Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 30

“இவ்வளவு விஷயம் நடந்திருக்கு, ஆனா நம்ம முதல்ல இதை சூசைட்னு நினைச்சிட்டோம்ல” ஷெரின் வழக்கின் திருப்பங்களை ஆதினியின் வீட்டில் இருந்த தொலைக்காட்சியில் பார்த்தபடி சொன்னான் கிஷோர். அவர்கள் பல்கலைக்கழகத்தில் விசாரிக்க வந்த போதே அர்ஜூன் பற்றிய செய்தி தெரிந்திருக்க, அரிச்சந்திரனை பார்க்க வந்து விட்டான்.

இப்போது அரிச்சந்திரனும் நிரஞ்சனை வெளியே கொண்டு வந்து விட்டான், அவனுக்கு எதிரான சாட்சியங்களும் இல்லை என்பதாலும் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாலும் நிரஞ்சன் விடுவிக்கப்பட்டான். நிரஞ்சன் வீட்டிற்கு சென்று விட, ஆதினி, கிஷோர், அரி மூவரும் நடுவீட்டில் உட்கார்ந்திருந்தனர். கிஷோரின் பேச்சுக்கு,

“மீடியா உண்மையை சொல்றதை விட வித விதமா கதைதானே சொல்றாங்க” என்றான் அரிச்சந்திரன். அவனுக்கு காலையிலிருந்து அலைச்சல், களைப்பாக உணர்ந்தான்.

“ஆதினி, டீ வேணும்” என்று கேட்க, அவன் முகம் பார்த்தவள் உடனே சென்று மூவருக்கும் டீ போட்டு வந்தாள்.

ஆதினியிடம் பேச்சில்லை, தன் தோழிக்கு என்னவெல்லாம் நடந்திருக்கிறது. எதுவும் தனக்கு தெரியவில்லை, காப்பாற்ற முடியவில்லை என்ற உணர்வில் மூழ்கியிருந்தாள்.

“நீங்க சொல்றது ரைட் மாமா! எப்படி எல்லாம் டிசைன் டிசைனா கதை சொல்றானுங்க. யார் இறந்தாலும் அதுல உள்ள உண்மையை விட எந்த சேனல் சுவாரசியமா சொல்றானு ஆகிடுச்சு. எல்லா இடத்திலயும் கேமரா, விட்டா ஆவிங்களை கூட இண்டர்வீயு எடுப்பானுங்க போல… கொஞ்சம் கூட இரக்கம், எம்பதி இல்லை.” என்று கிஷோர் பொரிந்து தள்ளினான்.

“எப்படி அரி முன்னாடியே இதெல்லாம் நோட் பண்ணாம விட்டாங்க” ஆதினி வெகு நேரம் கழித்து கணவனிடம் கேட்டாள்.

“சூசைட்னு க்ளோஸ் பண்ணிட்டா எல்லாருக்கும் வேலை மிச்சமில்லையா? இருக்கவங்க மேல பழி போடுறதை விட இறந்தவங்க மேல போடுறது ஈசி! அண்ட் சக்திக்குத் தெரியாம அந்த எஸ்பி, டி.எஸ்பி எல்லாம் நிறைய மறைச்சிட்டாங்க.” என்று அரி சொல்ல,

“எங்கிட்ட எதாவது சொல்லியிருந்தா இப்படி நடக்க விட்டிருக்க மாட்டேன்ல…” ஆதினி தேம்பினாள். அரி அவளை தோளோடு அணைத்து,

“உனக்குத் தெரிஞ்சிருந்தா நீ விட்டிருக்க மாட்டதான், ஏன் ஷெரினுக்கே டவுட் வந்திருந்தா பாதுகாப்பா இருந்திருப்பா. ப்ச், அது நம்ம கையில இல்ல ஆதினி! அழாத” என்று தேற்றினான்.

“எப்படி மாமா இப்போ கண்டுபிடிச்சிருப்பாங்க? அந்த டி.எஸ்.பி இதுல சம்மந்தப்பட்டிருக்கானு எப்படி தெரிஞ்சிருக்கும்?” என்று கிஷோர் கேட்க,

“அது எனக்கும் தெரியலடா, சக்தியைக் கேட்கணும். ஷெரின் கொஞ்ச நாள் ஆதினி லேப்டாப் யூஸ் பண்ணினா இல்லையா? அதுல எதாவது இருக்கானு பார்த்தா அவ ரிசர்ச் டாபிக் ‘ட்ரக்ஸ்’. அக்சுவலி அட்டாப்ஸீ ரிப்போர்ட்’ல ஷெரின் பாடில ட்ரக்ஸ் இருக்குனு இருந்தது. நான் உங்ககிட்ட சொல்லல, அதை விசாரிச்சப்ப அவளை கொன்ன வெப்பன்’ல ட்ரக் இருந்தது தெரிஞ்சது, சோ கொலைகாரன் ட்ரக் எடுக்கிறவனு ஒரு அங்கிள்’ல யோசிச்சு சக்தி கிட்ட சொன்னேன்” என்றான் அரிச்சந்திரன்.

“அப்போ நிவாஸ் சார் மேல தப்பே இல்லை?” என்று ஆதினி கேட்க,

“ஆமா, அவர் ஷெரின்கிட்ட கோவமா பேசினது எல்லாம் இந்த விஷயத்துல சீரியஸா இருக்க வேண்டாம்னு அட்வைஸ் பண்ணத்தான். அவர் இன்வால்வ் ஆன காரணம் கூட அஸ்ஸாம்’ல போதை மருந்து கடத்தல் அதிகம், பார்டர்னால நாலு நாடுகள்’ல இருந்து அங்க சப்ளை ஆகுது. நிவாஸோட ஊர்ல நிறைய பேர் இதனால பாதிக்கப்பட்டிருக்காங்க”

“அதனாலதான் ஷெரின் இதை பத்தி ரிசர்ச் பண்றேனு சொன்னதுக்கு அவர் எங்கரேஜ் பண்ணியிருக்கார், இதெல்லாம் அவர் அஸ்ஸாம்ல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி சக்தி கிட்ட சொல்லியிருக்கார். அவரோட மரணமும் உண்மையில ஆக்சீடெண்டா இல்லை கொலையானு தெரியல..” என்று அவருக்காக வருத்தப்பட்டான் அரி.

ஒவ்வொன்றாக விளங்க, புரிந்தது என்று மகிழ முடியாமல் வருத்தமே எஞ்சியது.

“எப்படி மாமா? ஒரு ஸ்டூடண்ட்டுக்கு இவ்வளவு தைரியம் வந்துருக்கு, அதுவும் ஹாஸ்டல்ல வச்சு கொலை பண்ற அளவுக்கு..?” என்று கிஷோர் கொதித்தான்.

கிஷோரின் தோளில் தட்டிக் கொடுத்த அரி, “எல்லாம் போதைடா, அது அறிவை மழுங்கடிச்சு யோசிக்க விடாதே!” என்று கசப்பாக சொன்னான்.

“பாவம் ஷெரின், அந்த ஸ்ரேயா ஒரு பொண்ணுதானே? அவளும் இதுக்கு உடந்தையா இருந்திருக்கா” என்று ஆதினி கோபத்தில் கைகளை இறுக்கமாக மடக்கினாள். கண்கள் சிவந்திருக்க, அப்படியே அந்த அர்ஜுனையும், ஸ்ரேயாவையும் அடிக்கும் வெறி!

“போதையில இருக்கவங்க மதம் வந்த மிருகத்தை விட மோசம். நம்மால முடிஞ்சது இதுதான், அட்லீஸ்ட் ஷெரின் சாவுக்குனா உண்மையான காரணம் கிடைச்சது! அவ ப்ரண்ட்ஸா அவளோட ஆசையை, கனவை நீங்க நிறைவேத்தணும்! இப்படி கோவப்படக் கூடாது” என்று பொறுமையாக எடுத்து சொன்னான்.

ஆனால், அதை அப்போது கேட்கும் பொறுமை எல்லாம் இருவருக்கும் இல்லை. அமைதியாக இருந்தனரே தவிர உள்ளம் மட்டும் கொதித்தது. கிஷோர் சிறிது நேரத்தில் கிளம்பி விட, ஆதினி பேசவே இல்லை. தொலைக்காட்சியில் ஷெரின் கொலை வழக்கை பற்றிய செய்தியே அன்று பேச்சாக இருக்க, அதனையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

ஷெரினோடு இருந்த நிகழ்வுகள் நினைவுகளாக உலா போக, இனி பார்க்கவே முடியாதா அவளின் ஷெரினை என்று வெம்பினாள். அதுவரை கொலைகாரனை கண்டுபிடிக்க வேண்டும் என்று உந்துதலில் அழுகைக்கு இடம் கொடுக்காது இருந்தவள் இப்போது அழுது கரைந்தாள்.

அரிச்சந்திரனும் ஆதினியை அவள் போக்குக்கு விட்டான். இரவு பத்து மணிக்கு அரி வீட்டு கதவை அடைக்க போக, காக்கி உடையில் வந்து நின்றான் சக்திவேல்.

“என்னடா இந்த நேரம் இங்க நிக்கிற?” என்று கேட்ட அரியின் கைகள் கேட்டைத் திறக்க,

“நாங்க என்ன சில பேர் மாதிரி காலையில போனா சாயங்காலம் வர வேலையிலா இருக்கோம்? போலிஸ் லாயர் சார், போலீஸ்!” என்றான் கெத்தாக.

“கெத்தா நீ இப்போ சொல்லிக்கலாம்டா, கேஸ் எப்படி போகுது?” என்று விசாரிக்க,

“டி.எஸ்.பி, எஸ்.பி எல்லாரையும் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க, நார்கோடிக்ஸ்ல அவங்க மேல போதை பொருள் கடத்தலுக்கு ஹெல்ப் பண்ணினதா கேஸ் ஃபைல் பண்ண போறாங்களாம். ஏடி.எஸ்.பி பரத்வாஜ் சொன்னாரு மாமா” என்று வாசலில் நின்றபடியே சக்தியும் அரியும் பேசினார்கள். அரி இன்னும் வராததைக் கண்டு ஆதினி வெளியே வந்தாள்.

சக்தியைப் பார்த்தவள் வேகமாக அவர்களிடம் ஓடினாள்.

“தேங்க்ஸ் சக்திண்ணா” என்றாள் மூச்சு வாங்க.

சக்தி அரிச்சந்திரனிடம் காட்டியது போல் கெத்தாக இல்லாமல் தங்கையிடம் சாதாரணமாகவே புன்னகை செய்தான். அரிக்கும் சக்திக்கு இது வெறும் வழக்காக இருக்கலாம், ஆனால் ஆதினிக்கு அவள் தோழியல்லவா?

“எப்படிண்ணா கண்டுபிடிச்சீங்க? வெறும் ப்ளட் சாம்பிள் வச்சா?”

“அதுதான் மத்த க்ளூவை தேடி போக வச்சது, உன் லேப்டாப்’ல இருந்த ஷெரினோட ப்ராஜெக்ட் விஷயம். நிவாஸ் சொன்னது, ஷெரினோட செல்போன் லோகேஷன் ஹிஸ்டரி, அவளோட பேங்க் பாஸ்புக் ஹிஸ்டரி எல்லாம் நோண்டி பார்த்து கனெக்ட் பண்ணினதுல ஒவ்வொண்ணா மாட்டிடுச்சு” என்றான்.

“டி.எஸ்.பியை எப்படிடா கண்டுபிடிச்ச?”

“அந்தாள் தேவையில்லாம கேஸ்ல இன்வால்வ் ஆனான், அட்டாப்ஸி ரிப்போர்ட்ல டவுட் வரமாதிரி இருந்த எதையும் அவன் விசாரிக்காம டிரைக்டா சூசைட்னு கேஸை க்ளோஸ் பண்ண சொன்னான், எல்லாம் டவுட் கொடுத்தது. சரினு அவனோட போன் லோகேஷன் ட்ரேஸ் பண்ணினா அவனும் நாகராஜனோட குடோனுக்கு போயிருக்கான், ஷெரினோட லோகேஷனும் அங்க இரண்டு முறை காட்டிச்சு. நிவாஸ் ஷெரின் கொடுத்த வீடியோவை அவர்கிட்ட காட்டி இப்படி நடக்குதுனு சொல்ல, டி.எஸ்பியோ அதை வச்சு நாகராஜன் கிட்ட பணம் வாங்கியிருக்கான்”

“முன்னாடியே கூட கண்டுபிடிச்சிருக்கலாம் மாமா, நான் தேவையில்லாம நிவாஸை டவுட் பட்டுட்டேன். அந்த அர்ஜூன் பி.எச்.டி ஸ்டூடண்ட் கொஞ்சமும் ஷெரினோட சம்மந்தமில்லாதவன், அதனால நான் அவங்களை எல்லாம் ஒமிட் பண்ணிட்டேன். நிரஞ்சன் கூட பேசின பின்னாடிதான் ஷெரின் இந்த பசங்ககிட்ட பேசினது தெரிஞ்சது” என்று சக்தி சொல்ல,

ஆதினி,
“இந்த பசங்க கூட பேசினதுக்குதான் நிரஞ்சன் அன்னிக்கு அவ்வளவு கோவப்பட்டான் போல.. இல்ல அரி?” என்று முன்பு நிரஞ்சன் இவளிடம் சொன்னதை கேட்க அரி தலையசைத்தான்.

“ஷெரின் அப்பா கிட்ட பேசினதுல அவ ஷார்ட் ஃப்லிம் எடுக்க கேமரா வாங்கணும் சொல்லி ஒரு லட்சம் வாங்கி ட்ர்க் வாங்கியிருக்கா. அப்போதான் அவ மேல அர்ஜுனுக்கு நம்பிக்கை வந்து, நாகராஜன் குடோன் கூட்டிட்டு போவான்ன்னு”

“எப்படிடா? கொலை செய்ற அளவுக்கு.. இந்த போதை எவ்வளவு மோசம்?” என்று அரி கோபமாகக் கேட்க,

“போதை மட்டுமில்ல மாமா, பயம்! எங்க மாட்டிக்குவோமோனு பயம், அவன் லைஃப், அவன் லவ்வர் லைஃப் எல்லாம் போயிடும்ன்ற பயத்துல இப்படி பண்ணிட்டானாம். சங்கர் வேற அந்த பொண்ணு டி.எஸ்பி வரைக்கும் போயிட்டானு நல்லா ஏத்தி விட்டிருக்கான். ஷெரின் இல்லன்னா இது வெளியே தெரியாது நினைச்சு பண்ணியிருக்கான்.”

“அர்ஜுன் லவ்வர் அந்த பொண்ணு கொலை செஞ்ச டைம்ல கூட ட்ரக் எடுத்திருக்கா, அவளோட ரூம்ல இருந்த கத்தி அது. அதனாலதான் அதுல ட்ரக் ட்ரேஸ் இருந்திருக்கு, அந்த டீலர் சங்கர் நிறைய பணம் கொடுத்திருக்கான், காலேஜ் பசங்களை வச்சே சப்ளை பண்ணினதால சந்தேகம் வரல. இப்போ எல்லாரும் ஸ்டேட்மேண்ட் கொடுத்துட்டாங்க. அந்த சங்கர் மட்டும் பேசாம இருக்கான், அவனை சிரஞ்சீவி சார் நாளைக்கு பார்க்கிறேன் சொல்லிட்டார். கண்டிப்பா அவங்களுக்கு தண்டனை கிடைச்சிரும்” என்றான் சக்தி நம்பிக்கையாக.

அரிச்சந்திரன் சக்தியின் முதுகில் தட்டிக் கொடுத்து, “நீ நல்ல போலீஸ்தான்!” என்று சொல்ல,

“அது எனக்குத் தெரியும், கோர்ட்ல கேஸ் வரப்ப நீங்க நல்ல வக்கீல்னு ப்ரூவ் பண்ணுங்க. வாயெல்லாம் அங்க காட்டுங்க” என்று நக்கல் செய்தான். ஆதினி இந்த கிண்டல் பேச்சு கேட்டு கூட அமைதியாகவே இருந்தாள். சக்தி கிளம்பி விட, அறைக்கு வந்த ஆதினி அரிச்சந்திரனிடம்,

“நான் நல்ல ப்ரண்ட் இல்லையா அரி? ஏன் இவ்வளவு பெரிய விஷயத்தை ஷெரின் எங்கிட்ட சொல்லல, சொல்லியிருந்தா நான் எதாவது செஞ்சிருப்பேன்ல” என்று அவன் தோளில் சாய்ந்து சின்னக் குரலில் கேட்டாள்.

“அட ஆதினி! ஒரு விஷயம் சொல்லாம இருந்தா ப்ரண்ட்ஷிப் இல்லைனு அர்த்தமா? சொல்லியிருந்தா நீ என்ன செஞ்சிருப்ப? அந்த பசங்களை மாட்டி விட்டிருப்ப, ஷெரினோட விருப்பம் அது இல்ல, அவளுக்கு பசங்களை இப்படி செய்றவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கத்தான் எண்ணம், இல்லைன்னா டைரக்டா ட்ரக் யூஸ் பண்றாங்கனு யுனிவர்சிட்டியில சொல்லியிருக்க மாட்டாளா? அது தெரியாம அந்த அர்ஜுன் இப்படி செஞ்சிட்டான்.”

“ட்ரக்ஸ் அண்ட் இல்லீகல் வெப்பன் கடத்துறது நாட்டுக்கு ஆபத்து, அதனால அதை பொறுப்பா நிவாஸ் சார்கிட்ட சொல்லியிருக்கா. கெட்ட நேரமா இல்ல கெட்டவங்களோட நேரமோ இப்படி ஆகிடுச்சு. ஷெரின் மர்டர்’ல டவுட்னதும் நீ என்ன செஞ்ச எங்கிட்ட கூட ஷேர் பண்ணாம நீயே விசாரிக்க நினைச்சியே, அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டதும் ஆதினிக்குப் புரிந்தது.

நிச்சயம் ஷெரின் மாணவர்களின் எதிர்காலம் கருதி சொல்லியிருக்க மாட்டாள். ஆனால் ஆதினி அதிரடியாக எதாவது செய்திருப்பாள்.

அடுத்த ஒன்றரை மாதத்தில் ஷெரின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது. எல்லாரும் அன்று காலை பதட்டமாகவே இருந்தனர்.

✅ End of Episode 30
How did you feel about this episode?
❤️ 2 🔥 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 4 weeks ago

Nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 4 weeks ago

போதை தடுக்கப் புறப்பட்ட

பேதை உயிர் பறிபோனதே ஏன்....

பாதகம் செய்பவர் வாழ்ந்திருக்க
பாவம் செய்திடாத 
பெண் வீழ்ந்ததே ஏன்....

பார்க்கும் கண்கள் பதைபதைக்க
பாசம் கொண்டோர் பரிதவிக்க....
பாதுகாக்கச் சென்ற உயிருக்கு
பரிசாய் மரணம்தான் கிடைக்க வேண்டுமா....

பாதகம் விதைத்த கரங்களுக்கு சட்டம்
பரிசாக மரணத்தை தருமா.....

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top