Episode 11

அரிச்சந்திரன் ஆதினியை மிகவும் இறுக்கமாக அணைத்திருந்தான். அவளிடம் பகிரவில்லை என்றாலும் ஆதினியின் பிரிவு அவனை மிகவும் தாக்கியிருந்தது.

தங்கை திருமணமாகி போன பின் தனிமையில் இருந்தான். எப்போதும் தங்கையின் மீது கவனம் இருக்கும், அவளை அக்கறையாகக் கவனித்து பழக்கப்பட்டிருந்தான். அவள் திருமணமாகி போனதும் இவனின் கவனிப்புகள் குறைந்து விட்டன, அவளுக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது, அதற்கான இடம் கொடுக்க வேண்டும் என்று இடைவெளி விட்டே இருப்பான்.

வேலை என்று போனாலும் வீடு வந்தால் தாத்தாவோடு சிறிது நேரம் பேசுவான். இருந்தும் தனக்கென ஒரு உறவை மனம் எதிர்ப்பார்த்தது, அதனால் ஆதினியைத் திருமணம் செய்யும் போது சந்தோஷமாகவே இருந்தான்.

ஆதினியோடு திருமணமான பின் அரிச்சந்திரனின் எண்ணம் அனைத்திலும் அவள் இருந்தாள். காலை எழுந்து டீ வைப்பதில் இருந்து, நாளும் பொழுதும் அவளுக்காகவே நகரும். ஒன்றாய் உண்டு, உறங்கி, பேசி என்று தன்னோடு ஒருத்தி, தனக்கான துணை என்று ஒரு நேசம்.

முன்பு தங்கைக்கென சமைப்பான், அவள் போனதும் அவனுக்கென தனி சமையல் இல்லை. தாத்தாவுக்கு செய்வதே அவனுக்கும். அவனுக்கு ஆதினிக்காக செய்யும் போது சோர்வே இருக்காது. ஆதினிக்கு இவன் சமையல் பிடிக்கும் என்பதால் நேரமிருக்கும் போதெல்லாம் செய்வான்.

சிலரால் சிலர் மீது எதிர்ப்பார்ப்பின்றி அன்பு காட்ட முடியும், எடை போடாத அன்பினை கொட்ட முடியும். அரிச்சந்திரன் அன்பை கொடுத்தே பழக்கப்பட்டவன், அதை கொடுக்க முடியாத நிலை கூட கொடுமையல்லவா? மூன்று மாதங்களுக்கும் மேல் மனைவியுடனே இருந்தான்.

உயிரான காதல் என்றெல்லாம் இல்லாது இயல்பான பாசம், அக்கறை என்று அவன் மனது இருந்தது. இந்த வானத்து நிலவு இருக்கே, யாருக்கும் சொந்தமில்லை. இருந்தும் உரிமையாய் அதன் இருப்பை ரசிக்கும் மனது, அவள் இவனுக்கான அன்பை பிரதிபலிக்கவில்லை, காட்டவில்லை என்றெல்லாம் எதிர்ப்பார்ப்பே இல்லை. சிலரின் இருப்பே போதுமானதாக இருக்கும். அதுவே ஆசுவாசம் அளிக்கும். அரிக்கு ஆதினி அப்படித்தான்!

ஆதினி விடுதி செல்கிறேன் என்ற போது ஒத்துக்கொண்டாலும், அவள் சென்றதும் அவள் நிரப்பிய தனிமை மிகவும் கொடுமையாகத் தாக்கியது.

அக்கறையும் அன்பையும் கொடுத்தே பழகியவனுக்கு, அதைக் காட்ட முடியாதது கூட அழுத்தமாக, கோபமாக மாறியது. படிக்கத்தான் போயிருக்கிறாள் என்று புரிந்தாலும், அவன் மனதின் எதிர்ப்பார்ப்பு அவனை வருத்தியது.

ஏகாந்தம் எப்போதும் ருசிக்காதே! மீண்டும் அவள் வருகிறேன் என்ற போது என்னை கண்டுகொள்ளாது போனாளே என்ற கோபம். ஆதினி தன் அன்பினை மதிக்க வேண்டும், அதனை புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அரிச்சந்திரனுக்கு.

ஆதினியின் முடிவுகளின் அவசரம், பிடிவாதம் பிடிக்கவில்லை. மற்றபடி அவனுக்கு குறையில்லை.

மீண்டும் போகிறாள் என்றாலும், என் அருமை தெரியட்டும் என்று அன்பு கொண்ட மனம் கொஞ்சம் ரோஷமாய் நினைத்துக் கொண்டது. இப்படி எண்ணங்களில் அவன் உழல, ஆதினி களைப்பில் அவன் கையணைப்பில் உறங்கி விட்டாள்.

மெல்ல அவளை விட்டு விலகி படுத்த அரிச்சந்திரனும் உறங்கினான். அடுத்த நாள் அவன் எழும் முன்பே ஆதினி எழுந்திருந்தாள். ஹாலில் லேப்டாப், ஏ4 தாள்கள், ஹைலைட்டர், என்று பரப்பி வைத்திருந்தாள். டீவியில் பாடல் ஓட, முணுமுணுத்தபடி லேப்டாப்பைப் பார்த்து எதையோ எழுதினாள்.

“சீக்கிரம் எழுந்திரிச்சிட்டியா?” அரி அவள் முன் நின்று கேட்க,

“நிறையா இருக்கு அசைண்ட்மெண்ட் எழுத.” என்று கொட்டாவி விட்டவள், “டீ போட்டு வச்சிட்டேன் அரி, எடுத்துக்கோங்க” என்றாள்.

“பார்த்தியாடா என் பேத்தியை? காலையில எழுந்து படிக்குது” ராமசாமி நாளிதழைப் படித்தபடி சொல்ல,

“நாலு நாள் லீவ்ல வெட்டியா இருந்துட்டு ஒரே நாள்ல உன் பேத்தி வேலையை முடிக்க எழுந்திரிச்சா அது பெரிய விஷயமா?” என்ற அரி,

“எப்படி இருந்தது உன் பேத்தி டீ?” என்று கேட்டான்.

“அதுக்கென்ன நம்ம கொக்கன் கடை டீ மாதிரி நல்லா இருக்கு” என்றார். நல்ல தேநீருக்கு அவரின் அளவை அது! அரி சிரித்தபடி டீயை எடுத்து வந்து உட்கார்ந்தான்.

“டீ சூப்பர்மா” பாராட்டியபடி அரி குடிக்க, ஆதினி தலையசைத்து விட்டு வேலையில் மூழ்கி போனாள்.

அரிச்சந்திரன் காலைக்கு உப்புமா செய்தவன் தாத்தாவை சாப்பிட வைத்து, அவரை கவனித்து அறையில் இருக்கும் ரேடியோவை ஆன் செய்து விட்டு நடுவீட்டில் அமர்ந்தான். ஆதினியும் உண்டு முடித்திருக்க, கிட்டத்தட்ட பாதி தரையில் படுத்த வண்ணம் எழுதிக்கொண்டிருந்த மனைவியைப் பார்க்க பாவமாக இருந்தது.

காலை ஐந்தரையிலிருந்து இப்போது மணி பத்து, அதுவரை எழுதியபடி இருக்க, அவள் பக்கம் உட்கார்ந்தவன், தலையைணையை சுவரில் சாய்த்து வைத்தான்.

“சாஞ்சுட்டு எழுதும்மா, முதுகு வலிக்கும். இப்போதானே சாப்பிட்ட, இப்படி குனிஞ்சா செரிக்காது” என்றதும் நிமிர்ந்து அமர்ந்தாள்.

ஆதினி, “இந்த பேப்பர்ஸ் எல்லாம் அரெஞ்ச் பண்ணி தரீங்களா?” என்று கேட்க, அதனை வாங்கியவன் அடுக்கியபடி அவள் எழுதியதைப் படித்தான்.

“என்ன உன் டிசர்ட்டேஷன் டாபிக்?” அரி மனைவியின் ஆய்வுக்கட்டுரை குறித்துக் கேட்க,

“சோசியல் மீடியா இன்ஃபுலுயன்ஸ் அண்ட் டிஜிடல் டிப்ரஷன்(social media influence and digital depression)” என்றாள்.

“இதெல்லாம் டீப் ரிசர்ச் பண்ணினா, தீசஸ் சப்மிட் பண்ணலாம்ல ஆதினி?” என்று கேட்க,

“பண்ணலாம் அரி, பேப்பர் ப்ரசெண்டேஷன் ஒன்னு வருது. நல்லா பண்ணிட்டா டெல்லில நேஷனல் லெவல் செமினாருக்கு செலெக்ட் ஆகலாம். என் டாபிக் எப்படி?” என்று ஆதினியும் அரியின் கோணத்தை அறிய ஆவலாகக் கேட்டாள்.

அரியின் மாறுப்பட்ட கோணம், சமுதாய அக்கறை எல்லாம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். சொல் என்றில்லாமல் செயலிலும் காட்டுபவன்.

“சூப்பரா இருக்கு. டிப்ரஷன்’ல இருக்கோம்னே சிலருக்குத் தெரியாது, அதுவும் இந்த டிப்ரஷன் புரிஞ்சிக்கவே முடியாத ஒன்னு. நீ சொல்லு சோசியல் மீடியாவுனால எவ்வளவு பேரும் இயர்ன் பண்றாங்க, நிறைய புகழ் கிடைக்குது, வெளிச்சம் கிடைக்குது. அதையெல்லாம் கூட சொல்லணும்ல?”

“இது ரிசர்ச் அரி, முதல்ல அதோட நல்ல பக்கம் எல்லாம் சொல்லிடுவேன், பட் என் டாபிக் டிஜிட்டல் டிப்ரஷன் இல்லையா, அதான் மெயின் ஃபோகஸ். உங்களுக்குத் தெரியுமா ஒரு ஆய்வுல செல்போன், சோசியல் மீடியா யூஸ் பண்ற டீனேஜர்ஸ், நம்ம வயசு இருக்கவங்க எல்லாம் அதை பயன்படுத்தாதவங்க விட 50 சதவீதம் அதிகமாக டிப்ரஷன்’குள்ள போறாங்க.”

“இப்போ பாருங்க ஆன்லைன்ல இல்லனா ஆளே இல்லைனு நினைக்கிற அளவுக்கு ஆகிப்போச்சு, டிஜிடல் டிடாக்ஸ் பண்றாங்க, இதுக்குன்னே ஸ்பெஷலா கவுன்சிலிங் கொடுக்கிறவங்க இருக்காங்க தெரியுமா? யூஎஸ் ல 22% சூசைட் ரேட் இதனால அதிகமாகியிருக்கு. நேஷனல் லைப்ரரி ஆஃப் சைன்ஸ்’ல இதுக்குனே ஒரு ஆர்டிக்கிள் இருக்கு தெரியுமா?”

“ஆமா ஆதினி, இது மோசமான போதைன்னே தெரியாம எல்லாரும் அடிக்ட் ஆகுறாங்க, என்னமோ இதெல்லாம் இல்லாம உலகம் இயங்காது நினைக்கிறாங்க, உண்மையில.. எல்லாமே நார்மலா இயங்கும்.” என்றான் அரி.

தலையசைத்த ஆதினி, “இன்னும் இதை முடிக்க டைம் இருக்கு, சின்ன சின்ன அசைன்மெண்ட்ஸ் இருக்கு அதை முதல் முடிக்கணும். சூடா ஒரு இஞ்சி டீ கிடைக்குமா? தூக்கமா வருது” என்றாள்.

“தூங்கிட்டு செய்டி” அவள் சோர்ந்த முகம் பார்த்து அரி சொல்ல,

ஆதினியோ, “ஏன், நாளைக்கு நான் போய் திட்டு வாங்கணுமா? இது கொஞ்சமா பண்ணினா போதும். மீதி அசைன்மெண்ட் முடிக்கணும்.” என்றாள் சோர்வாக.

“திட்டுக்கு பயப்படுறவளா நீ?” என்று அரி கிண்டல் செய்தாலும், அவளுக்குத் தேவையானதை செய்து கொடுத்தான்.

மதியம் அவளுக்குப் பிடிக்குமென்று மீன் குழம்பு வைத்தான். இரவுவரை அவளுடனே அரியின் பொழுது போனது. ஆதினி அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து விட்டாள். இன்று முதல் வகுப்பு கிடையாது என்பதால் கொஞ்சம் தாமதமாக செல்லலாம்.

அரிச்சந்திரனின் பார்வை ஆதினியையே சுற்றியது. இரு என்று சொல்லவில்லை, இவனுக்கும் மாற்றி மாற்றி முடிவெடுக்க பிடிக்கவில்லை. போகட்டும், ஒரு நிதானம் வரட்டும். இந்த செமெஸ்டர் முடியவும் வரட்டும் என்று நினைத்தான்.

ஆதினியோ உற்சாகமாகவே இருந்தாள். முதல்முறை பள்ளி செல்லும் போது அழுதாள், ஆனால் ஒற்றைப் பெண்ணாய் இருந்தவளுக்கு அங்கு விளையாட ஆட்கள் கிடைக்க, பள்ளி செல்லுவதை விரும்பும் பெண் அவள். இப்போதும் அரிக்காக போனாலும், அவனைப் பிடித்ததால் எடுத்த முடிவு இது.

எந்த முடிவென்றாலும் அந்த நேரம் அவளுக்குப் பிடித்ததை, மட்டுமே எடுப்பாள். அதனை முழுமனதாக ஏற்கும் தெளிவுமுண்டு.

ஆதினி கிளம்பியவள் ஆறு மணிக்கு எழுந்த தாத்தாவிடம் சொல்லிவிட்டு ஆசிர்வாதம் வாங்கி, அறைக்குள் வந்தாள்.

“கிளம்பலாமா அரி?” ஆதினி பையை எடுத்து அரியிடம் கேட்க,

அவளின் கையைப் பிடித்து அருகே இழுத்தவன், இருகரத்தாலும் ஆதினியின் பின் தலையை அழுத்திப் பற்றி,

“பார்த்து இருக்கணும் ஆதினி” என்றான்.

அரிச்சந்திரனுக்குக் கஷ்டமாக இருந்தது. அவன் உணர்வை சொல்ல தெரியாத ஒரு நிலை!

✅ End of Episode 11
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 4 hours ago

Very nice.

Mrs Beena loganathan Reader 1 hour ago

பார்வைகள் பரிமாற 

ஸ்பரிசங்கள் தடுமாற
புரிதலில் விட்டுக் கொடுக்க 
பெண்ணுக்கும் ஏக்கம் 
பிரிவை ஏற்கும் கணவன்.....

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top