Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 26

இரண்டு நாட்களுக்கு முன்…

 

ஆதினி மெத்தையில் படுத்தபடி படித்துக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் அவளின் லேப்டாப் திறந்து கிடந்தது. இரவு உறங்கும் நேரம் ஆகிவிட, அரிச்சந்திரன் அறைக்குள் வந்தான்.

“விடிய விடிய படிச்சிட்டு க்ளாஸ் போய் தூங்க போறியா? எடுத்து வைடி, எனக்குத் தூக்கம் வருது” என்றவன் ஆதினி அருகே படுத்தான். ஆதினி அவன் விரல்களை பிடித்து நெட்டி முறித்தாள்.

“டேபிள்ல பால் இருக்கு, குடிச்சிட்டு தூங்க வா” என்று கையை அவளிடமிருந்து இழுத்து கொள்ள, இப்படி இயல்பான செய்கைகளில் பிரியத்தைக் காட்டும் கணவன் மேல் ஆதினிக்கு கன்னாபினாவென காதல் வந்தது. அந்த பிரியத்தை காட்ட வழிதான் தெரியவில்லை, அதுவும் அவன் காட்டும் அளவு காட்ட நிச்சயம் தெரியவில்லை. உனக்கு இதை செய்கிறேன் என்று சொல்லிக் காட்டும் பழக்கும் கூட அவனிடமில்லை.

ஆதினியைப் பொருத்தவரையில் அன்பின் வானம் அரிச்சந்திரன்!

ஆதினிக்குக் கணவனை பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றியது. புத்தகத்தை மூடி மேஜை மீது வைத்தவள் பாலைக் குடித்து விட்டு லேப்டாப்பை எடுத்து வைத்தாள்.

அரிச்சந்திரனின் அருகே வந்து படுத்த ஆதினி,
“கடவுளே, நீ எங்க இருந்தாலும் இப்படி ஒரு புருஷனைக் கொடுத்ததுக்கு நல்லா இரு!” என்று வாழ்த்த, அரிச்சந்திரன் பார்வையில் கிண்டல்.

“என்ன?” ஆதினி கொட்டாவி விட்டபடி கேட்க,

“உங்க அப்பா கிட்ட ஏன் என்னை தொரத்தி விட்டனு சண்டை போட்டது இந்த வாய் தானே? எனக்கு கல்யாணமே பிடிக்கலனு சொன்னது இந்த வாய் தானே?” என்று அவளின் கன்னத்தை வலிக்க பிடித்து இழுத்தான். தன்னை தனிமையில் தள்ளி போன கோபம் தலைவனுக்கு.

இழுக்கும் அவன் கரத்தைக் கட்டிக்கொண்ட ஆதினி,
“அதே வாய் தான்! ஆனாலும் இந்த பாயிண்ட் நோட் பண்ணி திட்டுறத எல்லாம் கோர்ட்டோட வச்சுக்கணும். சும்மா அப்படி சொன்ன இப்படி சொன்ன சொல்லிக் காட்டக் கூடாது. எனக்கு அப்போ அப்படி தோணிச்சு.”

“இப்போ?” அரி புருவம் உயர்த்திக் கேட்க, அவனின் இருபுருவமும் ஒன்றோடு ஒன்று முத்தமிட, அந்த அடர்த்தியான புருவங்களை ஆதினி எப்போதும் ரசிப்பாள்.

முதல்முறை கண்ட போது,
‘இவருக்கு டார்க் ஐ ப்ரோஸ்’ என்று நினைத்தாள். வெறும் கவனிப்பாக அது போயிருக்க, இப்போதெல்லாம் அது அவள் ரசனையின் வழி.

“இப்போ அப்படியே மூச்சு முட்டுற அளவு கட்டிப் பிடிச்சிட்டு தூங்கணும் தோணுது” என்றாள். கண்களில் அதீத சோர்வோடு சொன்னவள் அவனின் புருவங்கள் இணையும் நெற்றியில் அழுத்தி முத்தம் வைக்க, மனைவியின் விருப்பப்படி இறுக அணைத்து உறங்கினான்.

அடுத்த நாள் காலையில் எழுந்த அரியின் பார்வையில், ஆதினியின் லேப்டாப் விழுந்தது. ஆதினி கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவள் அவன் பார்வை உணர்ந்து,

“என்ன அரி, இன்னிக்கு சீக்கிரம் கிளம்பணும் சொல்லிட்டு உட்கார்ந்திருக்கீங்க?” என்றாள்.

“உன் லேப்டாப் கொடு” என்று கேட்க, அவள் எடுத்து அவனிடம் நீட்டினாள். பாஸ்வர்ட் சொல்ல, அரிச்சந்திரன் அதனை ஆராய்ந்து பார்த்தான்.

“சும்மா வர்ட் ஃபைல்ஸ் தான் இருக்கு, நானும் பார்த்தேன் ஷெரின் பெருசா ஒன்னும் சேவ் பண்ணல” என்று சொல்ல அரிக்கு அப்படி தோன்றவில்லை.

“நீ கொஞ்ச நாள் என்னோடது யூஸ் பண்ணு. இதுல உள்ளதை எல்லாம் உடனே காப்பி பண்ணிட்டு கொடு” என்று அவசரப்படுத்தினான்.

“என்ன அரி? எதாவது கிடைச்சதா? நான் பார்த்தேனே, ஒன்னும் தெரியல” ஆதினியும் அவசரமாகக் கேட்க

“கண்கள் ஒன்னுனாலும் பார்வை எல்லாருக்கும் வேற, நீ சீக்கிரம் காப்பி பண்ணிட்டு கொடு” என்றான். அன்றே சக்திவேலை சந்தித்தவன் ஆதினியின் லேப்டாப்பைக் கொடுத்து, அவனின் சந்தேகங்கள் சொல்ல, அது சக்திவேலின் விசாரணைக்குப் பயனுள்ளதாக இருந்தது.

இன்றோ கிஷோர் காலையில் பதறியடித்துக் கொண்டு அழைத்திருந்தான்.

“மாமா, உங்க சொந்தக்காரர் அந்த போலிஸ் ஹாஸ்டல்’ல வச்சு நிரஞ்சனை அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டார்” என்று அழுகையோடு சொன்னான். ஆதினியும் விஷயம் கேள்விப்பட்டு பதறி கணவனை பார்த்தாள். அரிச்சந்திரனும் கோபமாக இருந்தான்.

‘மத்திய பல்கலைக்கழக மாணவி தற்கொலை விவகாரத்தில் திருப்பம்! ஒருதலையாக மாணவியைக் காதலித்த சக மாணவன் தன் காதலை ஏற்க மறுத்ததால் மாணவியைக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது’ என்று செய்தி பரவியது.

சக்திவேலுக்கு அழைத்துக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அழைப்பை எடுத்தான்.

“என்னடா நினைச்சிட்டு இருக்க? நிரஞ்சனை ஏன் அரெஸ்ட் பண்ணின?” என்று அரி கத்த,

“அந்த பையனே அமைதியா இருக்கான். உங்களுக்கு என்ன? எதுனாலும் நேர்ல வாங்க, சும்மா என்னை கேள்வி கேக்காதீங்க வக்கீல் சார்” என்றான் கடுப்பாக.

“ப்ளடி போலீஸ், உனக்கு இருக்குடா” என்று அரிச்சந்திரனும் கோபம் கொண்டான்.

தன் அறையில் இருந்த சக்திவேல் ஷெரினின் கொலை வழக்கில் இத்தனை நாள் கண்டுபிடித்த எல்லாவற்றையும் யோசித்து ஸ்டிக்கி நோட்ஸ் போட்டு சுவரில் ஒட்டிப்பார்த்தான்.

ஷெரினின் அறையில் ஒரு ஆணின் ரத்தம் இருந்தது.

அதுவும் AB+ பிரிவு.

அந்த ரத்தம் தடம் கூட அழிக்கப்பட்டிருந்தது. அப்படி பார்த்தால் திட்டமிட்டு செய்த கொலை.

முக்கியமாக அவளை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியில் இருந்த போதை மருந்து. அதுதான் அவள் கழுத்தை வெட்டிய போது ரத்தத்தில் கலந்திருக்க வேண்டும்.

ரத்தப்பிரிவு விஷயத்தில் சக்திவேல் அவனுக்கு தெரிந்த அரசு தடயவியல் நிபுணரின் மூலம், புதிதாய் ஒரு அறிக்கை வாங்கியிருந்தான். அப்போது செய்த ஆய்வில் புதிய ரத்த மாதிரி கிடைத்ததாகவும், அது AB+ என்று வரும்படி செய்திருந்தான். ஆனால் அதுவே நிரஞ்சனுக்கு எதிராக மாறியது.

அந்த பல்கலைக்கழகத்தில் அதே ரத்தப்பிரிவு இருப்பவர்களின் எண்ணிக்கை முப்பது. அதில் பதினேழு பேர் பெண்கள். மீதி பதிமூன்று பேர். அவர்களில் ஷெரினோடு சம்மந்தப்பட்டவர்கள் என்று பார்த்தால் எட்டு பேர்.

அந்த எட்டு பேரில் ஒருவனே கொலைகாரன்.

அதில் மூன்று பேர் கொலை நடந்த அன்று ஊரிலேயே இல்லை. வெளியூரில் இருந்ததற்கான அயலிட சான்று (alibi) இருந்தது.

இப்போது ஐந்து பேர், அதில் நிரஞ்சன், நிவாஸ், குமரன், விக்னேஷ், ராஜ் என்று சந்தேகிக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்தது.

நிவாஸும் குமரனும் இதில் பேராசிரியர்கள். விசாரித்ததில் குமரன் வேறு பாடப்பிரிவை சேர்ந்தவர், அவருக்கு ஷெரினை தெரியவில்லை. அது மட்டுமின்றி, அவர் ஷெரின் கொல்லப்பட்ட நேரம், காணொளி காட்சியில் நேரலையில் செமினார் எடுத்திருக்கிறார்.

இதையெல்லாம் சொல்லி நிவாஸை விசாரிக்க சக்திவேல் தெளிவாக ஒரு திட்டம் வைத்திருக்க, டி.எஸ்.பியோ வேறு திட்டம் சொன்னார்.

“ஸோ அந்த ப்ரோபஸர், நிரஞ்சன் இரண்டு பேரும்தான் அந்த பொண்ணோட ரொம்ப சம்பந்தப்பட்டவங்க இல்லை?” என்று அவர் இருக்கையில் சாய்ந்தபடி நக்கலான தொனியில் சக்திவேலிடம் கேட்டார்.

டி.எஸ்.பி தினகரனை அவனுக்கு தெரியும். நேர்மைக்கு அப்படியே எதிரான ஒரு ஆள். ஆனாலும் அவர் சொல்வதைதான் செய்ய வேண்டும்.

“இங்க பாரு சக்தி, அந்த பையன் நிரஞ்சனை தூக்கி உள்ள வை. அந்த ப்ரோபஸர் மேல சந்தேகம்னா அவன் வந்ததும் விசாரிக்க ஏற்பாடு பண்ணு. எனக்கு என்னமோ அந்த பையன் மேலதான் டவுட்டா இருக்கு” என்றவர் சிறிது நேரத்துக்குப் பின்,

“அரெஸ்ட் ஹிம் இமிடியட்லி” என்றார் கட்டளையாக.

“சார், எவிடன்ஸ்?” என்று சக்தி இழுக்க,

“எவிடன்ஸ் ரெடி பண்ணு, என்னத்த இத்தன வருஷமா கிழிக்கிற, ஓஹ் நீ புதுசுல… அந்த பையன் ப்ளட் குரூப் இருக்கு. அந்த பையனும் பொண்ணும் அடிக்கடி சண்டை போட்டதை பார்த்ததா சொல்றாங்களே, அதெல்லாம் போதும். எஃப்.ஐ.ஆர் போட்டு எனக்கு சொல்லு, நான் எஸ்.பிக்கு சொல்லணும்” என்றவர் ஒற்றை விரலை நீட்டி அவனை வெளியே போக சொன்னார். சக்திவேலும் சல்யூட் வைத்து வெளியேறினான்.

அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. காலையில் விடுதி சென்று நிரஞ்சனை கைது செய்திருக்க, ஊடகத்திற்கு தகவல் கசிந்து அது பரவ தொடங்கியது. சமூக வலைதளங்களில்,
‘இந்த வயசு பசங்களே இப்படித்தான் காதல்ன்ற பெயர்ல பொண்ணுங்களை கொடுமை பண்ணி கொன்னுடுறாங்க’

‘ஜஸ்டிஸ் ஃபார் ஷெரின்’

‘ஷெரின் நீட்ஸ் ஜஸ்டிஸ்’ என்று எல்லாரும் வலைத்தளத்தில் எதிர்ப்புகளை காட்டினர். மக்களுக்கு ஒரு செய்தியைக் கேட்டு பார்த்ததுமே, அதை பகிரவும் அது பற்றி கருத்து சொல்லவும் போதுமானதாக இருந்தது.

எத்தனை செய்திகள் உண்மையாக இருக்கின்றன, உண்மை சொல்கின்றன என்றெல்லாம் இல்லாமல் இன்று செய்திகளும் உண்மைத் தன்மையின்றி வதந்திகள் போல் ஊடகத்தினால் மலிந்து போயின, ஊடகத்துறையின் உண்மைத்தன்மை தன் கூர்மையை இழந்திருக்க, பத்திரிக்கைத் துறையில் பகுத்தறிவு இல்லாது போனது.

ஷெரினை, நிரஞ்சனை தெரியாதவர்கள் கூட கருத்திட்டனர். எல்லாம் பார்க்க பார்க்க அரிச்சந்திரனுக்கும் ஆதினிக்கும் தலைவலித்தது. ஆதினி கணவன் முகத்தையே பார்த்தாள். கொலைக்குற்றம் இதற்கு அரிச்சந்திரன் ஜாமீன் கூட வாங்க முடியாது.

நிரஞ்சனின் பெற்றோர்கள் ஆதினிக்கும் கிஷோருக்கும் அழைத்து அழ, ஆதினி அரியைப் பார்த்தாள்.

“பெயில் கிடைக்கிறது கஷ்டம்மா” என்றான் அரி. சக்திவேலிடம் என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை. அவனுக்குக் கோபம், தான் யோசித்து சில விஷயங்கள் சொல்லியிருக்க, அதனை செயல்படுத்தி நிவாஸை வரவழைக்காமல் நிரஞ்சனை கைது செய்திருக்கிறான்.

அன்றைய நாள் எதுவும் செய்ய முடியாது போக, நிரஞ்சன் லாக் அப்பில் இருந்தான். சக்திக்கு அழைத்து பேச, அவனோ,

“உண்மையான குற்றவாளியை நான் கோர்ட்ல நிறுத்துறேன் மாமா. நீங்க அதுவரைக்கும் பொறுமையா இருங்க” என்றான்.

“டேய், நான் சொன்ன விஷயம்? அந்த ப்ரோபஸர் அவர்தான்..” என்று அரி சொல்ல,

“எனக்கு தெரியும் மாமா, அந்தாள் கிட்ட பேசிட்டேன், அங்க இப்போ ஃப்ளைட் இல்லை. நிவாஸை நாளைக்கு காலையில கிளம்பி உடனே வர சொல்லிட்டேன். சென்னை ஏர்ப்போர்ட்ல வச்சு அவரை தூக்கிடுறேன்” என்றான்.

“அப்புறம் நிரஞ்சனை ஏன்டா அரெஸ்ட் பண்ணியிருக்க, பெயில் வேற கிடைக்கல..” என்று அரி வருத்தமாக சொல்ல,

“உண்மை தெரியணும்னா பொறுமை கொஞ்சம் வேணும். எல்லாருக்கும் இருக்க அதே அறிவுதான் ஆண்டவன் எனக்கும் கொடுத்திருக்கான், நேரம் கொடுத்தாதான் என்னால விசாரிக்க முடியும்” என்றான் சக்திவேல்.

டி.எஸ்.பி சொன்னதை அரிச்சந்திரனிடம் சொல்லவில்லை. அவனாக புரிந்து கொள்வான் என்று எண்ணம். சக்தியும் தனது யூகங்களை சொல்ல விரும்பவில்லை.

‘சும்மாவே வக்கீலுக்கு போலீஸ்னா ஆகாது, இவர்கிட்ட டி.எஸ்.பி பத்தி சொல்றதுக்கு முன்னாடி நான் சிலதை கண்டுபிடிக்கணும்’ என்று மனத்தில் நினைத்தான்.

சக்திவேல் மனத்தில் பெரிய நெருடல்! தான் ஐந்து பேரை சந்தேகப்படுகிறேன் என்று சொல்லியும் ஏன் நிரஞ்சனை கைது செய்ய சொல்ல வேண்டும், நிவாஸை ஏன் விசாரிக்க அவசரம் காட்டவில்லை. மீதி மூன்று பேரை கூட ஏன் சந்தேகப்படவில்லை.

டி.எஸ்பி எதையோ மறைப்பதாக தோன்றியது. முன்பிருந்தே இந்த வழக்கில் டி.எஸ்பியும் (DSP-Deputy Superindent of Police) எஸ்.பியும் (Superindent of Police- SP) எதையோ மறைக்கிறார்கள், யாரையோ காப்பாற்ற நினைக்கிறார்கள் என்ற சந்தேகம். அப்போது கூட பல்கலைக்கழகத்தின் பெயர் கெட கூடாது, இரு மாநில அரசியல் என்று நினைத்தான். இப்போது அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற, ஏன் நியாயமான முறையில் விசாரிக்க முயலவில்லை. என்னையும் விடவில்லை என்ற கேள்வி சக்தியிடம்.

சக்திவேல் யாரிடமும் பகிராது ரகசியமாக விசாரிக்க, நிவாஸைப் பற்றி கிடைத்த தகவலில் அதிர்ச்சியானான். வழக்கு இப்போது சரியான திசையில் செல்வதாக தோன்ற, உடனே சென்னை சைபர் க்ரைமில் இருக்கும் அவன் நண்பனுக்கு அழைத்தவன் ஒரு எண்ணைக் கொடுத்து, அதற்கு வரும் அழைப்புகளை டிரேஸ் செய்ய சொன்னான். மேலும் இன்னொரு நண்பனுக்கு அழைத்து வேறு சில தகவல்களும் கேட்டான்.

“இந்த நம்பருக்கு ஒரு மாசமா வந்த கால்ஸ், இனிமே இந்த நம்பருக்கு வர கால்ஸ் எல்லாம் டிரேஸ் பண்ணி சொல்லுடா. அன்அஃபிசியல்” என்று சக்தி கேட்க,

“சரி சக்தி, யார் நம்பர்?” என்று அந்த நண்பன் கேட்க,

“தஞ்சாவூர் டி.எஸ்.பி தினகரன் நம்பர்” என்றதும் அந்த பக்கம் இருந்தவன் அதிர்ந்து போனான்.

“டேய், உன் ஹையர் ஆபிசியல் கால்ஸ் டிரேஸ் பண்ண சொல்ற?”

“மச்சி, ப்ளீஸ். சொல்றதை செய், ஒரு முக்கியமான கேஸ்டா. அக்யூஸ்ட் தப்பிச்சிற கூடாது. அப்படியே இன்னொரு நம்பர் சொல்றேன்” என்று நிவாஸின் எண்ணும் சொல்ல, அவனும் சக்திக்கு உதவினான்.

பேராசிரியர் நிவாஸ் கோகாய் பதட்டத்தோடு, அசாமிலிருந்து சென்னை வர விமானம் நிலையம் கிளம்பினான். இங்கே சக்திவேல் அவன் வரவுக்காக காத்திருந்தான்.

✅ End of Episode 26
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 1 month ago

Nice.

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top