Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 34

அன்றிரவு வீட்டுக்கு வந்த அரிச்சந்திரனுக்கு அப்போதுதான் இரண்டு நாள் முன் தாத்தா சொன்னது நினைவில் வந்தது.

“ப்ச்” என்று அறைக்கு வந்தவன் அப்படியே தலையில் கை வைத்து படுத்துக் கொண்டான்.

ஆதினி அமைதியாக படித்துக் கொண்டிருந்தவள் இவன் சத்தத்தில் திரும்பி பார்க்க, அரியின் முகம் வாடியிருந்தது. புத்தகத்தை மூடியவள், அவனருகே சென்று உட்கார்ந்து,

“என்னாச்சு அரி?” என்று விசாரித்தாள்.

“ஒன்னுமில்லை, நீ போய் படி” என்றான்.

“என்னனு சொல்லுங்க” என்று ஆதினி விடாது கேட்க,

“அது தாத்தா தாராவுக்குப் பழம் வாங்கிக் கொடுக்க சொன்னார், அவரும் இரண்டு நாளா சொல்லிட்டே இருக்கார். வீட்டுக்கு வந்தாதான் ஞாபகமே வருது ஆதினி, டெய்லி மறக்கிறேன். நாந்தானே அவளுக்கு செய்யணும், அம்மா வேற இல்லை. தாராவை துரை நல்லா கவனிச்சாலும் அவளுக்கு நான் செஞ்சா தனி” என்று வருத்தமாக சொன்னான்.

அரிச்சந்திரன் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்பவன், தங்கைக்கு என்றில்லை, தாத்தாவுக்கு, ஆதினிக்கு என்று எல்லாரையும் எப்போதும் கவனத்தில் வைப்பவன். சரியாக செய்பவன், இப்போது தங்கைக்காக செய்ய நினைத்ததை மறந்தது அவனை வாட்டியது. எப்போதும் சரியான நேரத்தில் சரியானதை செய்து கொண்டே இருக்க முடியாதே. அவன் வேலையில் மறந்து விட, அதற்கும் வருந்தினான் அரிச்சந்திரன்.

ஆதினிக்கு அரிச்சந்திரனை சட்டென புரிந்தது, திருணமாகி ஒரு வருடமாகி விட்டது, அவன் சொல் செயல் எல்லாம் அவளால் கிரகிக்க முடிந்தது, ரசிக்க முடிந்தது.

அரிச்சந்திரன் படுத்திருக்க, அவனருகே சென்று படுத்த ஆதினி, அரியின் அடர்த்தியான புருவங்களை ஒற்றை விரலால் நீவினாள்.

“ஆதினி, போ” என்று அவன் கையை தட்டி விட, அவளோ,

“என்ன அரிச்சந்திர மகாபிரபு ஓவரா பண்றீங்க? எல்லாம் எப்பவும் பெர்ப்ஃபெக்டா செய்ய முடியாது. அப்புறம் தாத்தா இன்னிக்கு சாயங்காலம் சொன்னார், நான் அப்பாவோட அத்தாச்சிக்கு பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கி கொடுத்துட்டேன்” என்றதும் அரியின் விழிகள் விரிந்தன.

“ஹே! அரைடிக்கெட்? நிஜமா?” என்று அவன் புன்னகையோடு கேட்க,

“பாசமலர் இப்போதான் பல்லைக் காட்டுறார்” என்று அவன் கன்னத்தை கடித்து வைத்தாள் ஆதினி.

அரிச்சந்திரன், “அடியே! விடுடி.” என்று அவன் கத்த, அவளோ விட்டால்தானே? நன்றாக அவனை கட்டிக் கொண்டு அப்படியே கண்மூடி கிடந்தாள்.

இன்னும் ஒரு வாரம் தேர்வுகள் இருக்கின்றன. காலையில் சீக்கிரம் எழுவது, இரவில் விழித்து படிப்பது என்று ஆதினி மிகுதியான சோர்வு, அரிக்கும் அடுத்த மாதம் முழுவதும் கோர்ட் விடுமுறை என்பதால் நிறைய வேலைகள் இருந்தன. அவரவர் வேலைக்கே நேரம் சரியாக இருக்க, பேச்சு நெருக்கம் எல்லாம் குறைவே. இன்று அரி சீக்கிரம் வந்திருக்க, ஆதினிக்கு கூச்சம் அவிழ்ந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

காதல் அரியின் அணைப்பைக் கேட்டது, அணைப்பின் கதகதப்பைக் கேட்டது. ஆதினியின் செயலில் அரி தான் தடுமாறினான்.

“ஒழுங்கா எந்திரிச்சு ஓடு, படி” என்று அதட்ட,

“சும்மா இரண்டு நிமிஷம் அமைதியா படுத்துட்டு போயிடுவேன், இவ்வளவு நேரம் உம்முனு இருந்த மாதிரி இப்போ கம்முனு இருங்க. ரிலாக்ஸா இருக்கணும் அப்போ அப்போ, இல்லை படிச்சிட்டே இருந்தா மூளை கரைஞ்சிடும், அதுவும் ஓவர்டைம் பார்க்க கூடாது! அண்டர்ஸ்டாண்ட்?” என்று ஆதினியும் அவனை போலவே அதட்டல் தொனியில் கேட்டாள்.

“சரிடி” என்றவன் இதழ்களில் புன்னகை அப்படியே உறைந்திருந்தது.

ஆதினி சிறிது நேரம் படுத்திருந்தவள், எழுந்து கொண்டாள். அரியும் உடன் எழ,

“கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அரி, சும்மா ஓடிட்டே இருக்க கூடாது, பிஸியா இருக்கறது கூட ஒரு வகை அடிக்ஷன், சும்மா இருக்கக் கத்துக்கோங்க. இன்னிக்கு வேலை முடிஞ்சு சீக்கிரம் வந்தா அமைதியா படுங்க.” என்று கட்டளையிட்டாள்.

“என்ன ஆதினி ஒரே ஆர்டர்ஸா இருக்கு?” அரி புருவம் உயர்த்திக் கேட்க,

“பின்ன, உங்களுக்கு இதெல்லாம் யாராச்சும் சொல்லணும்தானே? ஆறு மாதிரி ஓடணும், பொறுமையா ஆனா ஓடிட்டே இருக்கணும். அது சில இடத்துலதான் வேகம் கூட்டும், அந்த இடத்துல வெள்ளம் வந்துடும். ஸோ பொறுமையா எல்லாம் செய்யலாம். இப்ப நான் சாப்பிட எடுத்துட்டு வரேன், சாப்பிட்டு சும்மா படுங்க” என்று ஆதினி அக்கறையில் சொல்ல, அரியோ அவள் பேச்சைக் கேட்கவில்லை.

எழுந்து அவளை நாற்காலி அருகே நகர்த்திக் கொண்டு போனவன், “எக்ஸாம் இருக்கு, நீ படி. என்னை அப்புறம் கவனிக்கலாம்” என்றவன் அறையின் கதவை சாற்றி செல்ல, ஆதினியோ உள்ளிருந்து கத்தினாள்.

“ஆயிரம் பெரியார் வந்தாலும் உன்னையெல்லாம் திருத்த முடியாது அரிச்சந்திரன்..” என்று கத்த, வெளியே கேட்டிருந்த அரிக்கு சிரிப்பு. வண்ணதாசன் வர்ணிப்பது போல் ஈறு தெரிய சிரித்தான்.

ஈறு தெரிய சிரிப்பவர்கள் தனி அழகுதானே??

“சிரிக்காதீங்க அரி” என்று ஆதினி இவன் செயலை உணர்ந்து, அறைக்குள் இருந்தே மீண்டும் கத்த,

“படிடி!” என்றவன் அதட்டலிலும் புன்னகை பூசியிருக்க, ஆதினிக்கு கணவன் சிரிப்பு கற்பனையில் விரிய, உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுக்க, அது தந்த ஊக்கத்தில் படிப்பில் கவனம் செலுத்தினாள். இரவு உணவுக்கு ஆதினி வெளியே வரும் வரை, அரிச்சந்திரன் அறைக்குள் போகவில்லை.

இரவு உணவுக்கு வந்தவள், “அரிச்சந்திரன் யார் பேச்சையாவது கேட்டுட்டா இந்தியா சீக்கிரம் வல்லரசாகிடுமே?! அதெல்லாம் செஞ்சுட்டா எப்படி? நினைச்சதை மட்டும் செய்வேனு அடம்” என்று அவள் பல்லைக் கடித்தாள்.

“சொல் பேச்சு கேட்கிறதைப் பத்தி யார் பேசுறது?” அரி நக்கலாகக் கேட்டான்.

“திருமதி. ஆதினி அரிச்சந்திரன் ஆகிய நாந்தான் பேசுறேன், ஏன் உங்க பேச்சை நான் கேட்டதில்லையா?” என்று சண்டைக்கு வந்தாள்.

“அடியே! நெக்ஸ்ட் மந்த் கோர்ட் லீவ், அதுக்குள்ள சில கேஸ் வேலையெல்லாம் இருக்கு, அதான் செஞ்சேன். நான் ரெஸ்ட் எடுக்கிறேன், நீதான் விடியறதும் தெரியாம படிச்சிட்டே இருக்க” என்றான்.

“அய்யே! போங்க” என்று திட்டிவிட்டு அவள் படிக்க போய் விட, எப்படியோ அவள் தேர்வுகள் எல்லாம் முடிந்து விட்டது.

ஆதினி இப்போது இரண்டாம் ஆண்டில் இருந்தாள். அன்று காலையில் அரிச்சந்திரன் அவளை கல்லூரியில் விட்டு சென்றான். வகுப்புகள் தொடங்கியிருக்க, அப்போதுதான் கிஷோர் வந்தான். அதனை பார்த்து ஆதினி நிரஞ்சனுக்குக் கண்காட்ட, இருவருக்கும் நண்பனை கண்டு சிரிப்பு.

“இதான் க்ளாஸ்க்கு வர நேரமா?” என்று அவனை பேராசிரியர் திட்ட,

“சார், மழை வந்துடுச்சு. துணி துவச்சு காயப் போட்டு வர லேட் ஆகிடுச்சு” என்றதும் வகுப்பே சிரித்தது.

“மழை வரப்ப ஏன்டா துணி துவச்ச? இங்க இருக்க ஹாஸ்டல்ல இருந்து வர உனக்கு இவ்வளவு நேரமா?” என்று திட்ட,

“சார், நான் துணி துவச்சாலே மழை வரும் சார். நான் துவச்சிட்டு இருக்கும் போது வந்துடுச்சு சார்” என்றான் பாவமாக.

“உன்னையெல்லாம் ஹாஸ்டல்ல இருந்துட்டு லேட்டா வர” என்று திட்டியவர் வெளியே மழை அடித்து ஊத்தியதால் அவனை வகுப்புக்குள் அனுமதித்தார்.

இப்படி மெல்ல மழை நேரத்தில் நச நசப்போடு வகுப்புகள் நடந்து கொண்டிருக்க, பல்கலைக்கழகத்தின் பிரசிடெண்ட் தேர்வு பற்றி அறிவிப்பு வர, ஆதினிக்கு தான் இந்த தேர்தலில் முன்னிற்க வேண்டும் என்ற எண்ணம் முன்னின்றது. அவள் நண்பர்களும் ஊக்குவிக்க, ஆதினி முடிவில் மாற்றமில்லை.

அதனை வீட்டில் வந்து அரிச்சந்திரனிடமும் பகிர, அவனோ அதனை எதிர்த்தான். ஆதினி நிச்சயம் அதனை எதிர்ப்பார்க்கவில்லை. ஏமாற்றங்கள் தானே கோபம் தருகின்றன, ஆதினியும் கோபப்பட, அரிச்சந்திரனும் சளைக்காது அவன் முடிவில் மாற்றமின்றி இருந்தான்.

ஆதினி வீட்டுக்கு வந்த அரிச்சந்திரனிடம்,
“எங்க யுனிவர்சிட்டி பிரசிடெண்ட் எலெக்ஷன்ல நான் நிக்க போறேன் அரி” என்றதுமே அரி முகம் சுருக்கினான்.

உடனே, “இதெல்லாம் வேண்டாம் ஆதினி” என்று மறுத்தான். ஆதினிக்கு மறுப்பு சொன்னால் பிடிக்குமா? உடனே பொங்கி விட்டாள்.

“நான் உங்களை பெர்மிஷன் கேட்கல அரி” என்றாள் கடுப்பாக. சில நாட்களாகவே ஆதினிக்கும் அரிக்கும் வாழ்க்கை சலிப்பாகத்தான் சென்றது. அதுவே ஆதினியை எரிச்சலாகப் பேச வைத்தது. அரிச்சந்திரனுக்கும் அதேதான்!

ஆதினி இப்படி பேசி விட, அவனுக்கும் கோபம்.
“என்னடி அதப்பா?” என்றான்.

“பின்ன, நான் செய்றேன் சொல்றேன். வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்?”

“வேண்டாம்னு சொன்னா வேண்டாம்னுதான் அர்த்தம்” என்று அழுத்தமாக சொன்ன அரிச்சந்திரன்,

“பார்த்தியா நான் நோ சொன்னாலே உனக்கு அக்செப்ட் பண்ண முடியல, இதே எலெக்ஷன்ல நின்னு தோத்துட்டா, ஜெயிச்சிட்டா கூட நம்ம சொல்றதை எல்லாரும் கேட்பாங்கனு கிடையாது. இந்த வருஷம் மட்டும் காலேஜ் போக போற, ஜாலியா படி, எஞ்சாய் பண்ணு. இந்த எலெக்ஷன், பதவி, பொறுப்பு எல்லாம் தேவையில்லாத டென்ஷன். அதனால தேவையில்லாத வெறுப்பெல்லாம் சம்பாதிக்கணும்.” என்று சொல்ல,

“எப்பவும் உங்க பேச்சைக் கேட்கணும்னு நீங்க நினைக்கிற மாதிரியா?” என்று கேட்டு அவனை வெறுப்பேற்றினாள்.

“போடி! என்னத்துக்கு நீ என் பேச்சை கேட்டு இருக்க, உன்னிஷ்டம்தானே? என்னமோ பண்ணிக்க, எங்கிட்ட வந்து சொல்லாத!” என்று அரி எரிச்சலாக சொல்லி விட்டு அறைக்குள் புகுந்தான்.

✅ End of Episode 34
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 3 weeks ago

Nice 

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top