Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 22

இரவு ஏழு மணி போல்தான் கல்கிக்கு விழிப்பு வர எழுந்து வந்து பார்க்க, சிரஞ்சீவி யமுனாவிடம் பேசிக்கொண்டிருந்தான். அவன் அவரிடம் பேசவும் கல்கிக்கு அவள் விஷயம் சொல்கிறானோ என்ற பதட்டம் வர, வேகமாய் அவன் முன்னே நிற்க, அவள் வந்த வேகம் பார்த்தே எதற்கு வந்திருக்கிறாள் என்று புரிய, சொல்லவில்லை என்பது போல் தலையசைத்தான். அதில் ஆசுவாசம் அடைந்தவள் சோஃபாவில் உட்கார்ந்து கண்மூடிக்கொண்டாள். அம்மாவிடம் பேசிவிட்டு வந்தவன் கல்கி தனியாக இருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்திருக்க, அவளைப் பார்த்தபடி நீண்ட சோஃபாவில் அவள் பக்கமாய்ப் பார்த்து இருக்க, அவன் அரவம் கேட்டு கண் திறந்தவள்

“அத்தை கிட்ட சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன்” என்றாள்.

“சொன்னா அவங்க டென்ஷன் ஆவாங்க. நான் சொல்லமாட்டேன்” என்றவன்

“அதை நினைக்காத கல்கி! உன்னோட கோபத்தை எல்லாம் அவன் மேல காட்டிட்ட தானே? லீவ் இட்” என்றதும்

“எனக்கு கஷ்டமா இருக்கு” என்றாள் உள்ளே போன குரலில். கல்கி இதுவரை அவனிடம் பேசியிராத குரல், அவன் அவளிடம் கேட்டிராத குரலும் கூட!

“கல்கி நீ தைரியமான பொண்ணுடா. அதை விட்டு வெளியே வா” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்

“தைரியமா அதை ஹாண்டில் பண்ணிட்டேன்றதால அதை அக்செப்ட் செஞ்சிட்டேன்னு கிடையாது” என்றாள் அழுத்தமாக.

“கல்கி!” என்று வரப்ரசாத் பார்க்க

“நான் தைரியமான பொண்ணுன்றதால ஹாண்டில் பண்ணிட்டேன். எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்க தானே? இப்படியெல்லாம் சீப்பா பிஹேவ் பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை” என்றாள் வருத்தமாக.

“நம்மதான் கல்கி நம்மைப் பாதுகாப்பை பார்க்கணும், ஆஸ் யூ டிட். இதனாலதான் நான் உன்னை எங்கே போனாலும் சொல்லிட்டுப் போக சொல்றேன்”

“சொல்லிட்டு போனா மட்டும் தப்பு நடக்காம இருக்கா சொல்லுங்க” என்றாள் கோபத்துடன்.

“இப்பவும் நீங்க என்னோட அப்பா மாதிரி தப்பு செய்றவங்க சுதந்திரமா செய்வாங்க, நீ அடங்கி ஒடங்கி இருக்கனும்னு சொல்றீங்க” என்றதும்

“கல்கி! நான் அப்படி மீன் செய்யல”

“எனக்கு அப்படித்தான் தோணுது. பாருங்க எவ்வளவு போராடி இங்க படிக்க வந்தேன், பொண்ணுங்க எதையும் சுயமா செய்யக் கூடாதா? நானாச்சும் உங்க கூட இதை ஷேர் பண்ண முடியுது. பல பேரால அது கூட முடியறது இல்லைதானே?” என்று சொல்லும்போது அழுகை வந்துவிட வரப்ரசாத்துக்கு மிகுந்த வருத்தமாகிவிட்டது. அவள் மீதான அன்பு கரையெடுக்க

“கல்கிம்மா! அழாத” என்று சொல்ல அவளோ தேம்பி தேம்பி அழுதாள்.

“அம்மடூ! என்னடா நீ? அவனை நான் பனிஷ் பண்றேன்” என்று அவளுக்கு ஆறுதல் சொல்ல தேறவில்லை பெண்.

“நீங்க போலீஸா இல்லைன்னா அவனை எல்லாம் பனிஷ் பண்ண முடியாது தானே? எனக்கு இப்போ அம்மா மடியில படுத்து அழனும் போல இருக்கு. அவனை மாதிரி எங்கிட்ட யாரும் பேசினதே இல்லை, எங்கப்பா அப்படி விட்டதில்லை. ஆனா இப்போ என்னால இதை வீட்ல சொல்லக் கூட முடியாது. அந்த திமிர்லதானே அந்தாள் அப்படி பேசினான்”

“வெளியாளுங்க இப்படி செய்றாங்கன்னு வீட்ல சொன்னா வீட்ல உள்ளவங்க எப்படி வெளியே விடுவாங்க? ஒரு லைஃப் ஆனா இஷ்டப்பட்டபடி வாழ முடியல, எல்லாரும் மனுஷங்கதானே? பொண்ணுங்க நாங்க என்ன தப்பு பண்ணினோம்? வீட்ல ஒரு மாதிரி அடக்குமுறைன்னா வெளியே இது மாதிரி வன்முறை. எல்லாரலையும் இது மாதிரி சிட்டிவேஷன் ஃபேஸ் பண்ண முடியாது. இதே அந்தாள் மயக்க மருந்து கொடுத்து என்னை எதுவும் செஞ்சிருந்தா என்னால எதுவும் செஞ்சிருக்க முடியாதுதானே? அதுக்காக எங்களோட ஆசையை எல்லாம் மூட்டைக் கட்டி வைக்க முடியுமா?” என்றாள் அழுகையுடன்.

இத்தனை நேரம் இவள் இதையெல்லாம் யோசித்து இருக்கிறாள் என்று புரிந்துகொண்டான்.

“அப்பா கிட்ட இதை சொன்னா, இதுக்குத்தான் உன்னைப் படிக்க அனுப்பலன்னு சொல்லுவார். அப்பவும் தப்பு செஞ்சவங்களை விட்டுட்டு பாதிக்கப்பட்டவங்களைத்தான் பேசுவாங்க. சொல்லி ஆறுதல் கூட பட முடியறதில்லை” என்றாள் அழுகையுடன்.

அவள் அழுகை அவனின் அகத்தை அசைத்துப் பார்த்தது. அவள் வார்த்தைகள் வலித்தது. இழுத்தணைத்து ஆறுதல் சொல்ல ஒரு பெருந்தவிப்பு அவனுள் எழுந்தது. ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டான்.

மொட்டவிழ்ந்த காதல் இன்னும் அவனிடம் கட்டவிழ்க்கவில்லை. கரை தாண்டாமல் கண்ணாமூச்சி ஆடியது. உணரா உணர்வுகள் அவனின் உள்ளத்தில்!!

அந்த நேரம் அலைக்கழித்த அவன் உணர்வுகளை அகழாய்வு செய்து ஆராய்வதை விடவும் கல்கியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று நினைத்தவன்

“கல்கி! இதுக்கெல்லாம் அழக்கூடாது. யூ ஆர் ஸ்ட்ராங் டா அம்மடூ” என்றான் அவளை தேற்றும் விதமாய்.

“எஸ் நான் ஸ்ட்ராங்க்தான். எனக்குத் தெரியும் இப்படி அசிங்கமா நடந்ததுக்கு அந்த பரதேசிதான் ஃபீல் பண்ணனும், நான் இல்லை! ஆனாலும் அழுகை வருது” என்றாள் குரல் அடைக்க.

“ரிலாக்ஸ் கல்கி! எனக்குப் புரியுது” என்று வரப்ரசாத் சொல்ல

உணர்ச்சிப்பெருக்கில் வேகமாய்த் தலையசைத்து மறுத்தவள்

“உங்களுக்குப் புரியாது. இது மாதிரி நீங்க ஃபேஸ் பண்ணியிருக்க மாட்டீங்க, எதுனாலும் நம்ம அனுபவிச்சதான் புரியும்” என்றாள்.

சிரஞ்சீவிக்கு என்ன சொல்லி அவளைத் தேற்றுவதென்றே தெரியவில்லை. அவன் ஒன்றும் பேசாமல் அவளையே பார்க்க,

“ஃபர்ஸ்ட் டைம் இப்படி ஆனதால் அப்செட் ஆகிட்டேன் நினைக்கிறேன். நானே சரியாகிடுவேன், நீங்க என்னை சமாதானம் செய்ய வேண்டாம். கஷ்டப்படுறீங்க” என்றாள் ஒரு சோர்வான புன்னகையுடன். வரப்ரசாத்தும் பதிலுக்குப் புன்னகை செய்ய, கல்கி தூங்குகிறேன் என்று சொல்லி உறங்கப்போனாள்.

அடுத்த நாள் காலையில் வழக்கம்போல் கல்கி அவனுடன் நடைபயிற்சிக்கு தயாராக, இவன் நேற்றையை நிகழ்வைப் பற்றி பேசவே இல்லை. அவள் மறந்தால் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டான்.

நடைபயிற்சி முடிந்து வழக்கமாய் அவள் டிரைவிங் பயிற்சி செல்வாள். இன்று அவள் செல்லாமல் டீவி பார்க்க

“கல்கி! டிரைவிங் ஸ்கூல் போகலையா?” என்று கேட்டவன் பின் அவனாகவே

“அங்க உனக்கு வேண்டாம். நான் பரத் கிட்ட கேட்டிருக்கேன், வேற இடம் பார்க்கலாம். உனக்கு ஓகேவா?” என்று கேட்க அவனை ஆச்சர்யம் நிறைந்த பார்வை பார்த்தாள் பாவை.

“என்ன பார்க்கிற? சொல்லு கல்கி” என்று சொல்ல

“இல்லை நேத்து நடந்த சம்பவத்துக்கு அப்புறம் இதுக்கெல்லாம் அனுப்ப மாட்டீங்க நினைச்சேன். அதான் இப்படி சொல்லவும் ஒரே ஷாக்கா இருக்கு” என்றாள் புன்னகையுடன்.

“எந்துக்கு ஷாக்? ஆக்ஸீடெண்ட் ஆனா திரும்ப வண்டி எடுக்கிறது இல்லையா? நானே உன்னை அடுத்து ரைஃபில் ஷூட்டிங்க் ஆர் கராத்தேல சேர்த்து விடலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்” என்று சொல்ல, அவனை இன்னும் அகல விரிந்த விழிகளால் பார்த்தாள் கல்கி.

“நிஜமாவா சொல்றீங்க?”

“என்னைப் பார்த்தா சும்மா சொல்ற மாதிரி தெரியுதா?”

“உன்னை இன்னும் ஸ்ட்ராங்க் ஆக்க என்ன செய்யணும்னு யோசிக்காம க்ளாஸ் போக வேண்டாம் சொல்வேனா நான்? இன்னும் கல்கி போல்டா தைரியமா இருக்கனும். அழற இந்த பாப்பாவை எனக்குப் பிடிக்கல” என்று வரப்ரசாத் சொல்ல,

“ஆனா எனக்கு இந்த பங்காரத்தைப் பிடிச்சிருக்கு” என்று கல்கி பட்டென சொல்ல பாவை பேச்சில் பலவண்ண உணர்வுகள் ஒற்றை நொடியில் அவன் உள்ளத்தில் உலா போயின!! புரியா உணர்வுகள் எல்லாம் அவனுள் புலர்ந்தன!

கல்கியிடமிருந்து தன்னைப் பிடிக்கும் என்ற வார்த்தைகளைக் கொஞ்சமும் சிரஞ்சீவி எதிர்ப்பார்க்கவில்லை. திடீரென சொன்னாலும் தித்திக்கவே செய்தன அவள் வார்த்தைகள்.

“அவுனு?” என்று அவன் சிரிப்புடன் கேட்க

“அவுனு அவுனு” என்றாள் அவனைப் போல. அவன் பார்வையில் இன்னும் கேள்வி மிச்சமிருக்க, கல்கியே பேசினாள்.

“இல்லை முன்னாடியெல்லாம் ரொம்ப சண்டைப்போடுவோம்ல, இப்போதான் தெரியுது நீங்க கொஞ்சம் ஸ்வீட்னு”

“ஓஹ், கொஞ்சம்தானா?”

“கொஞ்சம் ஸ்வீட், கொஞ்சம் காரம்” என்றதும் அவன் புருவங்கள் உயர, கல்கியோ
“எனக்குக் காரமும் பிடிக்கும்” என்றாள்.

“என்னைப் பிடிக்கும்னு சொல்லாம ஸ்வீட் பிடிக்கும் காரம் பிடிக்கும் சொல்லிட்டு இருக்க நீ” என்று சிரித்தான் சிரஞ்சீவி. அவனுடன் கூட சேர்ந்து கல்கியும் சிரித்தாள்.

கல்கியின் பேச்சு மிக மிக இயல்பாய் வந்ததை வரப்ரசாத் உணர்ந்தான். ஆனால் அந்த ப்ரியமும் பேச்சும் எல்லாம் அத்தை மகன் என்ற அளவில் நின்றது. அதைத் தாண்டவில்லை!

தன்னிருக்கையில் இருந்து எழுந்த வரப்ரசாத், “சும்மா காலையில டீவி பார்க்காத, பேப்பர் படி” என்று தன் கையில் இருந்த பேப்பரை அவளிடம் கொடுக்க அதை வாங்காமல்

“நான் குளிச்சிட்டு அப்புறம் படிக்கிறேன்” என்று சொல்லி குளிக்கப்போனாள் கல்கி.

அவள் குளித்துவிட்டு வந்தபோது சிரஞ்சீவி கிச்சனில் என்னமோ செய்து கொண்டிருக்க, எட்டிப் பார்த்தால் தோசை சுட்டுக்கொண்டிருந்தான்.

“ஆளை சுடுவீங்க பார்த்தா தோசையெல்லாம் சுட தெரியுமா உங்களுக்கு?” என்றவளின் ஆச்சரியக் குரலில் அவள் பக்கம் பார்த்த ப்ரசாத்,

“ஏன் எல்லாத்தையும் சுடத்தெரியும் எனக்கு. வசந்திக்கா நாளைக்குத்தான் வருவாங்க அதுவரைக்கும் சாப்பிட என்ன செய்றது? நேத்து ஃபுல்லா வெளியே சாப்பிட்டோம். பார்த்தேன் மாவு இருந்துச்சு தோசை சுடுறேன்” என்றான் இயல்பாக.

“தோசைல என்ன இது சிகப்பா?”

“இது எர்ர காரம் தோசை, நல்லாயிருக்கும். ஆந்திரா ஸ்பெஷல் சாப்பிட்டு சொல்லு” என்றவன் தோசையை எடுத்து தட்டில் வைத்து தேங்காய் சட்னியோடு அவளிடம் நீட்ட கல்கியோ அதிசயத்தைக் கண்டவள் போல் அப்படியே நின்றாள்.

“கல்கி! வாங்கு, என்ன பார்த்துட்டு நிக்கிற” என்று அவன் கத்த

“இதோ” என்று வாங்கியவள் அவனையே பார்த்தபடி நின்றாள்.

“சாப்பிடு” என்று அவன் மீண்டும் அதட்டலாய் சொல்ல

“நீங்க ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க” என்று கல்கி சொல்ல

“நீ முதல்ல சாப்பிடு. நான் சாப்பிட்டுக்கிறேன்” என்றவன் தோசையை ஊற்ற, அவன் தோசை ஊற்றுவதையே இவள் பார்த்தாள். மாவைக் கல்லில் ஊற்றியவன் அது கொஞ்சம் வேகவும் அதன் மேல் சிகப்பாய் இருந்த சட்னியைத் தேய்த்து வேகவிட்டு அதன்மேல் பருப்பு பொடியைத் தூவிவிட்டு சுற்றிலும் நெய்விட்டு முறுகலாய் வேகவைத்தான்.

“என்ன வேடிக்கைப் பார்க்கிற நீ?” என்று வரப்ரசாத் கேட்க

“உங்களுக்கு சமைக்கத் தெரியும்னு எனக்கு இத்தனை நாளா தெரியல பாருங்களேன். செம” என்று அவள் பாராட்ட

“இத்தனை நாளா வசந்திக்கா சமைச்சிடுவாங்க, இல்லை ஆர்டர் பண்ணினோம். எனக்கும் டைமில்ல, இன்னிக்கு என்னவோ எர்ர காரம் சாப்பிடனும்போல இருந்துச்சு செஞ்சேன். ஹௌவ் இஸ் இட்?” என்று அவள் முகம் பார்த்தான்.

“சூப்பரா இருக்கு” என்று கையில் சைகை செய்தவாறே காரம் உள்ளிறங்க ரசித்து சொன்னாள் கல்கி.

“நிஜமாவா? இவ்வளவு காரம் இறங்குதா உனக்கு?”

“எனக்குக் காரம்தான் பிடிக்கும் ரொம்ப” என்றாள்.

“எனக்கும் இந்த தோசை ரொம்ப பிடிக்கும், இல்லை வெறும் எர்ர காரம் சட்னினா கூட பிடிக்கும். அம்மாவை விட பின்னி ஐ மீன் சித்தி நல்லா செய்வாங்க, அவங்க நேட்டிவ் நெல்லூர்” என்றான்.

“உங்களுக்குப் பிடிக்கும்னா வசந்திக்கா கிட்ட சொல்லியிருந்தா செய்வாங்கதானே?” என்று கல்கி கேட்க

“அவங்களை ஏன் கஷ்டப்படுத்திட்டுன்னுதான்” என்றவன் அடுத்து அவள் தட்டில் தோசை வைத்தான்.

“போதும்,நீங்க முதல்ல சாப்பிடுங்க” என்று கல்கி மறுக்க

“நீ சாப்பிடு, நேத்தெல்லாம் நீ சரியாவே சாப்பிடல” என்று சொல்லிவிட அதுவரை கலகலகத்த கல்கி அமைதியாகிவிட

“அம்மடூ! எதுவும் நினைக்காம சாப்பிடு” என்றான் கொஞ்சம் கண்டிப்புடன். தனக்காக அவன் இவ்வளவு மெனக்கெட அதையே நினைத்து மனதை ஏன் வருத்தவேண்டும் என்று நினைத்தவள் தோசையை உண்டு கொண்டே அவனைப் பார்க்க, இவள் மீதுதான் அவன் பார்வை மொத்தமும்.

அதைப் பார்த்த கல்கி புருவம் உயர்த்தி, “என்ன என்னையே பார்க்குறீங்க, அடுத்த தோசை சுடுங்க” என்று கெத்தாய் சொல்ல, அவளைப் பார்த்து சிரித்தவன்

“ஒரு ஐபிஎஸ் கிட்ட ஆர்டர் போடுற நீ” என்று சொன்னாலும் அடுத்து தோசையை அவளிடம் கொடுத்தான்.

“ஐபிஎஸ் எல்லாம் வீட்டுக்கு வெளியே, இங்க ஒன்லி அத்தை சன்” என்றாள் கண்சிமிட்டி.

சிரஞ்சீவிக்குப் புரிந்தது. கல்கி இந்தளவு தைரியமாய் தன்னைத் தேற்றிக்கொள்வதும், கலகலப்பாய்க் காட்டிக்கொள்வதுமே இன்றைய நிலையில் பெரிதென உணர்ந்தான். அதனால் அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவன் சிரித்தபடி அவனுக்கும் தோசை ஊற்றிக்கொண்டு உட்கார்ந்தான்.

பேசியபடி இருவரும் உண்டுமுடிக்க, கல்கிக்கு யமுனாவிடமிருந்து போன் வர அவள் பேசிக்கொண்டிருக்க, சிரஞ்சீவி அவன் அறைக்குள் போய்விட்டான்.

“என்னடா கல்கி? நேத்து தலைவலின்னு சொன்னான் ப்ரசாத். இப்போ ஓகேவா?” என்று யமுனா கேட்டார்.

நேற்று முழுவதும் இவள் யாருடனும் பேசவில்லை. ஜெகதீஷ் அழைக்க படிப்பிருக்கிறது என்றுவிட்டாள், அம்மாவிடம் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசி வைத்திருந்தாள். இப்போது அத்தைக் கேட்கவும் நேற்றையை நிகழ்வு மீண்டும் மனதில் எழ, ஒருவித இறுக்கம் அவளிடம்.

“கல்கி..!” என்று யமுனா மீண்டும் அழைக்க

“இப்போ ஓகேத்த, சரியாகிடுச்சு. நீங்க மாமா எல்லாம் எப்படி இருக்கீங்க?”

“உங்க மாமா டீவி பார்க்கிறார். நீ என்ன செய்ற? சாப்பிட்டியா?”

அவரின் கேள்வியில் கல்கியின் இதழ்கள் விரிந்தன புன்னகையுடன்.

“சொல்ல மறந்தே போய்ட்டேன். பிள்ளையை ரொம்ப நல்லா வளர்த்து இருக்கீங்கம்மா ஒத்த ரோசா” என்று கிண்டலாய் சொல்ல

“கல்கி..” என்றவர் அவரின் கிண்டலில் சிரித்துவிட

“என்ன என் பையனுக்கு?” என்று கேட்டார் போனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு.

“எனக்கு உங்க பையன் சூப்பரா காரமா தோசை சுட்டுக் கொடுத்தார். வெரி குட் பாய் உங்க பையன்” என்றதும் யமுனாவிற்கு மகனை அவள் புகழ்வது கண்டு புன்னகை விரிந்தது.

“பார்டா! கல்கி என் பங்காரத்தை புகழ்றாளா?” என்றார் இதனைக் கேட்டிருந்த சூர்யநாராயணன்.

“பங்காரம் கொஞ்சம் காரம்தான், ஆனா என்னை நல்லா கவனிக்கிறாரே. மிஸ்டர்.காரம் எனக்குக் கார தோசை செஞ்சுக்கொடுத்தார் மாமா” என்றாள் கல்கியும் சிரிப்புடன். அப்படியே அவர்களின் பேச்சு நீள, கல்கியும் நேற்றைய நிகழ்வை மறந்து அவர்களுடன் சந்தோஷமாய்க் கதையளக்க, பேச்சுவாக்கில் அவள் விளையாட்டில் சிரஞ்சீவியை வென்றதை சொல்ல சூர்யாவால் நம்பவே முடியவில்லை.

“கல்கி நிஜமாவா சொல்ற? சிரூவை வின் பண்ணிட்டியா? அவன் ரொம்ப நல்ல விளையாடுவானே?” என்றார் மகனின் தோல்வியை ஏற்காத தந்தையாக. ஆனால் யமுனாவோ

“எப்பவும் அவன்தான் வின் பண்ணனுமா என்ன? கல்கி அவனை விட நல்லா விளையாடுவாளா இருக்கும்” என்றார்.

“அதானே, உங்க பையன் என்ன கிராண்ட் மாஸ்டரா மாமா?” கல்கி அவரை வம்பிழுக்க

“கிராண்ட் மாஸ்டர் எல்லாம் இல்லை. ஆனா ஒரு ஸ்டேட் லெவல் ப்ளேயரை ஜெயிச்சிருக்கியே அப்போ நீ ரொம்ப நல்ல விளையாடுவியா டா?” என்று சூர்யா தன் சந்தேகம் கேட்க அவரின் கேள்வியில் கல்கிக்கும் ஐயங்கள் எழுந்தன.

கல்கிக்கு நிச்சயம் தெரியும். அவள் ஒன்றும் சிறப்பாய் எல்லாம் விளையாட மாட்டாள். அஞ்சனாவையே அவள் ஜெயிக்க முடியாது, அப்படியிருக்க மாநில அளவில் சிறப்பாய் விளையாடும் ஒருவனை எப்படி ஜெயித்திட முடியும்? அப்படியே முடிந்தாலும் கூட இவள் அந்தளவு திறமைசாலி இல்லை என்பதை அவளறிவாளே.

“இல்லையே நான் சும்மா ஜாலிக்கு விளையாடுவேன், அவ்வளவுதான் மாமா” என்றவளுக்கு அன்று தான் அம்மாவை நினைத்து அழுதது நினைவில் வர விட்டுக்கொடுத்து இருப்பானோ என்று தோன்ற ப்ரசாத் மீது கோபம் எழுந்தது. இவள் பேசிக்கொண்டு இருக்கும்போதே வரப்ரசாதும் வந்து உட்கார

“நீங்க அன்னிக்கு ஸ்டேட் லெவல் ப்ளேயர்னு எங்கிட்ட சொல்லவே இல்லை” என்று கல்கி கேட்க

“ஸ்டேட் லெவல் ப்ளேயரா இருந்தாலும் உங்கிட்ட தோத்துட்டேன் தானே?” என்று அவன் கேட்க கல்கி அவனை முறைத்தாள். யமுனா மகனின் பேச்சை சாதாரணமாய் எடுத்தார், ஆனால் சூர்யாவுக்கோ என்னமோ உறுத்தியது. தோற்பதை பெருமையாய் இத்தனை சகஜமாய்ப் பேசுபவன் இல்லையே தன் மகன். அவனின் பெரியப்பா சித்தப்பா மக்களுடன் விளையாடினாலும் கூட விட்டுக்கொடுக்காதவன் கல்கிக்கு விட்டுக்கொடுத்திருப்பது அதிசயமாய்ப்பட்டது மகனை ஆதி முதல் அந்தம் வரை அறிந்த அந்த அப்பாவிற்கு!

வரப்ரசாதோ அவள் முறைப்பைக் கண்டுகொள்ளாமல்,

“ம்மா, என்ன சொல்றா உங்க அண்ணன் பொண்ணு?” என்று கேட்க

“ம்ம், உன் சித்தி என்னை விட தோசை நல்லா செய்வான்னு நீ சொன்னியாமே?” என்று அவர் மகனை வம்பிழுக்க

“அம்மடூ, வாலு பிள்ள டா நீ” என்று சிரித்தவன் அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசிவிட்டு போனை கல்கியிடம் நீட்ட அவள் முறைத்தபடியே வாங்கினாள்.

✅ End of Episode 22
How did you feel about this episode?
❤️ 6 🔥 2 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Srichitra Reader 2 months ago

Nice 

Kavi Natarajan Reader 2 months ago

Nice ud ma💞💞💞💞💞💞

Mrs Beena loganathan Reader 2 months ago

கோபமும் கலக்கமும்

கண்களில் மறைந்திருக்க 
கணமான மனது 
கார தோசையில்
கரைந்து போனது....
Sathya Velusamy Reader 2 months ago
தப்பு பண்ணவங்களை விட்டுட்டு பாதிக்கப்பட்டவர்களை பேசறது தான் கொடுமை.....

மிஸ்டர் காரம் தொக்கா நைனா கிட்ட மாட்டிட்டீங்க போங்க

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top