Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 13

கல்கிக்குத் தான் சொல்வதைக் கேட்கும் பொறுமையில்லை, அவளுக்கு சொல்லிப் புரியவைக்கும் அளவுக்குத் தனக்கும் பொறுமையில்லை என்று புரிந்த வரப்ரசாத் அம்மாவிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

கல்கிக்கு மனதெல்லாம் அவ்வளவு மகிழ்ச்சி. புது ஊர்! புது மக்கள்! முதல் நாள் கல்லூரி என்று எல்லா மாணவிகளையும் போல சந்தோஷமாகவே அவளுக்கும் அந்த நாள் போனது. முதல் ஐந்து நாட்கள் ஆடிட்டோரியத்தில் ஓரியண்டேஷன் நடைபெறும், ஒவ்வொரு துறை பிரபலங்களும் வந்து மாணவிகளிடையே கலந்துரையாடுவார்கள்.

கல்கி இயல்பிலே எல்லாருடனும் கலந்துவிடுவாள் என்பதால் அவளுக்கு அன்றே ஐந்து பெண்களுடன் நட்பு தோன்றிவிட்டது.

அந்த நாளை மகிழ்ச்சியாய்க் கழித்தவள் வீட்டிற்கு வந்து உண்டு முடிக்க, அவளின் அப்பா அழைத்துவிட்டார்.

“பத்திரமா போய்ட்டு வந்தியா கல்கி?” உதயமூர்த்திக்கு என்னதான் மகளை அனுப்பிவிட்டாலும் பயமும் பதட்டமும் இருந்தது.

“வந்துட்டேன்ப்பா” என்றவளிடம்

“சரி, நாங்க யாரும் இல்லைன்னு இஷ்டத்துக்கு நடக்காம ஒழுங்கா இருக்கனும் கல்கி. அடுத்த மாசம் நான் உன்னைப் பார்க்க வரேன்” என்று கண்டிப்பாய் சொன்னவர் அங்கையற்கண்ணியிடம் கொடுக்க,

“கல்கி! சாப்பிட்டியா டி ?எப்படி டி இருக்க? காலேஜ்லாம் பிடிச்சதா? ஒழுங்கா வழி தெரிஞ்சுப் போய்ட்டியா?” என்று அங்கை கேள்வியாய்க் கேட்டார்.

“ம்மா, அதெல்லாம் சாப்பிட்டேன். காலையில மாமாவே ட்ராப் பண்ணிட்டாங்க. வீட்ல இருந்து பக்கம்தான், ஒன்னும் பயமில்லை” என்றதும் அங்கை குரல் கமற

“நீயெல்லாம் வீடே நல்லாயில்ல டி, கைக்குள்ளயும் காலுக்குள்ளயும் ஓடிட்டு இருப்ப. வீடே வெறிச்சோடி இருக்கு. இதுல உங்கப்பத்தா சத்தமும் இல்லாம அவ்வளவு அமைதி. ஏதோ டீவி ஓடுறதுதான் மனுஷங்க இருக்க மாதிரி எனக்கு இருக்குது” என்றார் அங்கை.

“பார்த்தியா இப்பவாச்சும் எங்க இரண்டு பேர் அருமையும் தெரிஞ்சா சரி, அதெல்லாம் பழகிடும்மா, நீ இப்போ அப்பத்தா கூட சண்டை போடாம இஷ்டப்பட்ட சேனல் வச்சுப் பார்க்கலாம். உனக்குப் பிடிச்ச காரச்சட்னி வச்சுக்கோ, புளி கம்மியா கரைச்சு உனக்குப் பிடிச்ச மாதிரி கெண்டை மீன் குழம்பு வச்சி சாப்பிடும்மா. இத்தனை நாள் எங்களையே கவனிச்ச தானே? இப்ப உனக்குப் பிடிச்சதெல்லாம் செய்மா” என்று அங்கையுடன் வெகு நேரம் பேசிய பின் தான் வைத்தாள்.

அவளும் அம்மாவை மிகவும் தேடினாள். ஆனால் வாய்த்திறந்து சொல்லிவிட மாட்டாள். அதுதான் அவளது குணம்!

ஜெகதீஷ் இவளுக்கு அழைத்து,

“என்னடி? காலேஜ் எப்படி இருந்துச்சு?” என்று கேட்டான்.

“காலேஜ் செமையா இருந்துச்சு, இன்னிக்கு கெஸ்ட் எல்லாம் வந்து பேசினாங்க. சூப்பரா போச்சு, நான் நினைச்சத விட சூப்பர் மாம்ஸ்” கல்கியின் பேச்சிலே அவளின் உள்ளத்து உவகையும் உற்சாகமும் பாராமலே அவனுக்குப் புரிந்தது.

“அப்புறம்..?” என்று ஜெகதீஷ் இழுக்கும்போதே

“ஒரு நிமிஷம் இரு மாம்ஸ், கால் வருது” என்று அவனது காலை ஹோல்டில் போட்டாள்.

சிரஞ்சீவிதான் அழைத்திருந்தான். இவள் வந்தவுடன் மெசெஜ் அனுப்ப சொல்லியிருந்தான், அவளும் அனுப்பியிருந்தாள். இப்போதுதான் அதனைப் பார்த்தவன் அழைத்துவிட்டான்.

“எப்போ வந்த கல்கி?” என்று சிரஞ்சீவி கேட்க

“வீட்டுக்குள்ள வந்ததுமே உங்களுக்கு மெசெஜ் பண்ணிட்டேன்” என்றாள் கல்கி.

“ஃபர்ஸ்ட் டே காலேஜ் நல்லா போச்சா?”

“ம்ம், சூப்பரா போச்சு”

“ஓகே, அம்மம்மாவைப் பார்த்துக்கோ. சாப்பிட்டியா?” என்று கேட்க

“சாப்பிட்டு முடிச்சிட்டேன்” என்றவள்

“நீங்க சாப்பிட்டீங்களா?” என்று முறைக்குக் கேட்டு வைத்தாள்.

“இல்லை. எனக்கு வொர்க் இருக்கு. யூ டேக் கேர் பை” என்று சொல்லி இவள் பதில் பேசும் முன் வைத்தும்விட்டான் சிரஞ்சீவி.

ஜெகதீஷோ கல்கி தனது அழைப்பை நிறுத்திவிட்டு பேசும் அளவுக்கு யார் அப்படி முக்கியம் என குமைந்துகொண்டிருந்தான். இவள் மீண்டும் பேச

“யார் போன் கல்கி? உங்கப்பாவா?” என்றான் அவன் விரும்பிய பதிலைக் கேள்வியாக்கி.

“அப்பா இல்லை மாம்ஸ், அத்தை சன் எஸ்பி கூப்பிட்டார்” என்றதும் எரிச்சலாகிவிட்டான் ஜெகதீஷ்.

“ஓஹ், என்னோட கால் ஹோல்ட்ல போட்டு பேசற அளவுக்கு அவன் அவ்வளவு முக்கியமா போய்ட்டானா?” என்று இவன் எகிற

“என்ன?” என்று கல்கி இவன் ஏன் இப்படி டென்ஷன் ஆகிறான் என்று யோசித்தாள். அவளுக்கு ஒரு துளியெனும் ஜெகதீஷுக்குத் தன் மேல் காதல் இருக்குமென எண்ணமே இல்லை.

கல்கி என்றைக்குமே அவனை அப்படி நினைத்துப் பார்த்தது இல்லை. அதனால் அவனின் காதலும், காதலால் விளைந்த கோபமும் அவளைப் பாதிக்கவில்லை.

“என்ன என்ன? நான் பேசிட்டு இருக்கும்போதே ஏன் டி ஹோல்ட்ல போட்ட?” ஜெகதீஷ் கோபமாய்க் கத்தினான்.

“ஏய் எதுக்கு இப்போ லூசு மாதிரி கத்துற நீ?” என்று கல்கியும் பதிலுக்குக் கத்தியவள்

“அவர் வீட்டுக்கு வந்துட்டியான்னு கேட்டார், வந்துட்டேன்னு சொல்லி வச்சிட்டேன், மேட்டர் ஓவர். அதுக்கு ஏன் டா நீ தையா தா தையா தான்னு குதிக்கிற? உங்கூட எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசலாம், இப்படி இரண்டு வார்த்தையில பதில் சொல்லி வச்சிட முடியுமா உங்கிட்ட? அது மட்டுமில்லாம அவர் டியுட்டில இருக்கார்” என்றாள் கல்கி.

“அவர் டியுட்டில இருக்கார்னா நான் வெட்டியா இருக்கேனா?” என்று ஜெகதீஷ் திருப்பிக் கேட்டான். என்னவோ கல்கி தன்னை விட இன்னொருவனை முக்கியமாய் நினைக்கிறான் என்பதை தாங்கவே முடியவில்லை. அவள் செயலில் நியாயம் இருந்தும் அதனை ஏற்க மனம் விழையவில்லை.

அந்த கோபதாபத்தை அப்படியே அவளிடம் காட்ட

“அப்போ போய் வேலையை செய்டா வெண்ண” என்று கல்கியும் கடுப்பாகி போனை வைத்துவிட்டாள்.
ஜெகதீஷோ தனது மடத்தனத்தை நொந்தவன் மீண்டும் அழைக்க கல்கிக்குக் கோபம் வந்தால் அவ்வளவுதான்! அவளாகவே மனம் இரங்கினால் மட்டுமே உண்டு. ஜெகதீஷ் திரும்ப அழைக்க கல்கி எடுக்கவில்லை என்றதும்

“சாரிடி, ஆபிஸ் டென்ஷன். போன் எடு ப்ளீஸ்” என்று குறுஞ்செய்தி அனுப்ப

கல்கியோ
“டென்ஷனோட எங்கிட்ட நீ பேசவேண்டாம், உன் வேலையைப் பாரு” என்று சொல்லிவிட இதற்கு மேல் பேசினால் அவள் இன்னும் கோபம்கொள்வாள் என்று தெரிந்து ஜெகதீஷும் இரவுப் பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

அடுத்து வந்த நாட்கள் கல்கிக்கு மிக அழகாய் சென்றன. அப்படியே அந்த வார இறுதி வந்துவிட எப்போதும் எழுவது போல் அன்றும் காலை ஐந்து மணிக்கெல்லாம் கல்கி எழுந்துவிட்டாள்.

கல்லூரி இருந்தால் குளித்துவிட்டு தயாராகித்தான் ஹாலுக்கு வருவாள். இன்று விடுமுறை என்பதால் நைட் டிரஸுடன் வெளியே வந்து பார்க்க சிரஞ்சீவி கதவைத் திறந்து வைத்திருந்தான்.

டீஷர்ட் ட்ராக் பேண்ட் அணிந்து கதவருகே குனிந்து நின்றவன் ஜாக்கிங் செல்வதற்கு ஷூ போட்டிக்கொண்டிருந்தான்.

சிரஞ்சீவியைப் பார்த்த கல்கி
“டெய்லி வாக்கிங் போவீங்களா?” என்று கேட்டாள்.

“ஆமா கல்கி” என்றவன்

“லீவ் தானே, சீக்கிரம் எழுந்திட்ட?” என்று ஷீவை மாட்டி முடித்து நிமிர்ந்தவன் இவளைப் பார்த்துக் கேட்டான்.

“டெய்லி எழுந்து பழக்கமாயிச்சு” என்றதும்

“மன்ச்சி பிள்ளா” என்றான் சின்ன சிரிப்புடன்.

“அப்படின்னா?”

“நல்ல பிள்ளைன்னு சொன்னேன், திட்டலாமில்லை” என்றதும் அவனை கிண்டலாய்ப் பார்த்த கல்கி

“திட்டினா மொழிதான் புரியாது, திட்டுறீங்கன்னு உங்க ரியாக்ஷன் பார்த்தே தெரிஞ்சிடும்” என்றாள்.

“நான் திட்டும்போது சிரிச்சிட்டே திட்டினா எப்படி கண்டுபிடிப்ப நீ?” என்று இவனும் கிண்டல் பேச

“அதெல்லாம் நான் கண்டுபிடிச்சிடுவேன்” கல்கி நம்பிக்கையாய் சொல்லவும்

“ஓகே, நான் கிளம்புறேன். நீ தூங்க மாட்டன்னா டோர் லாக் பண்ணு, இல்லை நான் பூட்டிட்டுப் போறேன்” என்றான் ப்ரசாத்.

“எனக்கும் வாக்கிங் போகனும் ரொம்ப ஆசை, நானும் வரேன்” என்று கல்கி சொல்ல சிரஞ்சீவியோ உடனே

“நீ வரவேண்டாம் கல்கி” என்று மறுத்துவிட்டான்.

“நான் உங்க கிட்ட பெர்மிஷன் கேட்கல, நானும் வரேன்னு சொன்னேன்” கல்கி அழுத்திச் சொல்ல, சிரஞ்சீவியும் அதுவரை அமைதியாய் பொறுமையாய்ப் பேசியவனும் கல்கியை முறைத்துக் கொண்டு நின்றான்.

“ஃபைவ் மினிட்ஸ் இருங்க, நான் ரெடியாகி வரேன்” என்று சொல்லி கல்கி அவள் அறைக்குள் போக பார்க்க

“கல்கி! ஸ்டாப் ” என்று அதட்டல் போட்டவன்

“முதல்ல சொல்றதைக் கேட்டுப் பழகு நீ, அட்லீஸ்ட் எதுக்கு சொல்றாங்கன்னு கேளு” என்று அவளை முறைத்தபடி சொன்னான். அவன் பேச்சில் கல்கி திரும்பிப் பார்க்க

“நீ எங்கூட வாக்கிங் வந்துட்டா அம்மம்மாவை யாரு பார்க்கிறது? நம்ம வரவரைக்கும் அவங்க தனியா இருப்பாங்க” என்றான் சிரஞ்சீவி.

“இத்தனை நாள் மட்டும் அவங்களைத் தூக்கிட்டேவா நான் சுத்துனேன்? வசந்தி அக்கா காஃபி போடுற வாசம் வந்தாதான் கிழவி கண்ணையேத் தொறக்கும். உங்களை விட எனக்கு அவங்க மேல அக்கறை ஜாஸ்தி, இத்தனை வருஷம் நீங்களா பார்த்தீங்க? ஏழு மணிக்கு மேல காஃபி போட்டு எழுப்பினாதான் அப்பத்தா எந்திருக்கும்”

கல்கியின் பேச்சில் பொங்கிய கோபத்தை பொறுமையால் அடக்கிவைத்தாலும் அகம் ஆறவில்லை. என்ன பேச்சு பேசுகிறாள் என்று பொறுமினான். தன்னை நம்பி விட்டு இருக்கிறார்கள் என்பதால் திட்டவும் மனமில்லை.

கல்கியோ அவனைக் காலையிலேயே கடுப்பேற்றியவள் அறைக்குள் சென்று ஒரு டீஷர்டும் ட்ராக் சூட்டும் அணிந்தவள் ஒரு ஷாலை எடுத்து கழுத்தை சுற்றிப்போட்டுக்கொண்டாள்.

கல்கியிடம் ஒன்றும் பேசாமல் கதவை லாக் செய்த வரப்ரசாத் அவளுடன் நடந்தான். அபார்ட்மெண்டின் கேட் வரும் முன்னே கல்கியைப் பார்த்தவன்

“கல்கி, நீ முன்னாடி போ. பார்க்ல எங்கூட வராம என்னை விட்டுத் தள்ளி வா” என்றதும்

“ஏன் உங்க கூட வந்தா என்ன? எஸ்பின்னா என் கூட வாக்கிங் வந்தா குறைஞ்சிடுவீங்களா?” என்று பதிலுக்குக் கேள்வி கேட்டாள். அவள் கேள்வி கேட்கவும் சிரஞ்சீவிக்கு அவ்வளவு கோபம்.

அமைதியான காலை வேளை என்றால் அவனுக்கு அத்தனை ப்ரியம்!

அந்த அமைதி அவனுக்கு அன்னையை நினைவூட்டும். இரவும் பகலும் குற்றங்களைப் பார்ப்பவனுக்கு இந்த பொழுதுதான் உள்ளத்துக்கு மிகவும் நெருக்கமானவை. சின்ன வயது முதலே அவனது அப்பாவின் நண்பர்கள் பிள்ளைகளுடன் அவர்கள் குவார்டர்ஸில் காலையிலே விளையாட போய்விடுவான். ஈரக்காற்று மோத நடப்பதில் அவனுக்கு அலாதி அமைதி! ஆனந்தம்!

இப்போதோ இவளோடு வாதாடியே அவனது காலை வேளையின் இதம் தொலைவது போல் உணர்ந்தான்.

“கல்கி! நான் ஒரு எஸ்பி, ஒகே. எனக்கு நிறைய பிரச்சனை வரும். யார் வேணும்னாலும் என்னை எப்ப வேணும்னாலும் என்ன வேணும்னாலும் செய்யலாம். நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதுதானே? நீ தான் ரொம்ப அறிவாளியாச்சே? நீயும் என்னோட வந்தா என்னால உன்னைப் பாதுகாக்க முடியாது. அட்லீஸ்ட் மார்னிங் வாக் நான் பீஸ்ஃபுல்லா செய்யணும். நீ இந்த அபார்ட்மெண்ட்க்குள்ள, இல்லை இல்லை வீடு போறவரைக்கும் என்னை விட்டு தள்ளியே வா” என்றதும்

கல்கி “என்னால உங்களுக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் வேண்டாம், நான் தனியாவே போய்க்கிறேன்” என்றவள் விறுவிறுவென முன்னால் நடந்தாள். அவன் சொல்வதை எந்த மறுப்பும் சொல்லாமல் எதிர்வாதம் செய்யாமல் புரிந்து கொண்டாளே என்ற நிம்மதி சிரஞ்சீவிக்கு.

சிரஞ்சீவி பின்னால் நடக்க, பூங்காவை சென்றடையவும் சிரஞ்சீவி இடப்புறம் ஜாக்கிங் போக, இவள் அவனுக்கு எதிர்த்திசையில் வலப்புறம் நடந்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் சம்மந்தம் இல்லாதவர்கள் போல அவரவர் வழியில் நடைபயின்றனர்.

பாவை பார்வை அவன் பக்கம் பார்க்கவே இல்லை, ஆனால் அவனின் பார்வையோ இவள் மீதுதான். அவளைக் கண்காணித்துக் கொண்டே சிரஞ்சீவி ஜாக்கிங் போனான்.

அந்த காலை வேளையின் மஞ்சிமத்தில் மங்கை தன்னை விரும்பியே தொலைத்தாள். அவளின் ஊரில் விடியல் இதனை விடவும் அழகாய் இருக்கும்தான். ஆனால் ரசிக்கும் மன நிலையோ சூழ் நிலையோ அவளிடம் இருந்ததில்லை.

இன்றோ எல்லாம் மாறி இருக்க, இந்த இதமான காலை பொழுது இனிமையாக இருந்தது, பறவைகளின் சத்தம். அங்காங்கே நடைபயின்ற பெரியவர்கள், இளைஞர்கள் என்று எல்லாரையும் வேடிக்கைப் பார்த்த வண்ணம் மெதுவே நடந்து கொண்டிருந்தாள்.

பாதையெங்கும் மஞ்சள் வண்ணக் கொன்றை விழுந்து சிதறியிருக்க, பூங்காவை சுற்றிலும் பலவண்ணச் செடிகள். சின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் காலைப்பொழுதில் கூட விளையாடிக் கொண்டிருந்தனர்.

கூட பேச்சுத் துணைக்கு ஆள் இருந்தால் நன்றாய் இருக்குமே என்ற நினைப்பு எழுந்தாலும் சிரஞ்சீவியைப் பார்த்தவள் அப்படியே இவர் பேசிட்டாலும் என்று நினைத்து தன் வழி தனி வழி என்று நடைப்போட்டாள்.

ஒரு மணி நேரம் கடந்துவிட, சிரஞ்சீவி இவளுக்குப் போனில் அழைத்தான். தனது பாக்கெட்டில் இருந்து போனை எடுத்துப் பார்த்தவள் சிரஞ்சீவியை யோசனையாய்ப் பார்க்க

“போனை எடு” என்று சைகை செய்தான். இவள் ஆன் செய்யவும்

“டைம் ஆச்சு கல்கி, வீட்டுக்குப் போகலாம். முன்னாடி போ” என்று சொல்ல அவளும் முன்னால் நடந்தாள்.

வீட்டுக்குள் சென்றதும் கல்கியை நிறுத்தியவன்
“உனக்கு இந்த டீஷர்ட் எல்லாம் செட் ஆகாது, நீ வேணும்னா வேற டிரஸ் போடு. இல்ல என்னை மாதிரி திக்கான டீஷர்ட் போடு, குளிர்ல நடுங்க வேண்டாம்” என்று சொல்லி அவனறைக்குள் புகுந்து கொண்டான்.

அதிகாலை இளங்குளிரில் இவள் கையைத் தேய்த்து தேய்த்து இறுக கட்டிக்கொண்டு நடந்தது அவன் பார்வையில் விழுந்திருந்தது. இவளுக்கோ இவன் எங்கே நம்மைப் பார்த்தான் என்ற எண்ணமே.

✅ End of Episode 13
How did you feel about this episode?
❤️ 6 more...

You must Log in or Register to react here

💬 5 Replies
Kavi Natarajan Reader 3 months ago

💞💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 3 months ago

ஆத்திரக்காரி 

அவசரக்காரன்....அருமை👏🏻🤩
❤️ 1 more...
Srichitra Reader 3 months ago

Very nice.

❤️ 1 more...
Radhi Reader 3 months ago

Nice 

❤️ 1 more...
Sathya Velusamy Reader 2 months ago

மன்ச்சி பிள்ளா

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top