Episode 40
“என்ன வேகமா வந்துட்டீங்க, அப்பா கிட்ட சண்டைப் போட்டீங்களா?” என்று அவள் கேட்க கோபமாய் அவளை முறைத்தான்.
அதற்குள் யமுனாவும் வந்தவர்
“ப்ரசாத் மாமா கிட்ட கோபமா பேசினியா? என்னாச்சு?” என்று பதட்டமாய்க் கேட்க, இருவரையும் முறைத்துப் பார்த்து
“இதே கேள்வியைப் போய் அங்க அவர்கிட்ட கேளுங்களேன். என்னைப் பார்த்த இரண்டு பேருக்கும் எப்படி தெரியுது?” என்றான் கோபமாக. அதற்குள் வாசலில் எல்லாரும் வந்து நின்றுவிட, வரப்ரசாத்திற்குத்தான் ஒரு மாதிரி இருந்தது. சூர்யா மகனைப் பார்க்க
“நானா, நான் பேசிட்டேன். இனி மாமாதான் சொல்லணும்” என்றான்.
“அவர் கேட்காம பதில் சொல்லு, நாங்க கேட்டா மட்டும் முறைச்சிட்டு நில்லு” என்று யமுனா மகனைக் கடிய
“என் நானா என்னாச்சுனு கேட்டார், உங்க இரண்டு பேர் மாதிரி மாமாவை என்ன சொன்னன்னு என்னை அக்யூஸ் பண்ணல” என்றான் மகனும் கோபமாக. அவன் கோபமாய்ப் பேசவும் எல்லாரும் உள்ளே சென்றுவிட உதயமூர்த்தி மகளை அழைத்தார்.
தன் முன் வந்து நின்ற மகளைப் பார்த்தவர்
“உன்னைப் படிக்க அனுப்பினா கடைசியில நீயும் உன் அத்தை மாதிரி செஞ்சிட்ட இல்ல” என்றார் கொஞ்சம் காட்டமாகவே.
சிரஞ்சீவியிடம் இருந்த பொறுமை கூட மகளிடம் பேசும்போது அவரிடம் இல்லை. நிச்சயம் கல்கியிடம் காதல் என்ற ஒன்றை அவர் எதிர்ப்பார்க்கவே இல்லை. அவரின் எதிர்ப்பார்ப்புகள் உடைந்ததை உள்ளம் ஏற்க மறுத்தது. அப்பாவின் வார்த்தைகள் அவ்வளவு வலித்தது கல்கிக்கு. சட்டென கண்ணீர் சூழந்தது அவள் கருவிழிகளை.
“கண்டிப்பா இல்லைப்பா, அத்தை மாதிரி இருக்கனும் நினைச்சிருந்தா நாங்க கல்யாணம் செஞ்சுட்டு வந்துதான் நின்னிருப்போம். அத்தை அப்படி செய்ய காரணமும் இருந்துச்சு, அவங்க அப்பா அப்படி அடுத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு யோசிக்காம அவர் பேச்சு மட்டும்தான் கேட்கனும்னு நினைக்கறவர். ஆனா என் அப்பா அப்படி இல்லை, அவருக்குப் பசங்க சந்தோஷம்தான் முக்கியம், அதனாலதான் உங்ககிட்ட தைரியமா என்னால சொல்ல முடியுது”
“அத்தை மாதிரி நான் ஓடியெல்லாம் போகமாட்டேன்ப்பா, என்னால உங்களைக் கஷ்டப்படுத்திட்டு எல்லாம் சந்தோஷமா இருக்க முடியாது. அதே நேரம் அவரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன். உங்க மகளா இருப்பேன் இல்லையா அவர் மனைவியா இருப்பேன். அவ்வளவுதான்”
“அது மாதிரி படிக்க அனுப்பினா இப்ப வரைக்கும் ஒழுங்காத்தான்பா நான் படிக்கிறேன். உங்க நம்பிக்கையை நான் எங்கேயும் உடைக்கல, அதே நேரம் எனக்கு ஒருத்தரைப் பிடிச்சிருந்தா அதுல என்ன தப்பு இருக்குப்பா, டிரஸ் எடுத்தா கூட எங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு அத்தனை வாட்டிக் கேட்பீங்களேப்பா, அன்னிக்கு ஹாஸ்பிட்டல என்னை ஒருவார்த்தைக் கேட்காம ஜெகதீஷுக்குக் கல்யாணம் பேசினீங்களே?” என்று கல்கி கேட்க
“அவன் உன்னை நல்லா பார்த்துப்பான் கல்கி, அவனுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு சொன்னான். நான் பார்த்து வளர்ந்த பையன் அவன்”
“நீங்க பார்த்து வளரலன்றதுக்காக ப்ரசாத் ஒன்னும் மோசமானவர் இல்லைப்பா. ஜெகா மாமாவை நான் அப்படி பார்க்கவே இல்லை, அவனா ஒன்னு நினைச்சிட்டு உங்ககிட்ட பேசிட்டான். உங்களுக்கு என்னப்பா ப்ரச்சன்ன? எனக்கா யாரையும் பிடிக்கக் கூடாதா? இல்லை உங்களுக்குப் பிடிச்சவங்களத்தான் எனக்கும் பிடிக்கனுமாப்பா? எனக்குத் தெரியல” என்றவளிடம் ஒரு வித இயலாமை.
“இப்ப நான் ஜெகதீஷுக்கும் உன் மாமாவுக்கு என்ன பதில் சொல்றது?” என்று கோபத்தில் கேட்க
“அன்னிக்கு என்னைக் கேட்டு நீங்க இதைப் பேசலயேப்பா, இப்பவும் நான் உங்களைக் கல்யாணம் பண்ணி வைங்கன்னு வந்து கேட்கல, உங்களுக்குப் பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்ப்பா, நீங்க அதையெல்லாம் யோசிச்சு உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்கப்பா” என்று சொன்னாள் கல்கி.
“நானே மாமா கிட்ட பேசுறேன். அதை நினைச்சு டென்ஷன் ஆகாதீங்க” என்றாள் மீண்டும். சொல்லிவிட்டு கல்கி அமைதியாய் நிற்கவும்,
“சரி நீ போ” என்றார். கல்கி வெளியே வர அவளை எல்லாரும் கேள்விகளால் சூழ
“ஒன்னும் பெருசா சொல்லலம்மா, திட்டினார். அப்புறம் போனுட்டார்” என்று கல்கி சொல்ல, ஆராய்ச்சியாய் அவள் விழிகளை நோட்டமிட்டான் வரப்ரசாத். எல்லாரும் கலைந்து போக,
“என்ன சொன்னார் மாமா? உன்னைப் பேசினாரா?” என்று வரப்ரசாத் கேட்க
“நீங்க பேசினதை எல்லாம் எங்கிட்ட சொன்னீங்களா? நான் மட்டும் ஏன் சொல்லணும்?” என்று எதிர்க்கேள்வி கேட்க
“குட்! பட் உன் அப்பா உன்னை நல்லா திட்டியிருக்கார்னு உன்னைப் பார்த்தாலே தெரியுது கல்கி, என்ன அம்மாவை வச்சுத் திட்டினாரா?” என்று சரியாகக் கேட்டும் விட கல்கி அவன் கண்டுகொண்டானே என்று பார்த்தாள்.
“எப்படி கண்டுபிடிச்சீங்க?”
“நீயே அதை ஆயிரம் தடவ எங்கிட்ட சொல்லியிருக்க, அவர் உன் அப்பா அதைப் பேசாம இருப்பாரா? என்கிட்டவும் பேசினார்” என்றதும்
“அதான் கோவமா?” என்று கல்கி கேட்க
“இதெல்லாம் நான் எக்ஸ்பெக்ட் பண்ணினேன் கல்கி, நோ இஷ்யூ விடு” என்றவன்
“அம்மடூ! பார்த்துக்கலாம் டா. அவர் ஒன்னும் பயங்கரமா எல்லாம் கோவப்பட்டு கத்தல, பொறுமையாத்தான் பேசினார். வெயிட் பண்ணுவோம்” என்று அவள் கரத்தைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான்.
இரவு உணவுக்கு எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்திருக்க அப்போதுதான் உதயமூர்த்தி அறையை விட்டு வெளியே வந்தார். அஞ்சனா சொல்லி தையல் நாயகிக்கும் விஷயம் தெரிய, அவருக்கும் சந்தோஷம்தான்.
“உங்க தாத்தா இருக்கும்போதே கல்யாணம் நடந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பார், ஆனாலும் உங்கப்பனுக்குக் கொழுப்புடி ஆத்தா, அது என்ன எம்மூட்டு பேரனுக்கு உன் தங்கச்சியைக் கட்டித் தராம அந்த ஜெகதீஷுக்குக் கட்டிக் கொடுத்திருவானா?” என்று அஞ்சனாவிடம் கேட்டவர் உண்ண வந்த மகனிடமும் அதையே கேட்டார்.
உதயமூர்த்தியோ “பேசாம சாப்பிடும்மா” என்று சொல்ல
“நான் ஏன் டா பேசக் கூடாது. என் பேரனும் பேத்தியும் ஆசைப்பட்டா கட்டிவைக்க கசக்குதா உனக்கு? என் பேரனை விட உன் மச்சான் மவன் என்ன டா ஒசத்தி?” என்று சத்தம் போட்டு பேச
இப்படியே பேசினால் சண்டையாகிவிடும் என பயந்த அஞ்சனா
“ஆத்தா, கொஞ்ச நேரம் அமைதியா இரு. அப்பா இப்போதானே ஹாஸ்பிட்டல இருந்து வந்திருக்கார்” என்று அவரை அமைதிப்படுத்தினாள். எந்த பேச்சுமின்றி அந்த இரவுப்பொழுது கழிந்தது. அங்கையற்கண்ணியிடம் உதயமூர்த்தி இதனைப் பகிர்ந்து
“கல்கி இப்படி செய்வான்னு நான் நினைக்கவே இல்லை அங்கை” என்றார் வருத்தமாக. அங்கையிடம் எந்த வருத்தமுமில்லை.
“கல்கி அவளுக்குப் பிடிச்சது வேணும்னு பிடிவாதம் பிடிக்கறவதான். ஆனா என்னைக்கும் நம்மை எதிர்த்துட்டு ஒன்னை செய்யணும் அவ நினைச்சதில்லங்க. இப்ப அவ என்ன ஊர் பெயர் தெரியாத பையனையா காதலிக்கிறேன்னு வந்து நிக்கிறா, நம்ம யமுனா மகன் தானேங்க”
“அந்த பையன் கோவம் வந்தா எப்படி பேசுவான்னு பார்த்திருக்க தானே நீ?”
“யாரா இருந்தாலும் அவங்க அம்மாவைப் பேசினா கோவம் வரும்தானே? இவ்வளவு பேசுறீங்களே நீங்களே யமுனாவைப் பேசினா எங்ககிட்ட கோவமாத்தானே பேசுவீங்க”
“அன்னிக்குக் கோவமா இருந்தானு அதையே பேசுறீங்களே, இந்த இரண்டரை வருஷமா அந்த பையன் கூடத்தான் கல்கி இருந்தா, நல்லா பார்க்கலனா அவ இருப்பாளா சொல்லுங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்கும்னு தெரிஞ்ச பின்னாடி அந்த பையன் அவங்க ஊருக்குக்கு மாற்றல் வாங்கி போய்ட்டார். நம்ம சம்மதமில்லாம உங்க தங்கச்சி மாதிரி ஒன்னும் என் பொண்ணு கல்யாணம் செஞ்சுட்டு வந்து நிக்கலங்க” என்றதும் மனைவியை முறைத்தார் அவர்.
“அப்போ எல்லாருக்கும் சம்மதம், சும்மா எங்கிட்ட ஒப்புக்குக் கேட்கிறீங்க?” என்றார்.
“உங்க பொண்ணுக்கு நான் ஒத்துக்கிட்டதெல்லாம் பெருசா தெரியல, உங்க விருப்பம் தான் வேணும்னு நிக்குறா”
“உன் அண்ணன் பையனை விட யமுனா மகனுக்கு சப்போர்ட் பண்ற, எனக்கு புரியலையே?” என்று மனைவியைப் பார்த்தார் உதயமூர்த்தி.
“என் அண்ணன் மகன் நல்லவந்தான். ஆனா கல்கிக்குப் பிடிக்கலையே, இப்போ நமக்கு வீட்ல பார்த்து பேசின கல்யாணம்தான். ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சு செய்யலன்னாலும் ஏதோ ஒரு வகையில கொஞ்சனாச்சும் மனசுல இவ சரியா இருப்பான்னு நீங்க நினைச்சிருப்பீங்கதானேங்க? அறவே பிடிக்காம எல்லாம் கல்யாணம் செஞ்சுக்க முடியாதுங்க. இதே யார்னே தெரியாத ஒருத்தனைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தா எனக்கும் உங்களை மாதிரி ஏத்துட்டு இருந்திருக்க முடியாது”
“கல்கியை எனக்கு நல்லா தெரியும்ங்க, பிடிக்காம எல்லா ஒரு வீட்ல இரண்டரை வருஷம் இருக்க முடியுமா? அதுவும் சண்டைப்போட்டவங்க இன்னிக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்றாங்கன்னா கண்டிப்பா அந்த பையன் கல்கி கிட்ட நல்லவிதமாத்தான் நடந்திருப்பான்”
“எனக்கு என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியல அங்கை”
“இப்போ ஏன் இதை யோசிக்கிறீங்க? அவசரத்துல எதுவும் முடிவெடுக்க வேண்டாம். பொறுமையாப் பேசிக்கலாம் விடுங்க” என்று சமாதானம் செய்தார். அடுத்த நாளே சிரஞ்சீவி குண்டூர் செல்கிறேன் என்று கிளம்பி நிற்க, கல்கி அவனிடம்
“அப்பா இன்னும் ஒன்னுமே சொல்லல, நீங்க போறேன்னு சொல்றீங்க?” என்று அவனிடம் சண்டையிட
“மாமா சொல்றவரைக்கும் எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது கல்கி. இப்ப அவர் நல்லாதானே இருக்கார், உன்னையே கிளம்பி காலேஜ் போக சொல்லலாம்னு நான் நினைச்சிட்டு இருந்தா நீ என்னை ஸ்டாப் பண்றியா?” என்றான்.
அதில் கல்கியின் முகம் வாடி விட “அம்மடூ ஏமிரா நீ? இப்படி இருக்காத டா. மாமாவுக்கும் டைம் வேணும்தானே? எனக்கு வேலை இருக்கு, புரிஞ்சிக்கோ கல்கி” என்று பொறுமையாக சொல்ல
“ஓகே, போயிட்டு வாங்க. நான் சண்டே கிளம்புறேன் காலேஜுக்கு ஒரு வாரம் லீவ் ஆகிடுச்சு” என்றதும்
“அதான் என் கல்கி” என்றான் அவனும் சிரிப்புடன்.
“நீ சும்மா கல்யாணம் நினைச்சு எல்லாம் டென்ஷன் ஆகாத, ஃபர்ஸ்ட் படிச்சு முடி. மாமா பேசினா பார்த்துக்கலாம்” என்றவனின் பேச்சில் அவளுக்கும் தைரியம் பிறந்தது.
சூர்யாவும் அன்றே மகனுடன் கிளம்ப நினைத்தவர் உதயமூர்த்தியிடம்
“உங்களுக்கு யமுனாவை நான் சொல்லாம கல்யாணம் செஞ்சதுல வருத்தம்னு தெரியும் பாவாகாரு. அப்போ எனக்கு யமுனாவைத் தவிர யாரும் தெல்லேது, அவ உங்க நானா பார்த்து ரொம்ப பயந்தா, யமுனா மட்டும்தான் எனக்கு முக்கியமா இருந்தா. இப்போ ஒரு அப்பாவா என்னால உங்க ஃபீலிங்க்ஸ் புரிஞ்சிக்க முடியுது. கண்டிப்பா நான் யமுனாவைப் பார்த்திருக்கறதை விட சிரு கல்கியை நல்லா பார்த்துப்பான்” என்றார் கொஞ்சம் டென்ஷனாகவே.
“எங்க கல்யாணம் மாதிரி இல்லாம நம்ம பசங்க கல்யாணம் நல்லா நடக்கனும். எல்லாரும் வரனும்னு எனக்கும் யமுனாவுக்கும் ரொம்ப ஆசை. உங்க சம்மதம் இல்லாம இது கண்டிப்பா நடக்காது”
சொல்ல வந்ததை சரியாக சொல்ல வேண்டுமே என்ற பதட்டத்தில் அவருக்கு மொழித் தகராறு வேறு ஆகிவிட
“நான் பேசினது புரிஞ்சதுதானே பாவா?” என்று கேட்டார். கமிஷனராக இருப்பவர் தன்னிடம் இப்படி மகனுக்காக இறங்கி வந்து பேசவும் உதயமூர்த்திக்கு தங்கை கணவர் மீது தனி மதிப்பே வந்தது.
“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க மாப்பிள்ளை. யோசிச்சு சொல்றேன்” என்றார் நல்லவிதமாகவே.
அதுவே சூர்யாவுக்குப் போதுமானதாக இருக்க யமுனாவிடம் அதனை சந்தோஷமாகப் பகிர்ந்தார். அப்பாவும் மகனும் அன்றே ஆந்திரா புறப்பட, கல்கியும் யமுனாவும் மட்டும் கும்பகோணத்தில் இருந்தனர். உதயமூர்த்தி யோசிக்கிறேன் என்று சொல்லிவிட அதன்பின் கல்யாண விஷயத்தை யாரும் எடுக்கவில்லை.
அன்று மாலை அங்கையற்கண்ணியின் அண்ணன் ஜெயராமன் உதயமூர்த்தியைப் பார்க்க வந்தார். அங்கையும் அண்ணனிடம் கல்கி விஷயத்தை சொல்லியிருக்க, ஜெயராமனுக்கு அது முன்பே தெரியும். மருத்துவமனையில் வைத்தே அவர்களின் நெருக்கம் பார்த்தவராகிற்றே. அதனால் அன்று ஊருக்குக் கிளம்புகிறேன் என்று சொன்ன ஜெகதீஷிடம் அவர் பேச, அவனோ கல்கிக்குத் தன் மேல் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டான்.
“விடுடா, உனக்குன்னு ஒரு பொண்ணு இருப்பா. நீ வருத்தப்படாத” என்று மகனுக்கு ஆறுதல் சொன்னவர் நேரே தங்கை வீட்டிற்கு வந்துவிட்டார். உதயமூர்த்திக்கு ஜெயராமனைப் பார்க்கவும் அவர் என்ன நினைப்பாரோ என்ற கவலை. ஆனால் அதற்கு அவசிமின்றி ஜெயராமன்
“அங்கை எல்லா விஷயமும் சொல்லிச்சு மாப்ள, கல்கிக்கு என்ன விருப்பமோ அதையே செய்ங்க” என்றதும்
“இல்லை மச்சான் ஜெகதீஷ்?..” என்று உதயமூர்த்தி இழுக்க
“அவன் புரிஞ்சிக்கிட்டான் மாப்ள” என்றார்.
“உங்களுக்கு ஒன்னும் வருத்தமில்லையா?”
“இதுல எனக்கென்ன வருத்தம்? ஒன்னுமன்னா வளர்ந்த பிள்ளைங்க அப்படி நினைக்காது நினைச்சோம். ஜெகா என்னவோ வேற மாதிரி நினைச்சிட்டான். தாய்க்கு அப்புறம் தாய் மாமன்தான் மாப்ள, என் தங்கச்சி மவ ஆசைப்பட்டு அதை செஞ்சுக்கொடுக்கலன்னா நான் என்ன தாய் மாமன்?” என்று ஜெயராமன் கேட்கவும் அது உதயமூர்த்திக்குமான கேள்வியாக அமைந்தது.
கல்கிக்கு மாமா வந்து பேசியதில் அவ்வளவு சந்தோஷம். ஆனால் அப்போதும் உதயமூர்த்தி ஒன்றும் இளகிவிடவில்லை. கல்கியும் யமுனாவும் சென்னைக்குச் சென்றுவிட்டனர். கல்கி வழக்கம்போல் கல்லூரி செல்லத்துவங்கிவிட்டாள்.
இந்த எண்ணங்கள் அவளை அலைக்கழிக்கா வண்ணம் அவள் மேற்படிப்புக்கான வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தாள். உதயமூர்த்தியும் மகளிடம் திருமணம் தவிர்த்து மற்றபடி சாதாரணமாகத்தான் பேசினார். இரண்டு மாதங்கள் கடந்திருக்கும். தங்கைக்குப் போன் செய்தார் உதயமூர்த்தி. நலம் விசாரித்தவர்
“யமுனா, நம்ம மதுரவீரன் கோவில்ல கும்பாபிஷேகம் நடத்துறோம் இந்த வருஷம். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை. நீங்க எல்லாம் கண்டிப்பா வரனும்” என்றார்.
“வரோம்ணா” என்று யமுனா சொல்ல
“அப்புறம் நீ மாப்பிள்ளையும் அழைச்சிட்டு வரனும். அவருக்குப் போன் செஞ்சேன் எடுக்கல” என்று சொல்ல
“அவர் வேலையா இருப்பார்னா, நான் கேட்டுப்பார்க்கிறேன்”
“யமுனா, நான் உன் வீட்டுக்காரரை சொல்லல, அவர்கிட்ட பேசிட்டேன். நான் என் மருமகனை சொன்னேன்” என்று உதயமூர்த்தி சொல்ல யமுனாவிற்குத் தன் காதுகளேயே நம்ப முடியவில்லை. மாப்பிள்ளை என்றெல்லாம் இதுவரை தன் மகனை அவர் உரிமையாக அழைத்ததில்லையே.
“அண்ணா!” என்று ஆச்சரியமாய் யமுனா கேட்க
“என் தங்கச்சிக்குத்தான் என் மேல நம்பிக்கை இல்லை, அப்பாவை மீறி இருப்பேனா தெரியல எனக்கு…ப்ச் பழசை விடு. ஆனா என் தங்கச்சி மகன் என்னை நம்பி எங்கிட்ட ஒரு விஷயம் கேட்டிருக்கான். அதை செய்யலன்னா நான் என்ன தாய் மாமன்?” என்று உதயமூர்த்தி சிரிப்புடன் கேட்க
“அண்ணா உனக்கு கல்கியை ப்ரசாத்துக்குக் கல்யாணம் செஞ்சுக் கொடுக்க சம்மதமா?”
“சம்மதம்னு தானே நான் சொல்லிட்டு இருக்கேன். நீங்க எல்லாம் கும்பாபிஷேகத்துக்கு வாங்க, நம்ம பேசலாம்” என்று சொல்லி வைத்தார்.
✅ End of Episode 40
Super marriage kku waiting 💞💞💞💞💞
ஒரு காதல்
கண்ணீரால் பிரிந்த குடும்பம்
Very nice.
Telugu pelli kosam aasaktigaa eduruchustunnaanu❤️❤️❤️