Episode 36
அரி பேச்சோடு பேச்சாக முத்தங்களால் ஆதினியை திணறடிக்க, ஆதினி சட்னியில் கவனம் வைக்க முடியாமல் தடுமாறினாள்.
“அரி! தாத்தாவுக்குப் பசிக்கும், இட்லி சுடணும். தள்ளுங்க” என்றதும், அரி நகரவெல்லாம் இல்லை. அவள் காதோரம் இருந்த முடிகளை ஒதுக்கிவிட்டபடி, அவளை அணைத்தவன்,
“தாத்தாவுக்கு இட்லி செய், எனக்கு தோசை வேணும்” என்றான்.
“சரி, கொஞ்சம் வழி விட்டா சட்னியை ஒழுங்கா அரைப்பேன்” என்று பக்கவாட்டில் திரும்பி சொல்ல,
“ஏன்டி அரைடிக்கெட், நீ மட்டும் எங்கிட்ட இப்படி ஒட்டி உரசி கில்ஃபான்ஸ் பண்ணுவ? நான் செஞ்சா சரோஜா தேவி மாதிரி போங்க, தள்ளுங்கனு..” என்று கிண்டலாக சிரித்தான்.
“கண்டுபிடிச்சிட்டேன்!”
ஆதினி கண்கள் மின்ன, “நீங்க பாடினது கல்யாணியின் கணவன் பாட்டு” என்றாள். அவன் பாடிய பாடலை சரியாக சொல்லிவிட,
அவள் கையைப் பிடித்து இழுத்தவன், “நான் ஆதினி கணவன் டி” என்று வம்பு செய்தான்.
“அரிச்சந்திர மகாபிரபு! இவ்வளவு நேரம் கண்டுபிடிக்க மாட்டேனு சொல்லித் தெரியாது சொல்ல முடியாதுனு சொல்லிட்டு உடனே சமாளிக்கிறது. அட்வகேட் அரிச்சந்திரன்!” என்று முகம் சுழித்தவள் ஓரப்பார்வையால் கணவனை ரசித்தபடி அவனுக்கு தோசை சுட்டாள்.
அரியும் சட்னியைத் தாளிக்க,
“இப்ப மட்டும் இவ்வளவு பேசுறீங்க, நானா வந்து எலெஷன் விஷயம் பேசினதும் சார் ஜாலி மூட் போயிட்டார், ஈகோயிஸ்ட்” என்று கடைசி வார்த்தையை கத்தி சொன்னாள். அவளின் பாவனையில் அரி முறைக்க வேண்டுமென்றே மீண்டும் கத்தி சொன்னாள்.
“ஈகோயிஸ்ட்!” என்று அழுத்தி அவன் முகம் பார்த்து சொல்ல,
“அதப்புடி உனக்கு” என்று அவள் தலையில் குட்டினான்.
“வயலென்ஸ்” என்று அவள் தோசைக்கரண்டியைக் காட்ட, அரி உடனே,
“ஏய்! பார்த்து செய்டி, சுட்டுக்க போற” என்று அக்கறையாக சொன்னவன்,
“சாப்பிட்டு நம்ம தெம்பா பேசுவோம், நீ தோசையை சுடு” என்றான். ஆதினியும் அமைதியாக வேலையில் இறங்க, இட்லி வெந்துவிட அதனை பாத்திரத்தில் இருந்து எடுத்தவன், தாத்தாவுக்கு சூடாக பரிமாறி விட்டு வந்தான். சட்னியை ருசி பார்த்த ஆதினி,
“உப்பு கம்மியா இருக்கு, கொஞ்சம் போட்டு கொடுங்க. இல்லைன்னா தாத்தாவுக்குப் பிடிக்காது” என்றாள். அரியும் உப்பு கொஞ்சம் போட்டு தாத்தாவுக்கு சட்னி ஊற்றினான். மீண்டும் சமையலறைக்குள் வர, சூடாக அவனுக்குத் தோசையைத் தந்தாள் ஆதினி.
அரிக்கு ஆதினி அவனை கவனிப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும், பிடித்தாலும் என்னவோ அவள் சொல்வது போல் ஈகோவா இல்லை, திடீரென தன் மீது காட்டப்படுகின்ற அன்பின் ஆதிக்கத்தை ஏற்கமுடியாத திண்டாட்டமா அவனுக்குத் தெரியவில்லை.
சில நேரம் ஆதினியாக உரிமை எடுத்து செய்யும் போது அதனை ஏற்று ரசித்தாலும், கொஞ்சம், ‘நான்’ என்ற எண்ணம் அவனுக்கு உண்டு. அவனே எல்லாருக்கும் செய்தால் மட்டும் திருப்தி உண்டாகும்.
அதுதான் அடிக்கடி அவர்களுக்குள் உரசல் வர காரணமாக கூட இருக்கலாம், இவனுக்கு அவள் கட்டுப்படுத்தினால் பிடிக்காது, அவளுக்கும் அப்படியே! நல்ல ஜோடிப்பொருத்தம் என்ற எண்ணம் அவனுக்கு, அதில் சிரிப்பு வேறு வர தோசையோடு சிரிப்பையும் மென்றான்.
“உப்பு கம்மியா இருந்ததும் சட்னி டேஸ்டே குறைஞ்சு போச்சு, என் சட்னினா தாத்தாவுக்கு ரொம்ப பிடிக்கும். உங்களை விட என்னை பெஸ்ட்னு சொல்லிடுவார்னு உப்பைக் கம்மியா போட்டு சதி பண்றீங்க அரி நீங்க” என்று ஆதினி திட்டியபடி தோசையை அவன் தட்டில் வைத்தாள்.
“போடி! பேத்திங்க வெண்ணீர் கொடுத்தாலும் ராமசாமி பன்னீருனு சொல்ற ஆளு, என் சமையல் விட உன்னோடது ஒரு இன்ச் கம்மிதான்! ” என்று அரிச்சந்திரன் பெருமையாக சொல்ல, ஆதினி உடனே,
“ரொம்பத்தான் பெருமை” என்று வார்த்தைகளை இழுக்க அரியோ சின்ன சிரிப்போடு,
“உப்பு ரொம்ப அழகான விஷயம் தெரியுமா? எல்லா விஷயமும் வாழ்க்கையில உப்பு மாதிரி இருக்கணும் ஆதினி!” என்றான் கொஞ்சம் ரசனை உணர்வில்.
“உப்பா?” என்று அவள் உவர்ப்பான உணர்வில் பார்க்க,
“ஒரு சக்கரை, வெல்லம், தேன் சொன்னா ஓகே, உப்பு கொஞ்சம் அதிகம் போச்சுன்னா கூட தப்பு அரி” என்றாள்.
“அடியே அரைடிக்கெட்! சொல்றதைக் கேளுடி. எஸ்.ராமகிருஷ்ணன் அவர் புக்’ல உப்பு பத்தி ரொம்ப அழகா சொல்லியிருப்பார். ‘உப்பு அன்பின் வெளிப்பாடு, கண்ணீரின் சுவை! பைபிள்’ல உலகுக்கு நாம் உப்பா இருக்கணும்னு சொல்லியிருப்பாங்களாம். இப்போ யோசிச்சு பார்த்தா உப்பு மாதிரி தான் இந்த பாசம் கூட இருக்கணும் இல்ல, அளவா. இனிப்பு கம்மியா இருந்தா கூட ஓகேவா இருக்கும், அதே நேரம் உப்பு கம்மியா இருந்தா பாதி ருசி போயிடும். ஆனா எல்லாத்துக்கும் உப்போட சரியான அளவு தெரியறதில்லை.”
“வாழ்க்கை அப்படித்தான்! நிறைய அனுபவப்பட்டுத்தான் எவ்வளவு உப்பு போடுறதுனு கத்துக்க வேண்டியதா இருக்கு. இந்த கடல், வானம், மழை மாதிரி காதல் இருக்கணும் சொல்றது எல்லாம் ஓவர் கற்பனை. உப்பு மாதிரி காதல் இருக்கணும்” என்று ஆதினியைப் பார்த்து சொல்ல, அவன் கண்களின் வசீகரம் எப்போதும் போல் ஆதினியை ஈர்த்தாலும், அவன் வார்த்தைகளின் வசீகரம் அவளை அதிகம் ஈர்த்தது.
உப்பைப் போல் காதல்! தேவையானது, திகட்டாதது!!! அளவானதாக, ஆதிக்கமில்லாதது!!
ஆதினிக்கும் அரிக்கும் முட்டிக் கொள்ளும் காரணமே இதுதானே? அரி சொல்வதை ஏற்க பொறுமை அவளிடம் கிடையாது, அவளிடம் சொல்லும் அளவு பொறுமை அரிக்கு இருந்தாலும், ஏன் சொல்ல வேண்டும் என்ற பிடிவாதம் அரிக்கு உண்டு.
“காதல்னு இல்லை உப்பு போல் விசுவாசம், நட்பு, நம்பிக்கை… எவ்வளவு இருக்கு இல்ல..” என்று அரி பேசிக்கொண்டே போக,
“சாப்பிட்டு பேசுங்க அரி. நான் பொறுமையா கேட்கிறேன்” என்றாள் ஆதினி. அவன் இரவு உணவு மட்டுமே கொஞ்சம் நிதானமாக உண்பான்.
இரவு! அது இருவருக்கான நேரம்.
அதற்காகவே இரவுகளை அவளுக்கு மிகவும் பிடிக்கும், பகல் என்பது மிகுந்த வெளிச்சம், அதில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதர்கள் நுழைந்து கொண்டே இருப்பார்கள், ஆனால் இரவு.. அது நமக்கே நமக்கானது. நம்மோடு நமக்கான துணை இருந்தால், இன்னும் இரவுகளின் நீளம் நீள வேண்டும் என்றே தோன்றும்.
இரவின் கதகதப்பை உணர, காமம் மட்டுமே காரணமாக இருக்க வேண்டியதில்லை. இரவுகள் எண்ணங்களுக்கானவை, ஏக்கங்களுக்கானவை! ஞாபகங்களுக்கானவை! ரகசியங்களானவை, ரசனைக்கானவை, அழுகைக்காக, ஆறுதலுக்காக, தனிமைக்காக, தூக்கத்திற்காக, துக்கத்திற்காக, துணைக்காக என்று இரவின் துணை அவசியமாகிறது.
இரவு ஒரு இனிய இளைப்பாறல்!
இருவரும் உண்டு முடிக்க, அரி எல்லாவற்றையும் எடுத்து வைத்து உறங்க போகலாம் என்று நினைக்க, ஆதினிக்கு அவனோடு மாடிக்கு செல்ல ஆசை.
அகன்ற வானை, அதில் பரவியிருக்கும் அடர்ந்த இருளை, தேகம் தீண்டிச்செல்லும் மெல்லிய காற்றினை எல்லாம் அவள் வானமான அரிச்சந்திரனோடு ரசிக்க பிடிக்கும்.
“பேசணும்னு சொன்னீங்க? நான் மாடிக்குப் போகலாம் நினைச்சேன், நாளைக்கு லீவ்தானே” என்று ஆதினி கேட்க,
“நினைச்சதை செய்ய வச்சிருடி” என்று சலித்துக் கொண்டாலும் அவளுக்கு முன்னே மாடியேறி சென்றான் அரி. அங்கு கிடக்கும் கயிற்றுக் கட்டிலை எடுத்து நடுவில் போட்டு அவன் படுத்திருக்க, ஆதினிக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது.
கொஞ்ச நேரம் முன்பு வரை கூட அவன் மீது நிறைய கடுப்பு இருந்தது, பெரிய இவனா என்ற கோபம் இருந்தது. ஆனால் சட்டென்று இந்த மனம் எப்படி மாறிப் போகிறது என்று நினைத்தாள்.
அதே நேரம் நாம் விரும்புகிறவர்கள் நம் முடிவுகளையும் விரும்ப வேண்டும் என்று நினைப்பது என்ன உணர்வு, இது பிரியமா? பிடிவாதமா? இல்லை திணிப்பா? என்று அந்த இருபது படிகளை ஏறுவதற்குள் இத்தனை யோசனை ஆதினிக்கு.
அதை அப்படியே தயக்கமின்றி அரிச்சந்திரனிடமும் கேட்டாள்.
“பெரிய இவனா நீங்க? உங்க முடிவுக்கு ஒத்து வரலன்னா எங்கிட்ட பேச மாட்டீங்களா?” என்று கோபமாகக் கேட்டாள்.
“ஆதினி எப்போ அடுத்தவங்க வார்த்தைக்கு இவ்வளவு முக்கியம் கொடுக்க ஆரம்பிச்சா? எல்லாம் அவ இஷ்டம்தானே?” ரசனையா, நக்கலா என்று பகுத்தறிய முடியாத பாவனையில் கேட்டான் அரிச்சந்திரன்.
“போங்க அரி! வேணும்னு பண்றீங்க!” என்று அவன் நெஞ்சில் சாய்ந்தாள் சலிப்பாக.
“என்னடி சலிச்சிக்கிற?” அரி அவளை ஒற்றைக்கையால் அணைத்துக் கேட்க,
“உங்க மேல கோவமா வருது, ஆனா அதே நேரம் பிடிக்குது. எனக்கு பிடிச்சதை செய்யணும்னு என் இஷ்டம்னு நான் நினைச்சாலும், நீங்க வேண்டாம்னு சொன்னா முழு மனசோட செய்ய மனசு வரல”
“அதுவும் கொஞ்ச நாளா ரொம்ப கடுப்பா, சலிப்பா இருக்கு. போர் அடிக்குது, ஏதோ எந்திரிக்கிறேன், படிக்கிறேன், உங்களோட சண்டை போடுறேன். அப்படி ஃபீல் ஆகுது” என்று அவளின் எல்லா உணர்வையும் அப்படியே போட்டுடைக்க அரிக்கு ஆதினியை நிறைய பிடித்தது.
ஆனால் அதனை சொல்ல வரவில்லை. சொல்லில் அடக்க விரும்பவில்லை. இப்படி நினைத்ததை சொல்கிறாள் என்று அவள் மீது வாத்சல்யம் பிறந்தது.
“என்னை முதல்’ல செய்யாதனு சொல்றீங்க, அப்புறம் செய்னு சொல்றீங்க. அரசியல்வாதிங்க கூட்டணி வச்சுக்க பொய்யா உருட்டுவாங்களே, அப்படி பண்றோம். என்ன உண்மையை உருட்டுறோம், அவ்வளவுதான்!” என்று கடகடவென பேசினாள் ஆதினி.
“ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற?” என்று மென்மையாக அரி கேட்க, ஆதினி அமைதியாக அவள் முகத்தை அவன் கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.
ஷெரினின் மரணம் ஆதினியை அதிகம் பாதித்திருந்தது, கல்லூரி வாழ்க்கையை அது இன்னும் வெறுமையாக மாற்றியிருக்க, அந்த வெறுமை வீட்டிலும் பிரதிபலித்தது. அரிக்கும் வேலைப்பளு. தாரகை நிறைமாதம் என்பதால் திரையரங்கம் செல்வதில்லை, ராஜதுரையும் அரிச்சந்திரனும் மாறி மாறி செல்கின்றனர்.
“ஏன் அரி, இப்ப இந்த டோபமைன் கூட வேலை செய்ய மாட்டேங்கிதே, ஏன்?” என்று ஆதினி கேட்க, அரிக்கு அந்த கேள்வியில் அடக்க முடியாத சிரிப்பு, சத்தமாக சிரிக்க,
“அய்யோ ராத்திரியில இப்படி சிரிக்காதீங்க! அக்கம் பக்கமெல்லாம் வீடு இருக்கு” என்று அதட்டினாள்.
அவனோ விடாது சிரிக்க, அவன் மீசையைப் பிடித்து இழுக்க, வலியில் சிரிப்பை நிறுத்தியவன் அவளை இறுக்கமாக அணைத்தான்.
“அரைடிக்கெட்!” என்று ஆசையாக அழைத்த அரி,
“அந்த டோபமைன் பரவசம் எல்லாம் கொஞ்ச நேரம்தானே? இவ்வளவு சலிப்பா இருந்தாலும் என் நெஞ்சில் சாஞ்சிட்டு எங்கிட்ட கதை பேசிட்டு இருக்கியே, அதுதான் எனக்கு வேணும்.” என்றவனின் குரல் பிரியத்தை மட்டுமே உரியவளிடம் உதிர்த்தன.
✅ End of Episode 36
Very nice.