Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 15

அவர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பும் மரியாதையும் கல்கிக்கு நன்றாகவே புரிந்தது. ஆனாலும் அப்பாவின் நம்பிக்கையை அத்தை உடைத்த வருத்தமும் அதனால் தாங்கள் பட்ட கஷ்டமும் வாங்கிய பேச்சுகளும் மறக்கவில்லை. அதை அந்த நேரத்தில் சொல்லி அவர்களின் சந்தோஷ நிமிடங்களை சங்கடமாய் மாற்ற கல்கி நினைக்கவில்லை.

அப்படியே அவர்கள் சந்தோஷமாய்ப் பேசி சிரிக்க ஏழு மணி போல் சூர்யா
“ப்ரியத்தம்மா, நம்ம தேஜஸ்வி வீட்டுக்குப் போகனுமே மறந்துட்டியா?” என்றார்.

“ஆமால” என்ற யமுனா கல்கியிடம்,

“மாமாவோட பெரியப்பா பேத்தி இங்க இருக்கா டா. அவங்களைப் பார்க்க வரோம்னு சொல்லியிருந்தோம். நானும் மாமாவும் போய்ட்டு வந்திடுறோம். நீ நான் வச்சிருக்க போண்டாவை ப்ரசாத் வந்தவுடனே அவனுக்கு எடுத்துக் கொடுக்கிறியா? சட்னியோட வச்சுக் கொடு” என்றார்.

“பங்காரத்துக்கு நம்ம வாங்கிட்டு வந்த ஸ்னாக்ஸும் கொடுத்துடு பாப்பா” சூர்யாவும் கல்கியிடம் சொல்ல

“பங்காரத்தோட பங்கு பங்கமில்லாம அவருக்குப் போய்டும். கல்கி கணக்குல புலி” என்று சொல்ல அவர்கள் சிரித்தபடி கிளம்பினார்கள்.

சிரஞ்சீவி வரும்போது கல்கி சோஃபாவில் உட்கார்ந்து தின்பண்டங்களைக் கொறித்துக் கொண்டிருக்க, தையல் நாயகி சாய்ந்தவாக்கில் காலை நீட்டி நாடகம் பார்த்தார். கூடவே புலம்பலும்

“ச்ச, நாளைக்கு ஞாயித்துக் கிழமையாடி கல்கி? நாடகமெல்லாம் தெனைக்கும் போட்டா அவன் அப்பன் விட்டு சொத்தா போவுது. பாரு இந்த கௌசி அவ மாமியார் கிட்ட மாட்டிப்பாளா இல்லையான்னு எனக்குத் தெரியல” என்று அப்போதுதான் முடிந்த நாடகத்தைப் பார்த்து திட்டினார்.

சிரஞ்சீவி அறைக்குள் புகுந்து ஆடைமாற்றி வர, கல்கி அவனிடம் யமுனா செய்துவைத்திருந்த மைசூர் போண்டாவை தேங்காய் சட்னியுடன் நீட்டினாள். அவனும் வாங்கிக் கொண்டு அவளுடன் அதே சோஃபாவில் வலப்பக்கத்தில் உட்கார்ந்தபடி உண்டான்.

நாடகம் முடிந்து விளம்பரம் வரவும் பேரனையும் பேத்தியையும் குறுகுறுவென பார்த்த தையல் நாயகி

“ஏட்டி சின்னவளே! கீழே இறங்கி உட்காரு. உன்னை விட வயசுல பெரியவன் அவனுக்கு சமானமா உட்கார்ந்திருக்க, இறங்குடி” என்று அதட்டல் போட

“முடியாது போ” என்று கல்கி சொல்ல

“சொன்னா கேட்கல உன் அப்பங்கிட்ட சொல்லிக் கொடுப்பேன்” என்று தையல் நாயகி அவளை மிரட்டினார்.

இது நாள் வரை அவன் இப்படி ரிலாக்ஸாய் உட்கார்ந்திருந்தது கிடையாது. வருவதற்கே இரவாகிவிடும், இல்லையா அவன் இருக்கும் நேரம் கல்கி அறையில் எதாவது வேலையாய் இருப்பாள். இன்று என்னவோ இருவரும் ஒன்றாய் ஒரே சோஃபாவில் உட்கார்ந்திருக்க தையல் நாயகிக்கு அது என்ன ஆண்பிள்ளைக்கு சமமாய் உட்காருவது என்ற எண்ணம்.

“என்ன அம்மம்மா நீங்க? அவ உங்க பேத்தின்னா நான் உங்க பேரன் சோஃபாவுல இடமிருக்கு, உட்கார்ந்திருக்கா. அதுக்கு ஏன் பேசுறீங்க?” என்றான்.

பேரன் பேசவும் உடனே சிரித்த முகத்துடன் தையல் நாயகியோ “அதில்லைய்யா, அது என்ன ஆம்பள புள்ளக்குப் போட்டியா இந்த சிறுக்கியும் உட்காருரா, அதெல்லாம் உனக்குப் புரியாதுயா. ஏட்டி கீழ வாடி பட்டணத்துக்கு வந்து திமிரா போச்சா உனக்கு” என்று திட்ட

“கல்கி! நீ உட்காரு” என்று அவளிடம் சொன்ன வரப்ரசாத்

“என்ன ஆம்பிள, பொம்பள? அவளுக்கும் இரண்டு கால், எனக்கும் இரண்டு கால். இப்படியெல்லாம் பேசாதீங்க அம்மம்மா. எனக்குப் பிடிக்கல” என்றான் அழுத்தமான குரலில். அவனது குரலில் தையல் நாயகி அமைதியாகிவிட்டார், கூடவே விளம்பரம் முடிந்து நாடகம் தொடங்கிவிட்டது.

கல்கியைப் பார்த்தவன்
“உட்கார கூடவா ரூல்ஸ்” என்றான் எரிச்சலாக.

“இதெல்லாம் ஜஸ்ட் டீசர், மெயின் பிக்சர் நீங்க பார்க்கல” என்றாள் சிரிப்புடன்.

அவன் சிரித்தபடி
“உன் க்ளாஸ் எப்படி போச்சு?” என்றான்.

“ம்ம், நல்லா இருந்துச்சு. மாமாவே என்னை அழைச்சிட்டுப் போய்ட்டாங்க” என்றதும்

“அப்பா சொல்லிட்டாங்க கல்கி” என்றான்.

கல்கிக்கு அவனிடம் இன்னும் சகஜமான பேச்சுகள் இல்லை. இருவருமே அதற்கு முனையவில்லை. என்ன ஏது என்று தேவைக்கு மட்டுமே பேச்சுகள். இன்று அத்தையிடம் அவன் ஏன் சொல்லவில்லை என்பதைக் கேட்கவேண்டும் போல கல்கிக்குத் தோன்ற இதுதான் நேரம் என நினைத்துக் கேட்டுவிட்டாள்.

அவனோ மிகவும் சாதாரணமாய்,
“உனக்கு சொல்லணும்னு விருப்பமிருந்தா நீயே சொல்லுவன்னு தெரியும் கல்கி. என்ன இருந்தாலும் அது உன்னோட விஷயம். நீயே இஷ்டப்பட்டாதான் சொல்லணும்” என்றான் தெளிவாய்.

அவளோ அவனைப் பார்த்து
“அப்போ என்னை அன்னிக்கு அத்தனை கொஸ்டின் கேட்டீங்க?” என்றதும்

“அது உன்னை என்னை நம்பி விட்டிருக்காங்க? நீ எங்க போற வரனு தெரிஞ்சக்கறது தப்பில்லையே. நான் கால் பண்ணினப்ப உண்மையை சொல்லியிருந்தா நான் உன்னை பேசவே அவசியம் இல்லை” என்றான்.

“ஆனா அத்தை கிட்ட கூட நீங்க சொல்லாம இருப்பீங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் செய்யவே இல்லை” என்றாள் ஆச்சர்யமாக.

“நீ சொன்னதுதான், சொல்லாம செய்றதால அது தப்புன்னு ஆகிடாது இல்லையா? அம்மாவா இருந்தாலும் அது உன்னோட விஷயம் உன் பெர்மிஷன் இல்லாம நான் சொல்றது சரி கிடையாது கல்கி”

கல்கி மனதில் ‘புள்ளையை நல்லா வளர்த்திருக்கீங்கம்மா ஒத்த ரோசா’ என்று அத்தையைப் பாராட்டினாள்.

“அண்ட் நீயே அம்மா கிட்ட சொல்லுவன்னு எனக்குத் தோணிச்சு. நான் வீட்ல சொல்லிடுவேனோன்றதுதானே உன் பயம், உன் விஷயம் எதுவும் உன் அனுமதி இல்லாம நான் என்னோட அம்மாவா இருந்தாலும் கூட சொல்ல மாட்டேன். உன்னோடதுன்னு இல்லை, யார்னாலும் நான் அப்படித்தான்”

“நான் சொல்லாம இருந்திருந்தா?” கல்கி கேள்வி கேட்க

“கண்டிப்பா சொல்லுவன்னு எனக்குத் தெரியும், நீ தப்பா செய்ற சொல்லாம இருக்க? அம்மா புரிஞ்சிப்பாங்கன்னு உனக்குத் தெரியும். அதான் அவங்ககிட்ட சொல்லியிருக்க” என்றான் அவளைப் புரிந்தவனாக,

கல்கி கொஞ்சம் விளையாட்டாக
“அப்போ நான் உங்ககிட்ட மட்டும் சொல்லிட்டு எதாவது செஞ்சா நீங்க யார்கிட்டவும் சொல்ல மாட்டீங்க அப்படித்தானே?”

“எஸ்! கண்டிப்பா. எங்கிட்ட சொல்றன்னா கண்டிப்பா நீ தப்பு செய்ய மாட்ட. ஸோ சரியான விஷயத்துக்கு வரப்ரசாத் சப்போர்ட் எப்பவும் உனக்கு உண்டு. இதோ இந்த சோஃபா மேட்டர் மாதிரி” என்றதும் கல்கி சிரித்துவிட சிரஞ்சீவியின் மீது ஒரு நல்ல அபிமானம் அவள் அகத்தில் முதல்முறையாகத் தோன்றியது.

இருவருக்கும் அப்படியே பேச்சு நீள, அது முற்றும் இடம் சண்டையாகிப்போனதுதான் அங்கே வினை!

“உங்க ஊர்ல உட்கார கூட ரூல்ஸா கல்கி?” வரப்ரசாத் நன்றாய் சாய்ந்து கைகளைப் பின்னுக்குக் கொடுத்தபடி கல்கியிடம் கேட்க

“ஊர்ல தெரியாது வீட்ல அதான் ரூல்ஸ்” என்றாள் சின்ன சிரிப்புடன்.

“ஆனா கல்கிக்கு ரூல்ஸ் கிடையாது போல, இல்லை கேட்டுப்பியா?” அவனின் அனுமானத்தில் சொல்வதை உடனே கேட்கும் ரகமில்லையே கல்கி. அதனால் அப்படி கேட்க

“அப்படி எல்லாம் இல்லை, பிடிக்கலனாலும் சிலதை ஃபாலோ பண்ணித்தான் ஆகனும். அப்பத்தாவையாச்சும் சமாளிக்கலாம், ஆனா தாத்தா அவர் கத்தினா அவ்வளவுதான், காது ஜவ்வே கிழியும். அப்படியும் நான் சொல்ற பேச்சு கேட்கலன்னா எங்கப்பா அட்வைஸ் பண்றேனு மொக்கைப் போடுவார் அதுக்கு இவங்க பேச்சைக் கேட்டுறதே பெட்டர்னு ஆகிடும்” என்றாள் ஒருவித சலிப்போடு.

“லீவ் இட், இங்க உன்னோட இஷ்டம் போல இரு கல்கி” என்றதும் கல்கி குறும்பாய்

“அதெல்லாம் இது எங்க அத்தை வீடு, ஐ ஹேவ் ஆல் ரைட்ஸ்” என்றாள் கிண்டலாக.

“ஹாஹா, லெட் இட் பீ. இங்க செட் ஆகிடுச்சா?” என்றான் சிரஞ்சீவியும்.

“ம்ம், ஆகிடுச்சு. பட் இப்போ அத்தை மாமா வந்தப்புறம்தான் நல்லாயிருக்கு. அத்தை விட மாமா ரொம்ப சூப்பர், ஜெயராமன் மாமாவை விட இவர் செம” என்றதும்

“யார் ஜெயராமன்?” என்றான்.

“ம்ம், எங்கப்பா உங்களுக்கு எப்படியோ எனக்கு ஜெயராமன் மாமா. ஜெகதீஷ் சொல்வேனே அவனோட அப்பா”

“பரவாயில்லையே எங்கப்பாவுக்குப் பயங்கர செர்டிஃபிகட் தர?”

அவள் வாயால் அப்பாவைப் புகழும்போது இனிக்கவே செய்தது சிரஞ்சீவிக்கு.

“மாமா ரொம்ப நல்ல மாதிரி, அத்தையை அன்பா பார்த்துக்கிறாங்க, மரியாதையாய் நடத்துறாங்க” என்றதும் சிரஞ்சீவி

“அப்போ எங்கம்மாவோட சாய்ஸ் சரின்னு ஒத்துக்கிட்ட போல?”என்றான்.

“கண்டிப்பா சாய்ஸை நான் தப்புன்னே சொல்லமாட்டேன். அது மாதிரி காதல்ன்றது இரண்டு பேருக்கு இடையே இருக்க உணர்வு. அதை கமெண்ட் பண்ண நான் யார்?” என்றாள் கல்கி.

அவளின் பேச்சின் சாராம்சத்தை சரியாய்ப் புரிந்துகொள்ளவில்லை சிரஞ்சீவி. அவனின் அம்மாவை முன்பு பேசிய கல்கி இன்று அவரின் காதலுக்கு ஆதரவாகப் பேசுகிறாள் என்ற பெருமித உணர்வும் கர்வமும் சேர

“முன்னாடி நீதான் அவங்களை ரொம்ப பேசின கல்கி” என்றுவிட்டான். என்னவோ அவன் அம்மாவை அவள் பேசியதை ஏற்கமுடியவில்லை. கல்கியாகவே அம்மாவின் காதல் சரியென்று சொல்லவேண்டுமென மகனாய் அவனுக்குள் ஒரு எதிர்ப்பார்ப்பு. நம்மவர்களை மற்றவர் குறை சொன்னால் ஏற்கவே முடியாத மனப்பாங்கு அவனிடம்.

அதுவரை இயல்பாய்ப் போய்க்கொண்டிருந்த இருவரின் பேச்சில் ஒரு இறுக்கம்!

“ஆமா, அவங்க செஞ்சது தப்பு. முன்னாடி இல்லை இப்பவும் பேசுவேன்”

“என்ன தப்பா? நீதானே அப்பா ரொம்ப நல்லவர். அவங்க காதலைப் பத்தி கமெண்ட் செய்ய மாட்டேன் சொன்ன?” சிரஞ்சீவி படபடவென கேட்கவும்

“அவங்க காதல் தப்புன்னு நான் சொல்லவரல, ஆனா அதை நிறைவேத்தின விதம் தப்பில்லையா?” என்று அவனிடம் திரும்பிக் கேட்டாள் கல்கி.

“காதலிச்சவங்களை ஏமாத்தி விட்டுட்டுப் போனாதான் தப்பு. அந்த காதலை நிறைவேத்திக்கிட்டதுல என்ன தப்புன்னு கேட்கிறேன் நான்?” என்றான் கொஞ்சம் கோபமாக.

கல்கியோ அவனின் பேச்சுக்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. அவள் நிலையில் நிலையெனவே நின்றாள்.

“எங்கப்பாவை ஏமாத்தினது தப்பில்லையா? தப்புன்றதை விட அது துரோகம். எங்கப்பா தங்கச்சியை அப்படி நம்பினார், புதுசா வந்த காதலுக்காக இத்தனை வருஷம் வளர்த்த அண்ணாவை உதறலாமா? தாத்தா மோசமானவர் நான் ஒத்துக்கிறேன். ஆனா என்னோட அப்பாவுக்கு அத்தை பண்ணினது துரோகம்” என்றாள் அழுத்தமாய்.

அந்த வார்த்தைகள் அவனைக் காயம் செய்தன. எல்லாவற்றிற்கும் நியாயம் அநியாயம் பார்ப்பவனால் அன்னை என்று வருகையில் அது முடியாமல் போனது.

“அவங்களோட லைஃப் மட்டும் நினைச்சாங்க, அவங்க முடிவால எத்தனை பேர் கஷ்டம் பட்டோம். நானே ஒருவருஷம் அதனால படிக்கல” என்றதும்

“எல்லாத்துக்கும் எங்கம்மாவையே ப்ளேம் செய்வியா நீ? உன்னோட அப்பா உன்னைப் படிக்க வச்சிருக்கனும். அவருக்கு அவர் பசங்க மேல அக்கறை இல்லை அதுக்கு என் அம்மா என்ன செய்ய முடியும்?” என்றவனை முறைத்தாள் கல்கி.

“அந்த நம்பிக்கையை உடைச்சது உங்கம்மா, சும்மா எங்கப்பாவுக்கு அக்கறை இல்லைன்னு எல்லாம் நீங்க பேச வேண்டாம் ஒகே” என்றாள் கல்கி சூடாக.

கல்கி அப்படி சொல்லவும்
“முப்பது வருஷம் முன்னாடி எங்கம்மா செஞ்சதுக்காக உங்களைத் தண்டிச்சா அது உங்கப்பாவோட மிஸ்டேக். அவங்களோட ப்ரஸ்டீஜ், கேஸ்ட் அதைக் காப்பாத்திக்க நினைச்சு உங்களை வளர்த்திருக்காங்க. குடும்ப கௌரவம் பெண்கள் கிட்ட மட்டும் இருக்கா என்ன? உன் பேச்சுப்படி என் அம்மா தப்பு செஞ்சிருந்தாலும் செய்யாத தப்புக்கு உங்களைத் தண்டிச்சது உன்னோட அப்பா, உன்னோட தாத்தா. அவங்க நியாயமில்லாம நடந்ததுக்கு எங்கம்மாவை இன்னொரு முறை குறை சொல்லாத” என்றவன் கோபமாய் அவனறைக்குள் புகுந்துகொண்டான்.

இருவருக்குமான பேச்சு இதமாய்த் தொடங்கி இப்படி இறுகிய ஒன்றாய் மாறுமென கல்கி நினைக்கவே இல்லை. இப்போதும் கல்கிக்கு அத்தை மீது பாசமெல்லாம் இருக்கிறதுதான். ஆனால் அதற்காக அவரின் செயலை நியாயமென காயப்பட்ட அவள் மனம் ஏற்கவில்லை.

அவள் அப்படியே டீவியை வெறித்தபடி உட்கார்ந்திருக்க யமுனா வந்து பெல் அடிக்க, ஹோல் வழியே பார்த்தவள் கதவைத் திறந்தாள்.

“மாமா எங்கத்த?” என்று பின்னால் சூர்யாவைக் காணாது கல்கி கேட்க

“அவருக்குப் போன் வந்துச்சு, பேசிட்டு நிக்கிறார்டா” என்ற யமுனா

“ப்ரசாத் வந்துட்டான் போல” என்றார்.

“ம்ம், அப்பவே வந்துட்டார்” என்றவள் சோஃபாவில் சென்று உட்கார்ந்து கொண்டு வேண்டுமென்றே சீரியலுக்குள் தீவிரமாய் மூழ்கி இருந்த தையல் நாயகியிடம்

“அப்பத்தாவ்! மாமா வந்துட்டார்” என்றதும் அவர் கால்களை உடனே மடக்கி உட்கார யமுனா ப்ரசாதைப் பார்க்க அறைக்குள் போக இருந்தவர் இவள் பேச்சில் திரும்பினார்.

“கல்கி!” என்று செல்லமாய் அவளைக் கடிந்தவர்

தையல் நாயகியிடம் “ம்மா, நீ இப்படி பண்ணினியாக்க அவர் இங்க உட்காரவே மாட்டார். நீ உனக்கு வாகா காலை நீட்டியே உட்காரு. இப்படி செஞ்சா அவருக்குப் பிடிக்காது” என்று அழுத்தமாய் சொல்லி வைக்க

“எப்படி டி மருமக பிள்ளை முன்னாடி?” என்றவர் காலை மடக்கியே வைத்திருந்தார். இன்னும் சூர்யா வராமல் இருக்க

“பொய் சொன்னியா டி சின்னவளே?” என்று கல்கியைத் திட்டினார்.

“ஆமா! பின்ன இவங்க பேரன் உட்கார்ந்தா நான் அவருக்கு சரியாய் உட்காரக் கூடாதுன்னு சொல்றாங்க அத்த” என்றதும்

“கத்திப் பேசுடி, என் காதுல ஒன்னும் விழமாட்டேங்குது” என்று தையல் நாயகி காதினைக் குடைய

“விழுந்துட்ட மட்டும் விஞ்ஞானியாகிடுவியா?” என்று வம்பு செய்தாள் கல்கி.

கல்கி சொன்னதைக் கேட்டு யமுனாவோ
“இன்னமும் இதெல்லாம் விடலையா இவங்க? நீ உன்னிஷ்டம்போல இரு கல்கி” என்றார் அம்மாவை முறைத்துக்கொண்டு. மகனைப் பார்க்க அவனறைக்குள் யமுனா சென்றுவிட

“ஏட்டி! சின்ன சிறுக்கி என்னடி சொல்லிக் கொடுத்த எம்மவ என்னை முறைக்கிறா?” என்று தையல் நாயகி இவளிடம் திரும்ப

“அதை உன் மவ கிட்டயே கேட்டுக்கோ” என்றவள் அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் புகுந்துகொண்டாள்.

இருவருமே தங்களுக்குள் நிகழ்ந்த வாக்குவாதத்தை யமுனாவிடம் சொல்லவில்லை. அன்றைய இரவு அப்படியே ஓடிவிட அடுத்த நாள் காலையில் கல்கி எழவில்லை, யமுனா எழும்போது ஆறு மணிக்குத்தான் எழுந்தாள்.

✅ End of Episode 15
How did you feel about this episode?
❤️ 7 more...

You must Log in or Register to react here

💬 5 Replies
Srichitra Reader 3 months ago

Very nice.

Kavi Natarajan Reader 3 months ago

💞💞💞💞💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 3 months ago

சுதந்திர காற்றை சுவாசித்தவனுக்கும் 

சிறை வாசமாய் 
சிக்கி இருந்தவளுக்கும் சிந்தனைகளும் செயல்களும்
சந்தோஷமும் சோகங்களும் 
சற்று வேறு வேறு தான்....
❤️ 2 more...
Sathya Velusamy 2 months ago

ஒவ்வொரு எபிக்கும் நீங்க போடுற கவித்துவமான  கருத்துகள் அருமை 

❤️ 2 more...
Mrs Beena loganathan 2 months ago

@Sathya Velusamy சந்தோஷம்..... நன்றியும் வணக்கங்களும் 💐 ma....🙏🏻

❤️ 2 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top