Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 25

அரிச்சந்திரன் கிஷோரிடமிருந்து அழைப்பு வரவும் ஆதினியைப் புன்னகையோடு பார்த்தபடி ஏற்றான். ஆதினி அரியின் தோளில் சாய்ந்திருக்க, கிஷோர் சொன்ன செய்தியில் சட்டென கோபமாக எழுந்தான்.

“என்னாச்சு அரி?” என்று ஆதினி கேட்க,

“அந்த நிரஞ்சன் இடியட் அந்த ப்ரோபஸரை தேடி கண்டுபிடிக்க அசாம் போகப் போறேனு நிக்கிறானாம்.” என்றான் அரி.

அங்கே கல்லூரி விடுதியில் கிஷோரோடு நிரஞ்சன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான். கிஷோர் நிரஞ்சனின் பையை வாங்கி வைத்துக் கொள்ள, கோபத்தில் வேகமாக கிஷோரை தள்ளி விட்டான். கிஷோரிடம் சொல்லியது தவறு என்று புரிய, அதற்குள் அரிச்சந்திரனுக்கு கிஷோர் அழைத்து விட்டான்.

“நீ போனை நிரஞ்சங்கிட்ட கொடுடா” என்று அரி சொல்ல, நிரஞ்சனிடம் நீட்டினான். அவன் வாங்காமல் கிஷோரை முறைக்க, ஸ்பீக்கரில் போட்டான்.

“என்னடா பிரச்சனை? சும்மா இருக்கமாட்டியா நிரஞ்சன்?” என்று அதட்ட,

“மாமா, எனக்கு ஷெரினை கொன்னவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கணும். பதினைஞ்சு நாளுக்கு மேல ஆகிடுச்சு, இன்னும் அந்த சார் ஊருக்கு வரலன்னா என்ன அர்த்தம்? அவன் எஸ்கேப் ஆக நினைக்கிறான்.” என்று நிரஞ்சன் கோபமாகப் பேச,

“என்ன பசங்கடா நீங்க? யோசிக்க மாட்டியா? நீ அந்த ப்ரோபஸரை பிடிச்சிட்டா எல்லாம் முடிஞ்சிருமா? முதல்ல எதை வச்சு அந்தாளை நீ குற்றவாளினு சொல்ற..? ப்ளட் குரூப் அஹ்? அப்படி பார்த்தா உன் ப்ளட் குருப் கூட மேட்ச் ஆச்சே?” என்று அரிச்சந்திரன் சூடாகக் கேட்க,

“மாமா” என்று நிரஞ்சன் குரல் உயர்ந்தது.

“என்னடா மாமா? நீ போனாலும் என்ன செய்ய முடியும்? அதிக சந்தோஷத்துல, அதிக துக்கத்துல எடுக்கிற முடிவெல்லாம் சரியா இருக்காதுடா. இந்த வாரம் ஷெரின் அப்பா வரேனு சொல்லியிருக்கார், அவர் கேஸ் கொடுத்தா உடனே விசாரிக்க ஆரம்பிச்சிருவாங்க. அது வரைக்கும் கொஞ்சம் மூடிட்டு இருங்கடா!” என்று கடுப்பாக திட்டினான். ஆதினி அரி முன் நின்று கெஞ்சலாகப் பார்த்தாள்.

“பாவம்” என்று சொல்ல, எதிரே நின்றவளின் தலையில் குட்டினான். ஆதினி முறைக்க, அரியோ இன்னும் நிரஞ்சனைப் பேசினான்.

“நீ தப்பா ஒரு ஸ்டெப் வச்சாலும் போலீஸ் கேஸை டைவர்ட் பண்ணிடுவாங்க. கொஞ்சம் பொறுமையா இருடா ப்ளீஸ்.” என்றதும் நிரஞ்சன் அமைதியாக இருக்க,

“நீ எதுவும் மாட்டிக்க கூடாது, அதான் நான் இவ்வளவு சொல்றேன். உங்களுக்கு இது புதுசு, நான் இது மாதிரி பார்த்திருக்கேன், போலீஸ் என்ன செய்வாங்கனு நான் சொல்லணுமா, ஜர்னலிஸம் படிச்சவங்க தானே நீங்க?”

“நீ இதுல எது செஞ்சாலும் உனக்கு எதிரா போக கூட வாய்ப்பு இருக்கு நிரஞ்சன். ஒன்னு புரிஞ்சிக்கோ, ஷெரினைப் பார்க்கிறதுக்கு முன்னாடி உனக்கு ஒரு வாழ்க்கை இருந்தது. அதை மாதிரி அவ இல்லனாலும் உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்குடா. தயவு செஞ்சு எதையாச்சும் செஞ்சு மாட்டிக்காத! ஷெரின் மாதிரி பொறுமையா யோசிங்கடா. எல்லாம் அவசரம்” என்றான் ஆதினியை முறைத்தபடி.

நிரஞ்சன் ஒரு வழியாக “சாரி மாமா, என்னால முடிஞ்சதை செய்யணும்னுதான்” என்று சொல்ல,

“உன்னால செய்ய முடியறப்ப நானே உன்னை செய்ய சொல்லுவேன் டா” என்றான் அரிச்சந்திரன். நிரஞ்சனிடம் பேசி வைத்தவன் ஆதினியைப் பார்த்தான்.

“என்னடி பார்க்கிற? அவனுக்கு சொன்னதுதான் உனக்கும்.” என்ற அரியிடம்,

“இந்த டொமஸ்டிக் வயலென்ஸ் எல்லாம் தப்பு, சும்மா சும்மா மண்டையில குட்டு வைக்கிறீங்க?” என்று ஆதினி முகம் சுருக்க,

“ஆமா, நான் குட்டி வீங்கிப் போச்சு பாரேன்” என்று சொல்லி உதடு மடித்து சிரித்தவன் ஆதினியின் கன்னத்தைக் கிள்ளினான். ஆதினி கடுப்பாக, அவன் தோளில் குத்த, அரி சிரிப்போடு,

“எனக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்கு, போய்ட்டு வரேன்” என்று சொல்லி கிளம்பினான்.

“கிடாவெட்டு இருக்கே, வந்துடுவீங்களா?” ஆதினி கேட்க,

“அவ்வளவு நேரம் ஆகாது, வந்திடுவேன். இல்லைனாலும் நீ முன்னாடி தாராவோட கிளம்பி போ, நான் நேரா கோவிலுக்கு வரேன்” என்று சொல்லிவிட்டு போனான்.

மாலை அரிச்சந்திரன் வீட்டு வாசலில் பேச்சுக்குரல் கேட்க, ராமசாமி தாத்தா,
‘என்ன சத்தம்?’ என்று எட்டிப் பார்த்தார். வெளியே சென்ற அரிச்சந்திரன் அப்போதுதான் வண்டியை நிறுத்தினான். அவன் அத்தை கமலாவோடு சத்தமாகப் பேசினான்.

ராமசாமியைப் பார்க்கவும், அவரின் தம்பி மகளான கமலா,
“பார்த்தியா பெரியப்பா உன் பேரனை? என்னை பேசுறான்” என்று அரிச்சந்திரனுக்கு அத்தையான கமலா அவனை குற்றம் சாட்டினார்.

ஆதினியும் வாசலுக்கு வர, அரி கமலாவைப் பார்த்தவன்,
“இங்க பாரு அத்த, பறிச்ச வரைக்கும் போதும். கொஞ்சம் வைனு சொன்னா பஞ்சாயத்து பண்றியா நீ?” என்று முறைத்தான்.

“போடா, எங்கண்ணா இருந்திருந்தா செடியே கொடுத்திருப்பார். ரொம்ப பண்றடா, என் மருமக எல்லாம் இப்படி இல்லை..” என்று பொறுமினார். உண்மையில் கோபமாக எல்லாம் பேசவில்லை. அண்ணன் மகன் என்ற உரிமையில் வம்பிழுத்தார்.

“உன் மருமக வீட்டுக்குப் போ, அங்க உன் கொழுந்தனார் பூந்தோட்டம் வச்சிருப்பார். போய் செடி, கொடினு எல்லாத்தையும் பறிச்சிக்க.” என்று அரி கிண்டலாக சொல்லிவிட்டு வீட்டினுள் நுழைந்தான்.

“என்னாச்சு கமலா?” என்று ராமசாமி விசாரிக்க,

“அது ஒன்னுமில்ல பெரியப்பா, இன்னிக்கு அந்திக்கு மதுர வீரன் கோவில்ல கிடாவெட்டு இருக்குல்ல, அதுக்கு போவ பூ பறிச்சேன்.”

“ஏன்டா, கமலா பூ பறிச்சதுக்கா பேசின?” வாசலில் இருந்து ராமசாமி குரல் கொடுக்க,

“ஒரு ஆளுக்குப் பறிச்சா பரவாயில்ல, உன் மக ஊருக்கே பறிச்சா? நம்ம வீட்டுல பொண்ணு இல்லையா?” என்று கேட்டவன் அறைக்குள் சென்றான்.

“அதானே? எங்க வீட்ல பொண்ணு இல்லையா? என் பேத்தி பூவுக்கு எங்க போவா? உன் புருஷந்தான் அந்தவார பேச்சு பேசுவானே, பொண்டாட்டிக்கு பூ வாங்கிக் கொடுத்தா என்ன?” என்று ராமசாமியும் பேச, ஆதினிக்கு அவர்கள் பேச்சில் சிரிப்பு வர,

“பெரியம்மா, நீங்க பறிச்சிக்கோங்க. இவங்களாம் சும்மா விளையாடுறாங்க” என்றாள். அவளின் கன்னத்தை தட்டிக்கொடுத்த கமலா,

“என் அண்ணன் மவனை சும்மா வம்பிழுத்தேண்டி, இந்தா சாதிமல்லி வச்சுக்க” என்று அவர் பறித்த மலர்களைக் கொடுக்க,

“பெரியம்மா, நீங்க வச்சிக்கோங்க” என்று ஆதினி மறுத்தாள்.

“எங்கிட்ட இருக்குடி, இங்க பாரு மல்லி பறிச்சிக்கிட்டேன். உனக்கும் சேர்த்துதான் பறிச்சேன், அது தெரியாம அவன் என்னை பேச, நான் அவனைப் பேசினேன். ஆனா பெரியப்பா உன் வீட்டுக்குப் பேத்தி வந்ததும் என்னை பேசுற இல்ல.. உன்னை பார்த்துக்கிறேன்” என்று தன் பெரியப்பாவை மிரட்டி விட்டு போனார் கமலா.

ஆதினி சிரித்தபடி உள்ளே வர, அரிச்சந்திரன் டீஷர்ட், பேண்ட் என்று தயாராக இருந்தான். அவன் உடையைப் பார்த்தவளுக்கு முகம் சுருங்கியது.

“என்னடி பார்க்கிற?” என்று அரி அவளை இழுக்க,

“கோவிலுக்குப் போறோம். வேஷ்டி கட்டுங்களேன்” என்று அவன் தாடையைப் பிடித்துக் கொஞ்சினாள்.

“ஏன்டி, சாப்பிட போறதுக்கு இது போதாதா?” அரி கேட்க,

“ப்ளீஸ்! உங்க ஃபிகருக்கு வேஷ்டி நல்லாயிருக்கும். அட்லீஸ்ட் டீஷர்ட்டுக்கு மேட்சா க்ரே வேஷ்டி கூட கட்டுங்க” என்று ஆதினி சொல்லவும்,

“ஃபிகரா? அது சரி, வேட்டியே கட்டுறேன்” என்றான் அரியும் புன்னகையுடன். ஆதினி அடர் நீல நிறத்தில் ஜரிகை வைத்த புடவை கட்டி, காதில் ஜிமிக்கியைப் போட்டவள் கமலா பறித்து வைத்திருந்த ஜாதிமல்லியைக் கட்டினாள்.

பூவைக் கட்டியபடி, “பெரியம்மா, நம்ம வீட்டுக்கும் சேர்த்துதான் பறிச்சாங்க. சும்மா அவங்களை திட்டுறீங்க?” என்று அரியை ஆதினி குற்றம் சொல்ல,

“பின்ன, தாரா இருந்தப்ப அவ பெருசா பூ வைக்க ஆசை படமாட்டா. இந்த தெருவுல உள்ள எல்லாரும் தாத்தா கிட்ட கேட்டு பூ பறிச்சிட்டு போவாங்க. இப்ப நீ வீட்ல இருக்கப்பவும் அதையே செஞ்சா… அதான் பேசிவிட்டேன்” என்றான்.

அரி கண்ணாடி முன் நின்று, தன் தலைமுடியை சரி பார்த்து,
“சீக்கிரம் ரெடியாகுடி” என்றவன், ஹாலுக்கு வந்து தாத்தாவுக்கு டீவி போட்டு விட்டான்.

“தாத்தா, கதவை சாத்திட்டு பத்திரமா இரு” என்று ராமசாமியிடம் சொல்ல,

“டேய்! நான் பார்த்து இருந்துப்பேன், நீ எனக்கு படத்தை வச்சு கொடு” என்று கேட்டார். ஆதினி தயாராகி வர, இருவரும் வண்டியில் கோவில் சென்றனர்.

அங்கே கோவிலில் கிடாவெட்டு விழா களைகட்டியது. மாலை பூஜை முடிந்திருக்க, அரியும் ஆதினியும் சாமி கும்பிட்டனர். தாரகை குடும்பத்தோடு கோவிலில் நிற்க, ஆதினி அவளிடம் போனாள்.

இளவட்டங்கள் ஒரு பக்கம் பாட்டு போட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பந்தி அப்போதே ஆரம்பமாகியிருக்க, ஆட்டுக்கறி விருந்து கமகமத்தது.

அரி, ஆதினி, தாரகை எல்லாரும் தரிசனம் முடிந்து ஒன்றாக கோவிலில் ஒரு புறம் உட்கார்ந்திருக்க, வெளியே இருக்கும் பெரிய திடலில் விருந்து அமர்க்களப்பட்டது.

‘காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்தில கன்னம் வச்சான்’
என்று ஒலிப்பெருக்கியில் பாடல் ஓட, தாரகையைப் பார்த்தான் அரி.

“டேய் துரை, ஏன் இந்த பாட்டு போடுறார்?” என்று அண்ணனை முறைத்தாள்.

“அதானே? ராஜாண்ணா காதல் மேகங்கள் கவிதை தாரகைனு இல்ல போடுவார்” என்று ஆதினி கிண்டல் செய்ய, அரியும்,
“அதானே?” என்று தங்கையைப் பார்த்து சிரித்தான்.

அடுத்து, “நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பக்கத்துல பட்டுல ரோஜா’ என்று பாடல் ஓட,

“கிடாவெட்டுக்கு வந்துட்டு என்ன பாட்டு போடுறானுங்க பாரு. பேருக்காச்சும் சாமி பாட்டு வருதா?” என்று திட்டிய அரி,

“நீங்க இருங்க, நான் அப்படியே போய்ட்டு எவன் அவன் போக்கிரி பார்த்துட்டு வரேன்” என்று இளைஞர்கள் கூடியிருந்த இடம் செல்ல, ராஜதுரை, சக்திவேல் என்று இவன் உறவுப்பட்டாளம் அங்கிருந்தனர். அரி எழுந்தவுடனே தாரகை ராஜதுரைக்கு அழைத்து,

“கிடாவெட்டுல போடுற பாட்டா துரை இதெல்லாம்?” என்று கணவனை பேச,

“அம்மாடி! நான் இல்லடி, எல்லாம் இந்த சக்தி” என்றதும் தாரகை போனை வைத்தாள்.

சக்திவேலை பார்த்ததுமே அரிச்சந்திரன்,

“டேய் சக்தி! அந்த காக்கி சட்டை நீதானே?” என்று கேட்க சக்திவேல் தலையசைத்து சிரித்தான்.

“முதல்ல நீங்கனு நினைச்சிட்டேன் துரை” என்று அரி சிரிக்க,

“யாருக்குடா பாட்டு போடுற?” என்று அரி சக்திவேலின் தோளில் கைப்போட்டு கேட்டான்.

“அதை கேட்டா எங்க சொல்றான்? எல்லாரும் என்னை வந்து பேசுறானுங்க” என்று ராஜதுரை புலம்ப,

“தம்பிக்காக பேச்சு வாங்கினா தப்பில்ல, நீங்க மட்டும் எத்தனை கல்யாண வீட்ல அண்ணிக்காக பாட்டு போட்டு இருக்கீங்க. அதுவும் சின்ன பசங்க எங்களை எல்லாம் ஏமாத்தி” என்று அரி முன்பே ராஜதுரை காதல் செய்த போது செய்ததை சொல்லிக்காட்ட, விட்டால் சக்திவேல் இன்னும் பேசுவான் என,

“நான் பந்தி பரிமாற போறேன்” என்று ராஜதுரை எழுந்து போய் விட்டான்.

ராஜதுரை சென்றதும் அரி, “நாளைக்கு ஷெரின் அப்பா வரார்டா” என்று சக்தியிடம் சொன்னான்.

“ஓகே மாமா, அவர் இடையில வாபஸ் வாங்காம பார்த்துக்கோங்க.” என்றான். இருவரும் அவரவருக்கு இருக்கும் சந்தேகங்களை எல்லாம் பேச, பேச்சு பேராசிரியர் நிவாஸிடம் வந்து நின்றது.

“அந்த ஆள் மேல வெறும் சந்தேகத்தை வச்சு ஒன்னும் செய்ய முடியாது மாமா, எவிடன்ஸ் இருந்தாதான் அரெஸ்ட் வாரண்ட் வாங்கலாம். பார்ப்போம், எப்படியும் சிக்கிடுவான்” என்று நம்பிக்கையாக பேசினான் சக்திவேல்.

எல்லாரும் ஒரே ஆட்டம் பாட்டம் விருந்து என்று இருக்க, வழக்கம் போல் ராஜதுரை மனைவியை பந்தியில் விழுந்து விழுந்து கவனித்தான்.

பக்கத்தில் இருந்து ஆதினியோ, “நாங்களும் சாப்பிடுவோம், எங்களுக்கும் வைக்கலாம்” என்று ராஜதுரையிடம் சொல்ல,

“நம்ம வீட்டு விருந்துடா ஆதி, நம்மதானே அண்ணியை கவனிக்கனும்” என்று சொல்ல ஆதினி முறைத்தாள். ராஜதுரை விளையாட்டுக்குப் பேசினாலும் எல்லாரையும் நன்றாகவே கவனித்தான். கூடவே சக்திவேலும் பந்தி பரிமாற வர,

“காக்கி சட்டை யாருக்குனு எனக்குத் தெரியுமே?” என்று ஆதினி அவனிடம் கிண்டல் பேச,

“தெரிஞ்சா என்னடி, எனக்கு யாரை பார்த்தும் பயமில்லை” என்றவன்,

“வளருற பிள்ள, இந்தா நல்லா சாப்பிடு” என்று அவள் இலையில் கறி வைத்தான்.

“அத்தாச்சி! இந்த சக்திண்ணன் யாருக்கு அதிகமாக கறி வைக்குது பாருங்க” என்று தாரகையிடம் சொல்ல,

“நீ வேடிக்கை பார்க்காம சாப்பிடுடி, அவன் ஆம்பிளைங்க பந்திக்கு வைக்க போய்ட்டான். உன் ஆராய்ச்சி வேஸ்ட்” என்றாள் சிரிப்புடன். இப்படி யார் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து, உறவுகளோடு பேசி என ஆதினி அன்று சந்தோஷமான, இயல்பான மன நிலையில் இருந்தாள்.

அரியோடு வீடு வரும் வழியில், சக்திவேல் யாரையோ காதலிக்கிறான் என்று தான் கண்டுபிடித்ததை சொல்லி பெருமைப்பட்டு என்று பேசியபடி நுழைய, வீட்டின் வாசல் வரை தாத்தா கேட்கும் பாடல் கேட்டது.

‘அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்’ என்று ஸ்ரீனிவாஸும் சுசீலாவும் சேர்ந்து பாடியது இனிமையாக செவி தீண்டியது.

அரி பாடலை விசில் அடித்தவன் “ஜாலியா பாட்டு கேட்கிற தாத்தா, நேரமாகிடுச்சு வந்து படு” என்று தாத்தாவை அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தான்.

ஆதினி அதற்குள் இருவருக்கும் பால் காய்ச்சி எடுத்து வந்தாள். அரிச்சந்திரன் சட்டையைக் கழட்டி விட்டு உள்பனியனுடன் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருக்க, ஆதினி பாலை நீட்டினாள். அவள் இதழ்களோ பாடலை முணுமுணுத்தது.

“அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஆதினி காத்திருந்தாள்?” என்று அவள் பெயரைப் போட்டு பாட, அரி அவளிடமிருந்து பாலை வாங்கியவன்,

“பழகிடும் அரியின் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்” என்று பதிலுக்குப் பாட இருவரும் இப்படி விளையாட்டாக பாடியபடி பாலைக் குடித்தனர்.

“ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறிவிடும்
இருவர் என்பது மாறிவிடும்
இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும்”
என்று பாட, ஒன்றாய் சேர்ந்து பாடுவது இருவருக்கும் உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. அங்கு இசையை விட, உற்றவரின் இருப்பு இசைவை, இனிமையைத் தந்தது.

ஆதினி பாடி முடித்து சிரிக்க, அரிச்சந்திரன் ஏன் என்று கேட்டான்.

“இல்லை, எனக்கு இன்னிக்கு ஃப்ர்ஸ்ட் நைட் வைப்ஸ் வருது” என்றாள்.

அரி புரியாமல் பார்க்க, “நீங்க வேஷ்டி, நான் புடவை… பால் வேற.. ” என்று சிரிக்க, அரிக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆதினியை சிரிப்போடு இழுத்து அணைக்க, ஜம்மென்று அவன் மேலேயே படுத்துக் கொண்டாள்.

ஆதினியோ, “என்ன இருந்தாலும் எங்கப்பா ப்ளான் பண்ணாம கல்யாணம் பண்ணி எல்லாம் கெடுத்துட்டார், நமக்கு ப்ர்ஸ்ட் நைட் நடக்கல, ஹனிமூன் போகல…” என்று அவன் தோளில் முகம் புதைத்தவள் புலம்பிட, அவள் பேச்சு அவன் ஆவலை உரசி விட்டது. பல நாள் கழித்து நெருக்கம் கேட்டது அங்கம்.

“உன் ஆசையை நிறைவேத்திடவா? நீ புடவை. நான் வேட்டி, பால், அப்புறம் இந்த ஜாதி மல்லி” என்று ஆதினியின் தோளில் தொங்கிய பூவை கையில் பிடித்து ரசித்தபடி மெல்லிய குரலில் கேட்டான்.

அன்றைய நாளின் உற்சாகம், கணவனின் அருகாமை எல்லாம் பிடித்திருக்க அரிச்சந்திரனின் ஆசைப் பார்வை ஆதினியைக் களவாடியது. இவள் ஆசை என்று கேட்டவன் குரலின் ஆசை ஆதினிக்கு புரிந்தது.

அரியோ கன்னம் உரசிட, “என் அரைடிக்கெட் ஆசையை நிறைவேத்திடவா?” என்றவன் இதழ்கள் ஆதினியின் கழுத்தில் அழுத்தமாக பதிய, அவள் கரங்கள் அரிச்சந்திரனை இறுக பற்றின. அவ்வளவுதான்! அரிச்சந்திரன் நிதானம் காணாது போக, கரங்கள் காதல் மொழி பேசின.

அந்த தூங்கா இரவில் ஆதினிக்கும் அரிச்சந்திரனுக்கும் ஆசைப்போர்!

*******************

சொன்னது போலவே ஷெரின் தந்தை தாமஸ், சனிக்கிழமை கேரளாவிலிருந்து வந்தவர் புகார் கொடுத்தார்.

ஷெரினின் தந்தை தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அவள் மன அழுத்தத்தில் இல்லையென்றும் சொல்லி மீண்டும் விசாரிக்க கேட்டார்.

முதலில் பல்கலைகழக நிர்வாகம் அவரிடம் பேசி சரி கட்ட பார்க்க, அவர் மறுத்து விட்டார். எஸ்.பியும் பேசி பார்க்க, ஷெரினின் தந்தை தாமஸ் விடுவதாக இல்லை. அவரும் கோட்டயத்தில் பெரிய ஆள் தான். அவர் தந்தை ஜோசப் மணப்புரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஷெரின் தந்தையும் இப்போது கட்சியில் பதவியில் இருப்பவர்.

அதனால் வழக்கை விசாரிக்க சொல்லி தஞ்சாவூர் எஸ்.பிக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. சக்திவேல் மீண்டும் விடுதி சென்று தடயவியல் நிபுணர் துணையுடன் நன்றாக விசாரிக்க, ஷெரீனை அவள் படுக்கைக்கு அருகே இருந்த இடத்தில் கொன்று, பின் மேஜை அருகே நகர்த்தியது தெரிய வந்தது.

ரத்தத் தடம் எல்லாம் தண்ணீர் கொண்டு துடைக்கப்பட்டிருப்பது லூமினால் பயன்படுத்தி மீண்டும் சோதித்து பார்த்ததில் தெரிய வந்தது. ஆனால் ஷெரினின் ரத்தம் தவிர இந்த முறை வேறு கிடைக்கவில்லை.

அதில் சக்திக்கு கோபம். அரிச்சந்திரனை போன் செய்து திட்டினான்.

“முதல்லயே பார்க்காதது உங்க தப்பு. இப்போ குறை சொல்றதை விட்டு உன் போலீஸ் அறிவை இப்போ யூஸ் பண்ணுடா” என்று அரி சீண்டி விட்டான்.

“அதெல்லாம் எங்களுக்கு தெரியும் லாயர் சார்” என்றான் சக்தி கடுப்பாக.

சக்திவேல் ஷெரின் வழக்கை தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தான். யாரும் எதிர்ப்பாராத வகையில் சக்திவேல் நிரஞ்சனை ஷெரின் வழக்கில் குற்றவாளி என்று கைது செய்தான்.

அரிச்சந்திரனுக்கு சக்திவேலின் இந்த செயலில் அதிர்ச்சி! உடனே சக்திவேலுக்கு அழைக்க, அவன் அழைப்பை எடுக்கவில்லை.

‘ப்ளடி போலீஸ்’ என்று அரிச்சந்திரன் பல்லைக் கடித்தான்.

✅ End of Episode 25
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 1 month ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top