Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 27

சக்திவேல் பல கட்ட முயற்சிக்குப் பின், தன் சொந்த ஊரான அசாமில் இருக்கும் பேராசிரியர் நிவாஸ் கோகாயைத் தொடர்பு கொண்டு பேசினான். நிவாஸின் ஒரு எண் தொடர்பு கொள்ள முடியாமல் போக, வேறு எண்ணை விசாரித்து வாங்கியிருந்தான்.

“ஐ அம் இன்ஸ்பெக்டர் சக்திவேல்” என்று தன்னை அறிமுகம் செய்தவன், இத்தனை நாள் பல்கலைக்கழகத்திற்கு வராத காரணத்தை நிவாஸிடம் கேட்டான்.

தன் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரோடு இத்தனை நாள் மருத்துவமனையில் தங்கியிருந்ததாகவும், அசாமின் மலைக்கிராமத்தில் அவர்கள் இருப்பதால் அவன் கல்லூரியில் பயன்படுத்தும் சிம் இங்கு சரியாக வேலை செய்யாது என்பதையும் சொன்னார் நிவாஸ் கோகாய். அம்மா தேறிய பின், தன் அண்ணன் வைத்திருக்கும் ட்ரக்கிங் நிறுவனத்தின் சார்பாக வெளிநாட்டு பயணிகளோடு ஐந்து நாட்கள் மேகாலயா சென்றதையும் கூறினார்.

ஷெரின் மரணம் பற்றி கூற, சுற்றுலா முடிந்து வந்த பின் நேற்றுதான் கல்லூரி வாட்ஸப் குரூப் மூலம் செய்தி அறிந்ததை வருத்தத்துடன் பகிர்ந்தார்.

“ஷெரின் இஸ் போல்ட் சார், அவ சூசைட் பண்ண சான்ஸ் இல்ல” என்று நிவாஸ் அழுத்தி சொல்ல,

“அந்த கேஸ்ல நாங்க உங்க ஸ்டூடண்ட் நிரஞ்சனை அரெஸ்ட் பண்ணியிருக்கோம்” என்றதும் நிவாஸ் அதிர்ந்தான்.

“வாட்? நிரஞ்சன். நோ சார், இல்லை. எனக்கு நிரஞ்சனை தெரியும். ரொம்ப நல்ல பையன் சார்” என்று நிரஞ்சனுக்கு ஆதரவாக பேச சக்திவேலுக்கு நிவாஸை சந்தேகப்படுவது தவறோ என்று மனத்தில் பட்டது. அவன் தமிழில் பேச,

“எத்தனை வருஷமா தமிழ் நாட்டுல இருக்கீங்க?” என்று விசாரித்தான்.

அதற்கு நிவாஸ், “ஃபைவ் இயர்ஸ் சார், கொஞ்சும் கொஞ்ச்சும் தமிழ் தெரியும் எனக்கு” என்றார்.

“நீங்க ஷெரின் இறந்த அன்னைக்கு எங்க இருந்தீங்க?” என்று சக்திவேல் கேட்க,

“அன்னிக்கு ஈவினிங் எனக்கு சென்னை டிரெயின் சார், அங்க இருந்து குவாஹத்தி ஃப்ளைட்” என்றதும் சக்திவேல் அவரிடம் பயணச்சீட்டினை அவன் எண்ணுக்கு அனுப்ப சொன்னான்.

“என்ன சார், எனி ப்ராப்ளம்?” என்று தயங்கி கேட்டார் நிவாஸ்.

சக்திவேல் தன் மனத்தில் இருந்த சந்தேகத்தை சொல்ல, நிவாஸிடம் அமைதி.

“உங்களை நான் எப்படி சார் நம்புறது? ஏற்கெனவே தப்பே செய்யாத என் ஸ்டூடண்டடை உள்ள வச்சிருக்கீங்க. ஐ டோண்ட் ட்ரஸ்ட் போலீஸ்” என்றார்.

“சார், நீங்க உண்மையை சொன்னாதான் நிரஞ்சனை காப்பாத்தி, உண்மையான குற்றவாளியைப் பிடிக்கலாம். இட்ஸ் டெட் எண்ட், நீங்க உங்களுக்கு தெரிஞ்சதை சொன்னாதான் என்னால எதாவது செய்ய முடியும். உங்களுக்கு நம்பிக்கை வர நான் என்ன செய்யணும்?” என்று கேட்ட சக்தி,

“நான் வெறும் போலீஸ் மட்டும் இல்லை சார், உங்க ஸ்டூடண்ட் ஆதினியோட ரிலேடிவ், அவ ஹஸ்பண்ட் அட்வகேட் அரிச்சந்திரன் இந்த கேஸை பார்க்கிறார்.” என்றான்.

நிவாஸுக்கு இந்த சக்திவேலை எந்தளவு நம்புவது என்று தெரியவில்லை. ஷெரினும் ஆதினியும் நெருங்கிய தோழிகள் என்று தெரியும், பேசாமல் நேரில் சென்று ஆதினி, அரிச்சந்திரனிடம் பேசிவிட்டு இவனிடம் தனக்கு தெரிந்தவற்றை சொல்லலாம் என்று நினைத்தார்.

“ஓகே சார், நான் நெக்ஸ்ட் ஃப்ளைட்ல சென்னை வரேன். மார்னிங் சென்னை ரீச் ஆகிடுவேன், ஆஃப்டர்நூன் ஊர்ல இருப்பேன், நான் நேரில பேசுறேன்” என்றார்.

சக்திவேலுக்கும் அது சரியெனப்பட,
“ஓகே சார், சென்னை வந்துட்டு சொல்லுங்க. பை எனி மீன்ஸ் ஏமாத்தணும் நினைச்சா, அங்கயும் போலீஸ் இருக்காங்க” என்றான் சக்தி கொஞ்சம் மிரட்டல் தொனியில்.

“எனக்கு என் ஸ்டூடண்ட்ஸ் முக்கியம் சார்.” என்றவர் குரலில் ஒரு உள்ளுறுதி தென்பட்டது.

நிவாஸ் வருவானோ, மாட்டானோ என்று ஒரு பக்கம் சந்தேகம் ஓடிக் கொண்டிருக்க, அதற்கு அவசியமின்றி நிவாஸ் அடுத்த சில மணி நேரத்தில் விமான பயணச்சீட்டை சக்திக்கு அனுப்பி வைத்தார்.

*********************

ஆதினி அலைப்பேசியை கோபமாக பார்த்தாள். நிரஞ்சனை கைது செய்த பின் அவள் பல்கலைக்கழகம் போகவில்லை. நிரஞ்சனின் கைதால் மாணவர்கள் பிரச்சனை செய்ய, இரண்டு நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டது.

ஆதினியின் கண்கள் படித்த செய்தியில் ரத்தம் கொதித்தது.

‘ஜஸ்டிஸ் ஃபார் ஷெரின்’
‘வீ ஸ்டாண்ட்வித் ஷெரின்.
‘Womenneedsafety
#JusticeForSherin

என்று சமூக வலைத்தளங்களில் அந்த இரண்டு நாட்களும் அதுதான் பேச்சாக இருந்தது. கீழே பதிவிடப்பட்ட கருத்துகளில் நிரஞ்சனை, அவன் குடும்பத்தை, அவன் தாயை இழிவாக பேசியிருந்தனர்.

இதை கூட பாதிக்கப்பட்டவளுக்கு ஆதரவாக எடுக்கலாம். இன்னொரு பிரிவினரோ,
‘அந்த பொண்ணு என்ன பண்ணிச்சோ?’

‘ஒருத்தனை காதலிச்சிட்டு இன்னொருத்தன் பின்னாடி போயிருப்பா, அதான் பய பொங்கிட்டான். இவளுங்களையெல்லாம் கொல்லணும் ப்ரோ’

இப்படி யார் என்றே தெரியாமல் முகம் தெரியாது என்ற காரணத்தாலும் கருத்து சுதந்திரத்தாலும் கண்டதையும் பேசி, பாதிக்கப்பட்டவர்களின் மன நிலை புரியாது, தெரியாது காயப்படுத்தினார்கள்.

யாரையும் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்ற மன நிலையை, மக்களின் வன்மத்தை, வார்த்தைகளின் அத்துமீறலை சமூக வலைத்தளங்கள் அதிகரித்தும் ஆதரித்துக் கொண்டும் இருந்தன. என்னதான் ஒவ்வொரு சமூகவலைதளங்களுக்கும் வரைமுறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் முறையாக சரியாக பின்பற்றினால் அவர்களின் வியாபாரம் படுத்துவிடுமே.

என்னவாக இருப்பினும், யாரை தாக்கினாலும் எல்லாம் பணம், டாலர்கள்…! அதற்கு அறநெறி எல்லாம் கிடையாது.

ஆதினி கோபத்தோடு போனை மெத்தையில் விட்டெறிந்தாள். அரிச்சந்திரன் வேறு வழக்கு விஷயமாக நீதிமன்றம் சென்றவன் இரவு வீடு வந்தான். ஆதினியின் செயலைப் பார்த்தவன் அவளருகே சென்று தோளைப் பிடித்து கட்டிக் கொண்டான். ஆதினி கண்கள் மூடி உட்கார்ந்த வாக்கில் கணவனை பிடித்துக் கொண்டாள்.

“என்ன கோவம்?” அரி கேட்டதும் பொங்கி விட்டாள்.

“ஏன் இப்படி பண்றாங்க அரி? நிரஞ்சனை எவ்வளவு மோசமா பேசுறாங்க தெரியுமா? அவனை எனக்கு நாலு வயசுல இருந்து தெரியும். கோவப்பட்டாலும் அவன் மோசமானவன் கிடையாது, இப்படி கேவலமா அவனை பத்தி தெரியாம கமெண்ட் பண்றாங்க.” என்றவள் கண்கள் நனைந்தன.

“அதையெல்லாம் கண்டுக்க கூடாதும்மா” அரி பொறுமையாக சொல்ல,

“இந்த வேலை வெட்டி இல்லாத யூஸ்லெஸ் ஆளுங்க இப்படி கண்டதையும் கமெண்ட் பண்றாங்கன்னா, மீடியா பேஜஸ் கூட உண்மை தெரியாம குற்றம் என்ன? பூதக்கண்ணாடி மண்ணாங்கட்டின்னு இஷ்டத்துக்கு நிகழ்ச்சி நடத்துறாங்க. உண்மையை இன்னிக்கு கற்பனை கதை மாதிரி சொல்லிட்டு இருக்காங்க. அவங்க சொல்றதை எல்லாம் கேட்டா உண்மைனு நம்பிடலாம், அப்படி ஒரு ஸ்கீரிப்ட். கொஞ்சமும் எதிக்ஸ் இல்லை”

“இன்னும் அவனை கோர்ட் குற்றவாளினு சொல்லாதப்ப ஏன் அரி இப்படி பண்றாங்க, கூடவே ஷெரினை அவளை தப்பா பேசுறானுங்க… ” ஆதினி பல்லைக் கடித்தாள்.

“இதுக்கெல்லாம் ஒன்னுமே செய்ய முடியாது, மக்களுக்கு எதுக்காச்சும் கருத்து சொல்லிட்டே இருக்கணும். அதுவும் இறந்தவங்களை பத்தி சொல்றது ரொம்ப ஈசி. உன்னால் செய்ய முடிஞ்சதை நான் சொல்லவா?” என்றதும் ஆதினி கண்ணுயர்த்தி கணவனை பார்த்தாள்.

“நீ நல்ல பொறுப்பான ஒரு ஜர்னலிஸ்டா இரு, உண்மையான செய்திக்காக உயிரை விட்ட நல்ல ஜர்னலிஸ்ட் எவ்வளவு பேர் இருக்காங்க. எத்தனையோ பேரோட வாழ்க்கையை மாத்தின பத்திரிக்கைக்காரங்க இருக்காங்க. யார் வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் இருக்கட்டுமே, நம்ம என்னவா இருக்க முடியும், என்னவா இருக்கோம்? அதான் ஆதினி முக்கியம்” என்று அரிச்சந்திரன் பேச ஆதினிக்கு புரிந்தாலும் மனதின் கஷ்டம் போகவில்லை.

“கேஸ்ல எதாவது லீட் கிடைச்சதா அரி? பெயில்?” என்று கேட்க,

அரியோ மறுப்பாக தலையசைத்தவன், “இட்ஸ் non-bailable offence, இன்னும் ஆதாரம் ஒன்னும் கிடைக்கல, அவனுங்களா தயாரிக்கணும். அதுக்காக விசாரிக்கணும் சொல்லி கோர்ட்ல டைம் கேட்டிருக்காங்க. சக்தி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, நீ என்னை நம்பு. குற்றவாளி தப்பிச்சாலும் நிரஞ்சனை நான் விட்டுட மாட்டேன்.” என்றான் உறுதியாக.

அடுத்த நாள் காலையில் நிவாஸ் கோகாய் வந்து விடுவார் என்று சொல்ல நினைத்த அரிச்சந்திரன், வரட்டும் வீண் நம்பிக்கை கொடுக்க வேண்டாம் என்று பொறுமை காத்தான்.

****************

நிவாஸின் வருகை குறித்து அரியிடம் சொன்ன சக்திக்கு இன்னும் அவர் மேல் சந்தேகம் இருந்தது. போலீஸ் இன்ஸ்டிங்க்ட் (Instinct) என்று ஒன்று உண்டு. அது காவல்துறையில் இருப்பவர்களுக்கு பல வருட அனுபவத்தால் வருகின்ற ஒரு உள்ளுணர்வு, உள்ளுறுதி. சக்திக்கு இன்னும் அந்த அனுபவம் கிட்டாததால் அவன் அறிவினை நம்பினான்.

நிவாஸின் எண்ணை ஆராய்ந்து பார்க்க, அது பல நாட்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்ததாக சொன்னான் சக்தியின் நண்பன் கண்ணன். பெரிதாக அழைப்புகள் இல்லை, நிவாஸ் அசாம் சென்றால் பயன்படுத்தும் மற்றொரு எண்ணையும் விசாரித்து பார்க்க, அதிலும் சந்தேகிக்கும்படி ஒன்றுமே இல்லை.

டி.எஸ்.பி தினகரனின் எண்ணை ஆராய்ந்ததில் அவருக்கும் நிவாஸுக்கும் தொடர்பே இல்லை என்று புலப்பட்டது. அரிச்சந்திரன் என்றோ சொன்னது நினைவில் வர, ஷெரினின் பெரியப்பா, மற்ற உறவுகளின் எண்களை ஷெரின் தந்தை மூலம் கேரளா போலீஸ் உதவியோடு ஆராய்ந்து பார்க்க அதிலும் எந்த தகவலும் கிட்டவில்லை.

“டி.எஸ்.பி தினகரன் கால்ஸ் எல்லாம் சந்தேகப்படுற மாதிரி ஒன்னுமே இல்லடா, அடிக்கடி எஸ்பி கிட்ட பேசியிருக்கார். அது நார்மல் தானே?” என்றான் கண்ணன்.

“ஒன்னுமே இல்லாம அந்தாள் ஏன் இந்த கேசை அவ்வளவு கவனிக்கிறான், ஆறி போன சமோசா கூட அடுத்தவனுக்குக் கொடுக்காத ஆள்டா அவன். இந்த கேஸை ஏன் இவ்வளவு ஆர்வமா விசாரிக்கணும், உண்மையை மறைக்க நினைக்கணும்?” என்று சக்தி தனக்குள் இருந்த கேள்வியை நண்பனிடம் கேட்டான்.

சட்டென்று சக்தியிடம் ஒரு எண்ணம்.

“டேய்! அந்தாள் வீட்டு லோகேஷன்ல, வேற நம்பர்ஸ் ஆக்டிவேட் ஆகியிருக்கா பாரு. அவரோட ஃபேமிலி மெம்பர்ஸ், வேலைக்காரங்க நம்பர் எல்லாம் உனக்கு அனுப்பியிருக்கேன். அவர் இன்னொரு செல்லோ சிம்’மோ வச்சிருந்தா?” என்று கேட்க,

“அதுவும் சரிதான்டா, ஆனா அதுக்குக் கொஞ்சம் டைம் எடுக்கும், இத்தனை நம்பர்ஸ் இருக்கே. நான் நாளைக்கு உனக்கு கண்டிப்பா எடுத்து கொடுத்திடுறேன்” என்றான்.

“கூடவே விக்டிம் நம்பரும் அனுப்புறேன், அதோட டீடெய்லஸும் பார்த்து சொல்லுடா. நாளைக்கே கொடுத்துடுடா, ப்ளீஸ். அந்த பையனை உள்ள வைக்க டி.எஸ்.பியும் எஸ்பியும் துடிக்கிறாங்க.” என்று சக்திவேல் வேண்டுதலாகவே கேட்டான்.

அன்றிரவு சக்திவேலுக்கு சரியான உறக்கமில்லை. ஷெரினின் வழக்கு அவன் இரவினை திருடியிருக்க, விடிந்த காலையோ இன்னொரு உயிரினை களவாடியிருந்தது.

வெகு நேரமாகியும் தகவல் இல்லாததால், சக்தி நிவாஸ் எண்ணுக்கு அழைக்க, எடுத்தது அசாம் காவல்துறை. அசாமில் பேராசிரியர் நிவாஸ் கோகாய் விமான நிலையம் செல்லும் வழியில், சாலை விபத்தில் மரணம் என்றார் அந்த இன்ஸ்பெக்டர்.

“இந்தாள் கிடைச்சா அந்த பையனை காப்பாத்திடலாம் நினைச்சேன் அண்ணே, இப்படி ஆச்சே. ஒரு தகவலும் இல்லாம போய்ட்டானே..” என்று சக்தி பக்கத்தில் இருந்த கான்ஸ்டபளிடம் புலம்ப,

“விடுங்க தம்பி, ஆயிரம் கேஸ் பார்க்கிறோம். எல்லாத்தையும் சரி பண்ண முடியுமா?” என்றார்.

அந்த கான்ஸ்டபிள் சிறிது நேர யோசனைக்குப் பின், சக்தியின் அலைப்பேசியில் இருந்த நிவாஸின் படத்தை பார்த்து,

“தம்பி, இந்தாளை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்” என்றார்.

“என்ன சொல்றீங்கண்ணே?” என்று சக்தி பரபரக்க,

“ஆமா தம்பி… நல்லா… இப்போ கொஞ்ச நாள் முன்னாடி… ஆஹ்ன்! ஒரு நாள் டி.எஸ்.பி ஆபிஸுக்கு நீங்க கொடுத்த ஃபைலை கொடுக்க போனப்போ டி.எஸ்.பி ரூம்ல இருந்து இந்தாள் வந்தாரு” என்றார்.

சக்திக்கு இப்போது எதையோ அவன் தவறவிட்டது புரிந்தது. எங்கோ அவன் விசாரணையின் பாதை மாறிப் போயிருக்கிறது.

ஆனால், எங்கு? யாரை??

✅ End of Episode 27
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 4 weeks ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top