Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 39

இரவு 39(நிறைவு)

“SAY NO TO DRUGS”

“போதை எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்” என்று மாணவர்கள் கோஷங்களை எழுப்பியபடி திருவாரூரின் பிரதான வீதிகளில் வலம் வந்தனர்.

ஆதினிக்குப் படிப்பு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன, வாழ்வில் நோக்கம் என்று ஒன்றிருக்க சலிப்பு என்பது குறைவாக இருக்கும் அல்லவா? ஆதினி பொறுப்பு வேண்டும் என்பதற்காக யுனிவர்சிட்டி தேர்தலில் நிற்க நினைத்தாள். ஆனால் அதைவிட நிறைய பொறுப்பான செயல்கள், நோக்கங்கள் இருந்தன, கல்லூரி முடிந்த பின்னும் தொடரும் செயல்களாக அவை இருக்க விரும்பினாள்.

இதோ இன்று ‘உலக போதை பொருள்’ விழிப்புணர்வு நாள். அதற்கான பிரச்சாரத்தில் கல்லூரி மாணவர்களை வைத்து ஒரு தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய பேரணியில் கலந்து கொண்டிருந்தனர் ஆதினியும் அவள் நண்பர்களும். இவர்கள் ஊர்வலமாக நடக்க, அங்கு போலீஸ்காரர்களுடன் ஏதோ பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருந்தது.

“என்ன பிரச்சனைடா? சார்கிட்ட என்ன கேட்கிறாங்க?” ஆதினி அவசரமாக தன்னருகே நின்ற கிஷோரிடம் கேட்டாள்.

“அதான் நிரஞ்சன் கூடவே நிக்கிறானே. அவன் பார்த்துப்பான், போன டைம் பண்ணின மாதிரி முன்னாடி போய் நின்னு, நீங்க எந்த ரூல்ஸ்னாலும் என் ஹஸ்பண்ட் கிட்ட பேசுங்கனு போன, பிச்சிடுவேன்” என்று திட்டினான்.

ஆதினி இப்போதெல்லாம் சின்ன பிரச்சனைகளில் எல்லாம் தலையிடுவது இல்லை, எல்லாம் பெரிய பிரச்சனைகள்தான். எங்காவது காவல்துறையோ, வேறு யாரோ சட்டத்தை மீறினால்,

“இந்த லா எல்லாம் உங்களை விட என் ஹஸ்பண்ட்க்கு தெரியும், அவர் வருவார். பேசுங்க இன்ஸ்பெக்டர்” என்று போன மாதம் மது ஒழிப்பு போராட்டம் நடந்த போது அங்கிருந்தவர்களோடு ஆதினிக்கு சண்டை. அரிச்சந்திரன் வந்து பேசி எல்லாம் சரி செய்தான்.

ஷெரின் வழக்கில் அவளின் முயற்சி பெரிதும் உதவியிருக்க, நார்கோடிக்ஸ் சிறப்பு அதிகாரி சிரஞ்சீவி வரப்ரசாத் அவளை தனியே அழைத்துப் பாராட்டியிருந்தான். அவர்கள் கல்லூரியில் இதற்கென்றே தனி பிரிவு இருக்க, போதையில் ஈடுப்பட்டிருந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர்.

பள்ளி, கல்லூரிகளில் தங்களால் முடிந்தளவு போதையின் தீமைகளை எடுத்துக் கூறினர். போதை என்பது எத்தனை ஆபத்தானது, அதன் சிறு அளவு கூட பெரும் விளைவை ஏற்படுத்தும் என்று புரிய வைக்க முயன்றனர். போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போலத்தான் நடத்தப்பட வேண்டுமே தவிர அவர்கள் குற்றவாளிகள் இல்லை.

‘அடிக்ஷன்’ என்பது மோசமான நோய், அதிலிருந்து மீள உதவ வேண்டும் என்றனர்.

நிரஞ்சனை வாழ்க்கை நிறைய மாற்றி விட்டது. ஷெரினை மறக்க முடியாமல் தவித்தாலும், அவள் இருந்தால் என்ன செய்வாளோ, அவளின் ஆசைகளை, கனவுகளை, கொள்கைகளை சுமந்தான். அவளோடு இருப்பது போல் உணர்வை தருவது அதுதான். அவனுக்குப் பிரியம் வைத்திருந்த பாதை அது!

வெயில் அன்று அதிகமாக இருக்க, ஆதினி கிஷோரிடம்,
“டேய்! எனக்கு டயர்டா இருக்கு, ஜூஸ் வாங்கிட்டு வரியா?” என்று கேட்க அவனோ முறைத்தான்.

கிஷோர், “உனக்கு ரொம்ப கொழுப்புடி, நானும் உன்னோட தான் நடக்குறேன், இன்னும் ஒன் ஹவர் இருக்கு. தியாகம் தான் உன்னை உயர்த்தும் டோலி” என்றான் கிண்டலாக.

“போடா பன்னாட! அரி அப்பவே சாப்பிட்டு போனு சொன்னார், நாந்தான் லேட்டாச்சுனு வந்துட்டேன். நண்பன் இருக்கானு நினைச்சா… பரதேசி” என்று திட்டினாள்.

அவனோ கண்டுகொள்ளாது “போதைப்பொருளை ஒழிப்போம்!” என்று கோஷமிட, ஆதினியும் முறைத்தபடி அவனோடு இணைந்து கத்தினாள். சில நிமிடங்கள் கடந்திருக்கும், ஆதினிக்கு முடியவில்லை. அப்படியே நடு ரோட்டில் மயங்கி சரிய, அருகே இருந்த நிரஞ்சன் அவளைப் பிடித்துக் கொள்ள, கிஷோர் பயந்து விட்டான்.

“இவ அப்பவே பசிக்குதுனு சொன்னாடா, நான் சமாளிச்சிருவானு நினைச்சிட்டேன்” என்று பதறியபடி தண்ணீர் தெளிக்க, அவளிடம் அசைவில்லை. நிரஞ்சனும் கிஷோரும் அவர்கள் ஆசிரியரிடம் சொல்லிவிட்டு ஆதினியை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

கிஷோருக்குப் பயமாக இருக்க, அரிக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டான்.

“இவ ஒரு வேள சாப்பிடாம இருந்தாலே சாஞ்சுடுவாளாடா?” என்று கேட்டபடி மருத்துவமனையில் காத்திருக்க, ஆதினிக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டு அவள் கர்ப்பமாக இருப்பதை சொல்ல, நண்பர்கள் இருவருக்கும் ஒரே மகிழ்ச்சி. அரிச்சந்திரன் ஆதினி மயங்கிய செய்தி கேட்டு, ‘இவளை… சாப்பிடாம இருந்து சாதிக்கபோறா’ என்று அரிச்சித்தபடி வந்தான்.

அவன் அலைந்து டென்ஷனில் வர, கிஷோரும் நிரஞ்சனும் வாசலில் நின்றவர்கள் அரியைப் பார்க்கவும்,
“மாம்ஸ்” என்று கட்டிக் கொண்டனர்.

“டேய்! தடிமாடுங்களா! என்னை விடுங்கடா” என்று அரி அதட்ட அவர்கள் விடாமல் இருந்தனர்.

“அவ முழிச்சிட்டாளா?” என்று கேட்க, “அதெல்லாம் கன் மாதிரி இருக்கா” என்றதும் அரி பெருமூச்சு விட்டான்.

“டேய் பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? ஆதினி கூட இப்படி பிடிச்சதில்ல, விடுங்கடா” என்று சொல்ல கிஷோரும் நிரஞ்சனும் அரியைக் கிண்டலாகப் பார்த்தனர்.

“அரிச்சந்திரன்னு பெயர் வச்சிட்டு பொய் சொல்லாதீங்க மாம்ஸ்” என்று கிஷோர் வம்பிழுக்க, அவனை முறைத்தவன் ஆதினி எங்கிருக்கிறாள் என்று கேட்க,

“எங்களை மாமா ஆக்கினதுக்கு தேங்க்ஸ் மாம்ஸ்” என்று இருவரும் கத்த, அரிக்கு ஒரு நொடி நம்ப முடியவில்லை. பின் அவனையும் வெட்கம் லேசாய் சூழ, புன்னகையை இதழுக்குள் புதைத்தபடி ஆதினியைக் காண சென்றான்.

“என்னடி சொன்னது செஞ்சிட்ட போல..?” அரி ஆதினி அருகே உட்கார்ந்து புன்னகையோடு கேட்க, ஆதினிக்கு சந்தோஷம் தாளவில்லை.

“ஆதினி சொன்னா செஞ்சிடுவா!” என்றாள் பெருமையாக.

“நமக்கும் குட்டி பாப்பா அரி” லேசாய் கண்கள் கலங்க சொன்னாள். இந்த புது உணர்வு நெஞ்சள்ளிப் போனது, குழந்தையைப் பார்க்காமலே பிரியம் பூத்தது தாய்க்கு.

பிரியங்கள் எத்தனை புதிதாக, புதிராக இருக்கின்றன?

அரிக்குமே கொஞ்சம் வித்தியாச உணர்வு, அவன் உலகில் புதிய வரவு! அவனை முழுதாக நம்பி வரப்போகும் உறவு. ஆதினியின் கன்னத்தைப் பற்றியவன் முத்தமிட்டு,
“அரைடிக்கெட் அம்மாவாகப் போறா” என்றான் செல்லமாக. ஆதினி கண்கள் சுருங்க உதடு கடித்து சிரித்தாள்.

அரி, “வீட்டுக்குப் போய்ட்டு எல்லாருக்கும் சொல்லலாம்” என்றான். ஆதினி வேகமாக தலையாட்டினாள்.

வீடு சென்று ராமசாமி அருகே உட்கார்ந்த அரி, “தாத்தா, நீ மறுபடியும் கொள்ளுத்தாத்தா ஆகப்போற” என்று சொல்ல,

“என்னடா சொல்ற நிசமாவா?” அவர் அரியின் கைகளைப் பற்றியபடி கேட்டார். அவரின் சுருங்கிய கைகளை வருடியவன்,

“நிஜமாத்தான், இப்பவாச்சும் என்னை நல்ல பேரன்னு ஒத்துக்கிறியா?” அரி தாத்தாவிடம் வம்பு வளர்க்க,

அவரோ அரியின் தாத்தாவாகிற்றே?
“எல்லாம் என் பேத்தியோட சாமர்த்தியம்” என்றதும் அரி விழிக்க, ஆதினியோ வாய்விட்டு சிரித்தாள்.

*********************

அரேபிக் கடலின் அலைகளின் ஓசை செவியை நிறைக்க, அடர்த்தியான இருளை சுமந்திருந்தது இரவு. இரு ஜோடி கால்கள் மெல்ல அலையை நோக்கி நடந்தன.

“அவசியமானதை அழகா பண்றதுல நீங்கதான் பெஸ்ட் அரி” என்று அரியின் கரத்தோடு கரம் கோர்த்தபடி மணலில் கால் புதைய நடந்தாள் ஆதினி.

அவளின் மேட்டர்னட்டி கவுன் காற்றில் ஆட, அரி அவளுக்கு பொருத்தமாக வெண்ணிற குர்த்தா அணிந்திருந்தான். ஆதினிக்கு தேனிலவு செல்லவில்லை என்ற கடுப்பு கொஞ்சம் அரி மீது இருக்க, இதோ அவள் கொஞ்சமும் நினைக்காத வகையில் அவளை ‘பேபிமூன்’ அழைத்து வந்திருந்தான்.

“ஹனிமூன் போறது எதுக்கு ஊரை சுத்தவா? இல்லையே? நம்மை சுத்திப் பார்க்கத்தானே?” என்றதும்,

“பேச்சை பாரு, ஒரே கில்ஃபான்ஸ்” என்று ஆதினி அவன் கையில் கிள்ளி விட்டாள்.

“உண்மையை சொல்றேன்டி, எல்லாரும் ஒரு ப்ரைவசி வேணும்னு போவாங்க. நம்ம வீட்ல அது இருக்கு, ஆனா குழந்தை வரப்ப லேடீஸ்க்கு நிறைய மூட் ஸ்வீங்க்ஸ் இருக்கும், கூடவே உனக்கு என் மேல இவன் சாப்பிடுறான், ஈசியா தூங்குறானு காண்டு இருக்கும், வீட்ல இருந்தா இன்னும் டயர்டா இருக்கும். இப்படி புதுசா இடம் வந்தா மனசு ரிலாக்ஸாகும், உனக்கும் உன் ப்ரக்னென்சியை எஞ்சாய் பண்ண முடியும். ஏதோ என்னால முடிஞ்சது” என்று ஆதினியைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

இந்த பிரத்யேகமில்லாத பிரியம் ஆதினிக்கு எப்போதும் வியப்பைத் தரும், பிரியத்தின் வார்த்தையாய் இன்றி வடிவாக இருப்பான் அரிச்சந்திரன். எப்போதும் அவள் நினைப்பது போல் அன்பின் வானம் அரிச்சந்திரன்!!!

‘எந்த இலைகளும் காற்றைப் பிடித்து வைத்துக்கொள்ளவில்லை,
எந்தக் காற்றும் இலைகளில் தங்கிப்போகவும் இல்லை.
ஆனால் அங்கே காதலுக்கொரு குறைவுமில்லை’ என்ற தேவதேவன் கவிதை அரிச்சந்திரனும் ஆதினியும்.

அரி சொன்னது போல் ‘உப்பாக’வே இருந்தான். திகட்டாமல் தேவையாய் ஒரு காதல், நேசம். உண்மையில் அந்த வார்த்தைகள் கூட அவர்களின் வாழ்க்கையில் கிடையாது, பெரிய சுவாரசியங்கள் கிடையாது. அவர்களிடையே இயல்பில் விரியும் இயற்கை பிரியம் மட்டுமே!

இருவரின் கால்களும் கடலைலையில் நனைந்தன. காற்றும் கடல் அலையோடு அவர்களை சந்தித்துப் போனது. சிறிது நேரம் கடலில் கால் நனைத்தவர்கள் அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டின் அறைக்கு வந்தனர்.

பால்கனி வழியே இரவினை ரசித்துக் கொண்டிருந்தான் அரிச்சந்திரன். ஆலாப்புழாவின் அழகு அவனை கொள்ளையிட்டது. அவன் ரசிகையோ அவனை கண்களவு செய்து நின்றாள்.

இருள், அலை, இரவு என்று மூன்றும் சங்கமித்திருக்க, மனம் அமைதியாக உணர்ந்தது.

இரவினை ரசித்துக் கொண்டிருந்தவன் முன் ஆதினி நிற்க,

“என்ன ஆதினி” என்று அரி கேட்க,

“கால் வலிக்குது அரி” என்றாள் தரையில் மெல்ல உட்கார்ந்தபடி. இப்போது ஐந்து மாதமாகிறது அவளுக்கு.

அவள் காலைப் பற்றி தன் கால் மேல் வைத்து அழுத்தி விட்டவன் சொடக்கெடுக்க, அவள் வலியில் அவனை முறைத்தாள். அரி மேல் சாய்ந்து, அவள் செல்போனை எடுத்து பாடலை ஒலிக்க விட்டாள். உடன் சேர்ந்து அவளும் பாடினாள்.

‘இந்த முகம் எனது வானில்
சந்திரன் அன்றோ
இது எடுத்து சொல்லும் வார்த்தை
எந்தன் மந்திரம் அன்றோ?’

“என்னடி இன்னிக்கு இரவை திருட ப்ளான் பண்ணிட்டியா?” என்று அரி அவள் பொட்டிட்ட நெற்றியை ஆசையாக வருட, ஆதினி அவனின் புருவங்களை வருடினாள்.

“எனக்கே எனக்குன்னு எழுதின லைன்ஸ் இது, இந்த முகம் என் வானில் சந்திரன் தான், என் அரிச்சந்திரன், ஆதினியோட அரிச்சந்திரன்” என்றாள் காதலாக.

“அடடா! ஆதினி அழகா பேசுறா” என்று அரி மனைவியை ரசிக்க, இன்னும் ஆயிரமாயிரம் இரவுகள் அவர்கள் ரசிக்க காத்திருக்கின்றன!!

‘எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம் ஆஹா ஹா…..ஆ….’
என்று பாடல் போல் அவர்கள் இன்பம் இரவோடு நீளும்!

✅ End of Episode 39
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Mrs Beena loganathan Reader 3 weeks ago

காயங்களை

காற்றிடம் ஒப்படைத்து
கைகளை
ஒருவருக்கொருவர்
கோர்த்துக் கொண்டனர்....

கானலாய் தெரிந்த
வாழ்க்கை,
காவியமானது....

காதலின் இசையில்
இரவுகள் இனித்தன.

காலத்தின் பரிசாய்
புதிய வரவு மலர
இல்லறம்
வசந்த காலமாய்
வாசம் வீசியது....

"இரவுகளை திருடிய காதல்...
இதயங்களை என்றும்
இணைத்துவிட்டது."
❤️ 2 more...
Pavithra Narayanan 3 weeks ago

Happy that you enjoyed ☺️

Srichitra Reader 3 weeks ago

Super story ma. எத்தனை முறை படித்தாலும் அலுக்காது.

❤️ 1 more...
Pavithra Narayanan 3 weeks ago

Thank you ma ☺️

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top