Episode 35
அன்றிரவு உணவின் போது கூட அரி ஆதினியிடம் பேசவில்லை. அவளும் போட்டி போட்டுக் கொண்டு பேசாது இருந்தாள். அடுத்த நாளும் அப்படியே தொடர, ஆதினிக்கு தன்மானம் தடுத்தது. அரி மனம் மாறி உன் இஷ்டம் போல் தேர்தலில் நில் என்று சொல்வான் என்று எதிர்ப்பார்த்தாள், ஆனால் அவனை தெரியுமே.
ஹாஸ்டல் போனதற்கு எவ்வளவு கோபப்பட்டான். அவன் பேச்சை கேட்கவில்லை என்றால் பேசமாட்டானா? நான் என் முடிவினை எடுக்க கூடாதா? என்று ஆதினிக்கும் கோபம். அரிச்சந்திரனுக்கு நான் சொன்னால் இவள் கேட்க மாட்டாளா என்ற கோபம்.
அரிக்கு வேலை, ஆதினிக்குப் படிப்பு என்று இயல்பான ஓட்டம். அன்றாட வேலைகள், அவ்வளவுதான். ஆனால் அந்த அன்றாடங்கள் தான் மனிதனை சலிப்படையை வைக்கின்றன. சுவாரசியங்கள் எல்லாம் எப்போதாவது வருபவை. அன்றாடங்களில் அழகு காண பழக வேண்டும்.
வானவில் இல்லா வானத்தை ரசிக்க ஒரு பார்வை வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை ருசிக்கும்! அரிச்சந்திரனும் ஆதினியும் பொறுமையாக இருந்தால் வேறு, இப்படியான சூழலில் சண்டைகள் மட்டுமே அவர்களுக்குள்.
இரண்டு நாளில் அரி சாதாரணமாக இருந்தான். ஆதினியும் அவன் கேட்டதற்கு பதில் சொன்னாலும் முகம் காட்டினாள்.
வெறுப்பின் எளிமையோடு ஒப்பிடும் போது பிரியம் நிறைய பிரயர்த்தனங்களைக் கேட்கும். அப்படித்தான் ஆதினிக்கும், அரியை அவளுக்குப் பிடிக்கும், அதே நேரம் அவளுக்குப் பிடித்ததை செய்ய கூட பிரியம் கொண்டவனின் பிடித்தம் கேட்டாள். அன்பு எப்போதும் பற்றிக் கொள்ள பிடிமானம் கேட்குமே.
அரியிடம் வீராப்பாக பேசி விட்டாலும் ஆதினிக்கு அவன் விருப்பம் வேண்டும் என்று விரும்பினாள். அரிச்சந்திரனிடம் அதெல்லாம் நடக்குமா? அதைப் பற்றியே அவன் பேசவில்லை.
அந்த வாரம் கல்லூரி சென்ற போது கூட கடுகடுப்பாகவே இருந்தாள் ஆதினி, மாலையிலும் அதே கதை.
கோபத்தை யாரிடமாவது காட்ட வேண்டும் என்று தோன்ற, தாரகைக்கு அழைத்து விட்டாள்.
“ஏன் அத்தாச்சி? ஏன் உங்கண்ணன் இப்படி இருக்கார்?” என்று சிடுசிடுப்பாய்க் கேட்டாள்.
“ஏன்டி கல்யாணமாகி இத்தன நாள் கழிச்சு உனக்கு இப்படி ஒரு டவுட்?” தாரகை கிண்டலாகக் கேட்க, அந்த கிண்டல் பாவனை அப்படியே அரிச்சந்திரன் போல் இருந்தது.
ஆதினி அந்த நேரம் அடம் பிடிக்கும் குழந்தையாய் இருந்தாள்.
“போங்க அத்தாச்சி! அவர் என்னை வெறுப்பேத்துறார். சும்மா ஃபெமினிஸம் பேசுவார், அவரும் ஒரு பூமர்தான்” என்றதும் தாரகைக்கு சிரிப்பு. அடக்க முடியாமல் சிரிக்க, நிறை மாதமாக இருந்தவளுக்கு இடுப்பு பிடித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில் ராஜதுரை தாரகையை முறைத்தான்.
மனைவியின் அருகே வந்து, “அம்மாடி! மெதுவா சிரிடி” என்று அதட்டல் போட,
“சரி சரி” என்று தலையசைத்தவள், வயலுக்குச் சென்ற கணவனை கண்ணால் கொஞ்சிக் கொண்டாள்.
“சிரிக்காம சொல்றதை கேளுங்க அத்தாச்சி” என்று ஆதினி சொல்லவும் தாரகையும் பொறுமையாகக் கேட்டாள்.
“பாருங்க, உங்களை எல்லாம் எங்கண்ணன் தனியா செய்ய விடுறார்தானே இவர் மட்டும் எப்பவும் எனக்கு ரூல்ஸ் போடுறார்” என்று அரியைத் திட்ட,
“அரி எதாவது காரணமா சொல்லியிருப்பான். நீ பொறுமையா அவன் கிட்ட பேசினா சொல்ல போறான். வை டென்ஷன்?” என்றாள் தாரகை.
“நான் அவர்ட்ட மறுபடி போய் பேச மாட்டேன், உங்க அண்ணனுக்கு அவர்தான் பெரிய இவர்னு நினைப்பு. நான் உங்ககிட்ட ஷேர் பண்ணனும்தான் சொன்னேன்” என்று ஆதினி சொல்ல,
“சரி ஆதி! உன்னிஷ்டம், உனக்கு எலெஷன் நிக்கணும்னா நில்லு, நம்ம செய்ய நினைக்கிறதுக்கு எல்லாம் எப்பவும் அடுத்தவங்க அபிப்ராயம் கேட்கக் கூடாது. உனக்கு தோணினா செய்” என்றாள் தாரகை.
“அவர் என்ன அடுத்தவரா?” ஆதினி மெல்ல முணுமுணுக்க,
“உனக்கு நீ நினைச்சதை செய்யணும், அரியும் அதுக்கு ஒத்துக்கணும் நினைக்கிற, என்னமோ போ. எனக்கு தெரியாது” என்று தாரகை தப்பித்து விட்டாள்.
ஆதினியிடம் அப்படி சொல்லி விட்டாலும், தாரகை உடனே அண்ணனுக்கு அழைத்து விட்டாள்.
“சொல்லு தாரா? ஹெல்த் ஓகேவா?” என்று எடுத்தவுடன் அரி கேட்க,
“டேய் இதையே கேட்காத, எனக்கு பயமாயிருக்கு” என்று சிரித்த தாரகை,
“உனக்கும் ஆதினிக்கும் என்ன சண்டை?” என்று நேரடியாகக் கேட்டாள்.
“எனக்கும் அவளுக்கும் ஆயிரம் இருக்கும், நீ ஏன் கேட்கிற” என்றான் அரி.
“ஆயிரத்தைக் கேட்கல, எங்கிட்ட வந்த ஒரே விஷயம் கேட்கிறேன். அவ இஷ்டப்பட்டா விடேன் டா. என்னை மட்டும் எல்லாத்துக்கும் எங்கரேஜ் பண்ணுவ” என்று கேட்டாள் தாரகை.
“நீ செய்றதை கொஞ்சம் யோசிச்சு செய்வ, ஆதினிக்கு அறிவு எவ்வளவு இருக்கோ அவ்வளவு அவசரமும் உண்டு தாரா, யுனிவர்சிட்டி பிரசிடெண்ட் போஸ்ட் சும்மா இல்ல, நிறைய பொறுப்பு. இவ பொறுப்பா இருப்பா, அதே நேரம் அவசரப்படுவா, நியாயத்தைக் கூட கொஞ்சம் நிதானமா காட்டணும், ஷெரின் விஷயத்துல இவ வேற எதையும் யோசிக்கல, உனக்குத் தெரியும்தானே? இந்த வருஷம் காலேஜ் நல்லபடியா முடிச்சிட்டு வரட்டும் நான் நினைச்சேன், தப்பா?” என்று தங்கையிடம் கேட்டான்.
“கரெக்ட் தான் அரி, ஆனா அவ ஆசைப்படுறா, எத்தன நாள் இப்படி சொல்ல முடியும், அனுபவம் வேணுமே. அவசரப்பட்டு தப்பா செஞ்சாலும் கத்துப்பா இல்லையா?” என்று கேட்க, அரிக்கும் அந்த யோசனை இருந்தது.
“நீ அவ மேல உள்ள அக்கறையில சொல்றேனு எனக்குப் புரியுதுடா அண்ணா, அவளுக்கும் அதை புரிய வை”
“நான் அவ இஷ்டம்னு சொல்லிட்டேன் தாரா, நான் அதை பத்தி அவ கிட்ட பேசவே இல்லை. அதெல்லாம் தானா புரியனும்”
“பட் அவ ஃபீல் பண்றா, அவளுக்கு இஷ்டமா இருந்தாலும் நீயும் அதுக்கு ஒத்துக்கணும்னு நினைக்கிறா அரி.”
“அட! மேடம் எங்கிட்ட பெர்மிஷன்லாம் கேட்கலனு சொன்னாங்க, என்ன உங்கிட்ட சப்போர்ட் கேட்டாளா?” என்று அரி சிரிக்க,
“சப்போர்ட் எல்லாம் இல்ல, அவளுக்கு சொல்லணும்னு தோணிச்சு. சொன்னா” என்றாள் தாரகை. தங்கையிடம் சிறிது நேரம் பேசி வைத்த அரிக்கு, மனம் மனைவியை நினைத்தாலும் வேலை சரியாக இருந்தது.
வீட்டுக்கு வந்தவன் தாத்தாவிடம் பேசி விட்டு, அன்று வாரக் கடைசி என்பதால் வாசலில் இருந்த பூச்செடிகளை சுத்தம் செய்து வைத்தான். எப்போதும் வந்ததும் எதாவது பேசுபவன் பேசாமல் இருக்க, ஆதினிக்கு கோபம் வந்தது.
அமைதியாக இருப்பான், அதுவும் வேலையாக இருந்தால் மட்டுமே. இன்றோ அவன் பாட்டுக்கு டீவி பார்த்து, பாடலுக்கு விசில் அடித்தான். இவளை கண்டுகொள்ளவே இல்லை. ஆதினி உடனே அரியின் பக்கத்தில் உட்கார்ந்து,
“நான் எலெஷன்ல நிக்கல போதுமா?” என்றாள் அரியின் முகம் பார்த்தபடி.
அரிச்சந்திரனுக்கு ஆதினி இப்படி சொல்வாள் என்று தெரியும், அதனால் சிரித்து விட்டான்.
“என்ன சிரிக்கிறீங்க, பேசுங்க” என்று சொல்ல,
“உனக்கு இன்ட்ரெஸ்ட் இருந்தா செய்டி” என்றதும் ஆதினிக்கு பூரிப்பெல்லாம் இல்லை. அவனை முறைத்தாள், கூடவே ஒரு சலிப்பு. ஒன்றும் பேசாமல் எழுந்து போனாள்.
“ஹே! அரைடிக்கெட்! என்ன அமைதியாகிட்ட” என்று அறைக்குள் நுழைந்தவளின் கையைப் பிடித்து அரி கேட்க, ஆதினி சோர்வாக அவனை அணைத்தாள்.
“என்னடி?” என்று அரியின் கரங்களும் அவளை பற்றிக் கொண்டன.
“ஏன் நம்ம இரண்டு பேரும் இப்படி பண்றோம், நீங்கதான் ரொம்ப பண்றீங்க, முன்னாடியே ஓகே சொல்ல மாட்டேங்கிறீங்க” என்று கேட்க,
“நீதான்டி ஓவரா பண்ற, என்னை அப்படி பேசிட்டு என் ஒபினியன் எதுக்கு உனக்கு? உனக்கு வேணும்னா செய்ய வேண்டியதுதானே?” என்று அரி அவள் முகம் நிமிர்த்தி கேட்டான்.
“செய்யணும்னு தோணுது, ஆனா தெரியல. பிடிச்ச விஷயம் செய்யறதுக்குப் பிடிச்சவங்களோட ஒரு அக்செப்டன்ஸ் எதிர்ப்பார்க்குறேனே” என்று அவனை கண்களவு செய்தபடி சொல்ல, அரிக்கு பாவை பார்வையில் உடலில் பரவசம்.
“ஸோ வாட்ஸ் தி பாயிண்ட்?” அரி கொஞ்சம் கிண்டலாகவே கேட்டான். வாய் பேச, அவன் விரலோ ஆதினியின் முகத்தில் இருப்பக்கமும் விழுந்த கூந்தலை ஒதுக்கியது.
வெகு நாட்கள் கழித்து இத்தனை நெருக்கம், சொல்லாத மயக்கங்கள் இருவரிடமும்.
அரி கேட்க, ஆதினி உடனே,
“பாயிண்ட் என்னனு சொன்னாதான் தெரியுமா?” என்று முறைத்தாள். அவள் முறைப்பில் அரி சிரிக்க, சிரிக்கையில் அவனின் இரு புருவங்களும் முத்தமிட, ஆதினியின் கண்களில் ரசனை.
அரிச்சந்திரனின் ரசிகையாகிப் போனாள் அந்த நொடிகளில். அந்த நேரம் சலிப்பெல்லாம் காணாமல் போயின.
“சொல்லித் தெரியாது” என்று அரி தலையசைத்து ராகமாக பாட, வேண்டுமென்றே வம்பிழுக்கிறான் என புரிந்து, ஆதினி சமைக்க போனாள். பின்னாலயே அரியும் சென்றான்.
“தெரியாட்டி போங்க” என்ற ஆதினி சட்னிக்கு அரைத்தாள்.
“சொல்ல முடியாது!” என்று பாடினான். ஆதினிக்கு என்ன பாட்டு என்று அறிய முடியவில்லை.
அரிக்கும் ஆதினி இப்படி யோசிப்பது பிடிக்க, மேலும் பாடினான்.
“உள்ளத்தில் இருப்பது எது
வரும் உறக்கத்தை கெடுப்பது எது?” என்று கேட்டவனின் கரங்கள் ஆதினி பின்னோடு அணைத்துக் கொண்டன. ஆதினி ஒரு நொடி தடுமாற, தாடையை அவள் கழுத்தில் பதித்து மேலும் பாட, இஷ்டமாக இம்சித்தான் அவளை.
“உள்ளம் தடுமாற உலகம் உருமாற
உள்ளம் தடுமாற உலகம் உருமாற
வெள்ளத்தில் மிதப்பது அது
மன வேகத்தில் பிறப்பது அது!” என்றவன் வார்த்தைகள் ஆதினியை ஆவலாய் முத்தமிட்டன.
இருவரின் மனதின் வேகமும் அப்போது அதிகமாகத்தான் இருந்தது.
✅ End of Episode 35
Very nice.