Episode 7

அரிச்சந்திரனும் ஆதினியும் அந்த நேரம் எதையும் ஆவலாக எதிர்ப்பார்த்துச் செய்யவில்லை. அதுவும் அரிச்சந்திரன் ஆதினியின் முத்தத்தை எதிர்ப்பார்க்கவே இல்லை.

எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும் பிடிக்காமல் இல்லை. அதுவும் இருவருக்கும் முதல் முதல் முத்தம்!

முத்தத்தின் அகரத்தை ஆதினி தொடங்கியிருக்க, அரிச்சந்திரன் அகரத்தை சிகரமாக்கினான்.

சொல்லித் தெரியா கலை, சொல்லை விடுத்து மெல்ல மெல்ல நிதானமாக அரிச்சந்திரன் ஆதினிக்கு முத்தமிடத் தொடங்கினான். யாரின் ஆதிக்கம் என்றே தெரியவில்லை. ஆதிக்கம் என்பது தவறு! அனுபவம்!!

இருவருக்கும் முதல் அனுபவம், உண்மையில் இருவரும் உணர்ந்து, உயிர்த்து ரசித்து முத்தமிட்டனர். மிக மிக முக்கியமாகப் பிடித்து!!

இந்த முத்தம் மட்டுமில்லாது திருமணம் கூட இருவரும் பிடித்துச் செய்ததே!

தாரகைக்குத் திருமணம் முடிந்தவுடனே ராமசாமி பேரனுக்கும் வரன் பார்க்க ஆரம்பித்துவிட்டார். காதல் எல்லாம் நினைத்தால் வராதே, அரிச்சந்திரனுக்கும் அப்படியே. அதனால் தாத்தா பார்க்கும் வரனே சரி என்றிருந்தான்.

தாரகையின் கணவன் ராஜதுரை தினமும் சிறிது நேரம் ராமசாமியோடு பேசிவிட்டு செல்வான். ராமசாமியின் நண்பர் வணங்காமுடிக்கு உடல் நலமில்லை என்று ஊர் செய்தியை சொல்ல, ராமசாமிக்கு நண்பரை பார்க்க ஆசை. துரை அழைத்து சென்று வந்தான். வணங்காமுடியின் பேத்தி ஆதினி. கூடவே ராஜதுரையின் அம்மா அருணாவுக்கு ஆதினியின் அம்மா சித்தப்பா மகள்.

வணங்காமுடி பேத்தியைப் பற்றிக் கவலையாக, அவள் கல்யாணத்தைப் பார்க்க முடியாத சோகம் எல்லாம் சொல்ல, ராமசாமிக்கும் அதே கவலைதானே? அரிச்சந்திரன் பற்றி அன்றே ஆதினி அப்பா ரவிக்குமாரிடம் பேசி, ஒரு நாள் பெண் பார்க்க ஏற்பாடானது.

அரிக்கு ஆதினியைப் பற்றி சொல்லவும் தானாகவே ஒரு இளக்கம் தோன்றியது. தன்னைப் போல் ஒருத்தி என்ற பரிவு! பேசிப் பார்த்துப் பிடித்தால் மேற்கொண்டு செல்லலாம் என்று எண்ணியிருந்தான்.

பேச்சிலும் பிடித்தது அவளை. கொஞ்சல், குழைவெல்லாம் இன்றி நிமிர்வாக, எனக்கு இது தேவை என்று தெளிவாக பேசிய பெண்ணை மிகவும் பிடித்து விட்டது.

“எனக்கு பிஜி பண்ணனும். அதுக்கு என்ட்ரன்ஸ் படிக்கிறேன், இப்போ மேரேஜ் செய்ய இன்ட்ரஸ்ட் இல்லை” என்றதும்,

“அப்போ உங்க வீட்ல பேசவா?” அரி கேட்க,

“எனக்கு எங்க வீட்ல இதுவரைக்கும் நோ சொன்னதே இல்லை. எனக்கு எங்க வீட்ல பேச வேண்டியதை வீட்லயே பேசுவேனே? இது உங்களோட சாய்ஸும் கேக்கணும். இந்த விஷயத்துக்கு மட்டும் ஃபோர்ஸ் பண்றாங்க. நீங்க வேண்டாம்னா வேற பார்ப்பாங்க.”

“வேற உனக்கு பிடிச்சா ஒகே சொல்லு”

“எனக்கு வேற எல்லாம் வேண்டாம். நீங்களே ஓகே” என்றாள் அவன் கண்ணோடு கண் பார்த்து.

“பார்த்தாலே பிடிச்சிருமா?” அவன் ஆச்சரியமாகக் கேட்க,

“பார்த்தா எல்லாம் பிடிக்காது, வாழ்றதுக்கான முடிவை யாரும் ஒரு செகண்ட்ல எடுக்க மாட்டாங்க. எங்க ராஜாண்ணா சொன்னார், நீங்க பெஸ்ட்னு!”

“ஓஹ், ராஜதுரை சொன்னா நான் பெஸ்ட்னு ஓகே சொல்லிடுவியா?” அரி கிண்டலாகக் கேட்டான்.

இருவருக்கும் இயல்பாகவே பேச வந்தது. அதனால் தயக்கமின்றி பேசினர். பிடித்தம் என்பதை விட vibe, ஒரு வித மாந்த உணர்வு. நமக்குப் பிடித்தவர்களோடு எல்லாம் மட்டும் அந்த அலைவரிசை வந்துவிடாது. அருகாமை இனிமை தராது! பிடித்தமிருந்தும் அலைவரிசையும் ஒத்து போனால் மட்டுமே அது இன்னும் சிறப்பாக இருக்கும்.

“ராஜாண்ணா பெஸ்ட்னு சொன்னதை டெஸ்ட் பண்ண ஓகே சொன்னேன்” ஆதினியும் கிண்டலாகவே சொல்ல,

“ஸோ, வாட்ஸ் யுவர் பாயிண்ட் நவ்?” அரி கண்களில் சிரிப்போடு கேட்க,

“எனக்கு எண்ட்ர்ன்ஸ் படிக்கணும், டைம் வேணும்! உங்களுக்கு ஓகேவா சொல்லுங்க. அப்புறம் உங்க கல்யாண கனவு எல்லாம் என்னால கெட்டுப் போச்சு சொல்லக்கூடாது” என்று அப்பவே அதட்டினாள்.

எல்லாவற்றிலும் அவளின் ஆதிக்கம், முடிவு! அதை அரியும் தடுக்கவில்லை.

அரிச்சந்திரனுக்கு அந்த நொடி அவள் மீது பெரும் பிடித்தம்! வேண்டியதை எத்தனை தெளிவாக, உரிமையாக கேட்கிறாள். அந்த செல்லத்திமிர் பிடித்தது அவனுக்கு.

ஆதினிக்கு ராஜதுரை சொன்னது, அவள் அப்பா சொன்னது எல்லாம் வைத்து அரிச்சந்திரனை மணக்கலாம் என்று தோன்றினாலும், அவளிடம் மிக சகஜமாக, உரிமையாக மரியாதையாக பேசியவனைப் பிடித்தது.

ஆனாலும் மனத்தின் சஞ்சலங்கள் பல மாதங்கள் அவளை அவனிடம் பிடித்ததைக் காட்டவிடவில்லை. இப்போதோ எல்லாம் மனத்தில் குறைந்திருந்தாலும், அவன் மேல் கோபமிருந்தாலும் அந்த நொடி, தானாக அமைந்த நொடியை தனதாக்கிக் கொண்டாள் விரும்பியே.

சில நொடிகளில் அரி விலகி அப்படியே அவளை லேசாக அணைத்து விடுவித்தான். ஆதினி எக்கிதான் இவ்வளவு நேரம் நின்றிருந்தாள். அதை கண்டு அரி,

“அரைடிக்கெட் தான் நீ!” என்று மீண்டும் கிண்டல் செய்தான். ஆதினியோ முறைத்தபடி கணவனை பார்க்க, அரியின் கண்கள் ஆதினியை ரசனையோடு அள்ளியது.

‘கண்ணைக் காட்டிக் கவுத்துடுறான் வக்கீல்!’ என்று ஆதினியின் மனம் முணுமுணுத்தது.

ஆதினியின் முகத்தோடு முகம் உரசும் இடைவெளியில் நின்று,
“என்னமோ கல்யாண கனவெல்லாம் காண கூடாதுனு ஆதினி ஆர்டர் எல்லாம் போட்டா” கண்ணோரம் சுருங்கிட, பார்வையை மாற்றாது அரிச்சந்திரன் கேட்டான்.

“ஆர்டர் அரிச்சந்திரனுக்கு! நான் கனவு காண மாட்டேன் சொன்னேனா?” ஆதினி புருவங்கள் உயர்த்திக் கேட்க, “அடியே!” என்று சிரித்துவிட்டான்.

சிரித்தபடி அவள் கன்னம் கிள்ளினான். ஆதினி முகம் சுருக்க, நேரம் ஆவது உணர்ந்து அரி தலையைக் கோதியபடி வெளியே சென்றான்.

உன்னிக்கிருஷ்ணனும் ஸ்வர்ணலதாவும் உருகிக் கொண்டிருந்தனர்.

‘குளிருது குளிருது
இரு உயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது’

பாடலையும் பாவையும் மாறி மாறி பார்த்தவன் மனம் உல்லாசமாய் உணர்ந்தது. பாடலை விசில் அடித்தபடி செல்ல, ஆதினி கிச்சன் வாசலில் சாய்ந்து நின்று முகமெல்லாம் நிறைந்த புன்னகையோடு போகும் கணவனை பார்த்து நின்றாள். அரியும் அறைக்குள் போகும் முன், ஆதினியைப் பார்த்தான்.

ஒற்றை விரல் நீட்டி, “கிளம்பு, போ” என்று குரல் கொடுத்து உள்ளே சென்றான்.

இருவருக்கும் புது உணர்வில் உடலில், உயிரில் பரவசம்! ஆதினி அங்கேயே டீவியை பார்த்து நிற்க, அரிச்சந்திரன் வெளியே செல்ல தயாராகி வந்தவன் ஆதினி நிற்பதை பார்த்து,

“போய் தாராவை அழைச்சிட்டு சீக்கிரம் கடைக்குப் போய்ட்டு வாங்க, நான் வர நைட் ஆகும்” என்றவன் தாத்தாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் முகம் புன்னகையில் இருக்க, அரிச்சந்திரனின் அலைவு(vibe) ஆதினியையும் பற்ற, குதூகலமாக தாரகையின் அறைக்கதவை தட்டினாள்.

“காதல் தாரகையே! வரீங்களா? கடைக்குப் போக ரெடியா?” என்று கிண்டலாக இழுக்க,

“நான் கடைக்குப் போறதுக்கு ரெடியா இருக்கேனே, ஆதினியை அழைச்சிட்டு போனு என் அண்ணன் சொன்னான். நீ இன்னும் ரெடியாகல. என்ன செஞ்ச இவ்வளவு நேரம்?” என்று தாரகை அவளைத் திருப்பிக் கேள்வி கேட்க,

“உங்க நொண்ணனைக் கொஞ்சிட்டு இருந்தேன், பத்து நிமிஷம், சிட்டா பறந்து வரேன் அத்தாச்சி” என்று ஆதினி அறைக்குள் போக, தாரகை புன்னகையோடு தாத்தாவைப் பார்க்க போனாள். அவர் உறக்கத்தில் இருக்க, சமையல் செய்யும் அக்கா வந்தார். அவரிடம் பேசியபடி தாரகை காத்திருக்க, ஆதினி வந்துவிட்டாள்.

✅ End of Episode 7
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 4 days ago

Nice 

Mrs Beena loganathan Reader 15 hours ago

கருத்து மோதலை 

கொஞ்சம் தள்ளி வைத்து 
காதல் கொஞ்சம் செய்வோம்...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top