Episode 19
ஆதினிக்கு அந்த ரத்தக்கறை பார்த்ததிலிருந்து பல கோணத்தில் யோசனை போனது. இதுவரை ஷெரினின் மரணம் தந்த அதிர்வில் இருந்தவள், அதனை ஆராயவில்லை. இப்போது இந்த புது துணியில் ரத்தம், அதுவும் முதல் நாள் போட்டதில்?
தங்கள் விடுதி அறையை மனக்கண்ணில் கொண்டு வந்து யோசித்தாள். ஷெரின் ‘ஸ்டடி டேபிள்’ அருகே இருக்கும் நாற்காலியில் அல்லவா இறந்து கிடந்தாள். அதிலிருந்து மெத்தை கொஞ்சம் தள்ளி இருக்குமே, அங்கிருந்து ரத்தம் தெறிப்பது என்றால்? இவள் பார்த்த போது மெத்தை, கட்டிலருகே உள்ள தரை எங்கும் ரத்தம் இல்லையே, அங்கில்லாத ரத்தம் பெட்ஷீட்டில் எப்படி வந்தது?? ஒருவேளை இது ஷெரினின் ரத்தமாகக் கூட இருக்கலாம். ஆனால் அப்படியில்லாமல் வேறு ஒருவரின் இரத்தமாக இருந்தால்?
ஆதினிக்கு என்னவோ இடறியது. அறிவின் திசையில் பயணிக்க, பலவாறான யூகங்கள். அந்த துணியை ஓரமாக எடுத்து வைத்தவள், போனை எடுத்து சிலதை தேடினாள். கிஷோருக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பினாள். சில பொருட்களை அனுப்பி, இதனை வாங்கிக் கொண்டு வா என்றவள் யாரிடமும் சொல்லாதே என்றாள்.
இந்த ரத்தம் பார்க்க, கிட்டத்தட்ட இருவாரம் முன் ஷெரினிக்குக் கையில் அடிப்பட்டது நினைவில் வந்தது. ஊருக்கு சென்றவள் ஏதோ ஆக்சிடெண்ட் என்றாள். இப்போது இவளின் யூகத்துக்கு அதுவும் வேகம் கொடுக்க, உடனே ஷெரினின் அம்மாவுக்கு அழைத்தாள்.
ஆதினி ஷெரின் அம்மாவிடம் ஆறுதலாக பேச, அவரும் சிறிது நேரம் அழுதவர் பின் வருத்தமாக பேசினார். ஷெரின் அப்பாவை விசாரிக்க,
“லாயர் வந்திருக்கார் ஆதி, அச்சன் அவர்ட்ட பேசுறார்” என்று ஷெரின் அம்மா சொல்ல,
“லாயர் எதுக்கு?” என்று ஆதினி விசாரிக்க, கோட்டயத்தில் உள்ள அவர்களின் பரம்பரை வீட்டின் பங்கு சம்மந்தமாக வழக்கு நடப்பதாகவும், அது குறித்த பேச்சு என்றார். அவள் ஊருக்கு வந்தபோது நடந்த விபத்து கூட இதற்காகத்தான் என்றார்.
“எங்களுக்கு அவ ஒரே மகள் இல்லையா? அவளுக்கு வீட்ல பங்கு கொடுத்தா, நாளைக்கு பையன் வீட்டுக்குப் போயிடும், இவங்களாம் உரிமை கொண்டாட முடியாதுன்னு ஷெரின் அச்சனோட ரொம்ப சண்டை.. ஷெரினோட பெரியப்பா பையன் மோசஸ், அவன் மச்சான் பீட்டர். ஷெரின் லாஸ்ட் டைம் லீவ்ல வந்தப்ப, பைக்ல போன ஷெரினை வம்பு செஞ்சு வண்டியை இடிச்சு அவளை கீழ விழ வச்சான், எண்ட மகளை கஷ்டப்படுத்தி.. இன்னிக்கு ஒரேயடியா அவ போயி..” என்றார் அழுகையுடன்.
ஆதினிக்கு இந்த சொத்து விஷயம் இடித்தது. ஷெரின் அம்மாவிடம் இன்னும் சிறிது நேரம் பேசி போனை வைத்தாள். ஆதினிக்கு வீட்டில் இருந்தால் தன்னால் ஒன்றுமே கண்டுபிடிக்க முடியாது என்று உறுதியாக தோன்றியது, அவளின் யூகங்கள் சரியா தவறா? தன் தோழிக்கு நடந்தது என்ன என்று தெரிய வேண்டுமானால் அவள் கண்டிப்பாக விடுதிக்குப் போக வேண்டும்.
அரிச்சந்திரனிடம் எதுவும் தெரியாமல், தன் யூகங்களை சொன்னால் ஒத்துக்கொள்வானா தெரியவில்லை. முதலில் இவள் எதையாவது கண்டுபிடித்தால் மட்டுமே மற்றவரிடம் பகிரலாம். ‘நானே தானே வந்தேன், நானே ஹாஸ்டல் போகிறேன்’ என்றால் அரி ஒன்றும் சொல்ல மாட்டான் என்று நினைத்தாள் ஆதினி.
தேவையானவற்றை எடுத்து வைத்தவள், அரிச்சந்திரனுக்காக காத்திருந்தாள். அன்று மாலை நான்கு மணி போல் அவன் வீடு வந்தான். உள்ளே நுழையும் போதே,
“மத்தியானம் வெளியே சாப்பிட்டேன் ஆதினி, நைட் உன் சமையல் டேஸ்ட் பண்றேன்” என்றபடி அறைக்குள் நுழைந்தான். அவன் குளித்து உடைமாற்றி வர, ஆதினி டீ போட்டு வைத்தாள். தாத்தா மதிய உறக்கத்தில் இருக்க, ஆதினி அரி வெளியே வரவும் டீயை நீட்டினாள்.
“தேங்க்ஸ்” என்றபடி வாங்கியவன் டீவியை ஆன் செய்து விட்டு, சோஃபாவில் உட்கார்ந்து டீயைப் பருகினான்.
ஆதினி வெளியே போவது போல் உடை அணிந்திருக்க,
“எங்க போக ப்ளான்?” என்று கேட்டான்.
“நான் ஹாஸ்டல் போறேன். இப்போ நான் ஒகே அரி” என்று புன்னகை முகத்தோடு சொல்ல, அரிச்சந்திரன் முதலில் ஒரு நொடி ஆதினியைப் பார்த்தவன், பதில் பேசாது டீயைக் குடித்து முடித்தான். மேஜையில் டம்ளரை வைத்துவிட்டு,
“இப்போ சொல்லு” என்றான்.
“நான் இப்போ ஓகே, ஸோ ஹாஸ்டல் போறேன்” என்றாள் மீண்டும்.
“ஆதினி! நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ, நீ இனிமே ஹாஸ்டல் போக போறது இல்லை. வீட்ல இருந்து டெய்லி காலேஜ் போற, புரிஞ்சதா?” என்றான். அழுத்தமாக அவன் குரல் வர ஆதினி அதிருப்தியாக பார்த்தாள்.
“அரி, ஏன் இப்படி சொல்றீங்க? நான் நல்லா இருக்கேன்” ஆதினி பொறுமையாக சொல்ல, அரிச்சந்திரனுக்கு அவள் பேச்சில் அளவின்றி கோபம்.
நேற்று இவள் பதறிக்கொண்டு வந்தது, தன்னை பயத்தில் அணைத்துக் கொண்டதெல்லாம் பார்த்த பின் அவன் முடிவு செய்துவிட்டான், இனி ஹாஸ்டல் இல்லை என்று. காலையில் அவள் முகத்தின் மலர்ச்சி கண்ட பின் அந்த முடிவில் உறுதியாகி விட்டான்.
அதுவும் சில நாட்கள் அங்கிருப்பதும், இவன் பிரிவில் தவிப்பதும், அவள் இவனுக்காக சீக்கிரம் வருவதும் என்று அப்போது அதெல்லாம் சரியாக இருந்தாலும், ஷெரினின் மறைவுக்குப் பின் அரிச்சந்திரனுக்கு ஆதினியை ஹாஸ்டலில் விட சுத்தமாக விருப்பமில்லை.
“ஆதினி! எத்தனை தடவ கேட்டாலும் நீ ஹாஸ்டல் போகல, நான் உன்னை அனுப்ப மாட்டேன். டெய்லி நான் கொண்டு போய் விடுறேன், இல்ல உன் அப்பா, துரைன்னு யாராவது உன்னை அழைச்சிட்டுப் போவாங்க, ஈவினிங் உன் அப்பாவோட வந்திடு.” என்று அவன் திட்டத்தை சொல்ல,
“அரி, அதெல்லாம் எனக்குக் கஷ்டமா இருக்கும். நீங்கதானே என்னை ஹாஸ்டல் போக சொன்னீங்க” என்று ஆதினி வாதிட்டாள்.
“இப்போ நாந்தான் உன்னை ஹாஸ்டல் போக வேண்டாம் சொல்றேன்” அரிச்சந்திரனின் குரல் உயர,
ஆதினி உடனே, “லாஸ்ட் டைம் எவ்வளவு கெஞ்சினேன்? அப்போ போ ஆறு மாசம் இருனு சொல்லிட்டு, இப்ப மாத்தி மாத்தி பேசுறீங்க” என்று சண்டையிட்டாள்.
“நீ அப்போ என் பேச்சைக் கேட்கிறேனு சொல்லிட்டுத்தானே போன, இப்போ என் பேச்சைக் கேளு” என்று அரி கூற,
“முடியாது” என்றாள் ஆதினி. நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து மறுப்புக்குப் பழக்கப்படாதவளிடம் மறுப்பு வேலை செய்யுமா? போன முறை அரிச்சந்திரன் போக சொன்னாலும், இவளுக்கும் அரியின் விருப்பம் அவள் விருப்பமாக இருந்தததால் சென்றாள்.
சிலரால் அவர்களின் சுய முடிவை மட்டும் ஏற்க முடியும், சிலரால் அடுத்தவரின் முடிவை ஏற்க முடியும். ஆதினி இதில் ஆதி வகை!
இப்போதும் அரியுடன் இருக்க அவளுக்கு ஆசை இருக்கிறது, அதைவிட ஷெரினின் மரணத்திற்குப் பின்னான காரணத்தை ஆராய வேண்டும் என்ற உள்ளுறுதி அவளிடம். நேற்று ‘தான்’ வந்தது இவனை கவலையடைய செய்திருக்கும் என்று புரிந்தாலும், இப்போது அவள் செய்ய போகும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட வேலையை, அரிச்சந்திரன் நிச்சயம் அனுமதிக்க மாட்டான் என்று தெரியும். அதனால் அவனிடம் அதை சொல்லவில்லை.
“முடியாதா? அப்போ என்ன பண்ண போற? ஹாஸ்டல் போக போறியா?” அரி எழுந்து நின்று கோபமாக கேட்க,
“உங்க ஆர்டரை நான் ஃபாலோ பண்ணலன்னா நீங்க கோவப்படுவீங்களா?” ஆதினி முறைத்தபடி கேட்க,
“அப்படியே வச்சிக்கோ, நான் அதிகாரம் பண்றேன், ஆர்டர் போடுறேனே வச்சிக்கோ. இனி ஹாஸ்டல் கிடையாது” என்றான் மீண்டும் அழுத்தமாக. சொல்லியவன் டீ குடித்த டம்ளரை எடுத்துக் கொண்டு கிச்சன் செல்ல, பின்னால் சென்ற ஆதினி,
“ஏன் அரி இப்படி பேசுறீங்க? நான் நல்லாயிருக்கேன் சொல்றேன்ல, நீங்கதானே இப்படி ட்ராவல் பண்ணினா டயர்ட் ஆகிடுவேன் சொன்னீங்க. இந்த செமெஸ்டர் முடியட்டும் சொன்னீங்க, நேத்து ஏதோ பயந்துட்டேன், இனிமே தைரியமா இருனு சொல்லி ஹாஸ்டல் அனுப்பாம இப்படி என்ன வீட்ல வச்சுப்பீங்களா?” என்று விடாது கேட்க, டம்ளரை கழுவி வைத்தவன் ஆதினியின் கையைப் பிடித்தான்.
“ஏன் அரைடிக்கெட் நீ இப்படி பண்ற? போன வாட்டி அரிச்சந்திரன் சொன்னா அர்த்தமிருக்கும்னு சொன்ன, இப்போ நான் மாத்தி சொன்னாலும், காரணம் இருக்கும் தெரியாதா? ம்ம்?” என்று பொறுமையாக பேச,
‘இவரு லாயர்ல, பாயிண்ட் எல்லாம் மறக்காம சொல்றார்’ என்று மனத்தில் நினைத்தாள் ஆதினி.
“நீ நினைச்சதையே செய்யணும் நினைக்காத! இந்த பொறுமை, பேஷன்ஸ் (patience) அப்படின்ற வார்த்தை எல்லாம் உன் அகராதியில இல்லையாடி?” என்று அலுப்பாகக் கேட்க,
“நீங்கதான் நினைச்சதை செய்யணும் நினைக்கிறீங்க அரி, உங்க பேச்சைக் கேட்கணும், இல்லன்னா கோவம் வருது உங்களுக்கு” என்றதும் அரிச்சந்திரன் முறைத்தான்.
“நேத்து நைட் அந்த நேரத்துல ஹாஸ்டல்ல இருந்து வர, அட்லீஸ்ட் கூட துணைக்கு ஒருத்தனை கூட்டிட்டு வர அளவு அறிவு இருக்குனு விட்டேன் உன்னை. இன்னும் ஒரு நாள் ஆகல, உடனே அங்க போகணும்னு சொல்ற, முதல்ல உன்னை நான் நாலு நாள் லீவ் போட சொன்னேன் தானே?” என்று அரி அதட்டி கேட்க,
“இப்படியே லீவ் போட்டுட்டே இருந்தா நான் எப்படி டிகிரி வாங்குறது? இங்க பாருங்க அரி, என்னை பிரியாம இருக்க முடியாதபடி சீன் போடாதீங்க. அன்னிக்கு அவ்வளவு சொல்லியும் போ போனு விரட்டினீங்க, இந்த செமெஸ்டர் மட்டும்னு அட்வைஸ் பண்ணிட்டு இப்போ இப்படி சொல்றீங்க?” என்று ஆதினி பட்டென்று பேச, அரி ஆதினியை பிடித்திருந்த கையை விட்டான்.
பிரிய முடியாது அவன் தவித்தது அவனுக்குத்தானே தெரியும்? ‘இவளுக்காக நான் என்ன பார்த்தாலும் என் பிரியத்தை இவள் மதிக்கவே மாட்டாள். எல்லாம் இவளின் விருப்பம்’ என்று தோன்ற,
“போடி, உன் இஷ்டத்துக்கு ஆடு” என்று கத்திவிட்டு அறைக்குள் போய்விட்டான்.
ஆதினிக்குக் கவலையானது. இருந்தாலும் அரிச்சந்திரனை அவளுக்குத் தெரியும், அவன் பிரியத்தின் வாசனை அறிந்தவள். இந்த கோபம் எல்லாம் சில நேரம் என்று தெரிய, அரிச்சந்திரனை விடவும் அப்போதைக்கு ‘உண்மை’ பெரிதென பட்டது. அவளின் ஷெரினுக்காக அவள் இதை செய்ய வேண்டும்.
அரிச்சந்திரன் அறைக்கு சென்று அப்படியே படுத்துவிட்டான். அவ்வளவு கோபம்! ஆதினி அறைக்கு வந்தவள்,
“அரி…!” என்று மெல்ல அழைத்து அவன் பக்கம் உட்கார, அரிச்சந்திரன் பதில் பேசவில்லை. ஆதினி நேரம் ஆனது உணர்ந்து,
“நான் கிளம்புறேன் அரி, தாத்தா தூங்குறாங்க, சொல்லிடுங்க” என்றாள்.
“நீ இனிமே எங்கிட்ட எதுவும் பேசாத, உன் இஷ்டத்துக்கு நடக்கிறதானே? நீயே சொல்லிட்டு கிளம்பு. என்னை விடு” என்றான் எரிச்சலாக.
ஆதினியைப் பொருத்தவரையில் அவள் அப்பா, அம்மாவை போல் எதிர்ப்பார்ப்பில்லாத நேசத்தை அவள் மீது காட்டுபவன் அவள் கணவன். என் அம்மா என்னை புரிஞ்சிப்பாங்க என்று தாய்மையிடம் எடுத்துக்கொள்கிற அந்த உரிமையை அரிச்சந்திரனிடம் எடுத்துக்கொண்டாள்.
அவன் மனத்தையும் பார்க்க வேண்டும் என்று ஆதினி நினைக்கவில்லை, அவன் மீதான பிரியத்தைக் காட்ட நினைத்தாலும், இந்த காலம் அவளை அவனிடமிருந்து பிரித்து வைத்தது.
✅ End of Episode 19
Nice
ஆதினி எப்பவும்