Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 17

‘தற்கொலை’ என்பது நொடி நேரம் எண்ணம் அல்லவா? அவனே பார்த்திருக்கிறான், அவன் நண்பன் ஒருவன் அண்ணனின் திருமணம் முடிந்த மூன்றாம் நாள் விருந்து வரை நன்றாக இருந்தவன், தனியாக இருந்த நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இறந்தவரை தவிர இந்த காரணங்கள் யாருக்கு தெரிய போகிறது?

‘தற்கொலை’ என்பது கூட இருப்பவர்களுக்கு மிகவும் கொடிய தண்டனை!! தன்னோடு பழகிய உறவை இழந்து, அந்த உயிருக்கு வாழும் ஆசை இல்லை என்று தெரியாது, அதனை காக்காது விட்ட அந்த கையறு நிலை வாழ்வுக்கும் இருக்குமே!

ஆதினி ஹாஸ்டல் போகக் கேட்க, அவர்கள் தளத்திற்கு காவல்துறையால் அனுமதி வழங்கப்படவில்லை. விடுதியின் கீழே எல்லா மாணவிகளும் கண்ணீருடன் இருக்க, சக்திக்கு அழைத்து நிலவரம் கேட்டான் அரிச்சந்திரன்.

“self inflication of throat, Hemorrhagic shock. ஹெவி ப்ளட் லாஸ் மாமா.” சக்தி சொல்ல,

“நல்லா தெரியுமா? அவ அப்படி செய்ய வாய்ப்பில்லை.” என்றான் அரி.

“டாக்டர் ரிப்போர்ட்’ல இருக்கிறதை அப்படியே சொல்லிட்டேன் மாமா, சூசைட் பண்ற யாரும் அழுது வடிஞ்சுட்டு இருக்கிறதில்லை, நல்லா இருப்பாங்க, எந்த நேரம் அந்த முடிவெடுப்பாங்க சொல்ல முடியாது. நேத்து ஈவினிங் இந்த பொண்ணு சீக்கிரம் ரூம் போயிருக்கு. ஹாஸ்டல் டே செலிபிரேஷன்’ல கலந்துக்கல.. விசாரிச்சா டல்லா இருந்தா சொல்றாங்க, மே பீ எதாவது டீப்ரஷனா இருக்கலாம். ஒரேடியா போகணும்னு நினைக்கிறவங்க, இப்படி கழுத்தை கட் பண்ணிப்பாங்க, சடன் ப்ளட் லாஸ். ஆக்சிஜன் இல்லாம டெத்!”

கூடவே சக்திவேல், “அந்த பொண்ணு டிப்ரஷன் டேப்லெட் எடுத்திருக்கா” என்றதும் அதிர்ச்சியானான் அரிச்சந்திரன்.

“நான் இந்த மாதிரி நிறைய கேஸ் பார்த்துட்டேன் மாமா, ஹோமிசைட் (கொலை) இருக்க வாய்ப்பில்லை, டிஃபன்ஸ் வுண்ட்ஸ் இல்லை. நோ ட்ரேஸ் ஆஃப் ரேப்.” என்றான் உறுதியாக.

ஷெரினின் பெற்றோர் கேரளாவில் இருந்து வந்திருக்க, அவர்களின் கண்ணீர், கதறல் கேட்டு மாணவர்கள் எல்லாரும் கலங்கிபோயினர். அன்றே ஷெரினின் சடலத்தை அவர்களிடம் முறைப்படி ஒப்படைக்க, ஷெரின் பிறந்த மண் சென்றாள். மாணவர்கள், பேராசிரியர்கள் சிலரும் உடன் சென்றனர். அரி தாரகையை வீட்டைப் பார்க்க சொல்லி விட்டு, ஆதினியுடன் கேரளா சென்றான். கூடவே ரவிக்குமாரும்.

கேரள மாநிலம் இடுக்கியில் இருக்கும் ஷெரினின் இல்லத்திலிருந்து அவளது இறுதியாத்திரை தொடங்கியது. ஷெரினை கடைசியாக வழியனுப்பி வைக்கும் போது, ஆதினியின் கண்ணீர் மௌனமாக அவள் கன்னம் நனைத்தது.

கல்லூரி சேரும் முன்னே, பணம் கட்ட சென்ற அன்று முதல்முறை பார்த்தது, முதல் நாள் ஒரே பெஞ்சில் அமர்ந்தது தொடங்கி, அலை அலையாய் நினைவுகள். இரு நாட்கள் முன் தன்னுடன் பேசி, சிரித்து, அம்மாவின் இறப்பின் போதும், அரியுடன் சண்டையின் போதும் உடன் இருந்தவள், நல்ல வழி காட்டியவள் இன்றில்லை.

அவளுக்கு சாகும் அளவிற்கு ஏதோ பிரச்சனை இருந்திருக்க, அது கூட தெரியாமல் அவளுடன் இருந்திருக்கிறேன். இந்த எண்ணம் உறங்கவிடவில்லை.

இரயிலில் மீண்டும் ஊர் திரும்ப, ஆதினியின் பார்வை கேரளாவின் பசுமையையே வெறித்தது. ஷெரினோடு ஒரு முறை அவள் ஊருக்கு வந்திருக்கிறாள். இது போன்ற இரயில் பயணம், தோழியோடு அரட்டை அடித்தது எல்லாம் நினைவில் வர, கண்ணீருடன் தன்னருகே இருந்த அப்பாவின் தோளில் அப்படியே சாய்ந்தாள்.

மறக்க முடியவில்லை, அதற்கு நினைக்கக் கூட முடியவில்லை. கிஷோரும் நிரஞ்சனும் கூட அவர்களுடன் இருக்க, அரி நிரஞ்சனிடம் ஆறுதலாக பேச, அவன் வாயே திறக்கவில்லை. கிஷோருக்கு ஷெரின் மறைவு தீராத துயர் என்றாலும், இப்போது நிரஞ்சனையும், ஆதினியையும் இப்படி பார்க்க இன்னும் அஞ்சினான்.

கொஞ்ச நாள் போனால், சரியாகி விடுவார்கள் என்று நினைத்தான், ஆனால் யாரும் சரியாகவில்லை.

ஒரு வாரம் ஓடிப்போனது. ஆதினி வீட்டில் இருந்தாள், யாரும் அவளை உடனே கல்லூரி போ என்று சொல்லவில்லை. அவளுக்காக தாரகையும் பகலில் வீடு வந்தாள். அன்று ரவிக்குமார் மகளை பார்க்க வந்திருந்தார். அரி நீதிமன்றம் சென்றவன் மாலை வீடு வந்தான்.

வீட்டில் நுழையும் போதே அவன் பார்வை கனிந்தது. ஆதினி அப்பாவின் மடியில் தலைசாய்த்து கண் மூடியிருந்தாள். தாரகை அண்ணன் வரவும்,

“காஃபி போடவா அரி?” என்று கேட்க,

“ஒகே தாரா” என்று உடை மாற்ற போனான். ராமசாமி ஆதினியை பார்த்தபடி கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அவள் வந்தாலே உற்சாகம் கொள்ளும் அவர் இல்லம் இன்று அமைதியாக இருக்க, அவருக்குத் தாங்கவில்லை. ஷெரினை அவர் திருமணத்தின் போது ஒரு முறை பார்த்தாலும், நினைவு இல்லை. இருந்தாலும் இந்த சின்னஞ்சிறிய வயதில் அந்த பெண்ணுக்கு இப்படி ஒரு முடிவு வேண்டாம் என்று வருந்தினார்.

தாரகை காஃபியுடன் அண்ணன் அறைக்கதவை தட்ட,
“வா தாரா” என்றான்.

அரிச்சந்திரனும் இந்த நாட்களில் வாடியிருந்தான். எதையும் நேர்மறையாக, நிதர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் கொண்டவன் என்றாலும், ஒரு பிரிவு, ஒரு இழப்பு அதனை கடப்பது சுலபமில்லையே.

அதுவும் ஆதினியை எப்படி தேற்ற என்றே தெரியவில்லை. அவனுக்கு அந்த கவலை.

“சாப்பிட்டாளா?” என்று காஃபியைப் பருகியபடி அரி கேட்க,

“கொஞ்சம் சாப்பிட்டா, ஆனா பேசல. எதாவது பேசினாலும் அழுதுடுறா… கஷ்டம் இல்ல அரி” என்ற தாரகைக்கும் கலக்கமாக இருந்தது.

“பிரச்சனைன்னா அந்த பொண்ணு யார்கிட்டவாச்சும் சொல்லியிருக்கலாமே, உயிரோட மதிப்பு தெரியாம.. இப்படி பண்ணிட்டாளே, அந்த பொண்ணோட பெத்தவங்க எவ்வளவு வேதனைப்படுவாங்க. வாழ்க்கை முழுசும் எவ்வளவு வலி. தற்கொலை பண்றவங்க அவங்க வலியைப் போக்கிறதுக்கு எடுக்கிற முடிவு, அடுத்தவங்களுக்கு ஆயுசுக்கும் வலி கொடுக்கும்ன்றதை மறந்திடுறாங்க” என்றாள் கோபமாக.

“நம்ம ஆயிரம் சொன்னாலும், அந்த நிமிஷம் அவ என்ன நினைச்சா யாருக்கு தெரியும் தாரா? அண்ணானு அவ சொல்றது அப்படியே எனக்குக் கேட்குது, இவ என்ன அட்டகாசம் செஞ்சாலும் அவ விட்டுக் கொடுக்காம எங்கிட்ட பேசுவா. ஷெரின்’னா இனிமை, உண்மையில அப்படி இனிமையான பொண்ணு. இவ எப்போ திரும்ப நார்மலா ஆகப்போறா தெரியல தாரா” என்று அரி கவலையாக சொல்ல, அண்ணனிடம் என்ன சொல்வது என்று தாரகைக்கும் தெரியவில்லை.

அரி வந்ததும், ரவிக்குமார் மகளை மெல்ல எழுப்பினார்.
“மாப்பிள்ளை டல்லா இருக்கார், போய் கவனி. அங்க துரை வீட்ல வேலை இருக்கும்ல, தாரகை அங்க போகணும்ல ஆதிம்மா. நீ வீட்டையும் பார்க்கணும், நான் கிளம்புறேன்” என்றவர் தாரகையை அழைத்தார்.

“நான் பார்த்துக்கிறேன் மாமா” என்று தாரகை சொல்ல, ரவிக்குமார்,

“அப்பா நாளைக்கு வரேன் டா ஆதிம்மா” என்று மகளின் தலையை வருடி சென்றார்.

இரவு உணவினை தாரகையும் தாத்தாவும் உண்டு முடிக்க, அரியை அழைக்க ஆதினி மெத்தையில் யோசனையாக படுத்திருந்தாள்.

அரி அவளை எழுப்ப, “எனக்குப் பசிக்கல அரி” என்றாள். சரியாக சாப்பிடுவது இல்லை, அதற்காகவே பழச்சாறாக தாராவும் அரியும் கொடுக்கிறார்கள். அரி மென்மையாக ஆதினியின் தலையை தடவிக் கொடுத்தவன்,

“இது கஷ்டம் ஆதினி, ஆனா கடந்து ஆகணும் இல்லையா? உன்னை நினைச்சு நாங்க எல்லாம் கவலைப்படுறது உனக்குத் தெரியலயா? ஷெரின் இல்லை, அதை அக்செப்ட் பண்ணு. அவ அப்பா, அம்மாவுக்கு நீ ஆறுதல் சொல்லணும். இப்படி இருக்காதம்மா” என்று பொறுமையாக் சொல்ல,

துயரத்தை அனுபவிக்க ஒரு சுதந்திரம் வேண்டுமே, அது தனிமையை நாடும், ஆறுதல் கூட தேவையற்ற நிலை! அதனால் ஆதினிக்குக் கோபம் வந்தது.

“எப்படி இருக்கணும் நீங்க சொல்லாதீங்க அரி” என்று கத்தியவள் கண்ணீருடன்,

“உங்களுக்குப் பசிச்சா நீங்க சாப்பிடுங்க. என்னை ஏன் கூப்பிடுறீங்க, ஈசியா சொல்றீங்க கடந்திடுனு.?” என்று கத்தினாள்.

வெளியே வரை இந்த சத்தம் கேட்க, தாரகை என்ன செய்வது என்று புரியாது நின்றாள். அரியோ மனைவியின் பேச்சில் முறைத்தான்.

✅ End of Episode 17
How did you feel about this episode?
❤️ 1 😢 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 month ago

பிரிவின் வலியில் 

பரிதவிக்கும் நட்புக்கள்..
பாவம் தான்....
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top