Episode 8

யமுனா கல்கிக்காக வேலையைக் கூட விட்டுவிடுகிறேன் என்று சொல்லிவிட எல்லாருக்குமே அதிர்ச்சி என்றால், சூர்ய நாராயணனுக்கு பேரதிர்ச்சி. மனைவியின் தீவிரம் அப்போதுதான் அவருக்கே உரைத்தது.

 

உதயமூர்த்திக்கு என்ன முடிவு எடுப்பதென்றே தெரியவில்லை. தங்கை செய்த செயலினால் அப்போது ஊரில் பெரிய அவமானம் அவர்களுக்கு. இவருக்குத் திருமணத்திற்குப் பெண்பார்க்க சென்றபோதும் கூட யமுனாவைப் பற்றிய பேச்சுகள் அதிகம், குடும்பத்திற்கே சில காலம் மன உளைச்சல்.

 

அதையெல்லாம் தாண்டி யாரிடமும் பகிர முடியாத வேதனையும் வலியும் உதயமூர்த்திக்கு நிறைய உண்டு. தங்கையிடம் அதிகம் பேசாவிட்டாலும் தங்கை என்றால் அவ்வளவு ப்ரியம் அவருக்கு, என்ன கேட்டாலும் அப்பாவிற்குத் தெரிந்து, தெரியாமல் சண்டையிட்டாவது செய்து கொடுத்துவிடுவார். அப்படிப்பட்ட தன் தங்கை தனக்குக் கூட சொல்லாமல் திருமணம் செய்த வந்த போது பேரதிர்ச்சியும் பெரும்வலியும் அவரினுள்.

 

இதற்கெல்லாம் மேலாக, சற்குணப்பாண்டியன் நித்தம் நித்தம் தன் வார்த்தைகளால் மகனைக் கொன்று கொண்டிருந்தார். அவரின் முடிவு தங்கை விஷயத்தில் தவறாகிப்போயிருக்க, அதைக் குத்திக் காட்டியே மகனுக்குத் தன் முடிவுகளின் மேல் நம்பிக்கை இல்லாமல் செய்துவிட்டார்.

 

அவருக்கும் இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்துவிட யமுனாவினால் ஏற்பட்ட களங்கம் இனி வரக்கூடாதென கட்டுப்பாடுகளும் கண்டிப்புகள் மிக மிக அதிகம்.

 

மகள்களை இஷ்டம்போல் வளர்க்க அவருக்கும் ஆசைதான், ஆனால் ஒருமுறை தங்கை கொடுத்த ஏமாற்றம் மற்றவர்களை நம்பவிடவில்லை. இதில் தன் நண்பனின் மகளுக்கு நடந்த கொடூரம் தன்னுடையை பெண்களைப் பத்திரமாய் பாதுகாப்பாய் வளர்க்கத்தான் சொல்லியது.

 

கல்கியின் முகம் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது. நேற்று மதியம் உண்டதல்லவா? தங்கையைப் பார்க்க யமுனாவும் அப்படியே இருந்தார்.

 

‘இரண்டு பேருக்கும் நினைச்சதை சாதிக்கற பிடிவாதம்’ மனதினுள் நினைத்தவர்

 

“முதல்ல இரண்டு பேரும் சாப்பிடுங்க, அங்கை எல்லாருக்கும் சாப்பிட வை” என்றதும் அங்கை எழுந்துகொண்டார், கூடவே அஞ்சனாவும்.

 

கல்கி மறுக்கும் முன் யமுனா முந்திக்கொண்டார்.

 

“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுண்ணா, நான் வேலையை விட்டு வந்து இருந்தா கல்கியை எங்களோட சென்னைக்கு அனுப்புவியா?” என்றார்.

 

கல்கிக்கே அவர் பேச்சு ஆச்சர்யம். இவர் என்னை விட தீவிரமாய் இருக்கிறார் என்று. செய்த தவறை சரி செய்ய நினைக்கிறார் போல என்று நினைத்துக் கொண்டாள்.

 

“யமுனா, முதல்ல போய் இரண்டு பேரும் சாப்பிடுங்க. மாப்பிள்ளை நீங்களாச்சும் சொல்லுங்க” என்று சூர்யாவைப் பார்த்தார் உதயமூர்த்தி.

 

“அவர் சொல்றதையெல்லாம் இப்போ நான் கேட்கமாட்டேன், நீ சொல்லு அனுப்புவியா மாட்டியாண்ணா?” என்று பிடிவாதமாய் நின்றார்.

 

“நான் யோசிச்சு சொல்றேன் யமுனா. கல்கி போம்மா” என்று சொல்ல

 

யோசிக்கிறேன் என்றாவது சொன்னாரே என்று கல்கி நினைத்தவள்

“சரிப்பா” என்று சாப்பிட போனாள். யமுனா அசையாமல் இருந்தார்.

 

“போம்மா உனக்கு வேற சொல்லனுமா, வயல்ல இவ்வளவு நேரம் நின்னுட்டு வரேன். எனக்குப் பசிக்குது” என்றதும் யமுனாவும் உண்ண உட்கார்ந்தார்.

 

மதிய உணவு முடிந்தபின் எல்லாரும் ஆளுக்கொரு யோசனையில் இருக்க, அறைக்குள் இருந்த யமுனாவிடம் சூர்யா கோபித்துக் கொண்டார்.

 

“என்ன நினைச்சிட்டு ஜாப் ரிசைன் பண்றேன் சொன்ன யமுனா?” என்று கத்தினார்.

 

“வேற என்ன செய்ய சொல்றீங்க? நான் இஷ்டப்பட்டதை படிச்சேன், இஷ்டப்பட்டவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். ஆனா கல்கி சின்னப்பொண்ணு அவ ஆசைப்பட்டதைப் படிக்க முடியலன்ற போது இதைத்தான் என்னால சொல்ல முடியும் சூர்யா” என்றவரை இன்னும் குறையாத கோபத்துடன் பார்த்தவர்

 

“நீ ஜாப் விட்டு சென்னை வரதுன்னா, என்னை யோசிச்சியா? எனக்கு இன்னும் செர்வீஸ் இருக்கு”

 

“உங்களை வரனும்னு  நான் சொல்லவே இல்லை” என்றார் யமுனா.

 

“ஓஹ், அப்போ என்னை விட்டு தனியா இருப்பியா நீ?” என்று கேட்ட கணவரின் பேச்சில் சிரிப்பு வந்துவிட்டது யமுனாவிற்கு.

 

“எந்துக்கு நவ்வுத்துனாரு (சிரிக்கிற) யமுனா?”

 

யமுனா பதில் சொல்லவில்லை. கணவரும் மகனும்  தன்னுடன் தமிழில் பேசினால் மட்டுமே பதில் சொல்லுவார், அது என்னவோ அவருக்கு தாய்வீட்டோடு இருக்கும் உணர்வினை நல்கும். என்றாவது உணர்ச்சிவசப்படுகையில் சூர்யா தெலுங்கில் பேசினாலும் இவர் பதில் சொல்லமாட்டார்.

 

மனைவியின் அமைதி புரிந்தவர்

“ஏன் சிரிக்கிற யமுனா? சிரிக்கிற விஷயமா நான் பேசினேன்” என்று ஆற்றாமையுடன் சொன்னவர் மனைவிக்கு அருகில் மெத்தையில் உட்கார்ந்தபடி அவரின் கரத்தைப் பற்றிக்கொண்டார்.

 

“பின்ன தனியா இருக்க மாட்டேன் சொல்ல நீங்க என்ன குழந்தையா? புரிஞ்சிக்கோங்க சூர்யா” என்று யமுனா சொல்ல

 

“குண்டூர்ல பொண்ணுங்களை யூஎஸ், யூகேன்னு  படிக்க அனுப்பி வைக்கிறாங்க, படிச்சிட்டு அங்கேயே வேலைப் பார்க்குறாங்க. இங்க உங்க அண்ணா சென்னை அனுப்ப இப்படி பண்றார்” முறைத்துக்கொண்டே சொன்னார் சூர்யா.

 

“குண்டூர்ல அனுப்பினா கும்பகோணத்துல அனுப்பனுமா என்ன? எங்கண்ணாவோட பயம் நியாயம்தானே? தெரியாத ஊர்ல பொண்ணை அனுப்பிட்டு பயமா இருக்கும்தானே?”

 

“உன்னை அனுப்பினார் தானே?”

 

“அப்போ நீங்க என் பெயரைக் கேட்கவே ஆறு மாசம் ஆச்சு, இப்போ அப்படியா இருக்கு? அதைவிட அண்ணாவுக்கு என்னோட விஷயத்துல நம்பிக்கை இல்லாம போச்சு, ப்ளீஸ்ங்க அண்ணாவாலதானே நான் சென்னைக்குப் படிக்க வந்தேன், அதனால்தானே உங்களைப் பார்த்தேன்” என்றதும் அந்த நாள் ஞாபகம் அவரின் நெஞ்சத்தில்.

 

அதில் அவரின் முகம் மென்மையாக மாறியது, கைகளிலும் அந்த மென்மையை யமுனா உணர்ந்தவர்

 

“உங்க ப்ரியத்தம்மா சொன்னா கேட்பீங்கதானே சூர்யா?” என்றதும் மென்மை இருந்த முகத்தில் மெல்ல முறுவல் மலர்ந்தது.

 

“சொல்லும்மா” என்றார்.

 

“அண்ணா ஃபர்ஸ்ட் கல்கியைப் படிக்க அனுப்பட்டும், இந்த செம் முடிஞ்சதும் பார்ப்போம் சூர்யா” என்றதும் அவர் தலையசைத்தார்.

 

“உங்கண்ணா ஒத்துப்பார்னு நினைக்கிறியா? இரண்டு வேளை சாப்பிடாம வேற இருந்துட்ட” என்றார் வருத்தமாக.

 

“எங்கண்ணா சம்மதம் சொல்லிடுவார், அதுக்காகத்தான் சாப்பிடாம இருந்தேன். என்னை காலேஜ் அனுப்ப முடியாதுன்னு அப்பா சொன்னப்போ இப்படி செஞ்சேன், அதையே கல்கி ஃபாலோ பண்றா” என்று சொல்லி சிரித்தவர்

 

“அப்பா பட்டினி கிடந்தா கிடக்கட்டும் சொல்லிட்டார், அண்ணாதான் அப்பாவுக்குத் தெரியாம சாப்பாடு கொடுத்து சாப்பிட வச்சு, அப்பா கிட்ட அவ சாப்பிடாம இருக்கான்னு பொய் சொல்லி எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டார், பட் நான் அவரை ஏமாத்திட்டேன்” சொல்லும்போதே கண்கலங்கிப்போனது.

 

மனைவியின் கண்ணீரைத் துடைத்துவிட்ட சூர்யா “உனக்கு இவங்க மேல இவ்வளவு பாசம் இருக்கும்னு எனக்குத் தெரியவே இல்லை ப்ரியத்தமா” என்று சொல்லி தோளோடு அணைத்துக்கொண்டார்.

 

“பார்க்கல, பேசலன்னா பாசமில்லன்னு அர்த்தமா? எப்பவும் நான் இவங்களை நினைச்சிட்டேதான் இருப்பேன், ப்ரசாத் கல்யாணத்துக்குக் கூப்பிடனும்னு பேசிக்கிட்டோமே மறந்தாச்சா?” என்று யமுனா  கேட்கவும்

 

“மறக்கலம்மா, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. நானும் உன் அண்ணா கிட்ட பேசுறேன்” என்றதும் யமுனாவிற்கு கணவர் தன்னைப்புரிந்து கொண்டதில் சந்தோஷமாய் இருந்தது.

 

அங்கை தன் கணவரிடம்

“கல்கி ரொம்ப ஆசைப்படுறாங்க, அவளை படிக்க வச்சா நல்லா வருவா, நீங்க ஒத்துக்குவீங்கன்னு ஒரு வருஷமா வைராக்கியத்தோட இருக்காங்க” என்றதும்

 

உதயமூர்த்தி பெருமூச்சுவிட்டவர்

 

“எனக்கு மட்டும் ஆசையில்லையா அங்கை? இங்க நம்ம ஊர்லயே பொண்ணுங்களை எப்படி கிண்டல் பண்றாங்க, இங்கனாச்சும் தட்டிக் கேட்க பங்காளி, மாமன் பிள்ளைங்கன்னு இருக்காங்க. அங்க யாரு இருக்கா? உனக்குப் பயமில்லையா சொல்லு” என்று மனைவியிடம் கேட்டார்.

 

“பயந்தா வாழ முடியுமா? அதான் உங்க தங்கச்சி பார்த்துக்கிறேன் சொல்லுதே அப்புறமென்ன?”

 

“இத்தனை வருஷம் இல்லாம இப்போ அவங்களோட உறவு வைக்கனுமா? நமக்குத் தேவைனதும் ஒட்டிக்கிட்ட மாதிரி ஆகிடாதா?”

 

“அப்படி உறவு கொண்டாட இஷ்டமில்லைனா ஏன் அவங்களை அப்படி விழுந்து கவனிக்கனும்? என்ன தேவை இதுல? உங்க தங்கச்சியை நீங்கதானே படிக்க அனுப்பினீங்க? அத்தை வீட்ல தங்கி படிக்கிறதுல என்ன ஆகப்போகுது” என்ற அங்கையை ஆச்சர்யமாய்ப் பார்த்த உதயமூர்த்தி

 

“அங்க யமுனா பையன் இருக்கான்னு தயங்கினது நீதானே?”

 

“யமுனாவும் கூட இருக்கிறேன் சொல்றா, கூடவே அந்த தம்பி போலீஸ். அதை விட வேறு என்ன வேணும்?” என்றதும் உதயமூர்த்தியும் யோசிக்க ஆரம்பித்தார்.

 

மாலை டீ குடிக்கும் நேரம் எல்லாரும் கூடியிருக்க உதயமூர்த்தியிடம் சூர்யா

“நீங்க பயப்படாம பாப்பாவை அனுப்பி வைங்க, நாங்க பார்த்துக்கிறோம்” என்றார்.

 

அவர் வார்த்தைகள் இன்னும் நம்பிக்கைத் தர, மகளைப் பார்த்தார். தந்தையின் முடிவுக்காக ஆவலாய் அவரைப் பார்த்திருந்தாள் கல்கி.

 

“கல்கி இங்க வா” என்று அவளை அருகே அழைத்தார்.

 

“அத்தை வீட்ல தங்கி படிக்கிறியா?” என்றதும்

 

“படிக்கிறேன்பா, ஆனா அவங்களுக்கு ஏன் கஷ்டம்? ஹாஸ்டல் இருக்கும் காலேஜ்ல” என்றாள். அதுவே கல்கியின் விருப்பமின்மையைக் காட்டியது.

 

“ஹாஸ்டல்ல உன்னை விட்டு அப்பாவுக்குப் பயமாயிருக்கும், அத்தை வீட்ல தங்கி படிம்மா” என்றார் முடிவாக.

 

“அத்தை வரவரைக்கும் நான் எப்படி தனியா இருக்கறது?” கல்கிக்கு சிரஞ்சீவியுடன் தான் இருக்க வேண்டுமா என்ற எண்ணம். அதே நேரம் படிப்பும் முக்கியமாகப்பட்டது.

 

“என்னடி கூடி கூடி பேசுறாங்க” சத்தம் குறைவாய் இருந்ததால் தையல் நாயகியின் காதில் இது கேட்காமல் போக அஞ்சனாவிடம் கேட்க, அவள் விஷயத்தை சொல்லவும்

 

“நான் இவ கூட போய் இருக்கிறேன், என் பொண்ணு எதுக்கு மருமகனை விட்டு இருக்கனும். இவளுக்கு நான் துணையா இருந்தா பத்தாதாக்கும்?” என்றார் சத்தமாக.

 

தையல் நாயகி அப்படி சொல்லவும் உதயமூர்த்தி உடனே

“அம்மா, உனக்கு அந்த ஊரு பிடிக்குமா? இருப்பியா நீ?” என்றார்.

 

“ஏன் இருந்துக்க மாட்டேனா? என் பேரப்பிள்ளையை இத்தன வருஷம் உங்கப்பாரும் நீயும் பார்க்க விடாம பண்ணிட்டீங்க, காலம் போன கடைசியிலாச்சும் அவனோட இருந்துக்கிறேன்” என்றதும் கல்கி அவரை முறைத்தாள்.

 

“என்னடி முறைக்கிற?”

 

“அப்போ நீ எனக்காக வரல?”

 

“உனக்காக யாருடி வரா? அங்க வந்தா என் பேரன் போலீஸு என்னை நல்லா பார்த்துப்பான். நான் எம்ஜிஆர் சமாதி, அண்ணா சமாதி எல்லாம் பார்க்கணும், உங்க தாத்தா என்னை அதையெல்லாம் பார்க்கவே விடல” என்றவர் யமுனாவிடம்

 

“சிவாசி கணேசனைப் பார்க்கணும் டி, அவர் நம்மூருக்கு நான் சின்னப்புள்ளையா இருக்கும்போது வந்தாரு, எனக்கு கையெல்லாம் காமிச்சாரு யமுனா, பேரனுக்கு அவர் வீடு தெரியுமா?” என்று ஆர்வமாய்க் கேட்டார்.

 

“உங்க சிவாசி கணேசன் செத்துப்போய்ட்டாரு” என்று அஞ்சனா சொல்ல

 

“புளுகுறா பாரு, நேத்து கூட அவரைப் பார்த்தேன்” என்று தையல் நாயகி வாதாடினார், டீவியில் சிவாஜி கணேசனைக் கண்டுவிட்டு. சில விஷயங்கள் வயதின் காரணமாய் மறந்திருந்தார்.

 

“இப்போ சிவாஜி கணேசனா முக்கியம்?” என்று கத்திய உதயமூர்த்தி

 

“நிஜமா நீ போய் இருப்பியாம்மா?” என்று உறுதிபடுத்திக்கொள்ள கேட்டார்.

 

“அட, இருந்துப்பேன் டா” என்றவர் கல்கியிடம்

 

“ஊருக்குப் போறதுக்குப் போய் பொட்டியைக் கட்டு” என்று சொல்ல அப்பாவின் முகம் பார்த்தாள் கல்கி.

 

“அப்ளை பண்ணிட்டியாம்மா? எந்த காலேஜ் சொல்லு? எவ்வளவு ஃபீஸ்?” என்று மகளிடம் எல்லாம் கேட்டறிந்தார்.

 

ஒருவழியாக எல்லார் சம்மதமும் கிடைப்பெற்றது கல்கிக்கு. ஒருவருடத்திற்குப் பின் வார்த்தையால் வடிக்கவே முடியாத மன நிறைவு மங்கையிடம்.

 

உடனே சந்தோஷமாய் ஜெகதீஷுக்கு அழைத்து சொல்ல

“உன்னை யாரு அவங்க வீட்ல தங்க ஓகே சொல்ல சொன்னது?” என்றான் கோபமாக.

 

“படிக்கறதுக்கு ஓகே சொல்லிட்டாங்க சொல்றேன், எங்க தங்கினா என்ன?” என்றாள் கல்கி.

 

“எங்க தங்கினா என்னவா? அப்போ உன் அத்தை மகன் கூட தங்க ரொம்ப ஆசையோ? குழந்தையாடி நீ? ஹாஸ்டல்ல தங்கி படிக்க மாட்ட?” என்றான் அடக்கமுடியாத கோபத்துடன்.

 

“என்ன நீ? சும்மா திட்டுற. கொஞ்சம் கூட உனக்கு சந்தோஷம் இல்லையா? அப்பா அத்தை வீட்ல தங்கி படிக்கிறதுன்னா படினு சொல்லிட்டார். அந்த சிடுமூஞ்சி கூட தங்க எனக்கு என்ன ஆசை? எங்க அப்பத்தாவும் கூட வருது, அத்தையும் கொஞ்ச நாள்ல வந்துடுவாங்க” என்றவள்

 

“சந்தோஷப்படாம திட்டுறியா டா நீ, வை டா போனை” என்று கோபத்தில் வைத்துவிட்டாள்.

 

ஜெகதீஷுக்கு அவள் தான் இருக்கும் ஊருக்கு வரப்போகிறாள் என்று மகிழ்வதா இல்லை சிரஞ்சீவி இருக்கும் வீட்டில் அவள் தங்க போகிறாள் என்று வருந்துவதா என தெரியாமல் விழித்தான். எப்படி இருந்தாலும் கல்கிக்கு சிரஞ்சீவி மீது சின்னதாய் கூட அபிப்ராயம் இல்லை, அதைவிட அவளுக்குப் படிப்பு முக்கியம் என்று  நினைத்தவன் தன்னை சமாதானம் செய்து கொண்டான்.

 

சிரஞ்சீவிக்கு இந்த செய்தி சொல்லப்பட அம்மாவைப் பிடித்துக் கத்திவிட்டான்.

 

“யாரைக் கேட்டு நீங்க அவளுக்காக சாப்பிடாம இருந்தீங்க? எப்படி நீங்க ஜாப் ரிசைன் செய்றேன் சொன்னீங்க?” என்று எடுத்தவுடனே கத்த,

 

“ப்ரசாத், என்னைப் பேச விடு” என்று யமுனா சொல்ல, அதைக் காதில் வாங்கவே இல்லை அவன்.

 

யமுனாவின் புவனம் எப்போதும் அப்பா, மகனை இருவரை சுற்றியே இருக்கும். இப்போது அதற்குள் உறவுகள்  நுழைய அதனை ஏற்க முடியவில்லை அவர்களால்.

 

“நான் ஒருவருஷமா தனியா இருக்கேனே? எனக்காக கூட வந்து இருக்கனும் தோணிச்சா உங்களுக்கு? அப்ப மட்டும் அப்பாவை விட்டு வரமாட்டேன் சொன்னீங்க”

 

“ப்ரசாத், என்னடா பேசுற? அவ சின்னப்பொண்ணு டா” என்று பேச,

 

“பாம்பைக் கூட பல்லி மாதிரி ஹாண்டில் பண்றா, ஹாஸ்டல்ல தங்கி படிக்க மாட்டாளா?” என்றான் எரிச்சலாக.

 

“இப்போ உனக்கு நான் சென்னைக்கு வரது பிரச்சனையில்லை, உனக்காக வரேன்னு சொல்லாம கல்கிக்காக சொன்னது பிரச்சனை” என்று யமுனா அழுத்தமாய்க் கேட்க,

 

“எஸ், அதே” என்றான் இவனும் எரிச்சலுடன்.

 

“இங்க பாரு ப்ரசாத், இத்தனை வருஷம் நம்ம குண்டூர் போறப்ப வைசாக் போறப்ப எல்லாம் அப்பா சைட் ரிலேடிவ்ஸ் இருப்பாங்க, அப்ப எல்லாம் அம்மாவோட மனசு இங்கதான் சுத்திவரும், எனக்காக நிறைய செஞ்ச அண்ணனுக்கு நான் செய்ய ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு. நீ கூட அம்மாவைப் புரிஞ்சிக்கலன்னா என்னடா?” என்றார் இயலாமையுடன்.

 

அம்மாவின் பேச்சு அவனை இளக வைக்க,

 

“என்ன இப்போ? அம்மம்மாவும் அந்த அல்லரி பிள்ளாவும் என் கூட ஸ்டே பண்ண போறாங்க அதானே? வரட்டும்” என்று கோபத்துடன் சொல்லி சிரஞ்சீவி வைத்துவிட்டான்.

 

யமுனா மட்டும் ஊரில் இருக்க, சூர்யா விஜயவாடா சென்றுவிட்டார், கல்கி சென்னைக்கு வருவதற்காக கிளம்பும் நாள் மீண்டும் ஊருக்கு வந்தார் மகனுடன்.

 

வீட்டில் அவ்வளவு அறிவுரை சொல்லி அனுப்பியிருந்தார் உதயமூர்த்தி, அஞ்சனாவும்

“அத்தை உனக்காக அப்பா கிட்ட பேசியிருக்காங்க, அவங்க சொல்லாம இருந்தா அப்பா இப்பவும் ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டார்” என்று சொல்லியிருக்க

 

“அவங்க காதல் காதல்னு ஓடாம இருந்திருந்தா, அப்பா போன வருஷமே ஒத்துட்டு இருந்திருப்பாங்க” கல்கி கடுப்புடன் சொன்னாள்.

 

தங்கையின் தலையில் கொட்டிய அஞ்சனா

“அது அவங்க லைஃப், அதை விமர்சனம் செய்யாத. நீ சின்னப்பொண்ணு, படிக்கிறது மட்டும் உன் வேலை, அதை செய். அங்க போய் வம்பிழுக்க கூடாது கல்கி” என்று அழுத்தமாய் சொல்லியிருந்தாள்.

 

யமுனா ஊரில் இருந்த இத்தனை நாளில் ஒட்டி பேசாவிட்டாலும் வெட்டிப் பேசவில்லை கல்கி. ஒரு மரியாதையான இடைவெளியுடன் நடந்துகொண்டாள். ஜெயராமன் மகாலஷ்மியுடன் வந்து தங்கை மகளை வாழ்த்திவிட்டு போனார். வாழ்த்துகள், அறிவுரைகள், பிரிவினால் கொஞ்சம் கண்ணீர்த்துளிகளுடன் கல்கியின் பயணம் தொடங்கியது.

 

சிரஞ்சீவி காரை ஓட்ட, அவரருகே சூர்யா. பின்னிருக்கையில் தையல் நாயகி, அவர் பக்கத்தில் யமுனா அடுத்து கல்கி உட்கார்ந்திருந்தாள். ஜன்னல் காற்றை உள்வாங்கி சந்தோஷத்துடன் புறப்பட்டாள் கல்கி, தனது கனவுகளை நோக்கி!

 

வீட்டைப் பிரிவதன் பிரிவுத் துயரம் இருந்தாலும் அதனை மீகிய ஒரு சுதந்திர உணர்வு அவளை சூழ்ந்திருந்தது. காத்திருந்து கிடைக்கும் பொருளுக்கான மதிப்பு எப்போது அதிகமே!

 

படிப்பு எல்லாருக்கும் கடமையாய் இருக்க, கல்கிக்கு அது காதலாய் இருந்தது. அவள் அகம் உணர்ந்த அளவில்லா மகிழ்ச்சியினால் அயரவே இல்லை அவள் விழிகள், இரவெல்லாம் விழித்தே இருந்தாள், தாம்பரம் வரும்போது அவள் விழிகள் தானாய் மூடிக்கொள்ள, அத்தை மீது சாய்ந்துவிட்டாள்.

 

சிரஞ்சீவி காரை ஓட்டிக்கொண்டிருந்தவன் பார்வையில் கல்கி அம்மாவின் மீது சாய்வது பட, யமுனாவும் அவள் தலையைப் பிடித்து ஆதரவாய் அணைத்துக் கொள்ள, சிரஞ்சீவிக்கு எரிந்தது.

 

முறைப்புடனே வண்டியை ஓட்டினான். வீடு வந்து சேரவும்

 

“கல்கி, எழுந்திருடா” என்று யமுனா சொல்ல

 

“அத்தை, வந்தாச்சா?” என்றவளின் கண்களில் மின்னல்.

 

“வந்தாச்சும்மா” என்றதும் எல்லாரும் காரில் இருந்து இறங்க, தையல் நாயகியைப் பிடித்து காரில் இருந்து இறங்க உதவி செய்தாள். பெரியவர்கள் உள்ளே செல்ல, டிக்கியில் இருந்த பைகளை சிரஞ்சீவியும் கல்கியும் எடுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தனர். சிரஞ்சீவிக்கு ஒரு அழைப்பு வர, அவன் காரில் அருகே நின்று பேசிக்கொண்டிருக்க, மகனைக் காணாத சூர்யா டைனிங் டேபிளில் உட்கார்ந்தபடி

 

“சிரூ பங்காரத்தைக் கூப்பிட்டு வா பாப்பா” என்று கல்கியிடம் சொன்னார்.  

 

‘பங்காரமா’ என்று சொல்லிப்பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.

 

‘பணியாரம் ஓகே, அதென்ன பங்காரம்’ என்று நினைத்தவள் வெளியே நின்றிருந்த சிரஞ்சீவியின் அருகே போக, அலைப்பேசியில் கவனமாயிருந்தாலும் இவள் வருவதைப் பார்த்தவன் கண்களால் என்னவென்று கேட்க

 

“உங்களை மாமா கூப்பிட்டாங்க சிங்காரம்” என்று சொல்ல

 

“வாட்?” என்று அதிர்ந்து அவளைப் பார்க்க

 

“மாமா தான்  சிரூ பங்காரம் சொன்னாங்க, சீரு ப்ள்ஸ் பங்காரம் சிங்காரம்” என்று கிண்டலாய் சிரித்தாள் கல்கி. உண்மையில் அவளது உள்ளத்து மகிழ்ச்சி உரிமையுடன் அத்தை மகனைக் கிண்டல் செய்ய வைக்க, அதெல்லாம் சிரஞ்சீவிக்குப் புரியவில்லை. சின்னப்பெண் தன்னை சீண்டுவதாய் நினைத்தவன்

 

கடுப்பில் தன் கட்டை விரலை  நெற்றியில் தேய்த்தபடி “டோண்ட் க்ராஸ் யுவர் லிமிட்ஸ்” என்றான் அழுத்தமாக. கல்கியோ இருந்த உற்சாகத்தில் அவன் பேச்சைக் கண்டுகொள்ளாது

 

“சீக்கிரம் வாங்க சிங்காரம்” என்று துள்ளிக் குதித்து வீட்டினுள் ஓடினாள்.

 

எல்லைக் கடக்காதே என்பவனின் அத்தனை எல்லைகளையும் கல்கி கடக்கப் போகிறாள் என்று அவளும் அறியவில்லை, அவனும் அறியவில்லை.

✅ End of Episode 8
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 6 Replies
Kavi Natarajan Reader 1 month ago

Very nice ud ma 

❤️ 2 more...
Thennila Reader 1 month ago

Super ❤️

❤️ 2 more...
Srichitra Reader 1 month ago

Very nice 

❤️ 1 more...
K. Vedha Reader 1 month ago

Pavam Jagadeesh Paya Pilla

Haha Singaram Vanthutaru
😂 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago

ஒரு தலை காதலுடன் 

ஒருவன் சுற்றிக் கொண்டிருக்க ஒன்றும் அறியாது 
ஒருத்தி தன்  படிப்பை எதிர்நோக்கி காத்திருக்க
ஒட்டாத மனநிலையில் 
ஒதுங்கி நிற்கும் ஒருவன்....
ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொரு எண்ணங்கள்.....
❤️ 1 more...
Sathya Velusamy Reader 3 weeks ago

பொறாமைல பொங்குறார் போலீஸ்காரர் சிங்காரம்

😂 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top