Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 38

“ராஜாண்ணா உங்க கண்ணைப் பார்த்துதான் ஃப்ளாட் ஆகியிருப்பார், கரெக்டா?” என்று கேட்க,

“அவரை கேளேன்” என்று ராஜதுரையைக் கண்காட்டினாள்.

“எனக்கு உங்க அண்ணனைப் பார்த்துதான் பயமில்லை, என் அண்ணனைப் பார்த்தா பயம்” என்று மறுத்தவள் ராஜதுரையை வரவேற்க, அவன் பார்வை ஆதினியிடம் இல்லை.

அதுவரை சிரித்திருந்த தாரகை முகம் வலியில் சுருங்கியது. ராஜதுரை,
“அம்மாடி, என்னாச்சு?” என்று பதற, மாடியில் போன் பேசிக் கொண்டிருந்த அரியும் ஓடி வந்தான்.

ராஜதுரை கேட்க, தாரகைக்குப் பதில் சொல்ல முடியவில்லை. எங்கெங்கோ வலி எடுக்க, கண்கள் கலங்கி போக,
“வலிக்குது” என்றாள் துரை மேல் சாய்ந்தபடி. அரிச்சந்திரன் வேகமாக வந்தவன்,

“துரை! காரை எடுக்கிறேன் அவளை அழைச்சிட்டு வாங்க, ஆதினி நீ பேக் எடுத்துட்டு வா” என்று அவசரமாக சொல்லி காரை எடுத்தான். தாரகைக்கு பிரசவத்திற்கு ஒரு வாரமே இருக்க, அன்று வலி எடுத்திருக்க, உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் விட்டு விட்டு அவளுக்கு வலியெடுக்க ஆதினியும் அரியும் உடனிருந்தனர். தாரகை வலி தாங்காமல் அழ, ராஜதுரை ஆறுதலாக அவளருகே உட்கார்ந்தான்.

அரிச்சந்திரனோ அறைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தான், அவன் முகத்தில் அவ்வளவு பதட்டம். அடிக்கடி தங்கையை எட்டி பார்க்க, அவள் கத்தியது காதில் கேட்க அப்படியே இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான்.

இரவும் ஆகிவிட, ராஜதுரை அரியிடம்,
“டீ குடிச்சிட்டு வருவோம் வாங்க அரி” என்று அழைக்க, அவனோ வேண்டாம் என்று தலையசைத்தான்.

ஆதினி அருகே வந்து, “ஏன் அரி? டீயாச்சும் குடிங்க” என்று சொல்ல அவளையும் முறைத்தான்.

“என்ன சும்மா முறைக்கிறீங்க? முதல்ல ராஜாண்ணாவை முறைச்சீங்க, இப்போ என்னை” என்று ஆதினி அதட்டலாகக் கேட்க,

“சும்மா இருடி, என் தங்கச்சிதானே கஷ்டப்படுறா” என்று எரிந்து விழுந்தான்.

“அதெல்லாம் அத்தாச்சி தைரியமாக இருக்காங்க, சும்மா சீன் போடுறதைப் பாரு சிவாஜி கணேசன்” என்று கிண்டல் செய்து அவன் பக்கம் உட்கார்ந்தாள். ராஜதுரை எல்லாருக்கும் டீ வாங்க சென்றிருக்க, தாரகை தனியே இருப்பாள் என்று அறைக்குள் போனான் அரி.

“என்னடா தாரா? ரொம்ப வலிக்குதா?” என்று வார்த்தையில் வலி தேக்கி அரி கேட்க, கணவன் தன் கண் கலங்கினால் இன்னும் பயப்படுவான் என்று நினைத்து,

“வலிக்கல” என்றவள் அண்ணன் கேட்கவும்,

அவன் ஒற்றைக்கையைப் பற்றி, “ரொம்ப வலிக்குதுடா அரி, விட்டு விட்டு வலிக்குது.” என்று பிடித்துக் கொண்டாள். அரிக்கு சிறுவயதில் தங்கை தன் கைப்பற்றிய ஞாபகம் எல்லாம் கண்ணுக்குள் வந்து போயின.

“சீக்கிரம் குழந்தை பொறந்திடும் தாரா, அழாதடா ராஜாத்தி” என்று அவள் கண்களை துடைத்து விட்டான். ஆதினி தாரகையைப் பார்த்து,

“நீங்க அழாம இருந்தாதான் என் அண்ணனும் உங்கண்ணனும் அழாம இருப்பாங்க அத்தாச்சி. குட்டி பாப்பா வந்ததும் எங்கிட்ட கொடுத்துட்டு நீங்க ஜாலியா ரெஸ்ட் எடுங்க” என்றாள் புன்னகையோடு.

“ஆதினி” என்று மெல்ல அரி அவளை அதட்டினான்.

இப்படியே நேரம் செல்ல, இரவினை திருடி பிறந்தான் ராஜதுரை, தாரகையின் மகன். குழந்தையை வெளியே எடுத்து வர, பெரியவர்களை காலையில் வர சொல்லி ராஜதுரை அனுப்பி வைத்திருந்தான். ஆதினி, அரி அவன் மட்டும் இருந்தனர்.

அரிச்சந்திரனைப் பார்த்த ராஜதுரை, “குழந்தையை அவர்கிட்ட கொடுங்க” என்றான்.

அரிக்கு ஆவல் இருந்தாலும், ராஜதுரைக்காக, “நீங்க ஃப்ர்ஸ்ட் வாங்குங்க துரை” என்றான்.

“இல்லை அரி, நாங்க முன்னாடியே பேசிட்டோம். நீங்கதான் வாங்கணும்” என்று இருவரும் பேச,

“எங்க குட்டி பையனை எங்கிட்ட கொடுங்க” என்று ஆதினி சொன்னதும் அரி அனிச்சையாகக் கை நீட்டினான். ஆதினி அவனை முறைத்தாள்.

அரிக்குக் குழந்தையைக் கையில் வாங்கிய அந்த நிமிடம், உடலில் சிலிர்ப்பு. ராஜதுரை அவன் அக்கா குழந்தைகளை எல்லாம் தூக்கியிருக்கிறான், ஆனால் அரி அப்படியில்லை. பிறந்த குழந்தையை முதல் முறை வாங்குகிறான்.

பார்த்த கணம் பிரியம் பிறக்குமா? பிறந்த குழந்தையைப் பார்க்கவும் கண்கள் பனிக்க, நெஞ்சமெல்லாம் நிறைத்தது நேசம். அந்த பூஞ்சிட்டைப் பொத்திப் பிடித்து, கண்களில் நிறைத்தான். மீசை குத்தாமல், இதழ் படாமல் மிக மிக மென்மையாக நெற்றியில் முத்தமிட்டான்.

ஆதினிக்கு அதுவரை குழந்தை பற்றிய கனவுகள் எல்லாம் இல்லை, தாரகை வேறு வலியில் அழுதிருக்க ஒரு பயம் மனத்தில். ஆனால் கணவன் கையில் குழந்தையோடு பார்த்த நொடி, அவன் கண்களில் இருந்த பரவசம், அதனை கொடுக்க விழைந்தது இவள் மனம்.

மெல்ல அவர்கள் அருகே நெருங்கி, குழந்தையைப் பார்த்தாள். லேசாக தன் விரல் கொண்டு, அதன் விரலைத் தொட்டுப்பார்த்தாள். அவ்வளவு மென்மை!

ராஜதுரை இவர்களை புன்னகையோடு பார்த்தபடி நின்றவன் குழந்தையை ஒரு முறை கண்ணில் நிறைத்து விட்டு, தாரகையைப் பார்க்க சென்றான்.

அதுவரை தாரா தாரா என்று கலங்கி இருந்த அரி, தாராவின் மகனைப் பார்க்கவும் சுற்றம் மறந்து, குழந்தையின் கால்களைப் பற்றி மெல்ல வருடிக் கொடுத்தான். இந்த ‘தாய் மாமன்கள்’ அப்படித்தான்!

ராஜதுரை தாரகையைப் பார்த்து விட்டு வர, அரி எழுந்து நின்று குழந்தையை ராஜதுரையிடம் நீட்டினான். ராஜதுரை மகனை வாங்கி மகிழ்ச்சியோடு நிற்க, அரி உறவுகளுக்கு எல்லாம் அழைத்து சொன்னான். நார்மல் டெலிவரி என்பதால் இரண்டாம் நாள் தாரகை வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டாள்.

ஒரு வாரம் அரிக்காகவும், தாத்தாவுக்காகவும் பிறந்த வீட்டில் இருந்த தாரகை அன்று மீண்டும் புகுந்த வீடு செல்ல தயாராக இருந்தாள். அரிக்கு மனதே இல்லை, அதே நேரம் ஆதினியாலும் தாரகைக்கு உதவ முடியாது. அங்கே துரையின் அம்மா, பெரியம்மா என்று பெண்கள் உண்டு. அரிக்கு ஏனோ அம்மாவின் ஞாபகம் அதிகமாக இருந்தது. முகத்தில் காட்டாமல் இருக்க மிகுந்த பிரயத்தனப்பட்டான்.

தாரகைக்கு அங்கிருப்பது கஷ்டமில்லை, ஆனால் அவளின் மாமியார் குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்வார், இவளுக்கு அதில் பழக்கமில்லை என்பதால் கொஞ்சம் பயம் இருந்தது.

ராஜதுரை தாரகையை அழைக்க வந்திருக்க, அரி “வாங்க துரை” என்று சொல்லிவிட்டு கையில் இருந்த குழந்தையிடம் கவனம் வைத்தான். குழந்தையின் சிறுவிரலைப் பிடித்திருந்தவன் மனத்தில் பெரும்பிரியம் இருந்தது. ஆதினிக்கு குழந்தையையும் கணவனையும் கண்ணில் நிறைப்பதே பெரிய வேலையாக இருந்தது.

“என்ன மாமன், தங்கை மகனான உனக்கு உலகை விலை பேசுவானா?” என்று ஆதினி ராகமிழுத்தபடி கணவனருகே உட்கார, அரிச்சந்திரனின் கவனம் ஆதினியிடம் இல்லை.

“தாரக! நேரமாச்சு கிளம்பலாமா?” என்று மனைவியிடம் கேட்க, அரியும் எழுந்தான்.

“அரி! பக்கத்து தெருவுல இருக்க வீட்டுக்கு நீ ஏன் அலையுற? வந்து உட்காரவும் மாட்ட. நைட்டெல்லாம் தூங்காம இவனை பார்த்த, ஒழுங்கா ரெஸ்ட் எடு” என்று தாரகை சொல்லிவிட, அரி மறுத்து பேசவில்லை. அங்கு சென்றாலும் ராஜதுரையின் பெரியப்பா இருப்பார், அவருக்கும் இவனுக்கும் ஆகாது, உடனே கிளம்பி விடுவான்.

அதனால்,
“சரி, நீ என் மருமகனோட ஒழுங்கா வாரக்கடைசில வந்துடுற தாரா” என்று தங்கையிடம் சொன்னான்.

“அது என்ன வாரக்கடைசி? என் பேத்தி எப்போ வேணும்னாலும் வருவா” என்றார் ராமசாமி.

“போன ஜென்மத்துல நீ எனக்கு மாமியாரா பொறந்துப்ப போல தாத்தா, எது சொன்னாலும் என்னை பேசு” என்று அரி முறைக்க,

“அவர் குழந்தையைப் பார்க்கணும்னு ஆசையில சொல்றார் தாத்தா” என்றான் ராஜதுரை.

“நீ சும்மா இருடா பேராண்டி! நீ எப்படி பொறுப்பா என்னைக் கொள்ளுத்தாத்தாவா ஆக்கிட்ட, இவனுக்கு ஆசையிருந்தா இவனையும் பெத்துக்க சொல்லு” என்றதற்கு தாரகையும் ராஜதுரையும் சிரிக்க, ஆதினி அரியைப் பார்த்தாள்.

ராஜதுரையும் தாரகையும் ராமசாமி தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்க,

“எங்க ராஜாத்தியோட எப்பவும் சந்தோஷமா இருக்கணும்” என்று கண்கள் கலங்க சொன்ன ராமசாமி, அவர்கள் மகனை தாரகை தாத்தாவின் கையில் கொடுக்க, அவர் அரியைப் பார்த்தார். அரி நகைப்பெட்டியில் இருந்து மெல்லிய தங்கச்சங்கிலி ஒன்றை எடுத்து குழந்தைக்குப் போட்டு விட்டான்.

“என் மகன் இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பான்” என்று கண்கள் கலங்க சொன்னவர்,

“எண்ணும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்” என்று கொள்ளுப்பேரனை வாழ்த்தினார். எல்லார் மனமும் பிரிந்தவர்களை நினைத்து வருந்தினாலும் குழந்தையின் முகம் பார்த்து பூரித்தனர்.

அவர்கள் செல்லவும், “நான் தூங்கிட்டு வரேன்” என்று அரி அறைக்குள் புகுந்துவிட, ஆதினி அவளின் ப்ராஜக்ட் வேலைகளை செய்தாள். அரி இரண்டு மணி நேரம் கழித்து எழுந்தவன், ஆதினி லேப்டாப்போடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு டீ வைக்க போனான். அரி செல்வதைப் பார்த்து, ஆதினியும் லேப்டாப்பை டீபாய் மேல் வைத்தவள் சமையலறைக்குள் சென்றாள்.

“என்னடி? எழுந்து வந்துட்ட?” என்று அரி கேட்டபடி கொதித்துக் கொண்டிருந்த நீரில் ஏலக்காயும் இஞ்சியும் லாகவமாகத் தட்டிப் போட்டான். நெற்றி வியர்க்க, கழுத்தில் இருந்த துண்டால் துடைத்தபடி பாத்திரத்தின் பிடியை பிடித்து எல்லாம் சேர அவன் கலக்கி விட, அரிச்சந்திரன் கலைஞனாக தெரிந்தான், ஆதினி அவன் ரசிகையானாள். அவன் டீ தூள், பால் எல்லாம் ஊற்ற, எல்லாம் சேர்ந்து கொதித்துக் கொண்டிருந்தது.

“அரி, குட்டி பையனை மிஸ் பண்றேன் நான்” என்று அவன் கழுத்தில் இருக்கும் துண்டை இழுக்க, அரியும் அவள் முன்னே தடுமாறி நின்றான்.

“அடியே!” என்று மெல்ல சமையல் மேடையைப் பிடித்து நின்றவன்,

“இந்தா உங்க அண்ணன் வீடுதானே? டீ குடிச்சிட்டு ஓடி போய் பார்த்துட்டு வா” என்றான் சிரிப்போடு.

“ம்ஹூம்” என்று தலையசைத்தவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டு கண்களைப் பார்த்தபடி,

“எனக்கு குட்டி பையன் இங்க வேணும், அவனை வச்சிருக்க அவன் மாமா வேணும், அந்த அரியைப் பார்க்க ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் ரசனையான ஒரு குரலில்.

அரி அவள் சொல்வதை புன்னகையோடு கேட்க,

“எனக்கு அரிச்சந்திரனை அப்பாவா பார்க்கணும்னு ஆசை வந்துடுச்சு” என்று மெல்ல சொல்ல,

“ஆஹ்ன்! அது கஷ்டமாச்சே!” என்றான் அரி.

“அது கஷ்டமா?” என்று அவள் கண்ணடிக்க,

ஆதினியின் தலையில் வலிக்க கொட்டினான், “நான் அதை சொல்லலடி அரைடிக்கெட்! அப்பா, அம்மாவாகுறது எல்லாம் ஈசி, ஆனா குழந்தைகளை வளர்க்கிறது கஷ்டம், அது பெரிய பொறுப்பு, ஒரு உயிர் மொத்தமா நம்மை நம்பி வரப்போகுது. அதுக்கான நேரம், பொறுமை எல்லாம் நம்ம கொடுக்கணும். அண்ட் என்னை விட உனக்குத்தான் கஷ்டம்” என்றான்.

“ஏன் நீங்க என்னை பார்க்க மாட்டீங்களா?”

“நான் ஏன் பார்க்கிறேன்? உன்னோட அன்புள்ள அப்பா இருக்காரே, அவர் பார்ப்பார். நான் என் புள்ளையை மட்டும்தான் பார்ப்பேன்” என்று அவளை வம்பு செய்ய, ஆதினி முறைத்தாள்.

“அடியே! விளையாட்டுக்கு சொன்னேன்” என்று அவளை ஒற்றைக்கையால் அணைத்துக் கொள்ள, உள்ளாடும் காதலால் அவன் மேல் உன்மத்தம் ஆனாள் ஆதினி. அரியை இருகைகளாலும் அணைத்துக் கொண்டவள்,

“உங்களோட சண்டை போடுவேன், உங்க பேச்சைக் கேட்க மாட்டேன், உங்களை திட்டுவேன், ஆனா உங்களை ரொம்ப பிடிக்குது அரி” என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அரி அவளின் கன்னத்தை மென்மையாகப் பற்றியவன் அவள் காதில் மெல்ல,

“இப்படி முத்தம் கொடுத்தா அப்பாவாக முடியாதுடி” என்று கிசுகிசுப்பாக சொல்ல,

“உங்களை!!” என்று அவன் முதுகிலே அடித்த ஆதினிக்கு சிரிப்புத் தாங்கவில்லை. அவள் சிரிப்பில் அரியும் கூட சேர்ந்து சிரிக்க, ஹாலில் இருந்த ராமசாமிக்குப் பேரனின் சிரிப்பு சத்தத்தில் மனம் நிறைந்து போனது.

✅ End of Episode 38
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 3 weeks ago

Very nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top