Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 6

“பாவமா? உன்னைக் கட்டினதுக்காகவா டி ஃபீல் பண்ற? இவ்வளவு நல்லவளாடா அரி உன் பொண்டாட்டி?” என்று அவனே கேட்க, ஆதினி அவன் தோளில் வேகமாக குத்தினாள்.

அரியும் சிரிப்போடு அவளை அணைத்துக் கொண்டு, “என்னாச்சு ஆதினி?” என்று மெல்ல கேட்டான்.

“நீங்களும் என்னை மாதிரி அம்மாவை காலேஜ் டேய்ஸ்ல… பாவம் நீங்க தாரா அத்தாச்சிலாம்… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று தேம்ப,

“ப்ச்! ஆதினி!” என்று அதட்டியவன் “அழாத!” என்றான்.

அவள் மௌனமாக கண்ணீர் வடிக்க, “இந்த தாத்தா வேலை தானே? அது நடந்து பல வருஷம் ஆச்சுடி, இப்போ நீ ஃபீல் பண்ணி என்னை கஷ்டப்படுத்தாத!” என்றதும் ஆதினி கண்களை துடைத்துக் கொண்டாள்.

கரகரத்த குரலில், “சாரி, இப்போ பேசியிருக்கக் கூடாது!” என்றாள்.

ஆதினியின் தோளில் தட்டியவன், “பேசினத்துக்குத் திட்டல, அழறதுக்கு சொன்னேன்” என்றவனிடம்,

“உங்களுக்கு அப்போ ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் இல்லை. அதை யோசிச்சுதான் நான் ஹாஸ்டல் போக கேட்டப்ப உடனே ஒத்துக்கிட்டீங்களா? அட்லீஸ்ட் எனக்காச்சும் அப்பா இருக்கார், எந்த பொறுப்பும் இல்லை. உங்களுக்கு..” என்று பேசி கொண்டே போக,

“ஆதினி! பொறுப்பு இருக்கறது நல்ல விஷயம்தான், என் அப்பா அம்மா இருந்தப்ப கூட நான் பொறுப்பாதான் இருந்திருக்கேன்” என்று புன்னகை செய்தவனிடம்,

“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லல?” என்று மீண்டும் வினவ,

“உனக்குப் புரியுது இல்லையா? அப்புறம் என்னை ஏன் கேட்கிற? அண்ட் ஆதினி அறிவாளி!” என்று அவள் கன்னம் தட்டினான்.

“இல்ல, நான் எனக்கு மட்டும்தான் கஷ்டம்ன்ற மாதிரி ரொம்ப இரிட்டேட்டடா ஃபீல் பண்ணினேன். எனக்கு அம்மா ஹாஸ்பிட்டல் போய் அப்புறம் இறந்தாங்க. உங்களுக்கு அப்படியொரு தாட்டே வந்திருக்காதே, டிரெயின்ல போனவங்க திரும்பி வருவாங்கதானே நினைச்சிருப்பீங்க?” கேட்கும்போதே ஆதினிக்குக் கண்ணில் நீர் நிறைந்தது.

அரிச்சந்திரனுக்கும் ஆதினியின் கேள்வியில், அவள் கண்ணீரில் கண்கள் கலங்கின. அதை பார்த்த ஆதினி அவனை ஆறுதலாய் அணைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த அரிச்சந்திரன், தன்னை சரிப்படுத்தினான். மனைவியின் இறுகிய அணைப்பை இளக்கியவன்,

“ஏய் அரைடிக்கெட்! என்னை அழ வைக்கிறியா நீ? அழுத பிச்சிடுவேன்” என்று அதட்டினான்.

மெல்ல அவளை விட்டு விலகி படுத்தான். அவன் வலக்கரம் நீண்டிருக்க, அதில் ஆதினி தலை வைத்திருந்தாள். விட்டத்தை பார்த்தவன்,

“ஒவ்வொருத்தருக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த ஒவ்வொரு வழி இருக்கிற மாதிரி துக்கத்தை வெளிப்படுத்துற வழிகளும் வேறதான், சிலர் அவங்க வேலையில மூழ்கி மறந்துடுவாங்க. சிலர் தனியாகிடுவாங்க, சிலர் கதறி அழுவாங்க. இன்னும் கொஞ்ச பேர் அந்த துக்கத்தை ஃபேஸ் பண்ணினவங்களோட இருப்பாங்க. எப்படியிருந்தாலும் எத்தனை வயசானாலும் அந்த துக்கம் போகவே போகாது! பட் அதோட தாக்கத்தை தாங்குற பக்குவம் வரும். மே பீ எனக்கு அதுதான்!”

“உன்னோட துக்கத்தை என்னோட கம்பேர் பண்ண கூடாது! அது தப்பு! அதுவும் மரணம்… அதை கடக்குறது எல்லாருக்கும் ஈசி இல்லை, அதோட வாழ்றதும் ஈசி இல்லை. எங்க வீட்லயே என்னோட துக்கமும் தாத்தாவோடதும் வேற, எனக்கு அப்பா ஒரு வழிகாட்டி, ஒரு எதார்த்தம் இருக்கு இல்லையா? என்னோட வாழ்க்கையோட கடைசி வரை அவர் வர வாய்ப்பு இல்லை. தாத்தாவுக்கு அவர் மகன், கடைசியில அவர் சாகும்போது இருக்கணும்னு நினைச்சிருப்பார், அவரோட துக்கம் பெருசு இல்லையா?”

“அவங்க ஒரு வருஷத்துல மீண்டுட்டாங்க, நீங்க என்ன இப்படி இத்தனை வருசத்துல மாறல, இதெல்லாம் அபத்தம்! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வலி இருக்கு, அதை போக்க ஒரு வழி இருக்கு! அது எல்லாருக்கும் தெரியணும்னு அவசியம் இல்லை. நீ சொல்லலனாலும் எனக்குப் புரிஞ்சது. அதான் உன்னை ஹாஸ்டல் அனுப்பினேன்.” என்றவன்,

“இப்போ உனக்கு பரவாயில்லையா?” என்று அக்கறையாகக் கேட்டான்.

“உங்ககிட்ட பேசினதுக்கு அப்புறம் பரவாயில்லை. இவ்வளவும் எனக்குப் புரியுமா தெரியல.. பட் இன்னும் கொஞ்ச வருஷத்துல அரிச்சந்திரன் மாதிரி ஸ்ட்ராங்க் ஆகிடுவேன்” என்றாள் உறுதியாக.

“அரிச்சந்திரனா? ஏன் ஆதினியே ஸ்ட்ராங்தான்! தலையே இந்த கனம் கனக்குதே..” என்று தன் கை மேல் படுத்திருந்த அவளை பார்க்க,

“இதெல்லாம் ஓவருங்க” என்று திட்டியபடி அவன் கையிலிருந்து நகர்ந்து படுத்தாள்.

“நாளைக்கு இந்த கேஸ் விஷயமா நான் போக வேண்டி இருந்தாலும் இருக்கும் ஆதினி, நீ தாராவோட போய் அவளுக்கும் மாப்பிள்ளைக்கும் டிரஸ் எடுத்திரு. கூடவே நமக்கும்!” என்றான். ஆதினி தலையசைக்க இருவரும் உறங்கினார்கள்.

அடுத்த நாள் காலையில் பேப்பரை எடுத்து கொண்டு வாசலில் உட்கார்ந்தவன் தங்கைக்கு அழைத்தான்.

“என்னடா காலையிலேயே?” தாரகை கேட்க,

“அது பூரி செய்றேன் காலை டிஃபனுக்கு. நீயும் துரையும் வாங்க” என்றான்.

“அவர் காலையிலேயே மதுக்கூர் கிளம்பிட்டார். என்ன உன் பொண்டாட்டி வந்ததும் பூரி?” தாரகை வம்பிழுக்க,

“ஒழுங்கா வந்தா பூரி, இல்லை ஐ அம் சாரி. நான் சமைக்க போறேன், வந்து சேருடி தாரா” என்றவன் சமைக்க ஆயத்தமானான். சமையல் செய்யும் அக்காவை காலையில் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டான். தாத்தாவுக்கு இட்லி செய்தவன், பூரி சுட்டுக்கொண்டிருக்க, தாரகை வந்துவிட்டாள்.

“வாடா ராஜாத்தி! எங்க துரை?” என்று ராமசாமி கேட்க,

“அவர் மதுக்கூர் சந்தைக்குப் போயிருக்கார் தாத்தா, எங்க உங்க பேரன்?” என்று கேட்டபடி கிச்சனை எட்டி பார்க்க, ஸ்லீவ்லெஸ் டீஷர்ட், வேஷ்டி அணிந்து வியர்த்தபடி நின்றிருந்தான் அரிச்சந்திரன்.

கையில் பூரி சுட கரண்டியும், கழுத்தில் வியர்வை துடைக்க துண்டும் இருக்க,

“அடடே! இப்படி பார்க்க எவ்வளவு அழகா இருக்கான் என் அண்ணன்?” என்று கேட்டவள்,

“என் விட்டுக்காரரை இப்படி நிக்க வைக்கலாம்னு நினைக்கிறேன், இன்னும் முடியல. எங்க அத்தையெல்லாம் ஊருக்குப் பேக் பண்ணிட்டு செய்யணும்” என்று கிண்டலாக தாரகை சொல்ல,

“வந்துட்டியா? இந்த ஹாட்பேக் எடுத்து டேபிள்ல வை” என்றான். தாரகையும் வைத்தவள், தாத்தாவுக்கு இட்லி சட்னி எடுத்து வைத்து சாப்பிட செய்தாள்.

“ஆதினி எங்கடா அரி?” என்று கேட்க,

“குளிக்கிறா” என்றான்.

சிறிது நேரத்தில் ஆதினியும் குளித்து வந்துவிட, தாரகையைப் பார்த்ததும்,

“வாங்க அத்தாச்சி” என்று கட்டிக்கொண்டவள், “எங்க ராஜாண்ணா?” என்று கேட்க,

“அவர் வேலையா போயிருக்கார்” என்றாள்.

“நேத்து ஏன் நீங்க வரல..?” என்று கேட்க தாரகை சிரித்தாள். ஆதினி வெகு மாதங்கள் கழித்து வருகிறவள், அரியோடு இருக்கட்டும் என்று நினைத்து வரவில்லை.

“தியேட்டர்ல வேலை, வீக்கெண்ட் இல்லையா?” என்று கேட்டு “நீ என்ன படம் பிடிக்கும் சொல்லு, பொங்கலுக்கு உனக்கும் அரிக்கும் டிக்கெட் எடுத்து வைக்கிறேன்” என்றாள்.

“ஓனரம்மா ரொம்ப ஸ்டீரிக்ட்!” அரி கிண்டல் செய்ய,

“டேய்! டிக்கெட் எடுத்து வைக்கிறேன் சொன்னா ஸ்டீரிக்டா?” என்று தோளில் அடித்தவளை நாற்காலியில் உட்கார வைத்தான் அரி.

“சாப்பிடு டா” என்று சொல்லி பூரியும் கிழங்கும் வைத்தவன்,

“நீயும் உட்கார் ஆதினி” என்றான். மூவரும் உண்டு முடிக்க, தாத்தா ஓய்வெடுக்க அறைக்குள் போக, அரி கிச்சனை சுத்தப்படுத்த சென்றான்.

தாரகையும் ஆதினியும் சோஃபாவில் உட்கார்ந்து டீவி பார்த்தனர். பாடல் ஓட, ஆதினி தாராவிடம், “எனக்கு உங்க லேப்டாப் தரீங்களா அத்தாச்சி?” என்று கேட்டிட, அதை கேட்ட அரி கிச்சனில் இருந்தபடி,

“உன்னோடது என்னாச்சு?” என்றான்.

“அது ஷெரீனோட லேப்டாப்ல ப்ராப்ளம். என்னோடது யூஸ் பண்றா. இங்க வீட்ல இருக்கும்னு நானும் அவ கிட்ட கொடுத்துட்டேன்” என்றதும்,

“தாரா தியேட்டர் அக்கவுண்ட்ஸ் பார்ப்பா. அவளுக்குத் தேவை. என்னைக் கேட்க வேண்டியதுதானே?” என்று கடிந்தவன்,

“என்னோட பழைய லேப்டாப் இருக்கு, அதை யூஸ் பண்ணு” என்றான். ஆதினி ஒத்துக் கொள்ள, இருவரின் கவனமும் தொலைக்காட்சியில்.

‘வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது’

என்று வாணி ஜெயராம் உருக, தாரகையின் முகம் பிரகாசித்தது. மெல்ல எழுந்து வெளியே போனவள் கணவனுக்கு அழைத்தாள்.

ஆதினி ஹாலில் இருக்க, அரிச்சந்திரன் எட்டி பார்த்தவன், “ஓய், இங்க வா” என்று மனைவியை அழைத்தான்.

“என்னாச்சு?” ஆதினி கேட்க,

“வா” என்று கையைப் பிடித்து கிச்சனுக்குள் இழுத்தவன் கிச்சன் ஓரம் நின்று, “இப்ப பாரேன், கொஞ்ச நேரத்துல உள்ள வருவா தாரா” என்றான்.

“ஏன்?”

“அவ துரைக்குத்தான் கால் பண்ண போயிருக்கா, இது அவங்க இரண்டு பேரும் ஃப்ர்ஸ்ட் கேட்ட பாட்டு. காதல் கீதமாம்!!” என்றான் கிண்டலாக.

ஆதினியின் கழுத்தில் அரியின் தாடை இருக்க, இயல்பாக ஆதினியின் இடையைப் பிடித்தபடி ஹாலில் இருந்த தங்கையை எட்டிப்பார்த்தான் அரி. ஆதினியும் ஆர்வமாக பார்க்க, அரி சொன்னபடி தாரா டீவி முன் நின்று போனில் கணவனுக்கும் பாடல் கேட்க வைத்தவள் பேசியபடியே அவள் அறைக்குள் நுழைந்தாள். அவள் சென்றும் ஆதினி பார்க்க,

“என்ன காதல் கீதத்தைப் பார்த்துட்டே இருக்க?”

“பின்ன, எனக்கு வாய்க்கல, அப்போ அடுத்தவங்களைத்தானே வேடிக்கைப் பார்க்க முடியும்” ஆதினி கடுப்பாக சொல்ல,

“அரைடிக்கெட் தான்டி நீ” என்று கிண்டல் செய்ய அவன் பேச்சு ஆதினியின் கழுத்தில் உரசியது. வேடிக்கைப் பார்த்தபடி நெருங்கியிருந்தனர்.

இத்தனை நெருக்கம் புதிது. ஆதினியின் உடல் அதில் சிலிர்த்து நடுங்கியது. வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான செயல்! ஆதினி நடுங்கவும் தான் அரிக்கும் நெருக்கம் உரைத்தது. இருந்தும்,
“என்ன இவ்வளவு நடுக்கம்?” என்று கேட்டு கிண்டலாக சிரிக்க ஆதினி சட்டென்று திரும்பினாள்.

அரிச்சந்திரனை முறைத்தாள். அரி விலக பார்க்க, ‘எனக்கா பயம்?’ என்று அழுத்தமாய் கேட்ட அவள் விழிகளின் பாஷை அவனுக்குப் புரிய, அதற்குள் மின்னலாய் அரியின் தலையை ஒற்றைக் கையால் பற்றிய ஆதினி அவன் இதழில் அவசரமாய் முத்தமிட அதை நிதானமாக மாற்றினான் அரிச்சந்திரன்!

நான் என்னென்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்!’

✅ End of Episode 6
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 2 months ago

Very nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 2 months ago

ஆறுதல் சொல்லி 

அணைப்பு கூட
அழகிய நெருக்கம்
ஆதினி நடுக்கம்
அரியின் முத்தம் 
அடங்கியது தயக்கம்
ஆரம்பம் முதல் முத்த சொர்க்கம்....
❤️ 1 more...
Pavithra Narayanan 2 months ago

Thank you 😊

(edited)

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top