Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 33

“ஏன் ஆசை வரக் கூடாதா?” ஆதினியின் கன்னத்தில் இதழ் உரச அரிச்சந்திரன் கேட்க,

“ஆசைதானே, வரலாமே?” என்று ஆதினி இழுத்தவள்,

“கல்யாணமாகி ஒரு வருசம் ஆகப் போகுது, இன்னும் ஹனிமூன் கூட என்னை அழைச்சிட்டு போகல, அப்பாவாகனுமாம்” என்று அவன் தோளில் தலை வைத்து கண்மூடினாள்.

“ஏன்டி அரைடிக்கெட்? அடுத்த மாசம் எக்ஸாம் வச்சிட்டு உனக்கு ஹனிமூன் கேக்குதாடி?” என்று அரி அவள் கன்னத்தை கிள்ள,

“இவருக்கு மட்டும் அப்பாவாக ஆசை வரும், நான் கேட்டா எக்ஸாமா?” என்று கண்களை திறந்து கேட்டாள்.

“உனக்கு எக்ஸாம் முடியட்டும், செம் லீவ்ல போவோம். எனக்கும் அப்போ கோர்ட் லீவ் வரும்” என்று அரி திட்டம் சொல்ல,

“நிஜமா உங்களுக்கு அப்பாவாக ஆசை வந்துடுச்சா அரி?” என்றாள் ஆச்சரியமாக.

“ஹே! அதெல்லாம் இல்லை. கொஞ்சம் ஹாப்பி மூட், இப்போ எனக்கு ஆதினி மேலதான் ஆசை” என்றவனின் இதழ் ஆதினியின் கண்களில் முத்தமிட்டது.

“நீங்க முன்னாடி சொன்ன மாதிரி, படிச்சு முடிச்சிட்டு மனசால பிரிப்பேர் ஆகிட்டு குழந்தையைப் பத்தி யோசிக்கலாம். அதுக்குள்ள அத்தாச்சிக்கு பாப்பா பொறந்திடும், நம்ம அதை வச்சு எக்ஸ்பீரியண்ஸ் ஆகிடலாம்” என்றதும் அரி சிரித்தான்.

“நல்ல ப்ளான்தான்!” என்றான் மெச்சுதலாக.

இரவின் அடர்த்தியில் நிலவின் ஒளியில் அரியின் பார்வை ஆதினியை மெல்ல மெல்ல அள்ளி ரசித்தது. ஒற்றைக்கையால் அவளை அணைத்திருந்தவனின் உள்ளம் தங்கை தாயாகப் போகும் செய்தியில் குளிர்ந்திருக்க, பேசாமல் அமைதி. வெகு நாட்கள் கழித்து பரபரப்புகள் நீங்கி, பரவசமும் இன்றி இயல்பான இரவு.

அரிச்சந்திரன் ஆதினியின் விரல்களில் சொடக்கெடுத்து அப்படியே அடர்ந்த இருளைப் பார்த்தபடி இருக்க,

“அரி என் மேல இருந்த கோவமெல்லாம் போச்சா?” என்று ஆதினி கேட்டாள்.

“நீ நிறைய பண்ணியிருக்கியே, எந்த கோபம்னு சொல்லு” என்றதும் ஆதினி முறைத்தாள். அவள் முறைக்கவும் விரல்களை விட்டவன் அவளை அணைத்தபடி,

“இப்போ எந்த கோவமும் இல்லைடி. இப்படி இருக்கறது, ஐ மீன் நீ என் பக்கத்துல இருக்கிறதே எனக்கு போதும்.” என்று உணர்ந்து உரைத்தான்.

“நான் ஹாஸ்டல் போனப்போ அட்வகேட் அரிச்சந்திரன் என்னை பயங்கரமா மிஸ் பண்ணியிருக்கார் போலயே..” ஆதினிக்கு அதை சொல்வதில் ஒரு சந்தோஷம், பெருமை, பேரின்பம்.

“தெரியாத மாதிரி நடிக்காதடி” என்று அரி சொல்ல,

“சொல்லாம எப்படி தெரியும்?” என்றாள் ஆதினி.

“உனக்கு உன்னை பத்திதான் கவலை, உனக்கு வேணும்னா வேணும். எனக்கு என்ன வேணும்னு நினைச்சிருந்தா ஹாஸ்டல் போறேன் சொல்லியிருப்பியா?” என்றான் கொஞ்சம் கடுப்பான குரலில்.

அரிச்சந்திரன் அப்படியொன்றும் எல்லாவற்றையும் மறப்பவன் இல்லையே, இந்த காதலின் ஊடல் உள்ளத்தில் இருக்கவே செய்ய, இன்று வெளிப்படுத்தி விட்டான். இருவருமே அப்படித்தானே, மனத்தில் உள்ளதைக் கொட்டும் ரகம்.

அரியின் குரலில் கோபமிருப்பதை உணர்ந்தவள், “நான் தெரியாம கேட்டுட்டேன், தூக்கம் வருது” என்று எழ பார்க்க, அவளை அப்படியே இழுத்து இறுக்கி அணைத்தவன்,

“ஏன்டி அரைடிக்கெட்! கேள்வி கேட்டுட்டு நைசா நழுவுறியாடி? தெரியாம எல்லாம் போக கூடாது அரிச்சந்திரனைத் தெரிஞ்சுட்டுத்தான் போகணும்” என்று வம்பு செய்தான்.

“போங்க அரி! வெட்ட வெளி, மொட்டை மாடி” என்று ஆதினி சொல்ல,

“ஆமா, வெட்ட வெளி, மொட்டை மாடி, வட்ட நிலா” என்றவனின் விரல்கள் ஆதினியின் முக வடிவை அளந்தன.

பொட்டு வைத்த அவன் வட்ட நிலா! ஆதினியின் நெற்றி பொட்டின் மீது ஒரு தீராத ரசனை அவனுக்கு. தன் மேல் இருந்தவளின் நெற்றியில் அழுத்தி முத்தமிட அந்த முத்தத்தை ரசித்தாலும் சட்டென்று எழுந்தவள்,

“இந்த மொட்டை மாடி, வெட்ட வெளி, உங்களுக்கு ரொம்ப பிடிச்ச இரவு எல்லாம் நீங்களே தனியா ரசிங்க. எனக்கு நாளைக்குக் க்ளாஸ் இருக்கு” என்று சொல்லி கீழே ஓடி விட்டாள். அரிச்சந்திரனும் சிறிது நேரம் அந்த இரவை ரசித்தவன் மாடியை விட்டு போனான். அறைக்குள் செல்ல, ஆதினி இன்னும் உறங்கவில்லை.

அரி அவளிடம், “என்னடி இன்னும் தூங்கல?” என்று கேட்டபடி அருகே படுத்தான்.

“யோசிச்சுப் பார்த்தேன்..” என்று ஆதினி சொல்ல,

“என்ன யோசிச்ச?”

“அது அரிச்சந்திரனை தெரிஞ்சிக்கலாம்னு” என்று கண்ணடித்தாள்.

“ஓஹ், எல்லாம் உன்னிஷ்டமா? எனக்கு ஒன்னும் தெரிஞ்சிக்க வேண்டாம்” என்று அவன் பதிலுக்கு சொல்ல ஆதினியோ அவன் கண்களைப் படித்தாள்.

திரும்பிப் படுத்திருந்த அரியைக் கட்டிக் கொண்டவள்,
“நினைத்தால் போதும் வருவேன், தடுத்தால் கூட தருவேன்” என்றபடி அவன் காதோரம் பாடி முத்தமிட, அந்த நெருக்கத்தை அரிச்சந்திரன் தடுக்கவே இல்லை. ஆதினி அப்படி சொல்ல, சட்டென்று திரும்பியவனின் வேகத்தில் ஆதினி தடுமாறி போனாள்.

அரிச்சந்திரனுக்கு ஆதினி மேல் கோபமே இல்லைதான், ஆனாலும் காதல் காயங்கள் தந்தான். ஒருவருக்குள் ஒருவர் கவிந்து போயினர், உள்ளக் களிக்கும் காமத்தை உணர்ந்து களித்தனர், களைத்தனர்.

அரிச்சந்திரனுக்குப் பிடித்தமான இரவு அன்று நீண்டு போனது, ஈரமான முத்தங்களோடு நீளமான இரவு! பிரியங்களின் பரிமாறலாக அத்தனை நாள் பிரிவின் இடைவெளியைத் தீர்க்கும் இரவானது.

அடுத்த நாள் காலையில் ஆதினி அறை வழியே கூசிய சூரியவெளிச்சத்தில் கண் திறந்தாள். சரியாக உறங்காததால் இமைகள் பின்னிக் கொண்டன.

“அய்யோ! புவனா மேம் க்ளாஸ்” என்று பதறி எழ, பார்த்தால் மணி எட்டைத் தொட்டிருந்தது. அரிச்சந்திரனை பார்க்க அவன் குளித்துவிட்டு உள்பனியனும் பேண்ட்டுமாக நின்றான். சட்டையை மாட்ட போக,

“அரிச்சந்திரன்ன்ன்ன்!” என்று மெத்தையில் உட்கார்ந்து கத்தினாள்.

“என்னடி ஆதினீயீயி!” என்ற உல்லாச குரலில் கணவன் மீது காதல் கவிந்தாலும்,

“கிரிமினல்” என்றாள் கடுப்பாக.

“கிரிமினலா?” என்று அவள் முன்னே போய் நின்றவன் அவள் தலையில் கொட்ட வர, அவன் கையைப் பிடித்தவள்,

“இதெல்லாம் நியாயமா? நீங்க மட்டும் கரெக்டா கிளம்பிட்டீங்க. என்னை எழுப்பி விட்டிருக்கலாம்ல. முக்கியமான க்ளாஸ் அரி. ப்ச்” என்றாள் உறக்கம் கெட்ட எரிச்சலில்.

அரியோ அவளின் கோபத்தை ரசித்து கிண்டலாகப் பார்த்தான். அந்த கிண்டல் பார்வை கடுப்பை கிளப்ப, வேகமாக எழுந்தவள்,
“இந்த அப்பா வேற வந்திருப்பாரே, என்ன சொன்னீங்க?” என்று பரபரப்பாகக் கேட்க,

“காலையிலயே கால் பண்ணி நானே உன்னை ட்ராப் பண்ணிடுறேன் சொல்லிட்டேன்” என்றான்.

“இப்போ கிளம்பி, எப்போ போறது அரி? போடா” என்று எரிச்சலாக சொல்லியவள் கடுப்பில் அவன் தோளில் குத்தி விட,

“என்னடி நைட்டு அப்படி பேசிட்டு காலையில வேற மாதிரி பேசுற. குடிகாரன் பேச்ச விட மோசம்” என்று ஆதினியைப் பேசினான். பாத்ரூம் போக சென்றவள் அப்படியே திரும்பி,

“ம்ம், எனக்கு மல்டிபிள் பெர்சனாலிட்டி” என்றவள் “அலார்ம் வச்சேனே, அதையும் ஆஃப் பண்ணிட்டீங்களா?” என்று கேட்க, அரிச்சந்திரன்,

“நல்லா தூங்கிட்டு இருந்தடி, அதான்” என்றான். ஆதினி முறைத்து விட்டு பாத்ரூமினுள் நுழைந்தாள். முக்கியமான வகுப்பு, அடுத்த வாரம் தேர்வுகள் வேறு. இந்த யோசனைகளோடு அவள் குளித்து வந்தாள்.

அரி தயாராகி நின்றான். இவள் வரவும்,
“அந்த க்ளாஸ் பத்து மணிக்கு மேலதானே? இப்போ கிளம்பினா போயிடலாம், ரெடியாகி வா. நான் ட்ராப் பண்றேன்” என்றான். ஆதினியும் அவசரமாக தயாராகி வர, அன்று அரி அவளை கொண்டு சென்று விட்டான். மாலை ஆதினியின் அப்பா அழைத்து வந்து விட, அரிச்சந்திரன் வந்த நேரம் ஆதினி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

“என்னடா, இன்னிக்கு வெள்ளனே வந்துட்ட?” என்று ஆறு மணிக்கெல்லாம் வந்த பேரனிடம் ராமசாமி கேட்க,

“வேலை இல்லை வந்துட்டேன், உன் பேத்தி எங்க தாத்தா. வந்துட்டாளா?” என்றதும்,

“அசதியா இருக்குனு பேத்தி தூங்குதுடா. அப்புறம் நம்ம ராஜாத்திக்கு பழமெல்லாம் வாங்கி கொடுத்துட்டு வாடா, மாசமா இருக்க பொண்ணு நம்மதானே பார்க்கணும்” என்றார்.

“சரி தாத்தா, அதுக்கென்ன? நாளைக்கு வாங்கிட்டு வரேன்” என்றான்.

“நீ டீ குடிச்சியா?” என்று கேட்டவன், அவர் குடித்தேன் என்றதும் அறைக்குள் புகுந்து குளித்து உடைமாற்றி விட்டு ஆதினி அருகே போனான். அவள் அசந்து தூங்குவது தெரிய, அறைக்கதவை மூடி விட்டு வெளியே வந்தான். சீக்கிரமே வந்ததால் ஆதினிக்குப் பிடித்ததாக சமைக்கலாம் என்று நினைத்தான். சூடாக பணியாரமும் காரச் சட்னியும் செய்தான். தாத்தாவிற்கு கொண்டு வந்து கொடுக்க, அவர் வழக்கம் போல்,

“டேய் எனக்கெதுக்குடா இதெல்லாம்? நம்ம ராஜாத்திதான் மாசமா இருக்கா, அவளுக்குக் கொடுத்துட்டு வா” என்றார்.

“இது இட்லி மாவுல செஞ்சது, தாராவுக்கு ப்ரஷா பணியாரம் மாவு அரைச்சு செஞ்சுக் கொடுக்கிறேன்” என்று அரி சொல்லவும் ராமசாமியும் தலையசைத்தார்.

“ஆதினிக்குடா?” என்று அவர் கேட்க,

“பணியாரம் செஞ்சவனை சாப்பிடுனு சொல்றது இல்லை, காலையில போய்ட்டு இப்போதானே பேரன் வரான், அவனை சாப்பிட சொல்லுவோம்னு இல்லைல உனக்கு? ரொம்ப பண்ற நீ” என்றான் கடுப்பாக. ராமசாமிக்கு அரி அப்படி சொல்லவும் உருகிப் போனது.

“சரி சரிடா, சாப்பிடு” என்று அவர் உடனே சொல்ல, அரியோ எழுந்தான்.

“டேய் கோச்சுக்காதடா, சாப்பிடு” என்ற ராமசாமியிடம்,

“கோச்சுக்கல, உன் பேத்தி தூங்கிட்டிருக்கா, சூடா சாப்பிடுவானு செஞ்சேன். எழுப்பிட்டு வரேன்” என்றான். அறைக்குள் சென்று லைட்டை ஆன் செய்தான். மெத்தையில் சென்று சாய்ந்து அமர்ந்தவன்,

“ஆதினி, நைட் தூக்கம் வராது. எழுந்திரு” என்று குரல் கொடுத்தான். ஆதினி நல்ல உறக்கத்தில் இருக்க, இவன் குரல் கேட்கவே இல்லை.

“அடியே ஆதினி! எழுந்திரு, எழுந்திரு ஆதினி, எழுந்திரு” என்று தொடர்ந்து சத்தமிட்டு, அவளை எழுப்பி விட,

கொட்டாவி விட்டவள், கண்கள் சொருக,
“அஞ்சு நிமிஷம்” என்று மீண்டும் கண் மூடிட, அரி அவள் பக்கத்தில் புன்னகையோடு உட்கார்ந்தான். தாரகைக்கு அழைத்தான்.

“சொல்லுடா அரி” என்று தாரகை அழைப்பினை எடுக்க,

“எப்படி இருக்க தாரா? சாப்பிட்டியா?” என்று விசாரித்தான்.

“சாப்பிட்டாச்சு. நீ வீட்டுக்குப் போய்ட்டியா? ஆதினி எப்படி இருக்கா?” என்று கேட்க,

“வீட்லதான் இருக்கேன், அவ டயர்டா இருக்குனு தூங்குறா. இனிமே நீ சீக்கிரம் தூங்கு தாரா, நைட் பத்து மணி ஷோ புவி பார்த்துப்பார்.” என்றான்.

“ஏற்கெனவே அந்த பூமர் தொல்லை தாங்கல, நீயும் எனக்கு ஆர்டர் போடாதடா. அப்படியொன்னும் என்னை பத்தி கவலைப்படாம நான் வேலை செய்ய மாட்டேன்.” என்றதும் அரிக்கு சிரிப்பு.

“என்னடி மாப்பிள்ளையை ரொம்ப கொஞ்சுற?” என்று அரி சிரித்தவன்,

“அப்புறம் நான் செய்த குறும்புனு உன் புருஷன் ஸ்டேட்டஸ் வச்சிருப்பானே?” என்று கிண்டல் செய்தான்.

“டேய் வக்கீல்! வாயை மூடு, ஓவரா கலாய்க்காத” என்று அண்ணனை அதட்டினாலும் தாராவுக்கும் சிரிப்பு.

“மெதுவா சிரிடி” என்று அரி அதட்ட,

“சரி சரி, எனக்கு உன் மீன் குழம்பு சாப்பிடணும் போல இருக்குடா, ஞாயித்துக்கிழமை எனக்கு செஞ்சு தரியா?” என்று ஆவலாகக் கேட்க, அரி உடனே,

“அதுக்கென்னடி, நீ துரை எல்லாரும் வாங்க. இங்கதான் லஞ்ச்” என்றவன் சில நிமிடங்கள் பேசி வைத்தான். அப்போது எதிரே இருந்த சுவரில் பார்வை பதிய, பார்த்தவனுக்கு சிரிப்பு. அருகே இருந்தவளை பார்க்க கண்கள் இரண்டும் கார்குழலுக்கு நடுவே சிரித்தன.

“பிசாசு மாதிரி தூங்குற” என்று அவள் நெற்றியில் முட்டியவன்,

“என்னடி அது?” என்று சுவரை காட்டினான்.

அதில் அரிச்சந்திரன் ஒட்டியிருந்த கார்ல் மார்க்ஸ் படத்தில் இவள் வேறு வாசகத்தை ஓட்டியிருந்தாள்.

‘அன்பு கொண்ட பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மீண்டும் மனிதனாக்குகிறது; ஜென்னி போல் ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன்’ என்று கார்ல் மார்க்ஸ் அவர் மனைவிக்கு
சொன்னதை ஆதினி ‘ஜென்னி’ என்ற இடத்தில் அவள் பெயரை போட்டிருந்தாள். கீழே கார்ல் மார்க்ஸ் பதில் அரிச்சந்திரன் என்று மாற்றிருந்தாள்.

“ஏன் உண்மைதானே?” என்று சோர்வோடு அவன் தோளில் சாய்ந்த ஆதினி கேட்க, அவள் விரல்கள் அரிச்சந்திரனின் அடர்ந்த புருவத்தை வருடி விட்டன.

“நான் ஒன்னுமே சொல்லத் தேவையில்லை, எல்லாமே நீயே சொல்லிக்க” என்று சிரிக்க,

“எனக்குத் தெரியுதே” என்றவளின் குரலில் அவனை உணர்ந்த பெருமிதம் தெரிந்தது.

“உன்னை சாப்பிடத்தான் கூப்பிட வந்தேன், வா” என்று சொல்ல, ஆதினியும் முகம் கழுவி விட்டு வர, சுட சுட பணியாரமும் காரச்சட்னியும் தட்டில் வைத்து அரிச்சந்திரன் கொடுத்தான். கூடவே டீ வேறு!

ஆதினி பசியில் இருந்ததால் ரசித்து சுவைத்து உண்டாள்.

“நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்க அவன் தலையாட்டினான். அரிச்சந்திரனுக்கு மனைவிக்கு செய்வதில் குறையே இல்லை. சிலர் தன்னை யாராவது பார்க்க வேண்டும் என்று நினைப்பர், சிலருக்கு அவர்கள் பார்க்க, நேசிக்க, ரசிக்க ஒருவர் வேண்டும். அரிச்சந்திரன் இரண்டாம் வகை.

உவமையில்லாத ஒருவன் அரிச்சந்திரன்!

ஆதினியைப் பொருத்தவரையில் அரிச்சந்திரனின் இயல்பை இத்தனை நாளில் நன்றாக உணர்ந்து கொண்டாள். புரிதல் அது வர காலமெடுக்கும், ஆனால் பிரியம் அது புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் கொடுக்கும். அது இன்னும் பிடித்தமும் பிடிப்பும் கொடுத்தது.

ஆதினி கணவனின் கைப்பக்குவத்தை ருசித்திருக்க, அரி ஆதினியைக் கொஞ்சம் கவலையாகப் பார்த்தான். அவன் பார்வை உணர்ந்து ஆதினி,

“என்னாச்சு அரி?” என்று கேட்டாள்.

“க்ளாஸ் கவனிச்சியா? எப்படி போச்சுமா?” என்று விசாரிக்க,

ஆதினி, “கரெக்ட் டைமுக்குப் போய்ட்டோமே அரி, கவனிச்சாச்சு.” என்றாள்.

“இன்னும் ஒரு வருஷம்தான், கிட்டத்தட்ட பத்து மாசம், சமாளிப்பதானே?” என்றதும் ஆதினிக்குக் கோபம் வந்தது.

“இன்னொரு வாட்டி ஹாஸ்டல் போ’ன்னு சொன்னீங்கன்னா அவ்வளவுதான் அரி” என்றாள் கடுப்பாக.

“ஏன்டி என்ன சொல்லிட்டேனு இப்போ கத்துற? எத்தன வாட்டி நான் உன்னை ஹாஸ்டல் போக சொன்னேன், நீதான் எப்பவும் போன” என்று அவனும் கோபமாக சொன்னான்.

அரி இப்படி சொல்லவும் ஆதினி உடனே தணிந்தாள்.

“பின்ன நீங்க என்னை பாவமா பார்த்தீங்க, ஹாஸ்டல் போக சொல்லிடுவீங்களோனு பயந்துட்டேன் அரி” என்று அவனிடம் சொல்ல,

“அடுத்தவங்க சொல்றதைக் கேட்கிற பழக்கம் வேற உனக்கு இருக்கா?” என்றான் அரி நக்கலாக.

“அடுத்தவங்க பேச்சைக் கேட்கிறதில்லை, அரிச்சந்திரன் பேச்சைக் கேட்கிற பழக்கம் கொஞ்ச நாளா இருக்கு” என்றாள் ஆதினி மிடுக்காக. இப்படி இருவரும் வாயாட, அரிக்கு அவன் வேலை விஷயமாக அழைப்பு வர அதனை பேச போய்விட்டான்.

இரவு உணவுக்கான நேரம் வர, யாருக்கும் பசியில்லை. ராமசாமி படுக்க சென்றுவிட, இவர்கள் இருவரும் டீவியில் பாடலை ஓடவிட்டு வாசலில் உட்கார்ந்தனர்.

“நெக்ஸ்ட் வீக் எக்ஸாம் வச்சிட்டு இங்க ஏன்டி சும்மா உட்கார்ந்திருக்க?” என்று அரி அவளருகே அமர்ந்து கேட்க,

“அதெல்லாம் படிச்சிப்பேன், இந்த இரவு ரொம்ப அழகா இருக்குல அரி?” என்று கேட்டாள். வானம் அடர் நீலத்தில் இருந்தது.

“இரவு அழகா இருக்கா? இருக்கும், அப்புறம் அரி அழகா தெரிவான்…” என்று அரி ஆரம்பிக்க,

“ஹலோ நீங்க என்ன செல்ஃப் டப்பா ஆகிட்டீங்க? ஆனாலும் அரி அழகுதான்” என்றாள் ஒற்றைக்கையால் அவன் முகத்தை சுற்றி திருஷ்டி எடுத்தபடி.

“என்ன எல்லாம் பண்றடி நீ?” என்று அவளை தன்னருகே இழுத்து அமர வைத்தவன்,

“முதல்ல எதுக்கு கத்தின? சொல்ல வரதை கேட்கவே மாட்டியா” என்று இப்போது அழுத்தமாக கேட்டான்.

“நான் டயர்டா இருக்கேனு நீங்க திரும்ப ஹாஸ்டல் போக சொல்லிட்டீங்கன்னா? காலையில வேற டென்ஷனா போனோம்” என்று ஆதினி சொல்ல,

“போடி அரைடிக்கெட்! இனிமே ஹாஸ்டல் கொடுனு கேட்டா அவனுங்க டீசியே கொடுத்திடுவாங்க. டயர்டா இருக்கியேனு கஷ்டமா இருந்ததுதான், ஆனா ஹாஸ்டல் போக சொல்ல மாட்டேன். என்ன வேலை இருக்கு உனக்கு? உங்கப்பா கரெக்டா ட்ராப் பண்றார், வீட்ல வேலை செய்ய ஆள் இருக்கு, பெரிய கஷ்டமெல்லாம் இல்லை. இதெல்லாம் சமாளிக்கலாம்” என்றான்.

ஆதினியை ஒற்றைக் கையால் அணைத்துக் கொண்டவன் அந்த இரவினை பார்த்தபடி,

“சிலரோட இருப்பு ரொம்ப இயல்பா இருக்கும், ஸ்பெஷலா எல்லாம் தெரியாது. இல்லாம இருந்தாதான் தெரியும், இந்த சூர்யவெளிச்சம் மாதிரி. நிலா, மழை, பனினு எல்லாத்தையும் ரசிப்போம்.”

“பட் சன்ஷைன், ரொம்ப இயல்பானது, தேவையானது கூட. இல்லாம இருக்கிறப்பதான் ஃபீல் பண்ண முடியும். நீ முதல்வாட்டி இந்த வீட்டை விட்டு ஹாஸ்டல் போனப்போ எனக்கு அப்படித்தான் இருந்தது” என்று பல நாட்களாக சொல்ல நினைத்ததைப் பகிர்ந்தான்.

“தாத்தா எப்பவும் சொல்லுவார், என் பேத்திதான் இந்த வீட்டுக்கு அழகுனு. அவர் சொல்றப்போ எல்லாம் அவரோட சண்டை போடுவேன். பட் தாரா போனதும் நானும் தாத்தாவும் தனியாகிட்டோம், என்னால மேனேஜ் பண்ண முடிஞ்சது, என் தங்கச்சி பார்க்கிற தூரத்துல இருக்கிறானு சந்தோஷம்.”

“அப்புறம் நாளு வேகமா போச்சு, நம்ம கல்யாணம், சண்டை, உன் கலாட்டா” என்றவன் நிறுத்தி ஆதினி முகம் பார்க்க, அவள் இவன் பேசுவதை குறுக்கீடாமல் கேட்டிருந்தாள்.

“வீராப்பா உன்னை ஹாஸ்டல் போக சொல்லிட்டேன், ஆனா டெய்லி உன்னை எழுப்பி விட்டு உன்னோட பேசி, நீ இந்த வீடு முழுக்க நிறைஞ்சு போன பின்னாடி உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன்” என்றான் ஆழ்ந்த குரலில்.

“உங்கூட பேச நினைச்சா ராங்கி பேசவும் மாட்ட, போடினு நானும் இருந்துட்டேன்.. அப்புறம் உன் கலாட்டா, நிறைய நடந்துடுச்சு. இப்போ எனக்கு அப்பாவாகுற ஆசை வேற வந்துடுச்சு, ஸோ இனி ஹாஸ்டல் எல்லாம் கிடையாது. வேணும்னா க்ளாஸ்ல தூங்கிக்கோ” என்றதும் ஆதினி அரியைக் கழுத்தோடு இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

பிரியத்தின் வாசனை உணர்ந்தவளுக்கு வார்த்தைகள் தேவை இல்லை! இருந்தும் அரியின் ஒவ்வொரு செயலிலும் உன்மத்தம் ஆகிறவளை இந்த வார்த்தைகள் இன்னும் வசப்படுத்தின.

“ஹே அரைடிக்கெட்! விடுடி, நாளைக்கு புவனா மேம் க்ளாஸ் இல்லையா?” என்று அரி மெல்லிய குரலில் கேட்கவும்தான் ஆதினி நிமிர்ந்தாள்.

✅ End of Episode 33
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 4 weeks ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top