Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 1

அந்த கல்லூரி விடுதி இரவுக்கு உரித்தான இயல்பில் இருந்தது. மாணவர்கள் கூட்டமாக நண்பர்கள் அறையில் அமர்ந்து அசைன்மென்ட் செய்தனர், சிலர் அரட்டை அடித்தனர். சிலர் காதலரோடு பேசிக் கொண்டிருந்தனர். சிலர் படம் பார்க்க, ஒரு சில ஜீவன்கள் மட்டும் உறக்கத்தில்.

முதுகலைப் பயிலும் மாணவிகள் தங்கி இருக்கும் அந்த பிளாக்கின் இரண்டாவது தளத்தில், இயர் போன் மாட்டிக் கொண்டு இரவினை ரசித்தபடி நின்றிருந்தாள் ஆதினி.

“ஆதினி, உனக்கு கொஞ்சமும் பயமில்லயா?” ஷெரின் கோபத்துடன் கேட்டாள்.

“எதுக்கு பயம்?” ஆதினியின் பேச்சில் பயம் கூட தைரியமாகத் தான் வந்தது. தைரியம் என்று சொல்வதை விட அலட்சியம் என்று சொல்லலாம். வேண்டும் என்றே செய்த செயல் அல்லவா? அதனால் துணிவு தூக்கலாகவே இருந்தது.

நேற்று நடந்த இன்டர்னல் தேர்வை எழுதாமல் படம் பார்க்க போய் விட்டாள் ஆதினி. ஷெரின் அவளது தோழி, தோழிக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லி விட்டாள். ஆதினி படம் பார்த்து அதனை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்து, போதாக்குறைக்கு அதனை ஆசிரியர்கள், மாணவர்கள் இருக்கும் கிளாஸ் குரூப்பிலும் பகிர்ந்து விட்டாள்.

இன்று அது தெரிந்து அவர்களுடைய துறைத் தலைவர்(HOD) பிடி பிடி என பிடித்து விட்டார். வீட்டில் இருந்து அழைத்து வர சொல்லி விட்டார். இதற்காகத்தானே ஆதினி இவ்வளவு செய்தது.

தன்னை இங்கு கல்லூரிக்கு அனுப்பி விட்டு ஒருத்தன் நிம்மதியாக இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. தன்னை தாங்கிய உறவுகளை மட்டும் பார்த்தவள், தவிர்ப்பவனை தவிக்க விட நினைத்தாள்.

“நாளைக்கு வீட்டிலிருந்து வந்தா இருக்கு உனக்கு” ஷெரின் கடுப்பாக சொன்னாள்.

“வரட்டும், இந்த ஆதினியை ஈசியா அவாய்ட் பண்ண கூடாது” என்றாள் தீவிரமான குரலில்.

“அரி அண்ணா உன்னை திட்ட போறாங்கடி, பேசாம உன் அச்சனுக்கு சொல்லியிருக்கலாம்” ஷெரின் தோழிக்காக சொல்ல,

“அப்பாவை கூப்பிட்டா என்ன இருக்கு? எனக்கு அரிச்சந்திரன் வரணும்” என்றாள் முடிவாக.

தன் தாத்தா உறங்குகிறாரா என்று பார்த்து விட்டு உறங்க வந்த போது தான் போனை எடுத்துப் பார்த்தான் அவன். வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியை பார்த்ததுமே கொதித்தான்.

ஆதினியை பற்றிய புகார்தான் அது. பார்த்த கணமே ஆதினிக்கு அழைத்தான். ஆதினி அதுவரை ஆன்லைனில் இருந்தவள் வேண்டுமென்றே போனை அணைத்து வைத்தாள், ஷெரின் போனையும் சைலன்டில் போட்டாள். ஆனால், கணவனின் அழைப்பு வந்ததும் மனதோரம் ஒரு துள்ளல் வெளிப்பட்டது.

‘வாங்க அரிச்சந்திர மகாபிரபு! நாளைக்கு மீட் பண்ணலாம்’ என்று மனதோடு பேசினாள்.

“ஏண்டி என் போனை சைலண்ட்ல போடுற, அண்ணா டென்ஷன் ஆகபோறாங்க” ஷெரின் சொல்ல,

“குத்துக்கல்லுக்கு குளிரா வெயிலான்னு எங்காத்தா சொல்ற மாதிரி அந்த ஆட்டுக்கல்லு அரிச்சந்திரன் அசையாம இருக்குல. ஆதினியை கண்டுக்காம இருக்கான் இல்ல. நாளைக்கு வந்து சிக்கட்டும். இப்போ எடுக்க மாட்டேன்” என்றாள் சிரிப்பாக.

“ஆட்டுக்கல்லோ? ப்ராந்து! அண்ணாகிட்ட நீ சிக்க போற. பாரு” என்றாள் ஷெரின் தாமஸ்.

“ஷெரினே! அதெல்லாம் சப்ப மேட்டர், சால்ட் வாட்டர் எனக்கு. இன்னிக்கு வேலை ஓவர். நன்னாயிட்டு உறங்கலாம். வாடி” என்று அறைக்குள் ஷெரினை இழுத்துப் போனாள்.

கணவனின் இரவை திருடி விட்டு நிம்மதியாக உறங்கினாள் ஆதினி அரிச்சந்திரன்!

அரிச்சந்திரனுக்கு அந்த நேரம் அவ்வளவு கோபம் வந்தது. ஏதோ விளையாட்டுத்தனம், படம் பார்த்து மாட்டிக் கொண்டாள் என்று பொறுமையாக இருக்க நினைத்தால், அவளோ அழைப்பு கூட எடுக்காமல் இருக்க, அதுதான் சினத்தை தூண்டியது.

அரிச்சந்திரன் லா படித்து விட்டு அட்வகேட்டாக இருக்கிறான். சென்னையில் உள்ள கல்லூரியில் படித்தவன், அங்கேயே ஒரு வழக்கறிஞரிடம் ஜூனியர் ஆக இருந்தான். அவரின் பெரிய வழக்குகளில் இவன் உதவுவான். இப்போது திருவாரூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பார்க்கிறான்.

கிரிமினல் லாயர்!

அரிச்சந்திரன் வீட்டில் இப்போது அவனும், தாத்தா ராமசாமியும் மட்டுமே. அரியின் தங்கை தாரகை காதல் திருமணம் செய்து கொண்டு அதே ஊரில் இருக்கிறாள். ‘தாரகை டாக்கீஸ்’ என்று திரையரங்கம் அவர்களுக்கு உள்ளது. அதனை தாரகை பார்க்கிறாள்.

அரி கல்லூரி படிக்கும் போதே ஒரு ரயில் விபத்தில் அவன் அப்பா தயாளனும், அம்மா ராஜலக்ஷ்மியும் தவறியிருந்தனர். அதன் பின் ராமசாமி நலமாயிருந்த வரை பெயரன் பெயர்த்தியைப் பார்த்தார். இப்போது வயது எண்பதை தாண்டிய போதிலும் நலமுடன் இருக்கிறார். அரிச்சந்திரன் படித்து முடித்து சென்னையில் அவனுக்கான வாய்ப்புகள் இருந்தும் தங்கைக்காக, தாத்தாவுக்காக சொந்த ஊரிலே இருக்கிறான்.

பெரிய பணக்கஷ்டம் இல்லை, திரையரங்கில் கணிசமான வருமானம் வரும், கூடவே ராமசாமி மிராசுதார். நிலங்கள் உண்டு.

அவனுக்கு திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகிறது. ஆதினி அவன் மனைவி! உண்மையில் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத திருமணம், ஒருவேளை எதிர்ப்பார்ப்புகள் இருந்திருக்க வேண்டுமோ? வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்வது சிறப்பான விஷயம், ஆனால் சிலதை எதிர்ப்பார்க்க வேண்டும், கொஞ்சம் சுவாரசியம் கூடும்!

அடுத்த நாளை எதிர்ப்பார்த்து வாழ்வது தானே வாழ்வின் அம்சம், அப்படி இருக்க திருமணம், துணை என்று கொஞ்சம் ஆவல்கள் இருந்திருக்க வேண்டும் அவனுக்கு.

வருவதை எதிர்கொள்வது அவன் பழக்கம், அதனால் மனைவி மீதி எந்த எதிர்ப்பார்ப்புகளும் இல்லை. இருந்தும் வரும் துணையை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும், தானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். பெண்களை மதிப்பவன், ஆனால் ஆதினியை?!

காதலை ஆராதிப்பவன், அவன் அப்பா அந்த காலத்தில் ஜாதியை பெரிதாக பார்க்கும் ஊரில் இருந்து கொண்டு, வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்தார். அவன் தங்கை காதலையும் புரிந்து கொண்டவன், இவ்வளவு இருந்தும் அவனுக்கு காதல் வாய்க்கவில்லை, அன்பான திருமண வாழ்வு இல்லை. அதற்கான முயற்சிகளும் இல்லை.

இத்தனைக்கும் காரணம் ஆதினி! திருமணம் முடிந்த மூன்றே மாதத்தில் பிரிந்து விடலாம் என்றாள். அந்த கோபம் அரிச்சந்திரனுக்கு. கல்லூரியில் முதுகலை படிக்கும் பெண், அவன் தங்கையை விடவும் சின்ன பெண். ஆனால் வயதுக்கும் அறிவுக்கும், துணிவுக்கும் சம்மந்தப்படுத்தும் சாதாரண மனநிலை அவனிடம் கிடையாது. அதுவும் ஆதினியை எல்லாம் சின்ன பெண் என்று நினைக்கவே முடியாது. அரிச்சந்திரன் மனைவியிடம் இணக்கம் காட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனக்கென்ன என்ற எண்ணத்தில் இருக்க, அது ஆதினியை இன்னும் கோபப்படுத்தியது.

ஆதினியை அவ்வளவு ஈசியா வேண்டாம் சொல்லிடுவியா? என்ற ஆணவம்! வீட்டில் எல்லாரும் முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்பட்டவள், கணவன் என்பவன் அவளை கண்டுகொள்ளாது போறியா போ என்ற மனநிலையில் நடத்த, அதுதான் ஆதினியை கலாட்டா செய்ய வைத்தது.

இப்போது போனை எடுக்காததில் இன்னும் கோபம். மீண்டும் அழைக்க, அவள் எடுக்கவில்லை.

“நாளைக்கு இருக்கு அவளுக்கு” என்ற எண்ணத்தோடு உறங்க நினைத்தான்.

நாளை மதியம் அவனுக்கு வழக்கு விஷயமாக நீதிமன்றம் போகும் வேலையிருக்கிறது. இதில் காலையில் மனைவிக்காக, அவள் கல்லூரியில் சென்று நிற்க வேண்டும்.

“என்னடா சீக்கிரம் கிளம்பிட்ட?” என்று டீவி பார்த்தபடி அவன் தாத்தா ராமசாமி கேட்க,

“ஆதினி காலேஜ்ல வர சொல்லியிருக்காங்க தாத்தா” என்றான் உண்டபடி.

“பேத்தியைப் பார்க்க போறியா? ஏண்டா ராஸ்கல் முன்னாடியே சொல்லியிருக்கலாமில்ல, எதாச்சும் வாங்கிட்டு போ. அங்க மேஜையில இந்த துரை பய கற்பூரவல்லி பழம் கொடுத்தான், அது இருக்கு. பேத்திக்கு எடுத்துட்டுப் போ. லீவுக்கு வர சொல்லு” என்று ராமசாமி பேசிக்கொண்டே போக,

“என்னமோ அவார்ட் வாங்கின உன் பேத்தியைப் பார்க்க போறேனா நான்? படம் பார்த்து மாட்டியிருக்கா. அதுக்கு போறேன்” என்றதும் ராமசாமி உடனே சிரித்து விட்டார்.

“பேத்திக்கு விளையாட்டுதான், சரி சரி. நீ சும்மா அவங்க முன்னாடி திட்டுற மாதிரி திட்டிட்டு பேத்திகிட்ட நல்லவிதமா பேசிட்டு வா.” என்று சொல்ல முறைத்தபடியே கிளம்பினான். கல்லூரி சென்றவனுக்கு நேற்றைய கோபம் பன்மடங்கானது. ஆதினியின் க்ளாஸ் மேம் அவனிடம் அவள் செய்தது எல்லாம் சொன்னார். அரிக்கு வேண்டுமென்றே ஆதினி படம் பார்த்து அது ஆசிரியர்களுக்கும் தெரியும்படி செய்திருக்கிறாள் என்பதில் அவ்வளவு ஆத்திரம். ‘திமிரெடுத்தவ’ என்று மனதில் திட்டினான்.

எச். ஓ. டி அறைக்கு செல்ல, அவர் இவனை கேள்வியாக பார்த்தார்.

“ஆதினியோட கார்டியன்” என்று அவள் வகுப்பு ஆசிரியை சொல்ல, எச். ஓ. டி ஆதினியை அழைத்து வர சொன்னார்.

ஆதினுக்கு அரிச்சந்திரனை பார்க்கவும், வந்து விட்டானா என்ற எண்ணம் ‘வர வைத்து விட்டேன், பார்த்தியா?’ என்ற கர்வம்.

ஆதினி வந்து நிற்கவும் அரியின் பார்வை சில நொடிகள் அவளை அளவிட்டது. ஆதினி இப்படி மாட்டிக் கொண்டோம் என்ற பாவனை எதுவுமில்லாமல் மிகவும் உற்சாகமாக ஜீன்ஸ், ஷார்ட் டாப் என்று நேர்த்தியாய் நின்றாள். மனைவியிடமிருந்து பார்வையை அரி அகற்றினான்.

எச்.ஒ.டி அரியிடம் “நீங்க ஆதினியோட..?” என்று இழுக்க

“ஹஸ்பண்ட்” என்றான். அப்படி சொல்லவும் ஆதினி கிண்டலாக உதடு பிதுக்கினாள்.

“ஓஹ்! உங்க வைஃப் என்ன செஞ்சாங்க சொன்னாங்களா சர்?” என்று கேட்க, அரியின் பார்வை ஆதினியை ஆராய்ந்தது. ஆதினியோ அசராமல் அவன் பார்வையை தாங்கி நின்றாள். இதில் கண்களில் சிரிப்பு, செல்லமாக கண்சிமிட்டல் வேறு! அரி முறைக்க,

எச்.ஒ.டி அவனிடம் “இப்படி செஞ்சா நெக்ஸ்ட் டைம் சிவியர் ஆக்ஷன் எடுப்பேன் சர்.” என்றவர் அவன் என்ன செய்கிறான் என்று விசாரித்தார். அரி சொல்ல,

“டிசிப்ளின்னா என்னன்னு சொல்லி கொடுங்க இவங்களுக்கு.” என்றவர் ஆதினியை வெளியே நிற்க சொல்லிவிட்டு அரியிடம் பேசினார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடம் அவனை வைத்து செய்தார். குடும்பத்துல சண்டையா என்றெல்லாம் கேட்க, அரி கடினப்பட்டு பொறுமையாக இருந்தான். அவரிடம் தன்மையாக,

“ஃபன்னா பண்ணிட்டா சர், இனிமே இப்படி நடக்காது. சாரி” என்று மன்னிப்புக் கேட்டு வந்தவன் அங்கு நின்ற ஆதினியை முறைத்தபடி கேண்டீன் பக்கமாக நடந்தான்.

அங்கு சென்று காஃபி சொன்னவன் தன் முன் வந்து உட்கார்ந்த ஆதினியிடம்,

அரிச்சந்திரன், “நான் படிச்சப்போ கூட இப்படியெல்லாம் திட்டு வாங்கினதில்ல” என்றான்.

“அதுக்கு?” என்று அவள் கேட்க

“இதெல்லாம் கெத்துனு நினைச்சிட்டு இருக்கியா நீ? ஏதோ ஒன்ஸ் ஆர் டுவைஸ் இப்படி ப்ரண்ட்ஸோட சேர்ந்து படம் பார்க்கிறது, க்ளாஸ் பங்க் பண்றதெல்லாம் ஓகே. ஆனா உனக்கு திமிர் ஜாஸ்தி, படம் பார்த்துட்டு அதை ஸ்டேட்டஸ் வைக்கிற, க்ளாஸ் குருப்ல ஷேர் பண்ற” என்று கோபமாகப் பேசினான்.

“தப்பு தெரியாம செஞ்சா என்ன கிக்?” என்று ஆதினி கேட்க,

“இடியட்! என்னமோ நீ செஞ்சுத் தொல! இப்படி பண்றதுன்னா உங்கப்பா நம்பர் இல்லை, உன் தாத்தா நம்பர் கொடுக்க வேண்டியது தானே? என்னை ஏன் வரவச்சு டென்ஷன் பண்ற?” என்று கத்த,

“எதுக்குக் கத்துறீங்க?” என்று ஆதினி அவனை அதட்டினாள்.

“வந்தா என்ன இப்போ? ஆதினிக்காக வந்தா என்ன?” என்று கேட்க,

“அதான் பிரியலாம் சொல்லிட்ட இல்ல, அப்புறம் என்ன?”

“அதுக்கு நான் சாரி சொல்லிட்டேன்”

“உனக்கு வேணும்னா வேணும், வேண்டாம்னா வேண்டாமா?”

“ஆமா! ஆதினிக்கு வேணும்னா வேணும்! வேண்டாம்னா வேண்டாம்” அழுத்தமாக ஆணவமாக அவள் நிலை சொல்ல, அது அரிச்சந்திரனின் ஈகோவை தூண்டியது.

“அரிச்சந்திரனுக்கும் நீ வேண்டாம் ஓகே. நீ நினைச்சு நினைச்சு பேச, அதுக்கு எல்லாம் ஆமா போட இந்த அரிச்சந்திரன் ஆள் இல்லை” என்றான் நக்கலாக.

ஆதினி ஏதோ சின்னப்பெண், திருமணம் நடந்த அவசரத்தில் வார்த்தையை விட்டுவிட்டாள் என்று அரியால் மன்னிக்க முடியவில்லை. ஆதினியும் இறங்கி பேசவில்லை. அரியும் மனைவியின் இடத்தில் இருந்து யோசிக்கவில்லை.

‘தான்’ என்ற தலைக்கணம் தலைவன் தலைவி இருவரிடமும். இருமுனை கத்தி அவர்கள்!

“இப்படி பேசுற நீங்க ஏன் இன்னிக்கு வந்தீங்க?” என்று ஆதினி இப்போது கோபத்துடன் கேட்க,

“உன் படிப்பு கெட கூடாதுனுதான். படிக்காம நீ என்னை டென்ஷன் பண்ண நினைச்சு இப்படி செஞ்சா உனக்கு டீசி கொடுப்பாங்க. புரிஞ்சதா? இனிமே இப்படி கேஸ்ல மாட்டாத” என்று அறிவுரை சொல்ல,

“கேஸ்ல மாட்டினா காப்பாத்த அட்வகேட் அரிச்சந்திரன் இருக்காரே எனக்கு” என்று அப்போதும் ஆதினி அலட்டாமல் பேசினாள்.

“உன் கூட பேசுறது வேஸ்ட்” என்று அரிச்சந்திரன் எழுந்து கொள்ள, ஷெரின் அங்கு வந்தாள். அரியிடம் நலம் விசாரிக்க, அரியும் நல்லவிதமாக பேசினான். ஷெரின் அரியிடம்,

“ஏதோ தெரியாம பண்ணிட்டாண்ணா. எச்.ஓ.டி என்ன சொன்னார்?” என்று கேட்க,

“சாரி கேட்டு இனிமே இப்படி செய்ய மாட்டா சொல்லியிருக்கேன். நீ பார்த்துக்கோ” என்ற அரி காஃபியை எடுத்து வேகமாக குடித்துவிட்டு “வரேன்மா” என்று வெளியே நடந்தான். ஆதினி வேகமாக அவன் பின்னே போனவள்,

“நீங்க ரொம்ப ஓவரா பண்றீங்க. ஆதினி ஒன்னும் நீங்க சொன்னா உடனே ஆமா போடுறவ இல்லை. பாருங்க டிசி கொடுத்தாலும் பரவாயில்லனு நெக்ஸ்ட் டைம் என்ன பண்றேனு” என்று ஆவேசமாக சொல்ல,

“என்ன வேணுமோ பண்ணு, பட் என் நம்பர் மட்டும் கொடுக்காத. உனக்காக எல்லாம் என் டைம் வேஸ்ட் பண்ண முடியாது” என்று சரிக்கு சரியாக பேசி ஆதினியை வெறுப்பேற்றினான் அரிச்சந்திரன்.

அன்று பகல், இரவு என மொத்தமாக ஆதினிக்கு அரிச்சந்திரனின் நினைவே. அவனின் அலைக்கழிப்பால் அவள் அகம் அலைப்பாய்ந்தது. உறங்காமல் படுத்திருக்க, தாரகையிடமிருந்து அழைப்பு. எடுக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனை ஆதினிக்கு.

‘இரவு தனிமைக்கானது!’

✅ End of Episode 1
How did you feel about this episode?
❤️ 2 🔥 1 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Sathya Velusamy Reader 2 months ago

அடேய் அரி நீயும் உன் தங்கச்சியும் எங்க பையன எப்படி படுத்துனீங்க...... அதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு செய்யறா ஆதினி..... Enjoy madi

😂 3 more...
Srichitra Reader 2 months ago

Nice 

Mrs Beena loganathan Reader 2 months ago

அமைதியான 

அழுத்தமான 
அரியையே 
ஆட்டிப்படைக்கும் 

ஆதினி 
அரி இனி நீ காலி......
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top