Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 24

அடுத்த நாள் காலையில் அரிச்சந்திரன் வழக்கம் போல் எழுந்து விட, அரியின் பேச்சு ஆதினியின் இரவினை களவாடி உறக்கத்தைப் பறித்தது. காலையில் அலாரம் அடித்தும், அசதியில் நன்றாக உறங்கினாள். அரி குளித்து வந்தவன் நேரமாவதைப் பார்த்து, ஈரத்துண்டினால் ஆதினியை ஒரு அடி போட்டான்.

“ப்ச், வலிக்குது” என்று சுணங்கியபடி ஆதினி உறங்க,

“காலேஜுக்கு டைம் ஆகலயாடி?” என்ற அரியின் சத்தத்தில் விழித்தவள் நேரம் பார்த்து பட்டென்று எழுந்தாள். வேகமாக துணிகளை எடுத்தவள் குறுக்கே நின்ற அரியை இடித்து விட்டு அவசரமாக பாத்ரூமினுள் புகுந்தாள்.

“அதப்பைப் பாரு” என்று முணுமுணுத்த அரியும் நீதிமன்றதுக்குக் கிளம்ப தேவையானவற்றை எடுத்து வைத்தான். வாசலில் சத்தம் கேட்க அவன் மாமனார் ரவிக்குமார் வந்தார்.

“வாங்க மாமா, ஆதினி குளிக்கிறா. டீ குடிங்க” என்றான். அவர் மறுத்துவிட ஆதினி குளித்து உடைமாற்றி வந்து விட்டாள். அப்பாவைப் பார்க்கவும் முகம் மலர்ந்தது.

“அப்பா, பத்து நிமிஷம். வந்துடுறேன்” என்று அவள் பரபரப்பாக சொல்ல,

“பொறுமையா வாடா, ஒரு நாள் லேட்டா போனா என்ன? மெல்ல கிளம்பி சாப்பிட்டு போலாம் ஆதி” என்று ரவிக்குமார் சொல்ல, அரிச்சந்திரனோ கிண்டலாக பார்த்தான்.

‘அன்புள்ள அப்பா படத்தை ஆயிரம் தடவ பார்த்துருப்பார் போல… இவளே என்னைக்காச்சும் காலேஜ் போறா. அதுவும் லேட்’ என்று நினைத்தவன்,

“நான் கிளம்புறேன்” என்று எல்லாருக்கும் சொல்லி விட்டு சென்றான். ஆதினி போகும் போது ரவிக்குமாரிடம்,

“அப்பா! ஈவினிங் ஹாஸ்டல் வந்துடுப்பா. நான் இனிமே வீட்ல இருந்து போறேன்” என்றதும் அவருக்கு சந்தோஷம். எப்போதும் மகள் பேச்சை மறுக்காதவர் இப்போதும் உடனே சரியென்று விட்டார்.

கல்லூரி சென்றதும் ஆதினிக்கு சுற்றி அத்தனை பேர் இருந்தும் தனிமை வாட்டியது. ஷெரினின் கைகளோடு எப்போதும் கோர்த்தபடி சுற்றியவள். வகுப்பில் கவனம் வைக்க போராடினாள். இடைவேளை நேரம் வரவும் கிஷோரும் நிரஞ்சனும் ஆதினியோடு டீ குடிக்க வெளியே வந்தனர். ஆதினியும் நிரஞ்சனும் சிந்தனையில் உழன்று அமைதியாக இருக்க, கிஷோர் பேசினான்.

“உன் வாட்ஸப்புக்கு அன்னிக்கு ப்ளட் கொடுத்தவங்க லிஸ்ட் எல்லாம் அனுப்பிட்டேன் டி. நீ மாம்ஸ் கிட்ட கொடுத்திரு” என்றான். நிரஞ்சன் கிஷோரிடம்,

“அந்த நிவாஸ் வந்தானா இல்லையாடா?” என்றான் ஆத்திரத்துடன்.

“இல்லடா, நானும் நம்ம பூபதி சார் கிட்ட கேட்டேன். ஊருக்கு லீவ்ல போயிருக்கார், அங்க ரொம்ப இண்டிரியர் பார்ட். மொபைல் ரீச் ஆகலனு சொன்னார், அவர் கேள்வி கேட்பார்னு நானும் வேற கேட்கல. அந்தாளை பத்தி விசாரிக்கிறது தெரிஞ்சு எஸ் ஆகிட்டா” என்று கிஷோர் விவரமாக பேச, நிரஞ்சன் தலையசைத்தான்.

ஆதினி அமைதியாக இருக்க, “என்னடி நீ பேசாம இருக்க? மாம்ஸ் என்ன சொன்னார்? போலீஸ்ல சொல்லியாச்சா?” என்று கிஷோர் கேட்டான். ஆதினியும் சக்திவேல் சொன்னதை சொன்னாள்.

“அப்போ உடனே ஷெரின் அப்பா அம்மா கிட்ட பேசு ஆதி” என்று அமைதியாக இருந்த நிரஞ்சனும் பரபரத்தான்.

ஆதினிக்கும் இப்பவே பேசிவிடலாம் என்று தோன்ற, ஷெரினின் அப்பாவுக்கு அழைத்து பேசினாள். அவர் முதலில் வேண்டாமென மறுக்க, கொலையாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்ல, அவருக்கும் மகளை இல்லாமல் ஆக்கியவன் மீது பெரும் கோபம். அவர்களின் வழக்கறிஞரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொல்லவும் நண்பர்கள் மூவருக்கும் திருப்தி. அன்று மாலை ரவிக்குமார் ஹாஸ்டலில் பேசிவிட, ஆதினி நிரந்தரமாக வீட்டுக்கே சென்றாள்.

அரிச்சந்திரன் வீடு வர, இரவு ஒன்பது மணி ஆனது. வாசலில் செருப்பைப் பார்க்கவும், ஆதினி இருக்கிறாள் என்ற தெரிய சிறிய புன்னகை. உள்ளே நுழைய, தாத்தாவும் பேத்தியும் தீவிரமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். இவனை பார்த்த ராமசாமி,

“பேத்தி இனிமே ஹாஸ்டல் போகலயாம்டா” என்றார் சந்தோஷமாக. பேரனுக்குத் துணையிருக்கிறது என்று அவர் மகிழ, அவனோ வேண்டுமென்றே,

“ஓஹ், மகாராணி வீட்டுக்கு வந்ததுக்குக் கெடா வெட்டிக் கொண்டாடனுமோ? உன் பேத்திக்கு இதே பொழப்புதானே?” என்று கேட்டபடி அறைக்குள் நுழைந்தான். அரிச்சந்திரனின் இந்த அலட்டாத பேச்சு ஆதினிக்குக் கோபம் தந்தது. குறுபுன்னகை கொடுத்திருந்தால் கூட மகிழ்ந்திருப்பாள், அவன் பேசிவிட்டு செல்ல, இவளும் பின்னே போனாள்.

அரி பாத்ரூமில் இருந்து வெளியே வந்தான். வெள்ளை சட்டையை துவைக்கும் கூடையில் போட்டவன், டீஷர்ட்டை மாற்ற,

“ஏன் மகாபிரபுக்கு நான் வந்தது சந்தோஷமில்லையா?” என்று ஆதினி முகம் சுருக்கிக் கேட்டாள். தலையெல்லாம் கலைந்திருக்க, அவனுக்குப் பிடிக்காத கற்றை முடிகள் இருபக்கமும் ஆட, ஆதினியின் முகத்தைப் பார்த்தான். ஆதினியின் இருப்பு, அருகாமை அரிச்சந்திரனுக்கு மிகவும் பிடித்த ஒன்று, பிடித்தம் என்பதை விட தேவை அவனுக்கு.

ஆனாலும் கொஞ்சம் ஈகோ தலைக்காட்ட,
“இல்லையே!” என்றதும் ஆதினிக்கு அவ்வளவு கோபம்.

“இல்லையா?” என்று பல்லைக் கடித்தவள் அறையை விட்டு வெளியே போக, அவளைப் பிடித்து இழுத்தான்.

“அடியே அரைடிக்கெட்! உனக்கு டோபமைன், செரிடோனின் தெரியுமா?” என்று அவள் தோளில் கைப்போட்டபடி கேட்டான்.

“ஹார்மோன்ஸ்?” என்று ஆதினி கேள்வியாகப் பார்க்க,

“ஆமா, இப்போ நீ என்ன எதிர்ப்பார்க்கிற? நீ ஹாஸ்டல் போகலனதும் எனக்கு டோபமைன் (Dopamine) தூக்கிடும்னா? அது தற்காலிக ஹை(high) கொடுக்கும். எனக்கு அது வேண்டாம், எனக்கு செரிடோனின்(Serotonin) வேணும், நிறைவா இருக்க ஒரு அமைதி. அது உடனே எல்லாம் கிடைக்காது, நீயும் எங்கிட்ட எதிர்ப்பார்க்காத” என்றான்.

அரிச்சந்திரன் சொன்னது ஆதினிக்குப் புரிய, மெல்ல எக்கி அவனை கழுத்தோடு அணைத்தாள். அரியின் விழிகளைப் பார்த்து,

“எனக்கு அந்த ஹார்மோன்ஸ் எல்லாம் தெரியாது. பட் அரிச்சந்திரனை பார்த்தா எனக்கு டோபமைன், செரிடோனின் எல்லாமே கிடைக்கும்.” என்று சொல்லியவள் அறையை விட்டு போனாள்.

அரிச்சந்திரன் பதில் பேசும் முன் ஆதினி சென்றிருக்க, அவள் வார்த்தையில் இவனிடம் சிரிப்பு. உண்பதற்கு சென்றவன் தட்டை எடுத்து வைத்து, இட்லியை எதிர்ப்பார்க்க, பாத்திரத்தைக் காணும். என்னவென்று கேட்க எழ பார்க்க, அதற்குள் நெய் மணக்கும் தோசை அவன் தட்டில் விழுந்தது.

“என்னடி இட்லி இல்லை?”

“இருக்கு, நானும் தாத்தாவும் சாப்பிட்டோம். உங்களுக்குத் தோசை பிடிக்குமாமே, சாப்பிடுங்க” என்றவள் மீண்டும் கிச்சனுக்குள் போக, தட்டை எடுத்தவன் ஆதினியின் பின்னே போனான்.

அன்று மாலை தாரகை வந்த போது சொல்லியிருந்தாள்.

“அரிக்கு தோசை பிடிக்கும், அம்மா இருக்கும் போது அவனுக்கு இட்லி சாப்பிட கசக்கும். அவங்க போன அப்புறம் வீட்ல சமையல் ஆளுதானே? தோசை முன்னாடியே சுட்டு வச்சா சாப்பிட நல்லாயிருக்காது. இட்லியே பழகிடுச்சு, எனக்குன்னா எத்தனை தோசை வேணும்னாலும் சுட்டு தருவான், அவனுக்கு நின்னு செஞ்சுக்க மாட்டான். நானும் நம்ம அண்ணனுக்கு செய்வோம்னு செஞ்சா, தோசை கல்லு டோட்டல் டேமேஜ் ஆகிடும். கிச்சன்ல பயங்கர பெர்ஃப்க்ஷன் எதிர்ப்பார்ப்பான், அவனை மாதிரி எனக்கு தோசை சுட வராது. ஸோ விட்டுட்டேன்” என்று சொல்லவும் ஆதினியும் யோசித்து பார்த்தாள்.

அவன் எப்போதாவது தோசை சாப்பிடுவான். அன்று இவளுக்காக கூட செய்து கொடுத்தானே. பிரியமானவர்களுக்கு அலுப்பு பார்க்காது பிடித்ததை செய்யும் பழக்கம் அரிச்சந்திரனுக்கு உண்டு, அவனுக்கு என்றால் அது வருவதில்லை. ஆதினிக்கு சமையல் பிடித்தம், நன்றாகவும் வரும். வீட்டில் இருக்கும் நேரம் அவனுக்குப் பிடித்ததை செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.

அரிச்சந்திரன் உள்ளே வந்தவன், கிச்சன் மேடையில் உட்கார்ந்தபடி,

“ஏன்டி இரண்டு ஈடு இட்லியும் நீயும் பெருசும் சாப்பிட்டீங்களா? நம்ப முடியலயே?” என்று கேட்டான். ஆதினி பதில் சொல்லாது அடுத்த தோசையை சுட்டு அவன் தட்டில் வைக்க, அரிச்சந்திரனுக்கு இட்லி கவலை. அவன் விழிகள் இட்லி எங்கே என்று பார்க்க,

“இட்லி இருக்கு. நாளைக்கு உப்புமா பண்ணிக்கலாம், இப்போ சூடா சாப்பிடுறீங்களா?” என்று கடுப்பாகக் கேட்டாள் ஆதினி.

“உங்களுக்கு தோசை பிடிக்கும்னு அத்தாச்சி சொன்னாங்க, அதான் இட்லி தரல. போதுமா?” தோசைக்கரண்டியை நீட்டி முறைத்தாள்.

“அதுக்கு ஏன்டி கஷ்டப்படுற? இட்லி இல்லைன்னா சாப்பிடலாம். பார்க்கவே டயர்டா இருக்க” என்றான் ஆதினி முகத்தைப் பார்த்தபடி. ஆதினிக்கு இத்தனை பிரியத்தை தாங்க முடியவில்லை.

இரு கைகளையும் மடக்கி, பல்லைக் கடித்தவள்,

“என்னையும் கொஞ்சம் பாசத்தெல்லாம் காட்ட விடுங்க லாயர் சார்” என்று அவன் தோளில் கடித்தாள்.

“அடியே!” என்று அரிச்சந்திரன் தோளை தேய்த்தபடி தள்ளி விட, ஆதினி கணவனை கண்களால் களவு செய்த வண்ணம் புன்னகையுடன் தோசை சுட்டாள்.

“நீ சொன்னதுல ஒரு சேஞ்ச், நான் லாயர் மட்டுமில்ல அட்வகேட் டூ” என்றான் சிரிப்புடன்.

“பேச்சுக்கு சொல்றதுல லாஜிக் முக்கியமா? சாப்பிடுங்க” என்று கத்த, சிரிப்போடு உண்டான் அரி.

அரிச்சந்திரனுக்கு இப்படி அவனை உட்கார வைத்து ஒருவர் கவனிக்க, புதிதாக இருந்தது. தாரகை அண்ணனுக்காக செய்ய நினைத்தாலும், இவன் எதிர்ப்பார்க்கும் சுவை வராது, அதைவிட தங்கையை சிரமப்படுத்த நினைக்க மாட்டான்.

ஒருவழியாக உண்டு முடித்து அறைக்குள் வந்தார்கள். அரிச்சந்திரன் உறங்காமல் அவன் பையில் இருந்து நிறைய கோப்புகளை எடுத்து மேஜையில் வைத்தான்.

“எனக்கு கேஸ் விஷயமா கொஞ்சம் பார்க்கணும். நீ தூங்கு” என்றவன் அறையை விட்டு போக, ஆதினி அவனை அழைத்தாள்.

“நான் ஷெரின் அப்பா கிட்ட பேசிட்டேன் அரி, அப்புறம் கிஷோர் ப்ளட் குரூப் ரிப்போர்ட் அனுப்பினான், வாட்ஸப்ல அனுப்பியிருக்கேன்.” என்றதும் போனை எடுத்து அதனை பார்த்த அரி மெத்தையில் உட்கார்ந்தான்.

ஆதினியைப் பார்த்த அரி,
“இதுல கொஞ்சம் பேரோடது தானே இருக்கு?” என்று கேட்க,

“ஷெரின் சிக்ஸ்டி ப்ள்ஸ் வெயிட் இருப்பா. ப்ளட் கொடுக்க மினிமம் வெயிட் இருக்கணும், அந்தளவுக்கு வெயிட்டா இருக்கவங்கதானே ஷெரினை கொன்னு மூவ் பண்ணியிருக்க முடியும்?” என்று கேட்டாள்.

“கரெக்ட், அதே நேரம் அதே வெயிட் இருக்க, ஆனா ப்ளட் டொனேட் பண்ணாதவங்க, அதுக்கு டெஸ்டுக்கு ப்ளட் கொடுக்காதவங்க, குடிக்கிறவங்க, லீவ் போட்டவங்க இத்தனை பேர் இருப்பாங்களே?” அரி கேட்க, ஆதினி விழித்தாள். இந்த யோசனை அவளுக்கு இல்லை.

மனைவியின் தோளில் தட்டிய அரி, “நான் நிறைய கேஸ் பார்க்கிறதால எனக்குத் தோணிச்சு, அண்ட் இனி இது தேவை இல்லை. ஷெரின் அப்பா ஓகே சொல்லிட்டார்னா எங்கிட்ட பேச சொல்லு, நானே கேஸ் பார்க்கிறேன் இல்லை வேற பெரிய அட்வகேட் கூட பார்க்கலாம். சக்தி இனிமே இந்த டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணிப்பான்” என்றான்.

அடுத்த இரண்டு நாளில் இண்டர்னல் தேர்வு இருந்தது. ஆதினிக்கு ஷெரினோடு படித்த ஞாபகங்கள், ஒழுங்காக படிக்க முடியவில்லை. தேர்வன்று காலை ரவிக்குமார் மகளை கல்லூரியில் கொண்டு விட, நிரஞ்சன் புத்தகத்தை விரித்து வைத்து அமைதியாக இருக்க, கிஷோரிடம் புலம்பி கொண்டிருந்தாள் ஆதினி.

“எனக்கு படிக்கவே கடுப்பா இருக்குடா, ஷெரின் என் புக்ல கிறுக்கி வச்சதெல்லாம் இருக்கு, எனக்கு அவ ஞாபகமாகவே இருக்கு.” மெல்லிய குரலில் நண்பனிடம் புலம்ப,

“சரிதான், இந்த ஸ்டாஃப் நாலு மணி நேரம் சொன்னாலும் புரியாத விஷயத்தை ஷெரின் அரை மணி நேரத்துல புரிய வச்சிருவா. இந்த நிரஞ்சன் பய முன்னாடி சொல்லிக் கொடுப்பான், இப்ப அமைதியா ஆகிட்டான். சரி வா பார்த்துக்கலாம். ஷெரின் நம்ம ப்ரண்டுதானே? ஆவியா ஆனாலும் ஹெல்ப் பண்ணுவா” என்றதும் ஆதினி முறைத்தாள்.

தேர்வெழுதும் நேரம் வர, கேள்வித்தாளை பார்த்த ஆதினிக்கு எல்லா கேள்வியும் தெரிந்தது. பதில் தெரியவில்லை. எழுதவும் ஒரு வேகம் இல்லை, ஒரு மணி நேரம் தோன்றியதை எல்லாம் எழுதியவள் வெளியேறி விட்டாள். டீ கடை சென்று நிற்க, இவளுக்கு முன் கிஷோர் நின்றான்.

“அடப்பாவி, நீ எப்போடா வந்த?” ஆதினி ஆச்சர்யப்பட,

“நீ எழுதிட்டு இருக்கும் போது வந்துட்டேன்.” என்றான் வானத்தை பார்த்தபடி. முதலில் அவ்வளவு விளையாட்டாக பேசியவன் எழுதாமல் வந்திருக்க, ஆதினிக்கு புரியவில்லை.

ஆதினி பார்க்க, “போடி!” என்றான் எரிச்சலாக. நிரஞ்சன் எங்கே என்று பார்க்க, அவன் தேர்வு முடிய அரை மணி நேரம் இருக்கும் போதுதான் வந்தான்.

“எப்படி டா இவ்வளவு நேரம் எழுதின?” ஆதினி கேட்க,

“ஷெரினுக்குப் பிடிச்ச சப்ஜெக்ட்” என்ற வாக்கியம் நிரஞ்சனை உணர்த்தியது. அந்த வகையில் ஆதினிக்கும் கிஷோருக்கும் சந்தோஷம்.

தேர்வு முடிந்ததும் அடுத்த வகுப்புகள் தொடங்கின. மாலை அப்பாவுக்காக ஆதினி காத்திருக்க, வந்தது அரிச்சந்திரன்.

“என்ன மகாபிரபு, நீங்க வந்திருக்கீங்க?” ஆதினி கிண்டலாகக் கேட்டாள். காலையில் தேர்வு சரியாக எழுதாமல் ஷெரின் ஞாபகத்தில் இருந்தவளுக்கு, இப்போது அரியைப் பார்க்கவும் தானாக ஒரு உற்சாகம்.

அவன் காரில் வராமல், பைக்கில் வந்திருந்தான். ஆதினியின் முகம் புன்னகையில் மலர, அரியோடு வீட்டுக்கு செல்ல ஏறினாள்.

“இன்னிக்கு மதியம் கேஸ் இல்லை, அதான் வந்தேன். எக்ஸாம் எப்படி பண்ணின?” அரி கேட்க, சோர்வாக அவன் முதுகில் சாய்ந்தாள்.

“என்னடி?”

“ஊத்திக்கும்” என்றதும்,

“விடுடி, இண்டர்னல்ஸ்தானே” என்றான் அரியும் சாதாரணமாக.

போகும் வழியில் மெடிக்கல் ஷாப் வர, வண்டியை நிறுத்த சொன்னாள் ஆதினி.
“தாத்தாவுக்கு மாத்திரை வாங்கணும்” என்றதும் அரி வண்டியை நிறுத்தினான். ஆதினி மாத்திரை வாங்கிவர, ஒற்றைக்காலை தரையில் ஊன்றி, வண்டியில் உட்கார்ந்த அரிக்குத் சட்டென ஒரு எண்ணம். ஆதினி வரவும், வண்டியை சைட் ஸ்டாண்ட் போட்டவன்,

“ஆதினி, ஷெரின் டிப்ரஷனுக்கு டேப்லட் போட்டானு டாக்டர் ரிப்போர்ட்ல இருந்தது, அவ போட்ட டேப்லட் என்ன?” என்று கேட்டான்.

“என்ன, டிப்ரஷனா? அதெல்லாம் இல்லை” என்று மறுத்து பேச,

“சரிடி, அவ டெய்லி சாப்பிடுற மாதிரி எதாவது மாத்திரை இருக்கா?” என்றதும் ஆதினி யோசித்தாள்.

“ம்ம், அவளுக்கு மைக்ரேன் உண்டு. அதுக்கு மாத்திரை போடுவா..” என்றவள் மாத்திரையின் பெயர் சொல்ல,

“டூ மினிட்ஸ்” என்றவன் மெடிக்கல் ஷாப்பில் இருந்தவரிடம் ஏதோ கேட்டுவிட்டு வந்தான். ஒன்றும் சொல்லாமல் அரி வண்டியை ஓட்ட,

“என்னாச்சு அரி? அப்போ அட்டாப்ஸி ரிப்போர்ட்ல தப்பா?” என்று ஆதினி பரபரப்பாகக் கேட்டாள். அவள் குரல் உயர்ந்திருக்க,

அரி உடனே, “வண்டியில வரப்ப இப்படி கத்தி பேசாத, அவர் சரியாதான் ரிப்போர்ட் கொடுத்திருக்கார். அந்த டேப்லட் டிப்ரஷனை டீரிட் பண்ணவும் யூஸ் பண்ணுவாங்களாம். தீடீர்னு ஸ்ட்ரைக் ஆச்சு, அதான் கேட்டேன்” என்றான்.

வீடு வந்ததும் “ஷெரின் அப்பா எங்கிட்ட பேசினார், சண்டே வரேனு சொன்னார். நான் பார்த்துக்கிறேன், நீ இதையே யோசிக்காத” என்றவன் சக்திவேலுக்கு அழைத்து இதனை சொன்னான்.

“நான் கூட கொஞ்சம் சந்தேகப்பட்டேன் மாமா, டிப்ரஷன் டேப்லெட் டவுட்டாவே இருந்தது. நான் தெரிஞ்ச டாக்டர்கிட்டவும் கன்சல்ட் பண்றேன், அந்த பொண்ணோட அப்பா கம்ப்ளையண்ட் பண்ணினதும் நான் மத்த விஷயம் பார்க்கிறேன்” என்றான்.

அரியிடம் பேசிய சக்திவேல் தன் போனில் சேமித்து வைத்திருந்த ஷெரினின் பிரேத அறிக்கையை பார்த்தான். இதை அவன் எடுத்தது கூட, அவன் மேலதிகாரிக்குத் தெரியாது. இந்த வழக்கை அவர் கட்டுப்பாட்டில் எடுத்து விட, இவனும் வேலைப்பளுவில் விட்டுவிட்டான். இப்போது படித்து பார்க்க, ஓரிடம் அவனை கவனிக்க வைத்தது. விரல்களால் அந்த இடத்தில் கோடிழுத்தான்.

‘No Tentative cut marks’ இந்த இடம் யோசிக்க வைத்தது. தற்கொலை செய்பவர்கள் பயத்திலும் வலியை உணரவும் முதலில் சின்னதாக கீறி பார்ப்பார்கள். விதிவிலக்காக ஒரே இடத்தில் வெட்டிக்கொண்டு இறப்பவர்களும் உண்டு. முன்பு அப்படித்தான் நினைத்திருந்தான் சக்திவேல்.

அவனுக்கு தெரிந்த தடவியல் மருத்துவருக்கு அழைத்தவன்,

“டாக்டர், உங்களுக்கு சில பிக்சர்ஸ் அனுப்பியிருக்கேன். அதை பார்த்து அந்த பொண்ணு கழுத்துல இருக்க வெட்டு எப்படிப்பட்டது சொல்றீங்களா?” என்று கேட்டான்.

அவரும் பார்த்துவிட்டு, “போட்டோ’ல பார்க்கிறப்ப, எனக்கு தெரிஞ்சு பின்னாடி பிடிச்சிட்டு வெட்டியிருக்கலாம். cuts பார்க்கிறப்ப புதுசா கத்தியெடுத்த ஆள் மாதிரி இருக்கு.” என்றார்.

அவரிடம் பேசிய பின் சக்திவேலுக்கு நிறைய யூகங்கள். ஆனால் அதனை யாரிடமும் பகிரவில்லை. ஷெரின் தந்தை மீண்டும் வழக்கை விசாரிக்க சொல்லாமல், இவன் எதிலும் தலையிடுவதாக இல்லை.

**************

அன்று வெள்ளிக்கிழமை, ஆதினிக்கு இரண்டு வகுப்புகள் மட்டுமே இருக்க, மதியமே வீடு வந்து விட்டாள். அரிச்சந்திரனும் அன்று கோர்ட் செல்லவில்லை, வீட்டில் இருந்தான். ஆதினி வீட்டு வேலைகள் செய்ய, அரி அவன் அறையில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

ஆதினி காய்ந்த துணிகளை அறைக்குள் வைக்கப் போனவள், அரியிடம்,
“என்ன தேடுறீங்க” என்று கேட்க,

“என் பென் இங்கதான் வச்சேன், காணும்” என்றபடி கீழே குனிந்து பார்த்தான்.

“வேற பென் எடுத்துக்கோங்க அரி, என் பேக்ல இருக்கும்” என்று சொல்லி ஆதினி வெளியே போக, அரி நிமிர்ந்து பார்த்தவன் முறைத்தபடி அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

“அரைடிக்கெட்! என்னடி இது?” என்று அவள் கொண்டை விழாமல் இருக்க, சொருகியிருந்த பென்னை இழுத்துவிட, கொண்டை கலைந்தது. கூடவே தலையில் ஒரு குட்டு விழுந்தது.

“இந்த பென்னுக்கு இப்படி பிடிச்சு இழுப்பீங்களா?” என்று கேட்ட ஆதினி கையை வைத்து கடுப்போடு அரிச்சந்திரனை மெத்தையில் தள்ளிவிட்டாள்.

“அடியே!” என்று அரி கை ஊன்றி எழப்பார்க்க, ஆதினி இருப்பக்கமும் அவன் தோளைப்பிடித்து,

“என்ன ஓவரா பண்றீங்க?” என்று தலையைத் தேய்த்தபடி முறைத்தவள் பார்வை, சிறிது நேரத்தில் ரசனையானது. ஜம்மென்று அவன் மேல் படுத்துக் கொள்ள,

“வெக்கமே இல்லையாடி?” என்றான் விளையாட்டாக.

“வெக்கமா? இல்லையே! உங்களுக்குத்தான் என் மேல கோவம், எனக்கில்லையே?” என்றவளின் விரல்கள் அவன் கன்னங்கள் வருட, அரியின் கரங்கள் மனைவியின் இடையை இறுக்கின.

“அரிகிட்ட எனக்கு ஈகோ எல்லாம் கிடையாது.” என்றவள் அவன் மூக்கோடு உரச, அரிச்சந்திரனுக்கும் மனைவியின் அருகாமையில் வெகு நாட்களுக்குப் பின் வசந்தம் வீச, இயல்பாய் அவளை இழுத்து முத்தமிட்டு வசந்தத்தின் வாசனையை கூட்டினான்.

ஆதினி புன்னகையோடும், வெகு நாட்களுக்குப் பின்னான அவன் அணைப்பிலும் கரைந்து போனவள் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவன் தோளில் முகம் புதைத்தவள்,

“உங்களுக்கு வெக்கமா இல்லையா?” என்று கிண்டல் செய்ய, அரிச்சந்திரன் அவள் கேட்ட தோரணையில் சிரிக்க, அந்த சிரிப்பையும் விரும்பி திருடிக் கொண்டாள் ஆதினி.

எல்லாம் சில நிமிடங்களே, கிஷோரிடமிருந்து வந்த அழைப்பு இருவரின் சிரிப்பையும் நிறுத்தியது. அரிச்சந்திரன் கோபத்தோடு எழுந்தான்.

✅ End of Episode 24
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 1 month ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top