Episode 20
“என்னிக்கு வராங்கன்னு முக்கியமில்லை! இத்தனை வருஷமா என்னோட பழகியும் உனக்கு என்னைத் தெரியலன்னா வருஷத்துல என்ன இருக்கு? உனக்குத் தெரியுமா? ப்ரசாத் மாமா கூட நான் நிறைய சண்டைப் போட்டிருக்கேன். ஆனா அவர் வீட்டுக்கு வந்த பின்னாடி ஒரு நாளும் என்னைப் பேசினதில்லை, கொஞ்சமும் நான் அவங்க வீட்ல இருக்கன்ற ஃபீல் கொடுத்ததே இல்லை. அப்போ நானும் அவர் கிட்ட அன்பாதானே இருக்கனும்? அதுக்கு நீ உன் இஷ்டத்துக்குப் பேசுவியா? இனிமே எங்கிட்ட பேசாத நீ” என்றவள் போனை கட் செய்து ஸ்விட்ச் ஆஃப் செய்தாள்.
உண்மையில் ஜெகதீஷிடம் பேசும்போதுதான் வரப்ரசாத் பற்றியே அவள் யோசித்தாள். இத்தனை நாளில் ஒரு நாளும் கூட அவன் ஏன் இங்கு இருக்கிறோம் என்ற உணர்வினைக் கொடுத்ததே இல்லை. அவன் காட்டிய கண்டிப்பும் கூட பாதுகாப்பு என்று பாவைக்குப் புரிந்த பின் அதுவும் கூட பெரிதாய் அவளைப் பாதிக்கவில்லை. ஆனாலும் ஜெகதீஷின் பேச்சு மிகவும் கஷ்டமாய் இருந்தது.
‘சண்டைப் போட்டா அவங்க கிட்ட எப்பவும் அப்படியே இருக்கனுமா? நல்லா பேசினா தப்பா? தப்புன்னா அப்படித்தான் டா இருப்பேன் நான்’ என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.
இவள் சண்டையிட்டு முடித்து அப்படியே உறங்கிப்போக, சிரஞ்சீவி அவன் அறையில் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தான். கல்கி அவனுக்காக சாதம் வைத்ததையெல்லாம் சொல்ல, யமுனாவிற்கு ஆச்சரியம்.!
“நான் அவ கிட்ட சும்மா பேச்சுவாக்குல சொன்னேன் ப்ரசாத், பாரேன் சின்னப்பிள்ளை இதெல்லாம் செஞ்சிருக்கா”
“அதான்மா நானும் சொன்னேன், சின்னப்பிள்ளன்னு சொன்னதுக்கு அப்படி சண்டைப்போடுறா” என்றான் சிரிப்புடன்.
“அவ பேசினாலும் சின்னப்பிள்ளைத் தெரியாம பேசுறான்னு விடு, சும்மா அவளைத் திட்டக் கூடாது” யமுனா கட்டளைப்போல சொல்ல
“ம்மா, நான் அதெல்லாம் இப்போ பேசுறதில்லை. அவ சில நேரம் விளையாட்டாப் பேசினாலும் மத்தபடி ரொம்ப மெச்சூர்ட். அவ உண்டு படிப்பும் உண்டுன்னு இருக்கா” என்றான் கல்கி குறித்து பெருமையாக.
அடுத்து வந்த நாட்கள் வேகமாய் சென்றன. கல்கியால் சிரஞ்சீவிக்கு எந்த தொந்தரவுமில்லை. தெரியவில்லை என்றால் கேட்டுக்கொள்வாள், அதட்டி சொன்னால் பதிலுக்குப் பேசுபவள் பொறுமையாய் சொன்னால் கேட்டுக்கொள்வாள். நாட்கள் ஓடி கல்கி கல்லூரி சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. போன வாரம் மகளைப் பார்க்க உதயமூர்த்தி வந்திருக்க, இங்கு பெய்த மழையில் தையல் நாயகிக்கு ஜலதோஷம் பிடித்துவிட அவரோ
“அய்யோ எனக்கு முடியல, என்னை உங்கூட ஊருக்கு அழைச்சிட்டுப் போ” என்று பிடிவாதம் பிடித்தார்.
“ம்மா, இரண்டு நாள் போனா சரியாகிடும். உன்னை அழைச்சிட்டுப் போய்ட்டா கல்கி தனியா இருப்பா” என்று உதயமூர்த்தி மகளுக்காகப் பார்க்க
“என்ன தனியா இருப்பா? இந்த கட்டிடத்துல நூறு வீடு இருக்கு. என் பேரன் இருக்கான். வசந்தி வேற இருக்கா, உனக்கு உன் மவதான் முக்கியமா அப்போ. எனக்கு ஒன்னுக்கிடக்க ஒன்னு ஆகிப்போய்ட்டா இங்கேயே நான் சாவனுமா? பொறந்து ஊர்ல சாகுற பாக்கியம் எனக்கில்லையா?” என்று ஒப்பாரி வைக்கவே தொடங்கிவிட்டார் தையல் நாயகி.
இவர் செய்த அலப்பறையைப் பார்த்த வசந்தி
“அம்மாவுக்கு ஊர் ஞாபகமா இருக்கும்போல, ஒரு பத்து நாள் இருந்துட்டு வந்தா நல்லா இருப்பாங்க. நான் கல்கியைப் பார்த்துக்கிறேன்” என்று சொல்ல மனம் கேட்கவில்லை உதயமூர்த்திக்கு.
அதற்கும் கல்கியிடம் காய்ந்தார்.
“எல்லாம் உன்னாலதான்! ஒழுங்கா ஊர்ல படிச்சா இதெல்லாம் தேவையா? உன்னால எனக்கு அலைச்சல். அப்படி என்ன பொல்லாத படிப்பு? அடம்! அடம்!” என்று திட்டிவிட கல்கியின் கண்கள் கலங்கிவிட்டன.
அதைப் பார்த்த சிரஞ்சீவிக்கு அவ்வளவு கோபம் வந்தது. இப்படியெல்லாம் அவன் வீட்டில் நடந்ததில்லை. அவனின் பெரியப்பா பெண்ணை எம்.எஸ் படிக்க அமெரிக்கா அனுப்பி வைத்தார் அவ்வளவு பெருமையுடன். இங்கு வந்து படிப்பதற்கு இந்த சின்னப்பெண்ணை என்ன என்ன பேசுகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
உதயமூர்த்தியின் வருகை அவனுக்கு இப்போதெல்லாம் உவப்பானதாகவே இல்லை. வரும்போதெல்லாம்
“உன்னால எனக்கு அலைச்சல், ஊர்லயே ஒழுங்கா படிக்கலாம். எனக்கு டென்ஷன்” என்று பேசாமல் போகவே மாட்டார் மனிதர். அதில் இவர்களிடம் எல்லாம் தன் அம்மா எப்படி இருந்தார் என்று தோன்றிவிடும். அந்த கடுப்பை அப்படியே அம்மாவிடம் காட்ட யமுனாவோ
“எங்கண்ணா அப்படி இல்லைடா, ஓரளவு சப்போர்ட்டா இருப்பார். ஒருவேளை பொண்ணுன்றதால பயப்படுறாரா இருக்கும். நீ எதுவும் பேசி வைக்காத” என்பார் மகனிடம்.
ஒருவழியாக உதயமூர்த்தி அம்மாவுடன் ஒரு நாள் இங்கே இருந்துவிட்டு அடுத்த நாள் காலை வண்டியில் ஊருக்குப் புறப்பட்டுவிட, அன்றிரவு கல்கி தனியாய் இருப்பாள் என சீக்கிரமே வந்துவிட்டான் சிரஞ்சீவி.
அவன் வந்தபோது கல்கி போனில் அவள் அம்மா அங்கையிடம் பேசிக்கொண்டிருந்தாள். வீடியோ காலில் அவள் பேசிக்கொண்டிருக்க இவன் அமைதியாக அறைக்குள் புகுந்து உடைமாற்றி வர அப்போதுதான் பேசிமுடித்திருப்பாள் போல, கல்கியின் கண்களில் மெல்லிய நீர்க்கோடுகள்.
இரவு உணவினை அவன் வெளியே முடித்து வந்திருக்க, கல்கி சோஃபாவில் அமைதியாய் இருக்க, இவன் இன்னொரு இருக்கையில் வந்து உட்கார்ந்து அவளைப் பார்த்தான். அவன் பார்வை உணர்ந்தவள்
“சாப்பிட்டீங்களா நீங்க?” என்றாள்.
“நான் வெளியே சாப்பிட்டேன் இன்னிக்கு. என்ன உங்கம்மாவை ரொம்ப மிஸ் பண்றியா?” என்றான் அவளிடம்.
“ம்ம்” என்று கல்கி மெல்லமாய் சொல்ல
“அப்போ நீயும் உங்கப்பா கூட போயிருக்கலாமில்லை. நானும் உன்னை வீக்கெண்ட்ல ஊருக்குப் போ சொல்லிட்டேன், எங்க கல்கி நீ கேட்கிற?” என்றான்.
“அப்படி மட்டும் நான் போனேன் வைங்க, எங்கப்பா இதான் சாக்குன்னு என்னை அங்கேயே இருக்க வச்சிடுவார்”
“அப்படி இல்லை கல்கி, நீ உங்கம்மாவை மிஸ் பண்றதானே? த்ரீ மந்த்ஸ் ஆயி போயிந்தி. அத்தம்மாவும் உன்னைப் பார்க்கணும் நினைப்பாங்க தானே? ஃப்ரைடே போய்ட்டு சண்டே நைட் கிளம்பி வந்திடலாம்” சிரஞ்சீவி அவளுக்காக யோசித்து பேச
“உங்களுக்கு அதெல்லாம் புரியாது, எனக்கு எங்கப்பாவைத் தெரியும். இரண்டு நாள்ல எங்கம்மாவைப் பார்த்துட்டு அப்படியே வர எனக்கு மனசு வராது. கண்டிப்பா அழுகை வரும், உடனே அவர் ஆரம்பிச்சிடுவார் இதுக்குத்தான் நான் சொன்னேன் இங்கேயே படின்னு. அதுக்குப் பயந்துதான் நான் போகாம இருக்கேன். கொஞ்ச நாள் தனியா இருந்து பழகிட்டா போய்ட்டு வந்தாலும் கஷ்டம் தெரியாது. அது மாதிரி பாருங்க நான் தனியா இருக்க பழகிட்டேன் சொல்லி எங்கப்பாவை ஆஃப் பண்ணிடலாம்” என்றாள் கல்கி தெளிவாக.
“அம்மாடி! வாட் எ ப்ளான்?” என்று சிரஞ்சீவி மென்னகை செய்தவன்
“பொண்ணுங்க எல்லாம் அப்பா செல்லம் சொல்லுவாங்க, நீ மட்டும் எப்படி அம்மா செல்லம்?” என்றான் கேள்வியாக.
“அது கல்கி அப்படித்தான். எங்கக்கா அப்பா செல்லம்தான், நான் அம்மா செல்லம்தான், எங்கம்மாவுக்கு நான்தான் ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா?” என்று சொல்லும்போது கல்கியின் கண்களில் அப்படியொரு பெருமை!
“அப்படியா?” என்று இவன் ஆர்வமாய்க் கேட்டான். உண்மையில் கல்கி இப்போது அழுதிருக்க அவளை திசைத்திருப்பவே பேச்சுக்கொடுத்தான். அவள் அதை உணராது மிகுந்த ஆர்வமாய்ப் பேசினாள்.
“எஸ்! எல்லாரும் நான் பையனா பொறப்பேன் நினைச்சாங்களா, ஆனா பொண்ணா பொறந்துட்டேன்னு எல்லாருக்கும் வருத்தமாம். அதுவும் உங்க பாட்டி இருக்கே இரண்டாவதும் பொண்ணா பெத்துட்டான்னு எங்கம்மாவைப் பேசுவாங்களாம்” என்றதும் சிரஞ்சீவி நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டான்.
“இதுக்கெல்லாம் பேசுவாங்களா? என்ன குழந்தைன்றது எப்படி நம்ம கையில இருக்கும்” என்றான் எரிச்சலாக.
“அதெல்லாம் நமக்குத் தெரியுது, அவங்களுக்குத் தெரியலையே” என்றவள் என்னவோ கதை சொல்வது போல் கதைத்தாள்.
“எங்கப்பாவுக்குக் கூட கொஞ்சம் ஃபீலிங்க்ஸ் போல, ஆனா எங்கம்மா சொல்லுவாங்க பையனா பொறந்தா அவன் எங்க தாத்தா மாதிரி இருந்துட்டா என்ன செய்றதுன்னு நினைச்சாங்களாம். அதனால நான் பொண்ணா பொறந்ததுல எங்கம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமாம்” சொல்லும்போதே அவ்வளவு துள்ளல் அவளின் குரலில். ஆனால் கேட்டிருந்தவனுக்கு ஒருமாதிரியானது. இப்படியெல்லாம் அவன் வாழ்வில் உணர்ந்ததே இல்லை.
“ஃபீல் பண்ணுவியா கல்கி இதுக்கெல்லாம்?” என்று கேட்டுவிட்டு அவள் முகம் பார்க்க
“நான் ஏன் ஃபீல் பண்ணனும்? ஆனா என்ன எல்லாரும் இரண்டும் பொண்ணா இல்லை இரண்டாவதும் பொண்ணா கேட்கும்போது சின்னவயசுல கஷ்டமா இருக்கும். என்னவோ நம்ம தப்பு பண்ணிட்ட மாதிரி. இப்போ எல்லாம் லெஃப்ட் ரைட் ஸ்ட்ரெய்ட்” என்று முகத்தில் குத்துவது போல் செய்தாள் கல்கி.
“ஹாஹா, அதானே பார்த்தேன். கல்கி அதெல்லாம் செய்யனுமே” என்றபோது சிரஞ்சீவியின் குரலில் கொஞ்சம் பெருமை வழிந்தது.
“உங்க அக்காவை ஒன்னும் சொல்லமாட்டாங்களா?” என்று கேட்டான்.
“உங்களுக்கு ஒரு லாஜிக் தெரியல, பொண்ணா பொறந்தா முதல் குழந்தையா பொறந்திடனும். மகாலஷ்மி சரஸ்வதினு சொல்லி பில்டப் பண்ணி அவங்க மனசைத் தேத்திப்பாங்க. செகண்டா மட்டும் பொறந்துட்டோம் அவ்வளவுதான் காலி” என்றபோது அவள் கண்களில் அவள் சொல்லாத வலி.
சொல்லாமல் கூட அவள் கண்களில் தன் பார்வை வைத்திருந்த வரப்ரசாத்திற்குப் புரிந்தது. கடந்த காலத்தில் இதையெல்லாம் பார்த்திருந்தாலும் கல்கி இதனைக் கடந்துவிட்டாள் என்று அவள் பேச்சில் தோன்றியது.
“கஷ்டமா இருக்காதா கல்கி உனக்கு?”
“அப்போ இருந்துச்சு. எங்கப்பா சில டைம் சொல்லுவார் பையனா பொறந்திருந்தா அஞ்சுவுக்குத் துணையா இருந்திருக்கும்னு. அப்பத்தா இவளும் பொண்ணா பொறந்து என் பையனுக்கு செலவு வச்சிட்டா சொல்லுவாங்க. ஆனா எங்கம்மா அப்படி இல்லை, என்னை எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க”
“எங்கப்பா, தாத்தா இருக்கும்போது அம்மா அமைதியா இருக்க சொல்வாங்க. அவங்க போய்ட்டா எங்க இஷ்டப்படி இருக்கலாம். நான் என்ன கேட்டாலும் உடனே செஞ்சுக் கொடுப்பாங்க, இதுல ஒரு ரகசியம் என்னன்னா எங்க வீட்ல மெனுவே எனக்குப் பிடிச்சதுதான். எங்கம்மா எனக்கு என்ன வேணும்னு கேட்டுத்தான் செய்வாங்க, ஆனா யாருக்கும் தெரியாது” என்று சொல்லி கலகலவென சிரித்த கல்கியைத்தான் விடாமல் பார்த்தான் வரப்ரசாத். அப்படியே இருவருக்குமான பேச்சு இயல்பாய் இடையூறின்றி நீள,
“அம்மாடி! ஒரு டவுட்? அது எப்படி உனக்கு ஜர்னலிஸம் படிக்க ஆசை வந்துச்சு? இவ்வளவு அடம்பிடிச்சு படிக்கனும்ன்ற அளவுக்கு?” என்று கேட்டான் வரப்ரசாத்.
“ஒரு லிமிட் தாண்டினா வீட்ல பொத்தி பொத்தி வளர்க்கிறது கூட மூச்சு முட்டிடும்ல, அத்தை வேற எஸ் ஆனதால..” என்றவள் சட்டென நிறுத்திவிட்டு அவன் முகம் பார்க்க அதில் கோபமில்லை.
“சொல்லு” என்று அவனே சொல்ல
“அது அத்தை வேற போய்ட்டாங்க இல்லையா? ஊர்ல எல்லாம் உங்கத்த மாதிரி குடும்ப கௌரவத்தைக் கெடுக்காத சொல்லுவாங்க. வீட்டோடு அடங்கி இருக்கனும் சொல்லுவாங்க, எனக்குக் கடுப்பாகிடும். வானத்துல பறவையா பொறந்திருக்கலாம்னு தோணும், ஸோ அப்படியே ட்ராவல் பண்ணிட்டே இருக்கனும், அதான் எனக்கு அதுல இன்ட்ரஸ்ட். அது மாதிரி இந்த மீடியா, ரேடியோ இதுல எல்லாம் நம்மை நாம எக்ஸ்பிரஸ் செய்யலாம் இல்லையா? சின்ன வயசுல இருந்தே எனக்கு கருத்து சுதந்திரம் இல்லை, அதனால இருக்கும்போல”
“தட்ஸ் குட்! உனக்கு நல்ல பொடன்ஷியல் இருக்கு கல்கி. நல்லா படி, ஏதோ படிச்சோம்னு இல்லாம பெரிய லெவலுக்குப் போகனும் என்ன?” என்று அவன் புன்னகையுடன் கேட்க
“கண்டிப்பா” என்றாள் கல்கி. என்னதான் கல்கி தெளிவாய்ப் பேசினாலும் வீட்டினைப் பிரிந்த ஏக்கம் அவள் பேச்சிலும் கண்களிலும் தெரிய, சிரஞ்சீவி அன்றிலிருந்து முடிந்த நேரமெல்லாம் கல்கியுடன் பேசினான். பேசினான் என்பதை விடவும் அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பான்.
அன்றும் அப்படியான இரவுதான்!
சில நாட்களில் கல்கி ஜெகதீஷுடன் ஓரளவுக்கு சமாதானமாகி இருந்தாள். அவனுடன் கல்கி பேசுக்கொண்டிருக்கையில் சிரஞ்சீவி வந்துவிட்டான். கல்கி கதவை உள்பக்கம் பூட்டியிருக்க, அவன் அவனிடம் இருந்த சாவி கொண்டு திறந்துவந்தான்.
வந்தவனைப் பார்த்து கல்கி ‘ஹாய்’ என்பதாய் சைகை காட்ட, அவன் ‘பேசு’ என்று சொல்லி விட்டு அறைக்குள் போனான். கல்கியும் வரப்ரசாத்துடன் பேசும் தருணங்களை மிகவும் ரசிக்கத் தொடங்கியிருந்தாள். அதனால் ஜெகதீஷிடம்
“மாம்ஸ், நான் நாளைக்குப் பேசுறேன். பை” என்று சொல்ல
“ஏன் டி?” என்றான் அவன்.
“அது ஒரு அசைன்மெண்ட் இருக்கு” பொய் சொன்னாள் கல்கி. உண்மையை சொன்னால் ஜெகதீஷுடன் சண்டை வரும் என்று தெரியுமே, அவளுக்குத் தெரிந்தவரையில் இத்தனை வருடம் நம்மிடம் நெருக்கம் காட்டியவர்கள் தீடீரென புதிதாய் வருபவர்களிடம் பேசினால் வரும் பொறாமையுணர்வே ஜெகதீஷுக்கு உள்ளது என்று நினைத்துவிட்டாள். அவனுமே தன் காதலுணர்வினை சொல்லாது இப்படி சொல்லித்தான் சமாளித்து வைத்திருந்தான்.
நட்பில் பொறாமை என அவள் நினைக்க, காதலிலும் பொறாமை உண்டென உணராது போனாள் கல்கி!
“எதுவுமில்லைனு முன்னாடி சொன்ன?” ஜெகதீஷ் விடாமல் கேட்க
“இப்போதான் என் ப்ரண்ட் மெசெஜ் பண்ணியிருக்க, வேணும்னா ஸ்கீரின்ஷாட் எடுக்கவா?” கல்கி கொஞ்சம் கடுப்பாய்க் கேட்க
“வேண்டாம், நீ போய் எழுது டி. பை” என்று சொல்லி அவன் வைத்துவிட்டான்.
சிரஞ்சீவி வரவும் அவனுக்கு உணவு எடுத்து வைத்தவள் அன்று கல்லூரியில் நடந்ததையெல்லாம் அவனிடம் சொன்னாள். செய்தித்தாளில் புதிதாய்க் கற்ற ஆங்கில வார்த்தையை சொல்லி அவனிடம் அர்த்தம் கேட்டாள்.
இதுவும் ஒரு அன்றாட நடவடிக்கைதான். மணி எட்டுதான் ஆகியிருந்தது. அவன் சாப்பிட இவள் ஹாலில் வந்து உட்கார்ந்து ஒரு படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் உண்டு வரவும்
“நக்சல்ன்னா யாரு? அவங்க நல்லவங்களா கெட்டவங்களா?” என்றாள் அவனிடம்.
“என்ன தீடீர்னு இந்த கொஸ்டின்?”
“இல்லை ஒரு படம் பார்த்தேன், அதான் சில படத்துல நல்லவங்க மாதிரி காட்டுறாங்க. சிலதுல கெட்டவங்க சொல்றாங்க. நீங்கதான் போலீசாச்சே அதான் உங்களைக் கேட்கிறேன்” என்று கல்கி சொல்லவும் அவன் அறைக்குள் போனவன் ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அவளிடம் கொடுத்து
“இது இண்டர்னல் செக்யூரிட்டி சம்மந்தமான புக். நக்சல்க்ஸ், மாவோயிஸ்ட்னு எல்லார் பத்தியும் இருக்கு, அவங்க யாரு? அவங்க ஐடியாலஜி என்ன? எல்லாம் இதுல இருக்கும். இதைப் படிச்சு தெரிஞ்சிக்கோ கல்கி. இந்த படம் எடுக்கிறவங்க எல்லாம் சிலர்தான் உண்மையா ரிசர்ச் பண்ணி எல்லாம் சொல்றது, மீதியெல்லாம் இஷ்டத்துக்கு எடுப்பாங்க. இன்னொருத்தவங்க சொல்லித் தெரியறது விட நீயா தெரிஞ்சிக்கறது நல்லது” என்று சொன்னான்.
“ஓகே நானே படிக்கிறேன். இங்கிலிஷ் ஈசியா இருக்குமா?”
“உனக்குப் புரியும் பட் ஒன் திங், புக்ல கிறுக்க கூடாது. புக்மார்க் யூஸ் பண்ணு, பேஜஸ் மடங்கக் கூடாது” என்றான் கண்டிப்பாக. கல்கி சரியென்பது போல் தலையசத்தவள் பின் நினைவு வந்தவளாக
“ஆமா நீங்க செஸ் விளையாடுவீங்களா?” என்று கேட்டு டீபாயில் கீழ் இருந்து செஸ் போர்டை எடுத்தாள்.
“விளையாடுவேன், அதான் வாங்கி வச்சிருக்கோம்” என்றான் சிரித்தபடி.
“அப்போ வரீங்களா? எனக்குப் போர் அடிக்குது டீவி பார்த்து” என்று சொல்லி அவனை விளையாட அழைக்க
“அப்போ படி” என்றான்.
“எல்லாமே முடிச்சிட்டேன், ஏன் எங்கூட விளையாடினா தோத்துடுவீங்கன்னு பயமா?” என்றாள் கல்கி கிண்டலாக.
கல்கியின் கேள்வியில் அவனுக்கு சிரிப்பு வர அடக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான். அவன் ஸ்டேட் லெவல் சாம்பியன். ஆனால் அவளிடம் சொல்லவில்லை.
“வாயேன், பயமா இல்லையான்னு தெரிஞ்சிடும்” என்று சொல்ல, கல்கியும் சிலிர்த்துக்கொண்டு விளையாட உட்கார்ந்தாள். சோஃபாவில் இருப்பக்கமும் இருவர் உட்கார, நடுவே செஸ் போர்ட் இருந்தது.
கல்கிக்கு அவ்வளவு பயங்கரமாய் எல்லாம் விளையாடத் தெரியாது. ஆனாலும் அவனை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று முனைப்புடன் விளையாடினாள். அவனுக்கு அவளை ஜெயிப்பது மிகவும் எளிதாய் இருக்க, ஆரம்பத்தில் அவளின் காய்களை எல்லாம் வெட்டித் தள்ளிவிட்டான்.
விளையாட்டென்றால் அப்படித்தான் சிரஞ்சீவி. யாரென்று பார்க்க மாட்டான், வெற்றியே குறி!
எதிர் எதிராய் இருவரும் உட்கார்ந்திருக்க கல்கியின் கண்களைப் பார்த்தபடி அவன் இருக்க, அவளோ மிகவும் தீவிரமாய் என்ன செய்து இவனை வீழ்த்தலாம் என்று பார்த்தாள். இவனளவு பயிற்சியோ நுணுக்கமோ அவளுக்குத் தெரியாது. இவனுக்குத் தெரியும் என்று கூட தெரியாமல் அவளைப் போல் பொழுதுபோக்காய் விளையாடுபவன் என்று நினைத்துதான் சவால் விட்டாள்.
அந்த கண்களின் கலக்கம் அவனைப் பாதித்தது. ஜெயிக்க வேண்டும் என்ற தீவிரம் அவள் விழிகளில் தெரிய, விளக்கமின்றி இவனுக்கு அது புரிய, ஆட்டத்தில் கவனம் கலைந்தான். கல்கியுடன் பழகிய இத்தனை நாட்களில் அவளறியாது அவனை அவள் ஈர்த்திருக்க, இன்று கல்கிக்கு ஜெயிப்பது சந்தோஷம் என்றால் ஜெயித்து விட்டுப் போகட்டுமே என்று நினைத்தவன் விட்டுக்கொடுத்துவிட்டான்.
கல்கி உடனே, “ஹேய்! நான் தான் வின், பார்த்தீங்களா என்ட்ட என்னமோ சவால் விட்டீங்களே” என்று பெருமையாய்ப் பேச, அவள் விழிகளைப் பார்த்தான்.
வெற்றிக் களிப்பில் அந்த கருவிழிகளில் கள்வம்(attractive, charmness)! அது காந்தமாய் சிரஞ்சீவியை ஈர்க்க, அவள் வென்றதில் இவனுக்குக் கொஞ்சமும் வருத்தமில்லை.
“ஓகே, வெரி குட்!” என்று சொல்ல கல்கிக்கு சந்தோஷம் தாளவில்லை.
“இன்னொரு கேம் விளையாடலாமா?” என்று கல்கி அவனை வென்றுவிட்டோம் என்று களிப்பில் கேட்க
அவனுக்கோ ஒரு புரியாத புதிர் நிலை. அதனால்
“இல்லை கல்கி! டயர்டா இருக்கு” என்று சொல்ல
“என்ட்ட தோத்துட்டேன்னு கவலைப்போல, சரி பொழச்சுப் போங்க” என்றாள் பெண்.
சிரஞ்சீவிக்கோ இவளிடம் தோற்கிறோமோ என்ற எண்ணம் தோன்ற வேகமாய் எழுந்துவிட்டான். கல்கியும் உண்மையில் அவனுக்கு உடல் நலமில்லை என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டாள்.
அறைக்குள் வந்த சிரஞ்சீவிக்கு ஏன் இப்படி அவளுக்கு விட்டுக்கொடுத்தோம் என்று தெரியவில்லை. இதுவரை அவன் அப்பாவிற்குக் கூட விளையாட்டில் விட்டுக்கொடுக்காதவன். கேட்டால்
“கேம் இஸ் கேம் நானா, நீங்க என்னை ஜெயிக்க ட்ரை பண்ணுங்க” என்பான்.
அகத்தினில் அவனையும் மீறி ஒரு அலைப்பாய்தல்! அது அவளினால் என்று தெரிய ஏன் இப்படி இன்று புரியவில்லை. கல்கிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று தெரியவில்லை.
விளையாட்டுத் தானே அவள் தோற்றால் பரவாயில்லை என்று விடவேண்டியதுதானே? என்று ஒரு மனம் கேட்க, ஒரு மனமோ எப்படி கல்கியைத் தோற்க விட முடியுமென எதிர்க்கேள்வி கேட்டது கல்கியைப் போலவே!
அவளால் அவன் அகத்தில் ஒரு ஆலோலம்! காதல் பூபாளம்! ஆனால் அதை உணர முடியவில்லை அவனால்.
சின்னப்பெண்ணை வருத்தப்படுத்த விரும்பாமல் விட்டுக்கொடுத்து விட்டதாய் அவனே அவனை சமாதானம் செய்து கொண்டான். அதன்பின்தான் அவனுக்கு உறக்கமே வந்தது. அந்த உணர்வு அகத்தில் ஓரமாய் இருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் அது அவனை ஆக்கரமிக்கத் தொடங்கியது ஆழியாய்!
✅ End of Episode 20
சில நேரம் சண்டை போட்டாலும் சொல்வதை புரிந்து கொள்ளும் சிறு பிள்ளையாய் கல்கி...
Nice
Same pinch கல்கி.... இரண்டும் பொண்ணா இரண்டாவதும் பொண்ணானு கேட்டே torture மண்ணுவாங்க......