Episode 15
“அடுத்த வாரம் எல்லாம் க்ளாஸ் கட் அடிச்சிட்டு வராத ஆதினி, எப்படியும் வெள்ளிக்கிழமை நான் கோர்ட் போயிடுவேன். வீட்ல நீ தனியா தான் இருக்கணும், தாத்தா மட்டும்தான் இருப்பார்.” அரிச்சந்திரன் கல்லூரி செல்ல தயாராகிக் கொண்டிருந்த ஆதினியிடம் சொல்ல அவள் கணவனை முறைத்தாள்.
“இந்த அக்கறை எல்லாம் அன்னிக்கு கில்ஃபான்ஸ் அப்போ இருந்திருக்கணும். விடிஞ்சதும் வேற பேச்சு அரிச்சந்திரனுக்கு.” என்று முணுமுணுத்தபடி மெல்ல புத்தகங்களை அடுக்கி வைத்தாள்.
“சீக்கிரம் ரெடியாகும்மா, காலையில ப்ரிஸ்கா இரு” அரிச்சந்திரன் அதட்டலாக சொல்லிக் கொண்டே சட்டை பட்டன்கள் மாட்ட, ஆதினி முறைத்தாள்.
“ப்ரிஸ்கா இருக்கிறதா? முந்தா நாள் நைட் என்ன சொன்னீங்க, நாளைக்கு நைட் தூங்கிக்கலாம், அடுத்த நாள் காலேஜ் இருக்குனு சொன்னீங்க தானே? அப்புறம் நேத்து நைட் ஏன் தூங்க விடல..?” ஆதினி சோர்வில் கேட்க,
“அடியே!” என்று சிரித்தவன், “வேண்டாம் சொல்லியிருக்கலாமே” என்றான்.
“தடுத்தால் கூட தருவேனு சொன்னது நீங்கதானே?” ஆதினி விடாது கேட்க,
“நீ தடுக்கலயே?” என்றான் குறுஞ்சிரிப்புடன்.
“சரி பாவம்னு பார்த்தா இப்ப என்னையே பேசுறீங்க” என்ற ஆதினியை தன்னருகே இழுத்தவன், அவளின் விரிந்த கூந்தலை பிடித்து ரப்பர் பேண்டில் போட்டான்.
“லூஸ் ஹேர் விட்டா என்ன இப்போ? எங்க யுனிவர்சிட்டில கூட கேட்க மாட்டாங்க, விடுங்க” என்று இழுக்க போனாள்.
“அவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகாது, அரியை டிஸ்டர்ப் பண்ணுதே..” என்றவன் கரத்தால் கன்னம் பற்றி, காதோரம் முத்தமிட்டவன் ரகசிய குரலில்,
“பேசாம லீவ் போடுடி” என்றான்.
சட்டென அரியைத் தள்ளிய ஆதினி, “ஆதினின்னா சின்சியர்! தூக்கம் வந்தா புக்கை மறைச்சிட்டு தூங்குவேனே தவிர, லீவ் போட்டு தூங்கினா என்ன கெத்து இருக்கு?” என்று சொல்ல, அரிச்சந்திரன் சிரித்தான்.
“அப்போ தூங்க போற?”
“எப்படியும் இன்னிக்கு போகலன்னா நாளைக்குப் போகணும். அண்ட்..” என்று நிறுத்தியவள் எக்கி நின்று அரியின் காதருகே,
“ஆதினி உங்க ஸ்கெட்ச்க்கு எல்லாம் சிக்க மாட்டா அட்வகேட்” என்று சொல்லி அவனை அணைத்துக் கொள்ள, மெல்ல அவளை தூக்கிப் பிடித்த அரி,
“சும்மா சொல்லிப் பார்த்தேன், இன்னும் நாலு நாள் அடுத்த வெள்ளி வந்துடும், உன்னை அழைக்க நான் வரேன். பட் நீ உஷாரா இருக்கடி அரைடிக்கெட்” என்றபடி அவள் உச்சியில் முத்தமிட்டான்.
“நீங்களாச்சும் லீவ் போட சொல்றதாவது, அதெல்லாம் நாங்க உஷார்தான்.” என்றவளின் கன்னம் தட்டி,
“சரி, சரி. நேரமாச்சு, வா” என்று அவளை அவசரப்படுத்தினான்.
அரிச்சந்திரன் ஆதினியோடு கல்லூரி சென்றான். அரி காரை நிறுத்த, ஆதினி முதலில் இறங்கினாள். கல்லூரி எதிரே உள்ள டீ கடையில் நிரஞ்சன், கிஷோர் எல்லாம் நின்றனர், இவர்களை கண்டதும்,
“மணமகளே மருமகளே வா வா..” என்று கிஷோர் பாட,
“டேய்! காலையில என்னை வம்பிழுக்காம போங்கடா. நானே சீக்கிரம் எந்திரிச்ச காண்டுல இருக்கேன்” என்று ஆதினி முறைத்தாள்.
“உனக்கென்னம்மா காலையில ஜம்முனு கொண்டு வந்து விட ஆள் இருக்கு, ரெண்டு நாள் லீவை மூணு நாள் ஆக்கிட்ட, முன்னாடி எல்லாம் ஹாஸ்டல் விட்டு போகாம இருந்த ஆதினியா இது?” என்று நிரஞ்சன் கிண்டல் செய்தான். ஷெரினும்,
“அதே ஆதினி இல்லடா, ஆதினி அரிச்சந்திரன்” என்று ராகமிழுக்க,
“என்ன ஷெரின் உன் கையில கட்டு?” என்று அரி அவள் கையைப் பார்த்துக் கேட்க,
“அது ஊர்ல சின்ன ஆக்ஸிடெண்ட் அண்ணா” என்றாள்.
“சரி, பார்த்துக்கோம்மா” என்றவன் கிஷோர், நிரஞ்சனைப் பார்த்து,
“ஏன்டா? இங்க நின்னு கதையடிக்கிறீங்களே, க்ளாஸ் ஆரம்பிக்கலையா உங்களுக்கு?” என்று அவர்களிடம் கேட்க,
“ஓஹ், நீங்க தனியா பேசணுமா மாம்ஸ்” என்றான் நிரஞ்சன் கண்ணடித்து.
“டேய்! என் பொண்டாட்டி கிட்ட தனியா பேசணும்னா நான் பேச போறேன். உங்களை ஏன்டா கேக்கணும்?” என்று அரியும் சரிக்கு சரியாக பேச,
“ஆனா நீங்க உஷார் மாம்ஸ், இவ தொல்லை தாங்காமாதானே ஹாஸ்டல்ல கொண்டு வந்து விடுறீங்க” என்று விடாமல் சீண்டினர்.
“உங்களை எல்லாம் எப்படி வச்சு சமாளிக்கிறாங்க இந்த ஸ்டாஃப் எல்லாம்?” என்று கைகட்டி அரிச்சந்திரன் கேட்க நால்வரும் சிரித்தனர். அவர்கள் பேசட்டும் என்று மூவரும் முன்னே செல்ல, ஆதினியின் கை பிடித்த அரி,
“ஆதினிம்மா, பார்த்து இரு” என்றான். அவனுக்கு அதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஒருவழியாக, “நீங்க சீக்கிரம் வீட்டுக்குப் போங்க அரி, தாத்தாவைப் பார்த்துக்கோங்க, நான் என்னை பார்த்துப்பேன். அழாம சமத்தா இருங்க” என்றதும் அவள் தலையில் கொட்ட போனவன் இருக்குமிடம் உணர்ந்து, கையை மடக்கி அவளை முறைத்தாலும், அதில் கோபமில்லை.
“போடி, என் அருமை தெரியட்டும். அடுத்த வாரம் ஆஃப் பாயில் கேட்டு வா, பார்த்துக்கிறேன்” என்று அரியும் சொல்ல,
கிண்டலாக அவனை பார்த்து, “நினைத்தால் போதும் வருவேன், தடுத்தால் கூட தருவேன்..” என்று ஆதினி மெல்ல சொன்னாள்.
“நினைக்கிறப்ப எல்லாம் வராத ராஜாத்தி! லீவ் விடுறப்ப வா” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான் அரி.
அந்த வாரம் ஆதினி வெள்ளிக்கிழமை மாலை ஊருக்குப் போனாள். இரு நாட்கள் வேகமாக நகர, அப்படியே பதினைந்து நாட்கள் சென்றன. வார நாட்கள் படிப்பு, வார கடைசியில் கணவனுடன் என்று அதுவே வழக்கமாக மாறிப்போனது. திங்கட்கிழமை காலையில் கொஞ்சம் மன சோர்வு இருந்தாலும், பிரிவுக்குப் பழகிக் கொண்டனர்.
அன்றிரவு அரி ஆதினியிடம் பேச, அவள் குரலில் சோர்வு.
“என்னாச்சு, டயர்டா இருக்கியா?”
“ப்ரீயட்ஸ், கால் எல்லாம் வலிக்குது” என்று ஆதினி விடுதியின் பால்கனி கதவில் சாய்ந்து கால் நீட்டியபடி சொல்ல, காற்று அப்படியே சொக்க வைத்தது.
“அப்பாடா, வந்தாச்சா?” என்று அரி சந்தோஷப்பட,
“எதுக்கு சிரிப்பு?”
“அது ஃப்ர்ஸ்ட் டைம் நம்ம ப்ளான் பண்ணலயா, ஸோ பேபி வந்துருமோனு எனக்கு ஒரு டென்ஷன்.” என்ற அரியின் பேச்சை ஆதினி நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை.
“ஏன் பேபி வந்தா என்ன?” ஆதினி கோபமாகக் கேட்க,
“பேபி வந்தா என்னவா? நீ மொத்தமா படிச்சு முடிச்சிட்டு வந்து புள்ள பெத்துக்கலாம். சொல்லலாம் புள்ள இருக்கவங்க படிக்கிறதில்லையானு? ஆனா ஏன் கஷ்டம்? அது எல்லாம் நீ மட்டும் தனியா ஃபேஸ் பண்ணனும். குழந்தை பெத்துக்கிறதை விட அதை பொறுப்பா வளர்க்கிறது கஷ்டம். பெரிய பொறுப்பு!”
“கூடவே குட்டி ஆதினியும் உன்னை மாதிரி சேட்டை பண்ணினா ரெண்டு பேரும் பனிஷ்மெண்ட் வாங்கி என்னை வரவைப்பீங்க, என்னால ஒரே நேரம் திட்டு வாங்க முடியாதும்மா. நம்ம முதல்ல சேர்ந்து இருப்போம், அப்புறம் புள்ள பெத்துக்கலாம்” என்று அரி அவன் நிலைப்பாட்டை சொல்ல, ஆதினிக்கு இன்னுமின்னும் கணவனை பிடித்தது.
அரிக்கு சொல்லிய பின், ‘குட்டி ஆதினி’யைப் பார்க்கவும் ஆவல் வந்தது. கற்பனை இனித்தாலும் நிதர்சனம் புரிந்தவன். அதனால் கொஞ்சம் பயமிருந்தது. இப்போது அப்படியில்லை என்ற தெளிவு பிறக்க, ஆசுவாசம்.
“ஓகே, ஓகே!” என்ற ஆதினி “அய்யோ! முக்கியமா ஒன்னு சொல்ல மறந்துட்டேன். செமெஸ்டர் ரிசல்ட் வந்துடுச்சு, டிபார்ட்மெண்ட் தர்ட்!” என்றதும்,
“அடியே! எப்ப சொல்ற நீ? சூப்பர்! சூப்பர்! குட்!” என்று பாராட்டினான்.
“உன் வானரம் எல்லாம் பாஸா?”
“ஷெரின் ஃப்ர்ஸ்ட், நிரஞ்சனும் கிஷோரும் பாஸ் ஆகிட்டானுங்க” என்றாள்.
இப்படி சிறிது நேரம் பேசி வைக்க, வாசலில் அமர்ந்தபடி வானத்தைப் பார்த்த அரிச்சந்திரனுக்கு ஏகாந்தம் ருசிக்கவில்லை. ஏக்கங்கள் மட்டுமே!!
ஆதினி அவன் மனைவி, அவன் சினேகிதி! அவளின் இருப்பை உணர்ந்தவனுக்கு அவளின் பிரிவு வாட்டத்தான் செய்தது, ஆனால் அரிச்சந்திர மகாபிரபு காட்டவில்லை.
திருமணம் ஆனதும் விடுதி வந்திருந்தால் தெரிந்திருக்காது, மூன்று மாதம் இருந்து, பிரிந்து, இப்போது இணைந்து அரிச்சந்திரனுக்கு பெருமூச்சு வந்தது. அவளின் பேச்சு, சிரிப்பு, குரல் என்று அவன் வீடே இத்தனை நாள் நிறைந்திருந்தது.
சிலரது இருப்பைப் பார்த்த பின், முன்பு அவர்கள் உடன் இல்லை என்பதே நினைவில் இருக்காது, அப்படித்தான் ஆதினியின் இருப்பு. மூன்றாம் பிறையோ முழு நிலவோ அந்த நிலவின் இருப்பு போதுமே!!
*********************
“உங்க டிபார்ட்மெண்ட் எப்பவும் ஃப்ர்ஸ்ட் பர்ஃபாமன்ஸ் செய்யணும்னு இருக்கா என்ன?” கெமிஸ்ட்ரீ டிபார்ட்மெண்ட் மாணவன் கத்த,
“காலேஜ் டே’ல நீங்கதானே பண்ணீங்க, ஹாஸ்டல் டே’ல நாங்க பண்ணினா என்ன உனக்கு? நாங்க பெர்மிஷன் வாங்கிட்டோம்” ஆதினி அழுத்தமாக சொல்ல,
“ஹே! உன் கிட்ட நான் பேசல. ஏன்டா உங்க டிபார்மெண்ட் பசங்க எல்லாம் பேச மாட்டீங்களா?” என்று அவன் கத்த,
“டேய்!! ஏய்ய்ய்!” என்ற கூச்சல்கள்.
“ஏன் யார் பேசினா என்ன? உனக்கு பதில் சொல்ல முடியலையா?” ஷெரின் சண்டையிட,
“இரண்டு பேரும் அமைதியா இருங்க” என்று கிஷோர் அதட்டினான்.
“கேட்டுட்டு மூடிட்டு இருங்க” என்று கணித பிரிவு மாணவன் பேச, கலை பிரிவுக்கும் அறிவியல் பிரிவுக்கும் அந்த பல்கலைக்கழகத்தில் ஆகாது. ஏற்கெனவே மீடியா பிரிவுக்கும், சயின்ஸ் பிரிவுக்கும் நடந்த கிரிக்கெட் மேட்சில் அவர்கள் தோற்றுப் போயிருக்க, அந்த கோபத்தை எல்லாம் இப்போது காட்டினர்.
வயதிற்குரிய வேகம், நீ பெரிதா நான் பெரிதா என்ற போட்டி மனப்பான்மை. கிடைக்கும் அத்தனை வாய்ப்பிலும் சண்டையிட தயாராக இருந்தனர், இளரத்தத்தின் வேகம்! அதீதமான கோபம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாது, கை பேசுவது இயல்பாக இருந்தது.
நிரஞ்சன் பெண்களை தரக்குறைவாகப் பேசவும் கை நீட்டிவிட்டான்.
“நிரஞ்சா!” என்று ஆதினி தடுக்க பார்ப்பதற்குள், இரண்டு பிரிவு மாணவர்களும் பயங்கரமாக அடித்துக்கொள்ள ஆரம்பிக்க, பத்து நிமிட முடிவில் எல்லாரும் பிரின்சிபால் முன் நின்றனர்.
“ஹாஸ்டல் டே நடத்துறீங்களா இல்லை அடிதடியா? நம்ம யுனிவர்சிட்டிக்குனு ஒரு ரெபுடேஷன் இருக்கு? அதெல்லாம் தெரியுமா தெரியாதா? தெரிஞ்சுதானே சேர்ந்தீங்க? எனக்கு ஆர்ட்ஸ், மீடியா, சயின்ஸ் எல்லாம் கிடையாது, இண்டிசிப்லிண்ட் யாரா இருந்தாலும் பனிஷ்மெண்ட் தான்” என்றார் மிகவும் கோபத்துடன்.
ஆதினிக்கோ, “இவனுங்க அந்த அட்வகேட்டு போன் போட்டுட போறாங்களே” என்று கவலையானது.
ஷெரின், “வேணும்னு அவரை வரவைப்ப. இப்ப என்னமோ பயப்படுற?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
“இந்த நிரஞ்சன் நாய் ஏன் கை நீட்ட போனான்., பேசும்போதே இவனுங்க கெத்து காட்டுறனு அடிச்சு, பாரு.. முன்னாடி அவர் என்னை பார்க்க சாக்கு வேணும்னு வர வைப்பேன். இப்ப கேட்டாலே வருவார், ஆனா இப்படி வரவச்சா டென்ஷன் ஆகிடுவார். அதுக்கு எங்க அப்பா இருக்காரே, அவர் நம்பருக்குக் கூப்பிட சொல்ல வேண்டியது தான்” என்று ஆதினி திட்டம் திட்ட,
அரை மணி நேரம் எல்லாரையும் முதல்வர் அறையின் வாசலில் நிற்க வைத்தனர். பின் ஒவ்வொருவரையும் அழைத்து பேசி, திட்டி அனுப்பினார்கள்.
“ஹாஸ்டல் டே வார்டன் பொறுப்பு, காலேஜ் டே’க்கு நீங்க ஃப்ர்ஸ்ட் பண்ணிட்டீங்க, ஸோ திஸ் டைம் அவங்க செய்வாங்க. நோ மோர் ஃபைட்ஸ்!” என்று உத்தரவிட்டார்.
அதற்கும் மீடியா பிரிவு மாணவர்கள் சந்தோஷ கூச்சலிட, முதல்வரின் பார்வையில் அடங்கினர்.
அன்றிரவு அரியிடம் இதனை சொல்லிய ஆதினி,
“நல்ல வேளை, உங்களை கூப்பிட்டு டென்ஷன் பண்ணிடுவாங்களோ நினைச்சிட்டேன். நீங்க வேற கோர்ட் போகணும்னு சொன்னீங்களே அரி” என்றதும்,
“ஏன் இதுக்கு முன்னாடி வந்து நின்னது இல்லையா நான்?” அரி பல்லைக் கடித்தான்.
“அப்போ நான் வேணும்னு செஞ்சேன், இப்போ நான் எந்த தப்பும் செய்யல, அப்படியே கால் பண்ண போயிருந்தா ஆபிஸ் அண்ணா கிட்ட சொல்லி அப்பா நம்பரை கூப்பிட சொல்லியிருப்பேன்”
“அவரை ஏன் தொந்தரவு பண்ணிட்டு, நீ தப்பு பண்ணலன்னா உன்னை டிஃபண்ட் பண்ண நான் வரமாட்டேனா? இப்போ என்ன வரவா?”
அரி இப்படி கேட்க, ஆதினியிடம் பெருமிதமாக ஒரு புன்னகை. இதழ்கள் வளைய, கன்னங்கள் புன்னகையில் விரிந்தன.
“மகாபிரபு! உங்களுக்கு இவ்வளவு தாராள மனசா?” என்று கிண்டல் செய்து,
“இப்போ ப்ராப்ளம் சால்வ்ட், நெக்ஸ்ட் வீக் ஹாஸ்டல் டே அரி, சோ வெள்ளி சாயங்காலம் வர மாட்டேன். சனிக்கிழமை காலையில வரேன், ஓகே வா?” என்று கேட்டாள்.
அரிக்கு ஏமாற்றம் இருந்தாலும், “ஓகே ஓகே, எஞ்சாய் பண்ணிட்டு வா” என்றான்.
“நீ என்ன பண்ற ஹாஸ்டல் டே’ல”
“டான்ஸ் ஆடுறேன்” என்றதும்,
“நாங்களாம் அலோவ்ட் இல்லை’ல…போட்டோஸ், வீடியோஸ் அனுப்பு” என்று அரி ஆர்வமாக சொல்ல,
“அனுப்பிடுறேன், சட்டர்டே வந்தா மண்டே லீவ் போடுவேன். ஓகே வா?” ஆதினி சட்டம் பேச அரியும் ஒத்துக்கொண்டான்.
******************
அந்த பல்கலைக்கழக அரங்கம் அதிர்ந்தது. அது ஒரு வெள்ளிக்கிழமை மாலை. அந்த நேரம் டீன், முதல்வர் எல்லாரும் இருந்தனர். எட்டு மணிக்கு மேல் அவர்கள் சென்று விட, வார்டன், விடுதியில் தங்கியிருக்கும் பேராசியர்கள் மட்டுமே.
மாணவர்களின் பாட்டு, ஆட்டம் என விசில் பறந்தது. கொண்டாட்டம்! இளமையின் உற்சாகம் வழிய ஒரு கொண்டாட்டம்!
அரங்கமே அதிரும் வகையில் மேடையில் இருந்தவர்களுக்குப் போட்டியாக, கீழே அமர்ந்தவர்களும் நாற்காலியில் எழுந்து நின்று ஆட, வார்டனும் மற்ற ஆசிரியர்களும் கூட பாவம் ஒரு நாள் தானே என்று அவர்கள் போக்கில் விட்டுவிட்டனர். ஏற்கெனவே முதல்வரிடம் பேச்சு வாங்கி விட்டதால், பெரிதான சண்டைகள் இல்லை.
ஒருவழியாக இந்த நிகழ்வுகள் பதினொரு மணிக்கு முடிய, சில மாணவர்கள் உண்ணாமல் இருக்க, மெஸ் சென்றனர். மற்றவர்கள் விழா ஏற்பாட்டை கலைக்க, நாளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஆசிரியர்கள் எல்லாரையும் விடுதிக்கு அனுப்பினர்.
சில நிமிடங்களில் அடுத்த நாளே விடிந்து விடும். உண்டு முடித்து விடுதி வர மாணவிகளுக்கு நேரமெடுக்க, மெல்ல படிகளில் ஏறி அவரவர் அறைக்கு சென்றனர்.
ஆதினியின் அறைத்தோழி அறைக்கதவை திறந்தாள். திறந்தவள் அடுத்த நொடி அலறிவிட, அந்த விடுதியே அந்த அலறலில் விழித்தது. யாரும் அப்படியொரு நிகழ்வினை எதிர்ப்பார்க்கவில்லை. தொடர்ந்து கூச்சல், குழப்பம், கதறல்கள் கேட்க,
அந்த நள்ளிரவில் அரிச்சந்திரன் பதட்டத்தோடு பல்கலைக்கழகம் கிளம்பி சென்றான்.
STAY TUNED
INSTAGRAM ID
FOLLOW OUR WHATSAPP CHANNEL FOR INSTANT UPDATES,
ARANGETRA VELAI NEW STORY POSTED IN YOUTUBE – AUDIO BOOK LINK
✅ End of Episode 15
Nice
ஷெரின்....ahh