்படி இருக்கிறார் என்று தெரியாது. இவ்வளவு ஏன் இவள் அவரைப் பார்த்தது கூட கிடையாது. ஆனால் அவரின் மீதான கோபம் மட்டும் நாளுக்கு நாள் கூடுமே தவிர குறைந்ததில்லை.
அத்தையால்தானே அவளின் அக்காவின் படிப்புக் கெட்டது, இதோ ஒரு குழந்தைக்குத் தாயாகி நிற்கிறாள். தன் படிப்பும் அப்படியே..! அதற்காக இன்னமும் போராட்டம்.
அதனையும் விட துளியும் சுதந்திரமில்லா வாழ்வு. எல்லாவற்றிற்கும் காரணம் காதல் முக்கியமென சென்ற அவளின் அத்தை. அவரை மட்டும் பார்த்தாள் என்றால் இத்தனை வருட கோபத்தையும் கொட்டிவிடுவாள். அப்படியான அத்தையைத்தான் இவர்கள் இப்போது அழைக்கப்போகிறார்கள்.
“என்னவோ போ டி, பாவம் தாத்தா. காலம் போன கடைசியில பொண்ணு மேல பாசம் வந்துடுச்சு போல, விட்டுத் தள்ளு. நமக்கென்ன? நம்ம பேச்சு என்னைக்குக் கேட்டிருக்காங்க” என்று அஞ்சனா பேச்சை முடித்தவள்
“நீ இவனுக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வை, நான் தாத்தா கூட இருக்கிறேன்” என்று சொல்லி போக குழந்தையுடன் தனது பொழுதினை ஓட்டினாள் கல்கி. ஒருவழியாக உறவுகள் மூலம் தங்கையிடம் பேசி தந்தையின் உடல் நலத்தினை கூறிவிட, அவரும் பதறிவிட்டார்.
அப்பாவைக் காண வருவதாக சொல்லிவிட, இங்கு சற்குணப்பாண்டியனிடம் உயிர் மகளுகாகக் காத்திருந்தது. அவரின் அருகே உட்கார்ந்திருந்த அவரின் மனைவி தையல் நாயகி வனஜாவிடம்
“நீ எங்க டி அவளைப் பார்த்த? எப்படி இருக்கா என் மக?” என்று விசாரித்தார்.
“அஞ்சு வருஷம் முந்தி திருப்பதிக்கு சேவை செய்ய போனேன்ல அத்தை, அப்போதான் பார்த்தேன். குடும்பத்தோட வந்திருந்தா”
“பேரன் இருந்தான், அடுத்து பிள்ளை இருக்கா?” தையல் நாயகி ஆசையாய்க் கேட்க
“ஒரு மகன் மட்டும்தான் நினைக்கிறேன், அவ கூட அவ வீட்டுக்காரரும் மகனும் நின்னாங்க. அவதான் என்னை அடையாளம் கண்டுட்டு பேசினா, நம்பர் கொடுத்தா அத்த” என்றார் வனஜா.
“இந்த மனுஷனாச்சும் விட்டுக்கொடுத்துப் போயிருக்கலாம், என் மகளை சீராட்டி வளர்த்து என்ன ப்ரோயோஜனம்” தையல் நாயகி புலம்பியம்படி வாசலைப் பார்த்தார். மகளைக் காணும் ஆவல் பெருகிக் கொண்டே போனது.
யுகனுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டு அஞ்சுவும் கல்கியும் பேசிக்கொண்டிருக்க
“கல்கி!” உதயமூர்த்தி அவர்கள் அறை வாசலில் நின்று கூப்பிட்டார்.
“என்னப்பா?” என்றபடி கல்கி யுகனைத் தூக்கியபடி கேட்க
“அது, உங்க அத்தை வரதுக்கு வழி கேட்கிறா. வாட்ஸப்ல அனுப்பி விடுமா” என்றதும் கல்கி முறைத்தபடி நின்றாள்.
“சொல்றதை செய்யாம என்ன பார்க்கிற?” உதயமூர்த்தி அதட்ட
“ஏன் உங்க தொங்கச்சிக்கு ஊருக்கு வழி கூட மறந்து போச்சா?” என்றாள் எரிச்சலாக.
“அவளுக்குத் தெரியும், ஆனா அவ மகன் கார் ஓட்டுறான் போல. நீ அனுப்ப சொன்னா அனுப்பு. ரோடெல்லாம் மாறிதானே போயிருக்கு” என்று மகளைத் திட்டியவர் போனைக் கொடுத்துவிட்டுப் போக அப்பா சொன்னது போல் லோகேஷன் ஷேர் செய்தவளுக்கு ஜெகதிஷிடம் இருந்து போன். ஜெகதீஷ் அவளின் அம்மாவின் அண்ணன் மகன்.
“என்ன டி என்ன செய்ற?” எடுத்தவுடன் ஜெகதீஷ் கேட்க
“ஒன்னும் கிழிக்கல நான், நீ எங்கடா இருக்க? இன்னும் வராம”
“நல்லா இருக்க மனுஷனை நீங்களே இந்தா போன்னு டிக்கெட் கொடுத்து சொர்க்கத்துக்கு அனுப்பிடுவீங்க போல டி” என்று கடிந்தான்.
“நாளைக்கு லீவ், ஸோ நைட் கிளம்புறேன். அப்புறம் அப்பா அம்மா வந்தாச்சா?” என்று விசாரிக்க
“மாமாவும் மாமியும் நேத்து வந்துட்டு போனாங்க டா, இன்னிக்கு வரல. அப்புறம் உனக்கு ஒன்னு தெரியுமா அந்த மாரத்தான் கேஸ் வீட்டுக்கு வருதாம்” என்று அவனிடம் சொன்னாள்.
“யாரு உங்க அத்தையா?”
“அதே தான்”
“என்னடி சொல்ற? இத்தனை வருஷம் இல்லாம இப்போ என்ன?”
“பாசம் பொங்குதாம் பொண்ணு மேல” எரிச்சலில் கல்கி பேச
“சரி விடு, நமக்கென்ன யார் வந்தா?”
“நமக்கென்னவா? எனக்கு இருக்குடா, அந்த அத்தையை நல்லா நறுக்குன்னு கேட்காம நான் விட மாட்டேன்” என்றவளுக்குத் தெரியாது. அவளின் அத்தை மகன் இவள் நறுக்கென்றால் சுருக்கென பேசுபவன் என்று.
“ப்ச், லூசு. அவங்க வந்துட்டுப் போய்டுவாங்க, நீயா பேசி பிரச்சனை இழுத்தா அப்புறம் நம்ம விஷயம் அவ்வளவுதான்” என்றான் ஜெகதீஷ். அவனுக்கு அவனின் கவலை.
ஆனாலும் கல்கியின் மீது நம்பிக்கையில்லை. திட்டு, அடி என்று எத்தனைப் பட்டாலும் பிடிவாதமாய் இருப்பாள் என்று அவனுக்குத் தெரியுமே.
இவர்கள் பேசும்போதே யுகன் போனை இழுக்க
“ஹே யுகன் வந்திருக்கானா?” என்று ஆசையாய்க் கேட்டவன்
“அவனை காட்டு டி” என்று சொல்லி விடியோ காலில் பேச ஆரம்பித்தான்.
அன்றைய நாளின் முடிவிலும் அடுத்த நாளின் தொடக்கத்திலுமாக இருந்த அந்த நிசர் பொழுதில் பல வருடம் கழித்து பிறந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தார் கல்கியின் அத்தை.
கல்கிக்கு அமைதியாக இருந்தால் மட்டுமே உறக்கம் வரும். யுகன் இரவெல்லாம் சேட்டை செய்ய, உறக்கமில்லை அவளுக்கு. அதனால் அக்காவும் மாமாவும் ஒரு அறையில் உறங்க, இவள் யுகனுடன் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டாள். நல்ல இதமான காற்றுத்தழுவ, யுகன் அப்படியே அவள் தோளில் சாய்ந்தபடி உறங்கிவிட்டான்.
நடுவீட்டில் சற்குணப்பாண்டியனுடன் தையல் நாயகி இருக்க, கல்கியின் அப்பா அங்கேயே ஒரு கயிற்றுக்கட்டிலில் படுத்திருக்க, கீழே அம்மா உறங்கினார்.
வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்க, எல்லாரும் பரபரப்பாய் எழ உதயமூர்த்தி கேட்டைத் திறக்க, அந்த கார் உள்ளே நுழைந்தது. அவளின் அத்தை யமுனா முதலில் இறங்க, அவருக்கு அடுத்து அவரின் கணவர்.
அத்தைக் கணவரைப் பார்க்கவும்
“இவருக்காகத்தான் மாரத்தான் ரேஸா?” என்றபடி அளவிட்டது கல்கியின் பார்வை.
“அட்ரஸ் கேட்டானே அந்த அத்தை மகன் எங்க?” என்று யோசிக்க டிரைவர் சீட் பக்கமிருந்து இறங்கினான் த்ரிபுரனேனி சிரஞ்சீவி வரப்ரசாத்.
✅ End of Episode 1
Welcome mr. திருப்பிபோட்ட பிரசாத்🤣🤣🤣🤣
heeeeyyy, I miss those days ka, apo ellarum active ah irupommm😍
Re run dhan sis
@Mrs Beena loganathan re run dhan sis
Wow! Bangaram coming...
thanks for your wishes vedha ma💕
Bungaram comming. Nice.
super 😍
Super Ma
த்ரிபுரனேனி சிரஞ்சீவி வரபரசாத் 😍 கல்கி
தாய் தந்தையை விட்டு
Nice