Episode 2

தாரகை இரவில் அழைக்கவும் ஏதோ முக்கியம் போல என்று நினைத்து எடுத்தாள் ஆதினி.

“ஆதி நல்லாயிருக்கியா?” தாரகையின் குரல் அன்பாய் வந்தது. எட்டு மாதமாகிறது, நாத்தனார் என்ற அலட்டல் எல்லாம் காட்ட மாட்டாள். திருமணத்திற்கு முன்பே ஆதினிக்கு அவளைத் தெரியும், ராஜதுரை அண்ணனின் மனைவியாக. அதனால் சாதாரணமாகவே பேசுவாள்.

“நான் நல்லாயிருக்கேன் அத்தாச்சி, நீங்க எப்படி இருக்கீங்க? அண்ணா எப்படி இருக்காங்க?” என்று ஆதினி விசாரிக்க, பொதுவாக பேசிய தாரகை,

“பொங்கலுக்கு எப்போ வர ஆதி?” என்று கேட்க,

அது வேறா? என்ற சோர்வு ஆதினியிடம். தீபாவளியின் போது இவளுக்கு செமெஸ்டர் இருந்ததால் அதற்குப் படிக்கிறேன் என்று தப்பித்து விட்டாள். அப்போது போக ஆவலும் இல்லை. இப்போது போக ஆசை இருக்கிறது, ஆனால் அரிச்சந்திரன் அழைக்கவே இல்லையே. தன்மானம் தடுத்தது! உன்னை அவன் எதற்குமே கண்டுகொள்ளவில்லையே என்ற கோபம்.

இன்று கல்லூரி வந்தவன் கூட எப்படி இருக்கிறாய் என்று கேட்காமல் திட்டிவிட்டு அல்லவா போனான்?

“இரண்டு நாள்தான் லீவ் அத்தாச்சி, நான் வரேன் அப்போ உங்களை பார்க்க” என்றாள் பாசமாக. ஆதினி தன்னிடம் எப்படி நடக்கிறார்களோ அப்படியே நடப்பாள். பிடித்தவர்கள் என்றாள் அதிக உரிமை, அதீத பாசம் என்று படுத்தி வைப்பாள். பிடிக்கவில்லை என்றாலும் அப்படியே! ஆதினி அதீதமானவள்! செயல்களில் அவசரமானவள்.

“ஆதி, என்னை பார்க்க வரது இருக்கட்டும். உங்களுக்கு வரிசை கொண்டு வருவாங்க. நீங்க பொங்கல் விருந்து போகணும். ஒரு வாரம் லீவ் போட்டு வா” என்று தாரகை சொல்ல,

“இல்ல அத்தாச்சி, அவ்வளவு லீவ் கிடையாது” ஆதினி என்னமோ பயந்தவள் போல் மறுக்க, தாரகை அப்படி கிடையாதே.

“என்ன கிடைக்கிற லீவ்தான் எடுக்கணுமா? நான் பேசுறேன் உன் மேம் கிட்ட” என்றாள். தாரகை தைரியம் முன்பே அவளுக்கு பிரசித்தம். ஆதினிக்கு கூட கல்லூரியில் விடுமுறை எடுக்க பயமில்லை. ஆனால் அரிச்சந்திரன், அவன் என்னை அழைக்கவே இல்லையே. ஒதுக்கி வைக்கிறான் என்று தெரிய, அது கோபம், எரிச்சல், துவேஷம் எல்லாம் தந்தது. அதற்காகவே எதையாவது இழுத்து விட்டு அவனை வரவைத்து வம்பு செய்தாள்.

ஆதினி பட்டென்று, “லீவ் எல்லாம் எனக்கு பிரச்சனையில்லை. உங்க அண்ணா என்னை வீட்டுக்குக் கூப்பிடவே இல்லை அத்தாச்சி” என்று கணவனை மாட்டிவிட்டாள்.

“என்ன? அண்ணா கூப்பிடலையா? ஆதினி அது நம்ம வீடு! உன்னை யார் கூப்பிடணும்?” என்று தாரகை கேட்க, ஆதினி அமைதியாக இருக்க

“உரிமை, சுதந்திரமெல்லாம் யாரும் நமக்குக் கொடுக்க மாட்டாங்க ஆதி, நம்ம எடுத்துக்கணும். உன் வீட்டுக்கு வர யார் உன்னை கூப்பிடணும்? அண்ணா உன்னை பேசினானான்னா அப்போ சொல்லு. இப்போ லீவ் போட்டு வர வழியைப் பாரு.” என்று பேசி வைத்தவள் உடனே அண்ணனுக்கு அழைத்தாள்.

அரிச்சந்திரன் தங்கையுடன் எப்போதும் வீட்டு வாசல்படியில் உட்கார்ந்து இரவில் கதை பேசுவான். பல வருட பழக்கம், இதோ ஒன்றரை வருடமாக அப்படி இல்லை. திருமணம் முடிந்து தங்கை போய்விட்டாள், வந்தால் ஒன்றாக அமர்ந்து கதையடிப்பார்கள். இல்லையென்றால் இப்படி இரவும் தனிமையும் மட்டும் அரிச்சந்திரனின் துணை. மனைவி என்று ஒருத்தி வந்த பின்னும் அதே நிலை என்பது அவனுக்கு சோர்வை தந்தது. இளைப்பாற இடம் தேடியவனை விடாமல் இம்சை செய்தாள் ஆதினி.

இன்று வழக்கில் பெயில் வாங்குவதற்குள் படாதபாடு பட்டுவிட்டான். காலையில் அந்த கோபத்தை ஆதினியிடம் காட்டியிருக்க, அவளும் சளைத்தவள் இல்லையே. அடுத்து என்ன செய்வாளோ என்ற கவலை. இப்படி செய்து அவள் படிப்பு பாழாகிவிடுமோ என்ற யோசனை. என்னதான் நினைக்கிறாள் அவள் என்று புரியவில்லை.

யோசனைகளில் இருக்க, தாரகை அழைக்கவும் பெரிய புன்னகை. “சொல்லு ராஜாத்தி!” என்று உற்சாகமாக பேச,

“சாப்பிட்டியாடா அரி?” என்று நலம் கேட்டவள், ஆதினியைப் பற்றி விசாரித்து,

“ஆதினியை நீ ஏன் பொங்கலுக்குக் கூப்பிடல” என்று கேட்டாள்.

“இங்க வரதுக்கு அவளை யாரு கூப்பிடணும் தாரா?”

“டேய் வக்கீலு! எங்கிட்ட இந்த பாயிண்ட்லாம் பேசாத! உரிமையை முதல்ல நம்ம கொடுக்கணும். நம்ம வீடுனு அவளுக்கு ஃபீலே இல்லை. உன்னை யார் பெரிய இவன் மாதிரி அவளை ஹாஸ்டல்ல விட சொன்னது? அதுவும் ஒன்றரை மணி நேரத்துல போற காலேஜுக்கு. பாவம் சின்ன பொண்ணு!”

“அவ படிக்கதானே போயிருக்கா? அவளுக்கு டெய்லி போக கஷ்டம். அவளாதானே இஷ்டப்பட்டு போனா?” என்று அரி கேட்க,

“அவ போனாலும் ஏன் லீவுக்கு வரல. என்னடா நினைச்சிட்டு இருக்க? அவ என்னமோ காலேஜே அவ பார்த்துக்கிற மாதிரி லீவ் இல்லைன்றா, நீ என்னடான்னா கோர்ட்டே கதினு கிடக்குற, இந்த ஊர்ல நாங்க மட்டும் வேலை வெட்டி இல்லாம இருக்கோமா?” என்று கிண்டலாகக் கேட்டாள் தாரகை. அரி பதில் பேசும் முன், தாரகைக்கு ஏதோ தோன்ற,

“யாரையும் நமக்கு முழுசா பிடிக்காதுண்ணா, கொஞ்சம் பிடிச்சா அதை முழுசா பிடிச்சு வச்சுக்கணும்.” என்றாள் அழுத்தமாக.

“இப்போ இதை ஏன் டி எனக்கு சொல்ற?” அரி தங்கையிடம் கேட்க,

“ஏன் சொல்றேனு புரியாத மாதிரி நடிக்காதடா” என்றாள் கடுப்பாக. தங்கையின் பாவனையில் சிரிப்பு வந்தது அரிச்சந்திரனுக்கு.

‘இந்த பொண்ணுங்க எல்லாம் டேஞ்சர்’ என்று மனதில் நினைத்தவன், “ஏன் டி என் பொண்டாட்டியை எனக்கு முழுசா பிடிக்காதுனு உங்கிட்ட எப்பவாச்சும் நான் சொன்னேனா?” என்று சிரிப்போடு கேட்டான்.

“நீ டிஃபன்ஸ் மோடுக்கு போகாத அரி! உன்னை எனக்குத் தெரியும். அப்படி நீ ஆதினிக்கிட்ட பிடிச்ச மாதிரி காட்டியிருந்தா நீ கூப்பிடலனு அவ சொல்ல மாட்டா.” என்று அண்ணனை பேச விடாது செய்தாள் தாரகை.

“ப்ச், தாரா! ஏன் டென்ஷன் ஆகுற? அவ படிக்கிறா, அதனால தள்ளி இருக்கேன்” என்று அரி விளக்கம் சொல்ல, தாரகைக்குத் தெரியாதா அரியை?

“அப்போ கண்டிப்பா நீ என்னை டென்ஷன் பண்ற மாதிரி ஏதோ செஞ்சிருக்க” தாரகை கோபத்துடன் கேட்க,

“எம்மா தாயே! ஓவரா பண்ணாத, இன்னிக்குக் கூட என் பொண்டாட்டியை போய் பார்த்துட்டு வந்தேன்” என்றான் அரி சலிப்பாக.

நேற்றிலிருந்து சரியான உறக்கமே இல்லை அவனுக்கு, உறங்க நினைத்தாலும் மனதில் வெற்றிடம். வழக்கு குறித்த எண்ணங்கள், இதில் ஆதினி வேறு கல்லூரியில் பேச்சு வாங்க வைத்து விட்டாள். எல்லாம் முடித்து ஓய்வாக உட்கார்ந்தால், அடுத்து உடன்பிறப்பு. நொந்து போனான் அரிச்சந்திரன்.

“இதுக்கு அவார்ட் கொடுக்கணுமாடா அண்ணா? இடியட், நீ அவளை பார்த்தும் கூட அந்த புள்ள உன்னை பார்க்க ஆர்வமே காட்டாம இருக்கு. எனக்குக் கடுப்பா இருக்கு! நம்ம காதல் பரம்பரைக்கு நீ ஒரு கரும்புள்ளிடா!” என்று அண்ணனை வறுத்தெடுத்தாள்.

“போனவன் அவளை பொங்கலுக்கு வானு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே? அதுக்கு கூட வாய் வலிக்குதா?” என்று வாய் வலிக்காமல் பேசினாள் தாரகை.

“போனது எதுக்குனு தெரிஞ்சிக்கிட்டு பேசுடி” என்றவன் மனைவி செய்தததை சொல்ல, தாரகைக்கும் ஆதினியின் செயல் பிடித்தமில்லை. என்ன இது படம் பார்ப்பது வரை பரவாயில்லை, வேண்டுமென்றே மாட்டிக்கொள்வது எல்லாம் மடத்தனம் இல்லையா? என்று எரிச்சலானது.

“இதை அவ எங்கிட்ட சொல்லவே இல்லைடா, ஏன் இப்படி பண்றா?” தாரகையும் சலிப்பாகக் கேட்க அரி ஒன்றும் சொல்லவில்லை. அவன் வாழ்க்கையின் சோர்வை தங்கையிடம் சொல்லி அவளை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. இதே தாரகைக்கு ஒன்றென்றால் குரலிலே கண்டுகொள்வான், தாரகையும் சொல்லிவிடுவாள்.

ஆதினியை அவனால் சமாளிக்க முடியும், கொஞ்சம் கஷ்டம்! ஆனாலும் அரியால் முடியும்! இப்போதைக்கு அவன் ஆயுதம் கண்டிப்பு! அது ஆதினிக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அதுதான் அவளை பிடித்து வைக்கும் என்று இத்தனை நாளில் அறிந்து வைத்திருந்தான் கணவன்.

“என்னடா அவளை ரொம்ப திட்டினியா? அதான் பொங்கலுக்கு வரலனு சொல்றாளா?”

“பின்ன திட்டாம? நீயே சொல்லு தாராம்மா. இண்டர்னல்ஸ் கட் அடிச்சா ஓகே, அவ ரூம் மேட் ஷெரின் உடம்பு சரியில்லனு சொல்லி சமாளிச்சிருக்கா, நம்ம அரை டிக்கெட்டு படத்தை பார்த்து பல்லைக் காட்டி, தியேட்டர்ல நின்னு செல்ஃபி எடுத்து க்ளாஸ் குரூப், அதுவும் மேம் இருக்க குரூப்ல போட்டிருக்கா” என்றான் கொஞ்சம் சிரிப்போடு. அப்போது மிகையான கோபம். இப்போது தங்கையிடம் பேசும்போது தானாகவே ஒரு தணிவு வந்தது. ஒரு குழந்தையின் குறும்பினை சொல்லும் தந்தையின் பாவனை. ஆனால் ஆதினியிடம் அந்த குறும்பினை கண்டிக்கும் அன்னை!

“அதுக்கு நீ என்ன சொல்லி திட்டின?” என்று தாரகை கேட்டதற்கு,

“இப்படி கேஸ்ல மாட்டுறதுன்னா என்னை கூப்பிடாத, உங்கப்பாவை கூப்பிடு, என் டைம் வேஸ்ட் பண்ணாதனு வார்ன் பண்ணினேன்” என்று அரி சொல்ல,

“ஏதோ தெரியாம பண்ணிட்டா விடேன் டா. இப்படி பேசினா யாரா இருந்தாலும் ஹர்ட் ஆவாங்க அரி” என்று அண்ணனுக்கு எடுத்து சொல்ல,

“ஆதினி ஆகமாட்டா! அந்த அரைடிக்கெட் எங்கிட்ட நீ எதுக்கு அட்வகேட்டா இருக்கனு கேட்கிறா. இது சின்ன விஷயம்னு விட்டா நாளைக்கு இதை விட பெருசா செய்வா தாரா. நீயே யோசி நமக்கே கோவம் வருது, டீச்சர்ஸ்லாம் சும்மா இருப்பாங்களா? இண்டர்னல்ஸ்ல கை வைப்பாங்க. ஏதோ படம் பார்த்து விட்டா கூட ஓகே, இப்படி செஞ்சா அரகன்ஸ் இல்லையா? இதை எப்படி எங்கரேஜ் பண்றது?” என்று கேட்க, தாரகை அமைதியாக அண்ணன் சொல்வதை கேட்டாள். ஆதினி தஞ்சாவூரில் இருக்கும் மத்திய அரசின் கீழ் வரும் பல்கலைக்கழகத்தில் பயின்றாள்.

“முதல்ல படிப்பு எவ்வளவு முக்கியம்? இந்த காலேஜ்ல எவ்வளவு கஷ்டப்பட்டு என்டரென்ஸ் எழுதி அவளுக்கு சீட் கிடைச்சது! ஆல் இந்தியா லெவல் எக்ஸாம். இப்போ அதையெல்லாம் யோசிக்காம என்னை வெறுப்பேத்த அவ ஃப்யூச்சரோட விளையாடுறா. அவளை நான் ஹாண்டில் பண்ணிப்பேன். நீ ஃபீரியா விடு, ஆமா இன்னிக்கு என்ன பாட்டு போடுறார் உன் பூமர்” என்று தங்கையை கிண்டல் செய்தான்.

தாரகை கணவன் ராஜதுரை காதலனாக இருந்த போதே வாட்ஸப்பில் தாரகைக்கேன்றே பிரத்யேகமாக பாடல் வைப்பான். அதனால் அரி வம்பு செய்ய,

“மழை வருதுனு நியுஸ்ல சொன்னதால துரை டென்ஷன், வயலுக்குப் போயிருக்கார். சரி நீ தூங்கு, நாளைக்கு ஆதி கிட்ட பேசுடா அரி” என்று தாரகை போனை வைத்தாள்.

அரிச்சந்திரனுக்கும் தாரகைக்கும் ஒரு அற்புதமான தோழமை உண்டு. அன்பால் கட்டப்பட்ட உறவில் ஆண்பால், பெண்பால் பேதமில்லையே. அப்படித்தான் அவர்கள்! என்ன விஷயம் என்றாலும் அண்ணனிடம் யோசிக்காமல் மனதை பேச முடியும் தாரகையால்.

அப்படி ஒரு அண்ணனுக்கு எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற பேரவா அவளிடம். ஆதினியிடம் இதுவரை அவள் குறை கண்டதில்லை.

ஏன் அவள் கணவன் ராஜதுரை எல்லாம் அக்மார்க் பிற்போக்குவாதி, இப்போது இவள் கணவனாகிவிட்ட பின்னே, காதல் வந்த பின்னே தான் அவனிடம் மாற்றங்கள். அப்படியிருக்க பிழைகளை பொறுத்துக் கொள்வதும் திருத்திக் கொள்வதும்தானே வாழ்வு என்ற தெளிவு தாரகைக்கு உண்டு. ராஜதுரையோடு முதல் பார்வையில் மோதலாகி, சண்டையாகி ஊரே பார்க்கும் அளவு பிரச்சனையாகி என்று பெரிய கதை அவர்களுடையது. ஆனால் எங்கோ ஒரு புள்ளியில் எல்லாம் மாறியது, மாயமாகியது, மயக்கம் வந்தது! காதல் கண்டது அவர்கள் மனது!

அப்படி ஒரு இந்திரஜாலம் அண்ணனுக்கு வாய்க்காதா என்ற தவிப்பு தங்கையிடம். அரிச்சந்திரன் குரலில் மனைவி பற்றி பேசும் போது தெரிந்த வாஞ்சை தாரகைக்கு நம்பிக்கை தந்தது.

ஆதினி தாரகையிடம் பேசி முடிக்க, அவள் அப்பா ரவிக்குமார் அழைத்தார். பொங்கலுக்கு வா என்று அவரும் சொல்ல,

“நான் நம்ம வீட்டுக்குத்தான் வருவேன்” என்றாள் ஆதினி.

“நம்ம வீட்டுக்கு வாடா, ஆனா மாப்பிள்ளை கூட வரணும். அதுதான் முறை.” என்று சொல்ல, ஆதினிக்குக் கோபம்.

“ஏன் நம்ம வீட்டுக்கு வர எனக்கு ரைட்ஸ் இல்லையா? இதுக்குத்தான் நீயும் அந்த பெருசும் என்னை ப்ளான் பண்ணி துரத்தி விட்டீங்களா?” என்று கத்தினாள். எல்லா இடத்திலும் அந்நியப்பட்டு நிற்கும் உணர்வில் பெண் தவித்தாள்.

“என்னம்மா நீ? இன்னும் கோவம் போகலையா? மாப்பிள்ளையை பிடிக்கலையா உனக்கு?” என்றதும் இன்னும் கோபம்.

“உன்னை தான் எனக்குப் பிடிக்கல, அவரை பிடிக்கும் எனக்கு” என்றால் உடனே. அதில் ரவிக்குமாருக்கு பெரிய சந்தோஷம். சத்தமாக சிரித்தார்.

“சிரிக்காத எனக்குக் கோவமா வருது.” என்ற ஆதினிக்கு உண்மையில் கண்கள் கலங்கி போனது.

ஆதினிக்குப் படிக்கும் போதே வீட்டில் திருமணம் செய்கிறார்கள் என்ற கோபம். மறுக்கவும் முடியவில்லை. வீட்டில் ஆதினி அரசி! அப்பா, அம்மா, தாத்தா, ஆத்தா என்று எல்லாருக்கும் அவள்தான் உயிர். அம்மா இரண்டு வருடம் முன்பு தவறிவிட, வீட்டில் இருந்தவர்களுக்குப் பயம். ஒற்றைப் பெண், நன்றாக இருக்கும்போதே திருமணம் செய்துவிடலாம் என்று எண்ணி செயல்படுத்திவிட்டனர்.

அரிச்சந்திரனிடம் சொல்லியிருந்தால் அவனே நிறுத்தி இருப்பான், பெண்களின் உரிமையைக் கேட்டு வாங்க வேண்டும் என்று சொல்பவன், ஆதினி அவனிடம் சொல்லவில்லை. மற்ற வரன்களை விட இவன் பரவாயில்லை என்றே தோன்றியது.

அம்மா இறந்த இழப்பில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் அவளை உணர்வு ரீதியாக வீட்டினர் தாக்கினர். ஆதினி திருமணமான புதிதில் அரிச்சந்திரனிடம் தன் கோபத்தை எல்லாம் காட்டியவள், ஒரு கட்டத்தில் அவன் ஒதுங்கிப்போக பிரிந்து விடலாம் என்று அந்த நேர கோபத்தில் சொல்லிவிட்டாள். இப்போது அவன் பதிலுக்கு செய்கிறான்.

அவளின் ஆசை அரிச்சந்திர மகாபிரபு மனைவிக்கு சுதந்திரம் தர வேண்டி அவள் விருப்பப்படி படி என்று விடுதியில் சேர்த்து விட்டான். உண்மையில் அரி விலகியிருந்தானே தவிர, ஆதினியை விட்டுவிட என்றுமே எண்ணமில்லை! அது அவனுக்குத் தெரியும், ஆதினிக்குத் தெரியப்படுத்தவில்லை. பார்த்து பார்த்து செய்யும் கணவன், ஆனால் இவளை பார்த்தே பல மாதமாகி விட்டது.

ஆதினியை எல்லாரும் தாங்குவார்கள். அதனால் அரியின் விலகல் வெகுவாக பாதித்தது. ஏக்கம் ஏமாற்றமாகி எரிச்சல் தர, அவனை அலையவிட்டாள். என்னை பார்க்க மாட்டியா? என்ற கோபம் ஹாஸ்டலில் மற்ற மாணவருக்குப் பேய் பயம் காட்டுவது, க்ளாஸ் கட் அடிப்பது என்று அத்தனை கலாட்டாக்கள் செய்ய வைத்தது. அரிச்சந்திரனும் இவள் அடாவடிக்கெல்லாம் அசரவில்லை. சரியாக ஈடுகொடுத்தான்.

இன்றும் இவளிடம் அப்படி நடக்க, அரிச்சந்திரனை தேடும் ஆவல் அதிகமானது! அது காதலா என்றெல்லாம் தெரியாது அவளுக்கு. உன்னை பார்க்க வேண்டும் என்று உரிமையாக, அன்பாக கேட்டிருந்தால் வந்திருப்பான். ஆனால் கேட்காமலே எல்லாம் செய்யும் அப்பா, தாத்தா என்று அவளின் வீட்டினர் இருக்க, அரிச்சந்திரனுக்கு ஆதினி முக்கியமில்லையா என்பதே ஆதினியின் அதிமுக்கிய கேள்வி!

நான் அவனை மிஸ் பண்றேன், இவன் என்னை ஏன் மிஸ் பண்ணல? என்ற எண்ணம் அவனை தவிர வேறெதையும் சிந்திக்க விடவில்லை. அதே நேரம் இறங்கி பேச அவள் குணம் விடவில்லை. இப்போது அப்பா பேச, அழுகை வந்தது.

அவள் குரலே ரவிக்குமாரை ஆட்டிவைக்க, “என்னம்மா? என்னாச்சு?” என்று கேட்க பதிலே பேசவில்லை. ரவி உடனே,

“சரிடா, நீ முதல்ல வீட்டுக்கு வா. நான் வந்து அழைச்சிட்டு போகவா?” என்று கேட்டார். மகள் மறுத்து அவர்கள் செய்த ஒரே விஷயம் திருமணம், அதுதான் ஆதினியை அதிகம் பாதித்து விட்டது.

“ம்ம், ஓகே. தூங்க போறேன் பா. தாத்தாவை பார்த்துக்கோ” என்று சொல்லி மெத்தையில் போனோடு அப்படியே விழுந்தாள். தூக்கம் வரவில்லை, இவள் இரவு கணவனின் நினைவால் திருடுப் போனது!

‘இரவு அமைதி கொண்டது! அர்த்தம் தேட வைப்பது!’

✅ End of Episode 2
How did you feel about this episode?
❤️ 1 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 1 week ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 week ago

பார்த்து பார்த்து செய்தும்

புரியவில்லையே கணவன்
பாசம் ஆதினிக்கு.....
புரியவைக்கவில்லை
புருஷன் அரி......
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top